திரு நடராஜன் இந்திய ரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிறகு எண்பது வயதைக் கடந்தாலும் இன்னும் பல சீரிய முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார். அவற்றுள் மிக முக்கியமானது ” தேசியச் சொற்கள்” (National words) என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் பல வருடங்கள் ஆராய்ச்சிக்குப்பிறகு இலட்சக்கணக்கில் செலவுசெய்து வெளிக்கொண்டு வந்ததுதான்.
மார்ச் 3 ஞாயிறு அன்று திரு நடராஜன் தனது புத்தகத்தைப்பற்றியும் அதன் மூலம் எப்படி நமது பாரதநாட்டை மொழி அளவில் ஒற்றுமைப்படுத்த முடியும் என்பதுபற்றியும் விளக்கமாகப் பேசினார்.
‘பாரதி’ என்ற பேசும் மொழியை பாரத நாட்டில் கொண்டுவரவேண்டும் என்பதே இவரது ஆராய்ச்சியின் முடிவு.
அதன்படி இந்தியாவில் வழக்கில் இருக்கும் முக்கிய மொழிகளில் உள்ள சொற்களை எடுத்துக்கொண்டு 3000 -4000 சொற்களைக்கொண்ட பேசும் மொழியைத் தயார் செய்தோமேயானால் இந்தியாவில் எவரும் எங்கு சென்றாலும் சுலபமாக உரையாடலாம். ஹிந்தி, வங்காளம், தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், உருது, பீகாரி, பஞ்சாபி ,குஜராத்தி, மராத்தி, ஆங்கிலம், ஒவ்வொன்றிலிருந்தும் 300-400 சொற்றொடர்களை எடுத்துக்கொண்டு ‘பாரதி’ யை உருவாக்கலாம்.
உதாரணாமாக FRUIT என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஈடாக இந்தியாவில் உள்ள அனைவரும் ‘பழம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். TIFFIN என்பதற்கு அனைவரும் நாஷ்டா என்று பயன்படுத்தலாம்.
இந்தச் சொற்களை அனைவரும் அவரவர் மொழியிலேயே எழுதிக்கொள்ளலாம்.
அது சரி, எந்த மொழியிலிருந்து எத்தனை சொற்களை எடுத்துக் கொள்வது?
அதற்கும் நடராஜன் பதில் வைத்திருக்கிறார்.
வழக்கில் உள்ள மொழிகளைப் பேசுவோரின் விகிதாசாரத்தில் எடுத்துக்கொண்டால் அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு இந்தியப் பொதுமொழியை உருவாக்கலாம் என்பது இவரது வாதம்.
அதைப்போல உலகில் ஆங்கிலம் பேசுபர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. நாம் நம்முடைய உச்சரிப்பில் ஆங்கிலம் பேசுவதை உலகம் ஒப்புக்கொள்ளச் செய்யவேண்டும். அமெரிக்கன் ஆங்கிலம், பிரிட்டன் ஆங்கிலம் என்பது போல பாரதீய ஆங்கிலமும் வரவேண்டும். அதற்கு BHANGLISH என்று பெயர் வைக்கலாம் என்பது திரு நடராஜனின் கருத்து.
இவரது இந்த இரண்டு கருத்துக்களுக்கும் அரசியல் இயக்கங்கள் ஆதரவு அளிக்க முன்வருமானால் இது நடைமுறைக்கு விரைவில் வந்துவிடும்.
அந்த நல்ல நாளை எதிர்பார்க்கிறோம்.
இப்படிப்பட்ட புதுமையான முயற்சிபற்றிய நிகழ்வைக் குவிகத்தில் அளவளாவலாக அமைத்ததற்கு நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.
பிரபல எழுத்தாளரும் சமீபத்தில் மொழிபெயர்ப்பிற்காக தமிழக அரசு விருது வாங்கிய திரு எஸ் சங்கர நாராயணன் குவிகம் அளவளாவல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அவரது அளவளாவல்பற்றி சரஸ்வதி காயத்ரி அவர்களின் முகநூல் பதிவு:
குவிகம் இலக்கிய வாசல்..இன்று மாலை சரியாக 4. மணிக்குத் தொடங்கி 6 மணிக்கு முடித்தார்கள்.
எஸ்.சங்கரநாராயணன் சார்அவர் உரையை அச்சிட்டு கொடுத்தார்.அதனை அவர் உறவினர் அழகாக வாசித்தார்.
ரமேஷ் வைத்யாவின் கலகல பேச்சுடன் தொடங்கின ” அளவளாவல்” ( என்ன அழகு இந்த வார்த்தை. ல,ள கரம் பழக இதை பத்துமுறை சொல்லி பயிற்சி எடுக்கலாம்.😊)பங்கேற்பாளர்களின் அறிமுகத்தோடு நிறைவு பெற்றது.
உங்களின் கனவு நனவாக வேண்டும் சார். வெயிலுக்குப் பின் சிறு தூறலாவது விழுமென்கிற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. பார்ப்போம்.
குவிகம் அமைப்பினருக்கும் Sundararajan Subramaniam சார் மற்றும் அவரின் மனைவிக்கு நன்றியும் அன்பும்.
தங்கள் இல்லத்தை இலக்கிய இல்லமாக மாற்றியிருக்கும் Kirupanandhan Kirubanandan Srinivasanஅவர்களுக்கும் நன்றியும் அன்பும்.
// மீண்டும் இயற்கையை வணங்கும் அந்த நாளுக்கு கலாச்சாரத்தால் மனிதர்கள் ஒத்திசையும் ,இழைந்து பழகும் காலத்துக்குத் திரும்ப வேண்டும். இது எனது கனவு. வேர்களை நோக்கிய பயணம் இது. வேர்களற்று அந்தரத்தில் பிடுங்கி எறியப்பட்ட செடிகள் நாம். வெயிலில் வாடி உலர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை.//