கதையின் ஆசிரியர் ந . பானுமதி அவர்களைப்பற்றி ……
மின்னிதழ்களான பதாகை மற்றும் சொல்வனத்தில் இவரது ஐம்பதுக்கும் மேற்பட்ட கதை கவிதை கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
நவீன விருட்சம் மற்றும் புதுகைத் தென்றல் இதழ்களிலும் இவரது கதைகளும் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.
கிழக்குப் பதிப்பகம் சிறுகதைத் தொகுப்பொன்றில் இவரது ‘’”அஸ்வத்தாமா” கதை இடம் பெற்றுள்ளது.
கிழக்குப் பதிப்பகம் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற இவர் ‘கவிமாமணி’, ’ஸ்வாமி இராமானுஜர் ஆயிரத்தாண்டு விருது’ ஆகியவை பெற்றவர்
ஊமைக்காயம்
“கயல், மகிழ்ச்சிதானே! உனக்கு மணவிலக்கு கிடைத்துவிட்டது. உன் பணத்தில் நீ கட்டிய வீடு, ஒருமுறை கூட இதுவரை நீ பார்த்திராத வீடு, உனக்கே உனக்கு என்று நீதிமன்றம் சொல்லிவிட்ட வீடு; உன் மகள் இசையுடன் இனி நீ அங்கு நிரந்தரமாக, சுதந்திரமாக இருக்கலாம். புது வாழ்க்கை தொடங்க என் வாழ்த்துக்கள்.” வழக்குரைஞர் என்னிடம் சொல்கையில் ஒருபுறம் வெற்றிக் களிப்பும், மறுபுறம் வெறுமையுமாக உணர்ந்தேன். எத்தனை நெருங்கிய சொந்தங்கள் எனக்கு, இன்று ஒருவரும் அருகிலில்லை. என் திருமணமும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை, என் மணவிலக்கும். இத்தனை பெரிய உலகில் பத்து வயது சிறுமியைக் கையில் பற்றிக்கொண்டு மிகத் தனியாக நிற்கிறேன். இல்லை, சோர்விற்கு இடமில்லை வாழ்ந்து காட்ட வேண்டும், மகள் நல்ல துணையில்லையா, வேலை ஒரு கௌரவமில்லையா, நானே உழைத்து நானே முன்னேறும் இவ்வாழ்க்கை ஒரு வரமில்லையா?
அறுபத்தி நான்கு குடியிருப்புகள் அந்த வளாகத்தில் இருந்தன. என்னுடையது ‘சி’ ப்ளாக், இரண்டாம் மாடி. நான் என் சாமான்களுடன் நுழையும்போதே காவலாளி தடுத்தான்.
‘செகரட்டரி’ வந்து சொன்னாத்தான் உள்ள போகலாம்.’
“என் வீட்டுக்கு நான் போறதுக்கு யாரு சொல்லணும்?”
‘அந்த நியாயமெல்லாம் அவரிட்ட பேசு. அவரு சொல்லாம லாரி ஒரு இன்ச் நவராது’
“என்னம்மா இது, முன்னாடியே பேசி வக்கறதில்லையா? என்ன டிலே பண்றீங்க” லாரி ஓட்டுனர் படபடத்தார்.
‘அப்படிச் சொல்லுய்யா, பர்மிஷன் இல்லாம வர்லாமா? அவரு என்னைய வேலய விட்டுத் தொரத்திடுவாரு.’
நான் இம்மாதிரியான வரவேற்பை எதிர்பார்த்திருக்கவில்லை; என் வீட்டிற்கு நான் செல்வதை யாரோ தடுப்பார்கள் எனக் கனவிலும் நினைக்கவில்லை.
“சரி, செகரட்டரி எங்க இருக்காரு, ஃபோன்ல கூப்டுங்க, இல்ல நம்பர் தாங்க நான் பேசறேன்”
“புது நம்பரை அவரு எடுக்க மாட்டாரு. க்ளப்புக்குப் போயிருக்கிறாரோ என்னமோ? இன்டர்காம்ல கேக்கறேன். ஐயா வரல்லியா?”
நான் பதில் சொல்லாது நின்றேன்.
காவலாளியும், லாரி ஓட்டுனரும் இகழ்ச்சியான பார்வையை பரிமாறிக்கொள்வதைக் கவனித்தேன். ”பழகிக்கோ கயல்” என்று மனதினுள் சொல்லிக்கொண்டேன்.
படபடப்புடன் ஒரு முதியவர் வாசலுக்கு வந்தார். ’ஆரு, என்னது, சி ப்ளாக் ஆறா, சந்த்ரன் வீடு இல்லியோ அது? என்னது உங்க வீடா? கோர்ட் சொல்லிடுத்தா? டிவோர்சியா? எப்படி சமாளிப்பேள்? டாக்குமென்ட் இருக்கா? பெண் குழந்தையா? ஈஸ்வரா! பகலோட வரப்படாதோ? உள்ள அனுப்புடா, முழிக்கிறான் பாரு.’
ஒரு வழியாக சாமான்களை இறக்கிப் பேசினதை விட அதிகத் தொகை கொடுத்து நிமிர்கையில் இசை உறங்கியிருந்தாள்.சாப்பிட வெளியிலும் போகமுடியாது, இங்கேயும் செய்யமுடியாது, நாளை பார்த்துக் கொள்ளலாம். எதிரெதிராக இரு ஃப்ளாட்கள் ஒவ்வொரு தளத்திலும். கட்டிட அமைப்பில் நிறைய இடம் இருக்கும் தோற்றத்தை புத்திசாலித்தனமாக ஏற்படுத்தியிருந்தார்கள். காலை புலர்கையில் இசை விழித்துக்கொண்டு பசிக்கிறது என்றாள்.அவளுக்கு கார்ன் ஃப்ளேக்ஸ் கொடுக்கலாம் என்றால் பாலில் தா என அடம். எதிர்த்த வீட்டில் கேட்கலாமென பெல் அடித்தேன். முழுதாக இரு நிமிடங்களுக்குப் பிறகு கதவு பாதி திறந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண் முகக் குறிப்பால் என்ன என்றார்.
“எதிர் வீடு என்னோடது. நேத்துதான் வந்தேன். எக்ஸ்ட்ரா பால் இருந்தா தாங்க.மாலயில வாங்கித் தரேன்.”
‘பாலுமில்ல, ஒன்னுமில்ல’ என்று கதவு சாத்தப்பட்டது. அதிர்ந்தேன். என்ன பிழை என்னிடம்? இசையை அடிக்கும் வேகம் வந்தது. இல்லை, அது இயலாமை. பிறர் உனக்கு எதையும் செய்யக் கடன்பட்டவர்களில்லை என்று என்னையே சமன் செய்துகொண்டேன்.
“பால் எங்க கிடைக்கும்? காய்கறி கட கிட்டக்க இருக்கா? பலசரக்குக் கட பக்கமிருக்கா?” என்று அந்த காவலாளியைத்தான் கேட்க நேர்ந்தது. அவன் குறுகுறுவெனப் பார்த்துக்கொண்டே ’நேரப் போயி ஜங்க்ஷன்ல திரும்பு. அல்லாமிருக்கும்’ என்றான். பெரு நகரின் கலாசாரத்தை நோக்கி இந்த ஊர் சென்று கொண்டிருப்பதை உணர்ந்தேன்.
காலை உணவை முடித்துக்கொண்டு அனைத்துப் பொருட்களையும் சுமந்துகொண்டு திரும்பி வருகையில் ‘மிஸஸ். சந்த்ரன்‘ என்று பெண்குரல் கேட்டது. “என்பெயர் கயல்”.
“சாமாங்க இருக்கு. அப்புறம் வரேன்”
“அப்படியா? சரி, உள்ள வாங்களேன்.” ஏ1 வாசலிலிருந்து அழைத்த பெண்மணி செக்ரட்டரியின் மனைவி என சொல்லாமல் தெரிந்தது.
“சும்மா இப்படி வைங்கோ, உங்க பொண்ணா, அப்படியே சந்த்ரன் ஜாட”
நான் பதில் சொல்ல முயலவில்லை. வீண், இதெல்லாம் வீண். என் தன்மானத்திற்கு நான் தரவேண்டிய விலை. இவைகள் உறுத்தும் ஊவா முட்கள். எரிச்சல் தரும் பார்வைகள், பின் முதுகில் ஊறும் நமட்டுச் சிரிப்புகள், பாவமே என்று பரிதாபப்படும் பகல் வேஷங்கள். காளியென இவர்களைக் கிழித்துப் போட்டுவிடலாம், ஆனால், எத்தனைபேரை அப்படிப் போடமுடியும்? அந்தக் காளியே மகிஷனை வதைத்தபிறகு விட்டுவிட்டாளே?
அந்த வளாகமே சந்திரனை அறிந்திருந்தது. அவனை நல்லவன் என்ற அதன் மதிப்பீட்டிலிருந்து சரித்துக்கொள்வதற்கு அவர்கள் விரும்பவில்லை. இசை, விளையாடப் போகையில் பெரியவர்கள் வந்து அவளிடம் கேள்விகள் கேட்பதாகச் சொன்னாள். “அந்த சவிதா இல்ல அவளும், இளங்கோவும் ‘உங்க அப்பா உன்னோட இல்லியா? அவரு கெட்டவரா’ன்னு கேக்கறாங்க மம்மி” என்று அழுதாள். “மம்மி நம்ம வூருக்கே போலாம், அங்கதான் ராதா, சுரேஷ் எல்லாரும் ஒன்னும் கேக்க மாட்டாங்க.”
“நான் பேசறேன். நீ ப்ரண்ட்ஸ்ஸோட நல்லா வெளயாடலாம். அம்மாகூட எல்லாரையும் விட்டுட்டுத்தானே இங்க இருக்கேன். குட் கேர்ள் இல்ல, வீட்டுப்பாடம் எழுதவேணாமா? நாளக்கி தீம் பார்க் போலாம் ஓகேயா?”
இப்போதெல்லாம் என்னைப் பார்த்தால் சிலர் நட்புடன் சிரிக்கிறார்கள். தங்கள் இல்லங்களுக்கும் அழைப்பதில்லை, என் வீட்டிற்கும் வருவதில்லை. ஆனால், ஒதுக்கம் குறைந்துள்ளது. ஏன், அம்மாகூட ஒன்றும் கேட்பதில்லை. இணக்கம் வராமலா போய்விடும்? எனக்கும் அலுவலக வேலைகள், வீட்டு வேலைகள், இசையின் படிப்பும், அவளின் வயலின் வகுப்பும் என்று நேரம் பறக்கிறது. நீல இரவு விளக்கின் ஒளியில் என் கன்னங்களில் வழியும் கண்ணீர் பளபளவென்று மினுங்கி என் வாழ்வைப் போல் காய்ந்தும் விடுகிறது. இத்தனைக்கும் நடுவில் எதிர் வீட்டில் ஆள் இருக்கும் அரவமே இருப்பதில்லை. அன்று பார்த்த முகம், பாதி உடல் ஏனோ மருள் காட்சியெனத் தோன்றித் தோன்றி மறைந்தது.
இசையின் பள்ளி எங்கள் இருப்பிடத்திலிருந்து இரு கிலோ மீட்டருக்குள்தான். நானே அழைத்துச் சென்று விடுவேன், அழைத்து வந்தும் விடுவேன். அன்று காலையில் இருந்தே மனம் அமைதியாக இல்லை. முக்கியமான வழக்கு ஒன்றின் தீர்ப்பு பாதகமாக வரும் என்ற எதிர்பார்ப்பை ஊடகங்கள் சொல்லிக்கொண்டிருக்க, இசையின் பள்ளி நிர்வாகம் மதியம் மூன்றுமணிக்கு அனைவரையும் வீட்டிற்குச் செல்லுமாறு சொல்லிவிட்டது. இசை என்னிடம் அதைச் சொல்கையில் நான் முக்கிய கூடுகையிலிருந்தேன். தவிப்பாக இருந்தது, அவள் பள்ளியிலும் இருக்கமுடியாது, வெளியிலும் நிற்கமுடியாது, நானும் போகமுடியாது, கலவரம் நடந்தால் என்ன செய்வது? என் கவனம் சிதறுவது எனக்கே தெரிந்தது. ’மிஸ். கயல், நீங்கள் நிலையாக இல்லை, ஹேவ் சம் டீ’ என்றார் நிர்வாக இயக்குனர்.’ நான் அங்கு இருக்க வேண்டிய அவசியத்தை அவர் சொல்லும் முறை, நான் அவசரத்தில் இருக்கிறேன் என்று சொல்லக்கூடாத நிலை. தவித்தேன், நல்லவேளை, சவிதாவின் தாய் இசையையும் அழைத்துக்கொண்டு வீட்டில் விட்டுவிட்டதாகவும், தன் வசம் இருக்கும் சாவியால் வீட்டிற்குள் போய்விட்டதாகவும் இசை சொல்ல நிம்மதியாக இருந்தது.
அலுத்துச் சலித்துத் திரும்புகையில் எங்கள் வளாகத்தின் வாசலில் ஒரே கூட்டம். மேகத்திலிருந்து விடுபட்ட நிலவுபோல என் எதிர் வீட்டு அம்மா நின்றுகொண்டிருந்தார். ’யாரப் பாத்து என்னடா சொன்ன? என்ன உன் நெனப்பு? பொசுக்கிடுவேன், பாத்துக்க’ என்று கத்திக்கொண்டிருந்தார். காவலாளியை இரண்டுபேர் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.
“அப்பவே சொன்னேன், தனிப்பட்ட மொறையில வாட்ச்மேன் வேணாம், செக்கூரிடி ஏஜென்சி மூலமா வைப்போம்னு; யாரும் கேட்டாத்தானே” என்றார் ஒருவர்.
”இப்படியும் சொல்வீங்க, மெய்ன்டினன்ஸ் ஏத்தினா கத்துவீங்க”
“சரி சார், அதையெல்லாம் அப்புறமா பேசலாம்; இவன என்ன பண்ணப்போறீங்க?”
‘போலீஸ்ல சொல்லிடுவோம்.’
“ஐயா, என்னய போலீசிலெல்லாம் மாட்டிடாதீங்க. நான் மன்னிப்புக் கேக்கறன், அம்மாகிட்ட. புத்தி பிசகி செஞ்சுட்டம்மா, எனக்கே அவமானமா இருக்கும்மா, மன்னிச்சுடுங்க. இந்தத் தெருவுக்குள்ள இனி நொழைய மாட்டன்.”
“அவன கணக்கு தீத்து அனுப்பிடுங்க, வேற ஆள பாத்து வையுங்க” என்ற அந்த அம்மா எங்கள் ப்ளாக்கை நோக்கி நடந்தார்.
என் ஃப்ளாட் வாசலில் தென்னம் விளக்குமாறு குச்சிகள் கிடந்தன. என் வீட்டில் தென்னம் துடைப்பம் கிடையாதே, என்னதான் நடந்திருக்கும்? இசை என்னைப் பார்த்ததும் ஓடிவந்து கட்டிக்கொண்டு அழுதாள்.
“பயந்திருக்கா, அவன வெரட்டியாச்சு, இனி வரமாட்டான், கதவ இன்னாருன்னு பாக்காம தொறக்காத இனி”என்ற அந்த அம்மா என்னைப் பார்த்து.
“ஊமைக் காயத்தை உண்மையாச் சொல்லணும்னு இல்ல; சொல்ல முடியாத நெஜங்கூட நல்லதுதான். எத்தனையோ காயங்கள், யாரோ பேசி சச்சரவு தீந்தா போறாதா? போ போ உள்ள. எந்தக் கெடுதலும் நடக்கல”
அந்த அம்மாவின் கதவு மூடியதில் என் காயங்கள் ஆறின.
.