பொள்ளாச்சி …
மதிப்பிற்குரிய நண்பர் கவிஞர் ரவி சுப்பிரமணியன் எழுதிய பாடல் வரிகளைவிட உக்கிரமாக வேறு யாரும் இந்த அவலத்தை வார்த்தையில் வடித்துவிட முடியாது.
துன்பத்தில் துவண்டிருக்கும் இளம் பெண்களுக்குத் தந்தையாய் தாயாய் அபயக்கரம் நீட்டுகிறார்.
காளியின் படத்தைப் பதிவு செய்துவிட்டு – பாரதியின் காளிக் கூத்துக் கவிதையைப் பாடிவிட்டுத் தன் அறச் சீற்றத்தை மனவலியுடன் தருகிறார்.
இதற்கு என்னுடைய ஒரே பதில் – ஒரே வார்த்தை …
“நெஞ்சு பொறுக்குதில்லையே”
வெடிபடும் அண்டத்து
இடிபல தாளம் போட- வெறும்
வெளியில் இரத்தக்
களியொடு பூதம் பாடப் – பாட்டின்
அடிபடுபொருள் உன்
அடிபடும் ஒலியில் கூடக் – களித்து
ஆடுங் காளீ !
சாமுண் டீ! கங்காளீ!
அன்னை ! அன்னை !
ஆடும் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.
சக்தி பேய்தான்
தலையொடு தலைகள் முட்டிச் – சட்டச்
சடசட சட்டென்று
உடைபடு தாளம் கொட்டி – அங்கே
எத்திக்கினிலும்
நின்விழிஅனல் போய் ஒட்டித் – தானே
எரியும் கோலம்
கண்டே சாகும் காலம்,
அன்னை ! அன்னை !
ஆடும் கூத்தை
நாடச்செய்தாய் என்னை.
– பாரதியார்.
————————-
தத் தரிகட தத் தரிகட தத்தோம்
——————————————
வெறிதிமிர்த்த வேட்கையின் முன்
நிராதரவாய் ஒலமிடுகிறது
அபயம் வேண்டும் குரல்
பயத்தில் அதிர்ந்து
கோரப்பற்களின் மினுக்கத்தில்
சிதறுண்ட நம்பிக்கை
பம்மிப் பம்மிப் பதறுகிறது
சிறகசைக்கும் வேளையில்
முள் வலையில் சிக்கி முனகும்
உன் மீச்சிறு செருமல்
நெஞ்சை அறுக்கிறது
அணில்கள் தாவும் மர நிழலில்
பறவைகளின் கீதங்கள் கேட்டபடி
காற்று உதிர்க்கும் பூக்கள் சிதற
தலை உணர்த்திப் பாடிக்கிடக்கவேண்டிய வயதில்
என்ன நேர்ந்தது மகளே உனக்கு
பளுவேறி உறக்கம் சிதைக்கும்
இவ்வலிக்கு என் செய்வேன்
உன் தவறேதும் இல்லை
உடல் நடுங்கி மனம் குன்றி
சஞ்சலம் கொள்ளாதே
தூய மெல்லுடல் உனது
மறுபடி ஏன் உமிழ்ந்த சளியையே
பார்த்துக்கொண்டிருக்கிறாய்
தரை கிடக்கும் மீனின் கண்களென
அனாந்திரத்தில் வெறிக்காதே
வீறிடும் நினைவறு
துர்பொழுதின் கனங்களை உதறு
ரெளத்திரக் காளியாகு
சூலத்தால் குடல் கிழித்து வதம் செய்
தத் தரிகட தத் தரிகட தத்தோம்
தத் தரிகட தத் தரிகட தத்தோம்
கொந்தளிப்பை திருகி எறி
பற்றி எரியட்டும் அந்த நாசகாரன்கள்
அனுகூல நாய்கள் அலறி ஓடட்டும்
தத் தரிகட தத் தரிகட தத்தோம்
தத் தரிகட தத் தரிகட தத்தோம்
போதும் வா
சமனம் கொள்
இந்தா
இந்த ஆறுதலைப் போர்த்திக்கொள்
சல்லிசல்லியான மனம் தேற
உன் கைகளைப் பற்றிக்கொள்கிறேன்
வெளியேறும் கதவின் வழி
இதோ தெரிகிறது பார்
மூர்க்க வக்கிரன்களின் காமத்தால்
மிகு வெக்கையான
இவ்விடத்தைக் கடந்துவிடலாம்
நதியின் குளிர்மையுடன்
கதிரொளி மினுங்கும்
அழகியதொரு நிலம் அங்கே
உனக்கென செழித்துகிடக்கிறது வா.
( திரு ரவி சுப்பிரமணியன் துடிதுடித்து முகநூலில் எழுதிய கவிதை )