*மகளிர் தினம் – இருக்கட்டும் தினம் தினம்….*
தாலாட்டிய *தாயே*,
துணையாகும் *மனைவியே,*
செல்ல *மகளே*
மலரான *மங்கையே*,
தாங்கும் *மாதரே*
வழிகாட்டும் *பாட்டியே*
அச்சாணியாய் உலகை, *சுற்றவைப்பது நீங்கள்*,
எண் ஜான் உடம்பை, *தோற்றுவிப்பது நீங்கள்*,
மிச்சமில்லாமல் பாசம் *வைப்பது நீங்கள்*,
மிஞ்சுவோர் யாருமில்லா, *ஒப்பற்றவர்கள் நீங்கள்…..*
இஷ்டப்படுவது *நடப்பதில்லை,*
கஷ்டமென்பது *நிற்பதுமில்லை,*
நஷ்டப்படுவது *புதிதில்லை,*
அதிர்ஷ்டமென்பதும் *வருவதில்லை,*
*இருந்தாலும் அஷ்டலக்ஷ்மியாய் காத்திருக்கும், மானிட தெய்வங்கள் நீங்கள்,*
தன்வலி *தெரிவதில்லை,*
தனக்கென *வாழ்வதில்லை,*
தன்ருசிக்கு *சமைப்பதில்லை,*
தனியாக *சாப்பிடுவதில்லை,*
*இருந்தாலும் அன்னலக்ஷ்மியாய் பரிமாறும், ஆத்மார்த்த ஜீவன்கள் நீங்கள்*
சிக்கனம், சேமிப்பு *உங்களின் மனக்கணக்கு*,
துண்டுவிழும்போது சமாளிப்பது *உங்களின் தனிக்கணக்கு.*
நோயற்ற வாழ்வை ஆண்டவனிடம் கேட்பது,
*ஓய்வின்றி உழைத்திடவோ….*
சோர்வுற்று தளரும்போது,
ஆண்டவனே தேடும் *ஆறுதல் நீங்களல்லவோ…..*
பாட்டிமடி *இதமடி,*
தாய்மடி *சுகமடி,*
மனைவிமடி *இன்பமடி*,
மகள்மடி *வரமடி,*
இவைதான் *மண்ணுலகின் சொர்கமடி…*
கடவுளுக்கே *இதில்கொஞ்சம் பொறாமையடி…*
குப்பையை கூட *கூட்டத்தான் தெரியும்,*
உறவுகளை கூட *பெருக்கத்தான் தெரியும்,*
குடும்பத்தின் நிலையை *வகுக்கத்தான் தெரியும்,*
வேண்டாததையெல்லாம் *கழிக்கவே தெரியும்,*
*பெண்களின் சுமைக்கணக்கு யாருக்கு தெரியும்…..*
பெண்களை *மதி,*
மாறிடும் *தலைவிதி,*
பெண்மையை *வாழ்த்து,*
நிலவிடும் *அமைதி.*
பெண்மை எனும் *உண்மையை போற்றுவோம்….*
பெண்மை எனும் *தியாகத்தை போற்றுவோம்….*
*மகளிர் தினம்,*
*இருக்கட்டும் தினம் தினம்….*