Period. End of sentence

 

 

 

 

 

 

Image result for பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ்

 

இந்திய பெண்கள்  மாதவிடாய் காலங்களில் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த ஆவணப் படத்திற்கு விருது கிடைத்துள்ளது.

கோவையைச் சேர்ந்த நாப்கின் உற்பத்தியாளர் முருகானந்தம் , மலிவு விலையில் நாப்கின்களை அறிமுகப்படுத்தினார்.                               பல இடங்களுக்குச்சென்று பெண்களிடையே கலந்துரையாடி விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றார்.

இவரது மலிவு விலை நாப்கின்கள் மற்றும் இந்தியப் பெண்கள் மாதவிடாய் காலத்தில் படும் அவதிகளை எடுத்துச்சொல்வதை மையமாகக்கொண்டு ஆவணக் குறும்படமாக ‘பீரியட்- எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ எனும் பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. இப்படத்தினை குனேட் மோங்கா தயாரித்திருந்தார்.

இப்படம் இந்த ஆண்டிற்கான சிறந்த ஆவணக் குறும்படமாக ஆஸ்கர் விருது விழாவில் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மலிவு விலை நாப்கின் உற்பத்தியாளர் முருகானந்தம் கூறுகையில், ‘இந்தப் படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைப்பதன் மூலம் சர்வதேச அளவில் மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும்’ எனக் கூறினார்.

இப்படத்தில் முருகானந்தம் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது

 

குவிகம் பெண் எழுத்தாளர் போட்டி – இரண்டாம் பரிசு – ஊமைக்காயம் – ந. பானுமதி

கதையின் ஆசிரியர்  ந . பானுமதி  அவர்களைப்பற்றி ……

 

மின்னிதழ்களான  பதாகை மற்றும் சொல்வனத்தில் இவரது  ஐம்பதுக்கும் மேற்பட்ட கதை கவிதை கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

நவீன விருட்சம் மற்றும் புதுகைத் தென்றல் இதழ்களிலும் இவரது கதைகளும் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.

கிழக்குப் பதிப்பகம் சிறுகதைத் தொகுப்பொன்றில் இவரது ‘’”அஸ்வத்தாமா” கதை இடம் பெற்றுள்ளது.

கிழக்குப் பதிப்பகம் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற இவர் ‘கவிமாமணி’, ’ஸ்வாமி இராமானுஜர் ஆயிரத்தாண்டு விருது’ ஆகியவை பெற்றவர்

ஊமைக்காயம்

 

Related image

“கயல், மகிழ்ச்சிதானே! உனக்கு மணவிலக்கு கிடைத்துவிட்டது. உன் பணத்தில் நீ கட்டிய வீடு, ஒருமுறை கூட இதுவரை நீ பார்த்திராத வீடு, உனக்கே உனக்கு என்று நீதிமன்றம் சொல்லிவிட்ட வீடு; உன் மகள் இசையுடன் இனி நீ அங்கு நிரந்தரமாக, சுதந்திரமாக இருக்கலாம். புது வாழ்க்கை தொடங்க என் வாழ்த்துக்கள்.” வழக்குரைஞர் என்னிடம் சொல்கையில் ஒருபுறம் வெற்றிக் களிப்பும், மறுபுறம் வெறுமையுமாக உணர்ந்தேன். எத்தனை நெருங்கிய சொந்தங்கள் எனக்கு, இன்று ஒருவரும் அருகிலில்லை. என் திருமணமும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை, என் மணவிலக்கும். இத்தனை பெரிய உலகில் பத்து வயது சிறுமியைக் கையில் பற்றிக்கொண்டு மிகத் தனியாக நிற்கிறேன். இல்லை, சோர்விற்கு இடமில்லை  வாழ்ந்து காட்ட வேண்டும், மகள் நல்ல துணையில்லையா, வேலை ஒரு கௌரவமில்லையா, நானே உழைத்து நானே முன்னேறும் இவ்வாழ்க்கை ஒரு வரமில்லையா?

அறுபத்தி நான்கு குடியிருப்புகள் அந்த வளாகத்தில் இருந்தன. என்னுடையது ‘சி’ ப்ளாக், இரண்டாம் மாடி. நான் என் சாமான்களுடன் நுழையும்போதே காவலாளி தடுத்தான்.

‘செகரட்டரி’ வந்து சொன்னாத்தான் உள்ள போகலாம்.’

“என் வீட்டுக்கு நான் போறதுக்கு யாரு சொல்லணும்?”

‘அந்த நியாயமெல்லாம் அவரிட்ட பேசு. அவரு சொல்லாம லாரி ஒரு இன்ச் நவராது’

“என்னம்மா இது, முன்னாடியே பேசி வக்கறதில்லையா? என்ன டிலே பண்றீங்க” லாரி ஓட்டுனர் படபடத்தார்.

‘அப்படிச் சொல்லுய்யா, பர்மிஷன் இல்லாம வர்லாமா? அவரு என்னைய வேலய விட்டுத் தொரத்திடுவாரு.’

நான் இம்மாதிரியான வரவேற்பை எதிர்பார்த்திருக்கவில்லை; என் வீட்டிற்கு நான் செல்வதை யாரோ தடுப்பார்கள் எனக் கனவிலும் நினைக்கவில்லை.

“சரி, செகரட்டரி எங்க இருக்காரு, ஃபோன்ல கூப்டுங்க, இல்ல நம்பர் தாங்க நான் பேசறேன்”

“புது நம்பரை அவரு எடுக்க மாட்டாரு. க்ளப்புக்குப் போயிருக்கிறாரோ என்னமோ? இன்டர்காம்ல கேக்கறேன். ஐயா வரல்லியா?”

நான் பதில் சொல்லாது நின்றேன்.

காவலாளியும், லாரி ஓட்டுனரும் இகழ்ச்சியான பார்வையை பரிமாறிக்கொள்வதைக் கவனித்தேன். ”பழகிக்கோ கயல்” என்று மனதினுள் சொல்லிக்கொண்டேன்.

படபடப்புடன்  ஒரு முதியவர் வாசலுக்கு வந்தார். ’ஆரு, என்னது, சி ப்ளாக் ஆறா, சந்த்ரன் வீடு இல்லியோ அது? என்னது உங்க வீடா? கோர்ட் சொல்லிடுத்தா? டிவோர்சியா? எப்படி சமாளிப்பேள்? டாக்குமென்ட் இருக்கா? பெண் குழந்தையா? ஈஸ்வரா! பகலோட வரப்படாதோ? உள்ள அனுப்புடா, முழிக்கிறான் பாரு.’

ஒரு வழியாக சாமான்களை இறக்கிப் பேசினதை விட அதிகத் தொகை கொடுத்து நிமிர்கையில் இசை உறங்கியிருந்தாள்.சாப்பிட வெளியிலும் போகமுடியாது, இங்கேயும் செய்யமுடியாது, நாளை பார்த்துக் கொள்ளலாம். எதிரெதிராக இரு ஃப்ளாட்கள்  ஒவ்வொரு தளத்திலும். கட்டிட அமைப்பில் நிறைய இடம் இருக்கும் தோற்றத்தை புத்திசாலித்தனமாக ஏற்படுத்தியிருந்தார்கள். காலை புலர்கையில் இசை விழித்துக்கொண்டு பசிக்கிறது என்றாள்.அவளுக்கு கார்ன் ஃப்ளேக்ஸ் கொடுக்கலாம் என்றால் பாலில் தா என அடம். எதிர்த்த வீட்டில் கேட்கலாமென பெல் அடித்தேன். முழுதாக இரு நிமிடங்களுக்குப் பிறகு கதவு பாதி திறந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண் முகக் குறிப்பால் என்ன என்றார்.

“எதிர் வீடு என்னோடது. நேத்துதான் வந்தேன். எக்ஸ்ட்ரா பால் இருந்தா தாங்க.மாலயில வாங்கித் தரேன்.”

‘பாலுமில்ல, ஒன்னுமில்ல’ என்று கதவு சாத்தப்பட்டது. அதிர்ந்தேன். என்ன பிழை என்னிடம்? இசையை அடிக்கும் வேகம் வந்தது. இல்லை, அது இயலாமை. பிறர் உனக்கு எதையும் செய்யக் கடன்பட்டவர்களில்லை என்று என்னையே சமன் செய்துகொண்டேன்.

“பால் எங்க கிடைக்கும்? காய்கறி கட கிட்டக்க இருக்கா? பலசரக்குக் கட பக்கமிருக்கா?” என்று அந்த காவலாளியைத்தான் கேட்க நேர்ந்தது. அவன் குறுகுறுவெனப் பார்த்துக்கொண்டே ’நேரப் போயி ஜங்க்ஷன்ல  திரும்பு. அல்லாமிருக்கும்’ என்றான். பெரு நகரின் கலாசாரத்தை நோக்கி இந்த ஊர் சென்று கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

காலை உணவை முடித்துக்கொண்டு அனைத்துப் பொருட்களையும் சுமந்துகொண்டு திரும்பி வருகையில் ‘மிஸஸ். சந்த்ரன்‘ என்று பெண்குரல் கேட்டது. “என்பெயர் கயல்”.

“சாமாங்க இருக்கு. அப்புறம் வரேன்”

“அப்படியா? சரி, உள்ள வாங்களேன்.” ஏ1 வாசலிலிருந்து அழைத்த பெண்மணி செக்ரட்டரியின் மனைவி என சொல்லாமல் தெரிந்தது.

 “சும்மா இப்படி வைங்கோ, உங்க பொண்ணா, அப்படியே சந்த்ரன் ஜாட”

நான் பதில் சொல்ல முயலவில்லை. வீண், இதெல்லாம் வீண். என் தன்மானத்திற்கு நான் தரவேண்டிய விலை. இவைகள் உறுத்தும் ஊவா முட்கள். எரிச்சல் தரும் பார்வைகள், பின் முதுகில் ஊறும் நமட்டுச் சிரிப்புகள், பாவமே என்று பரிதாபப்படும் பகல் வேஷங்கள். காளியென இவர்களைக் கிழித்துப் போட்டுவிடலாம், ஆனால், எத்தனைபேரை அப்படிப் போடமுடியும்? அந்தக் காளியே மகிஷனை வதைத்தபிறகு விட்டுவிட்டாளே?

அந்த வளாகமே சந்திரனை அறிந்திருந்தது. அவனை நல்லவன் என்ற அதன் மதிப்பீட்டிலிருந்து சரித்துக்கொள்வதற்கு அவர்கள் விரும்பவில்லை. இசை, விளையாடப் போகையில் பெரியவர்கள் வந்து அவளிடம் கேள்விகள் கேட்பதாகச் சொன்னாள். “அந்த சவிதா இல்ல அவளும், இளங்கோவும் ‘உங்க அப்பா உன்னோட இல்லியா? அவரு கெட்டவரா’ன்னு கேக்கறாங்க மம்மி” என்று  அழுதாள். “மம்மி நம்ம வூருக்கே போலாம், அங்கதான் ராதா, சுரேஷ் எல்லாரும் ஒன்னும் கேக்க மாட்டாங்க.”

“நான்  பேசறேன்.      நீ ப்ரண்ட்ஸ்ஸோட நல்லா வெளயாடலாம். அம்மாகூட எல்லாரையும் விட்டுட்டுத்தானே  இங்க இருக்கேன். குட் கேர்ள் இல்ல, வீட்டுப்பாடம் எழுதவேணாமா? நாளக்கி தீம் பார்க் போலாம் ஓகேயா?”

இப்போதெல்லாம் என்னைப் பார்த்தால் சிலர் நட்புடன் சிரிக்கிறார்கள். தங்கள் இல்லங்களுக்கும் அழைப்பதில்லை, என் வீட்டிற்கும் வருவதில்லை. ஆனால், ஒதுக்கம் குறைந்துள்ளது. ஏன், அம்மாகூட ஒன்றும் கேட்பதில்லை. இணக்கம் வராமலா போய்விடும்? எனக்கும் அலுவலக வேலைகள், வீட்டு வேலைகள், இசையின் படிப்பும், அவளின் வயலின் வகுப்பும் என்று நேரம் பறக்கிறது. நீல இரவு விளக்கின் ஒளியில் என் கன்னங்களில் வழியும் கண்ணீர் பளபளவென்று மினுங்கி என் வாழ்வைப் போல் காய்ந்தும் விடுகிறது. இத்தனைக்கும் நடுவில் எதிர் வீட்டில் ஆள் இருக்கும் அரவமே இருப்பதில்லை. அன்று பார்த்த முகம், பாதி உடல் ஏனோ மருள் காட்சியெனத் தோன்றித் தோன்றி மறைந்தது.

இசையின் பள்ளி எங்கள் இருப்பிடத்திலிருந்து இரு கிலோ மீட்டருக்குள்தான். நானே அழைத்துச் சென்று விடுவேன், அழைத்து வந்தும் விடுவேன். அன்று காலையில் இருந்தே மனம் அமைதியாக இல்லை. முக்கியமான வழக்கு ஒன்றின் தீர்ப்பு பாதகமாக வரும் என்ற எதிர்பார்ப்பை ஊடகங்கள் சொல்லிக்கொண்டிருக்க, இசையின் பள்ளி நிர்வாகம் மதியம் மூன்றுமணிக்கு அனைவரையும் வீட்டிற்குச் செல்லுமாறு சொல்லிவிட்டது. இசை என்னிடம் அதைச் சொல்கையில் நான் முக்கிய கூடுகையிலிருந்தேன். தவிப்பாக இருந்தது, அவள் பள்ளியிலும் இருக்கமுடியாது, வெளியிலும் நிற்கமுடியாது, நானும் போகமுடியாது, கலவரம் நடந்தால் என்ன செய்வது? என் கவனம் சிதறுவது எனக்கே தெரிந்தது. ’மிஸ். கயல், நீங்கள் நிலையாக இல்லை, ஹேவ் சம் டீ’ என்றார் நிர்வாக இயக்குனர்.’ நான் அங்கு இருக்க வேண்டிய அவசியத்தை அவர் சொல்லும் முறை, நான் அவசரத்தில் இருக்கிறேன் என்று சொல்லக்கூடாத நிலை. தவித்தேன், நல்லவேளை, சவிதாவின் தாய் இசையையும் அழைத்துக்கொண்டு வீட்டில் விட்டுவிட்டதாகவும், தன் வசம் இருக்கும் சாவியால் வீட்டிற்குள் போய்விட்டதாகவும் இசை சொல்ல நிம்மதியாக இருந்தது.

அலுத்துச் சலித்துத் திரும்புகையில் எங்கள் வளாகத்தின் வாசலில் ஒரே கூட்டம். மேகத்திலிருந்து விடுபட்ட நிலவுபோல என் எதிர் வீட்டு அம்மா நின்றுகொண்டிருந்தார். ’யாரப் பாத்து என்னடா சொன்ன? என்ன உன் நெனப்பு? பொசுக்கிடுவேன், பாத்துக்க’ என்று கத்திக்கொண்டிருந்தார். காவலாளியை இரண்டுபேர் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.

Image result for watchman misbehaving in a flat in chennai

“அப்பவே சொன்னேன், தனிப்பட்ட மொறையில வாட்ச்மேன் வேணாம், செக்கூரிடி ஏஜென்சி மூலமா  வைப்போம்னு; யாரும் கேட்டாத்தானே” என்றார் ஒருவர்.

”இப்படியும் சொல்வீங்க, மெய்ன்டினன்ஸ் ஏத்தினா கத்துவீங்க”

“சரி சார், அதையெல்லாம் அப்புறமா பேசலாம்; இவன என்ன பண்ணப்போறீங்க?”

‘போலீஸ்ல சொல்லிடுவோம்.’

“ஐயா, என்னய போலீசிலெல்லாம் மாட்டிடாதீங்க. நான் மன்னிப்புக் கேக்கறன், அம்மாகிட்ட. புத்தி பிசகி செஞ்சுட்டம்மா, எனக்கே அவமானமா இருக்கும்மா, மன்னிச்சுடுங்க. இந்தத் தெருவுக்குள்ள இனி நொழைய மாட்டன்.”

“அவன கணக்கு தீத்து அனுப்பிடுங்க, வேற ஆள பாத்து வையுங்க” என்ற அந்த அம்மா எங்கள் ப்ளாக்கை நோக்கி நடந்தார்.

என் ஃப்ளாட் வாசலில் தென்னம் விளக்குமாறு குச்சிகள் கிடந்தன. என் வீட்டில் தென்னம் துடைப்பம் கிடையாதே, என்னதான் நடந்திருக்கும்? இசை என்னைப் பார்த்ததும் ஓடிவந்து கட்டிக்கொண்டு அழுதாள்.

 “பயந்திருக்கா, அவன வெரட்டியாச்சு, இனி வரமாட்டான், கதவ இன்னாருன்னு பாக்காம தொறக்காத இனி”என்ற அந்த அம்மா என்னைப் பார்த்து.

“ஊமைக் காயத்தை உண்மையாச் சொல்லணும்னு இல்ல; சொல்ல முடியாத நெஜங்கூட நல்லதுதான். எத்தனையோ காயங்கள், யாரோ பேசி சச்சரவு தீந்தா போறாதா? போ போ உள்ள. எந்தக் கெடுதலும் நடக்கல”

அந்த அம்மாவின் கதவு மூடியதில் என் காயங்கள் ஆறின.   

 

பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கு

எம்ஜிஆர், சிவாஜி, கமல், மணிரத்னம் ஆகியோர் முயற்சி செய்து முடியாமல் போனது பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாகக்  கொண்டுவருவது !

Related image

 Image result for பொன்னியின் செல்வன் -கமல்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மணிரத்னம்  அவர்கள் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க மீண்டும் முயற்சி  செய்கிறார் என்பது  தற்போதைய சுடும் செய்தி! 

Image result for பொன்னியின் செல்வன் -கமல்

தமிழ்  ஹிந்து செய்தி:  

விஜய், விக்ரம் மற்றும் சிம்பு ஆகியோரை வைத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் மணிரத்னம்

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் ‘செக்கச்சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைகா இணைந்து இப்படத்தை தயாரித்தது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் நிஜமான மல்டி ஸ்டாரர் படம் என்று கொண்டாடினார்கள். தற்போது தனது நீண்ட நாள் கனவான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை  மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் மணிரத்னம்.

கடந்தமுறை விஜய் மற்றும் மகேஷ் பாபு ஆகியோரை வைத்து முதலில் பேச்சுவார்த்தை தொடங்கினார். ஆனால், எதிர்பார்த்ததைவிட பட்ஜெட் அதிகமானதால் அந்த முயற்சியைக் கைவிட்டார்.

இப்போது விஜய், விக்ரம் மற்றும் சிம்பு ஆகியோரை அணுகியிருக்கிறார் மணிரத்னம்.  இந்த முறை படமாக்குவதில் தீவிரம் காட்டுவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள். விஜய்யை தன் அலுவலகத்துக்கு அழைத்து, போட்டோ ஷூட் ஒன்றையும் முடித்திருக்கிறார் மணிரத்னம். கதாபாத்திர வடிவமைப்பு எப்படியிருந்தால் அவருக்குப் பொருந்துகிறது என்பதை இதில் முடிவு செய்ததாகத் தெரிவித்தனர்.

விக்ரம் மற்றும் சிம்பு இருவரையும் வைத்து  இதே போன்றதொரு போட்டோ ஷூட்டும் விரைவில் நடக்கும் எனத் தெரிகிறது. இப்படத்தையும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை அவருடன் இணைந்து தயாரித்த லைகா நிறுவனமே தயாரிக்கவுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இம்முறை தனது ‘பொன்னியின் செல்வன்’ முயற்சியில் வெற்றி பெறுவாரா என்பது, இனிமேல் நடைபெறப்போகும் சம்பவங்களைவைத்துத் தெரிந்துவிடும் என்கிறார்கள் சினிமா ஆர்வலர்கள்.

பொன்னியின் செல்வனை மணிரத்னம் ஏற்கனவே எடுத்து முடித்ததுபோல் நாம் கற்பனையில்  ஐந்து வருடத்துக்கு முன் சொன்ன வீடியோ இதையும் பார்த்து ரசியுங்கள்

 

 

அம்மா கை உணவு (13) – வெண்பொங்கல் வேண்டுதல் – சதுர்புஜன்

Image result for வெண்பொங்கல்

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.

 

 1. கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018 .
 2. இட்லி மகிமை – ஏப்ரல் 2018
 3. தோசை ஒரு தொடர்கதை – மே 2018
 4. அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
 5. ரசமாயம் – ஜூலை 2018
 6. போளி புராணம் – ஆகஸ்ட் 2018
 7. அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
 8. கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018   
 9. கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
 10. சேவை செய்வோம் – டிசம்பர் 2018
 11. பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
 12. பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019

 

 

வெண்பொங்கல் வேண்டுதல்

 

இட்லி தோசை என்று எதை நீட்டினாலும்

இருக்கட்டும் என்று சொல்லி சற்றுத் தள்ளி வைப்பேன்.

பொங்கலென்று சொல்லிவிட்டால் போதுமடா போதும்

பொங்கி வரும் பசி எனக்கு பிடுங்கித் தின்னத் தோணும்.

 

பொங்கலன்று நாம் பொங்கும் தித்திப்(பு) பொங்கலன்று –

நான் சொல்லும் பொங்கல் நல்ல விறுவிறு வெண்பொங்கல்.

பார்த்தாலே பசி எடுக்கும் கப கபவென எரியும் –

உண்ண உண்ண உயிர் சிலிர்க்கும் ருசி உனக்குத் தெரியும்.

 

கொதிக்க கொதிக்க வேணுமடா வெண்பொங்கல் எனக்கு –

கரண்டி நெய்யை மேலே விட்டு கிளறிக்கொண்டு கொட்டு !

உப்பும் மிளகும் தூக்கலாக இருக்க வேணும் எனக்கு –

சப்புக் கொட்டி சாப்பிடவே செய்யும் இந்த சரக்கு.

 

குளித்து முடித்து வந்து விட்டால் பசியும் வந்து சேரும் –

பொங்கல் வாசம் வந்து விட்டால் கையும் வாயும் பேசும்.

சட்னி சாம்பார் எதுவென்றாலும் சேர்த்தடிக்கத் தோணும்

கொத்சு என்று சொன்னால் மனசு குட்டிக்கரணம் போடும்.

 

பெருமாள் கோயில் பொங்கலென்றால் பெருமை உனக்குப் புரியும்

பக்தி கொஞ்சம் பசியும் கொஞ்சம் போட்டு வயிற்றைக் கிளறும்

அம்மா கையால் செய்த பொங்கல் மீண்டும் எனக்கு வேணும்

தவம் இருந்தால் கிடைத்திடுமோ மீண்டும் அந்தச் சொர்க்கம்.

 

பொங்கலோ பொங்கல் என்று உரக்க நீயும் சொல்லு

வெண்பொங்கல் வீட்டில் செய்தால் வயிறும் மனமும் நிறையும்

முந்திரியைப் போட்டு நெய்யில் வறுவறுன்னு வறுத்து

வெண்பொங்கல் வேண்டுமம்மா – வேண்டுதல் நிறைவேற்று.

 

 

குவிகம் பொக்கிஷம் – பைத்தியக்காரி- மாப்பஸான் தமிழில்: புதுமைப்பித்தன்

Related image
“ஆமாம், நீ சொல்வது முன்பு பிரான்சிற்கும் ருஷியாவிற்கும் சண்டை நடந்ததே, அப்பொழுது நடந்த பயங்கரமான சம்பவத்தை என் நினைவிற்குக் கொண்டு வருகிறது” என்று கூறத் தொடங்கினார் முஸே டி’ என்டோலின்.

பாபர்க் கு கார்மீலில் இருக்கிற எனது வீடுதான் உங்களுக்குத் தெரியுமே! ருஷ்யர்கள் படையெடுத்து வந்தபொழுது எனது பக்கத்து வீட்டில் ஒரு பைத்தியக்காரி வசித்து வந்தாள். Maupassant_2அவளுக்குப் பைத்தியம் ஏற்பட்டதே ஒரு பெருங்கதை. இந்த உலகத்திலே துன்பத்தில் யாருக்குத்தான் பங்கு கிடையாது! அந்த ஸ்திரீக்கு துன்பம் தனது ஏகபோக அன்பைச் சொரிந்தது. அவளது இருபத்தைந்தாவது வயதில் தகப்பனாரை இழந்தாள். அவர் இறந்த ஒரு மாதத்திற்குள் அவள் புருஷனும், அப்பொழுதுதான் பிறந்த குழந்தையும் அவரைத் தொடர்ந்து சென்றார்கள். இப்படி ஒன்றன்பின் ஒன்றாக வந்த துன்பத்தின் கடாக்ஷத்தால் அவள் படுத்த படுக்கையாகி, பல நாட்கள் ஜன்னி கண்டு பிதற்றினாள். இதன் பிறகு கொஞ்ச நாள் சோர்வும், அமைதியும் அவளைக் கவ்வின. அசையாது அலுங்காது, படுத்த படுக்கையாக, வெறுமெனக் கண்களை மிரள மிரள விழித்துக்கொண்டு கிடந்தாள். உடம்பு குணமாகி விட்டது என்று நினைத்து அவளைப் படுக்கையைவிட்டு எழுந்திருக்கும்படி செய்ய முயற்சித்தார்கள். ஆனால், அவளைத் தூக்க முயன்றவுடன், அவள் கூச்சலிட்டு, கொல்லப்படுபவள் போல் ஓலமிடத் தொடங்கியதால், குளிப்பாட்டி உடைகளை மாற்றுவதற்கு மட்டுமே அவளைப் படுக்கையிலிருந்து எடுக்கவும், மற்றபடி படுத்த படுக்கையாகவே கிடக்கவும் அனுமதித்தார்கள்.

 வயது முதிர்ந்த வேலைக்காரி ஒருத்தி அவள் பக்கத்தில் இருந்து அவளுக்கு வேண்டிய உதவியைச் செய்து கொண்டிருந்தாள்.

அந்தப் பிரமை மண்டிய உள்ளத்தில் என்ன ஏற்பட்டுக் கொண்டிருந்தது என்று ஒருவருக்கும் ஒன்றும் தெரியாது. அவள் மறுபடி பேசியதே கிடையாது. என்ன நடந்தது என்று திட்டமாக அறியாமல் வெறும் துன்பக் கனவு கண்டு கொண்டிருக்கிறாளா? அல்லது அவளது கலங்கிய மூளை சலனமற்றுவிட்டதா? இப்படிப் பதினைந்து வருஷங்கள் கழிந்தன. இத்தனை காலமும் அவள் உயிர்ப் பிணமாகக் கிடந்தாள்.

சண்டை ஆரம்பித்தது. டிஸம்பரில் ஜெர்மானியர் கார்மீலுக்குள் வந்தனர். எல்லாம் நேற்று நடந்த மாதிரி இருக்கிறது. அப்பொழுது நல்ல மாரிக்காலம். ஜலம் கல்லைப் போல் உறைந்து பாறைகளைக்கூட உடைத்துத் தகர்த்துவிடும் போல் இருந்தது.

எனக்கோ, அங்கு இங்கு அசைய முடியாதபடி கீல்வாதம். நாற்காலியில் சாய்ந்தபடியே அவர்கள் தட்தட் என்று கால் வைத்துப் போகும் சப்தத்தைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

ராணுவப் படை இடைவிடாமல் சென்று கொண்டேயிருந்தது; தட்தட் என்ற சப்தம் காதில் இடித்துக் கொண்டேயிருந்தது. ராணுவ அதிகாரிகள் தங்கள் படைகளைப் பிரித்து, உணவு கொடுக்கும்படி, வீட்டுக்குப் பத்து இருபது பேராக எங்கள் ஊர்க்காரர் மீது சுமத்திவிட்டனர். எனது பக்கத்து வீட்டிற்குப் பன்னிரண்டு பேர் சுமத்தப் பட்டனர். அதில் ஒருவன் ராணுவ அதிகாரி – மேஜர் – வெறும் தடியன், முரடன்.

கொஞ்ச நாட்களுக்கெல்லாம் அமைதியாக நடந்து வந்தது. பக்கத்து வீட்டுக்காரி நோயாளி என்று அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டது. முதலில் அவன் அவளைக் கவனிக்கவில்லை. கொஞ்ச நாட்களில் அவர்கள் பார்க்க முடியாத ஸ்திரீ என்பது அவனது மனத்தை உறுத்தியது. அவளுக்கு என்ன வியாதி என்று கேட்டான். தீராத் துயரத்தால், பதினைந்து வருஷங்களாகப் படுத்த படுக்கையாக இருக்கிறாள் என்று கூறினார்கள்; அவன் நம்பவில்லை; அந்தப் பைத்தியம் தன் மனத்தில் இதைப் பெருமை என்று நினைத்துக்கொண்டு, ‘படுக்கையை விட்டு எழுந்திருக்க மாட்டேன்’ என்கிறது என்று எண்ணிக்கொண்டான். இப்படி நோயாளி என்று வேஷமிட்டு, பிரஷ்யர் முன்பு வராமல், ஏமாற்ற முயலுகிறாள், அடைந்து கிடக்கிறாள் என்று எண்ணிவிட்டான்.

அவன், அவளைப் பார்க்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தி, அவள் அறைக்குச் சென்றான்.

“எழுந்து கீழே வா! நாங்கள் எல்லோரும் உன்னைப் பார்க்க வேண்டும்” என்று முரட்டுத்தனமாகக் கூறினான்.

அவள் பதில் சொல்லாமல் மிரள மிரள விழித்தாள்.

“அதிகப் பிரசங்கித்தனத்தை நான் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டேன். மரியாதையாக நீ எழுந்து நடந்து கீழே வராவிட்டால், உன்னை நடக்கச் செய்ய எனக்குத் தெரியும்!” என்றான் அந்த முரட்டு மேஜர்.

அவள் அவனைக் கேட்டதாகத் தெரியவில்லை. சலனமற்றுக் கிடந்தாள். அவள் பேசாமல் இருப்பதே தன்னை அவமரியாதை செய்வது என்று நினைத்துக்கொண்டு, “நாளைக்கு நீ கீழே இறங்கி வராவிட்டால்…” என்று தலையை அசைத்து உருட்டி விழித்துவிட்டு அவ்விடத்தை விட்டு வந்துவிட்டான்.

மறுநாள் கிழட்டு வேலைக்காரி பயந்துபோய் அவளுக்கு உடைகளை அணிவிக்க முயன்றாள். அதற்குப் பைத்தியம் கூச்சலிட்டுக்கொண்டு தன் முழு பலத்தோடும் முரண்டியது.

அந்த முரடன் சப்தத்தைக் கேட்டு மேலே ஓடினான். வேலைக்காரி அவனை இடைமறித்து, காலில் விழுந்து, “அவள் வரமாட்டேன் என்கிறாள், எஜமான். மன்னிக்க வேண்டும். துயரத்தில் மூளை கலங்கியவள்” என்றாள்.

 படைவீரன் கோபத்தால் துடித்தாலும், சிறிது தயங்கினான். அவளைப் பிடித்து இழுத்து வரும்படி உத்தரவிடவில்லை.

பிறகு, உடனே கலகலவென்று சிரித்துவிட்டு, ஜெர்மன் பாஷையில் உத்தரவிட்டான். சிறிது நேரங் கழித்து, சில சிப்பாய்கள் ஒரு படுக்கையைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தார்கள். அந்தக் கலைக்காத படுக்கையில், பித்துக்குளி, மௌனமாக, என்ன நடக்கிறது என்பதைப் பற்றிச் சிறிதும் கவனிக்காது, படுத்துக் கிடந்தது. படுக்கையைவிட்டு எழுப்பாதவரை அதற்கு என்ன கவலை? அவள் பின்பு ஒரு சிப்பாய் பெண்கள் உடையை எடுத்துக்கொண்டு நடந்தான்.

அந்த முரட்டு மேஜர், “நீயாக உடுத்திக்கொண்டு நடந்து வருகிறாயா, இல்லையா? அதைத்தான் பார்க்கிறேன்!” என்று கைகளைத் தேய்த்துக் கொண்டான்.

இந்தக் கூட்டம் இமாவில் காட்டுப் பக்கம் சென்றது. இரண்டு மணி நேரங் கழித்து, சிப்பாய்கள் மட்டும் தனியாகத் திரும்பினார்கள். பைத்தியக்காரி என்னவானாள் என்பது தெரியவில்லை. அவளை என்ன செய்தார்கள்? எங்கு கொண்டு சென்றார்கள்? ஒருவருக்கும் ஒன்றும் தெரியாது.

பனி அதிகமாகப் பெய்தது. எங்கு பார்த்தாலும் உறைபனி. காடுகள் பனித் திரைகள் மாதிரி நின்றன. ஓநாய்கள் வீட்டுக் கதவண்டைவரை வந்து ஊளையிடத் தொடங்கின.

அந்தப் பைத்தியத்தின் கதி என் சிந்தனையைவிட்டு அகலவில்லை. பிரஷ்ய அதிகாரிகளிடம் இதற்காக மனுச்செய்து கொண்டேன். அதற்கே என்னைச் சுட்டுவிட முயற்சித்தார்கள். வசந்த காலம் வந்தது. வீட்டுக்குத் தலைவரியாகச் சுமத்தப்பட்ட படை சென்றுவிட்டது. ஆனால், எனது பக்கத்து வீடு அடைத்தபடியே கிடந்தது. வீட்டைச் சுற்றிய தோட்டத்தில் புல்லும் பூண்டும் கண்டபடி வளரத் தொடங்கின. கிழட்டு வேலைக்காரி மாரிக் காலத்திலேயே இறந்துவிட்டதால், அந்தச் சமாசாரத்தைப் பற்றி ஒருவரும் கவலை கொள்ளவில்லை. நான் ஒருவன் தான் அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். அவளை என்ன செய்தார்கள்? அவள் காட்டு வழியாகத் தப்பித்துக் கொண்டாளா? யாராவது அவளைக் கண்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றார்களா? அவள்தான் பேசாமடந்தையாச்சே; சந்தேகம் தீர்ந்தபாடில்லை. காலந்தான் சிறிது சிறிதாகக் கவலையைக் குறைத்தது.

அடுத்த இலையுதிர் காலம் வந்துவிட்டது. காட்டுக் கோழி ஏராளம். கீல் வாதத்தைக்கூடப் பொருட்படுத்தாமல் காட்டிற்குச் சென்று ஐந்நூறு பட்சிகளைச் சுட்டு வீழ்த்தினேன். அதில் ஒன்று ஒரு குழிக்குள் விழுந்துவிட்டது. அதை எடுக்கப் பள்ளத்தில் இறங்கினேன். அது ஒரு மண்டையோட்டின் பக்கத்தில் கிடந்தது. உடனே அந்தப் பித்துக்குளியின் ஞாபகம், என் மனத்தில் எதை வைத்தோ அடித்தது போல் எழுந்தது. அந்த நாசமாய்ப் போன வருஷத்தில் எத்தனை பேரோ இறந்திருக்கலாம். ஆனால் அந்தப் பித்துக்குளியின் மண்டையோடுதான் இது என்று நான் திட்டமாகக் கூறுவேன்.

உடனே எல்லாம் ஸ்பஷ்டமாக விளங்கிவிட்டது. அந்தக் குளிரில் யாருமற்ற காட்டில் படுக்கையை வைத்துவிட்டு வந்துவிட்டார்கள். பித்துக்குளி, மனப் பிராந்தியைப் பிடித்துக்கொண்டு, குளிரில் விறைத்துவிட்டது. பனி அவளை மூடியது.

ஓநாய்கள் அவளைத் தின்றன. பட்சிகள் மெத்தைப் பஞ்சை எடுத்துக் கூடு கட்டின. அந்த மண்டையோட்டிற்கு மட்டும் ஒரு புழுவும் குடியிருக்க வரவில்லை. அவள் அஸ்தியை நான் சேகரித்து, ‘நமது சந்ததி இனியாவது யுத்தத்தை அறியாமல் இருக்க வேண்டும்’ என்று அதன் மீது பிரார்த்தித்தேன்.

ரகுவம்ஸம்

 

By Sesa Dasa Here are three questions for you to ponder, dear reader: First, which came first, the chicken or the egg? Second, what do a highway billboard, a small town storefront, and the Greek ph…

 சூர்ய குல  மன்னர்  ஸ்ரீ ராமபிரானின் பரம்பரையைப்பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்!

காளிதாசர் ரகுவம்ஸம்  என்று ஒரு காவியம் படைத்திருக்கிறார். 

1. ப்ரம்ஹாவின் மகன் மரீசி
2. மரீசி யின் மகன் காஷ்யப்
3. காஷ்யப் மகன் விவஸ்வான்
4. விவஸ்வான் மகன் வைவஸ்வத மனு
5. வைவஸ்வத மனு மகன் இக்ஷ்வாகு (இவர் அயோத்தியை உருவாகினார்).
6. இக்ஷ்வாகு மகன் குக்ஷி.
7. குக்ஷி மகன் விகுக்ஷி
8. விகுக்ஷி மகன் பான்
9. பான் மகன் அன்ரன்யா
10. அன்ரன்யா மகன் ப்ருது
11. ப்ருது மகன் த்ரிஷங்கு (இவருக்காக விஸ்வாமித்ரர் ஸ்வர்கம் படைத்தார்)
12. த்ரிஷங்கு மகன் துந்துமார்
13. துந்துமார் மகன் யுவனஷ்வா
14. யுவனஷ்வா மகன் மாந்தாதா
15. மாந்தாதா மகன் சுசந்தி
16. சுசந்தி மகன் துவசந்தி மற்றும் ப்ரசந்ஜீத்
17. துவசந்தி மகன் பரத்
18. பரத் மகன் அஸித்
19. அஸித் மகன் ஸாகர்
20. ஸாகர் மகன் அஸமஞ்ச
21. அஸமஞ்ச மகன் அன்ஷுமான்
22. அன்ஷுமான் மகன் திலீபன்
23. திலீபன் மகன் பாகீரதன் (கங்கையை வானுலகிலிருந்து பூலோகம் தந்தவன்)
24. பாகீரதன் மகன் காகுஸ்தன்
25. காகுஸ்தன் மகன் ரகு (காளிதாஸன் ரகுவம்ஸம் ) 
26. ரகு மகன் ப்ரவ்ருத்
27. ப்ரவ்ருத் மகன் ஷம்கன்
28. ஷம்கன் மகன் ஸூதர்ஷன் 
29. ஸூதர்ஷன் மகன் அக்னிவர்மன்
30. அக்னிவர்மன் மகன் சிஹ்ராக்
31. சிஹ்ராக் மகன் மேரு
32. மேரு மகன் பரஷுக்ஷுக்
33. பரஷுக்ஷுக் மகன் அம்பரீஷ்
34. அம்பரீஷ் மகன் நகுஷ்
35. நகுஷ் மகன் யயாதி
36. யயாதி மகன் நபாங்
37. நபாங் மகன் அஜ்
38. அஜ் மகன் தஸரதன்
39. *தஸரதன் மகன் ராமன்,லக்ஷமணன்,பரதன்,சத்ருக்னன்*
40. ராமன் மகன் லவன் மற்றும் குசன்

பிரும்மாவின்  39 வது தலைமுறை ஸ்ரீ ராமர்

 

(நன்றி: இணையதளம்) 

 

புரந்தரதாசர் – முகநூல் பதிவு

Related image

ஒன்பது கோடி

கி.பி. 1480-ல் அவர் ஒன்பது கோடிகளுக்கு அதிபதி.

சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அவர் ஒன்பது கோடி சொத்துள்ள மிகப் பெரிய பணக்காரரின் மகன்.

கடைசியில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது கி.பி. 1560-ல் அவர் ஒரு ஓட்டாண்டி.

நம்ப முடிகிறதா? கணக்குப் போட்டுப் பார்த்தால் இன்று பல லட்சம் கோடிகளுக்கு அதிபதியாக அவர் குலம் வாழ்ந்திருக்கும்.

ஆனால் இன்று பணமில்லை. மங்காத புகழ் இருக்கிறது. இதெல்லாம் இறைவன் திருவிளையாட்டு.

செல்வம் செல்வம் என்று செருக்குடன் வாழ்ந்த அவரைவிட்டு லட்சுமியானவள் “செல்வோம்… செல்வோம்…’ என்று போய்விட்டாள்.

ஆனால் அத்தனை பணமும் போனபின்புதான் அவருக்கு ஞானம் பிறந்தது.

கையில் ஒரு காசுகூட இல்லாத நிலையில்தான் அவர் மகாலட்சுமியை அழைத்தார்.

அதுவும் எப்படி? அற்புதமான ஸ்ரீராகத்தில் அழைத்தார். சிலர் அப்பாடலை மத்யமாவதி ராகத்திலும் பாடுவர்.

அந்தப் பாடலைப் பாடும்போதே கண்களில் நீர் பெருகும்; மனம் மகிழ்ச்சியில் பொங்கிடும்; நெஞ்சில் ஆனந்தம் தாண்டவமாடும்; மெய் சிலிர்க்கும்.

“பாக்யாத லக்ஷ்மி பாரம்மா- நம்மம்ம நீ சௌ
பாக்யாத லக்ஷ்மி பாரம்மா….’

மகாலட்சுமியை அவர் அழைக்கும் அழகே அழகு.

“சலங்கை கட்டிய கால்களினால் மெதுவாக அடியெடுத்து வைத்து, அந்த இனிமையான சலங்கை ஒலியால், உன்னை தஞ்சமடைந்து பூஜை செய்யும் பக்தர்களுக்கு தயிரிலிருந்து வரும் நறுமணமான வெண்ணெயைப்போல் வருவாய் தாயே’ என்று கெஞ்சுகிறார் அந்த மகான்.

அவருடைய இயற்பெயர் ஸ்ரீனிவாச நாயக்.

அவர் வசித்த ஊரின் நாட்டாண்மையாகத் திகழ்ந்தார் அவர். மக்கள் அவரை செல்வத்தின் பொருட்டு நவகோடி நாராயணசெட்டி என்றும் அழைத்தார்கள்.

அவ்வளவு பெரிய தனவந்தரான அவர் ஒரு கருமி. எச்சில் கையால்கூட காக்கையை விரட்டமாட்டார் என்பது அவருடைய விஷயத்தில் நிஜம்.

ஸ்ரீனிவாச நாயக்கிற்கு பதினெட்டு வயதாகும்போது திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் சரஸ்வதி.

அவள் இவருக்கு நேர் எதிரானவள். தான- தர்மம் என்றால் கொள்ளைப் பிரியம். கடவுள் பக்தி மிகுந்தவள்.

அவர் வாழ்ந்த ஊரில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பாண்டுரங்கனாகக் காட்சியளித்தான்.

பெரிய கோவில். மக்கள் “பாண்டுரங்கா… பாண்டுரங்கா’ என்று பக்திப் பரவசத்தில் நாள்தோறும், வீதி தோறும் பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டே போவார்கள்.

ஆனால் ஸ்ரீனிவாச நாயக் கண்டுகொள்ளவே மாட்டார்.

பார்த்தான் பாண்டுரங்கன். ஒரு முதிய ஏழை அந்தணன் உருவில், ஏழு வயதுச் சிறுவனோடு, ஸ்ரீனிவாச நாயக்கின் கடைமுன் வந்து நின்றான் இறைவன்.

“”ஐயா… தர்மப் பிரபுவே…”

ஸ்ரீனிவாச நாயக் அந்தப் பிராமணனை திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. விடுவானா இறைவன்?

“”ஐயா… தர்மப் பிரபுவே… சுவாமி…”

“”டேய்! யாருடா நீ?” அதட்டினார் ஸ்ரீனிவாசன்.

“”ஐயா… நான் ஓர் ஏழைப் பிராமணன். இவன் என்னுடைய ஒரே மகன். ஏழு வயதாகிறது. உபநயனம் செய்ய வேண்டும். நீங்கள் உதவி செய்தால் இவனுக்குப் பூணூல் போடலாம்…. பிரபு… ஏதாவது கொஞ்சம் பணம் கொடுங்கள்…. சாமி…”

“”போ… போ… வேறு எங்காவது போய் பிச்சை எடு. என்னிடம் பணமே இல்லை…” விரட்டினார் ஸ்ரீனிவாச நாயக். எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் நாயக்கின் மனம் இளகவில்லை. ஆனால் பகவான் அவரை விடுவதாயில்லை.

தினந்தோறும் வந்து, நமக்கு படியளப்பவனே அவரிடம் பிச்சை கேட்டான். நாயக்கும் அலுக்காமல் விரட்டினார்.

ஒருநாள், “”உங்களிடம் யாசகம் வாங்காமல் போகமாட்டேன் பிரபு…” என்று சொல்லி, இறைவன் நாயக்கின் கடை வாசலிலேயே உட்கார்ந்து விட்டான்.

“இது ஏதடா வம்பாப் போச்சே…’ என்று அலுத்துக்கொண்ட ஸ்ரீனிவாச நாயக், கல்லாப் பெட்டியிலிருந்து ஒரு செல்லாக் காசை எடுத்து அந்தணன் மேல் தூக்கி எறிந்தார். “”இந்தா, இதை எடுத்துப் போ. இனிமேல் கடைப்பக்கம் வராதே…”

அந்தக் காசைப் பார்த்துவிட்டு, “”பிரபு… இது தேய்ந்து போயிருக்கிறதே… எதற்கும் பிரயோஜனமில்லை. வேறு நல்ல காசு கொடுங்களேன்…” என்றான் இறைவன்.

ஸ்ரீனிவாச நாயக் யோசித்தார்.

“”நல்ல காசா? ஏதாவது பொருள் கொண்டுவந்து என் கடையில் அடமானம் வை… நல்ல காசு தருகிறேன்” என்றார்.

அந்தணன் அந்தச் சிறுவனை அழைத்துக்கொண்டு நேராக ஸ்ரீனிவாச நாயக்கின் வீட்டிற்குச் சென்றான்.

அங்கே- வெள்ளிக் கிழமையாதலால் துளசி பூஜையை முடித்துவிட்டு ஸ்ரீனிவாச நாயக்கின் மனைவி சரஸ்வதி ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தாள்.

“”பவதி… பிக்ஷாம் தேஹி…”

ஓடோடிச் சென்று வாசலில் பார்த்தாள். பார்த்ததும் காலில் விழுந்து கும்பிட்டாள்.

“”என்ன வேண்டும் சுவாமி?”

“”அம்மா… நான் ஓர் ஏழை. வயதாகி விட்டது. இவன் என் பையன். இவனுக்குப் பூணூல் போட வேண்டும். கையில் பணமில்லை.

ஒரு கஞ்சனைக் கேட்டேன். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் சல்லிக்காசுகூட தரமாட்டேன் என்று என்னை அடிக்காத குறையாகத் துரத்திவிட்டான். அம்மா…

உன்னைப் பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாய். ஏதாவது உபகாரம் பண்ணம்மா…”

“பணம் நம்மிடம் கிடையாது. அப்படியே இருந்து, தர்மம் செய்தேன் என்று தெரிந்தால் புருஷன் அடித்தே கொன்றுவிடுவான். இவருக்கு நாம் எப்படி உதவுவது?’ என்று யோசித்த சரஸ்வதி முடிவில் தன்னுடைய பரிதாபமான நிலையை விளக்கினாள்.

“”அட… நீ என்னம்மா… புருஷன் உனக்குக் கொடுத்ததை தர்மம் செய்தால்தானே ஆபத்து? திருமணத்தின்போது உன் பெற்றோர் போட்ட நகைகள் உன்னுடையதுதானே?

அதைக் கொடுத்தால் அவர் என்ன செய்ய முடியும்?” என்று அவளை உசுப்பேற்றினான் பிராமணன்.

“அட… உண்மைதானே? நம் வீட்டில் ஏராளமான நகைகளைப் போட்டார்களே எனக்கு? அவை அத்தனையும் என்னுடையவை தானே… அதில் ஒன்றை தர்மம் செய்தால் என்ன?’

சட்டென்று தன்னுடைய வைர மூக்குத்தியைக் கழட்டி அந்த பிராமணனிடம் கொடுத்து விட்டாள் சரஸ்வதி.

அவளை மனதார வாழ்த்தி விட்டு, அந்தச் சிறுவனுடன் நேரே ஸ்ரீனிவாச நாயக்கின் அடகுக் கடைக்கே வந்தான் அந்த பிராமணன்.

ஸ்ரீனிவாச நாயக்கிற்கோ, மறுபடியும் தொந்தரவு ஆரம்பித்துவிட்டதோ என்று தோன்றியது.

“”இந்தாரும். இந்த மூக்குத்தியை எடுத்துக்கொண்டு ஏதாவது பணம் கொடும்” என்று மிரட்டினான் பிராமணன்.

கையில் மூக்குத்தியை வாங்கிப் பரீட்சித்துப் பார்த்து, “இதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கிறதே..’ என்று யோசித்தார் நாயக்.

சிறிது நேரம் கழித்து, “”ஓய் பிராமணரே… இந்த மூக்குத்தி இங்கேயே இருக்கட்டும். இப்போது என்னிடம் காசு இல்லை. நாளை வந்து பணம் வாங்கிக்கொள்…” என்றார்.

அதை ஒப்புக்கொண்ட அந்தணன் போய்விட்டான்.

உடனே ஸ்ரீனிவாச நாயக் தன் கடையைப் பூட்டிவிட்டு நேரே வீட்டிற்குப் போனார்.

மனைவியைப் பார்த்தபோது அவள் முகத்தில் மூக்குத்தியைக் காணவில்லை.

“”சரஸ்வதி… மூக்குத்தி எங்கே? இன்று வெள்ளிக்கிழமை. முகம் மூளியாய் இருக்கலாமா? போய் மூக்குத்தி போட்டுக் கொண்டுவா…”

சரஸ்வதி வெலவெலத்துப் போனாள். “ஐயய்யோ… இப்போது என்ன செய்வது? அந்தப் பிராமணனுக்கு தானம் கொடுத்தேன் என்றால் கொன்று விடுவாரே?’

கடைசியில் சரஸ்வதி ஒரு முடிவுக்கு வந்தாள். “இந்தத் துஷ்டனிடம் மூர்க்கத்தனமாக அடிபடுவதைவிட சாவதேமேல்…’ என்ற முடிவோடு, ஒரு பாத்திரத்தில் விஷத்தைக் கலந்து கையில் வைத்துக்கொண்டு துளசி மாடத்தை வலம் வந்தாள்.

“”தாயே துளசி… நான் உன்னிடம் வந்து விடுகிறேனம்மா” என்று சொல்லி விஷத்தைக் குடிக்க முற்படுகையில்-

விஷப் பாத்திரத்தில் ஏதோ விழும் ஓசை கேட்டது. சரஸ்வதி உள்ளே கைவிட்டுப் பார்த்த போது அவளின் மூக்குத்தி இருந்தது. அவளை ஆனந்தமும், வியப்பும் அணைத்துக் கொண்டது. “என்னைக் காப்பாற்றிவிட்டாய் தாயே” என்று கண்களில் நீர் பெருக விழுந்து கும்பிட்டாள்… பிறகு, கணவனிடம் ஓடோடிச் சென்று, “”இந்தாருங்கள் மூக்குத்தி…” என்று கொடுத்தாள்.

ஸ்ரீனிவாச நாயக்கிற்கு ஒன்றும் புரியவில்லை. மூக்குத்தியை எடுத்துக்கொண்டு பித்துப் பிடித்தவர்போல மீண்டும் தனது அடகுக்கடைக்குச் சென்றார். கல்லாப் பெட்டியைத் திறந்து, உள்ளே பத்திரமாக வைத்திருந்த மூக்குத்தியைத் தேடினார்.

அங்கே அது இல்லை. கடை முழுவதும் தேடினார். மூக்குத்தி கிடைக்கவில்லை. நாளை அந்த பிராமணன் வந்து, “எனக்குப் பணம் வேண்டாம்… என்னுடைய நகையைக் கொடுங்கள்…’ என்று கேட்டால் என்ன செய்வது?

மனைவியினுடைய மூக்குத்தியையா அவனுக்குக் கொடுப்பது? பிரமை பிடித்தது அவனுக்கு. கூடவே பயமும் வந்தது.

மறுநாள் காலை!

கடை திறந்த சில வினாடிகளிலேயே அந்தக் கிழவன் சிறுவனோடு வந்துவிட்டான்.

“”ஐயா… பிரபுவே.. நான் கொடுத்த நகைக்குப் பணம் தருவதாகச் சொன்னீர்களே. இன்றும் பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை. என்னுடைய நகையைக் கொடுங்கள். வேறு கடையில் அடமானம் வைத்துக் கொள்கிறேன்…” என்றான்.

ஸ்ரீனிவாச நாயக்கின் நிலை பரிதாபமானது. செருக்குடன் வாழ்ந்தவர் கிழவனிடம் கெஞ்சினார்.

“”ஐயா… மன்னித்து விடுங்கள். வெளியிலிருந்து கொஞ்சம் பணம் வரவேண்டியிருக்கிறது.  வந்தவுடன் தருகிறேன். முடிந்தால் மாலை வாருங்களேன். கண்டிப்பாகப் பணம் தருகிறேன்.”

“”சரி… சரி… சாயங்காலமும் என்னை ஏமாற்றிவிடாதே. நான் வருவேன்…”

கிழவன் போனபின்பு, தன் கடையில் பணிபுரியும் ஒரு வேலையாளை அனுப்பி, அந்தக் கிழவன் எங்கே போகிறான் என்று கண்காணிக்கச் சொன்னார்.

அந்தக் கிழவனைப் பின்தொடர்ந்து சென்ற வேலையாள் சிறிது நேரம் கழித்து பதை பதைப்புடன் கடைக்கு ஓடி வந்தான்.

“”என்னடா… ஏன் இப்படி பயந்தாங்கொள்ளி மாதிரி ஓடி வருகிறாய்? கிழவன் உன்னை அடையாளம் தெரிந்துகொண்டு மிரட்டினானா?”

“”சுவாமி… என்னை மன்னித்துவிடுங்கள்… கிழவர் இரண்டு மூன்று தெருக்கள் தாண்டி, பாண்டுரங்கன் கோவிலுக்குச் சென்றார்….

நேரே கர்ப்பக் கிரகத்துக்குள் புகுந்தார்… பின்னர் மறைந்து விட்டார்…”

ஸ்ரீனிவாச நாயக் திடுக்கிட்டார். என்ன இது? கடைக்கு வந்த முதியவர் யார்? என்ன அதிசயம் இது.!

கடையைப் பூட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் நடந்த சம்பவத்தைச் சொன்னார். அவளும் மூக்குத்தியை அந்தக் கிழவருக்கு தானம் தந்ததையும், அவர் வாழ்த்திவிட்டுப் போனதையும் சொன்னாள்.

ஸ்ரீனிவாச நாயக்கிற்கு புரிந்துவிட்டது. கடவுளே தன்னைப் பரீட்சித்து விட்டதை உணர்ந்தார்.

அப்போது ஓர் அசரீரி பூஜை அறையிலிருந்து கேட்டது.

“இத்தனை செல்வங்களை வைத்துக்கொண்டு தான தருமம் செய்யாமல் வாழ்கிறாயே? உனக்கு எப்படி நற்கதி கிடைக்கும்?

போ… உன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் தானம் செய்துவிட்டு புண்ணியம் தேடிக் கொள்.

இனி உன் பெயர் ஸ்ரீனிவாச நாயக் இல்லை. இந்த ஊரின் பெயரான புரந்தரகட என்கிற பெயரால் இனி உன் பெயர் புரந்தரதாசன்.

பகவானைப் பாடு. நீ நாரதருடைய அம்சம். ஸ்ரீ கிருஷ்ண தேவராயருடைய குல குருவான ஸ்ரீ வியாசராயரை தஞ்சமடைவாயாக. அவர் உனக்கு குரு உபதேசம் செய்வார்….’

புரந்தரதாசன் ஸ்ரீனிவாச நாயக் தன்னுடைய அனைத்து சொத்துகளையும் ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்தார்.

ஒரு நொடியில் ஒன்பது கோடி ரூபாய் போயிற்று. ஓட்டாண்டியானார்.

தன் மனைவி, மக்களோடு இறைவன் நாமங்களைப் பாடியவாறே ஹம்பி சென்று ஸ்ரீ வியாசராயரை சரணடைந்தார்.

அவர் ஸ்ரீநிவாச நாயக்கின் பிறப்பின் ரகசியத்தைச் சொல்லி அவருக்கு குரு உபதேசம் செய்தார்.

கால்நடையாகவே பாரத தேசத்தை மூன்றுமுறை வலம் வந்தார் புரந்தரதாசர்.

சுமார் நான்கு லட்சம் பாடல்களை இறைவன்மீது பாடினார்.

நம்முடைய திருவையாறு சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு, சிறுவயதில் அவருடைய அன்னை புரந்தரதாசரின் பதங்களையே சொல்லி க்கொடுத்தார்.

ஸ்வர வரிசை என்று சொல்லப்படுகிற “ஸ, ரி, க, ம, ப, த, நீ..’ என்கிற ஆரோகண அவரோகணங்களை சங்கீத உலகிற்குத் தந்த பிதாமகர் புரந்தரதாசரே.

அவருடைய பதங்கள் இன்றும் நம் நாட்டுக் கச்சேரிகளில் பாடப்படுகின்றன.

காலஞ்சென்ற திருமதி எம்.எல். வசந்தகுமாரி அவர்கள் தமிழ் நாட்டில் புரந்தரதாசரின் பதங்களைப் பாடி பக்தியை ஊட்டினார்.

எம்.எஸ்.ஸின் “ஜகதோ தாரணா’வும் கேட்க கேட்க பக்தியை நம் மனத்தில் விதைப்பவை.

அப்படிப்பட்ட மகான் புரந்தரதாசர் கி.பி. 1584-ல் இறைவனோடு இரண்டறக் கலந்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மற்றோர் உயிர்– தில்லைவேந்தன்

Related image
என்னை எனக்கே பிடிக்கவில்லை
     எதையும் ஒழுங்காய் முடிக்கவில்லை
முன்னை நினைவும் மறையவில்லை
     மூண்ட வருத்தம் குறையவில்லை
தன்னை மறந்தே உறங்கிடவும்
     சற்றே சுமையும் இறங்கிடவும்
இன்னும் வரம்நீ தரவில்லை
     இறைவா மனமேன் வரவில்லை?
நூலைப் புரட்டி இலக்கியத்தின்
     நுட்பச் சுவையை அறியவில்லை
ஆலைக் கரும்பாம் அமுதஇசை
     அளிக்கும் இன்பம் தெரியவில்லை
காலை வானில் கதிரெழுதும்
     கவிதை அழகு புரியவில்லை
வேலை, வேலை, வேலையென
     விரைந்த காலம் திரும்பவில்லை.மழலைக் குரலில்  துளிர்தேனை
     மாந்தக் காதைத் திறக்கவில்லை
குழலைக் குயிலும் இசைக்கையிலே
     குளிர்ந்து நெஞ்சம் பறக்கவில்லை
விழலைப் பயிராய்ப் பார்த்திட்டேன்
     வீணாய்ச் செருக்கைச் சேர்த்திட்டேன்
நிழலைத் தேடி அலைந்திட்டேன்
      நிலைத்த உண்மை களைந்திட்டேன். 

ஆடல், பாடல்,  அருங்கலைகள்,
     அறிவைக் கடந்து  ஞானத்தைத்
தேடல், தெளிதல் இவையெல்லாம்
       சிறிதும் அறிய விழையவில்லை.
பீடு    யர்ந்த   பண்பாட்டின்
     பெருமை, அருமை, தொன்மையெலாம்
கூடும்   மூப்பும்  நோயதுவும்
     கூறும்  முன்னே விளங்கவில்லை
      
       
கிண்ணம்  நிரம்ப   நீரிருக்கக்
     கேணி  சென்றேன் நீரிறைக்க.
எண்ணும் எழுத்தும் கற்றென்ன?
     எண்ணம் அறியக் கற்கவில்லை.
கண்ணும், காதும்  இருந்தென்ன?
     காண, கேட்கப் பழகவில்லை..
மண்ணில் மற்றோர் உயிரென்றே
     வாழ்ந்து மறைந்தே போவேனோ?

                                                
     

குவிகம் இல்லத்தில் வித்தியாசமான இரு அளவளாவல்கள்

திரு நடராஜன் இந்திய ரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிறகு  எண்பது வயதைக் கடந்தாலும் இன்னும் பல சீரிய முயற்சியில் தன்னை  ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார். அவற்றுள் மிக முக்கியமானது ” தேசியச் சொற்கள்” (National words) என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் பல வருடங்கள் ஆராய்ச்சிக்குப்பிறகு  இலட்சக்கணக்கில் செலவுசெய்து வெளிக்கொண்டு வந்ததுதான். 

மார்ச் 3 ஞாயிறு அன்று  திரு நடராஜன் தனது புத்தகத்தைப்பற்றியும் அதன் மூலம் எப்படி நமது பாரதநாட்டை மொழி அளவில் ஒற்றுமைப்படுத்த முடியும் என்பதுபற்றியும்  விளக்கமாகப் பேசினார்.

‘பாரதி’ என்ற பேசும் மொழியை பாரத நாட்டில் கொண்டுவரவேண்டும் என்பதே இவரது ஆராய்ச்சியின் முடிவு. 

அதன்படி இந்தியாவில் வழக்கில் இருக்கும் முக்கிய மொழிகளில் உள்ள சொற்களை எடுத்துக்கொண்டு  3000 -4000 சொற்களைக்கொண்ட பேசும் மொழியைத் தயார் செய்தோமேயானால் இந்தியாவில் எவரும் எங்கு சென்றாலும் சுலபமாக உரையாடலாம்.  ஹிந்தி, வங்காளம், தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், உருது,  பீகாரி, பஞ்சாபி ,குஜராத்தி, மராத்தி, ஆங்கிலம், ஒவ்வொன்றிலிருந்தும் 300-400  சொற்றொடர்களை எடுத்துக்கொண்டு ‘பாரதி’ யை உருவாக்கலாம்.

உதாரணாமாக FRUIT என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஈடாக இந்தியாவில் உள்ள அனைவரும் ‘பழம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்.  TIFFIN என்பதற்கு அனைவரும் நாஷ்டா என்று பயன்படுத்தலாம்.  

இந்தச் சொற்களை அனைவரும் அவரவர் மொழியிலேயே எழுதிக்கொள்ளலாம். 

அது சரி, எந்த மொழியிலிருந்து  எத்தனை சொற்களை எடுத்துக் கொள்வது? 

அதற்கும் நடராஜன் பதில் வைத்திருக்கிறார். 

வழக்கில் உள்ள மொழிகளைப்  பேசுவோரின் விகிதாசாரத்தில் எடுத்துக்கொண்டால் அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு இந்தியப் பொதுமொழியை உருவாக்கலாம் என்பது இவரது வாதம். 

அதைப்போல உலகில் ஆங்கிலம்  பேசுபர்களின் எண்ணிக்கையில்  இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. நாம் நம்முடைய உச்சரிப்பில் ஆங்கிலம் பேசுவதை உலகம் ஒப்புக்கொள்ளச் செய்யவேண்டும். அமெரிக்கன் ஆங்கிலம், பிரிட்டன் ஆங்கிலம் என்பது போல  பாரதீய ஆங்கிலமும் வரவேண்டும். அதற்கு BHANGLISH  என்று பெயர் வைக்கலாம் என்பது திரு நடராஜனின் கருத்து. 

இவரது இந்த இரண்டு கருத்துக்களுக்கும் அரசியல் இயக்கங்கள் ஆதரவு அளிக்க முன்வருமானால் இது நடைமுறைக்கு விரைவில் வந்துவிடும். 

அந்த நல்ல நாளை எதிர்பார்க்கிறோம்.  

இப்படிப்பட்ட புதுமையான முயற்சிபற்றிய நிகழ்வைக் குவிகத்தில் அளவளாவலாக அமைத்ததற்கு நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். 

 

 

Image may contain: 1 person, eyeglasses and text

பிரபல எழுத்தாளரும் சமீபத்தில் மொழிபெயர்ப்பிற்காக தமிழக அரசு விருது வாங்கிய திரு எஸ் சங்கர நாராயணன் குவிகம் அளவளாவல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார். 

அவரது அளவளாவல்பற்றி சரஸ்வதி காயத்ரி அவர்களின் முகநூல் பதிவு: 

 

குவிகம் இலக்கிய வாசல்..இன்று மாலை சரியாக 4. மணிக்குத் தொடங்கி 6 மணிக்கு முடித்தார்கள்.

எஸ்.சங்கரநாராயணன் சார்அவர் உரையை அச்சிட்டு கொடுத்தார்.அதனை அவர் உறவினர் அழகாக வாசித்தார்.

ரமேஷ் வைத்யாவின் கலகல பேச்சுடன் தொடங்கின ” அளவளாவல்” ( என்ன அழகு இந்த வார்த்தை. ல,ள கரம் பழக இதை பத்துமுறை சொல்லி பயிற்சி எடுக்கலாம்.😊)பங்கேற்பாளர்களின் அறிமுகத்தோடு நிறைவு பெற்றது.

உங்களின் கனவு நனவாக வேண்டும் சார். வெயிலுக்குப் பின் சிறு தூறலாவது விழுமென்கிற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.  பார்ப்போம்.

குவிகம் அமைப்பினருக்கும் Sundararajan Subramaniam சார் மற்றும் அவரின் மனைவிக்கு நன்றியும் அன்பும்.

தங்கள் இல்லத்தை இலக்கிய இல்லமாக மாற்றியிருக்கும் Kirupanandhan Kirubanandan Srinivasanஅவர்களுக்கும் நன்றியும் அன்பும். 

 // மீண்டும் இயற்கையை வணங்கும்  அந்த நாளுக்கு கலாச்சாரத்தால் மனிதர்கள் ஒத்திசையும் ,இழைந்து பழகும் காலத்துக்குத் திரும்ப வேண்டும். இது எனது கனவு. வேர்களை நோக்கிய பயணம் இது. வேர்களற்று அந்தரத்தில் பிடுங்கி எறியப்பட்ட செடிகள் நாம். வெயிலில் வாடி உலர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை.//

      

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

 

 

பங்களூரில் ஸிந்துஜாவைத் தேடி….

பங்களூருவில் நாளைய டிராஃபிக்கைக் குறைக்க, இன்றைக்குச் சாலையின் மத்தியில் அரக்கர்கள்போல் நிற்கும் கான்கிரீட் தூண்களும், அதன்மேல் தொண்ணூறு டிகிரியில் உட்கார்ந்திருக்கும் பெரிய பீடமும், நாளை ஏதோ ஒரு முதன் மந்திரியால் பச்சைக் கொடி அசைத்து வெள்ளோட்டம் விடப்படும் மெட்ரோ ட்ரெயினுக்காகக் காத்திருக்கின்றன! இன்றைய சாலைகளைக் குறுக்கி ஒற்றையடிப் பாதைகளைப்போல மாற்றி, எல்லாவகை வாகனங்களையும் ஊர்வலம் செல்ல வைத்திருக்கின்றன. உள்ளே நடப்பது தெரியா வண்ணம், சுற்றிலும் தகர பேனல்கள் – இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் அநேகமாக இதே நிலைதான் – ‘நான் வளர்கிறேனே மம்மி’ என்று சொல்வதைப்போல இருக்கின்றன!

தடைகளின்றி  சில கிலோமீட்டர்கள் ஏதாவதொரு வாகனத்தில் செல்லமாட்டோமா என்ற ஆதங்கத்துடன், கன்னடத் தமிழில் பேசிய வெங்கடேசனுடன் (பேக்கு, பேக்கு என்ற போதெல்லாம் திரும்பிப் பார்த்து, ‘என்னை இல்லை’ என்று உறுதி செய்துகொண்டேன்!) மேலும் கீழும் குதித்தவாறு ( பாலைவன சஃபாரி இதைவிட குலுக்கலும், வயிற்றைக் கலக்கலும் குறைவாயிருந்த நினைவு!) பென்னர்கட்டாவிலிருந்து சுமார் 20 கிமீ தள்ளியிருந்த கோத்தனூர் நாராயணபுரா கிராஸ் சென்றேன்.

மூன்று பேருடன் குறுக்கே வேகமாய்ப் போகும் ஸ்கூட்டர், முதுகில் பல்லியைப்போல ஒட்டிக்கொண்டு, பாய் ஃப்ரண்டின் காதைக் கடித்தவாறு, கழுத்தைச்சுற்றி, முகம் மறைத்த ஓட்னியுடன், பல்சரில் பவனிசெல்லும் புதுமைப் பெண், புரியாத கெட்டவார்த்தையில் திட்டியவாறு ராங் சைடில் ஓவர்டேக் செய்யும் கருப்பு, மஞ்சள் ஆட்டோ, நாட்பட்ட அழுக்குடன் அசமஞ்சமாய் நின்று, புகை கக்கிக் கிளம்பும் நகர பஸ், விதவிதமான கலர், சைசுகளில் அரை இன்ச் இடைவெளியில் ஊரும் கார்கள் – ஐம்பதடிக்கு ஒரு சிக்னல், சிக்னல் இல்லாத ஜங்க்‌ஷன்களில் குழப்படியான ட்ராஃபிக் ஜாம், வாயில் வெற்றிலை பாக்குடன், வித்தியாசமாகக் கட்டிய புடவையுடன் பெண்கள், நீலநிற யூனிஃபார்மில் ஆண்கள் (குறுக்கும் நெடுக்குமாக வண்டிகளுக்கு நடுவில் சாலையைக் கடந்தபடி மெட்ரோ வேலை), நான்கு சக்கர வண்டிகளில் சப்போட்டா, கிர்னீர் பழம், ஆப்பிள், கொய்யா, திராட்சை – பாதி சாலையை அடைத்தவாறு வியாபாரம்!

ஒரு காலத்தில் மரங்களும், பார்க்குகளும் நிறைந்திருந்த பெங்களூர், இன்று ராட்சச வடிவில் விண்ணைத்தொடும் அடுக்குமாடிக் கட்டிடங்களுடன், வெயில் சுட்டெரிக்க, புழுங்கித் தொலைக்கிற பங்களூருவாக மாறியுள்ளது வருத்தமளிக்கிறது – இயற்கையை அழிப்பதில் நமக்கு ஈடு நாம்தான்!

20 கிமீ தூரத்தை இரண்டரை மணியில் கடந்தேன்! இரண்டு யூ டர்ன், ஒரு ராங் ஒன் வே, மூன்று முறை நிறுத்தி வழிகேட்டது எல்லாம் இதில் அடக்கம். (கூகுள் மேப் போட்டிருக்கலாமே என்னும் அறிவு ஜீவிகள், எனக்கு அந்த அளவுக்கு விபரம் பத்தாது என்பதையும், டிரைவர் வெங்கடேசனுக்கு வயது அறுபதுக்குமேல் என்பதால் அவருக்கும் இதெல்லாம் தெரியாது என்பதனையும் அறியவும்!)

இவற்றையெல்லாம் கடந்து, அந்தப் பெரிய அடுக்குமாடி குடியிருப்பை அடைந்து, செக்யூரிடியிடம் என் ஜாதகம் பதித்து, பின்னால் இருந்த ‘ஏ’ ப்ளாக்குக்குச் சென்றேன்! குழந்தைகளைப் பள்ளியிலிருந்து கூட்டிவந்த பிறகு, லிஃப்ட் ஏறுமுன், ஆராம்ஸாய் அரட்டை அடித்துக்கொண்டிருந்த நான்கைந்து நாரீமணிகளைத் தாண்டி, லிஃப்டில் 7 ஆம் நம்பரை ஒத்தி, தானாய் மூடித் திறந்த கதவுகளைவிட்டு வெளியேவந்தேன். சிரித்த முகத்துடன் வாசலிலேயே வரவேற்றார் ஸிந்துஜா – எழுத்தாளரும் என் நண்பருமான, ட்டிஆர் நடராஜன்!

அழகிய சிங்கர்தான் ஸிந்துஜாவை எனக்கு அறிமுகம் செய்தார் ‘ஸிந்துஜா கதைகளை படிங்க – ஸிம்பிளா கதை சொல்வார்’ என்றார்! விருட்சத்தில் ஓரிரண்டு கதைகள் படித்திருந்தேன். தினமணிக் கதிர் ஆசிரியர் பாவைசந்திரன் அவர்கள் என் கதையைப் படித்துவிட்டு, அவரது ‘நல்ல நிலம்’ நாவலுடன், எம் வெங்கட்ராம் கதைகள், ஸிந்துஜா சிறுகதைகள் புத்தகங்களைக் கொடுத்தார் – அறிமுகமே இல்லாத எனக்கு, அவர் கொடுத்த ஊக்கம் வியப்பையும், உற்சாகத்தையும் கொடுத்தது! சென்ற புத்தகக் கண்காட்சிக்கு ஸிந்துஜாவுடன் சென்றிருந்தேன். கே வி ராஜாமணி, சிங்கர், ‘தென்றல்’ சுவாமினாதன், சந்தியா நடராஜன், வண்ணதாசன் என ஏராளமான எழுத்தாளுமைகள் – பார்த்துப் பேசினோம்!

அவரது சிறுகதைகள் இயல்பான நடையில் சிறப்பாக எழுதப்பட்டிருக்கும்(தனி பதிவுதான் போடவேண்டும்). எழுத்துக்களும் அவரைப்போலவே – எளிமையும், நேர்மையும் கொண்டவை!!

ஏகாந்தமான, ஏழாவது தளத்தில் கலை நயத்துடன் ஒரு ஃப்ளாட். மகள் கொண்டுவைத்த மிக்சர் வகையறாக்களுடன், ‘சில்’லென்ற லெமன் ஜூஸ் – அன்றைய, இன்றைய பத்திரிக்கைகள், தீபாவளி மலர்கள், இன்று சிறுகதைகள், போட்டிகள், முகநூல் பதிவுகள், எப்போது, எப்படி எழுதுகிறோம், தனி வாழ்க்கையில் சில நிகழ்வுகள் என நாற்பது நிமிட உரையாடல் (அரட்டை அல்ல!). மனதுக்கு நிறைவாக இருந்தது.

நா பா வின் குறிஞ்சி மலருடன் விடைபெற்றுக்கொண்டேன். கார் வரை வந்து வழியனுப்பிவைத்தார்.

மாலை ஐந்துமணிக்குமேல் ஆகிவிட்டதால், அதிகமான டிராஃபிக்கில் மூன்றுமணி நேரத்தில், ஊர்ந்தபடி வீடு வந்துசேர்ந்தேன்!

இனிமேல் பங்களூரு வந்தால் ‘ககன’ மார்க்கத்தில்தான் வரவேண்டும் என நினைத்துக் கொண்டேன் (உடலைச் சுருக்கி, காற்றுபோல் ஆக்கி, நினைத்த இடத்திற்கு நினைத்த மாத்திரத்தில் ஆகாயமார்க்கமாகச் செல்வது! – மேல் விபரங்களுக்கு கோமலின் ‘பறந்து போன பக்கங்கள்’ பக்கம் 72 – -73 – குவிகம் பதிப்பு – பார்க்கவும்!).