சரித்திரம் பேசுகிறது – யாரோ

திருநாவுக்கரசர்

Image result for திலகவதியார் வரலாறு

Image result for திருவருட்செல்வர்

‘தடியெடுத்தவன் தண்டல்காரன்’ என்பர்.
அதுபோல் சண்டை போட்டு வென்றவன் சரித்திரத்தில் நாயகன்.
அட .. பொதுவாகச் சொன்னேன்!
சில நாயகர்கள் – ‘இலக்கியவாதி’கள் – காளிதாசன் போல.
சில நாயகர்கள் – ‘பேரழகி’கள் – ஆம்ரபாலி போல.
சில நாயகர்கள் – ‘உலகம் சுற்றும் வாலிபர்’கள்- பாஹியான் போல.
சில நாயகர்கள் – ‘இறையருள் பெற்ற சமயக்குரவர்கள்’ – திருநாவுக்கரசர் போல.
இன்று அவர் தான் நமது நாயகர்.

Image result for திலகவதியார் வரலாறு

இடம்: பல்லவ நாட்டின் திருமுனைப்பாடி.
அங்கு புகழனார்-மாதினியார் என்ற தம்பதிகள்.
அவர்கள் மகள் ‘திலகவதி’!
மகன் ‘மருள்நீக்கியார்’!
திலகவதி பெதும்பையானாள்!
அதாவது 12 வயது அடைந்தாள் என்று எழுதியிருக்கலாம்.
ஆனால் என் தமிழ்ப்புலமையை வேறு எங்கு காட்டுவது?
திலகவதி மணப்பருவம் அடைந்தாள் (அந்தக்காலத்தில்!)
மணமகன் – பல்லவ நாட்டு சேனாதிபதி ‘கலிப்பகையார்’!
திருமணம் நிச்சியக்கப்பட்டது.
பல்லவ நாட்டில் அனுதினமும் யுத்தம்.
கலிப்பகையார் யுத்தத்திற்கு அனுப்பப்பட்டார்.
வீட்டில்…
தந்தை புகழனார் மரணமடைந்தார்..
தாயார் மாதினியாரும் காலமானார்.
மக்கள் இருவரும் துவண்டனர்..
இடி மேல் இடி இடித்தது..
போர்க்களத்திலிருந்து மரணமென்னும் தூது வந்தது.
கலிப்பகையார் வீர மரணமடைந்த செய்தி.
மணமாவதற்கு முன் மரணம்.
திலகவதி.. துடித்தார்…
‘இனி வாழ்வில் அர்த்தம் இல்லை’ என்று துவண்டார்.
தன்னைக் கைம்பெண்ணாகக் கருதினார்.
சோதனை மேல் சோதனை.. போதுமடா சாமி!
திலகவதி உயிர் துறக்க முடிவு செய்தார்.
பாலகன் மருள்நீக்கியார் அழுதான் :
“அக்கா! நீயும் போவதானால்.. பின்னே எனக்கு யாரும் இல்லை. நான் உனக்கு முன்னே போகிறேன்”
திலகவதி:
“தம்பி! உனக்காக நான் வாழ்வேன்”.
மாறாத துன்பங்களைச் சந்தித்த மருள்நீக்கியார் – பற்றற்ற வாழ்வுக்கான வழி தேடினார்.
அந்நாளில் சமணசமயம் ஓங்கிக்கிடந்தது.
ஈர்க்கப்பட்ட மருள்நீக்கியார் – சமணத்தைப் பயின்று பெரும் புலமை கொண்டார்.
சமணத்தில் ஆழ்ந்த அவருக்கு ‘தருமசேனர்’ என்று பட்டமளித்தனர்.
தமக்கையார் திலகவதியார் பெரும் சிவபக்தை…
தம்பி – சிவமார்க்கத்தை விட்டுச் சென்றது அறிந்து – வருந்தினார்.

 

மருள்நீக்கியார் திடீரென்று சூலை (வயிற்று வியாதி) நோயால் பாதிக்கப்பட்டார்.
பெரும் வேதனையில் துடித்தார்.
தனக்குத் தெரிந்த சமண மருத்துவங்கள் செய்துபார்த்தார்.
ம்ஹூம்.
சமண மருத்துவர்கள் குணப்படுத்த முயன்றனர்.
வேதனை மேலும் கூடியது.
தணல் மேல் நீந்தும் புழுவென துடியாய்த் துடித்தார்.
மயங்கி விழுந்தார்.
சமணக்குருமார்கள் மயில்பீலியைக் கொண்டு தடவி – மந்திரித்த குண்டிகை நீரைக் குடிக்கச்செய்து வைத்தியம் செய்துபார்த்தனர்.
வைத்தியம் பலிக்காமல் – அவர்கள் கம்பி நீட்டினர்.
மருள்நீக்கியார் தமக்கை திலகவதியிடம் சென்றடைந்தார்.
“அக்கா. உயிர் போகிறதே” – என்று அலறிப் புலம்பினார்.
திலகவதி: “சிவபெருமான் உன்னை சோதனை செய்து ஆட்கொள்ளவே இந்த நோய் தந்தார் போலும். அவரைத் தியானித்து இந்தத் திருநீறு அணிந்து… சிவனைப் போற்றிப் பாடுவாய்”- என்றாள்.
சிவாலயம் அடைந்து சிவலிங்கம் முன் அமர்ந்து ‘கூற்றாயினைவாறு விலக்கலீர்’- என்று பதிகம் பாடினார்.
உடனேயே.. நோய் நீங்கியது.

வானில் ஒரு அசரீரி: ”நாவால் இனிய தமிழ்ப்பாடல் பாடினை. இனி நீ நாவுக்கரசன் என்றழைக்கப்படுவாய்”
மருள்நீக்கியார் … திருநாவுக்கரசர் ஆனார்.

அவரது சைவத்தொண்டு துவங்கியது..
கதை இங்கு முடிந்தது என்று நினைத்தவர்கள் ஏமாந்து போனார்கள்.
இங்கு தான் நம் கதையில் ஒரு ‘ட்விஸ்ட்’.
ஆக்ஷன் சினிமாபோல ஒரு திரைக்கதை விரிகிறது!

சமணமதகுருக்கள் வெகுண்டனர்.
‘துரோகி’ – என்று திருநாவுக்கரசரைத் தூற்றினர்.

அரண்மனையை அடைந்து மன்னன் மகேந்திரவர்மனைச் சந்தித்தனர்.
மன்னன் சமணனாயிற்றே!

“அரசே.. தருமசேனர் தனக்கு சூலை நோய் என்று பொய் சொல்லி – நமது மதத்தை விட்டு விட்டு.. சைவனாகினார்”- என்று புலம்பினர்.
மன்னன் அமைச்சரை அழைத்து தருமசேனரை அழைத்துவர ஆணையிட்டான்.
அமைச்சர் திருநாவுக்கரசரை அணுகி :
“மன்னர் மகேந்திரனின் கட்டளை – உங்களை உடனே அழைத்து வர”

திருநாவுக்கரசர்: “நாமார்க்கும் குடியல்லோம்.. நமனை அஞ்சோம்…” என்று பதிகம் பாடி – வருவதற்கில்லை என்றுரைத்தார்.
அமைச்சர் மனம் நெகிழ்ந்து.. அவர் தாள் பணிந்து :”தயவு செய்து வந்தருள வேண்டும்” – கெஞ்சினார்.
திருநாவுக்கரசர் அன்புக்குப் பணிந்து உடன் சென்றார்.

பல்லவன் சபை.
சமண குருக்கள்: “மன்னா.. வெண்ணீறு அணிந்த இவனை சுண்ணாம்புக் காளவாயில் தள்ளவேண்டும்”.
மன்னன்: “அவ்வாறே ஆகட்டும்”
திருநாவுக்கரசரை எரியும் நெருப்பில் இருந்த சுண்ணாம்புக் காளவாயில் தள்ளினர்.
சூரியனைப் போல சுட்டெரித்த தீ!
அது..
நிலவின் அடியில் வீசும் இளவேனில் தென்றல்போல் அவருக்குக் குளிர்ந்தது..
‘மாசில் வீணையும் மாலை மதியமும்’ – என்று பதிகம் பாடினார்.

ஏழு நாட்கள் கடந்தபின் – மன்னன் ஆணைப்படி – சமணகுருக்கள் நீற்றறையைத் திறந்தனர். திருநாவுக்கரசர் புன்முறுவலுடன் சுகமாக இருந்தார்.

ஆத்திரம் பொங்க சமணகுருக்கள்- மன்னனிடம் சென்று:
“மன்னா.. இவன்.. சமண மந்திரங்களைக் கூறி சாவிலிருந்து தப்பினான். இவனை நஞ்சிட்டுக் கொல்லவேண்டும்” – வேண்டினர்.
பல்லவன் : “அப்படியே செய்யுங்கள்” என்றான்.
அவர்களும் திருநாவுக்கரசரை நஞ்சு கலந்த பாற்சோறு அருந்த வைத்தனர்.
நஞ்சே அமுதமாயிற்று.
சமணர்கள் நிலைகுலைந்தனர்.

Image result for அப்பர் படம்
மன்னரிடம் சென்று:
“இவனை மத யானையால் இடறச்செய்து கொல்லவேண்டும்”- என்றனர்.
பல்லவன்: “சரி”
மதயானை திருநாவுக்கரசர் மீது ஏவிவிடப்பட்டது..
திருநாவுக்கரசர் சிவனை சிந்தையிலிருத்தி : “சுண்ண வெண் சந்தனச் சாந்தும்”- என்று துவங்கி “அஞ்சுவது யாதொன்றுமில்லை.அஞ்ச வருவதுமில்லை “ என்று முடியுமாறு பதிகம் பாடினார்.
மதயானை சமணர்களைத் துரத்தி …பலரைக் கொன்றழித்தது.
தன் வினை தன்னைச் சுடும்!

எஞ்சியவர்கள் மன்னரிடம் சென்றனர்.
மன்னன் சமணர்களை வேண்டாவெறுப்பாகப் பார்த்தான்.
‘இனி என்ன”- கர்ஜித்தான்.
சமணர்கள் “தருமசேனரைக் கல்லில் கட்டிக் கடலில் செலுத்தவேண்டும்”.

Related image
மன்னன்: “இதுவே கடைசி முறை.. “-எச்சரித்தான்.
கல்லில் கட்டிக் கடலில் படகில்சென்று திருநாவுக்கரசரை கடலில் தள்ளிவிட்டுத் திரும்பினர்.
‘சொற்றுணை’ என்று தொடங்கி ‘நற்றுணையாவது நமச்சிவாயவே’ – என்று பதிகம் பாடி கடலில் மூழ்கினார்.
உடனே கட்டப்பட்ட கயிறு அவிழ்ந்தது…கல் தெப்பமாயிற்று… வருணன் – காற்றை கரை நோக்கி வீச…கரை சேர்ந்தார்.
மனிதர்குலத்தை கரை சேர்க்கப் பிறந்தவர் … சுகமாகக் கரையேறினார்!

இரண்யன் பிரகலாதனை செய்ததுபோல … மகேந்திரன் திருநாவுக்கரசரை செய்தான்..
நரசிம்மர் பிரகலாதனைக் காத்து … இரண்யணைக் கோபித்து அவனைக் கிழித்தார்..

சிவபெருமான் திருநாவுக்கரசரைக் காத்து… மகேந்திரனுக்குப் பாடம் புகட்டினார்.
அன்பே சிவம்!!

வைணவ ரசிகர்கள் கோபப்படவேண்டாம்! 

 

Image result for அப்பர்

மகேந்திரன் – திருநாவுக்கரசரின் மகிமை அறிந்து… சமணர்களைத் துரத்தினான்

திருநாவுக்கரசர் பல சிவத்தலங்களை தரிசித்து திருவதிகை அடைந்தார்.
கேள்வியுற்ற மகேந்திரன் .. நால்வகைப்படையுடன் மங்கல வாத்தியம் முழங்க திருநாவுக்கரசரின் பாதங்களைப்பற்றி.. வணங்கி.. பிழை பொறுத்தருள வேண்டினான்.

திருநாவுக்கரசர் பல்லவனுக்கு ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்து திருவெண்ணீர் அளித்தார்.

மகேந்திரவர்மன் அன்றிலிருந்து சைவனானான்!

இந்தியாவின் சரித்திரத்தில்.. சமணம் மெல்ல அழியத் துவங்கியது..

இந்தக்கதைக்கு இங்கு ‘இடைவேளை’ நேரம்!

நமது சூப்பர் ஸ்டார் திருநாவுக்கரசர் கதை…

 

(தொடரும்..)

 

நினைவுகள்! – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

 


அம்மா நிலாவைக் காட்டி
நிலா நிலா ஓடி வா
பாடி குழந்தை பருவத்தில்
அன்னம் ஊட்டி விட்ட
அந்த நிலாக்கால நினைவுகள்!

விண்ணில் மிதந்து வரும்
முழுநிலவைப் பார்த்து
மண்ணில் அமர்ந்து
கூட்டாஞ்சோறு உண்டு
உறவுகளுடன் உறவாடி
மகிழ்ந்த நிலாக்கால நினைவுகள்!

காதலனாக முழுநிலாவின்
நிழலில் அமர்ந்துகொண்டு
காதலியின் முகம் கண்டு
கவிதையில் முகம் செதுக்கி
ஓவியமாகிய அவளின் நினைவுகள் !

காதலர்களாக முழுநிலா ஒளியில்
சிரித்த சிரிப்புகள் சிந்தனைகள்
காதல்கள் மோதல்கள்
உறவுகள் ஊடல்கள்
துடிப்புகள் நடிப்புகள்
படிப்புகள் படிப்பினைகள் !

இளையநிலாவைக் கண்டு
அள்ளக் அள்ளக் குறையாத
காதலர்களின் மனதில் நிழலாடிய
இன்பங்கள் துன்பங்கள்
நிலாக்கால நினைவலைகள்!

மகளிர் தினம் -ஹேமாத்ரி

Related image

*மகளிர் தினம் –  இருக்கட்டும் தினம் தினம்….*
தாலாட்டிய *தாயே*,
துணையாகும் *மனைவியே,*
செல்ல *மகளே*
மலரான *மங்கையே*,
தாங்கும் *மாதரே*
வழிகாட்டும் *பாட்டியே*
அச்சாணியாய் உலகை, *சுற்றவைப்பது நீங்கள்*,
எண் ஜான் உடம்பை, *தோற்றுவிப்பது நீங்கள்*,
மிச்சமில்லாமல் பாசம் *வைப்பது நீங்கள்*,
மிஞ்சுவோர் யாருமில்லா, *ஒப்பற்றவர்கள் நீங்கள்…..*
இஷ்டப்படுவது *நடப்பதில்லை,*
கஷ்டமென்பது *நிற்பதுமில்லை,*
நஷ்டப்படுவது *புதிதில்லை,*
அதிர்ஷ்டமென்பதும் *வருவதில்லை,*
*இருந்தாலும் அஷ்டலக்ஷ்மியாய் காத்திருக்கும், மானிட தெய்வங்கள் நீங்கள்,*
தன்வலி *தெரிவதில்லை,*
தனக்கென *வாழ்வதில்லை,*
தன்ருசிக்கு *சமைப்பதில்லை,*
தனியாக *சாப்பிடுவதில்லை,*
*இருந்தாலும் அன்னலக்ஷ்மியாய் பரிமாறும், ஆத்மார்த்த ஜீவன்கள் நீங்கள்*
சிக்கனம், சேமிப்பு *உங்களின் மனக்கணக்கு*,
துண்டுவிழும்போது சமாளிப்பது *உங்களின் தனிக்கணக்கு.*
நோயற்ற வாழ்வை ஆண்டவனிடம் கேட்பது,
*ஓய்வின்றி உழைத்திடவோ….*
சோர்வுற்று தளரும்போது,
ஆண்டவனே தேடும் *ஆறுதல் நீங்களல்லவோ…..*
பாட்டிமடி *இதமடி,*
தாய்மடி *சுகமடி,*
மனைவிமடி *இன்பமடி*,
மகள்மடி *வரமடி,*
இவைதான் *மண்ணுலகின் சொர்கமடி…*
கடவுளுக்கே *இதில்கொஞ்சம் பொறாமையடி…*
குப்பையை கூட *கூட்டத்தான் தெரியும்,*
உறவுகளை கூட *பெருக்கத்தான் தெரியும்,*
குடும்பத்தின் நிலையை *வகுக்கத்தான் தெரியும்,*
வேண்டாததையெல்லாம் *கழிக்கவே தெரியும்,*
*பெண்களின் சுமைக்கணக்கு யாருக்கு தெரியும்…..*
பெண்களை *மதி,*
மாறிடும் *தலைவிதி,*
பெண்மையை *வாழ்த்து,*
நிலவிடும் *அமைதி.*
பெண்மை எனும் *உண்மையை போற்றுவோம்….*
பெண்மை எனும் *தியாகத்தை போற்றுவோம்….*
*மகளிர் தினம்,*
*இருக்கட்டும் தினம் தினம்….*

குவிகம் பொக்கிஷம் – காலத்தின் விளிம்பில் – பாவண்ணன்


Image result for முதியோர் இல்லம் கிழவி

 

“பூந்தோட்டம்” என்னும் இணைய வார இதழில் நான் எழுதத் தொடங்கிய கட்டுரைகளுக்கு முதலில் எந்த வரவேற்பும் இல்லை. அத்தொடரை நிறுத்தியிருந்தாலும் எந்தவிதமான பாதகமும் இல்லை என்கிற மாதிரியான மௌனத்தை சகித்துக் கொள்ளவே முடியவில்லை. சிறிய அளவில் உருவான சலிப்பு மெல்லமெpaavannan-3ல்ல வளர்ந்து பெரிதாகி செயல்பட முடியாத அளவுக்கு நெஞ்சை அடைத்தது. எழுதுவதற்கு எனக்கும் ஓர் இடம் தேவையாக இருந்தது என்பதையும் அந்த இணைய தளத்தை நடத்தி வந்தவர் என் நண்பர் என்பதையும் தவிர அக்கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து எழுத வேறு எவ்விதமான  இல்லை. ஏறத்தாழ பத்து வாரங்களாக அத்தொடர் வெளிவந்து கொண்டிருந்தது. வாராவாரம் பூந்தோட்டத்தில் வெளியிடப்படுகிற வாசகர் கடிதக் குவியலில் இக்கட்டுரைத் தொடரைப் பற்றி ஒரு வரிகூட ஒருவரும் எழுதியதாகத் தெரியவில்லை. இக்கட்டுரைகள் ஏன் வாசகர்களை ஈர்க்கவில்லை என ஒவ்வொரு முறையும் யோசிப்பேன். விடையெதுவும் தெரியாத புள்ளி வரைக்கும் அந்த யோசனை நீண்டு மறைந்துபோகும்.

பதினோராவது வாரத்துக்கான கட்டுரையை எழுதி முடித்ததும் அனுப்புவதற்காக மின் அஞ்சல் பக்கத்தைத் திருப்பியபோது எனக்கொரு மடல் வந்திருக்கும் செய்தியை அறிந்தேன். முதலில் திரையில் புலப்பட்ட ஒற்றைவரி முகவரியை வைத்து எழுதியவர் யாராக இருக்கும் என்று ஊகிக்க முயற்சி செய்தேன். என் மனத்தில் வழக்கமாக எனக்கு மடலெழுதும் நண்பர்களின் மின் அஞ்சல் முகவரிகள் அனைத்தும் பளிச்சிட்டு மறைந்தன. கண்டுபிடிக்க இயலவில்லை. ஒருவித ஆர்வம் உந்த அந்த மடலைத் திறந்தேன். ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருந்தது அக்கடிதம். பல ஆண்டுகளாக இலக்கிய அறிமுகம் உள்ளவராகத் தெரிந்தார். தொடராக வந்திருந்த பத்துக் கட்டுரைகளைப்பற்றியும் சிற்சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அம்மடல் பொதுவாக என்னை ஊக்கப்படுத்துவதாக இருந்தது. நன்றியைத் தெரிவித்து அவருக்குப் பதில் அனுப்பினேன்.

அவர் பெயர் சந்திரன். எங்கள் நட்பு இப்படித்தான் தொடங்கியது. பிறகு கட்டுரை வெளியானதும் ஒவ்வொரு வாரமும் அவரிடமிருந்து அஞ்சல் தவறாமல் வரத் தொடங்கியது. ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் எலும்புமுறிவு சிகிச்சைப் பிரிவில் வேலை செய்வதாகத் தெரிவித்திருந்தார் அவர். ஒவ்வொரு அஞ்சலிலும் தினசரி வாழ்வில் தாம் கண்ட விசேஷமான செய்தியொன்றை எழுதி அனுப்புவார். இருசக்கர வாகனத்தில் சென்று அவசரத்தில் தடுமாறி மரத்தில் மோதிக் கால் உடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட கிதார் வாசிக்கும் இளைஞன் ஒருவனைப் பற்றிய குறிப்பை ஒரு மடலில் எழுதியிருந்தார். ஒரு பூங்காவில் சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து தன் சேமிப்புப் பையிலிருந்து ரொட்டித் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து ஆனந்தமாகத் தின்ற பிச்சைக்காரன் ஒருவனைப் பற்றி ஒருமுறை எழுதியிருந்தார். தன் வீட்டைப் பற்றியும் சுற்றுப் புறத்தைப்பற்றியும் சொற்சித்திரங்களாகவே தீட்டியிருந்தார். வீட்டுக்கு அருகிலிருந்த விலங்குக்காட்சிச் சாலையைப் பற்றி அவர் எழுதிய தகவல்கள் ஏராளமானவை. ஒவ்வொரு விலங்கின் கூண்டுக்கும் அவர் பெயர் சூட்டியிருந்த விதம் விசித்திரமானது. சிங்கத்தின் கூண்டுக்கு ”இடியோசையின் இல்லம்”. சிறுத்தையின் கூண்டுக்கு “வேகத்தைத் துறந்த விவேகியின் வீடு”. பஞ்சவர்ணக்கிளிகளின் கூண்டுகளுக்கு “பறவைகளின் இசைக்கோயில்”.

“பெங்களூர் நகரைவிட்டு வெகுதொலைவு தள்ளியிருக்கும் ஹுடி என்னும் கிராமத்தில் “ஆஷ்ரயா” என்கிற பெயரில் இயங்கும் முதியோர் இல்லத்தைத் தெரியுமா?” என்று ஒரு முறை கேட்டிருந்தார் சந்திரன். அச்சமயத்தில் எனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. பிற உள்ளூர் நண்பர்களை விசாரிக்கத் தொடங்கினேன். பலருக்கு அதைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை. ஒருவர் மட்டும் அது ஒரு முதியோர் இல்லமென்றும் சேவை மனப்பான்மை கொண்ட சிலரால் நடத்தப்பட்டு வருகிறது என்றும் சொன்னார். திருமணமாகாத தன் சகோதரிகள் இருவரும் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் அந்த முதியோர் இல்லத்துக்குச் சென்று அங்கே தங்கியிருக்கிற முதியோர்களுடன் பேசியும் பழகியும் அவர்கள் தேவையை நிறைவேற்றியும் ஊக்கமூட்டியும் வருவதையும் வழக்கமாகக் கொண்டவர்கள் என்றும் சொன்னார். அந்தத் தகவலை அன்று இரவே நான் சந்திரனுக்கு அனுப்பினேன். அதற்கப்புறம் இரண்டு மாதங்கள் அதைப்பற்றிய பேச்சே இல்லை.  ஒருநாள் திடீரென்று தன் பெரியம்மா அந்த இல்லத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தன் சார்பில் அவரைப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்றும் கேட்டிருந்தார். என் ஓய்வு நாளுக்காகக் காத்திருந்த இடைவெளியில் அவரிடமிருந்து விரிவான மடலொன்று வந்தது.

இருபதாண்டுகளுக்கு முன்னால் தனக்கு ஆப்பிரிக்காவில் வேலை கிடைத்தது என்று தன் மடலைத் தொடங்கியிருந்தார் சந்திரன். தாயார் மட்டுமே அவருக்கு உண்டு. முதல் இரண்டு ஆண்டுகள் ஆப்பிரிக்காவில் தனியாகவே வாழ்ந்தார் சந்திரன். பிறகு இந்தியாவுக்குத் திரும்பி தாயாரையும் தன்னோடு அழைத்துச் சென்றார். தாயாருக்குப் பிரியமான சகோதரி ஊரில் இருந்தார். ஏழைக் குடும்பம். ஆறு பிள்ளைகள். முடிந்தவரை பெரியம்மாவின் குடும்பத்தையும் தாங்கியே வந்தார் சந்திரன். ஆப்பிரிக்கப் பெண்ணொருத்தியை மணந்துகொண்டு இல்வாழ்க்கையைத் தொடங்கினார். நான்கு ஆண்டுகளில் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையானார். பேரப்பிள்ளைகளோடு ஆனந்தமாக ஆடிப் பொழுது போக்கிய அம்மா வெகுகாலம் உயிருடன் இல்லை. மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இறந்துபோனார். இடைக்காலத்தில் இந்தியாவில் பெரியம்மாவின் நிலையும் மோசமானது. ஆறு பிள்ளைகளும் ஆறு விதமாக வளர்ந்தார்கள். சந்திரன் அனுப்பிய பணத்தையெல்லாம் தாய்க்குத் தெரிந்து பாதியும் தெரியாமல் பாதியுமாக சாப்பிட்டுத் தீர்த்தார்கள். மூத்தவன் சதாகாலமும் குடிபோதையில் மிதந்தான். இரண்டாவது மகன் சம்பாதித்த பணத்தையெல்லாம் விபச்சாரத்தில் அழித்தான். மூன்றாவது மகனும் நான்காவது மகனும் உள்ளூரிலேயே திருட்டு வழக்கொன்றில் அகப்பட்டுச் சிறையிலிருந்து தப்பித்து மும்பைப் பக்கம் ஓடிப்போனார்கள். பள்ளியிறுதி முடிந்ததும் ராணுவத்தில் சேர்ந்து ஊரையே மறந்து போனான் ஐந்தாவது மகன். ஆறாவது பையன் ஒரு வக்கீலிடம் குமாஸ்தாவாக இருந்தான். அலுவலகத்துக்கு எதிரே இருந்த ஆயத்த ஆடை அங்காடியில் வேலைபார்த்த ஒரு பெண்ணோடு பழகித் திருமணம் செய்துகொண்டான். மனைவியை உள்ளே அழைத்துக்கொண்டதும் பெரியம்மா வாசலுக்கு மாற்றப்பட்டார். மனமுடைந்த பெரியம்மா தன் துக்கத்தையெல்லாம் யாரோ ஒருவர் மூலம் கடிதமாக எழுதிச் சந்திரனுக்கு அனுப்பினார். பெரியம்மாவின் துயரம் தன் அம்மாவின் துயரமாகத் தெரிந்தது சந்திரனுக்கு – இணையத் தளங்களில் தேடித்தேடி பெங்களூருக்கு அருகே ஹுடியில் தங்கும் ஆஷ்ரயா இல்லத்தின் முகவரியைக் கண்டறிந்து அங்கே சேர்ப்பதற்கான ஏற்பாடுகளை வேறொரு நண்பர் மூலம் செய்துமுடித்தார். ஒருவருடம் ஓடிவிட்டது. மாதத் தவணைகளை அங்கிருந்தபடியே நேரிடையாகச் செலுத்திவந்தார். சமீபகாலத்தில் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும் கனவுகள் அவரைப் பாடாய்ப்படுத்திவந்தன. விலங்குக்காட்சி சாலையில் நின்றிருந்தபோது அக்கூண்டுகளையும் முதியோர் இல்லங்களையும் சம்பந்தப்படுத்தி யோசித்த கணத்திலிருந்து அக்கனவு விரட்டத் தொடங்கிவிட்டது. பெரியம்மா பலவித விலங்குகளின் உருவத்துடன் ஒவ்வொரு  முறையும் கனவில் வந்து கம்பிகளைப் பிடித்தபடி ஏக்கத்துடன் முறைத்துப் பார்ப்பதைத் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை. நினைத்தவுடன் விடுப்பெடுப்பது சாத்தியமாக இல்லை. அவர் சார்பில் இல்லத்துக்குச் சென்று அந்தப் பெரியம்மாவிடம் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு வரவேண்டும். இதுதான் அக்கடிதத்தின் சாரம்.

அடுத்த ஞாயிறு அன்று பேருந்துத்தடம் விசாரித்து அந்த இல்லத்துக்குக் கிளம்பினேன். மூன்று பேருந்துகள் மாற வேண்டியிருந்தது. இறுதியாக இறங்கிய நிறுத்தத்தின் அருகே ஓர் ஓலைக்குடிசை டீக்கடை மட்டும் காணப்பட்டது. ஒரே ஒரு சிகரெட் மட்டும் வாங்கிப் பற்றவைத்தபடி ஆசிரமத்தைப்பற்றி விசாரித்தேன். டீக்கடைக்காரப்பெண் குடிசைக்கு வெளியே வந்து தொலைவில் தோப்பைப் போலக் காணப்பட்ட ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டி “அதுதான் இல்லம்” என்றாள்.

“அதுவரிக்கும் பஸ் போகாதா?”

“இல்லத்துக்கு இதுதான் ஸ்டாப். எல்லாரும் இங்க எறங்கித்தான் நடந்துபோவாங்க. நீங்க வெளியூரா?”

நான் வேடிக்கைக்காக “ஆமாம்” என்றேன்.

“வயசானவங்கள இங்க கொண்டாந்து உட்டுட்டு ஆளுக்கொரு பக்கமா போயிடறாங்க சார். கூழோ கஞ்சியோ ஒன்னா சேர்ந்து லட்சணமா குடிக்கறத உட்டுட்டு பணம்பணம்னு எதுக்குத்தான் சார் மக்கள் அலையறாங்களோ? காலம் ரொம்ப மாறிப்போச்சி சார்”.

”நல்லா கவனிச்சிக்கிடறாங்களா இங்க?”

“கவனிப்புக்கெல்லாம் எந்தக் கொறையுமில்ல சார். நூறுபேரு கவனிச்சிக்கிட்டாலும் பக்கத்துல பெத்த புள்ள இருந்து பாக்கற மாதிரி ஆவுமா, சொல்லுங்க.”

“அடிக்கடி நீங்க போவீங்களா?”

“காலையில அங்க பால்பாக்கெட் வாங்கிப்போயி குடுக்கறதெல்லாம் எங்க ஊட்டுக்காருதான். ஒங்க ஜனங்க யாராவது இருக்காங்களா இங்க? நான் வேற எகணமொகண இல்லாம ஏதேதோ பேசிட்டிருக்கேன்”.

“எங்க ஜனங்க யாருமில்ல. எனக்குத் தெரிஞ்சவரு ஒருத்தருக்கு வேண்டியவங்க இருக்காங்க”.

புன்னகையுடன் சிகரெட்டை அணைத்துவிட்டு அவளிடம் விடைபெற்று நடக்கத் தொடங்கினேன். அவளுடைய தமிழ் திருவண்ணாமலைப் பக்கத்து மொழியைப் போல இருந்தது. பெங்களூரின் பல புறநகர்களில் இப்படிப்பட்ட பல குரல்களைக் கேட்டிருக்கிறேன். நமக்குப் பழக்கமான குரல் ஏதாவது காதில்விழாதா என்று நினைத்தபடி நடக்கும்போதெல்லாம் சொல்லிவைத்த மாதிரி ஒரு குரல் ஒலித்து அரைக்கணம் நிறுத்திவிடும்.

மஞ்சளாகப் பூப்பூத்த சின்னச்சின்ன முட்செடிகள் இருபுறமும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அடர்ந்திருந்தன. அடையாளம் கண்டுபிடிக்க முடியாத குருவிகள் எல்லாம் கிளைகளிலும் தாவித்தாவி விளையாடிக் கொண்டிருந்தன. கட்டாந்தரையாக இருந்த இடத்தில் சில பிள்ளைகள் கிரிக்கெட் ஆடியபடி இருந்தார்கள். அந்தப் பாதை முடியுமிடத்தில் “ஆஷ்ரயா” என்று எழுதப்பட்ட பெயர்ப்பலகை கண்ணில் பட்டது. அதையொட்டி உடனடியாக சுற்றுச்சுவர் தொடங்கியது. சுவரின் மேல்விளிம்பு தெரியாத வகையில் சிவப்புக் காகிதப்பூக்கள் அடர்ந்து பூத்திருந்தன. எல்லா இடங்களிலும் அவற்றின் கிளைகள் படர்ந்திருந்தன. வாசலில் இருந்த காவலரிடம் விவரம் சொல்லி உள்ளே நுழைந்தேன். பெரிய பூந்தோட்டத்தில் நுழைந்ததைப் போல இருந்தது. கண்ணில் பட்ட இடங்களிலெல்லாம் வகைவகையான நிறங்களில் பூக்கள் பூத்திருந்தன. இரு சேவகர்கள் மரங்களின் கீழே உதிர்ந்திருக்கும் இலைகளையெல்லாம் கூட்டிச் சேகரித்த்படி இருந்தார்கள். பூந்தோட்டத்தையொட்டிப் பச்சைக் கம்பளத்தைப் போல பளபளக்கும் பெரிய புல்வெளி, பெரிய நிழற்குடையின் கீழே வட்டமாக வடிவமைக்கப்பட்ட சிமெண்ட் பெஞ்சுகள். அழகான சுற்றுச்சுவர். சிலைகளுடன் எளியமுறையில் அமர்ந்திருந்த கோவில். தேவாலயம். தொழுகைக்கூடம். கையில் கோலேந்தி நடக்கும் மூதாட்டி ஒருத்தியையும் முதியவர் ஒருவரையும் கரம்பற்றி நடத்திச் செல்லும் ஒரு சின்னஞ்சிறுவனைப் போன்ற சிலைகள் பீடத்தில் வீற்றிருந்தன. அதைச்சுற்றியும் அழகான பூச்செடிகள் பிறகு வட்டமான பளிங்குத்தொட்டி. அதற்குள் பலவித உயரங்களில் பொருத்தப்பட்ட நீரூற்றுகளிலிருந்து நீர் பீய்ச்சியடித்தபடி இருந்தது. எதிரில் ஒரு சிறிய கண்ணாடிக்கூடம். உள்ளே நான்கைந்து மேசைகள். கூடத்தின்மீது பலவிதமான கொடிகள் படர்ந்து பச்சைப்பசேலென காணப்பட்டது. பின்னால் விரிந்த வெளியில் கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுசிறு இல்லங்கள். எல்லாமே ஓட்டு வீடுகளுக்கு உரிய அமைப்பில் கட்டப்பட்டவை. மறுபுறம் மருத்துவமனை, வேறொரு புறத்தில் உடல் எரிமையம். அதன் புகைப்போக்கி மேகத்தைத் தொடுவதைப் போல மிக உயரமாக எழுப்பப்பட்டிருந்தது. அங்கங்கே வாகன நிறுத்தங்கள், பக்கவாட்டில் நடப்பதற்குத் தோதான கிளைப்பாதைகள். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடி மெதுவாக நடந்தேன். தாமதமாகத்தான் கட்டிட அமைப்புகளைக் கவனித்தேன். எல்லாமே தரையோடு ஒட்டியவை. படிக்கட்டுகளோ, மாடிப்பகுதியோ எங்கேயும் காணப்படவில்லை. முதுமையின் சக்தியைக் கருத்தில்கொண்டு அவை வடிவமைக்கப் பட்டிருந்தன. ஆனாலும் அந்த இடத்தின் தனிமை விசித்திரமான ஒரு உணர்ச்சியை என் மனத்தில் பரப்பியது. ஆழ்மனத்தில் என்னை அறியாமலேயே ஒருவித அச்சம் பரவுவதை உணர்ந்தேன்.

நீரூற்றுக்கு இடதுபுறமாக இருந்த விசாரணை மையத்துக்குள் நுழைந்தேன். அந்த அறையின் உள்சுவர் முழுக்க அழகான புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. சிறுசிறு வாக்கியங்களைக் கொண்ட அட்டைகள் செருகப்பட்டிருந்தன. தயக்கத்துடன் பார்வையை அங்குமிங்கும் படரவைத்தபடி திரும்பியபோது ஒரு மேசையின் பக்கம் கணிப்பொறியின் முன்னால் அமர்ந்திருந்த இளம்பெண்ணின் புன்னகையைப் பார்க்க நேர்ந்தது. ஒருகணம் அப்புன்னகையை ஒரு சிற்பத்தின் புன்னகையாக நினைத்துப் பார்த்து மனத்துக்குள் சிரித்துக் கொண்டேன். பிறகு மெல்ல அவளை நெருங்கி என்னிடம் இருந்த குறிப்புகளைக் கொடுத்தேன்.

“தையல்நாயகி, எஸ் ஸெவன்”

என் குறிப்பை வாய்விட்டுப் படித்தபடி அவள் இருக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்தாள். குடில்கள் தொடங்கும் பகுதிவரைக்கும் கூடவே வந்து நான் செல்ல வேண்டிய திசையையும் திரும்ப வேண்டிய இடத்தையும் சுட்டிக் காட்டிவிட்டுச் சென்றாள். அவள் காட்டிய திசையில் நடக்கத் தொடங்கினேன் நான். எல்லா இல்லங்களும் ஒரே விதமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. இல்லத்துக்கு முன்னால் மொசைக் கற்கள் பதிக்கப்பெற்ற சிறு முற்றம். ஒரு சிறு நிழற்குடை. அதன்கீழ் ஒரு சாய்வு நாற்காலி. அதைச்சுற்றிச் சின்னத் தோட்டம். தோட்டத்தில் சூரியகாந்திப் பூக்களின் மஞ்சள் இளவெயிலில் மின்னிக்கொண்டிருந்தது.

தற்செயலாகத்தான் ஒரு இல்லத்தின் ஜன்னல் பக்கமாக என் பார்வை சென்றது. இரண்டு கண்கள் என்மீது பதிந்திருந்தன. எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவை என்னைத்தான் பார்க்கின்றனவா என்கிற சந்தேகத்தில் மீண்டும் அத்திசையில் பார்த்தேன். வைத்த விழி வாங்காமல் அப்பார்வை என் மீதே நிலைகுத்தியிருந்தது. தோல் சுருங்கிய அம்முகத்தையும் எதையோ யாசிக்கும் அக்கண்களையும் நீண்ட கணங்களுக்கு என்னால் பார்க்க முடியவில்லை. உடனடியாகத் திரும்பி மற்ற இல்லங்களின் பக்கம் பார்வையைச் செலுத்தினேன். உண்மையிலேயே என் பதற்றம் அதிகரித்துவிட்டது. ஒவ்வொரு ஜன்னலில் பக்கத்திலும் இருகண்கள். நைந்து தளர்ந்த விழிக்குழிகளிலிருந்து உயரும் பார்வை. பாதையைப் பார்த்தபடி  வேகமாக நடக்கத் தொடங்கினேன். யாரோ என்னை அழைப்பதைப் போலிருந்தது. தயக்கத்துடன் திரும்பிப் பார்த்தேன். யாரையும் காணவில்லை. அடையாளம் காட்டிய பெண்ணைக்கூட.  இறக்கி வைத்துவிட்டுப் போன பெரிய பெரிய எந்திரங்களைப் போல நிமிர்ந்துகூட பார்க்கமுடியாத அளவு நெஞ்சில் அச்சம் துளிர்த்ததை ஆச்சரியமாக உணர்ந்தேன். மறுகணமே என் பகுத்தறிவு மூளை விழித்து அந்த அச்சத்தை விரட்டியது. அந்த இடத்தின் விசித்திரம் ஒரு சின்னச் சத்தம்கூட காதில் விழவில்லை என்பதுதான். ஒரு தும்மல் சத்தம்கூட கேட்கவில்லை.

இல்லத்தின் கதவை நெருங்கி அழைப்புமணியை அழுத்தினேன். என் புலன்கள் இல்லத்துக்குள் ஏற்படக்கூடிய துணிகள் உரசும் ஒலியையோ செருப்புகள் அழுந்தும் சத்தத்தையோ ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்தன. சில கணங்கள் வரை எதுவும் கேட்கவில்லை. மீண்டும் மணியை அழுத்தலாம் என்று நினைத்த தருணத்தில் கதவு சட்டெனத் திறந்தது. வெளிப்பட்ட அந்த உருவத்தின் தோற்றம் என்னை ஒரு கணம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உருக்குலைந்த சதைக் கோளத்துக்குக் கையும் காலும் முளைத்ததைப் போலிருந்தது அத்தோற்றம். என் இதயம் வெகுவேகமாகத் துடிக்கத் தொடங்கியது.

”தையல்நாயகிங்கறது நீங்கதானேம்மா?”

கேட்க நினைத்த கேள்வி நெஞ்சிலிருந்து எழாமல் வறட்சி அடைந்தது. எச்சிலைக் கூட்டி விழுங்கி ஈரத்தைப் படர வைத்தபிறகுதான் சகஜமாகக் கேட்க முடிந்தது. என் கேள்வியையே அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவர் கண்கள் மட்டும் அசைந்தன. என்னை ஆராய்வதைப் போல உற்றுப் பார்த்தன. நான் மீண்டும் “தையல்நாயகிங்கறது நீங்கதானே?” என்று கேட்டேன். அவர் மேலும் நெருங்கிவந்து “ம்?” என்று என்பக்கம் செவியைக் கொடுத்தார். என் கேள்வியை மறுபடியும் நான் கேட்கவேண்டியதாக இருந்தது.

“என் சின்னப்புள்ளைதான் இங்க கொண்டாந்து உட்டுட்டுப் போனான். அப்புறமா வரவே இல்ல”

தொடர்பில்லாமல் பேசியபடி அவர் உள்ளே திரும்பினார். அவரைத் தொடர எனக்கு அச்சமாக இருந்தது. அதைத் தள்ளி வைத்துவிட்டுத்தான் நான் அவரைத் தொடர்ந்து உள்ளே சென்றேன்.

இல்லம் மிகவும் தூய்மையாக இருந்தது. டெட்டால்  மணம் கமழ்ந்தது. சுவரில் இயற்கைக் காட்சிகளின் ஓவியம் ஒருபுறமும் குழலூதும் கிருஷ்ணனின் படம் மறுபுறமும் ஒட்டப்பட்டிருந்தன. அப்பால் கம்பியிட்ட ஜன்னல். வெளிப்புறக் காட்சிகளும் மேகங்களும் அசையும்  மரக்கிளைகளும் படம்படமாகத் தெரிந்தன. மறுபுறம் குளியலறையும் கழிப்பறையும் இருந்தன. ஜன்னலோரமாகவே கட்டில். மருந்து மேசை. மூலையில் தொலைக்காட்சிப் பெட்டி. என் உடல் பதறுவதை உணர்ந்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அடிவயிற்றில் குளிர்ச்சி பரவி உறைவதை என்னால் நம்பவே முடியவில்லை. அவரைப் பார்த்தபடியே நின்றேன். தோல் சுருங்கிய முகம். ஒடுங்கிய கன்னக் குழிகள். வெள்ளையாகப் புரண்ட நீண்ட கூந்தல் அள்ளிக் கொண்டையாகக் கட்டப்பட்டிருந்தது. பார்க்கப்பார்க்க அக்கண்கள் முதலில் ஊட்டிய அச்சம் கரைந்தது. குழப்பத்தையும் கலவரத்தையும் அவை வெளிப்படுத்துவதை உணர்ந்தேன். முதுமையின் சரிவும் தளர்ச்சியும் படிந்த உடல். காதுகளின் விளிம்பிலும் முன்நெற்றியிலும் வெண்முடி காற்றில் புரண்டு அலைபாய்ந்தது. சட்டென என் பக்கமாக விரலை நீட்டி “நீங்க யாரு” என்று கேட்டார்.

”உங்க தங்கச்சி பையன் சந்திரனுக்கு சிநேகிதன் நான். சந்திரன் சந்திரன் தெரியுமில்ல..?”

சற்று சத்தமாகவே நான் சொன்னேன். ஆனால் என் ஒலிகள் எதுவும் கேட்காத உலகில் அவர் இருந்தது ஆச்சரியத்தைத் தந்தது. கட்டிலில் உட்கார்ந்தபடி உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டார். மேலுதடும் கீழுதடும் உட்குழிந்து காணப்பட்டன. கோடுகோடாக எழுந்த சுருக்கங்களின் நீட்சி உதடுகள் வரை தாக்கியிருந்தது.

“ஆறு ஆம்பளை புள்ளைங்க பெத்து என்ன பிரயோஜனம் சொல்லு. ஊரு உலகத்துல புள்ளைங்க தலையெடுத்து பெத்தவங்கள காப்பாத்தும்ன்னு பேரு. நான் பெத்ததுங்க எல்லாமே அதுக்கு நேர்மாறா போச்சிங்க. ஒவ்வொருத்தனா போவும்போது கடைசி பையன் பாத்துக்குவான்னு இருந்தேன். அவனும் இங்க கொண்டாந்து தள்ளிட்டு போயிட்டான். என் தங்கச்சி பையன் வெளிநாட்டுல இருக்கான். அவன்தான் இதுக்கான ஏற்பாடயெல்லாம் கவனிச்சிக்கறான்.”

”உங்க தங்கச்சி பையன் சந்திரன் சிநேகிதன்தான் நானு. அவர்தான் உங்கள பாத்துட்டு வரச்சொல்லி அனுப்பனாரு”

அவர் பதில் சொல்லவில்லை. என் சொற்கள் அவர் மூளையைத் தொடவே இல்லை என்று தோன்றியது. ஜன்னல் வழியே தெரியும் பனைமரங்களின் அசைவையே வெகுநேரம் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். அவர் மௌனம் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

“அந்தக் காலத்துல எங்களுக்கு பெரிய பலசரக்குக்கட இருந்திச்சி. வில்வண்டி வச்சிருந்தாரு அவரு. எங்க போனாலும் நாங்க அதுலதான் போவோம்.”

அவராகவே ஒரு கதையைத் திடீரென சொல்லத் தொடங்கினார். அவரைப் பெண்பார்க்க வந்தது, திருமணம் நடந்தது, செழிப்பான முறையில் நடந்த வியாபாரம், வரிசையாகப் பிறந்த பிள்ளைகள், சந்தையில் யார் பிடியையோ விலக்கிக் கொண்டு ஓடோடிவந்த எருதுகளின் முரட்டுத்தனமான தாக்குதலால் நேர்ந்த மரணம் என அடுக்கடுக்காகச் சொல்லிக்கொண்டே போனார். பிறகு ஒரு கணம் நிறுத்தி “நீங்க யாரு?” என்றார். நான் நிதானமாக மறுபடியும் என்னைப்பற்றிய தகவல்களைச் சொன்னேன். அவர் கண்கள் என்மீது படிந்திருந்தனவே தவிர என் சொற்களைக் கேட்டுக்கொண்ட சுவடுகளே அந்த முகத்தில் தெரியவில்லை.

மருந்துமேசை மீது ஒரு புத்தகம் கிடந்தது. ஆசுவாசப் படுத்திக் கொள்ள அதை எடுத்துப் புரட்டினேன். அதுவரை நான் பார்த்திராத புத்தகம். வெறும் படங்கள். எல்லாமே தென்னாட்டுச் சைவத் திருத்தலங்கள். ஒருபுறம் குன்றும் மரங்களும் ஆறும் சூழ நிற்கிற கோயில்களின் கம்பீரத் தோற்றம். மறுபுறம் கருவறை நாயகரின் படங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருந்தது. கூடுதலாக சிற்சில பக்கங்களில் சில தூண்சிற்பங்களின் படங்களும் இடம்பெற்றிருந்தன.

“ஒங்கள நல்லா கவனிச்சிக்கறாங்களா இங்க? சந்திரனுக்கு ஏதாவது சொல்லணுமா?”

அவர் எவ்விதமான பதிலும் சொல்லவில்லை. என் மனம் அதிர்ச்சியில் உறையத் தொடங்கியது. ஒரு சிற்பத்தின் முன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் போல சங்கட உணர்வு எழுந்தது. நான் அவர் புருவங்களைக் கவனித்தேன். வெளுத்து வளைந்திருந்தன அவை. கண்கள் மட்டும் இமைத்தபடி இருந்தன.

சட்டென அவர் மறுபடியும் பேசத் தொடங்கினார்.

”அவருக்கு நான்னா ரொம்ப உசிரு. எங்க போய் வீட்டுக்குத் திரும்பிவந்தாலும் கையில பூ இல்லாம வரமாட்டாரு. சமையக்கட்டுக்கு வந்து அவரு கையாலியே தலையில வச்சிட்டுப் போனாத்தான் அவருக்கு நிம்மதி. ஒருநாளு அவர் எனக்கு பூ வச்சிவிடறத என் மாமியார்க்காரி பாத்துட்டா. சம்சாரி இருக்கற எடமா, இல அவிசாரி இருக்கற எடமா இதுன்னு ஒரே சத்தம். எவளுக்காவது இங்க கண்ணியமா இருக்கத் தெரியுதா, தாசி மாதிரி கொண்டை போட்டு பூ வச்சிட்டு திரியறாளுங்கன்னு பேசிட்டே இருந்தா. அவரு உடனே பின்பக்கமா போயிட்டாரு. நா சத்தம் காட்டாம அடுப்பு வேலையை கவனிச்சிக்கிட்டிருந்தேன். அதுலயும் ஒரு குத்தம் கண்டுபிடிச்சி பேச ஆரம்பிச்சிட்டா. என்ன நெஞ்சழுத்தம் பாரு இவளுக்கு. எப்ப எப்பன்னு அலையறா வெறிபுடிச்ச கழுதன்னு சொல்லிட்டே உள்ள வந்தா. வந்து என் தலையில இருந்த பூவை புடுங்கி எரியற அடுப்புல போட்டுட்டா”.

அவர் கண்களில் தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்தபடி இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னால் பறித்துத் தீயிலிட்ட பூ இன்னும் தன் கண் முன்னால் எரிந்து வதங்குவதைப் போல தேம்பித் தேம்பி அழுதார். உதடுகள் கோணிக்கொள்ள அவர் அழுத கோலத்தை ஏறிட்டுப் பார்க்கமுடியவில்லை. சங்கடமாக இருந்தது. அழுகையின் உச்சத்தில் அவர் சொன்ன சொற்கள் எதையுமே புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் மிக அருகே இருந்தாலும் யாராலும் எளிதில் நெருங்கித் தொட்டுவிடமுடியாத காலத்தின் விளிம்பில் இருப்பதை உணரமுடிந்தது. எங்கோ பார்வை நிலைகுத்த சுவரில் சாய்ந்துகொண்டார். தேம்பலால் அவள் நெஞ்சு தூக்கித்தூக்கிப் போட்டது. கழுத்து நரம்புகளும் நெஞ்சுக்குழியும் நெளிந்தன. அவற்றின் அசைவுகள் என் சங்கட உணர்வை மேலும் மேலும் அதிகரித்தன. மீண்டும் அவர் முகத்தைப் பார்த்தேன். முன் குவியலுக்கிடையே தவறிவிழுந்த கண்ணாடித் துண்டுகளைப் போல அவர் கண்கள் பளிச்சிட்டன. நாக்கைச் சுழற்றி உதடுகளை மற்றொருமுறை ஈரப்படுத்திக் கொண்டார்.

கண்ணீரும் அச்சமும் நிரம்பி அக்கண்களிலிருந்து என் பார்வையை விலக்க இயலவில்லை. பெரும் குற்ற உணர்வுடன் மூண்ட வேதனையால் என் தொண்டை இறுகி உலர்ந்து போனது. எழுந்து அவரை நெருங்கித் தொட்டு ஆறுதல் சொல்ல நினைத்தேன். மறுகணமே அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு பின்வாங்கினேன். சந்திரனைப்பற்றிய நினைவுகளை அவர் மனத்தில் எழுப்பமுடியாத தோல்வியுணர்வு ஒருபுறம் அரித்தபடி இருந்தது. அந்த உட்கூடம், ஜன்னல், திரைச்சீலை, சுவரோவியங்கள், கழிப்பறைக் கதவுகள், தென்னாட்டுச் சைவத் திருத்தலங்கள் புத்தகம் என ஒவ்வொன்றின் மீதும் தயக்கத்துடன் என் பார்வை படர்வதையும் பெருமூச்சுடன் எழுந்திருப்பதையும் நடக்கத் தொடங்குவதையும் அவர் கண்கள் கவனித்தபடியே இருந்தன. நான் கதவை நெருங்கும்வரை கூட அவர் அமைதியாகவே பார்த்துக்கொண்டிருந்தார். சட்டென ஒருகணம் கண்களை இமைத்து என்னை நோக்கி “நீங்க யாரு?” என்று கேட்டார். அக்கேள்வியால் என் உடல் குறுகிச் சிலிர்த்தது. சில நொடிகள் கதவில் சாய்ந்தபடி அக்கண்களைப் பார்த்தேன். அந்த இல்லங்களின் ஒவ்வொரு ஜன்னல்களிலும் தென்பட்ட கண்களையெல்லாம் மறுபடியும் எண்ணிக்கொண்டேன். ஒருகணம் கூட என்னால் அங்கே நிற்க முடியவில்லை. வேகவேகமாக இல்லத்தைவிட்டு வெளியேறினேன். கச்சிதமாக வளைந்து நீளும் சாலைகளையும் புல்வெளிகளையும் நீரூற்றுகளையும் தாண்டி நுழைவாயிலைக் கடந்து தரையில் கால்வைத்த பிறகுதான் சீராக மூச்சுவிட முடிந்தது. என் வேதனையைச் சந்திரனுக்குத் தெரியப்படுத்தும் விதத்தைப் பற்றிய கவலையை முதன்முதலாக உணர்ந்தது மனம்

என்னதான் முடிவு..?– கோவை சங்கர்

 

 

 

 

 

 

 

 

புத்தம்புது பொருள்கேட்கும் சின்னஞ்சிறு குழவியும்
பெற்றவரைக் கேட்பதுவும் என்னதான் முடிவு?
பகலின்றி இரவின்றி ராப்பகலாய்ப் படித்துவிட்டு
தேர்வெழுதிக் கேட்பதுவும் என்னதான் முடிவு?

கால்சோர மெய்சோர கண்களுமே பூத்துவர
கற்படிகள் தேய்ந்திடவே பணிமனைகள் மீதேறி
‘காலியில்லை’ போர்டுகண்டு மனமுருகிக் கேட்பதுவும்
‘கடவுளே அடியேனுக்கு என்னதான் முடிவு?’

காதலிலே தோல்வியினைக் கண்டவக் காளையவன்
கருத்துடனே நோக்குவதும் என்னதான் முடிவு?
கடிமணம் கொண்டவன் பேதங்களைக் கண்டுவிட்டு
கதறிக் கேட்பதுவும் என்னதான் முடிவு?

வயிறொன்று பசியினை யள்ளிச் சொரிந்திட
வறுமை கோலத்தில் குழந்தைகள் கலங்கிட
வற்றிய வயிறுடனே ஏழையவன் கேட்பதுவும்
‘வறுமைக்கு ஆண்டவனே என்னதான் முடிவு?’

வாழ்வின் சாரமே தொக்கியே நிற்பது
வளமிக்க கேள்வியாம் ‘என்னதான் முடிவில்?’
இகத்தின் முதல்வன் இறைவனை நாடும்
இவ்வேழை கேட்பதுவும் ‘என்னதான் முடிவு?’