ரஞ்சித் என்னுடைய மாணவியின் குடும்ப நண்பர். என் மாணவியிடமிருந்து நான் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர், மனநல ஆலோசகரும் என அறிந்துகொண்டு, தான் படும் இன்னலுக்குத் தீர்வு காண என்னை ஆலோசிக்க வந்தார்.
ரஞ்சித்தின் குழப்பம், தன் மனைவி பாயல்பற்றித்தான். இவர்களுக்குக் கல்யாணமாகி இருபது வருடங்கள் கடந்திருந்தது. அவர்களை ஆதர்ச தம்பதியர்களாகத்தான் உற்றார் உறவினர்கள் அனைவரும் கருதினார்கள். ஒரு வருட காலமாகப் பாயலின் போக்கு அவருக்கு விசித்திரமாகத் தோன்றியது. அவள் சமைக்கும் வகைகள் எப்பொழுதும்போல அப்படியே இருந்தாலும், வீட்டுப் பராமரிப்பு, வீட்டில் உள்ளவர்களைப் பார்த்துக்கொள்வதில் நிறைய மாற்றங்கள். ரஞ்சித்திற்கு அவளிடம் இதுவரை இல்லாத சுயநலம், செலவழிக்கும் பழக்கம், உபயோகிக்கும் வார்த்தைகள் கவலை உண்டாக்கியது.
என்னவென்று புரியவில்லை. யாரைக் கேட்பது என்றும் தெரியவில்லை. ஒருநாள் தன் அப்பாவிற்கு உணவு தரவில்லை, கேட்டபிறகு, மன்னிப்புக் கேட்டாள். ஏனோ அவனுக்கு அது வெறும் வாய்வார்த்தையாகத்தான் தோன்றியது. இது நடந்தபின்பே என்னை ஆலோசிக்க முடிவெடுத்தார்..
ரஞ்சித், 45 வயதுடையவர். தனியார் நிறுவனத்தில் நல்ல வேலை, கைநிறைய சம்பளம், வசதியான வாழ்க்கை. தன் அப்பா-அம்மாவிற்கு மூத்த மகன் என்பதால் அவர்களைத் தானே பார்த்துக்கொள்வதாக முடிவு. பாயலின் பரிபூரண சம்மதம் கிடைத்ததால்தான் அவளைக் கல்யாணம் செய்துகொண்டார்.
பாயல் பட்டதாரி. நல்ல வசதியான மேல்தட்டுக் குடும்பம். நம் கலாச்சாரம், நாட்டின் குடும்பப் பண்பாட்டைப் புரிந்துகொண்டு அனுசரிப்பவள். அவளுடைய மாமனார், மாமியார் அவளைப் பெருமையுடன் புகழ்வார்கள். அவளும் அவர்களை “அம்மா” “அப்பா” என்றே அழைப்பதுமட்டும் அல்லாமல் தன் பெற்றோராகவே பாவித்தாள். இவர்களை மாமனார்- மாமியார்- மருமகள் எனத் தெரியாத அளவிற்கு இருந்தது.
அதனாலேயே இந்த ஒரு வருட மாற்றம் வியப்பாக இருந்தது. சில வருடங்களுக்கு முன் மாமியாருக்கு ஈரல் பாதித்து, சுமார் ஒரு வருடத்திற்கு மருத்துவ உதவி தேவையானது. பாயல் அவர்களை முழு அன்பு, ஆதரவுடன் பார்த்துக்கொண்டாள். அவர்கள் மறைந்து வருடங்கள் ஆயினும் அவள் அவர்கள் இல்லாத வடுவைச் சுமப்பது உணரமுடிந்தது.
இதே பாயல், கடந்த ஒரு வருடமாக, மாமனாரின் உடல்நிலைமேல் குறைந்த அக்கறை காட்டினாள். அவரின் பகல் உணவு ஏனோதானோ என்று இருக்கும், பேச்சு ஓரிரு வார்த்தையாக இருந்தது.
இதே சமயத்தில்தான் அவள் ஒரு பள்ளியின் மேல்அதிகாரியானாள். தொலைவிலிருந்ததால், சீக்கிரம் கிளம்பவேண்டியிருந்தது. பொறுப்புகள் முடித்துத் திரும்பி வருவதற்குள் ஆறுமணி ஆகிவிடும். வந்ததும் சமையலில் இறங்கிவிடுவாள்.
இருபது வருடக் கல்யாண வாழ்க்கையில், அவர்களுக்குள் வாக்குவாதம் நேர்வது, இந்த ஒரு வருட காலமாகத்தான். ரஞ்சித்திற்கோ தான்செய்வது கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. பாயலை ஏன் இவ்வளவு ஏசுகிறோம், இந்த அளவிற்குக் கீழ்த்தரமாகப் போகிறோம்? எனத் தோன்றியது.
ரஞ்சித்தைப் பாயலுடன் வருமாறு பரிந்துரைத்தேன். பாயல் வந்தாள். கண்களும் கைகளும் அவள் உள் நிலவும் உணர்வைக் காட்டியது. வருவதற்குத் தயக்கம் என்றாலும் ஒத்துவந்தாள்.
பாயல் தன்னுடைய மாற்றங்களைத் தன் கண்ணோட்டத்திலிருந்து சொன்னாள். அவர்களின் இரண்டு பெண்களும் பெரிய வகுப்பில் இருப்பதால் வேலைசெய்யவும், வந்த பெரிய பொறுப்பை ஏற்றுக்கொள்ளவும் தோன்றியது என்றாள். மாமியாரின் மறைவுக்குப்பின் அவர்கள் இல்லாதது மிகவும் வாட்டியது. இந்த நிலையைச் சமாளிக்க வேலைக்குப்போக முடிவெடுத்தாள்.
முகநூலில் புது அறிமுகங்கள். பெண்கள் முன்னேற்றம்பற்றி எப்போதும் பேசுவோர். மாமியார் மறைவு நேரத்தில்தான் இவர்கள் பழக்கம் ஆரம்பமானது. திரும்பத்திரும்பப் பாயலிடம், தன் வளர்ச்சியை மையமாக வைத்து யோசிக்கவேண்டும் என்றார்கள். இவ்வளவு காலமாகக் குடும்பத்திற்கு உழைத்தாய், “உனக்காக” செய் என வலியுறுத்தினார்கள்.
சொல்லி வைத்ததுபோல் அந்தத் தருணத்தில்தான் இந்த வேலையும் வந்தது. அவர்கள் ஊக்குவிக்க, தனக்கென்று முதல்முறையாக யோசிப்பதாகக்கருதி, வீட்டில் யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் முடிவுஎடுத்தாள். ஏனோ இதுவரையில் ஒரு தனியார் பள்ளியில் காலை மூன்றுமணி நேரம் மட்டும் வேலை செய்ததே அவள் மாமனார் மாமியார் பரிந்துரைத்ததால்தான் என்பதை முகநூல் தோழிகளுக்குச் சொல்லவில்லை, தனக்கும் நினைவிற்கு வரவில்லையோ(?).
பாயலுடன் ஆலோசித்து, குறிப்பாக ஏன் செய்தோம், பின் விளைவுகள் என்ன, இவை இரண்டைப்பற்றி மேலும் பேசச்சொன்னேன். செய்தது சரி என்று நிரூபிக்க முயன்றாள். முகநூல் நண்பர்கள் சொன்னது சரிதான் எனப் பகிர்ந்தாள்.
மெதுவாக அதன் பாதிப்பை ஒவ்வொன்றாக எடுத்து அவளை ஆராயச்சொன்னேன். செய்யமுயன்றதும், இப்படி இந்த முடிவினால் அவள்-ரஞ்சித் உறவுக்கு எந்த அளவிற்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்தாள். அவளை ரஞ்சித்துடன் உரையாடப் பரிந்துரைக்க, அடுத்த பல ஸெஷன்களுக்கு கணவன் மனைவியை ஒன்றாகப் பார்த்தேன்.
பாயல், தன் மாமியாரின் கடைசிக்காலப் பராமரிப்பில் தான் வரைவது, தைப்பது ஒவ்வொன்றாக நிறுத்தியதை ரஞ்சித் மிக வேதனையுடன் அவளுக்கு நினைவூட்டினான். அதைக் கேட்க, பாயல் கண்களிருந்து கண்ணீர் மல்கியது. தன் அம்மா உயிருடன் இருந்தவரை, வாராவாரம் நடந்த வந்த பூஜை, பஜன் நின்று விட்டதைச் சோகத்துடன் பகிர்ந்தார்.
பாயல் வியப்படைந்தாள். தான் ஏன் இப்படி மாறினோம்? அறிந்து கொண்டாள், இவை எல்லாம் மாமியார் நினைவைத் தந்தது. தன்னை வாட்டியது என்றாள். தன் அம்மாவிற்கும் பாயலுக்கும் உள்ள நெருக்கம் தெரிந்ததும் ரஞ்சித் திகைத்தான்.
இந்தத் தற்காலிக மாற்றத்தைப்பற்றிப் பாயல் விடை தேட, பல ஸெஷன்கள் அவளுடன் மட்டும் எனச்சென்றது. இதில் அவளுடைய முகநூல் தொடர், அதன் பாதிப்பை ஆராய்ந்தோம்.
பாயல் பின்னோக்கிப் பார்க்கையில், மாமியார் மறைவின் கசப்பைத் தவிர்க்க அவர்களை நினைவூட்டும் விஷயங்களைத் தான் தவிர்த்ததை உணர்ந்தாள். ஆனால் கசப்பு தொடர்ந்தது. அந்த முகநூல் நட்பின் பிடியில், “நீ உன்னை, உன் வாழ்க்கையை யோசி, மற்றவர்கள் பிறகு” என்பது மையம்கொள்ள, அங்கிருந்து உறவுகளில் மோதல் ஆரம்பமானது. அவர்கள் சொல்வது தன் கோட்பாடு, நெறிமுறைகள், சூழலுக்கு ஏற்றவாறு இருக்கிறதா என்று ஒப்பீடு செய்யவில்லை. “தன்னை” பரிதாபம் கூற, அவளும் அதை ஆமோதித்ததால் பச்சாதாபம் கூடி, தன்நலத்தில் இறங்க, சுயநலத்தில் சிக்கினாள். தன்னுடைய முன்னேற்றத்தில் குடும்பத்தின் பங்கு இருக்கிறது, இருந்ததைப் பார்க்கவில்லையோ?
ஆழமாக யோசிக்கப் பாயலுக்குத் தெளிவானது, நம் நலன் கண்டிப்பாகத் தான் கவனம் செலுத்த வேண்டியவையே, அதற்காக நம்முடன் இருப்போரைப் பலிகொடுத்து இல்லை என்று. அடுத்தபடியாக ஆலோசித்ததில் மேலும் தெளிவு வந்தது -“தன்னை” உறுதிப்படுத்திக் கொள்ள, அந்த அதிகாரப் பதவி தேவைப்பட்டிருந்தது. இதை மேலும் ஆராய, இன்னும் தெளிவுபெற்றாள்: அதிகாரத்தால் முன் இல்லாத பலத்தை அனுபவித்தாள். நாற்பதுபேரை அதிகாரம் செய்வதில் அவளுடைய சொற்கள், பாவனைமாற, முகநூல் நண்பர் உதவ, தன்நலத்தில் இருந்தாள். இந்தக் கோணத்திலிருந்து தன்னைப் பார்க்க, தான் எவ்வாறு மாறினோம் என்பதைத் தெளிவாக அவள் காண, ஒவ்வொன்றையும் குறித்துக்கொள்ளப் பரிந்துரைத்தேன்.
பட்டியல் நீண்டது. பாயல் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டதற்கு அவளுக்கு ஒரு சபாஷ்! ஆராயத்தொடங்கினோம். அறிந்தும் அறியாமலும் உறவுகளை இரண்டாம் பட்சமாகத் தான் வைத்ததை உணர்ந்தாள். இப்படிச் செய்வது தன் இயல்பே இல்லை என்றாள். வேலை இடத்திலும் கறார் பேர்வழி என்று பெயர், பாசம், அன்பு, காட்டவில்லை.
இந்தக் கட்டத்தில் அவளுடைய மாமனார் வரவேண்டும் என்றேன். பெரியவர், பாயலை எந்தக் குறையும் கூறவில்லை. அவர் தனியார் நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜராக ஓய்வு பெற்றவர். அவருக்குப் பாயல் தன்னிடம் ஏதோ மறைப்பதுபோல் தோன்றுவதாகக் கூறினார். மேலும், “எங்களைப் பார்த்துக்கொண்டு டையர்ட் ஆகினதால் தையல், ட்ராயிங் நிறுத்தி விட்டாளோ” என்று வியப்பாகச் சொன்னார். இதை, எங்கள் துறையில், “கேர் கிவர் ஃபடீக்” (care giver fatigue) என்பது. இதைப் பெரியவர் விவரித்தார். “ஒருவரைப் பராமரிக்க, கவனம் அதில்மட்டுமே செலுத்த, தன் ஆசை, வேலைகளைப் பூட்டிவிட்டால் நாளடைவில் தனக்குத்தானே பாவம் என்ற ஃபீலிங் வர வாய்ப்புண்டு”.
பாயல் இதை மேலும் தைரியத்துடன் ஆராய்ந்தாள். ஒன்று தெளிவானது, தன் மாமியாரின் மறைவுக்குப்பிறகு மாமனாரின் உடல்நிலை தடுமாற, அவரின் காருண்ணியம் தன்னை வாட்டும் எனவே விட்டேத்தியாக இருந்தாள்.
இந்த நிலைமையைப்பற்றிப் பேச தன் உள்ளில் ஊர்ந்த அச்சம் அவள் கவனத்திற்குத் தென்பட்டது. எங்கே இவரும் மாமியார்போல் அவஸ்தைப்படுவாரோ என்றும், அவர் மறைவை எவ்வாறு தான் தாங்குவோம் என்று பாயலுக்குச் சஞ்சலம்.
பாயலுக்கு நிஜத்தைச் சந்திக்கவேண்டிய நிலை வந்ததால், மாமனாருடன் திரும்ப ஸெஷ்ன்கள் ஆரம்பமாயின. பாயல் தன் அச்சத்தை அவரிடம் பகிர்ந்தாள். அவரும் அவளுடைய செயல்பாட்டினால் தான் கவலைப்படுவதை விவரித்தார். மேலும் ஆராய, தெளிவு பிறந்தது. வயது, வயதானதால் வரும் இன்னல்கள் வாழ்க்கையின் நிதர்சனம். ஜனனம் மரணம் நாம் ஜீரணிக்க வேண்டியவை. இவைகளைச் சந்தித்து, மீண்டும் பயணிக்கவே உறவு, குடும்பம் என்ற சூழல் உள்ளது.
இதற்கு அஞ்சி பாயல் செய்ததில், தன்னுள் ஊறிக்கிடந்த குற்ற உணர்வைப் பார்க்கத் துணிந்தாள். இவை ஊறியபடி இருந்ததால் அவளுடைய பாசம், கனிவு, அரவணைப்பு மங்கிப்போய், சிடுசிடுப்பு, ரஞ்சித்துடன் மனக்கசப்பு ஆரம்பமானது.
முகநூல், தோழி என எல்லோரையும் தன்னுடைய இந்த நிலைக்குப் பாயல் பொறுப்பாக்கினாள். மறுத்தேன். பாயலைச் சிந்திக்கச்செய்தேன். ஏனென்றால் மற்றவர்கள் தங்களுடைய கருத்தை, அபிப்பிராயங்களைப் பகிர்வார்கள். அவற்றை அலசி, ஆராயவேண்டியது நம் பொறுப்பாகும். நம் சூழலைப் புரிந்து, அதற்கு ஏற்றவாறு உபயோகிக்க வேண்டும். பாயலின் முகநூல் தொடர்புகள் அவளுக்கு ஒவ்வொன்றையும் யோசித்ததால் அவள் தன் சுயயோஜனையை உபயோகிக்கவில்லை. அவர்கள் சிறுதுளிக்கும் முடிவெடுக்க, “மைக்ரோ மேனேஜ்மென்ட்” (micro management) நாளடைவில் சுயசிந்தனை இல்லாத வாழ்க்கையாகப் போனது. உஷார், போகப்போகச் சலித்துவிடும்.
பாயலின் மாமனாரும் தன் நிலையைப் பகிர்ந்தார். அவள் தன்னைப் பார்த்துக்கொள்வதில்லை என்ற தன் கருத்தை முன்வைத்தார். பாயல் ஏனோ தடுமாறுகிறாள், அவளைத் தானாகச் சுதாரித்துக்கொள்ள விட்டதாகச்சொன்னார். இதிலிருந்து ஒன்று தெரிந்தது- கடந்த ஒரு வருட காலம், ஒவ்வொருவருக்கும் தங்களை, தங்களைச் சுற்றி இருப்பவரைப்பற்றி ஏதோ வாட்டியது. ரஞ்சித் கொஞ்சம் வெட்கப்பட்டார், தான் தன் அப்பாவைபோலப் பக்குவமாக நடந்துகொள்ளவில்லை என்று.
இப்படிப்பட்ட சூழலில் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதை மூவரையும் (பாயல், ரஞ்சித், மாமனார்) ஆலோசிக்க வைத்தேன். ரஞ்சித்தும், மாமனாரும் பாயல் மீண்டும் முன்போல் கலகலப்பாக இருப்பதே பிரதானம் என்றார்கள். பாயல் வீட்டை முன்போல் பாசத்துடன் அரவணைக்க வேலை நேரத்தை மாற்றவிரும்பினாள்.
மாமனார் அவளிடம் அவர்கள் இருப்பிடத்தில் இருக்கும் அதே நிறுவனத்தின் ப்ரீ-ஸ்கூலுக்கு செல்லலாம் எனப் பரிந்துரைத்தார். பாயல் தன் மேலதிகாரிகளிடம் இதைப்பற்றிப் பேசினாள். அவர்கள் இதை ஏற்றுக்கொள்ள (அங்கிருந்த மேல் அதிகாரி கல்யாணம் முடிவானதில் ராஜினாமா கடிதம் கொடுத்திருந்தாள்), அவளை அங்கு பொறுப்பு ஆசிரியையாக நியமித்தார்கள். அங்கு மிகச் சிறிய வயதுடைய பிள்ளைகள் கற்றலுக்கு விதவிதமான வழிகளில் சொல்லித் தருவது இவளுக்கு பிடித்தமானது என்பதால், அது பாயலின் உற்சாகத்தையும் தூண்டும் என நானும் நம்பினேன்.
பாயல் சரியாகி வருகிறாளா என்ற கேள்விக்கு நான் கண்ட சில பதில்கள்: மாமனாருக்குப் பின்னி வரும் ஸ்வெட்டர், தன் புடவையில் பூக்களைத் தைத்தது, வேலை செய்வோரிடம் அன்பு கலந்த அதிகாரம். மேலும் படிக்க வீட்டில் ஊக்குவிக்க, எங்கள் நிர்வாகத்தின் ஆசிரியர் படிப்பிற்குச் சேர்ந்தாள்!