நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.
- கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018 .
- இட்லி மகிமை – ஏப்ரல் 2018
- தோசை ஒரு தொடர்கதை – மே 2018
- அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
- ரசமாயம் – ஜூலை 2018
- போளி புராணம் – ஆகஸ்ட் 2018
- அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
- கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018
- கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
- சேவை செய்வோம் – டிசம்பர் 2018
- பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
- பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
- வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019
பாயசப் பாமாலை
பாயசம் ! பாயசம் !
பாசத்தைப்போலே பாயசம் !
பாயசம் ! பாயசம் !
பலருக்கும் பிடித்தது பாயசம் !
இலைபோட்டு விருந்து சாப்பாடு என்றால்
முதலில் வருவது பாயசம்தானே !
மாப்பிள்ளைப் பொண்ணு வீட்டுக்கு வந்தால்
பரிமாறுவதும் பாயசம்தானே !
சப்புக் கொட்டி சப்புக் கொட்டி
சாப்பிடுவது நல்ல பாயசம்தானே !
சிறியவர் பெரியவர் எவர் என்றாலும்
ஒரு கை பார்ப்பதும் பாயசம்தானே !
சேமியாவிலே பாயசம் வைத்தால்
சுவைத்து சுவைத்து சாப்பிடுவோம் நாம் !
ஜவ்வரிசியில் பாயசம் வைத்தால்
ஜல்தி ஜல்தி என சாப்பிடுவோம் நாம் !
வெல்லப் பாயசம் என்றால் போதும்
வேறு எதுவும் தேவை எனக்கில்லை !
கடலைப் பருப்பு பாயசம் என்றால்
கட கடவென்று குடித்திடுவேன் நான் !
பால் பாயசம் என்றால் போதும்
பல்லில்லாத பாட்டியும் ரசிப்பாள் !
பாதாம் பருப்பை அரைத்து வைத்தால்
பணக்காரர்களின் பாயசம் அதுவே !
சாதம் வைத்தும் பாயசம் செய்வர்
சோடை போகாத சுவை அதில் உண்டு !
எது வைத்தாலும் தோற்றுப் போகும்
இளநீர்ப் பாயசம் என்றும் வெல்லும் !
தாராளமாக திராட்சை போட்டால்
திகட்டாதெனக்கு பாயசம் !
முந்திரிப் பருப்பை வறுத்துப் போட்டால்
சுவையில் முந்தும் பாயசம் !
சர்க்கரை எனக்கு அளவாய் வேண்டும்
குடிக்கத் தோன்றும் பாயசம் !
அன்னையின் கையின் அன்பு சேர்ந்தால்
அல்டிமேட் அந்தப் பாயசம் !
பாயசம் ! பாயசம் !
பாசத்தைப்போலே பாயசம் !
பாயசம் ! பாயசம் !
பலருக்கும் பிடித்தது பாயசம் !