சாலையில புளியமரம்
ஜமீந்தாரு வச்ச மரம்
ஏழைகளைக் காக்கும் மரம்
எல்லோர்க்கும் உதவும் மரம்
வேம்பு எட்டாம் வகுப்பு படிக்கும் நாளிலிருந்தே பகுதி நேர வேலை செய்யத்தொடங்கினான். சில நாட்கள் ஒரு காப்பிக்கொட்டை அரவை நிலையம். ஸ்டவ் பழுது பார்க்கும் கடை, சைக்கிள் வாடகை மற்றும் பழுது பார்க்கும் கடை என்று குறைந்த வருவாயானாலும் சம்பாதிக்கத் தொடங்கினான், படிப்பிலும் சோடைபோனவனல்ல. நல்ல மதிப்பெண்களுடன் பள்ளி இறுதி வகுப்புத் தேறினான். கல்லூரியிலும் உதவித்தொகை கிடைத்தது. அது திருப்பிச் செலுத்தவேண்டிய வட்டியில்லாக் கடன் உதவித்தொகை. அதுவும் ஆசிரியப் பணியில் சேர்ந்தால் தள்ளுபடி ஆகிவிடும். (இப்போது அந்த நடைமுறை உள்ளதா என்று தெரியவில்லை)
மேலும் கல்லூரிக்கு 12 கிலோ மீட்டர் போகவேண்டும். அவன் வேலை செய்த சைக்கிள் வாடகைக் கடையிலிருந்து ஒரு சைக்கிளில் கல்லூரி போவான். சைக்கிள் கடை முதலாளி அந்தச் சலுகையை அவனுக்கு அளித்திருந்தார்.
வீட்டில் மாமனுக்கு வேண்டியதைப் பார்த்துக்கொள்வது, சைக்கிள்கடை பகுதிநேர வேலை, கல்லூரிப் படிப்பு என்று எப்போதும் உழைப்புதான். முகத்தில் எரிச்சல் சிடுசிடுப்பு எப்போதும் கிடையாது. பள்ளி மாணவர்களின் கணிதம் அல்லது ஆங்கிலம் சம்பந்தமாக எந்த சந்தேகத்தையும் தீர்த்து வைப்பான்.
கோவில் பண்டிகை, பள்ளிக்கூட விழாக்கள், பொதுத் துப்புரவுப் பணிகள், ஊரில் நடக்கும் எந்தப் பொதுப்பணியிலும் வேம்புவின் பங்களிப்பு சிறிதாவது இருக்கும். பலர் செய்யத் தயங்கும் விஷயங்களிலும் அனாயாசமாக ஈடுபடுவான். இறந்தவர்களுக்காக மூங்கில் தென்னங்கீற்று, கயிறு ஆகியவைகொண்டு ‘பாடை’ தயாரிக்கும் நாகசாமித் தாத்தாவிற்கு இவன்தான் உதவியாளன். நாகசாமித் தாத்தாவிற்கு உடல்நலம் சரியில்லையென்றால், முழு வேலையையும் இவன்தான் செய்வான். தாத்தா மேற்பார்வை பார்ப்பார். இப்போதெல்லாம் இதுபோன்ற வேலைகளுக்கு ‘கான்டிராக்ட்’ வந்துவிட்டது. அப்போது இவர்கள் எந்த தொகையும் வசூலிப்பதில்லை. எந்தத் தோப்பிலிருந்து பச்சை தென்னங்கீற்றுகள் எடுத்தாலோ மூங்கில் வெட்டிக்கொண்டாலோ யாரும் ஆட்சேபிப்பதில்லை.
வேம்புபற்றிய பேச்சு வரும்போதெல்லாம் எல்லோரும் ‘அவன் ரொம்ப நல்லவன், பாவம்…” என்பார்கள். (கு)தர்க்கமாகக் கேள்வி ஒன்று கேட்கத் தோன்றும். நல்லவனாக இருப்பது புண்ணியம் அல்லவோ ? பாவம் எப்படி ஆகும்? நான் எப்போது யாரைக் கேள்வி கேட்டிருக்கிறேன்?)?
பட்டப் படிப்பு படித்தான். ஆசிரியர் பணிக்கான படிப்பும் படித்து எங்கள் ஊரில் இருந்த ஒரு தனியார் பள்ளியிலேயே ஆசிரியராகச் சேர்ந்துவிட்டான். அரசுப் பள்ளியில் சேர்வதைத்தான் அந்தக் காலத்தில் எல்லோரும் விரும்புவார்கள். இவன் உள்ளூரிலேயே வேலைக்குச் சேர்ந்ததற்கு தன்னுடன் இருந்த மாமனைக் காரணமாகச் சொல்வான். ஏன், மாமனுடனேயே இவன் வெளியூர்க்குச் செல்லலாமே? வெளியூர் போகாததற்கு ஊர் மக்களிடம் இருந்த நன்றி உணர்ச்சிதான் காரணமாக இருக்கவேண்டும் என்று தோன்றியது. தான் பெற்ற உதவிகளுக்குப் பதிலாக பலமடங்கு ஊருக்குத் திருப்பித் தரவேண்டும் என்பது அவனது அறிவிக்கப்படாத கொள்கை என்று தோன்றிற்று.
எப்போது ஊருக்குச் சென்றாலும் வேம்புவுடன் சில மணி நேரமாவது கழிக்காமல் நான் ஊரைவிட்டுக் கிளம்பியதில்லை. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் வேலை பார்த்த நான், உள்ளூரில் இருந்து பயணம்செய்து வேலைபார்த்த வருடங்கள் மிகக் குறைவு. அப்போதெல்லாம் நான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வேம்புவின் கூடவே இருப்பேன்.
எனக்கு வேலை கிடைத்ததைக் கேட்டபோது வேம்பு சொன்னது இன்றும் நினைவில் இருக்கிறது. “பாஸ்..(என்னை எப்போதும் அப்படித்தான் அழைப்பான்.) நீங்க பாசாயிட்டிங்க. ஸ்கூலிலேயும் சரி .. வீட்டிலேயும் சரி.. உங்களை ஒரு பொருட்டா யாரும் மதிச்சதில்லை என்று எனக்குத் தெரியும். ஆனாலும், நீங்க ஒருமாதிரியா செட்டிலாயிடுவீங்கன்னு உங்க வீட்டிலே பெருமூச்சு விடுவாங்க. இதப் பார்றா.. இவனுக்கு அடிச்ச அதிர்ஷ்டத்தை என்று உங்கள் கூட்டாளிகள் பொறாமைப்படலாம். நீ நீயாகவே இரு. உனது வெற்றி எது என்பதை நீயே புரிந்துகொள். மனமார்ந்த வாழ்த்துக்கள்.”
எனக்கென்னவோ அவன் சொன்னது ஓர் மேடைப்பேச்சு போலத்தான் அன்றுபட்டது. திரும்பவும் நினைத்துப் பார்க்கையில் கொஞ்சம் கொஞ்சம் புரிகிறது. நான் அதுபோல நடந்துகொண்டேனா என்பது ஒரு கேள்விக்குறிதான்.
வேம்புவின் வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நபரைப்பற்றியும் சொல்லவேண்டும்.
ஊரில் எங்கள் தெருவில் இருந்த, அப்பா அம்மா வைத்த பெயரே என்னவென்று தெரியாமல் எல்லோராலும் அய்த்தான் மதனி என்றோ கண்ணாடி மதனி என்றோ அழைக்கப்பட்டு வந்த பெண்மணிதான் அது.
சிறுவர், பெரியவர் என்ற வயது வித்தியாசமில்லாமல் எல்லோருக்கும் அவர் மதனிதான், அவரைவிடக் குறைந்து இருபது வருடமாவது மூத்தவர்களான பால்காரப் பாட்டி, சிவன் கோவில் அர்ச்சகர் கூட அவரை மதனி என்றுதான் கூப்பிடுவார்கள்.
எனக்கு நினைவு தெரிந்த காலத்திலேயே ஐம்பது வயதினைக் கடந்தவர் அவர். ஒரு பழைய வீடு அவருடையது. மராமத்து பார்த்துப் பல மாமாங்கம் ஆகிவிட்ட வீடு அது. முன்னால் திண்ணை ஒட்டி சிறு அறைகள் இருந்தன, அதில் யாரேனும் சொற்ப வாடகைக்குக் குடியிருப்பார்கள்.
பள்ளி நாட்களிலேயே அன்னையை இழந்தவர். அப்போது இவருக்குப் பத்து வயதாம். வேறு உடன் பிறப்புகள் இல்லை. வழக்கத்திற்கு மாறாக, தந்தை மறுமணம் செய்துகொள்ளவில்லை.
குழந்தையாக இருந்த காலத்தில் மிக வசீகரமாக இருப்பாராம். ஊரில் இருந்த கிருஷ்ணன் கோவிலில் ஒரு வாரம் உற்சவம் நடக்கும். அதில் ஒருநாள் ஒரு குழந்தைக்குக் கிருஷ்ணர் வேடமிட்டு, வீடு வீடாக அழைத்துப் போவார்கள். மதனியின் மூன்று வயது முதல் ஏழு வயதுவரை அந்த வேஷத்திற்கு இவர்தானாம்.
அன்னையை இழந்த வருடம் அந்த இளம் வயதிலே வெறித்து வெறித்துப் பார்த்துக்கொண்டு எதிலும் ஆர்வமில்லாமல் இருந்திருக்கிறார். தந்தை மறுமணம் செய்துகொள்ளாததற்கு இது காரணமாக இருந்திருக்கலாம்.
அந்தச் சமயத்தில் ஒரு நாடகக்குழு ஊருக்கு வந்தது. அதில் ஒரு பால முருகனாக ஒரு சிறுவன் நடித்துவந்தான். நாடகத்தன்று காலையில் அவனுக்குக் கடும் ஜுரம். குழப்பத்தில் இருந்த நாடகக் குழுவில் யாரோ மதனியைப் பார்த்திருக்கிறார்கள். இந்தப் பெண்ணை நடிக்க வைக்கலாமா என்று கேட்டிருக்கிறார்கள்.
மதனியின் அப்பாவிற்கு அரை மனது. நாடகத்தில் அம்மா வேடம்போடும் நடிகை இவளை நடிக்க வைப்பது என் பொறுப்பு என்று கூறி அணைத்துக்கொண்டாராம். மதனியின் முகத்தில் ஒரு மகிழ்ச்சியைக் கண்டு தந்தை கண்ணீர் ததும்ப அனுமதி கொடுத்தாராம்.
மேடையில் தோன்றிய அந்த ஒரு நிமிடத்தை மதனி பலமுறை பலரிடம் நினைவு கூர்ந்திருக்கிறார்..
அது ஒரு சமூக நாடகம்தான். ஒரு காட்சியில் கதாநாயகிக்கு முருகன் அருள் புரிவதாக ஒரு கனவுக் காட்சி. அதில் முருகன் வேடமணிந்த சிறுவன் அல்லது சிறுமி ஆகாயத்தில் இருந்து தோன்றுவதுபோலவும் சிலவினாடிகள் காட்சி அளித்து மறைவதுபோலவும் காட்சி அமைத்து இருந்தார்களாம்.
இதுபோன்ற காட்சிகளில் முருகனை நிற்க வைத்து திரை போட்டுவிடுவார்கள். பார்க்கும்போது திரைஎன்று தெரியாமல் மங்கலாக வெளிச்சம் அமைத்திருப்பார்கள். மேடை முழுவதும் ஒளியைக் குறைத்துவிட்டு சட்டென்று திரையை இழுத்துவிடுவார்கள்.
இந்தக் குழு வேறு முயற்சி செய்திருந்தார்கள். மரத்தில் ஒரு அமைப்பு செய்து அந்த நடிகரை அமரவைத்து ஊஞ்சல்போல் மேடையின் ஒரு பக்கத்தில் சற்று உயரத்திலிருந்து கொண்டுவந்து, சில நொடிகள் நடுவில் நிறுத்தி வசனம் முடிந்தவுடன் மேடையின் மறு பக்கத்திற்கு இழுத்துவிட்டார்களாம். இந்தப் புதுமை பெரும் வரவேற்புப் பெற்றதாம். .
கதாநாயகிக்கு முருகன் அருள் கிடைத்ததோ இல்லையோ, மதனிக்கு வாழ்க்கையில் பிடிப்புவர இது காரணமாக இருந்தது என்று தோன்றுகிறது.
சில ஆண்டுகளிலேயே சமையல் செய்யவும் தொடங்கிவிட்டார். பதிமூன்று வயதிலேயே கரண்டி எடுத்துவிட்டேன் என்று சொல்வார்.
பதினெட்டு வயதிலேயே திருமணமும் ஆயிற்று. புகுந்த வீடு ஊருக்கு அருகில்தான். திருமணமாகிப் போனவர் சில நாட்களில் பிறந்த வீடு வந்திருக்கிறார். கணவர் உடன் வரவில்லை, வந்த அன்றைக்கு மூன்றாவது நாள், கணவரின் சித்தப்பா வந்திருக்கிறார். மதனியின் கணவரைக் காணவில்லை என்று தேடிக்கொண்டு வந்திருக்கிறார். கணவர் திரும்பி வரும்வரை புகுந்தவீடு போகவேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். கணவர் திரும்பவில்லை.‘போது விடிவதற்குள் திரும்பி இங்கே வந்துவிட்டேன்’ என்று குறிப்பிடுவார் மதனி.
தந்தை இறந்தபின் கிராமத்தில் இருந்த விவசாய நிலத்தை விற்றுவிட்டார். கணவரின் பெற்றோர் ஒரு ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள். தங்கள் வீட்டினைக் காணாமல் போன தங்கள் ஒரே மகனின் மனைவியான மதனிக்கு ஒரு பத்திரம் மூலம் எழுதிவைத்திருந்தார்கள். தங்கள் வாழ்நாள்வரை தங்கள் உரிமையை வைத்துக்கொண்டு பின்னர் மதனிக்குச் சேரவேண்டும் என்று ஒரு நிபந்தனை. தானம் என்னும் வகைப் பத்திரம் அது.
அந்த வீட்டினை அப்போது நிலவிய விலைக்கே அடுத்த வீட்டுக்காரர் வாங்கிக்கொண்டார். தவிர மதனியின் தந்தைக்குக் கிராமத்தில் கொஞ்சம் சாகுபடி நிலம் இருந்தது. அதுவும் விற்கப்பட்டது. எல்லாம் அஞ்சலக வங்கியில் டெபாசிட் செய்திருந்தார் மதனி. அதில் வரும் வட்டியும், வீட்டிலிருந்து கிடைக்கும் வாடகையும் மதனிக்கு வருமானம். மருத்துவச் செலவு என்று பெரிதும் எதுவும் கிடையாது. ஆகையால் ‘கடவுள் புண்ணியத்தில்’ (மதனியின் வார்த்தைகளில்) ஏதோ வண்டி ஓடிக்கொண்டிருந்தது.
அன்னையை இழந்த சோகத்திலிருந்து மீண்டுவந்த மதனி இந்தச் சோகத்திலிருந்தும் மீண்டார் என்றுதான் சொல்லவேண்டும். தன் வீட்டில் குடியிருந்தவர்களைத் தன் சொந்தக் குடும்பமாகவே நடத்திவந்தார். மற்றவர்களின் சந்தோஷங்களைத் தனது சந்தோஷமாகக் கொண்டாடிய வேறு யாரையும் நான் பார்த்ததில்லை. வீட்டைக் காலி செய்யவேண்டி வரும்போது குடியிருந்தவர்கள் கனத்த இதயத்தோடுதான் போவார்கள்.
மதனி இதனையும் வித்தியாசமாகப் பார்ப்பார். ஓர் குடும்பம் போனாலும் அடுத்து குடிவருபவர்களால் தனது குடும்பம் மேலும் பெருகுகிறது என்பார். நெருங்கிய, ஏன் எட்டத்து சொந்தம் என்று சொல்லும்படியாக யாருமில்லாத மதனிக்குப் பழகும் யாவரையும் சொந்தம் போலவே பாவிக்கும் பரந்த மனம் படைத்திருந்தார்.
அந்த வீட்டின் மனையில் ஒரு பெரிய புளியமரம் உண்டு. வருடம் ஒருமுறை புளியம்பழம் எடுப்பார்கள். வழக்கமாக ஏலம் விட்டு பணமாகத்தான் சொந்தக்காரர் வாங்கிக்கொள்வார். ஆனால் மதனி ஆள்வைத்து புளி சேகரித்து, அதில் ஐந்தில் ஒரு பகுதியைக் கூலியாகக் கொடுத்துவிடுவார். மீதமுள்ளவற்றைத் தெரிந்தவர்கள் எல்லோருக்கும் இலவசமாக கொடுத்துவிடுவார்.
மாதம் ஒருநாள் தபால் அலுவலகம் சென்று பணம் எடுக்கப் போகவேண்டும். அதற்குத் துணையாக யாரேனும் தேவைப்படுவார்கள். நான்கூட சிலமுறை துணைக்குப் போயிருக்கிறேன். இது தவிர பிறர் உதவி எதுவும் அவர் எதிர்பார்த்ததில்லை.
(தொடரும்)