எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்

Image result for சூரியதேவன் விஷ்வகர்மாவின் மகள்

ஸந்த்யாவின் முகத்தில் தெரிந்த கோபாக்னியைக்  கண்டு பயந்த சூரியதேவன் அவள் வார்த்தைகளால்  தெளித்த அக்னித் திராவகத்தின் சூட்டுக்கோல்களைப் பொறுக்கமாட்டாமல் தவித்தான். சூரியனின் நெஞ்சையே எரிக்க வைத்த எரி அம்புகள் அல்லவா அந்த வார்த்தைகள். தான் அரை மயக்கத்தில் சாந்துக்குளியலில் இருந்தபோது விஷ்வகர்மா தன்னிடம் உதிக்கப்போகும் மாபெரும் மஹாபிரும்மருத்ரனுக்காக மூன்று உயிர் என்ன  மூன்று கோடி உயிர்களை அழிக்கலாம் என்றவகையில் தன்னிடம் பேசி அதற்கு அனுமதியும் வாங்கியது எல்லாம் கனவோ என்று இருந்தான். ஆனால் இப்போது ஸந்த்யா கூறும்போதுதான் அவற்றின் முழு அர்த்தமே அவனுக்குப் புரிந்தது.

” என்ன! நான் மூன்று குழந்தைகளுக்குத் தந்தையா?” என்று மகிழ்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் சூரியதேவன் கூறியதைக் கேட்ட ஸந்த்யா தற்போது ஆச்சரியத்தின் வலையில் விழுந்தாள். “தந்தையாகப் போகும் சேதி அவனுக்கு தெரியாதா? அதை நான் இப்படியா சொல்லுவது ?” என்ற எண்ணம் அவளை நிலைகுலையச் செய்தது.

அவள் கண்ணில் இருந்த கோபம் மறைந்தது. காதலும் ஆசையும் வெட்கமும் ஒன்றோடொன்று போட்டிபோட முடியாமல் தவித்தன.

சூரியதேவன் அருகில் வந்து ஸந்த்யாவை இறுகத் தழுவிக்கொண்டான். ஸந்த்யாவும் அவன் தோள்களைப்பற்றி  அவன் பரந்த மார்பில் முகம் புதைத்து ஆறுதல் அடைந்துகொண்டிருந்தாள். தனக்கும் சூரியதேவனுக்கும் இடையே தந்தை ஒரு மாயவலையைப் பின்ன முயற்சித்திருக்கிறார் என்பதை அவள் நன்கு புரிந்துகொண்டாள்.

சூரியதேவனோ அவள் சொன்ன வார்த்தைகளின் மயக்கத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை. மூன்று குழந்தைகள், மூன்று குழந்தைகள் என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே அவள் நெற்றியிலும் கன்னத்திலும் மாறிமாறி முத்தமிட்டுக் கொண்டிருந்தான். மெதுவாக அவளைத் திருப்பி அவள் கழுத்தில் முத்தமிட்டுக்கொண்டே அவளது ஆலிலை வயிற்றை மெல்லத் தடவிக்கொடுத்தான்.

பிறகு மெல்ல அவளைத் தூக்கிக்கொண்டு அன்னப்பறவையை அணைத்து எடுத்துச் செல்வதுபோல அவளுக்குக் கொஞ்சமும் வலிக்காத அளவில் தன்னுடைய பஞ்சணையில் படுக்கவைத்தான். அவள் வெட்கத்தில் பஞ்சணையில் நெளிந்தது, இளமயில் ஒன்று தன் தோகையை விரித்துவிரித்து மூடுவதுபோல் இருந்தது. சூரியதேவனும் அவள் அருகே அமர்ந்து அவள் மெல்லிய கைகளைத் தன் கைகளில் சிறைப்படுத்தி ஆவல் ததும்பும் விழிகளால்

” மூன்று குழந்தைகளா? நமக்கா? எப்படி?எப்படி? எங்கு?  தடாகத்திலா?  காந்த அறையிலா?” என்று கோர்வையாகக் கேட்கத் தெரியாமல் தடுமாறிக்கொண்டே கேட்டான்.

காந்த அறையில்தான்  நிகழ்ந்திருக்கவேண்டும். தடாகத்தில் உங்களிடம் வெப்பம் அளவிற்கு அதிகமாக இருந்ததால் என் உடலே உருகத் தொடங்கிவிட்டதே! ஆனால் காந்த சிகித்சைக்குப்பிறகு  நாம் அளவிற்குமீறி அத்துமீறிவிட்டோம். அதற்கு இன்னொரு முக்கியக் காரணமும் இருந்திருக்கிறது. நம் மீது ராகுவின் பார்வையும்பட்டிருக்கிறது.”

ராகுவின் பெயரைக் கேட்டதும் சூரியதேவன் திடுக்கிட்டு எழுந்தான்.

” ராகு ! என்ன தைரியம் அவனுக்கு! அவனை அந்த ஸ்வர்ணபானுவை என்றைக்கு அமிர்தத்தைத் திருடினானோ அன்றே கொன்றிருக்கவேண்டும். “

அதைத்தானே மாகாவிஷ்ணுவும் செய்தார். ஆனால் அமிர்தம் உண்டதால் அவனை யாரும் அழிக்க முடியாது. சிவபெருமானும் ராகுவையும் கேதுவையும் படைத்து அழிவில்லாதவர்களாக வரம் கொடுத்துவிட்டாரே!”

“அதுமட்டுமல்லாமல் என்னையும் வருடத்தில் ஒருமுறை அவன் ஆதிக்கத்தில் கட்டுண்டு இருக்கும்படியல்லவா செய்துவிட்டார்! இனி என்னால் பொறுக்கமுடியாது. அவனை அழித்தே தீருவேன்”

” சினத்தை விடுங்கள்! அவன் நமக்கு பெரிய உதவி புரிந்திருக்கிறான்.”

” ராகுவா? நமக்கா? நிச்சயம் இருக்கமுடியாது. அதில் ஏதாவது வஞ்சனை இருக்கும்”

” நீங்கள் இம்முறை ராகுவை மன்னிக்கத்தான் வேண்டும். அவனின் பார்வை காமத்தைத் தூண்டும் என்பது அனைவரும் அறிந்ததே! அவன் திருஷ்டி உங்கள்மீது விழுந்ததால்தான் உங்கள் கண்ணில்  தடாகத்தில் குளித்துக்கொண்டிருக்கும் என்மீது உங்கள்  காதல் பார்வை விழுந்தது. மேலும் காந்த அறையிலும் அவன் பார்வை நம்மீது பட்டதால் நமக்குள் காதல் தீ பற்றிஎரிந்தது. நாமும் கலந்தோம். மூன்று குழந்தைகள் என் வயிற்றில் உருவாகின. என் தந்தை குழந்தைகள் ஜனித்ததை அறிந்து அவற்றை அழிக்க மருந்தினைக் கொடுத்து என் தாய் மூலமே எங்களுக்குத் தெரியாமல் புகட்டவும் ஏற்பாடு செய்தார். அதைத் தடுத்தது யார் தெரியுமா? “

“யார்?”

“ராகுதான்.”

” உன் தந்தை நம் குழந்தைகளைக் கொல்லமுயற்சிக்கிறார். என் எதிரி அதைத் தடுத்துக் காப்பாற்றுகிறான்.  விந்தையிலும் விந்தை”

” அதைவிட நீங்களும் என் தந்தையுடன் சேர்ந்து குழந்தைகளைக் கொல்ல முயற்சிக்கிறீர்கள் என்றும் எங்களை  நம்ப வைத்தான். அதனால்தான் உங்களைத் தேடிக்கொண்டு உங்கள்  லோகத்திற்கே  வந்தேன். உங்களைப் பார்த்த மாத்திரத்திலே தெரிந்துவிட்டது உங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று”

” என் பிஞ்சுச் செல்வங்களை நானே அழிக்க முற்படுவேனா? இதற்குக் காரணமான விஷ்வகர்மாவைத் தண்டிக்காமல் இருக்கமுடியாது”

” உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். என்ன இருந்தாலும் அவர் என்னைப் பெற்ற தந்தை. அவரும் மஹாபிரும்மருத்ரன் அவதரிக்கவேண்டும் என்பதற்காகவே இதைச் செய்தார். அவரை விட்டுவிடுங்கள். நானும் அவரை மறந்துவிட்டு உங்கள் மனைவியாக இந்த நொடியிலிருந்து வாழச் சம்மதிக்கிறேன்.”

” ஆஹா! இது போதும் ஸந்த்யா! இது போதும்.! நீ என்னுடன் இக்கணத்திலிருந்து இருப்பதாக சம்மதித்தால் விஷ்வகர்மாவை என்ன, ராகுவையும் சேர்த்து மன்னிக்கிறேன். மும்மூர்த்திகளின் ஆசிகளைப் பெற்று நம் இல்வாழ்வைக் களிப்புடன் துவங்குவோம். வா! என் இதய ராணியே!”

ஸந்த்யாவை அணைத்தபடியே அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்றான்.

ஸந்த்யாவுடன் அவளது நிழலும் கூடவேசென்றது. அதனால் விளையப்போகும் ஆபத்துக்களைப்பற்றி அந்தத் தெய்வீகக் காதலர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.

காமம் அவர்கள் கண்களை மூடி இருந்தது.

(தொடரும்)

இரண்டாவ்து பகுதி

Image result for சாலமன் பாப்பையா

எமபுரிப் பட்டணத்தின்  அழகிய தமிழ் உள்ளங்களே! பேசுவதற்கென்றே பிறந்த என் சக தோழர்களே! வழக்கமான பட்டி மன்றத்தில் ஒரு தலைப்பைக் கொடுத்து ஓர் அணி அதை ஒட்டியும் மற்றோர் அணி அதை வெட்டியும் பேசுவது மரபு. உதாரணாமாக ‘தமிழ் இனி மெல்லச் சாகும்’ என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டு ஓர் அணியை ‘ஆம், தமிழ் இனி சாகும்’ என்று ஒட்டிப் பேசவிட்டு, மற்ற அணியை ‘இல்லை,தமிழ் இனி சாகாது’ என்று வெட்டிப் பேசுவது அந்தக்கால பட்டிமன்ற மரபு.

பின்னால் தொலைக்காட்சிகளில் பட்டிமன்றம் வந்தபோது தலைப்பிலேயே இரு அணிகளின்  கருத்து வெளிப்படையாகத் தெரியும்.  அதாவது ‘கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா?’ என்று தலைப்பு இருக்கும். மக்களுக்கும் நன்றாகப் புரியும். அப்படித்தான் நானும் நினைத்துக்கொண்டிருந்தேன்.

ஒரு பெண்கள் கல்லூரியில் இந்தத் தலைப்பை வைக்கலாம் என்று பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு  அம்மையார் எழுந்து ‘கண்ணகி – மாதவி புரிகிறது . அதென்ன கற்பு? இரண்டு பேரும் கறுப்பா? என்று கேட்டார். அப்படியே ஆடிப்போய்விட்டேன். ‘அவர்கள் இருவரும் கருப்பு இல்லையம்மா! நான்தான் கறுப்பு’ என்று சொல்லிவிட்டு அந்தத் திசைக்கே கும்பிடு போட்டுவிட்டு ஓடி வந்துவிட்டேன்.

ஆக, பட்டிமன்றத்தில் தலைப்பை வைக்கும்போதே வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பதுபோல ‘இதுவா அதுவா’ என்று சரியாகக் கோடிட்டுக் காட்டவேண்டும். ஒரு சமயம் ‘நிம்மதியான வாழ்வைத் தருவது ‘இல்லறமே/துறவறமே’ என்று தலைப்புக் கொடுத்திருந்தார்கள். வேடிக்கை என்னவென்றால் இல்லறம் சார்பில் பேச இருந்தவர்கள் மூன்று பேரும் சாமியார்கள். துறவறம் என்று பேச வந்தவர்கள் மூவரும் ரெண்டு பெண்டாட்டிக்காரர்கள். துறவறம் பெண்ணுக்குச் செய்யும் அநீதி என்று ஒருவர் வாதிட, இல்லறம் ஆணிற்குச் செய்யும் அநீதி என்று மற்றவர் வாதிட தீர்ப்பு சொல்வது மிகவும் கடினமாகிவிட்டது. சரி, புதுமையான தீர்ப்பைச் சொல்லுவோமே என்று நிம்மதியான வாழ்விற்கு இளமையில் இல்லறம் என்றும் முதுமையில் துறவறம் என்றும் முடிவு கூறி விடைபெற்றேன். வீட்டுக்கு வந்து பார்த்தால் என் மனைவி எனக்கு இரண்டு காவி வேட்டியை வைத்துவிட்டுப் பிறந்த வீட்டுக்குப் போய்விட்டாள்.

அது பட்டி மன்றத்தில். இது விவாத மேடை. மூன்று தலைப்புக்கள் இருக்கின்றன. மூன்று அணிகளும் இருக்கின்றன. 

“எது சிறந்தது? ஆக்கலா? காத்தலா? அழித்தலா? ” என்பதுதான். 

இங்கு பிரும்மபுரி, வைகுந்தபுரி, கைலாசபுரி மூன்று உலக மக்களும் திரண்டு வந்திருக்கின்றனர். 

ஆக்கல் சார்பில் பாரதி பாஸ்கர் அணி 

காத்தல் சார்பில் ராஜா  அணி 

அழித்தல்  சார்பில் திண்டுக்கல் லியோனி  அணி 

இங்கு பேச வந்திருப்பவர்களை அறிமுகம் செய்யுமுன் இந்தத் தலைப்பைப்பற்றி நாம் கொஞ்சம்  சிந்திக்கவேண்டியிருக்கிறது.

அந்தக் காலத்தில் ஏ பி நாகராஜன் ஐயா அவர்கள் கல்வியா? செல்வமா? வீரமா? எது சிறந்தது ? என்ற கேள்வியைக்கேட்டு சரஸ்வதி சபதம் என்று ஒருபடம் எடுத்தார். அதில் கலைமகளும், அலைமகளும், மலைமகளும் தங்கள் கட்சி ஜெயிக்கவேண்டும் என்று பூலோகம் வந்து புலவனுக்கும், அரசிக்கும், தளபதிக்கும் இடையே பகையை உண்டாக்கி முடிவில் நாடு இவர்கள் சண்டையால்  அழியும் நிலை வரும்போது மும்மூர்த்திகளும் வந்து மூன்றும் சமம் இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் கிடையாது என்று சொல்லி சுபம் போடுவார்கள். 

அதைப்போன்ற தலைப்புதான் இன்றைக்கும் நம் முன் நிற்கிறது. ஆக்கல், காத்தல்,அழித்தல் மூன்றும் மிகமிக முக்கியத் தொழில்கள்! ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை. பிரும்மா ஆக்கலுக்கும், விஷ்ணு காத்தலுக்கும் சிவன் அழித்தலுக்கும் காரணகர்த்தாக்கள் என்பது அனைவரும் அறிந்ததே. 

ஆக இம்மூன்று தொழில்கள் புரிகின்ற மும்மூர்த்திகளில் யார் சிறந்தவர் என்பது இந்த விவாதமேடையின் விவாதப்பொருள் அல்ல. மூன்று தொழில்களில் எது தலையானது, முக்கியமானது, சிறந்தது என்று சீர்தூக்கிப் பார்ப்பதே இன்றைய விவாதத்தின் பணியாகும். பேசுபவர்களும் கேட்பவர்களும் இதை மனதில் வைத்துக்கொண்டு நிகழ்ச்சியில் பங்குபெறவேண்டும். ” 

Related image

சாலமன் பாப்பையா மேலும் பேசத்தொடங்கும்போது  அவையில் சலசலப்பு ஏற்பட்டது. பிரும்மா விஷ்ணு சிவன் மூவரும் சேர்ந்து முன் வரிசையில் வந்து அமர அவையின் கரகோஷம் நிற்பதற்கு பத்து நிமிடங்கள் ஆயின. அவர்களுக்குப் பின்வரிசையில் மாறுவேடத்தில் இருந்த முப்பெரும் தேவிகளும் தங்கள் இருக்கையில் நிலை கொள்ளாமல் தவித்தனர். 

எமி ஆச்சரியப்பட நாரதர் முகத்தில் புன்னகை அரும்பியது. 

(தொடரும்) 

 

 

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.