சுதந்திரக் கதை சொல்லும் அந்தமான் செல்லுலார் ஜெயில்!
அடர்த்தியான காடுகளும், எழில்மிகு கடற்கரையும் கொண்ட அழகிய அந்தமான் நிகோபார் தீவுகளின் தலை நகரம் போர்ட் ப்ளேர் –
இந்தியாவின் பகுதியான அந்தமான்,
சுமார் ஆயிரம் மைல்களுக்கு அப்பால், காலாபானி (INFAMOUS WATER) என்றழைக்கப்பட்ட கடல் சூழ்ந்த தீவு என்பதோ,
நிர்வாணமாகச் சுற்றித் திரிந்த ‘நெக்ரிடோ’ ஆதிவாசிகள்,
தீவுக்கு வரும் புதிய மனிதர்களின் மார்புகளைக் கருணையின்றித் துளைக்கும் அம்புகளை ஏவிவிடும் மனிதர்களின் இருப்பிடம் என்பதோ,
தரை தட்டும் கப்பல்களில் பயணிகள், கோரமான முறையில் தங்கள் முடிவுகளை எதிர்கொண்டார்கள் என்பதையோ,
இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கம், ஆயிரக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களைக் கொடுமையான முறையில் தண்டிப்பதற்கான ஜெயில்களைக் கட்டியிருந்தனர் என்பதனையோ,
வீர சவார்கார், நேதாஜி போன்றவர்களின் தியாகங்களையோ –
இன்று கூடைத் தொப்பியும், கருப்புக் கண்ணாடியும், அரை டிராயரும் அணிந்து, கையில் பெரிய காமிராவும் கொண்டுவரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவுதான்!
போர்ட் ப்ளேரில் இருக்கும் ‘செல்லுலார்’ ஜெயில், ஒவ்வொரு இந்தியனும் அவசியம் பார்க்கவேண்டிய இடம் –
அதன் ஒவ்வொரு செங்கல்லும், இந்திய சுதந்திரம்பற்றிய கதையை சோகத்துடன் சொல்லிக் கொண்டிருப்பதை அங்கு உணரமுடியும்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மிகவும் சிதிலமடைந்த நிலையில், பாதுகாப்பற்ற ஜெயிலாகவும், போர் விதவைகளுக்கும், அனாதைகளுக்கும் பாதுகாப்பகமாகவும் இருந்தது செல்லுலார் ஜெயில்.
1979 ஆம் ஆண்டு, பிப்ரவரி 11 ஆம் நாள், அப்போதைய பிரதமர் திரு மொரார்ஜி தேசாய் அவர்களால், செல்லுலார் ஜெயில் ‘நேஷனல் மெமோரியல்’ ஆக நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இன்று ஜெயிலின் 7 பகுதிகளில் (WINGS), 1,6, 7 விங்ஸ் மட்டும் பாதுகாக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு உள்ளன. அந்தமான் தீவு, செல்லுலார் ஜெயில்கள், பிரிட்டிஷ் அரசின் கொடுமைகள், கைதிகளின் சித்ரவதைகள், ஜப்பானியரின் வன்முறைகள், வீரசவார்கார், நேதாஜி புகைப்படங்கள், மியூசியம், ஆர்ட் கேலரிகளில் சரித்திரம் பேசுகின்றன. செல்லுலார் ஜெயிலின் சரித்திரம் சொல்லும் ஒளியும், ஒலியும் நிகழ்ச்சி மாலை சுமார் ஒரு மணி நேரம் நடக்கிறது – நான் போன அன்று இந்தியில் ஒலிபரப்பு – ஏதோ சுமாராகக்கூட புரியவில்லை! எனக்கு இந்தி தெரியாதது செல்லுலார் ஜெயிலின் குற்றமல்ல!
ஒரே சமயத்தில் மூன்றுபேரைத் தூக்கிலிடக்கூடிய தூக்கு மேடை, சவுக்கடி வாங்கும் கைதி, கை, கால்களில் இரும்புச் சங்கிலி பிணைத்த கைதிகள், சணலில் தைக்கப்பட்ட கைதி உடை என மனதைப் பிசையும் காட்சிப் பொருட்கள் – ‘வந்தே மாதரம்’ எழுதப்பட்ட மேடையின் மேல் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் ஜோதி, வீர் சவார்கார் இருந்த ‘செல்’ அவரது புகைப்படத்துடன் –
சுற்றிலும் கடல், ஒருபக்கம், ஜிகே பண்ட் ஆஸ்பிடலாய் மாறிப்போன இரண்டு விங்ஸ், மாடியில் நேதாஜியின் அந்தமான் விசிட் புகைப்படங்கள், புல்வெளிகள், பார்க் பெஞ்சுகள் – நன்கு பராமரிக்கப்படுகின்றன.
1857 சிப்பாய்க் கலகத்துக்குப் பின் விடுதலைப் போராட்ட வீரர்களையும், புரட்சியாளர்களையும் அந்தமான் சிறைக்கு – முதலில் வைப்பர் தீவுச் சிறை, பின்னர் செல்லுலார் ஜெயில் – டேவிட் பாரிக்கர்(ஜெயிலர்), மேஜர் ஜேம்ஸ் பாட்டிஸன் வாக்கர் (மிலிட்டரி டாக்டர்) தலைமையில் அனுப்புவதிலிருந்து தொடங்குகிறது இந்த சிறைச்சாலைக் கொடுமைகள்.
இருநூறு புரட்சியாளர்கள், கராச்சியிலிருந்து 733 பேர் (1863), மற்றும் இந்தியா, பர்மாவிலிருந்து சிறைக் கைதிகள் என இந்தத் தீவில் தண்டனைக்கு அனுப்பப் படுகின்றனர். பஹதூர் சாஃபர் ராயல் குடும்பம் மற்றும் அரசுக்கு எதிராகப் பெட்டிஷன் கொடுத்தவர்களும் இதில் அடக்கம்!
வைப்பர் தீவு போர்ட் ப்ளேரிலிருந்து 4 கிமீ தூரத்தில் உள்ளது. மிகக் கொடூரமான தண்டனைகள் – தூக்குத் தண்டனைகள் உட்பட்ட – வழங்கப்பட்ட இடம். இன்றும் எஞ்சியுள்ள ஜெயிலில் தூக்கிலிடப்பட்ட இடங்களைக் (GALLOWS) காணலாம். பேஷ்வார் ஷேர் அலி பத்தான், அப்போதைய இந்திய வைசிராய் லார்ட் மேயோவைக் கொலைசெய்த குற்றத்துக்காக இங்குதான் தூக்கிலிடப்பட்டார்!
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், சுதந்திரப் போராட்டம் வலுக்கவே, ஏராளமான கைதிகள் அந்தமானுக்கு அனுப்பப்பட்டனர். சார்லஸ் ஜேம்ஸ் லயல் – ஹோம் செக்ரடரி – கடுமையான தண்டனைகளை விதித்தார். தாய் மண்ணிலிருந்து வெகு தூரத்தில், தனிமைப்படுத்தப்பட்டு, சித்ரவதை செய்வதற்காகவே எழுப்பப்பட்டது ‘செல்லுலார்’ ஜெயில். 1896 – 1906 – பத்து வருடங்களில் கட்டப்பட்டது – பர்மாவிலிருந்து செங்கல் வரவழைக்கப்பட்டது – சைக்கிள் சக்கரத்தில் கம்பிகளைப்போல (SPOKES), நடுவில் ‘சென்ட்ரல் டவர்’, அதிலிருந்து ஏழு கிளைகளாக ஜெயில்! காவலர்களுக்கான மத்திய டவரில் ஒரு பெரிய மணி !
பேனொப்டிகான் (PANOPTICON) என்னும் வடிவில், ஜெரெமி பெந்தாம் என்பவரின் எண்ணத்தில் உருவானது இந்த ஜெயில். மூன்று தளங்கள், மொத்தம் 696 அறைகள் (செல்). அறை 14.8 அடிக்கு 9.9 அடி என்ற அளவில், ஒருபுறம் ஜெயில் கதவும், எதிர்புறம் 10 அடி உயரத்தில் ஒரு சின்ன ஜன்னலுடன் இருக்கின்றன. ஒரு கிளையின் அறைகளின் முன் பக்கம், அடுத்த கிளையின் அறைகளின் பின் பக்கத்தைப் பார்த்தவாறு அமைக்கப் பட்டிருப்பதால், கைதிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதோ, பேசிக்கொள்வதோ முடியாது! சவார்க்கர் சகோதரர்கள் (விநாயக் தாமோதர் சவார்கர், உம்பாராவ் சவார்கர்), இரண்டாண்டுகளுக்கு அதே ஜெயிலில் இருந்தபோதும், ஒருவருக்கொருவர் அதே இடத்தில் இருப்பதை அறியமுடியவில்லை!
80,000 க்கும் அதிகமான கைதிகள் – உயிர் பிழைத்தோர் மிக சொற்பமானவர்களே. தேங்காய் உரித்தல், செக்காட்டுதல், அடிமைக் கூலி வேலை, தனிமைச் சிறையடைப்பு, தூக்கு, கசையடி, மருத்துவப் பரிசோதனை என ‘டார்ச்சர்’ .
1868 தப்பியோட முயற்சித்த 238 பேர்களில், 87 பேர் தூக்கிலிடப்பட்டனர் – ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
1933 மே மாதம், உண்ணாவிரத்ப் போராட்டம் 33 கைதிகளால் நடத்தப்பட்டது. போராட்டத்தை முறியடிக்க, உணவை வாயில் திணிக்க, மூன்று பேர் – மஹாவீர் சிங் (லாஹூர் வழக்கு), மோகன் கிஷோர் நமதாஸ், மோஹித் மொய்த்ரா (ஆயுதம் வைத்திருந்த வழக்கு) – மூச்சுத் திணறி இறக்கின்றனர்.
மஹாத்மா காந்தி, ரபீந்திரநாத் தாகூர் ஆகியோரின் வற்புறுத்தலின்பேரில், சுதந்திர வீரர்கள், அந்தமான் செல்லுலார் ஜெயிலில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர் – 1939 ல் செல்லுலார் ஜெயில் காலி செய்யப்படுகிறது.
மீண்டும் 1942 ல் (இரண்டாம் உலகப்போர் சமயம்) ஜப்பானியர்களால் செல்லுலார் ஜெயில் கைதிகளின் கூடாரமாகிறது. கைதிகளையும், பிரிட்டிஷ் அரசுக்கு உளவு சொல்வதாக சந்தேகத்தின்பேரில் பிடித்தவர்ககளையும், சித்ரவதை செய்தும், தூக்கிலிட்டும், கடலில் ஜலசமாதி செய்தும் கொல்கின்றனர் ஜப்பானியர். சந்தேகத்தின்பேரில், பொதுமக்கள் முன்னிலையில், சுட்டுக் கொல்வதும், கழுத்தை அறுத்துக் கொலை செய்வதும் இன்றும் அந்தந்த இடங்களில் நினைவுச் சின்னங்களாக மெளனம் காக்கின்றன.
இரண்டாம் உலகப் போரின்போது அந்தமானின் இரண்டு முக்கிய நிகழ்வுகள் – போர்ட் ப்ளேர் விமான நிலையம், மற்றும் செல்லுலர் ஜெயிலை சிதைத்த மிகப் பெரிய பூகம்பம்.
ஜெயில் மீண்டும் மராமத்து செய்யப்பட்டு – இன்று நாம் காணும் மரத்தால் ஆன கட்டிடங்கள்- சரியாகக் கட்டப்பட்டன.
3, 4 ஆவது விங்ஸ் இடிக்கப்பட்டு, செங்கல் மற்றும் இரும்புத் தளவாடங்கள், தங்கள் பாதுகாப்புக் கட்டிடங்களுக்கு உபயோகப்படுத்துகின்றனர் ஜப்பானியர்.
இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் ஒன்றறக் கலந்துவிட்ட செல்லுலார் ஜெயில், ஜப்பானியர்கலால் இடித்து ஊனப்படுத்தப்பட்டது!
செல்லுலார் ஜெயில், இப்படிப்பட்ட கொடூரங்களைப் பார்த்ததற்குச் சாட்சியாக இன்றும் வருத்தமுடன் நிற்பதாய்த் தோன்றியது.
செல்லுலார் ஜெயிலின் பெருமைக்குரிய நிகழ்வு – பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியமே அஞ்சிய, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் – HEAD OF AZAD HIND GOVERNMENT – 1943 டிசம்பரில் அந்தமான் வந்து, ஜெயிலைப் பார்வை இட்டதுதான்! இந்திய சுதந்திரத்தின் முதல் கட்டம், அந்தமான் நிகோபார் தீவுகள் விடுதலை! முதன் முதலில் 1943 டிசம்பரில் நேதாஜி இந்திய மூவர்ணக் கொடியை அந்தமானில் பறக்கவிடுகிறார்!
செல்லுலார் ஜெயில் கொடுமைகளைக் கண்டு கண்ணீர் விடுகிறார். தன் முயற்சியால், ஜப்பான் அதிபர் மூலம் 600 க்கும் அதிகமான குற்றமே செய்யாத கைதிகளை, செல்லுலார் ஜெயிலில் இருந்து விடுதலை செய்கிறார்.
1945, 15 ஆகஸ்ட் ஜப்பான் அதிபர் ஹிரேஷிதோ சரணடையும்வரை இந்தக் கொடுமைகள் தொடர்கின்றன – செல்லுலார் ஜெயில் சரித்திரத்தின் இருண்ட ஒரு பகுதி முடிவுக்கு வருகிறது.
அந்தமானில் என்ன இருக்கிறது ? என்ற எண்ணத்துடனேயே அந்தமான் பயணித்தேன் – பார்த்தவை, கேட்டவை, படித்தவை எனக்கு உணர்த்தியது இதுதான்:
இந்திய சுதந்திரம் ‘சும்மா’ கிடைக்கவில்லை – ஆயிரக்கணக்கானோரின் இரத்தத்தில் தோய்ந்து, உயிரினில் மாய்ந்து, தியாகத்தில் கனன்று கிடைத்தது.
“தண்ணீர் விட்டோ வளர்த்தோம், சர்வேசா” – பாரதியின் பாடல் எவ்வளவு உண்மை!
ஜெய் ஹிந்த்!!