கண்டுவிட்டேன் உனைக் கண்டுவிட்டேன் – உனைக்கண்ட
கண்வேறு எதைக் காணவேண்டும்..!
துள்ளிவரும் மீன்களிலுன் கயல்விழியைக் காண்கின்றேன்
தெளிவான நீரிலேயுன் உள்ளத்தைப் பார்க்கின்றேன்
கள்ளமிலா குழந்தைகளின் களிப்பான சிரிப்பினிலே
பெண்ணேயுன் மோகனப் புன்னகையைப் பார்க்கின்றேன்!
ஆழமான அன்புடனே பாசமதும் ஒருசேர
எழிலோங்கும் தாயுருவில் உன்னைநான் பார்க்கின்றேன்
பசுமையாய் பயிர்களும் பரவிநிற்கும் பூமியிலே
பச்சையம்மா நானுந்தன் எழில்மேனி காண்கின்றேன்!
வட்டமான தண்ணிலவும் வானுலகில் ஓடுகையில்
வட்டமான உன்முகத்தை சாந்தமொடு பார்க்கின்றேன்
விரிவான நீள்வானின் நீளத்தை யளக்கையிலே-உன்
பரந்தமனப் பான்மையினைப் பாங்கோடு பார்க்கின்றேன்!
நீயில்லா இடமில்லை ஆட்கொள்ளா ஆளில்லை
வையத்தி லுன்புகழ் சொல்லாத நாவில்லை
திருமகளே கலைமகளே மலைமகளே மீனாட்சி
பெருந்தேவி உன்நாமம் பாடாத இசையில்லை!
ஆதியும் நீயே அந்தமும் நீயே
ஆடுபவளும் நீயே ஆட்டுவிப்பவளும் நீயே
உன்னடியார் விருப்பத்தை யேற்றவோர் வண்ணம் – பல
உருவத்தில் தோன்றுகின்ற மாயவளும் நீயே!
இயற்கையில் நாமுணரும் இயக்கமும் நீயே
பல்வகை அணுக்களின் ஜீவனும் நீயே
காண்கின்ற இடமெல்லாம் இருப்பவளும் நீயே
முழுமுதற் கடவுளாம் பரப்பிரம்மம் நீயே!