திருநாவுக்கரசர்-தொடர்ச்சி
திருநாவுக்கரசர் தில்லை வந்தார்..
பதிகம் பாடினர்…
சிவபெருமான் தனது நடனத் தோற்றத்தைக்காட்டி அவருக்கு அருளினார்.
திருநாவுக்கரசர் – தலம் பல கண்டு சீர்காழி அடைந்தார்..
அங்கு திருஞானசம்பந்தர் தோணியப்பருக்குத் திருத்தொண்டு செய்துகொண்டிருந்தார்.
பதினாறு நிரம்பாத ஆளுடைப்பிள்ளையார் அவர்.
அந்தக்கூட்டத்தில் திருநாவுக்கரசர் சென்று அவர் காலடியில் விழுந்து வணங்கினார்.
வயது குறைந்தவரானாலும் இறையருள் நிறைந்தவரானவர்..
திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசரது கரங்களைப்பற்றிக்கொண்டு…அன்புடன்…
‘அப்பரே’ என்றழைத்தார் – தந்தைக்கு சமமானவரே என்று பொருள்பட..
இரண்டு ஞானக் கடல்கள் சங்கமித்தன..
சில நாட்கள் இருவரும் ஒன்றுசேர்ந்து பதிகங்கள் பல பாடினர்.
சீர்காழி விழாக்காலம் பூண்டது!
பின் இருவரும் சில பல தலங்களில்..
விடையேறும் பெருமானைத் தரிசித்தபின்..
விடைபெற்றனர்..
திருநாவுக்கரசர் திங்களூர் வந்தடைந்தார்.
அங்கு அப்பூதி அடிகள் என்ற சிவனடியார்..
அவர் திருநாவுக்கரசரின் தீவிர ரசிகர்..
திருநாவுக்கரசர் அவர் வீட்டுக்கு வருவது..
சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்து அதில் வசந்தமும் வீசியதுபோல் இருந்தது..
வீட்டில் வரவேற்று விருந்து வைக்கும் நேரம்…
அவர் மகன் கொல்லைப்புறத்தில் பாம்பு தீண்டி உயிர் துறக்க…
திருநாவுக்கரசர் திருப்பதிகம் பாடி…
அப்பூதி மகனை உயிர் பிழைக்க வைத்தார்.
சிவத்தலங்களை தரிசித்து திருப்பதிகங்கள் பாடிப் பின்னர்..
திருவாரூர் புற்றிடங்கொண்ட தியாகேசப் பெருமானைத் தரிசித்தார்.
பின்னர்… திருப்புகலூருக்குப் புறப்பட்டார்..
அவ்விடம் திருஞானசம்பந்தர் தலங்கள் பல கண்டு திருப்புகலூரில் தங்கியிருந்தார்.
இரண்டு ஞானச் சிங்கங்களும் சந்தித்து மேலும் பல சிவத்தலங்கள் கண்டு ..
திருமறைக்காடு வந்தனர்..
இங்கு ஒரு திருவிளையாடல் நாடகமாக அரங்கேறியது..
காட்சி: சிவன் ஆலயம் மூடிக்கிடக்கிறது..
திருஞானசம்பந்தர்: அன்பர்களே.. ஆலயம் ஏன் அடைபட்டிருக்கிறது?
அன்பர்கள்: மறைகள் ஆதிகாலத்தில் இறைவனை வழிபட்டு .. கதவினை மூடிவிட்டுச் சென்றன.
அவைகளைத் திறக்க இயலவில்லை.
திருஞானசம்பந்தர்: அப்பரே.. நாம் இந்த கதவைத் திறந்து வேணிபிரானை வழிபட… நீங்கள் பதிகம் பாடி திறந்தருள வேண்டும்..
:
ஆளுடைபிள்ளையாரே.. உங்கள் கருத்துப்படியாகட்டும்..
பதிகம் பாடினார்:
‘பண்ணின் நேர் மொழியாள்’ ….
கதவு திறக்கவில்லை.
திருநாவுக்கரசர் (கலக்கத்துடன்) இன்னொரு பதிகம் பாடுகிறார்:
’இறக்க மொன்றுவீர்’….
அந்தப்பாடல் முடிவில் கதவு தாள் திறந்தது..
இறைவனைத் தரிசித்து வெளியே வரும்போது.
திருநாவுக்கரசர்: திருஞானசம்பந்தரே … இந்தக் கதவு மூடிட நீவிர் பதிகம் பாடவேண்டும்…
திருஞானசம்பந்தர்: உத்தமம்..
ஒரு பதிகம் பாடினார்.
கதவு உடனடியாக மூடிக்கொண்டது..
அதுவும் பாடல் பாடத் துவங்கிய உடன்..
அனைவரும் மகிழ்ந்தனர்…
அனைவரும் மடத்திற்குச் சென்றனர்.
திருநாவுக்கரசர் படுத்துக்கொண்டார்.
உறக்கம் வரவில்லை..
மனது அடித்துக்கொண்டது..
ஞானத்தின் சிகரத்தைத் தொட்டாலும்.. மனித மனது ..அது உணர்ச்சிகளால் .. அலைபாய்ந்தது..
திருநாவுக்கரசர் (மனதுக்குள்): நான் முயன்று இரண்டு பாடல் பாடிய பின்தான் இறைவன் கதவு திறக்க அருளினார். இவர் ஒரு பாடல்… அதுவும் பாடத் தொடங்கிய உடனேயே கதவு மூடியதே!
சிவன் அவர் கனவில் ‘வாகீசா! நாம் திருவாய்மூரில் இருப்போம்.அங்கு வா!’ என்றார்.
திருநாவுக்கரசர் விழித்துக்கொண்டார்.
இரவோடு இரவாக … திருஞானசம்பந்தரை எழுப்ப மனமில்லாது.. கிளம்பிச்சென்றார்..
வழியில் உருவாகியிருந்த பொற்கோயிலை அடைந்து… எம்பெருமானைக் காணாமல் … அங்கே துயின்றார்.
மறுநாள் காலை திருஞானசம்பந்தர் விஷயம் அறிந்து அந்தக் கோயில் சென்று திருநாவுக்கரசரைசந்தித்தார்.
அங்கு இருவருக்கும் கயிலைபெருமான் காட்சியளித்தார்.
பின்னர் இரு ஞானமூர்த்திகளும் பிரிந்து சென்றனர்..
நமது நாடகம் முடிந்தது.
தலங்கள் பல கண்டார்.
வயதோ முற்றியது…
மெல்ல நடந்து..தெலுகு நாடு, மாளவம் கடந்து காசி சென்றடைந்தார்.
அங்கிருந்து கயிலை செல்ல நடக்கலானார்.
நடந்து.. நடந்து…அவரது பாதம் தேயத்தொடங்கியது…
பாதம் உதிரம் கொட்டியது..
கைகளை ஊன்றி தத்தி நடந்தார்..
கரங்களும் தேய்ந்தது..
மார்பினில் தவழ்ந்தார்.
மார்பும் தேய்ந்து – எலும்புகள் முறிந்தது..
உருண்டு சென்றார்..
செயலற்று வீழ்ந்தார்.
அங்கு சிவபெருமான் அவருக்கு அருள் புரிய – அவரது உடல் உறுப்புகள் வளர்ந்து பிரகாசித்தன.
திருநாவுக்கரசர் :அண்ணலே. கயிலை மீது உங்கள் திருக்கோலம் காண அருளவேண்டும்
அசரீரி : ‘அருகிலிருக்கும் பொய்கையில் நீராடி.. திருவையாறு குளத்தில் எழுந்தருள்”
பரமபதம் என்ற விளையாட்டு ஒன்று உண்டு..
கட்டம் கட்டமாக முன்னேறி இலக்கை அடையும் முன்னால் ஒரு பாம்பு கட்டம் அடைந்தால் அது முதல் கட்டத்துக்குத் தள்ளிவிடுமே – அது போல..
மேலும் ‘இறைவனோடு ‘வாதாட முடியுமா?
திருநாவுக்கரசர் பொய்கையில் குளித்து திருவையாறில் எழுந்தார்.
வாக்களித்தபடி பூங்கையில் கயிலைப்பனிமலைபோல் காட்சியளித்தது..
இறைவனும் அவருக்குக் காட்சியளித்து மறைந்தார்.
சில நாட்களுக்குப்பிறகு திருவையாறு விட்டு திருப்பூந்துருத்தி அடைந்தார்.
பாண்டிய நாட்டில் சமணரை வென்று திருஞானசம்பந்தர் அன்று முத்துச்சிவிகையில் வந்துகொண்டிருந்தார்.
அப்பர் யாரும் அறியாதபடி அவரது சிவிகையைத் தோள்கொடுத்துத் தாங்கி நடக்கலானார்.
திருஞானசம்பந்தர் அங்கு அப்பரைக் காணாமல் :
“அப்பர் எங்கிருக்கிறார்” என்றார்.
திருநாவுக்கரசர் : “அடியேன் தங்கள் சிவிகையைத் தாங்கும் பாக்கியம் பெற்றேன்” – என்றார்.
பதைபதைத்த திருஞானசம்பந்தர் – அப்பர் அடிகளை வணங்குமுன் – அப்பர் அவரை வணங்கினார்.
இருவரும் பரமனை வணங்கிப் பாமாலை சாற்றினர்.
பிறகு திருநாவுக்கரசர் – விடைபெற்று – மதுரை சென்றார்.
அங்கு பாண்டிய மன்னன்- மகாராணி மங்கையர்க்கரசி அவரை வரவேற்று வணங்கினர்.
தான் இந்த உலகில் ஆற்றிய பணி முடியும் காலம் வந்ததை உணர்ந்த திருநாவுக்கரசர்:
‘எண்ணுகேன் என் சொல்லி’ – என்று பதிகம் பாடினார்..
சித்திரைத் திங்கள் – சதய நக்ஷத்திர நாளில் – இறைவனடி சேர்ந்தார்.
சரித்திரங்கள் இந்த மகாஞானிகளை நினைவு கூறுவதில் பெருமை அடைகிறது..
சரித்திர ஏடுகள் அடுத்த கதை சொல்ல ஆயத்தமாகிறது..
விரைவில் சிந்திப்போம்..