சிறுகதை எழுத்தாளர்களில் சிறந்த ஐம்பது எழுத்தாளர்களின் குறிப்புகளை திரட்டி இதில் தொகுத்திருக்கிறேன். அந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளையும் குறிப்பிட்டு இருக்கிறேன். இந்த தொகுப்புக்காகத் தகவல்களை திரட்டும்போதுதான் இன்னும் நிறைய எழுத்தாளர்களின் தகவல்கள் திரட்ட வேண்டியிருக்கிறது என்பது புரிகிறது. இணையத்தில் எல்லாம் இருக்கிறது என்பர். அப்படியெல்லாம் இல்லை என்பது நன்றாக புரிகிறது. பல எழுத்தாளர்களைப்பற்றிய தகவல் இணையத்தில் இல்லாமல் இருப்பதை பெரும் குறையாகவே நினைக்கிறேன். இந்த கட்டுரை அந்த குறையை சிறிதளவாவது குறைக்கும் என்பது என் எண்ணம். இன்னும் இதில் இல்லாத சிறந்த சிறுகதை எழுத்தாளர்களை வேறொரு கட்டுரையில் காணலாம். –
-என். செல்வராஜ்
நன்றி: : http://puthu.thinnai.com/?p=33105
வண்ணதாசன்
வண்ணதாசன் என்ற புனை பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனை பெயரில் கவிதைகளும் எழுதும் இவரின் இயற்பெயர் சி.கல்யாணசுந்தரம். இவர் தி க சிவசங்கரன் அவர்களின் மகன். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம்பெற்ற எழுத்தாளரான இவர் தீபம் இதழில் 1962 ல் எழுதத் தொடங்கி இன்றுவரை தொடந்து சிறுகதைகள் எழுதி வருபவர். 12 சிறுகதை தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. இவரது அனைத்து சிறுகதை தொகுப்புக்களையும் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் தனுமை, நிலை, ஞாபகம், போய்க்கொண்டிருப்பவன், சமவெளி, தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள், வடிகால்.
கு ப ராஜகோபாலன்
கு ப ரா என பரவலாக அறியப்பட்ட கு ப ராஜகோபாலன் அவரது சிறுகதைகளின் சிறப்பினால் சிறுகதை ஆசான் என்று அழைக்கப்படுகிறார்.
கு ப ராவின் பக்கத்து வீட்டுக்காரர் ந பிச்சமூர்த்தி. இவர்களிருவரும் இலக்கியத்திலும் இணைபிரியாமல் இருந்தனர்.இவரின் இளைய சகோதரி
கு ப சேது அம்மாள். கு ப ரா வின் எழுத்துக்கள் பெரும்பாலும் ஆண் பெண் உறவுகளை அடிப்படையாகக் கொண்டவை. சமுதாயத்தில் பல்வேறு நிலைகளில் வாழும் பெண்களை கு ப ரா தம் சிறுகதைகளில் படைத்துக் காட்டியுள்ளார். கு ப ரா சிறுகதைகள் என்ற முழுத் தொகுப்பை அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் விடியுமா?, ஆற்றாமை, கனகாம்பரம், திரை, நூருன்னிசா, சிறிது வெளிச்சம், புனர் ஜென்மம்.
புதுமைப்பித்தன்
இவரது இயற் பெயர் சொ.விருத்தாசலம். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும்கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. 1933 முதல் ஊழியன், சுதந்திரச் சங்கு, தினமணி, தினசரி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். புதுமைப்பித்தன் தன் பெயருக்கு ஏற்ப, பலர் நடந்து – நைந்துபோன பாதையில் போகாமல், புதிய பாதையில் புதிய சிந்தனையில் சோதனை முயற்சியில் கதைகளைப் படைத்தார். புதுமைப்பித்தனின் தனித்தன்மை என்றவுடன் படிப்பவர் மனதில் பளிச்செனத் தோன்றுவது அவரது நடைச்சிறப்புதான். அவருடைய கதைகளைத் திரும்பத் திரும்பப் படித்தாலும் சலிப்பு ஏற்படாததற்குக் காரணம் அவருடைய நடை ஆளுமைதான். நடை வேறுபாடுகளில் பல்வேறு சோதனைகளைச் செய்துபார்த்தவர் புதுமைப்பித்தன். இவரது அனைத்துச் சிறுகதைகளும் ஒரே தொகுப்பாக வெளிவந்துள்ளது. முழுத்தொகுப்பை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பதினைந்து ஆண்டுகளே எழுத்துலகில் இருந்த புதுமைப்பித்தன், தமிழில் தரமான சிறுகதைகளைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார். தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் புதுமைப்பித்தன் சிறுகதை இலக்கியத் தகுதி பெற்றுத்தந்த கதைகள் பலவற்றை எழுதியுள்ளார். புதுப்புது உத்திகளும் தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் நடைநயமும் அவரது சிறுகதைகளில் கலந்துள்ளன. தமிழ் நடைக்குப் புது வேகமும் புது அழகும் சேர்த்தவர். கிண்டலும் நையாண்டியும் நிறைந்த இவரது சிறுகதைகள் சோகத்தை அடிநாதமாகக் கொண்டு வாழ்க்கையின் உண்மைகளை உள்ளது உள்ளபடி காட்டின. அந்த அளவுக்குத் தரமான கதைகளைத் தந்தவர். குறிப்பாக, துன்பக்கேணி, நாசக்காரக் கும்பல், மனித இயந்திரம், பொன்னகரம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் போன்ற கதைகளைச் சொல்லலாம்.
அம்பை
அம்பை என்கிற சி எஸ் லட்சுமி, தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவர். 1960 களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கியவர். பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையான தமிழ் சிறுகதைகளின் முன்னோடி.
பல பெண் படைப்பாளிகள் தொட சிரமப்படும் விஷயங்களை சர்வ சாதாரணமாகத் தொட்டுச்சென்றவர். இவரின் முழுச் சிறுகதைத் தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டுள்ளது. பெண்கள்பற்றிய ஆராய்ச்சி, ஆவணக்காப்பகமான ஸ்பாரோ என்ற அறக்கட்டளையை நிறுவி நடத்தி வருகிறார். இவரின் சிறந்த சிறுகதைகள் அம்மா ஒரு கொலை செய்தாள், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, காட்டில் ஒரு மான் , சிறகுகள் முறியும், புனர் ,கருப்பு குதிரை சதுக்கம், மிருத்யு, வெளிப்பாடு.
மௌனி
இவரின் இயற்பெயர் மணி. மௌனி என்ற புனை பெயரில் சிறுகதைகள் எழுதினார். தமிழ் சிறுகதை உலகில் மிகக் குறைந்த அளவே கதைகள் எழுதி நிலைத்த புகழைப் பெற்றவர். இவர் 24 கதைகள் மட்டுமே எழுதி உள்ளார்.
அவை அனைத்தும் மனித மனங்களை எக்காலத்திலும் பிணிக்கின்ற வகையில் அமைந்துள்ளன. மௌனியின் படைப்புகள் என்ற முழுத் தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் அழியாச்சுடர், பிரபஞ்ச கானம், சாவில் பிறந்த சிருஷ்டி, ஏன்.
வண்ணநிலவன்
இவரின் இயற்பெயர் உ ராமச்சந்திரன், கடல்புரத்தில், கம்பா நதி, ரெயினீஷ் அய்யர் தெரு ஆகிய புகழ் பெற்ற நாவல்களை எழுதியவர்.
வண்ணநிலவன் சிறுகதைகள் என்ற முழுத் தொகுப்பை நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழ் சிறுகதையில் பல்வேறு உத்திகள் , கூறல் முறைகள் , உலகங்கள், மற்றும் மனிதர்களைக் கையாண்டு அவற்றை கலையனுபவமாகவும் ஆக்கிய சிறுகதையாளர். இவரின்சிறந்த சிறுகதைகள் எஸ்தர், கரையும் உருவங்கள், பலாப்பழம், மிருகம் ,உள்ளும் புறமும்.
அசோகமித்திரன்
தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் தியாகராஜன். எளிமையும் மெல்லிய நகைச்சுவையும் கொண்டது இவரது கதைகள். 1996 ல் அப்பாவின் சினேகிதர் என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அக்காடமி விருது பெற்றவர்.பதினெட்டாவது அட்சக்கோடு, தண்ணீர், கரைந்த நிழல்கள் ஆகிய சிறந்த நாவல்களை எழுதியவர். அசோகமித்திரன் சிறுகதைகள் என்ற சிறுகதைகளின் முழுத் தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் புலிக்கலைஞன்,பிரயாணம், காலமும் ஐந்து குழந்தைகளும், குழந்தைகள், மாறுதல், பார்வை.
கிருஷ்ணன் நம்பி
இவரது இயற்பெயர் அழகிய நம்பி. முதல் சிறுகதை ” சுதந்திர தினம் ” 1951ல் வெளிவந்தது. கண்ணன் சிறுவர் இதழில் சசிதேவன் என்ற பெயரில்குழந்தைப் பாடல்களை எழுதினார்.கிட்டத்தட்ட சுமார் 35 பாடல்கள் கண்ணனில் வெளிவந்தன.1965 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தகாலயம் கிருஷ்ணன் நம்பியின் 39 குழந்தைப் பாடல்களைத் தொகுத்து `யானை என்ன யானை?’ என்ற புத்தகத்தைக் கொண்டுவந்தது. கிருஷ்ணன் நம்பியின் படைப்புக்கள் முழுத் தொகுப்பாக கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் என்ற பெயரில் காலச்சுவடு வெளியிட்டுள்ளது. மருமகள் வாக்கு இவரது புகழ் பெற்ற சிறுகதை. மிகக்குறைவான கதைகள்தான் எழுதினார் என்றாலும் ஒரு தேர்ந்த படைப்பாளியின் முத்திரையை ஒவ்வொரு கதையும் பதிவுசெய்துள்ளது. கதைகளை சொல்லும் முறையில் ஒரே பார்வை முறையைக் கையாண்டார். ஆசிரியர் பெரும்பாலும் குறுக்கிடுவதில்லை. பாத்திரங்களே சம்பவங்களைப் பேசுகின்றன. இவரின் சிறந்த சிறுகதைகள் , மருமகள் வாக்கு, சட்டை, எக்ஸெண்டிரிக், நீலக்கடல், தங்க ஒரு.., காணாமல் போன அந்தோனி.
சுஜாதா
இவரது இயற்பெயர் ரங்கராஜன். தன் மனைவி பெயரான சுஜாதா என்ற பெயரில் எழுதியவர். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் வாசகர்களைக் கவர்ந்தவர். கணையாழி இதழில் பல வருடங்கள் கடைசிப் பக்கம் என்ற பத்தியை எழுதியவர். ஆனந்த விகடனில் இவர் எழுதிய கற்றதும் பெற்றதும் தொடர் மிகவும் பிரபலமானது. நாவல்,குறுநாவல்,சிறுகதைகள்,விஞ்ஞானச் சிறுகதைகள், நாடகம், செவ்விலக்கியங்களின் அறிமுகம் ஆகிய துறைகளில் முத்திரை பதித்தவர். இவரது “என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ ” பெரும் வரவேற்பைப்பெற்ற நாவல்கள். இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் மூன்று தொகுதிகளாக உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் நகரம், ஜன்னல், நிஜத்தை தேடி, திமலா.
தி ஜானகிராமன்
தஞ்சை மாவட்டப் பேச்சும் நையாண்டியும் தனது கதைகளின் தனித்தன்மைகளாக் கொண்ட படைப்பாளர் தி ஜா என அன்புடன் அழைக்கப்படும்
தி ஜானகிராமன். விடுதலைக்குப் பிந்திய சிறுகதை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். புகழ்பெற்ற மோகமுள், அம்மா வந்தாள் ஆகிய நாவல்களை எழுதியவர். தி ஜாவின் படைப்புக்களில் வரும் பெண்கள் பெரும்பாலும் மரபு மீறியவர்களாகவே இருந்தனர். சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அக்காடமி விருது பெற்றவர். தி ஜானகிராமன் சிறுகதைகள் என்ற முழுத் தொகுப்பை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் சிலிர்ப்பு, பாயசம், முள்முடி, கோபுர விளக்கு, பரதேசி வந்தான், துணை, கோதாவரிக் குண்டு.
(மற்றவை பிறகு)