. நல்ல திருப்பம்!

ஆவின் கன்று குரலெழுப்பி,
‘அம்மா’ என்று விளிப்பதையும்,
கூவும் குயிலின் இசையினிலே
குழலும் விரவிச் சிறப்பதையும்,
பூவில் வண்டு தேனருந்திப்
போதை கொண்டு பறப்பதையும்,
பாவின் பொருளாய்ப் பலமுறையும்
பாடிச் சலித்துப் போய்விட்டேன்
திரும்பத் திரும்பக் காதலினைத்
திகட்டும் வரையில் பாடிவிட்டேன்.
விரும்பிக் கேட்கும் இன்னிசையை
வெறுக்கும் அளவு போற்றிவிட்டேன்.
கரும்பின் சுவையைப் புகழ்ந்துவிட்டுக்
கைக்கும் வேம்பின் நலம்மறந்தேன்
அரும்பும் வேர்வை சிந்திடுவோர்
அவரைப் பற்றிப் பாடிடுவேன்
கதிரை, மதியை, விண்மீனைக்
கவிதை பாடிக் களைத்துவிட்டேன்
நதியை, மலையை,கடலழகை
நாளும் பாடி நலிந்துவிட்டேன்
பொதியை இறக்கி வைக்கின்றேன்
போதும், போதும், இனிமக்கள்
விதியின் பிடியை உதறிவிட்டு
மேன்மை யுறவே பாடிடுவேன்.
மானி டத்தின் மகத்துவத்தை
வாழ்வின் நிலைத்த தத்துவத்தை,
ஊனை உருக்கும் உண்மைகளை
உரக்கச் சொல்லிப் பாடிடுவேன்
போன வற்றைப் புறந்தள்ளிப்
புதிய உலகம் படைத்திடவே
நானி யற்றும் ஒளிர்கவிதை
நல்ல திருப்பம் ஆகட்டும்!
Read this poem,so beautiful
LikeLike