சிறுகதை எழுத்தாளர்கள் சிறு குறிப்புக்கள் – ஐம்பதில் முதல் பத்து – என் செல்வராஜ்

Image may contain: 1 person

சிறுகதை எழுத்தாளர்களில் சிறந்த ஐம்பது எழுத்தாளர்களின் குறிப்புகளை திரட்டி இதில் தொகுத்திருக்கிறேன். அந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளையும் குறிப்பிட்டு இருக்கிறேன். இந்த தொகுப்புக்காகத் தகவல்களை திரட்டும்போதுதான் இன்னும் நிறைய எழுத்தாளர்களின் தகவல்கள் திரட்ட வேண்டியிருக்கிறது என்பது புரிகிறது. இணையத்தில் எல்லாம் இருக்கிறது என்பர். அப்படியெல்லாம் இல்லை என்பது நன்றாக புரிகிறது. பல எழுத்தாளர்களைப்பற்றிய தகவல் இணையத்தில் இல்லாமல் இருப்பதை பெரும் குறையாகவே நினைக்கிறேன். இந்த கட்டுரை அந்த குறையை சிறிதளவாவது குறைக்கும் என்பது என் எண்ணம். இன்னும் இதில் இல்லாத சிறந்த சிறுகதை எழுத்தாளர்களை வேறொரு கட்டுரையில் காணலாம். –

-என். செல்வராஜ்

 

நன்றி: : http://puthu.thinnai.com/?p=33105

Image result for வண்ணதாசன்

வண்ணதாசன்

வண்ணதாசன் என்ற புனை பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனை பெயரில் கவிதைகளும் எழுதும் இவரின் இயற்பெயர் சி.கல்யாணசுந்தரம்.  இவர் தி க சிவசங்கரன் அவர்களின் மகன். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம்பெற்ற எழுத்தாளரான இவர் தீபம் இதழில் 1962 ல் எழுதத் தொடங்கி இன்றுவரை தொடந்து சிறுகதைகள் எழுதி வருபவர். 12 சிறுகதை தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. இவரது அனைத்து சிறுகதை தொகுப்புக்களையும் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் தனுமை, நிலை, ஞாபகம், போய்க்கொண்டிருப்பவன், சமவெளி, தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள், வடிகால்.

 

Image result for கு ப ரா

கு ப ராஜகோபாலன்

கு ப ரா என பரவலாக அறியப்பட்ட கு ப ராஜகோபாலன் அவரது சிறுகதைகளின் சிறப்பினால் சிறுகதை ஆசான் என்று அழைக்கப்படுகிறார்.

கு ப ராவின் பக்கத்து வீட்டுக்காரர் ந பிச்சமூர்த்தி.  இவர்களிருவரும் இலக்கியத்திலும் இணைபிரியாமல் இருந்தனர்.இவரின் இளைய சகோதரி

கு ப சேது அம்மாள். கு ப ரா வின் எழுத்துக்கள் பெரும்பாலும் ஆண் பெண் உறவுகளை அடிப்படையாகக் கொண்டவை. சமுதாயத்தில் பல்வேறு நிலைகளில் வாழும் பெண்களை கு ப ரா தம் சிறுகதைகளில் படைத்துக் காட்டியுள்ளார். கு ப ரா சிறுகதைகள் என்ற முழுத் தொகுப்பை அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் விடியுமா?, ஆற்றாமை, கனகாம்பரம், திரை, நூருன்னிசா, சிறிது வெளிச்சம், புனர் ஜென்மம்.

Image result for புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன்

இவரது இயற் பெயர் சொ.விருத்தாசலம். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும்கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. 1933 முதல் ஊழியன், சுதந்திரச் சங்கு, தினமணி, தினசரி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். புதுமைப்பித்தன் தன் பெயருக்கு ஏற்ப, பலர் நடந்து – நைந்துபோன பாதையில் போகாமல், புதிய பாதையில் புதிய சிந்தனையில் சோதனை முயற்சியில் கதைகளைப் படைத்தார். புதுமைப்பித்தனின் தனித்தன்மை என்றவுடன் படிப்பவர் மனதில் பளிச்செனத் தோன்றுவது அவரது நடைச்சிறப்புதான். அவருடைய கதைகளைத் திரும்பத் திரும்பப் படித்தாலும் சலிப்பு ஏற்படாததற்குக் காரணம் அவருடைய நடை ஆளுமைதான். நடை வேறுபாடுகளில் பல்வேறு சோதனைகளைச் செய்துபார்த்தவர் புதுமைப்பித்தன். இவரது அனைத்துச் சிறுகதைகளும் ஒரே தொகுப்பாக வெளிவந்துள்ளது. முழுத்தொகுப்பை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பதினைந்து ஆண்டுகளே எழுத்துலகில் இருந்த புதுமைப்பித்தன், தமிழில் தரமான சிறுகதைகளைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார். தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் புதுமைப்பித்தன் சிறுகதை இலக்கியத் தகுதி பெற்றுத்தந்த கதைகள் பலவற்றை எழுதியுள்ளார். புதுப்புது உத்திகளும் தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் நடைநயமும் அவரது சிறுகதைகளில் கலந்துள்ளன. தமிழ் நடைக்குப் புது வேகமும் புது அழகும் சேர்த்தவர். கிண்டலும் நையாண்டியும் நிறைந்த இவரது சிறுகதைகள் சோகத்தை அடிநாதமாகக் கொண்டு வாழ்க்கையின் உண்மைகளை உள்ளது உள்ளபடி காட்டின. அந்த அளவுக்குத் தரமான கதைகளைத் தந்தவர். குறிப்பாக, துன்பக்கேணி, நாசக்காரக் கும்பல், மனித இயந்திரம், பொன்னகரம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் போன்ற கதைகளைச் சொல்லலாம்.

Image result for அம்பை

அம்பை

அம்பை என்கிற சி எஸ் லட்சுமி, தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவர். 1960 களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கியவர். பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையான தமிழ் சிறுகதைகளின் முன்னோடி.

பல பெண் படைப்பாளிகள் தொட சிரமப்படும் விஷயங்களை சர்வ சாதாரணமாகத் தொட்டுச்சென்றவர். இவரின் முழுச் சிறுகதைத் தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டுள்ளது. பெண்கள்பற்றிய ஆராய்ச்சி, ஆவணக்காப்பகமான ஸ்பாரோ என்ற அறக்கட்டளையை நிறுவி நடத்தி வருகிறார். இவரின் சிறந்த சிறுகதைகள் அம்மா ஒரு கொலை செய்தாள், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, காட்டில் ஒரு மான் , சிறகுகள் முறியும், புனர் ,கருப்பு குதிரை சதுக்கம், மிருத்யு, வெளிப்பாடு.

Image result for மௌனி

மௌனி

இவரின் இயற்பெயர் மணி. மௌனி என்ற புனை பெயரில் சிறுகதைகள் எழுதினார். தமிழ் சிறுகதை உலகில் மிகக் குறைந்த அளவே கதைகள் எழுதி நிலைத்த புகழைப் பெற்றவர். இவர் 24 கதைகள் மட்டுமே எழுதி உள்ளார்.

அவை அனைத்தும் மனித மனங்களை எக்காலத்திலும் பிணிக்கின்ற வகையில் அமைந்துள்ளன. மௌனியின் படைப்புகள் என்ற முழுத் தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் அழியாச்சுடர், பிரபஞ்ச கானம், சாவில் பிறந்த சிருஷ்டி, ஏன்.

 

Related image

வண்ணநிலவன்

இவரின் இயற்பெயர் உ ராமச்சந்திரன், கடல்புரத்தில், கம்பா நதி, ரெயினீஷ் அய்யர் தெரு ஆகிய புகழ் பெற்ற நாவல்களை எழுதியவர்.

வண்ணநிலவன் சிறுகதைகள் என்ற முழுத் தொகுப்பை நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழ் சிறுகதையில் பல்வேறு உத்திகள் , கூறல் முறைகள் , உலகங்கள், மற்றும் மனிதர்களைக் கையாண்டு அவற்றை கலையனுபவமாகவும் ஆக்கிய சிறுகதையாளர்.  இவரின்சிறந்த சிறுகதைகள் எஸ்தர், கரையும் உருவங்கள், பலாப்பழம், மிருகம் ,உள்ளும் புறமும்.

 

Image result for அசோகமித்திரன்

அசோகமித்திரன்

தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் தியாகராஜன். எளிமையும் மெல்லிய நகைச்சுவையும் கொண்டது இவரது கதைகள். 1996 ல் அப்பாவின் சினேகிதர் என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அக்காடமி விருது பெற்றவர்.பதினெட்டாவது அட்சக்கோடு, தண்ணீர், கரைந்த நிழல்கள் ஆகிய சிறந்த நாவல்களை எழுதியவர். அசோகமித்திரன் சிறுகதைகள் என்ற சிறுகதைகளின் முழுத் தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் புலிக்கலைஞன்,பிரயாணம், காலமும் ஐந்து குழந்தைகளும், குழந்தைகள், மாறுதல், பார்வை.

Related image

கிருஷ்ணன் நம்பி

இவரது இயற்பெயர் அழகிய நம்பி. முதல் சிறுகதை ” சுதந்திர தினம் ” 1951ல் வெளிவந்தது.  கண்ணன் சிறுவர் இதழில் சசிதேவன் என்ற பெயரில்குழந்தைப் பாடல்களை எழுதினார்.கிட்டத்தட்ட சுமார் 35 பாடல்கள் கண்ணனில் வெளிவந்தன.1965 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தகாலயம் கிருஷ்ணன் நம்பியின் 39 குழந்தைப் பாடல்களைத் தொகுத்து `யானை என்ன யானை?’ என்ற புத்தகத்தைக் கொண்டுவந்தது. கிருஷ்ணன் நம்பியின் படைப்புக்கள் முழுத் தொகுப்பாக கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் என்ற பெயரில் காலச்சுவடு வெளியிட்டுள்ளது. மருமகள் வாக்கு இவரது புகழ் பெற்ற சிறுகதை. மிகக்குறைவான கதைகள்தான் எழுதினார் என்றாலும் ஒரு தேர்ந்த படைப்பாளியின் முத்திரையை ஒவ்வொரு கதையும் பதிவுசெய்துள்ளது. கதைகளை சொல்லும் முறையில் ஒரே பார்வை முறையைக் கையாண்டார். ஆசிரியர் பெரும்பாலும் குறுக்கிடுவதில்லை. பாத்திரங்களே சம்பவங்களைப் பேசுகின்றன. இவரின் சிறந்த சிறுகதைகள் , மருமகள் வாக்கு, சட்டை, எக்ஸெண்டிரிக், நீலக்கடல், தங்க ஒரு.., காணாமல் போன அந்தோனி.

Image result for சுஜாதா

சுஜாதா

இவரது இயற்பெயர் ரங்கராஜன். தன் மனைவி பெயரான சுஜாதா என்ற பெயரில் எழுதியவர். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் வாசகர்களைக் கவர்ந்தவர். கணையாழி இதழில் பல வருடங்கள் கடைசிப் பக்கம் என்ற பத்தியை எழுதியவர். ஆனந்த விகடனில் இவர் எழுதிய கற்றதும் பெற்றதும் தொடர் மிகவும் பிரபலமானது. நாவல்,குறுநாவல்,சிறுகதைகள்,விஞ்ஞானச் சிறுகதைகள், நாடகம், செவ்விலக்கியங்களின் அறிமுகம் ஆகிய துறைகளில் முத்திரை பதித்தவர். இவரது “என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ ” பெரும் வரவேற்பைப்பெற்ற நாவல்கள். இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் மூன்று தொகுதிகளாக உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் நகரம், ஜன்னல், நிஜத்தை தேடி, திமலா.

 

Related image

தி ஜானகிராமன்

தஞ்சை மாவட்டப் பேச்சும் நையாண்டியும் தனது கதைகளின் தனித்தன்மைகளாக் கொண்ட படைப்பாளர் தி ஜா என அன்புடன் அழைக்கப்படும்

தி ஜானகிராமன். விடுதலைக்குப் பிந்திய சிறுகதை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். புகழ்பெற்ற மோகமுள், அம்மா வந்தாள் ஆகிய நாவல்களை எழுதியவர். தி ஜாவின் படைப்புக்களில் வரும் பெண்கள் பெரும்பாலும் மரபு மீறியவர்களாகவே இருந்தனர். சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அக்காடமி விருது பெற்றவர். தி ஜானகிராமன் சிறுகதைகள் என்ற முழுத் தொகுப்பை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் சிலிர்ப்பு, பாயசம், முள்முடி, கோபுர விளக்கு, பரதேசி வந்தான், துணை, கோதாவரிக் குண்டு.

 

(மற்றவை பிறகு) 

சித்திரைப் பாவையே வருக ! –  பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்

           

Related image

இன்று

நாங்கள் காலை துயில் எழுந்து

நாட்காட்டியைப் பார்த்தால்

பங்குனித்திங்கள் பெற்றெடுத்த  

சித்திரைப்பாவையே உந்தன்

மத்தாப்பூ முகம் தெரிகிறதே !

 

இன்று

நோக்குமிடமெல்லாம்

சித்திரைப் பாவையே உந்தன்

நேசக்கரம் நீட்டுகிறதே !

 

இன்று

கேட்குமிடமெல்லாம்

சித்திரைப் பாவையே உந்தன்

மனிதநேயம் ஒலிக்கிறதே !

 

இன்று

தீண்டுமிடமெல்லாம்

சித்திரைப் பாவையே உந்தன்

மலரின் மென்மை உணரப்படுகிறதே !

 

இன்று

பேசுமிடமெல்லாம்

சித்திரைப் பாவையே உந்தன்

சீரும் சிறப்பும் பேசப்படுகிறதே !

 

இன்று

நுகருமிடமெல்லாம்

சித்திரைப் பாவையே உந்தன்

நறுமணம் வீசுகிறதே!

 

இன்று

வணங்குமிடமெல்லாம்

சித்திரைப் பாவையே உந்தன்

தெய்வ அருள் பொழிகிறதே!

 

இன்று   

சித்திரைப்பாவை உன் வரவாலே

நேத்திரம் குளிர்ந்தது

சத்தியம் தர்மம் மனிதநேயம்    

நித்தியம் உலகில் வளர வேண்டி

சித்திரைப் பாவையை நாம்

பக்தியுடன் வணங்கி வரவேற்போம் !

 

                                  

சிம்ஹாஞ்சனாவின் அற்புத பேச்சு

தாயை மிஞ்சும் மகளின் பேச்சு புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
கண்ணதாசன் விழாவில் சட்டக்கல்லூரி மாணவி சிம்ஹாஞ்சனாவின் அற்புத பேச்சு :
கண்ணதாசனின் பாடலுக்கு விளக்கம் சொன்னவர்  வழக்கறிஞர் சுமதியின் மகள்

குட்டீஸ் லூட்டீஸ்:எங்கள் ஓட்டு – சிவமால்

Image result for ஓட்டுக்கு நோட்டு

‘ரொம்ப தர்மசங்கடமா இருக்கே..! ஒரு கட்சி ஓட்டுக்கு 1000 ரூபாய் கொடுத்துட்டுப் போனாங்க.. இன்னொரு கட்சி
2000 ரூபாய் கொடுத்துட்டுப் போனாங்க.. மூன்றாவது கட்சி 3000 ரூபாய் கொடுத்துருக்காங்க. யாருக்கு ஓட்டுப் போடறது..?’ என்று புலம்பிக் கொண்டிருந்தேன் மனைவியிடம்.

அருகிலிருந்த என் ஐந்து வயது மகள் மிதிலா. ‘கவலையேபடாதீங்க அப்பா… நீங்க போய் ஓட்டுப் போடலேன்னா
யாராவது உங்க ஓட்டைப் போட்டுடுவாங்க.. அதனாலே நமக்குக்  காசு கொடுக்காத ‘நோட்டா’ வுக்கு ஓட்டுப் போட்டுடுங்க. இப்படிப் பணம் கொடுத்தவங்களுக்கும் இது ஒரு பாடமா இருக்கும்’ என்றாள் சர்வ சாதாரணமாக.

திகைத்துப் போய் நின்றோம் நானும் என் மனைவியும்.

 

பறந்து போகும் மன ஏக்கம் – ராதாகிருஷ்ணன்

 

Related image

கால் தலையில் வலியில்லை

காய்ச்சல் எதுவும் எனக்கில்லை

சளியோ கபமோ இலையெனினும்

இரத்தக் கொதிப்பு சரியெனினும்

ஏதோ சங்கடம் எனத் தோன்ற

மருத்துவரிடம் நான் சென்றேன்

 

நாடி பிடித்து அவர் பார்த்தார்

ஓய்வு பெற்ற பலருக்கும்

நோய் இது பொதுவாய் வருமென்றார்

கடந்த கால ஏக்கமென

கூறப்படும் இந்நோய்க்கு

அரிய மருந்து ஒன்றுண்டு

என்றே அவர் பரிந்துரைத்த

நியமங்களையே கடைப் பிடித்து

நற்பலனை நான் கண்டதினால்

யாவரும் அவற்றால் பயன் அடைய

இங்கே பகிர்ந்து கொள்கின்றேன்!

 

ஆண்டில் மூன்று நான்கு முறை

பழைய நண்பர் பலர் சேர்ந்து

பதிந்த நினைவுகள் அசை போட்டு

பகிர்ந்து உண்டு கதை அடித்து

பொருள் காணாது பல பேசி

உள்ளம் உறுத்தா வசை பாடி

கேலிகள் செய்து வாய் சிரித்து

சிலமணி நேரம் செலவழிக்க

பறந்து போகும் மன ஏக்கம்

 

புத்துணர்ச்சி கண்டிடவும்

முதுமை குறைந்த வாழ்விற்கும்

இஃதோர் அரிய செயல்முறையே!

மாம்பழமாம் மாம்பழம்! – மா வீ ரா

Image result for மாம்பழம் வகைகள்

விதவிதமாய் மாம்பழங்கள்

வீதியிலே விற்குது!

 

ரகம்ரகமாய் குவிந்துயெங்கும்

சந்தையிலே கிடக்குது!

 

மல்கோவா மாம்பழம் அது

மனசையெல்லாம் கவருது!

 

அல்போன்சா மாம்பழம் அது

ஆசையெல்லாம் தூண்டுது!

 

பங்கணப்பள்ளி மாம்பழம் அது

எங்களையெல்லாம் அழைக்குது!

 

மங்களமாய் இருப்பதாக

செந்தூரம் காட்டுது!

 

ஒட்டுமாங்காய் சட்டெனவே

பற்றிக்கொள்ளத் தோனுது!

 

விட்டிடாமல் நீலக்கனி

ஒட்டிக்கிட பார்க்குது!

 

காலாபாடி காட்சிதந்து

கருத்தையெல்லாம் கவருது!

 

கட்டுமூட்டை  உள்ளிருந்து

ருமாங்கனி துள்ளுது!

 

இமாம் பசந்த் இருப்பதிலே

பெரிசெனநான் சொல்லுது!

 

இப்படித்தான் மாம்பழங்கள்

எங்கும்குவிந்து விற்குது!

 

எல்லாவற்றையும்  கண்டபின்பு

எச்சிநாவில் ஊறுது!

 

பச்சைப்பிள்ளை எங்கள் மனமும்

பழங்களுக்கு ஏங்குது!

 

பார்க்கப்பார்க்க ஆசைவந்து

உள்ளுக்குள்ளே துள்ளுது

 

கொட்டிக்கிடக்கும் பழங்களிலே

கொள்ளும் ரகத்தைச் சொல்லுங்க!

 

கூறுக்கேற்ற விலையைச் சொல்லி

நாளும் வாங்கிச் செல்லுங்க

அழ வள்ளியப்பா

வள்ளியப்பாவின் 23 பாடல்கள் கொண்ட முதல் கவிதைத் தொகுதி “மலரும் உள்ளம்” 1944 ஆம் ஆண்டு வெளிவந்தது. 1954 இல் 135 பாடல்கள் கொண்ட தொகுதியும், 1961இல் ஒரு தொகுதியும் வெளியிட்டார். “சிரிக்கும் பூக்கள்” என்ற தொகுதியை வெளியிட்ட பிறகுதான், “குழந்தைக் கவிஞர்” என்ற பெயரிட்டு அனைவரும் அழைக்கத் தொடங்கினர்.

நம் நதிகள் என்ற தலைப்புடன் தென்னாட்டு ஆறுகள் பற்றிய இவரது நூலை, தேசீய புத்தக டிரஸ்ட் பதினான்கு இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளது.

அழ. வள்ளியப்பாவின் நூல்களுள் சில:

 1. மலரும் உள்ளம் – 1 (பாடல் தொகுதி) –
 2. பாப்பாவுக்குப் பாட்டு (பாடல் தொகுதி)
 3. சின்னஞ்சிறு பாடல்கள் (பாடல் தொகுதி)
 4. சுதந்திரம் பிறந்த கதை
 5. ஈசாப் கதைப் பாடல்கள் (பாடல் தொகுதி)
 6. ரோஜாச் செடி
 7. உமாவின் பூனைக் குட்டி
 8. அம்மாவும் அத்தையும்
 9. மணிக்குமணி
 10. மலரும் உள்ளம் – 2 (பாடல் தொகுதி)
 11. கதை சொன்னவர் கதை
 12. மூன்று பரிசுகள்
 13. எங்கள் கதையைக் கேளுங்கள்
 14. நான்கு நண்பர்கள்
 15. பர்மாரமணி
 16. எங்கள் பாட்டி
 17. மிருகங்களுடன் மூன்று மணி
 18. நல்ல நண்பர்கள்
 19. பாட்டிலே காந்தி கதை (பாடல் தொகுதி)
 20. குதிரைச் சவாரி
 21. நேரு தந்த பொம்மை
 22. நீலாமாலா
 23. பாடிப் பணிவோம் (பாடல் தொகுதி)
 24. வாழ்க்கை விநோதம்
 25. சின்னஞ்சிறு வயதில்
 26. பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள்

அழ. வள்ளியப்பா 11 பாடல் தொகுதிகள், 12 புதினங்கள், 9 கட்டுரை நூல்கள், 1 நாடகம், 1 ஆய்வு நூல், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 1 தொகுப்பு நூல் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். இவற்றில், 2 நூல்கள் இந்திய அரசின் பரிசும், 6 நூல்கள் தமிழக அரசின் பரிசும் பெற்றன.

அவரைப்பற்றிய காணொளி இங்கே: 

 

 

 நல்ல  திருப்பம்!- தில்லைவேந்தன்

.               நல்ல  திருப்பம்!
Image result for sky
ஆவின் கன்று குரலெழுப்பி,
     ‘அம்மா’ என்று  விளிப்பதையும்,
கூவும் குயிலின் இசையினிலே
      குழலும் விரவிச் சிறப்பதையும்,
பூவில் வண்டு தேனருந்திப்
     போதை கொண்டு பறப்பதையும்,
பாவின் பொருளாய்ப் பலமுறையும்
     பாடிச் சலித்துப் போய்விட்டேன்
திரும்பத் திரும்பக் காதலினைத்
     திகட்டும் வரையில் பாடிவிட்டேன்.
விரும்பிக் கேட்கும் இன்னிசையை
      வெறுக்கும் அளவு போற்றிவிட்டேன்.
கரும்பின் சுவையைப் புகழ்ந்துவிட்டுக்
     கைக்கும்  வேம்பின் நலம்மறந்தேன்
அரும்பும் வேர்வை சிந்திடுவோர்
      அவரைப் பற்றிப் பாடிடுவேன்
கதிரை, மதியை, விண்மீனைக்
     கவிதை பாடிக் களைத்துவிட்டேன்
நதியை, மலையை,கடலழகை
     நாளும்  பாடி நலிந்துவிட்டேன்
பொதியை இறக்கி வைக்கின்றேன்
     போதும், போதும், இனிமக்கள்
விதியின் பிடியை உதறிவிட்டு
       மேன்மை யுறவே பாடிடுவேன்.
மானி டத்தின் மகத்துவத்தை
     வாழ்வின் நிலைத்த தத்துவத்தை,
ஊனை உருக்கும் உண்மைகளை
     உரக்கச் சொல்லிப் பாடிடுவேன்
போன வற்றைப் புறந்தள்ளிப்
      புதிய உலகம் படைத்திடவே
நானி யற்றும் ஒளிர்கவிதை
       நல்ல    திருப்பம்   ஆகட்டும்!
           
                                       
   

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

சுதந்திரக் கதை சொல்லும் அந்தமான் செல்லுலார் ஜெயில்!

அடர்த்தியான காடுகளும், எழில்மிகு கடற்கரையும் கொண்ட அழகிய அந்தமான் நிகோபார் தீவுகளின் தலை நகரம் போர்ட் ப்ளேர் –

இந்தியாவின் பகுதியான அந்தமான்,

சுமார் ஆயிரம் மைல்களுக்கு அப்பால், காலாபானி (INFAMOUS WATER) என்றழைக்கப்பட்ட கடல் சூழ்ந்த தீவு என்பதோ,

நிர்வாணமாகச் சுற்றித் திரிந்த ‘நெக்ரிடோ’ ஆதிவாசிகள்,

தீவுக்கு வரும் புதிய மனிதர்களின் மார்புகளைக் கருணையின்றித் துளைக்கும் அம்புகளை ஏவிவிடும் மனிதர்களின்  இருப்பிடம் என்பதோ,

தரை தட்டும் கப்பல்களில் பயணிகள், கோரமான முறையில் தங்கள் முடிவுகளை எதிர்கொண்டார்கள் என்பதையோ,

இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கம், ஆயிரக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களைக் கொடுமையான முறையில் தண்டிப்பதற்கான ஜெயில்களைக் கட்டியிருந்தனர் என்பதனையோ,

வீர சவார்கார், நேதாஜி போன்றவர்களின் தியாகங்களையோ –

இன்று கூடைத் தொப்பியும், கருப்புக் கண்ணாடியும், அரை டிராயரும் அணிந்து, கையில் பெரிய காமிராவும் கொண்டுவரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவுதான்!

போர்ட் ப்ளேரில் இருக்கும் ‘செல்லுலார்’ ஜெயில், ஒவ்வொரு இந்தியனும் அவசியம் பார்க்கவேண்டிய இடம் –

அதன் ஒவ்வொரு செங்கல்லும், இந்திய சுதந்திரம்பற்றிய கதையை சோகத்துடன் சொல்லிக் கொண்டிருப்பதை அங்கு உணரமுடியும்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மிகவும் சிதிலமடைந்த நிலையில், பாதுகாப்பற்ற ஜெயிலாகவும், போர் விதவைகளுக்கும், அனாதைகளுக்கும் பாதுகாப்பகமாகவும் இருந்தது செல்லுலார் ஜெயில்.

1979 ஆம் ஆண்டு, பிப்ரவரி 11 ஆம் நாள், அப்போதைய பிரதமர் திரு மொரார்ஜி தேசாய் அவர்களால், செல்லுலார் ஜெயில் ‘நேஷனல் மெமோரியல்’ ஆக நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இன்று ஜெயிலின் 7 பகுதிகளில் (WINGS), 1,6, 7 விங்ஸ் மட்டும் பாதுகாக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு உள்ளன. அந்தமான் தீவு, செல்லுலார் ஜெயில்கள், பிரிட்டிஷ் அரசின் கொடுமைகள், கைதிகளின் சித்ரவதைகள், ஜப்பானியரின் வன்முறைகள், வீரசவார்கார், நேதாஜி புகைப்படங்கள், மியூசியம், ஆர்ட் கேலரிகளில் சரித்திரம் பேசுகின்றன. செல்லுலார் ஜெயிலின் சரித்திரம் சொல்லும் ஒளியும், ஒலியும் நிகழ்ச்சி மாலை சுமார் ஒரு மணி நேரம் நடக்கிறது – நான் போன அன்று இந்தியில் ஒலிபரப்பு – ஏதோ சுமாராகக்கூட புரியவில்லை! எனக்கு இந்தி தெரியாதது செல்லுலார் ஜெயிலின் குற்றமல்ல!

ஒரே சமயத்தில் மூன்றுபேரைத் தூக்கிலிடக்கூடிய தூக்கு மேடை, சவுக்கடி வாங்கும் கைதி, கை, கால்களில் இரும்புச் சங்கிலி பிணைத்த கைதிகள், சணலில் தைக்கப்பட்ட கைதி உடை என மனதைப் பிசையும் காட்சிப் பொருட்கள் – ‘வந்தே மாதரம்’ எழுதப்பட்ட மேடையின் மேல் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் ஜோதி, வீர் சவார்கார் இருந்த ‘செல்’ அவரது புகைப்படத்துடன் –

சுற்றிலும் கடல், ஒருபக்கம், ஜிகே பண்ட் ஆஸ்பிடலாய் மாறிப்போன இரண்டு விங்ஸ், மாடியில் நேதாஜியின் அந்தமான் விசிட் புகைப்படங்கள், புல்வெளிகள், பார்க் பெஞ்சுகள் – நன்கு பராமரிக்கப்படுகின்றன.

1857 சிப்பாய்க் கலகத்துக்குப் பின் விடுதலைப் போராட்ட வீரர்களையும், புரட்சியாளர்களையும் அந்தமான் சிறைக்கு – முதலில் வைப்பர் தீவுச் சிறை, பின்னர் செல்லுலார் ஜெயில் – டேவிட் பாரிக்கர்(ஜெயிலர்), மேஜர் ஜேம்ஸ் பாட்டிஸன் வாக்கர் (மிலிட்டரி டாக்டர்) தலைமையில் அனுப்புவதிலிருந்து தொடங்குகிறது இந்த சிறைச்சாலைக் கொடுமைகள்.

இருநூறு புரட்சியாளர்கள், கராச்சியிலிருந்து 733 பேர் (1863), மற்றும் இந்தியா, பர்மாவிலிருந்து சிறைக் கைதிகள் என இந்தத் தீவில் தண்டனைக்கு அனுப்பப் படுகின்றனர். பஹதூர் சாஃபர் ராயல் குடும்பம் மற்றும் அரசுக்கு எதிராகப் பெட்டிஷன் கொடுத்தவர்களும் இதில் அடக்கம்!

வைப்பர் தீவு போர்ட் ப்ளேரிலிருந்து 4 கிமீ தூரத்தில் உள்ளது. மிகக் கொடூரமான தண்டனைகள் – தூக்குத் தண்டனைகள் உட்பட்ட – வழங்கப்பட்ட இடம். இன்றும் எஞ்சியுள்ள ஜெயிலில் தூக்கிலிடப்பட்ட இடங்களைக் (GALLOWS) காணலாம். பேஷ்வார் ஷேர் அலி பத்தான், அப்போதைய இந்திய வைசிராய் லார்ட் மேயோவைக் கொலைசெய்த குற்றத்துக்காக இங்குதான் தூக்கிலிடப்பட்டார்!

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், சுதந்திரப் போராட்டம் வலுக்கவே, ஏராளமான கைதிகள் அந்தமானுக்கு அனுப்பப்பட்டனர். சார்லஸ் ஜேம்ஸ் லயல் – ஹோம் செக்ரடரி – கடுமையான தண்டனைகளை விதித்தார். தாய் மண்ணிலிருந்து வெகு தூரத்தில், தனிமைப்படுத்தப்பட்டு, சித்ரவதை செய்வதற்காகவே எழுப்பப்பட்டது ‘செல்லுலார்’ ஜெயில். 1896 – 1906 – பத்து வருடங்களில் கட்டப்பட்டது – பர்மாவிலிருந்து செங்கல் வரவழைக்கப்பட்டது – சைக்கிள் சக்கரத்தில் கம்பிகளைப்போல (SPOKES), நடுவில் ‘சென்ட்ரல் டவர்’, அதிலிருந்து ஏழு கிளைகளாக ஜெயில்! காவலர்களுக்கான மத்திய டவரில் ஒரு பெரிய மணி !

பேனொப்டிகான் (PANOPTICON) என்னும் வடிவில், ஜெரெமி பெந்தாம் என்பவரின் எண்ணத்தில் உருவானது இந்த ஜெயில். மூன்று தளங்கள், மொத்தம் 696 அறைகள் (செல்). அறை 14.8 அடிக்கு 9.9 அடி என்ற அளவில், ஒருபுறம் ஜெயில் கதவும், எதிர்புறம் 10 அடி உயரத்தில் ஒரு சின்ன ஜன்னலுடன் இருக்கின்றன. ஒரு கிளையின் அறைகளின் முன் பக்கம், அடுத்த கிளையின் அறைகளின் பின் பக்கத்தைப் பார்த்தவாறு அமைக்கப் பட்டிருப்பதால், கைதிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதோ, பேசிக்கொள்வதோ முடியாது! சவார்க்கர் சகோதரர்கள் (விநாயக் தாமோதர் சவார்கர், உம்பாராவ் சவார்கர்), இரண்டாண்டுகளுக்கு அதே ஜெயிலில் இருந்தபோதும், ஒருவருக்கொருவர் அதே இடத்தில் இருப்பதை அறியமுடியவில்லை!

80,000 க்கும் அதிகமான கைதிகள் – உயிர் பிழைத்தோர் மிக சொற்பமானவர்களே. தேங்காய் உரித்தல், செக்காட்டுதல், அடிமைக் கூலி வேலை, தனிமைச் சிறையடைப்பு, தூக்கு, கசையடி, மருத்துவப் பரிசோதனை என ‘டார்ச்சர்’ .

1868 தப்பியோட முயற்சித்த 238 பேர்களில், 87 பேர் தூக்கிலிடப்பட்டனர் – ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

1933 மே மாதம், உண்ணாவிரத்ப் போராட்டம் 33 கைதிகளால் நடத்தப்பட்டது. போராட்டத்தை முறியடிக்க, உணவை வாயில் திணிக்க, மூன்று பேர் – மஹாவீர் சிங் (லாஹூர் வழக்கு), மோகன் கிஷோர் நமதாஸ், மோஹித் மொய்த்ரா (ஆயுதம் வைத்திருந்த வழக்கு) – மூச்சுத் திணறி இறக்கின்றனர்.

மஹாத்மா காந்தி, ரபீந்திரநாத் தாகூர் ஆகியோரின் வற்புறுத்தலின்பேரில், சுதந்திர வீரர்கள், அந்தமான் செல்லுலார் ஜெயிலில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர் – 1939 ல் செல்லுலார் ஜெயில் காலி செய்யப்படுகிறது.

மீண்டும் 1942 ல் (இரண்டாம் உலகப்போர் சமயம்) ஜப்பானியர்களால் செல்லுலார் ஜெயில் கைதிகளின் கூடாரமாகிறது. கைதிகளையும், பிரிட்டிஷ் அரசுக்கு உளவு சொல்வதாக சந்தேகத்தின்பேரில் பிடித்தவர்ககளையும், சித்ரவதை செய்தும், தூக்கிலிட்டும், கடலில் ஜலசமாதி செய்தும் கொல்கின்றனர் ஜப்பானியர்.  சந்தேகத்தின்பேரில், பொதுமக்கள் முன்னிலையில், சுட்டுக் கொல்வதும், கழுத்தை அறுத்துக் கொலை செய்வதும் இன்றும் அந்தந்த இடங்களில் நினைவுச் சின்னங்களாக மெளனம் காக்கின்றன.

இரண்டாம் உலகப் போரின்போது அந்தமானின் இரண்டு முக்கிய நிகழ்வுகள் – போர்ட் ப்ளேர் விமான நிலையம், மற்றும் செல்லுலர் ஜெயிலை சிதைத்த மிகப் பெரிய பூகம்பம்.

ஜெயில் மீண்டும் மராமத்து செய்யப்பட்டு – இன்று நாம் காணும் மரத்தால் ஆன கட்டிடங்கள்- சரியாகக் கட்டப்பட்டன.

3, 4 ஆவது விங்ஸ் இடிக்கப்பட்டு, செங்கல் மற்றும் இரும்புத் தளவாடங்கள், தங்கள் பாதுகாப்புக் கட்டிடங்களுக்கு உபயோகப்படுத்துகின்றனர் ஜப்பானியர்.

இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் ஒன்றறக் கலந்துவிட்ட செல்லுலார் ஜெயில், ஜப்பானியர்கலால் இடித்து ஊனப்படுத்தப்பட்டது!

செல்லுலார் ஜெயில், இப்படிப்பட்ட கொடூரங்களைப் பார்த்ததற்குச் சாட்சியாக இன்றும் வருத்தமுடன் நிற்பதாய்த் தோன்றியது.

செல்லுலார் ஜெயிலின் பெருமைக்குரிய நிகழ்வு – பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியமே அஞ்சிய, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் – HEAD OF AZAD HIND GOVERNMENT – 1943 டிசம்பரில் அந்தமான் வந்து, ஜெயிலைப் பார்வை இட்டதுதான்! இந்திய சுதந்திரத்தின் முதல் கட்டம், அந்தமான் நிகோபார் தீவுகள் விடுதலை! முதன் முதலில் 1943 டிசம்பரில் நேதாஜி இந்திய மூவர்ணக் கொடியை அந்தமானில் பறக்கவிடுகிறார்!

செல்லுலார் ஜெயில் கொடுமைகளைக் கண்டு கண்ணீர் விடுகிறார். தன் முயற்சியால், ஜப்பான் அதிபர் மூலம் 600 க்கும் அதிகமான குற்றமே செய்யாத கைதிகளை, செல்லுலார் ஜெயிலில் இருந்து விடுதலை செய்கிறார்.

1945, 15 ஆகஸ்ட் ஜப்பான் அதிபர் ஹிரேஷிதோ சரணடையும்வரை இந்தக் கொடுமைகள் தொடர்கின்றன – செல்லுலார் ஜெயில் சரித்திரத்தின் இருண்ட ஒரு பகுதி முடிவுக்கு வருகிறது.

அந்தமானில் என்ன இருக்கிறது ? என்ற எண்ணத்துடனேயே அந்தமான் பயணித்தேன் – பார்த்தவை, கேட்டவை, படித்தவை எனக்கு உணர்த்தியது இதுதான்:

இந்திய சுதந்திரம் ‘சும்மா’ கிடைக்கவில்லை – ஆயிரக்கணக்கானோரின் இரத்தத்தில் தோய்ந்து, உயிரினில் மாய்ந்து, தியாகத்தில் கனன்று கிடைத்தது.

“தண்ணீர் விட்டோ வளர்த்தோம், சர்வேசா” – பாரதியின் பாடல் எவ்வளவு உண்மை!

ஜெய் ஹிந்த்!!