எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்

Image result for சூரியதேவன் விஷ்வகர்மாவின் மகள்

ஸந்த்யாவின் முகத்தில் தெரிந்த கோபாக்னியைக்  கண்டு பயந்த சூரியதேவன் அவள் வார்த்தைகளால்  தெளித்த அக்னித் திராவகத்தின் சூட்டுக்கோல்களைப் பொறுக்கமாட்டாமல் தவித்தான். சூரியனின் நெஞ்சையே எரிக்க வைத்த எரி அம்புகள் அல்லவா அந்த வார்த்தைகள். தான் அரை மயக்கத்தில் சாந்துக்குளியலில் இருந்தபோது விஷ்வகர்மா தன்னிடம் உதிக்கப்போகும் மாபெரும் மஹாபிரும்மருத்ரனுக்காக மூன்று உயிர் என்ன  மூன்று கோடி உயிர்களை அழிக்கலாம் என்றவகையில் தன்னிடம் பேசி அதற்கு அனுமதியும் வாங்கியது எல்லாம் கனவோ என்று இருந்தான். ஆனால் இப்போது ஸந்த்யா கூறும்போதுதான் அவற்றின் முழு அர்த்தமே அவனுக்குப் புரிந்தது.

” என்ன! நான் மூன்று குழந்தைகளுக்குத் தந்தையா?” என்று மகிழ்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் சூரியதேவன் கூறியதைக் கேட்ட ஸந்த்யா தற்போது ஆச்சரியத்தின் வலையில் விழுந்தாள். “தந்தையாகப் போகும் சேதி அவனுக்கு தெரியாதா? அதை நான் இப்படியா சொல்லுவது ?” என்ற எண்ணம் அவளை நிலைகுலையச் செய்தது.

அவள் கண்ணில் இருந்த கோபம் மறைந்தது. காதலும் ஆசையும் வெட்கமும் ஒன்றோடொன்று போட்டிபோட முடியாமல் தவித்தன.

சூரியதேவன் அருகில் வந்து ஸந்த்யாவை இறுகத் தழுவிக்கொண்டான். ஸந்த்யாவும் அவன் தோள்களைப்பற்றி  அவன் பரந்த மார்பில் முகம் புதைத்து ஆறுதல் அடைந்துகொண்டிருந்தாள். தனக்கும் சூரியதேவனுக்கும் இடையே தந்தை ஒரு மாயவலையைப் பின்ன முயற்சித்திருக்கிறார் என்பதை அவள் நன்கு புரிந்துகொண்டாள்.

சூரியதேவனோ அவள் சொன்ன வார்த்தைகளின் மயக்கத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை. மூன்று குழந்தைகள், மூன்று குழந்தைகள் என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே அவள் நெற்றியிலும் கன்னத்திலும் மாறிமாறி முத்தமிட்டுக் கொண்டிருந்தான். மெதுவாக அவளைத் திருப்பி அவள் கழுத்தில் முத்தமிட்டுக்கொண்டே அவளது ஆலிலை வயிற்றை மெல்லத் தடவிக்கொடுத்தான்.

பிறகு மெல்ல அவளைத் தூக்கிக்கொண்டு அன்னப்பறவையை அணைத்து எடுத்துச் செல்வதுபோல அவளுக்குக் கொஞ்சமும் வலிக்காத அளவில் தன்னுடைய பஞ்சணையில் படுக்கவைத்தான். அவள் வெட்கத்தில் பஞ்சணையில் நெளிந்தது, இளமயில் ஒன்று தன் தோகையை விரித்துவிரித்து மூடுவதுபோல் இருந்தது. சூரியதேவனும் அவள் அருகே அமர்ந்து அவள் மெல்லிய கைகளைத் தன் கைகளில் சிறைப்படுத்தி ஆவல் ததும்பும் விழிகளால்

” மூன்று குழந்தைகளா? நமக்கா? எப்படி?எப்படி? எங்கு?  தடாகத்திலா?  காந்த அறையிலா?” என்று கோர்வையாகக் கேட்கத் தெரியாமல் தடுமாறிக்கொண்டே கேட்டான்.

காந்த அறையில்தான்  நிகழ்ந்திருக்கவேண்டும். தடாகத்தில் உங்களிடம் வெப்பம் அளவிற்கு அதிகமாக இருந்ததால் என் உடலே உருகத் தொடங்கிவிட்டதே! ஆனால் காந்த சிகித்சைக்குப்பிறகு  நாம் அளவிற்குமீறி அத்துமீறிவிட்டோம். அதற்கு இன்னொரு முக்கியக் காரணமும் இருந்திருக்கிறது. நம் மீது ராகுவின் பார்வையும்பட்டிருக்கிறது.”

ராகுவின் பெயரைக் கேட்டதும் சூரியதேவன் திடுக்கிட்டு எழுந்தான்.

” ராகு ! என்ன தைரியம் அவனுக்கு! அவனை அந்த ஸ்வர்ணபானுவை என்றைக்கு அமிர்தத்தைத் திருடினானோ அன்றே கொன்றிருக்கவேண்டும். “

அதைத்தானே மாகாவிஷ்ணுவும் செய்தார். ஆனால் அமிர்தம் உண்டதால் அவனை யாரும் அழிக்க முடியாது. சிவபெருமானும் ராகுவையும் கேதுவையும் படைத்து அழிவில்லாதவர்களாக வரம் கொடுத்துவிட்டாரே!”

“அதுமட்டுமல்லாமல் என்னையும் வருடத்தில் ஒருமுறை அவன் ஆதிக்கத்தில் கட்டுண்டு இருக்கும்படியல்லவா செய்துவிட்டார்! இனி என்னால் பொறுக்கமுடியாது. அவனை அழித்தே தீருவேன்”

” சினத்தை விடுங்கள்! அவன் நமக்கு பெரிய உதவி புரிந்திருக்கிறான்.”

” ராகுவா? நமக்கா? நிச்சயம் இருக்கமுடியாது. அதில் ஏதாவது வஞ்சனை இருக்கும்”

” நீங்கள் இம்முறை ராகுவை மன்னிக்கத்தான் வேண்டும். அவனின் பார்வை காமத்தைத் தூண்டும் என்பது அனைவரும் அறிந்ததே! அவன் திருஷ்டி உங்கள்மீது விழுந்ததால்தான் உங்கள் கண்ணில்  தடாகத்தில் குளித்துக்கொண்டிருக்கும் என்மீது உங்கள்  காதல் பார்வை விழுந்தது. மேலும் காந்த அறையிலும் அவன் பார்வை நம்மீது பட்டதால் நமக்குள் காதல் தீ பற்றிஎரிந்தது. நாமும் கலந்தோம். மூன்று குழந்தைகள் என் வயிற்றில் உருவாகின. என் தந்தை குழந்தைகள் ஜனித்ததை அறிந்து அவற்றை அழிக்க மருந்தினைக் கொடுத்து என் தாய் மூலமே எங்களுக்குத் தெரியாமல் புகட்டவும் ஏற்பாடு செய்தார். அதைத் தடுத்தது யார் தெரியுமா? “

“யார்?”

“ராகுதான்.”

” உன் தந்தை நம் குழந்தைகளைக் கொல்லமுயற்சிக்கிறார். என் எதிரி அதைத் தடுத்துக் காப்பாற்றுகிறான்.  விந்தையிலும் விந்தை”

” அதைவிட நீங்களும் என் தந்தையுடன் சேர்ந்து குழந்தைகளைக் கொல்ல முயற்சிக்கிறீர்கள் என்றும் எங்களை  நம்ப வைத்தான். அதனால்தான் உங்களைத் தேடிக்கொண்டு உங்கள்  லோகத்திற்கே  வந்தேன். உங்களைப் பார்த்த மாத்திரத்திலே தெரிந்துவிட்டது உங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று”

” என் பிஞ்சுச் செல்வங்களை நானே அழிக்க முற்படுவேனா? இதற்குக் காரணமான விஷ்வகர்மாவைத் தண்டிக்காமல் இருக்கமுடியாது”

” உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். என்ன இருந்தாலும் அவர் என்னைப் பெற்ற தந்தை. அவரும் மஹாபிரும்மருத்ரன் அவதரிக்கவேண்டும் என்பதற்காகவே இதைச் செய்தார். அவரை விட்டுவிடுங்கள். நானும் அவரை மறந்துவிட்டு உங்கள் மனைவியாக இந்த நொடியிலிருந்து வாழச் சம்மதிக்கிறேன்.”

” ஆஹா! இது போதும் ஸந்த்யா! இது போதும்.! நீ என்னுடன் இக்கணத்திலிருந்து இருப்பதாக சம்மதித்தால் விஷ்வகர்மாவை என்ன, ராகுவையும் சேர்த்து மன்னிக்கிறேன். மும்மூர்த்திகளின் ஆசிகளைப் பெற்று நம் இல்வாழ்வைக் களிப்புடன் துவங்குவோம். வா! என் இதய ராணியே!”

ஸந்த்யாவை அணைத்தபடியே அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்றான்.

ஸந்த்யாவுடன் அவளது நிழலும் கூடவேசென்றது. அதனால் விளையப்போகும் ஆபத்துக்களைப்பற்றி அந்தத் தெய்வீகக் காதலர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.

காமம் அவர்கள் கண்களை மூடி இருந்தது.

(தொடரும்)

இரண்டாவ்து பகுதி

Image result for சாலமன் பாப்பையா

எமபுரிப் பட்டணத்தின்  அழகிய தமிழ் உள்ளங்களே! பேசுவதற்கென்றே பிறந்த என் சக தோழர்களே! வழக்கமான பட்டி மன்றத்தில் ஒரு தலைப்பைக் கொடுத்து ஓர் அணி அதை ஒட்டியும் மற்றோர் அணி அதை வெட்டியும் பேசுவது மரபு. உதாரணாமாக ‘தமிழ் இனி மெல்லச் சாகும்’ என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டு ஓர் அணியை ‘ஆம், தமிழ் இனி சாகும்’ என்று ஒட்டிப் பேசவிட்டு, மற்ற அணியை ‘இல்லை,தமிழ் இனி சாகாது’ என்று வெட்டிப் பேசுவது அந்தக்கால பட்டிமன்ற மரபு.

பின்னால் தொலைக்காட்சிகளில் பட்டிமன்றம் வந்தபோது தலைப்பிலேயே இரு அணிகளின்  கருத்து வெளிப்படையாகத் தெரியும்.  அதாவது ‘கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா?’ என்று தலைப்பு இருக்கும். மக்களுக்கும் நன்றாகப் புரியும். அப்படித்தான் நானும் நினைத்துக்கொண்டிருந்தேன்.

ஒரு பெண்கள் கல்லூரியில் இந்தத் தலைப்பை வைக்கலாம் என்று பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு  அம்மையார் எழுந்து ‘கண்ணகி – மாதவி புரிகிறது . அதென்ன கற்பு? இரண்டு பேரும் கறுப்பா? என்று கேட்டார். அப்படியே ஆடிப்போய்விட்டேன். ‘அவர்கள் இருவரும் கருப்பு இல்லையம்மா! நான்தான் கறுப்பு’ என்று சொல்லிவிட்டு அந்தத் திசைக்கே கும்பிடு போட்டுவிட்டு ஓடி வந்துவிட்டேன்.

ஆக, பட்டிமன்றத்தில் தலைப்பை வைக்கும்போதே வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பதுபோல ‘இதுவா அதுவா’ என்று சரியாகக் கோடிட்டுக் காட்டவேண்டும். ஒரு சமயம் ‘நிம்மதியான வாழ்வைத் தருவது ‘இல்லறமே/துறவறமே’ என்று தலைப்புக் கொடுத்திருந்தார்கள். வேடிக்கை என்னவென்றால் இல்லறம் சார்பில் பேச இருந்தவர்கள் மூன்று பேரும் சாமியார்கள். துறவறம் என்று பேச வந்தவர்கள் மூவரும் ரெண்டு பெண்டாட்டிக்காரர்கள். துறவறம் பெண்ணுக்குச் செய்யும் அநீதி என்று ஒருவர் வாதிட, இல்லறம் ஆணிற்குச் செய்யும் அநீதி என்று மற்றவர் வாதிட தீர்ப்பு சொல்வது மிகவும் கடினமாகிவிட்டது. சரி, புதுமையான தீர்ப்பைச் சொல்லுவோமே என்று நிம்மதியான வாழ்விற்கு இளமையில் இல்லறம் என்றும் முதுமையில் துறவறம் என்றும் முடிவு கூறி விடைபெற்றேன். வீட்டுக்கு வந்து பார்த்தால் என் மனைவி எனக்கு இரண்டு காவி வேட்டியை வைத்துவிட்டுப் பிறந்த வீட்டுக்குப் போய்விட்டாள்.

அது பட்டி மன்றத்தில். இது விவாத மேடை. மூன்று தலைப்புக்கள் இருக்கின்றன. மூன்று அணிகளும் இருக்கின்றன. 

“எது சிறந்தது? ஆக்கலா? காத்தலா? அழித்தலா? ” என்பதுதான். 

இங்கு பிரும்மபுரி, வைகுந்தபுரி, கைலாசபுரி மூன்று உலக மக்களும் திரண்டு வந்திருக்கின்றனர். 

ஆக்கல் சார்பில் பாரதி பாஸ்கர் அணி 

காத்தல் சார்பில் ராஜா  அணி 

அழித்தல்  சார்பில் திண்டுக்கல் லியோனி  அணி 

இங்கு பேச வந்திருப்பவர்களை அறிமுகம் செய்யுமுன் இந்தத் தலைப்பைப்பற்றி நாம் கொஞ்சம்  சிந்திக்கவேண்டியிருக்கிறது.

அந்தக் காலத்தில் ஏ பி நாகராஜன் ஐயா அவர்கள் கல்வியா? செல்வமா? வீரமா? எது சிறந்தது ? என்ற கேள்வியைக்கேட்டு சரஸ்வதி சபதம் என்று ஒருபடம் எடுத்தார். அதில் கலைமகளும், அலைமகளும், மலைமகளும் தங்கள் கட்சி ஜெயிக்கவேண்டும் என்று பூலோகம் வந்து புலவனுக்கும், அரசிக்கும், தளபதிக்கும் இடையே பகையை உண்டாக்கி முடிவில் நாடு இவர்கள் சண்டையால்  அழியும் நிலை வரும்போது மும்மூர்த்திகளும் வந்து மூன்றும் சமம் இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் கிடையாது என்று சொல்லி சுபம் போடுவார்கள். 

அதைப்போன்ற தலைப்புதான் இன்றைக்கும் நம் முன் நிற்கிறது. ஆக்கல், காத்தல்,அழித்தல் மூன்றும் மிகமிக முக்கியத் தொழில்கள்! ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை. பிரும்மா ஆக்கலுக்கும், விஷ்ணு காத்தலுக்கும் சிவன் அழித்தலுக்கும் காரணகர்த்தாக்கள் என்பது அனைவரும் அறிந்ததே. 

ஆக இம்மூன்று தொழில்கள் புரிகின்ற மும்மூர்த்திகளில் யார் சிறந்தவர் என்பது இந்த விவாதமேடையின் விவாதப்பொருள் அல்ல. மூன்று தொழில்களில் எது தலையானது, முக்கியமானது, சிறந்தது என்று சீர்தூக்கிப் பார்ப்பதே இன்றைய விவாதத்தின் பணியாகும். பேசுபவர்களும் கேட்பவர்களும் இதை மனதில் வைத்துக்கொண்டு நிகழ்ச்சியில் பங்குபெறவேண்டும். ” 

Related image

சாலமன் பாப்பையா மேலும் பேசத்தொடங்கும்போது  அவையில் சலசலப்பு ஏற்பட்டது. பிரும்மா விஷ்ணு சிவன் மூவரும் சேர்ந்து முன் வரிசையில் வந்து அமர அவையின் கரகோஷம் நிற்பதற்கு பத்து நிமிடங்கள் ஆயின. அவர்களுக்குப் பின்வரிசையில் மாறுவேடத்தில் இருந்த முப்பெரும் தேவிகளும் தங்கள் இருக்கையில் நிலை கொள்ளாமல் தவித்தனர். 

எமி ஆச்சரியப்பட நாரதர் முகத்தில் புன்னகை அரும்பியது. 

(தொடரும்) 

 

 

 

 

 

 

நரக தண்டனைகள்

 

Related image

 

கருட புராணம் கூறும் 28 கொடிய நரகங்கள்…

1. பிறன்மனைவி, குழந்தை, பொருள் இவற்றை கொள்ளையடிப்போர் அடையுமிடம் தாமிரை நரகம்.
2. கணவன் அல்லது மனைவியை வஞ்சித்து வாழ்வோர் கண்களில் இருள், கவ்விய மூர்ச்சித்து விழும் நரகம் அந்த தாமிஸ்ரம்.
3. அக்கிரமமாகப் பிறருடைய குடும்பங்களை அழித்து பலவந்தமாகப் பொருள்பறிக்கும் சுயநலக்காரர்கள் அடையும் நரகம் ரௌரவமாகும்.
4. குரு என்ற ஒருவகையான அகோரமான மான்கள் பாவிகளைச் சூழ்ந்து துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவமாகும்.

5. ஜீவன்களை வதைத்தும் சித்திரவதை செய்தும் புவியில் வாழ்ந்து மரித்தவன் அடையும் நரகம் கும்பி பாகம்.

6. பெரியோரையும், பெற்றோரையும் துன்புறுத்திய வெறியர்கள் அடையும் நரகம் காலசூத்திரம்.

7. பிறரை நிந்தித்து தனக்குரிய தர்மங்களை விடுத்த அதர்மிகளடையும் நரகம் அசிபத்திரமாகும்.

8. அநியாயமாகப் பிறரை தண்டித்து அகந்தையுடன் அநீதிகளும் பலவகைக் கொடுமைகளும் புரிந்தவர்கள் அடையும் நரகம் பன்றிமுகம்.

9. சித்திரவதை, துரோகம், கொலை செய்த கொடியவர்கள் அடையும் நரகம் அந்தகூபம்.

10. தான் மட்டும் உண்டு பிறரைத் துளைக்கும் கிருமிகள் போல வாழ்ந்து, பக்தியில்லாத பாவிகள் அடையும் நரகம் கிருமி போஜனம்.

11. பிறர் உரிமைகளையும் உடமைகளையும் தனக்கிருக்கும் வலிமையால் அபகரித்துக் கொள்ளும் பலாத்காரம் பாவிகளைடையும் நரகம் அக்கினி குண்டம்.

12. கூடத் தகாத ஆண் அல்லது பெண்ணைக் கட்டித் தழுவிக் கூடி மகிழும் மோக வெறியர்கள் அடையும் நரகம் வக்ர கண்டகம்.

13. நன்மை, தீமை, உயர்வு, தாழ்வு இவற்றை பாராமல் தரங்கெட்டு எல்லோருடனும் கூடி மகிழும் மோகந்தகாரப் பாவிகள் அடையும் நரகம் சான்மலியாகும்.

14. அதிகார வெறியாலோ, கபடவேசத்தாலோ, நயவஞ்சகத்தாலோ நல்வழிகளைக் கெடுக்கும் அதர்மிகள் அடையும் நரகம் வைதரணி.

15. கூச்சமில்லாமல் இழிமகளைக் கூடி ஒழுங்கீனங்கள் புரிந்தும் தன் வழியைவிட்டு ஓர் இலட்சியமுமில்லாமல் மிருகங்களைப் போல் திரியும் கயவர்கள் அடையும் நரகம் பூயோதம்.

16. பிராணிகளைத் துன்புறுத்திக் கொலைபுரியும் கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் பிராணரோதம்.

17. டம்பத்திற்க்காக பசுவதை புரிந்து யாகம் முதலியவற்றைச் செய்யும் பித்தலாட்டகாரர்கள் அடையும் நரகம் விசஸனம்.

18. வாழ்க்கைத் துணைவியை வற்புறுத்தி விபரீத மோக இச்சைக்கு ஆளாகிக் கெடுக்கும் தீயோர்கள் அடையும் நரகம் லாலா பக்ஷம்.

19. வீடுகளுக்கு தீ வைப்பது, சூறையாடுவது, ஜீவவதை புரிவது, விஷமூட்டுவது, கூட்டங்கூட்டமாகக் குடிமக்களைக் கொல்வது போன்ற செயல்களைச் செய்த பாவிகள் அடையும் நரகம் சாரமேயாதனம்.

20. பொய்சாட்சி கூறுதல் முதலிய அகம்பாவச் செயல்புரியும் பாவிகள் அடையும் நரகம் அவீசி.

21. எக்குலத்தினராயினும் மதுபோதைப் பொருள்களைக் கொடுத்தும் குடித்தும் குடிகளைக் கெடுக்கும் குடிகேடர்கள் அடையும் நரகம் பரிபாதனம்.

22. தன்னைமட்டுமே பெரியதாய் மதித்துப் பெரியோரையும், நல்லோரையும் அவமதித்து தீச்செயல் புரிந்த பாவிகள் அடையும் நரகம் கஷாரகர்த்தமம்.

23. நரமேத யாகம் புரிதல், ஆணாயினும் பெண்ணாயினும் மனித மாமிசம் புசித்தல், சாதுவான பிராணிகளை வதைத்தல் முதலான தீவினை புரிந்தோரை முன்னின்று வதைக்கு அவதிப்படும் நரகம் ரகோஷாகனம்.

24. எவ்விதத் தீமையும் புரியாதோரைக் கொல்லுதல், நயவஞ்சகமாகக் கொல்லுதல், தற்கொலை செய்து கொள்ளுதல், நம்பிக்கைத் துரோகம் புரிதல் இவர்கள் அடையும் நரகம் சூலரோதம்.

25. தீமையே புரிந்த துரோகிகளடையும் நரகம் தந்த சூகம்.

26. பிராணிகளைக் கொடூரமாக வதைத்த கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் வடாரேவதம்.

27. வீட்டுக்கு வந்த விருந்தினரை வெறுத்து நிந்தித்த லோபிகளும் பகிர்ந்துண்ண விரும்பாத சுயநலவாதிகளும் அடையும் நரகம் பரியாவர்த்தனகம்.

28. செல்வச் செருக்காலும், செல்வாக்கினாலும், பிறரைத் துன்புறுத்துகிறவர்களும் அநீதியாய்ப் பொருள் சம்பாதித்து, அறநெறிகளில் செலவிடாமல் பதுக்கி வைப்பவர்கள் அடையும் நரகம் சூசிமுகம் என்பதாகும்.

 

தவறு செய்பவர்களுக்கு நரகம் காத்திருக்கிறது என்பதை அனைத்து மதங்களும் எச்சரிக்கின்றன என்பதே உண்மை. வரம்புமீறித் தவறு செய்யும் சகோதரர்கள் சிந்திப்பார்களா?

 

கண்வேறு எதைக் காணவேண்டும்– கோவை சங்கர்

Image result for மீனாக்ஷி அம்மை

கண்டுவிட்டேன் உனைக் கண்டுவிட்டேன் – உனைக்கண்ட
கண்வேறு எதைக் காணவேண்டும்..!

துள்ளிவரும் மீன்களிலுன் கயல்விழியைக் காண்கின்றேன்
தெளிவான நீரிலேயுன் உள்ளத்தைப் பார்க்கின்றேன்
கள்ளமிலா குழந்தைகளின் களிப்பான சிரிப்பினிலே
பெண்ணேயுன் மோகனப் புன்னகையைப் பார்க்கின்றேன்!

ஆழமான அன்புடனே பாசமதும் ஒருசேர
எழிலோங்கும் தாயுருவில் உன்னைநான் பார்க்கின்றேன்
பசுமையாய் பயிர்களும் பரவிநிற்கும் பூமியிலே
பச்சையம்மா நானுந்தன் எழில்மேனி காண்கின்றேன்!

வட்டமான தண்ணிலவும் வானுலகில் ஓடுகையில்
வட்டமான உன்முகத்தை சாந்தமொடு பார்க்கின்றேன்
விரிவான நீள்வானின் நீளத்தை யளக்கையிலே-உன்
பரந்தமனப் பான்மையினைப் பாங்கோடு பார்க்கின்றேன்!

நீயில்லா இடமில்லை ஆட்கொள்ளா ஆளில்லை
வையத்தி லுன்புகழ் சொல்லாத நாவில்லை
திருமகளே கலைமகளே மலைமகளே மீனாட்சி
பெருந்தேவி உன்நாமம் பாடாத இசையில்லை!

ஆதியும் நீயே அந்தமும் நீயே
ஆடுபவளும் நீயே ஆட்டுவிப்பவளும் நீயே
உன்னடியார் விருப்பத்தை யேற்றவோர் வண்ணம் – பல
உருவத்தில் தோன்றுகின்ற மாயவளும் நீயே!

இயற்கையில் நாமுணரும் இயக்கமும் நீயே
பல்வகை அணுக்களின் ஜீவனும் நீயே
காண்கின்ற இடமெல்லாம் இருப்பவளும் நீயே
முழுமுதற் கடவுளாம் பரப்பிரம்மம் நீயே!

 

 

ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (21) – புலியூர் அனந்து

Image result for புளியமரம்

 

சாலையில புளியமரம்

ஜமீந்தாரு வச்ச மரம்

ஏழைகளைக் காக்கும் மரம்

எல்லோர்க்கும் உதவும் மரம்

 

வேம்பு எட்டாம் வகுப்பு படிக்கும் நாளிலிருந்தே பகுதி நேர வேலை செய்யத்தொடங்கினான். சில நாட்கள் ஒரு காப்பிக்கொட்டை அரவை நிலையம். ஸ்டவ் பழுது பார்க்கும் கடை, சைக்கிள் வாடகை மற்றும் பழுது பார்க்கும் கடை என்று குறைந்த வருவாயானாலும் சம்பாதிக்கத் தொடங்கினான், படிப்பிலும் சோடைபோனவனல்ல. நல்ல மதிப்பெண்களுடன் பள்ளி இறுதி வகுப்புத்  தேறினான். கல்லூரியிலும் உதவித்தொகை கிடைத்தது. அது திருப்பிச் செலுத்தவேண்டிய வட்டியில்லாக் கடன் உதவித்தொகை. அதுவும் ஆசிரியப் பணியில் சேர்ந்தால் தள்ளுபடி ஆகிவிடும். (இப்போது அந்த நடைமுறை உள்ளதா என்று தெரியவில்லை)

மேலும் கல்லூரிக்கு 12 கிலோ மீட்டர் போகவேண்டும். அவன் வேலை செய்த சைக்கிள் வாடகைக் கடையிலிருந்து ஒரு சைக்கிளில் கல்லூரி போவான். சைக்கிள் கடை முதலாளி அந்தச் சலுகையை அவனுக்கு அளித்திருந்தார்.

வீட்டில் மாமனுக்கு வேண்டியதைப் பார்த்துக்கொள்வது, சைக்கிள்கடை பகுதிநேர வேலை, கல்லூரிப் படிப்பு என்று எப்போதும் உழைப்புதான். முகத்தில் எரிச்சல் சிடுசிடுப்பு எப்போதும் கிடையாது. பள்ளி மாணவர்களின் கணிதம் அல்லது ஆங்கிலம் சம்பந்தமாக எந்த சந்தேகத்தையும் தீர்த்து வைப்பான்.

கோவில் பண்டிகை, பள்ளிக்கூட விழாக்கள், பொதுத் துப்புரவுப் பணிகள், ஊரில் நடக்கும் எந்தப் பொதுப்பணியிலும் வேம்புவின் பங்களிப்பு சிறிதாவது இருக்கும். பலர் செய்யத் தயங்கும் விஷயங்களிலும் அனாயாசமாக ஈடுபடுவான். இறந்தவர்களுக்காக மூங்கில் தென்னங்கீற்று, கயிறு ஆகியவைகொண்டு ‘பாடை’ தயாரிக்கும்  நாகசாமித் தாத்தாவிற்கு இவன்தான் உதவியாளன். நாகசாமித் தாத்தாவிற்கு உடல்நலம் சரியில்லையென்றால், முழு வேலையையும் இவன்தான் செய்வான். தாத்தா மேற்பார்வை பார்ப்பார். இப்போதெல்லாம்  இதுபோன்ற வேலைகளுக்கு ‘கான்டிராக்ட்’ வந்துவிட்டது. அப்போது இவர்கள் எந்த தொகையும் வசூலிப்பதில்லை. எந்தத் தோப்பிலிருந்து பச்சை தென்னங்கீற்றுகள் எடுத்தாலோ மூங்கில் வெட்டிக்கொண்டாலோ யாரும் ஆட்சேபிப்பதில்லை. 

வேம்புபற்றிய பேச்சு வரும்போதெல்லாம் எல்லோரும் ‘அவன் ரொம்ப நல்லவன், பாவம்…” என்பார்கள். (கு)தர்க்கமாகக் கேள்வி ஒன்று கேட்கத் தோன்றும். நல்லவனாக இருப்பது புண்ணியம் அல்லவோ ? பாவம் எப்படி ஆகும்? நான் எப்போது யாரைக் கேள்வி கேட்டிருக்கிறேன்?)?

பட்டப் படிப்பு  படித்தான். ஆசிரியர் பணிக்கான படிப்பும் படித்து எங்கள் ஊரில் இருந்த ஒரு தனியார் பள்ளியிலேயே ஆசிரியராகச் சேர்ந்துவிட்டான். அரசுப் பள்ளியில் சேர்வதைத்தான் அந்தக் காலத்தில் எல்லோரும் விரும்புவார்கள். இவன் உள்ளூரிலேயே  வேலைக்குச் சேர்ந்ததற்கு தன்னுடன் இருந்த மாமனைக் காரணமாகச் சொல்வான். ஏன், மாமனுடனேயே இவன் வெளியூர்க்குச் செல்லலாமே? வெளியூர் போகாததற்கு ஊர் மக்களிடம் இருந்த நன்றி உணர்ச்சிதான் காரணமாக இருக்கவேண்டும் என்று தோன்றியது. தான் பெற்ற உதவிகளுக்குப் பதிலாக பலமடங்கு ஊருக்குத்  திருப்பித் தரவேண்டும் என்பது அவனது அறிவிக்கப்படாத கொள்கை என்று தோன்றிற்று.

எப்போது ஊருக்குச் சென்றாலும் வேம்புவுடன் சில மணி நேரமாவது கழிக்காமல் நான் ஊரைவிட்டுக் கிளம்பியதில்லை. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் வேலை பார்த்த நான், உள்ளூரில் இருந்து பயணம்செய்து வேலைபார்த்த வருடங்கள்  மிகக் குறைவு. அப்போதெல்லாம் நான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வேம்புவின் கூடவே இருப்பேன்.

எனக்கு வேலை கிடைத்ததைக் கேட்டபோது வேம்பு சொன்னது இன்றும் நினைவில் இருக்கிறது. “பாஸ்..(என்னை எப்போதும் அப்படித்தான் அழைப்பான்.)  நீங்க பாசாயிட்டிங்க. ஸ்கூலிலேயும் சரி .. வீட்டிலேயும் சரி.. உங்களை ஒரு பொருட்டா யாரும் மதிச்சதில்லை என்று எனக்குத் தெரியும். ஆனாலும், நீங்க ஒருமாதிரியா செட்டிலாயிடுவீங்கன்னு  உங்க வீட்டிலே பெருமூச்சு விடுவாங்க. இதப் பார்றா.. இவனுக்கு அடிச்ச அதிர்ஷ்டத்தை என்று உங்கள் கூட்டாளிகள் பொறாமைப்படலாம்.  நீ நீயாகவே இரு. உனது  வெற்றி எது என்பதை நீயே புரிந்துகொள். மனமார்ந்த வாழ்த்துக்கள்.” 

எனக்கென்னவோ அவன் சொன்னது ஓர் மேடைப்பேச்சு போலத்தான் அன்றுபட்டது. திரும்பவும் நினைத்துப் பார்க்கையில் கொஞ்சம் கொஞ்சம் புரிகிறது. நான் அதுபோல நடந்துகொண்டேனா என்பது ஒரு கேள்விக்குறிதான்.

வேம்புவின் வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நபரைப்பற்றியும் சொல்லவேண்டும்.

ஊரில்  எங்கள் தெருவில் இருந்த, அப்பா அம்மா வைத்த  பெயரே  என்னவென்று தெரியாமல்  எல்லோராலும் அய்த்தான் மதனி என்றோ கண்ணாடி மதனி என்றோ அழைக்கப்பட்டு வந்த பெண்மணிதான் அது.

சிறுவர், பெரியவர் என்ற வயது  வித்தியாசமில்லாமல் எல்லோருக்கும் அவர் மதனிதான்,  அவரைவிடக் குறைந்து இருபது வருடமாவது மூத்தவர்களான பால்காரப் பாட்டி, சிவன் கோவில் அர்ச்சகர் கூட அவரை மதனி என்றுதான் கூப்பிடுவார்கள்.

எனக்கு நினைவு தெரிந்த காலத்திலேயே ஐம்பது வயதினைக் கடந்தவர் அவர். ஒரு பழைய வீடு அவருடையது. மராமத்து பார்த்துப் பல மாமாங்கம் ஆகிவிட்ட வீடு அது. முன்னால் திண்ணை ஒட்டி சிறு அறைகள் இருந்தன, அதில் யாரேனும் சொற்ப வாடகைக்குக் குடியிருப்பார்கள்.

பள்ளி நாட்களிலேயே அன்னையை இழந்தவர். அப்போது இவருக்குப் பத்து வயதாம். வேறு உடன் பிறப்புகள் இல்லை. வழக்கத்திற்கு மாறாக, தந்தை மறுமணம் செய்துகொள்ளவில்லை.

குழந்தையாக இருந்த காலத்தில் மிக வசீகரமாக இருப்பாராம். ஊரில் இருந்த கிருஷ்ணன் கோவிலில் ஒரு வாரம் உற்சவம் நடக்கும். அதில் ஒருநாள் ஒரு குழந்தைக்குக் கிருஷ்ணர் வேடமிட்டு, வீடு வீடாக அழைத்துப் போவார்கள். மதனியின் மூன்று வயது முதல் ஏழு வயதுவரை அந்த வேஷத்திற்கு இவர்தானாம்.

அன்னையை இழந்த வருடம் அந்த இளம் வயதிலே வெறித்து வெறித்துப் பார்த்துக்கொண்டு  எதிலும் ஆர்வமில்லாமல் இருந்திருக்கிறார். தந்தை மறுமணம் செய்துகொள்ளாததற்கு இது காரணமாக இருந்திருக்கலாம்.

அந்தச் சமயத்தில் ஒரு நாடகக்குழு ஊருக்கு வந்தது. அதில் ஒரு பால முருகனாக ஒரு சிறுவன் நடித்துவந்தான். நாடகத்தன்று காலையில் அவனுக்குக் கடும் ஜுரம். குழப்பத்தில் இருந்த நாடகக் குழுவில் யாரோ மதனியைப் பார்த்திருக்கிறார்கள்.  இந்தப் பெண்ணை நடிக்க வைக்கலாமா என்று கேட்டிருக்கிறார்கள்.

மதனியின் அப்பாவிற்கு அரை மனது. நாடகத்தில் அம்மா வேடம்போடும் நடிகை இவளை நடிக்க வைப்பது என் பொறுப்பு என்று கூறி அணைத்துக்கொண்டாராம். மதனியின் முகத்தில் ஒரு மகிழ்ச்சியைக் கண்டு தந்தை கண்ணீர் ததும்ப அனுமதி கொடுத்தாராம்.

மேடையில் தோன்றிய அந்த ஒரு நிமிடத்தை மதனி பலமுறை பலரிடம் நினைவு கூர்ந்திருக்கிறார்..

அது ஒரு சமூக நாடகம்தான். ஒரு காட்சியில் கதாநாயகிக்கு முருகன் அருள் புரிவதாக ஒரு கனவுக் காட்சி. அதில் முருகன் வேடமணிந்த சிறுவன் அல்லது சிறுமி ஆகாயத்தில் இருந்து தோன்றுவதுபோலவும் சிலவினாடிகள் காட்சி அளித்து மறைவதுபோலவும் காட்சி அமைத்து இருந்தார்களாம்.

இதுபோன்ற காட்சிகளில் முருகனை நிற்க வைத்து திரை போட்டுவிடுவார்கள். பார்க்கும்போது திரைஎன்று தெரியாமல் மங்கலாக வெளிச்சம் அமைத்திருப்பார்கள். மேடை முழுவதும் ஒளியைக் குறைத்துவிட்டு சட்டென்று திரையை இழுத்துவிடுவார்கள்.

இந்தக் குழு வேறு முயற்சி செய்திருந்தார்கள். மரத்தில் ஒரு அமைப்பு செய்து அந்த நடிகரை அமரவைத்து ஊஞ்சல்போல் மேடையின் ஒரு பக்கத்தில் சற்று உயரத்திலிருந்து  கொண்டுவந்து, சில நொடிகள் நடுவில் நிறுத்தி வசனம் முடிந்தவுடன் மேடையின் மறு பக்கத்திற்கு இழுத்துவிட்டார்களாம். இந்தப் புதுமை பெரும் வரவேற்புப் பெற்றதாம். .

கதாநாயகிக்கு முருகன் அருள் கிடைத்ததோ இல்லையோ, மதனிக்கு வாழ்க்கையில் பிடிப்புவர இது காரணமாக இருந்தது என்று தோன்றுகிறது.

சில ஆண்டுகளிலேயே சமையல் செய்யவும் தொடங்கிவிட்டார். பதிமூன்று வயதிலேயே கரண்டி எடுத்துவிட்டேன் என்று சொல்வார்.

பதினெட்டு வயதிலேயே திருமணமும் ஆயிற்று. புகுந்த வீடு ஊருக்கு அருகில்தான். திருமணமாகிப் போனவர் சில நாட்களில் பிறந்த வீடு வந்திருக்கிறார். கணவர் உடன் வரவில்லை, வந்த அன்றைக்கு மூன்றாவது  நாள், கணவரின் சித்தப்பா வந்திருக்கிறார். மதனியின் கணவரைக் காணவில்லை என்று தேடிக்கொண்டு வந்திருக்கிறார். கணவர் திரும்பி வரும்வரை புகுந்தவீடு போகவேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். கணவர் திரும்பவில்லை.‘போது விடிவதற்குள் திரும்பி இங்கே வந்துவிட்டேன்’ என்று குறிப்பிடுவார் மதனி.

தந்தை இறந்தபின் கிராமத்தில் இருந்த விவசாய நிலத்தை விற்றுவிட்டார். கணவரின் பெற்றோர்  ஒரு ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள். தங்கள் வீட்டினைக்  காணாமல் போன தங்கள் ஒரே மகனின் மனைவியான மதனிக்கு ஒரு பத்திரம் மூலம் எழுதிவைத்திருந்தார்கள். தங்கள் வாழ்நாள்வரை தங்கள் உரிமையை  வைத்துக்கொண்டு பின்னர் மதனிக்குச் சேரவேண்டும் என்று ஒரு நிபந்தனை. தானம் என்னும் வகைப் பத்திரம் அது.    

அந்த வீட்டினை அப்போது நிலவிய விலைக்கே அடுத்த வீட்டுக்காரர் வாங்கிக்கொண்டார்.  தவிர மதனியின் தந்தைக்குக் கிராமத்தில் கொஞ்சம் சாகுபடி நிலம் இருந்தது. அதுவும் விற்கப்பட்டது. எல்லாம் அஞ்சலக வங்கியில் டெபாசிட் செய்திருந்தார் மதனி.  அதில் வரும் வட்டியும், வீட்டிலிருந்து  கிடைக்கும் வாடகையும் மதனிக்கு  வருமானம். மருத்துவச் செலவு என்று பெரிதும் எதுவும் கிடையாது. ஆகையால்   ‘கடவுள் புண்ணியத்தில்’ (மதனியின் வார்த்தைகளில்) ஏதோ வண்டி ஓடிக்கொண்டிருந்தது.

அன்னையை இழந்த சோகத்திலிருந்து மீண்டுவந்த மதனி இந்தச் சோகத்திலிருந்தும் மீண்டார் என்றுதான் சொல்லவேண்டும்.  தன் வீட்டில் குடியிருந்தவர்களைத் தன் சொந்தக் குடும்பமாகவே நடத்திவந்தார். மற்றவர்களின் சந்தோஷங்களைத் தனது சந்தோஷமாகக் கொண்டாடிய வேறு யாரையும் நான் பார்த்ததில்லை.  வீட்டைக் காலி செய்யவேண்டி வரும்போது குடியிருந்தவர்கள் கனத்த இதயத்தோடுதான் போவார்கள்.

மதனி இதனையும் வித்தியாசமாகப் பார்ப்பார். ஓர் குடும்பம் போனாலும் அடுத்து குடிவருபவர்களால் தனது குடும்பம் மேலும்  பெருகுகிறது என்பார். நெருங்கிய, ஏன் எட்டத்து சொந்தம் என்று சொல்லும்படியாக யாருமில்லாத மதனிக்குப் பழகும் யாவரையும் சொந்தம் போலவே பாவிக்கும் பரந்த மனம் படைத்திருந்தார். 

அந்த வீட்டின் மனையில் ஒரு பெரிய புளியமரம் உண்டு. வருடம் ஒருமுறை புளியம்பழம் எடுப்பார்கள். வழக்கமாக ஏலம் விட்டு பணமாகத்தான் சொந்தக்காரர் வாங்கிக்கொள்வார். ஆனால் மதனி ஆள்வைத்து புளி சேகரித்து, அதில் ஐந்தில் ஒரு  பகுதியைக் கூலியாகக் கொடுத்துவிடுவார். மீதமுள்ளவற்றைத்  தெரிந்தவர்கள் எல்லோருக்கும் இலவசமாக கொடுத்துவிடுவார். 

மாதம் ஒருநாள்  தபால் அலுவலகம் சென்று பணம் எடுக்கப் போகவேண்டும். அதற்குத் துணையாக யாரேனும் தேவைப்படுவார்கள். நான்கூட சிலமுறை துணைக்குப் போயிருக்கிறேன். இது தவிர பிறர் உதவி எதுவும் அவர் எதிர்பார்த்ததில்லை.

(தொடரும்)

 

 

திரைக் கவிதை: மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ

Image result for மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ

படம்: கேளடி கண்மணி

பாடல் : வரதராஜன்

இசை : இளையராஜா

பாடியவர்: எஸ் பி பாலசுப்ரமணியன்

 

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி
சந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம் தரும் அனங்கிவல் பிறப்பிது தான்

(மண்ணில் இந்த)

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி
இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி
முடி முதல் அடிவரை முழுவதும் சுகம் தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா

(மண்ணில் இந்த)

 

 

 

அம்மா கை உணவு (14) – சதுர்புஜன்

 

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.

 

 1. கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018 .
 2. இட்லி மகிமை – ஏப்ரல் 2018
 3. தோசை ஒரு தொடர்கதை – மே 2018
 4. அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
 5. ரசமாயம் – ஜூலை 2018
 6. போளி புராணம் – ஆகஸ்ட் 2018
 7. அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
 8. கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018   
 9. கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
 10. சேவை செய்வோம் – டிசம்பர் 2018
 11. பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
 12. பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
 13. வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019 

 

 

பாயசப் பாமாலை

Image result for பாயாசம்

பாயசம் ! பாயசம் !

பாசத்தைப்போலே பாயசம் !

பாயசம் ! பாயசம் !

பலருக்கும் பிடித்தது பாயசம் !

 

இலைபோட்டு விருந்து சாப்பாடு என்றால்

முதலில் வருவது பாயசம்தானே !

மாப்பிள்ளைப் பொண்ணு வீட்டுக்கு வந்தால்

பரிமாறுவதும் பாயசம்தானே !

சப்புக் கொட்டி சப்புக் கொட்டி

சாப்பிடுவது நல்ல பாயசம்தானே !

சிறியவர் பெரியவர் எவர் என்றாலும்

ஒரு கை பார்ப்பதும் பாயசம்தானே !

 

சேமியாவிலே பாயசம் வைத்தால்

சுவைத்து சுவைத்து சாப்பிடுவோம் நாம் !

ஜவ்வரிசியில் பாயசம் வைத்தால்

ஜல்தி ஜல்தி என சாப்பிடுவோம் நாம் !

வெல்லப் பாயசம்  என்றால் போதும்

வேறு எதுவும் தேவை எனக்கில்லை !

கடலைப் பருப்பு பாயசம் என்றால்

கட கடவென்று குடித்திடுவேன் நான் !

 

பால் பாயசம் என்றால் போதும்

பல்லில்லாத பாட்டியும் ரசிப்பாள் !

பாதாம் பருப்பை அரைத்து வைத்தால்

பணக்காரர்களின் பாயசம் அதுவே !

சாதம் வைத்தும் பாயசம் செய்வர்

சோடை போகாத சுவை அதில் உண்டு !

எது வைத்தாலும் தோற்றுப் போகும்

இளநீர்ப் பாயசம் என்றும் வெல்லும் !

 

தாராளமாக திராட்சை போட்டால்

திகட்டாதெனக்கு பாயசம் !

முந்திரிப் பருப்பை வறுத்துப் போட்டால்

சுவையில் முந்தும் பாயசம் !

சர்க்கரை எனக்கு அளவாய் வேண்டும்

குடிக்கத் தோன்றும் பாயசம் !

அன்னையின் கையின் அன்பு சேர்ந்தால்

அல்டிமேட் அந்தப் பாயசம் !

    

பாயசம் ! பாயசம் !

பாசத்தைப்போலே பாயசம் !

பாயசம் ! பாயசம் !

பலருக்கும் பிடித்தது பாயசம் !