வெள்ளத்தே போகாது! வெந்தணலில் வேகாது!
கொள்ளத்தான் போகாது! கொடுத்தாலும் குறையாது!
கள்ளருக்கும் எட்டாது! காவலுக்கும் அமையாது!
உள்ளத்தே பொருளிருக்க ஊரில் உழைத்து உழல்வானேன்?
மதனியின் வீட்டில், அரசு உயர்நிலைப்பள்ளியின் ‘ட்ரில் மாஸ்டர்’ விநாயகம் சில வருடங்கள் குடியிருந்தார். பள்ளியில் இருந்த மாணவர்களில் ஒரு சிலரையாவது குறைந்தபட்சம் மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்கத் தயார் செய்யவேண்டும் என்கிற நோக்கம் அவருக்கு இருந்தது.
ஓட்டப் பந்தயத்தில் மூன்று நான்கு மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்துவந்தார். மைதானம் வீட்டிற்குப் பின்னால்தான் இருந்தது. அந்தப் பையன்களுக்கு மதனி க்ளூகோஸ், எலுமிச்சை ஜூஸ் என்று கொடுப்பார்.
என்ன காரணத்தினாலோ விநாயகத்திற்கு வேறு ஊருக்கு மாற்றலாகியது. குடும்பத்தோடு புது ஊருக்குப் போனாலும் அவ்வப்போது பயிற்சி கொடுக்க வந்துவிடுவார். மற்ற நாள்களில் ‘ஸ்டாப் வாட்ச்’ வைத்து நேரம் குறித்துவைப்பதும் மதனியின் பங்களிப்பாயிற்று.
செய்யும் வேலைகளில் தனக்கென்று இல்லாவிட்டாலும் யாருக்காவது உபயோகம் இருந்தால் நல்லதுதானே என்பார் மதனி. யார் வீட்டில் விசேஷத்திற்காகப் பட்சணம் செய்தாலோ, வருடாந்திர ஊறுகாய், அப்பளம் தயாரித்தாலோ, மதனியின் பங்கேற்பு கட்டாயம் உண்டு.
நான் மாற்றல் காரணமாக பல ஊர்களில் வேலை பார்த்துவந்தாலும் அவ்வப்போது ஊருக்குப் போவேன். சற்று தொலைவில் வேலைபார்த்து வந்தபோது ஆறு மாதங்கள் ஊர்பக்கம் வரவில்லை. வந்தபோது மதனி காலமாகிவிட்டார் என்று கேள்விப்பட்டேன். கிட்டத்தட்ட அனாயாச மரணம் என்றார்கள்.
கேள்விப்படாத சில சொந்தங்கள் அவர் இறந்தபோது வந்தன என்று சொன்னார்கள். மதனி இருந்த பழைய வீடு எதற்கும் உதவாது என்றாலும் தரைக்கு மதிப்பு உண்டல்லவா?
அஞ்சலகத்தில் போட்டிருந்த பணத்திற்கும் தனது வீட்டிற்கும் எழுத்து மூலம் பத்திரத்தை எழுதிப் பதிவும் செய்து எங்கள் ஊரில் பிரபலமாக இருந்த ஒரு வக்கீலிடம் கொடுத்து வைத்திருந்தார். அவர் முன்யோசனை எல்லோரையும் ஆச்சரியப்படவைத்தது. கோவிலுக்கு அல்லது தர்மத்திற்கு என்று அவர் எழுதி வைக்கவில்லை. ஒரு வாரிசு நியமித்திருந்தார். மதனி நியமித்த வாரிசு எந்தவிதத்திலும் அவருக்குச் சொந்தமில்லை.
அந்தப் பத்திரத்தின் மூலம்தான் மதனி என்று அறியப்பட்ட அவர் பெயர் சொர்ணம்மாள் என்பதும் காணமல்போன அவர் கணவர் பெயர் சிவசாமி என்பதும் பலருக்குத் தெரியவந்தது. ஆதாயம் தேடிவந்த திடீர் சொந்தபந்தங்கள் ஏமாற்றத்தோடு திரும்பிப்போனார்களாம். நல்லவேளையாக அவர்களில் யாரும் வழக்கு வியாஜ்யம் என்று அடாவடி செய்யவில்லை.
மதனி நியமித்த அந்த வாரிசு…. சங்கரலிங்கத்தின் மகன் பொன்னுலிங்கம். வேம்பு என்று அறியப்பட்ட பொன்னுலிங்கம்…!
மதனி தன் வீட்டை வேம்புவிற்கு, இவனுக்கு எழுதி வைத்தபிறகு சிலகாலம் வேம்புவும் அவர் மாமனும் அங்கே குடிபோனார்கள். பணமும் சொத்தும் வந்தபிறகும் வேம்பு தனது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளவில்லை. பிறருக்கு உதவியாக இருப்பதில் தனக்குக் கிடைக்கும் நிறைவே தனது பேரானந்தம் என்பான். மாமனுக்காக உள்ளூரில் வேலை தேடிக்கொண்ட வேம்பு, அவர் மறைந்தபிறகும் இந்த ஊரிலேயே தங்கினான்.
சில ஆண்டுகளில் மதனியின் வீட்டை இடித்துப் புதியதாக, பெரிய கட்டிடமாகக் கட்டினான். புளியமரத்தை வெட்டவில்லை. மதனியின் காலத்திலிருந்த அதே நடைமுறையில் புளியை ஊராருக்குக் கொடுத்துவந்தான். நான்கு குடும்பங்கள் தங்கும் வகையில் வீட்டை மாற்றி அமைத்தான். சொர்ணம்மாள் இல்லம் என்று பெயரிட்டான். தனது தேவைபோக, மூன்று குடும்பங்களுக்கு வாடகைக்கு விட்டான். திருமணமாகி குழந்தைகள், குடும்பம், இலவச ட்யூஷன், பரோபகாரம் என்று அர்த்தமுள்ள வாழ்க்கையினை அமைத்துக்கொண்டான்.
பாடம், படிப்பு, பள்ளி, மதிப்பெண் குறித்து சற்று வித்தியாசமான கருத்துகள்கொண்டவன் வேம்பு. அவனிடம் குழந்தைகளைச் சேர்க்கவரும் பெற்றோர்களிடம் சில விஷயங்களைத் தெளிவாகச் சொல்லிவிடுவான். ‘உங்கள் பிள்ளை கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்க வைப்பேன் என்றோ மேற்படிப்பிற்கான போட்டித் தேர்வுகளில் தேர்ச்சியடையச் செய்வேன் என்றோ எதிர்பார்க்காதீர்கள்.’
பின் எதற்காக என் குழந்தை நேரத்தை வீண் செலவு செய்யவேண்டும் என்றோ உங்களிடம் நாங்கள் வேறு எதை எதிர்பார்க்கலாம் என்றோ பெற்றோர்கள் கேட்கத்தான் செய்வார்கள்.
புத்தகத்தில் என்ன இருக்கிறது, எப்படி கேள்விகளுக்குச் சரியான விடை எழுதுவது என்பதை பள்ளியில் சொல்லித்தருகிறார்கள். பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்துவது மட்டும்தான் என் வேலை என்பான் வேம்பு. புரிந்துகொள்ளும் வேட்கையையும் நல்ல மனிதனாக வளரவேண்டும் என்ற விருப்பத்தையும் ஏற்படுத்துவதுதான் என் நோக்கம் என்பான். அவன் வீட்டில் குழந்தைகளுடன் உரையாடலும் வேடிக்கை விளையாட்டும்தான் அதிகம். இடையிடையே விஞ்ஞானம், கணிதம், சரித்திரம் ஆங்கிலம் எல்லாம் வரும்.
மேலே கல்வி அழியாதது என்று சொல்லும் பாடல்பற்றி வேம்பு அடிக்கடி சொல்வான். கற்ற கல்வி இறந்தவனோடு எரிந்துதானே போகும். அதற்குள் ஒரு சிலருக்காவது கற்றதைக் கடத்துவது மிகவும் அவசியம் என்பான்.
வகுப்பு நேரங்களில் பலசமயம் நான் கூடஇருந்திருக்கிறேன். நான் படிக்கும்போது இப்படியெல்லாம் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது என்று தோன்றும்.
தங்கப்பன், வேம்பு என்கிற பொன்னுலிங்கம், மதனி என்கிற சொர்ணம்மாள் மூவருமே எனக்கு மனநிறைவைக் கொடுத்த தங்கமான மனிதர்கள். அதிலும் அவர்கள் பெயரிலும் எதேச்சையாக தங்கப்பன், சொர்ணம் பொன்னு என்று தங்கம் இருந்தது என்பதை இப்போதுதான் கவனிக்கிறேன்.
ஒரே சமயத்தில் பல புதியவர்களுடன் நாட்களைக் கழித்த அந்த அனுபவங்கள் பிறகு பயிற்சி மையத்தில்கூடக் கிடைக்கவில்லை. எப்போதாவது நான் ட்ரைனிங் என்று அனுப்பப்பட்டாலும், அவை ஐந்து நாட்களுக்குமேல் இருந்ததில்லை. சரியாகச் சொல்லப்போனால் இருமுறை போயிருக்கிறேன். ஒரு ஒருநாள் பட்டறை (வொர்க் ஷாப் என்றால் பட்டறைதானே?) ஒரு முறை அலுவலகத்தில் செயல்படுத்தவிருந்த புதிய நடைமுறைகள்பற்றி ஐந்துநாட்கள். அவ்வளவுதான்.
முக்கியமாக என் பெயரைக் குறிப்பிட்டு வந்தால்தான் என்னைப் போகச் சொல்வார்கள். யாரேனும் ஒருவர் என்று கடிதம் வந்தால் என்னை அனுப்பமாட்டார்கள். அதற்குக் காரணம் இரண்டு.
1) எனக்குச் சொல்லிக்கொடுப்பது எனக்கே உபயோகமாக இருப்பதே பெரிய விஷயம். மற்றவர்களுக்கு நான் என்ன சொல்லித்தரப் போகிறேன் என்ற அவநம்பிக்கை.
2) சென்னையில் நெருங்கிய சொந்தம் உள்ளவர் யாரேனும் ஓரிருவர் எந்த அலுவலகத்திலும் இருப்பார்கள். அவர்களுக்குத்தான் இந்த வாய்ப்பு பயன்படும்.
பயிற்சி மையத்தில் பழகியவர்கள்பற்றி சொல்லிக்கொண்டு வரும்போதே, விட்டுப்போன இருவர்பற்றியும் சொல்லிவிட்ட புத்திசாலித்தனத்திற்கு எனக்கு நானே பாராட்டிக்கொள்கிறேன்.
பிறரைச் சார்ந்தே இருந்த வாழ்க்கையில் வேலைக்குச் சேர்ந்ததும், தனியாக அறையில் குடியிருந்ததும், பணியில் பல்வேறு மனிதர்களைச் சந்தித்ததும், சென்னையில் பயிற்சி மையத்தில் இரு வாரங்கள் கழித்ததும் …. கொஞ்சம் கொஞ்சமாக உலகம் புரிந்திருக்க வேண்டுமல்லவா?
இல்லை என்றுதான் இப்போது தோன்றுகிறது. குதிரைப் பந்தயத்தில் வெற்றிபெற்ற மற்றும் முதல் மூன்று குதிரைகளாக வந்த குதிரைகளுக்குத்தான் செய்தித்தாள்களில் நேரம் முதலான விவரங்களைத் தருவார்கள். மற்றவை ‘also ran’ என்று பெயர்மட்டும் குறிப்பிடுவார்கள். வாழ்வில் இதுவரையில் ஓடிய மற்ற குதிரைகள் பட்டியலிலேயே இருந்தாகிவிட்டது. இல்லையோ … ஓடாத குதிரையாக அந்தப் பட்டியலிலும் இடம்பெறாத வகையோ?
எதற்கும் உபயோகப்படாத பொருள் என்று ஒன்றும் இல்லை என்பார்கள். அப்படி ஒன்று கண்டுபிடித்தாலும் எதற்கும் உதவாத பொருளுக்கு உதாரணம் காட்டுவதற்காவது பயன்படுமே! ‘இவரைப்போல அல்லது இவரைவிட சமர்த்துக் குறைவு’ என்கிற ‘பென்ச் மார்க்’ ஆகப் பயன்பட்டிருப்பேன் எனலாம். இந்தச் சுயபச்சாதாபம் கிடக்கட்டும்.
மேலே தொடர்வதற்குமுன் குடும்பத்தில் பல மாற்றங்கள். அண்ணனும் ஒரு நல்ல வேலையில் சேர்ந்தான். தங்கையின் திருமணமும் நடந்தது. எங்கள் சமூக வழக்கப்படி திருமணம் மாப்பிள்ளை வீட்டில். எங்கள் பங்குச் செலவுகள் செய்ய அப்பா, அண்ணன் மற்றும் என் சம்பாத்தியம் மிகவும் உபயோகப்பட்டது. மாப்பிள்ளை தொலைவில் வெளி மாநிலத்தில் வேலையில் இருந்தார். எப்படித்தான் என் தங்கை புதிய மொழியும் கற்று, புதிய மனிதர்களையும் புதிய உறவினர்களையும் சமாளிக்கப் போகிறாளோ அன்று அம்மாவும் அப்பாவும் கவலைப்பட்டார்கள்.
ஆச்சரியப்படும்வகையில் அவள் தன்னை புகுந்த வீட்டோடு ஐக்கியப்படுத்திக்கொண்டாள். அவளிடமிருந்து “உங்கள் வீட்டில் எல்லோரும் நலமா?” என்று கடிதம் வராத குறை. வெளிமாநிலம் என்பதால் திருமணமான ஐந்து வருடங்களில் ஒரு முறைதான் பிறந்த வீட்டிற்கு வந்துபோனாள். அவள் இல்லாமல் வீட்டில் ஒன்றும் நகராது என்பார் மாப்பிள்ளை. வீட்டில் செல்லக் குழந்தையாகவே வளர்ந்துவிட்ட அவள், தன் குடும்பத்தின் ஆணிவேராக மாறியது வேடிக்கைதான்.
மாப்பிள்ளையின் அலுவலக ஊழியர் நலத் திட்டம் காரணமாக, அங்குள்ள மருத்துவமனையில் எல்லா வசதிகளுடன் செலவின்றி பிள்ளைப்பேறு நடந்தது. அம்மாவும் அப்பாவும் போய் மூன்று மாதங்கள் தங்கிவந்தார்கள்.
தங்கையின் கதை இப்படியாயிற்று.
அண்ணன் படிப்பு முடித்து ஒரு தொழிற்சாலையில் கணக்காளர் வேலைக்குச் சேர்ந்தான். தனிப்பட்ட முறையில் பல தேர்வுகள் எழுதி தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டான். படிப்படியாக முன்னேறினான். பிறகு வேலை மாறினான். மூன்றாண்டுகளில் மற்றொரு பிரபலத் தொழிற்சாலையில் முதன்மைக் கணக்காளர் நிலைக்கு உயர்ந்தான்.
அண்ணன் திருமணம் விமரிசையாக எங்கள் வீட்டில் நடந்தது. அலுவலகத்தில் நல்ல வீடொன்று கொடுத்திருந்தார்கள். ஊருக்குக் குடும்பத்தோடு அவ்வப்போது வந்துபோவான். நானும் அச்சமயம் விடுப்பெடுத்துக்கொண்டு ஊருக்குப் போவேன். அப்பா ஓய்வு பெறும்வரை இது நடந்தது.
பிறகு அம்மா அப்பா அண்ணனோடு சென்னைக்குப் போய்விட்டார்கள். தம்பி கல்லூரி ஹாஸ்டலில் கடைசி ஆண்டு தங்கினான். அடுத்த ஆண்டே அவன் சென்னைக்குப்போனான். அண்ணனின் வழிகாட்டலில் அவனும் வளர்ந்துவந்தான். (தற்சமயம் அவன் நல்ல நிலையில் மும்பையில் இருக்கிறான்.)
எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போகிறார் என்று நான் வேலைக்குச் செல்லத்தொடங்கிய கதை இதுவரையில் ஆயிற்று. தொடர்வது எனக்குத் திருமணம் ஆன கதை.
(மேலும்…….)