ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் அய்யாச்சாமி எங்க ஊர் எம்.எல்.ஏ ஆனார். அது குருட்டு அதிர்ஷ்டமா, தற்செயலா விதியா என்று நீங்களே சொல்லுங்கள்.
மாநிலம் முழுவதும் இயங்கிவந்த அதிகப் பிரபலமில்லாத வெண்புறா மக்கள் இயக்கம் என்னும் அமைப்பில் அவர் நெடுநாளைய அங்கத்தினர். அவரது ஊர் ஒரு சிறு நகரம். நகரப் பஞ்சாயத்து என்று சொல்வார்கள். நகரசபை என்று அழைக்கப்படுவதற்கான ஜனத்தொகையோ வரிவசூலோ இல்லாத சிறிய நகரம் அல்லது சற்றுப் பெரிய கிராமங்கள் இந்த வகையில் சேரும்.
ஊரில் வீரப்பன் என்று ஒரு டீ கடைக்காரர் இருந்தார். அவர் ஒரு கட்சியில் அங்கத்தினராக இருந்தார். கட்சி நடத்தும் பொதுக் கூட்டங்களில் முக்கியமான தலைவர்கள் வரும்வரை பேசுவதற்கென்றே சிலர் இருப்பார்கள். இந்த வட்டாரத்தில் அது வீரப்பன்தான். அரசியல் நடப்புகள் பெரிதாகத் தெரிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. கட்சி ஆதரவு பத்திரிகைகளில் வரும் செய்திகளைப் படித்துவிட்டுச் சற்று ஏற்றஇறக்கங்களோடு கொஞ்சம் அடுக்குச் சொற்கள் சேர்த்து அடித்து விடவேண்டியதுதான்.
ஒரு முறை சட்டசபைத் தேர்தலில் மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்யச்சொன்னார்கள். இவரும் செய்தார். அதிகாரபூர்வ வேட்பாளரின் மனு ஏற்கப்பட்டபிறகு வாபஸ் வாங்கியிருக்கவேண்டும். சரியாக அந்த சமயத்தில் இவரது மாமனார் இறந்துபோனார். ஓட்டுச் சீட்டில் வீரப்பன் – சுயேச்சை – தையல் இயந்திரம் சின்னம் என்று அச்சடிக்கப்பட்டு இருந்தது. இவரே தனக்கு ஓட்டுப்போடவில்லை. அதிகாரபூர்வ வேட்பாளருக்குத்தான் ஓட்டுப்போட்டார். அனாலும் இவருக்கு அறுபத்தி ஏழு ஒட்டு கிடைத்தது. தேர்தல் எல்லாம் முடிந்தபிறகு ஓட்டுச் சாவடியில் ஒட்டியிருந்த வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பை எப்படியோ உரித்து எடுத்துக்கொண்டு வந்துவிட்டார். இன்னும் அவரிடம் அது இருக்கிறது.
நண்பர்கள் சிலர் இவரை உசுப்பிவிட்டார்கள். கட்சியில் ஏதேனும் பொறுப்பை எடுத்துக்கொண்டு ‘முன்னேற’ ஆலோசனை சொன்னார்கள். கட்சி நடத்திய அந்த வட்டச் செயலாளர் தேர்தலில் போட்டியிட்டார். தோற்றுப்போனார். தனது ஆதரவாளர்கள் தன்னைக் கைவிட்டுவிட்டார்கள் என்கிற வருத்தத்தில் கட்சியிலிருந்து விலகினார். சில நாட்கள் தானுண்டு தன் கடையுண்டு என்று இருந்தார். அப்போதுதான் வெண்புறா மக்கள் இயக்கத்தின் தலைவர் இவர் ஊருக்குத் தன் உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு வந்திருந்தார். இவர் கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது வீரப்பன் மேடையில் நன்றாகப் பேசுவார் என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள்.
தன் இயக்கத்திற்கு இந்த ஊருக்கு ஒரு கிளை அமைக்க வீரப்பனையும் சில நண்பர்களையும் சேர்த்தார். வீரப்பன்தான் தலைவர். மாதம் ஒரு கூட்டம் நடத்துவார்கள். பொதுவாக குடிநீர், குப்பைவண்டி, பேருந்து நிழற்குடை என்று ஒரு கோரிக்கையைத் தீர்மானமாக நிறைவேற்றுவார்கள். தாசில்தார், கலெக்டர் என்று பார்த்து மனுக்கொடுப்பார்கள்.
அய்யாச்சாமி வீரப்பனின் பள்ளித் தோழர். இவருக்கும் பொதுவாழ்விற்கும் காததூரம். அவருக்கு இரண்டு மகன்கள். இருவரும் சென்னையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். இவருக்கு இருந்த விவசாய நிலத்தை எல்லாம் விற்றுத்தான் மகன்களை படிக்கவைத்தார். மனைவியை இழந்து சில ஆண்டுகள் ஆகியிருந்தது. மகன்கள் அனுப்பும் பணத்தில் வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருந்தார். பிள்ளைகள் இருவரும் பணம் அனுப்பத் தவறவே மாட்டார்கள்.
ஆனாலும், பணம் கைக்கு வர தாமதம் ஆனால் வீரப்பனிடம் அவ்வப்போது கைமாற்று வாங்க நேரிடும். வீரப்பன் மனுக்கொடுக்கப் போகும்போது வேறு ஆளில்லை என்றால் அய்யாச்சாமியும் நண்பரோடு கூடப்போக நேரிடும். கைமாற்றுக் கொடுக்கிறாரே அந்த நன்றி உணர்ச்சியாகக்கூட இருக்கலாம்.
வெண்புறா மக்கள் இயக்கம் கூட்டங்கள் என்பது பொதுக் கூட்டம்போல இருக்காது. அவர்கள் ஊரில் மொத்த அங்கத்தினரே இருபது நபர்தான் தேறும். அதில் செயற்குழு என்று பத்துபேர். சந்தா எல்லாம் பெயருக்குத்தான். மூன்றே செலவுகள்தான். கூட்டத்தில் அனைவருக்கும் டீ. இது வீரப்பன் உபயம். போக்குவரத்து செலவு – இதுவும் மாவட்ட அல்லது தாலுக்கா நகரில் வேலையிருக்கும் யாராவது அழைத்துப் போய்விடுவார். பஸ் சார்ஜ் யார் கொடுக்கிறார்கள் என்று யாரும் கவனிப்பதுகூடக் கிடையாது. மூன்றாவது செலவு இயக்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு மாதம் ஒருமுறை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அனுப்பும் தபால் செலவு.
அரசியல் சார்பற்று இயங்கிவந்த அந்த இயக்கத்தில் நாகேந்திரன் என்ற ஒரு அரசியல்வாதி தலைமை அலுவலகத்தில் ஒரு பொறுப்பு ஏற்றார். ஒவ்வொரு தேர்தல்போதும் தங்கள் ஆதரவை போட்டியிடும் இரண்டில் ஒரு கூட்டணிக்கு என்று இயக்கம் அறிவிக்கத்தொடங்கியது. (ஒரு சௌகரியத்திற்காக இரண்டு கூட்டணிகளுக்கும் ஒரு பெயர் வைத்துக்கொள்வோம். ஆளும் கூட்டணி, மக்கள் மகேசன் கட்சியின் தலைமையில் உழக்குக் கூட்டணி. எதிர்கட்சிக் கூட்டணி- ஜனநாயகக் குடிமக்கள் கட்சி தலைமையில் ஆழாக்குக் கூட்டணி)
சென்னையிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் பொதுக் கூட்டங்கள் நடத்த ஆரம்பித்தது. பல மாவட்டங்களில் சொல்லத் தகுந்த அளவிற்கு அங்கத்தினர்கள் சேர்க்கப்பட்டார்கள். அந்த அந்த ஊரின் முக்கியஸ்தர்கள் இயக்கத்தில் சேர்ந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அது ஒரு அரசியல் சார்பு இயக்கம் ஆகியது.
ஆனால் அய்யாச்சாமி ஊரில் மட்டுமின்றி அவர்கள் மாவட்டத்திலும் இயக்கம் பெரியதாக வளரவில்லை. இவர் ஊர் தவிர இன்னும் வெகுசில இடங்களிலேயே கிளைகள் இருந்தன. அவையும் பெரியதாகச் செயல்பட்டன என்று சொல்ல முடியாது.
ஆளும் கட்சியில் பிளவு ஏற்பட்டது. பெரும்பான்மை ஒரு கேள்விக்குறியானது. எதிர்கட்சிகளுக்குள்ளும் ஒற்றுமை இல்லை. அரசியல் நிலவரம் குழப்பமாக இருந்தது. இந்நிலையில் எதிர்கட்சிகளில் ஒரு கட்சி ஆளும் கட்சியோடு ஒரு மறைமுக ஒப்பந்தம் செய்துகொண்டது. நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெளிநடப்பு செய்ய ஒரு நிபந்தனையோடு ஒப்புக்கொண்டது. நம்பிக்கை ஓட்டெடுப்பு வெற்றியடைந்தால் சட்டசபையைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்தவேண்டும். தேர்தலில் ஆளும்கட்சியின் உழக்குக் கூட்டணியில் இந்தக் கட்சியும் சேர்ந்துகொள்ளும்.
மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது இதனால் என்ன லாபம் என்று கேட்கலாம். இப்போது ஏழு சட்டசபை உறுப்பினர்கள் கொண்ட கட்சிக்கு புதிய ஏற்பாட்டில் எண்ணிக்கை குறைந்தது இரட்டிப்பாகும் என்கிற நம்பிக்கை. கட்சித் தலைவரின் மகனுக்குப் போட்டியிட வாய்ப்புக்கிடைக்கும் என்றுதான் இந்த ராஜதந்திரம் என்று சிலர் அபிப்பிராயப்பட்டார்கள்.
திட்டப்படி எல்லாம் நடந்து தேர்தல் வந்தது. எந்தக் கட்சி எந்தக் கூட்டணியில் என்று நாளொரு செய்தி வந்தவண்ணம் இருந்தது. இந்தமுறை ஆதரவு மட்டுமே தெரிவித்துவந்த வெண்புறா மக்கள் இயக்கம் இரண்டு கூட்டணிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது. பத்து தொகுதிகள் கொடுத்தால்தான் கூட்டணியில் சேருவோம் என்று பேரம் நடந்தது. இரண்டு கூட்டணிகளும் அவ்வளவு தொகுதிகள் கொடுக்கத் தயாராக இல்லை.
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளுக்கு இரண்டே நாட்கள் இருந்தன. வெண்புறா இயக்கம் எல்லாத் தொகுதியிலும் வேட்புமனுத் தாக்கல் செய்ய முடிவெடுத்தது. இரண்டு கூட்டணிகளுக்கும் அழுத்தம் கொடுக்கும் முயற்சி இது. அய்யாச்சாமி, வீரப்பன் அவர்களின் தொகுதியில் வீரப்பன் மனுத் தாக்கல்செய்ய முடிவெடுத்தார்கள். அவர் பெயரை முன்மொழிய என்று ஊரிலிருந்து சிலரையும் அழைத்துக்கொண்டு மாவட்டத் தலைநகர் போனார்கள். அய்யாச்சாமியும் அதில் ஒருவர்.
வேட்புமனு தாக்கலின்போது ஒரு விஷயம் தெரியவந்தது. வீரப்பன் சென்ற தேர்தல் முடிந்ததும் செலவுக் கணக்கு தாக்கல் செய்திருக்க வேண்டும். அந்த விவரமே அவருக்குத் தெரியாது. அவர் மனு நிராகரிக்கப்பட்டது.. வேறு வழியில்லாமல் அய்யாச்சாமியை வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தார்கள். எப்படியும் வாபஸ் வாங்கத்தானே போகிறோம் என்று இவரும் வேட்புமனு தாக்கல்செய்தார்.
சென்னையில் பேரம் மும்மரமாக நடந்தது. கடைசியில் உழக்குக் கூட்டணி வெண்புறா இயக்கத்திற்கு எட்டு தொகுதிகள் என்று ஒப்புக்கொண்டது. தொகுதிகளும் வெண்புறா இயக்க மற்றும் மகேசன் கட்சி வேட்பாளர்களின் வெற்றிவாய்ப்பை வைத்து ஏழு தொகுதிகள் முடிவாயின.
வாபஸ் வாங்க சில மணி நேரமே இருக்கும்போது ஒரு பெரிய அதிசயம் நடந்தது. அய்யாச்சாமி வாபஸ் வாங்கப் போயிருக்கிறார். அவருக்கு தலைமை அலுவலகத்திலிருந்து வாபஸ் வாங்க வேண்டாம் என்று போன் வந்தது.
உழக்குக் கூட்டணி சார்பில் போட்டியிட இருந்த மகேசன் கட்சி வேட்பாளரான அய்யாக்கண்ணு வாபஸ் வாங்கிவிட்டாராம். செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. குடும்பத்தில் ஏதோ பிரச்சனை. அய்யாக்கண்ணுவின் மூன்று அண்ணன்களும் இவரை போட்டியிடக்கூடாது என்று அதட்டியிருக்கிறார்கள். இவரும் யாருக்கும் தெரியாமல் ஓசைப்படாமல் வாபஸ் வாங்கிக்கொண்டு போய்விட்டார். உழக்குக் கூட்டணிக்கு இந்தத் தொகுதிக்கு சரியான வேட்பாளர் இல்லாமல் போனது.
வெண்புறா இயக்கத்திற்கு என்று முடிவாகாமல் இருந்த எட்டாவது தொகுதியாக அய்யாச்சாமியின் தொகுதி முடிவானது. வெண்புறா மக்கள் இயக்க வேட்பாளர்கள் மகேசன் கட்சியின் சின்னத்தில்தான் போட்டியிட்டார்கள். மகேசன் கட்சியின் அதிகாரபூர்வ சின்னம் அய்யாச்சாமிக்கு ஒதுக்க அனுமதிக் கடிதம் மகேசன் கட்சி தலைமை அலுவலகத்திலிருந்து இரவு முழுதும் காரில் பயணம் வந்துசேர்ந்தது.
தேர்தலில் அய்யாச்சாமி சில ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். எல்லாக் குழப்பத்தாலும்- வீரப்பன் தகுதி இழந்தது, அய்யாக்கண்ணு வாபஸ் வாங்கியது, அதிகார பூர்வ சின்னம் கிடைத்தது மேலும் அய்யாச்சாமிக்கும் அய்யாக்கண்ணுவிற்கும் வாக்காளர் பலருக்கு வித்தியாசம் தெரியாமல் போனது- பலனடைந்தவர் அய்யாச்சாமிதான்.
தேர்தல் பிரச்சரத்தின்போது தனது அனுபவங்கள்ற்றி அய்யாச்சாமி ஒரு புத்தகம் எழுதிவருகிறார் என்பது ஒரு கூடுதல் செய்தி.
எஸ்.கே.என்