விஷ்வகர்மா இதை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை.
தன் ஒரே மகள் – பிரியமகள் தன்னைத் துறந்துவிட்டுச் சென்றுவிடுவாள் என்பதை அவரால் எண்ணிப்பார்க்கவே முடியவில்லை.
மகாருத்ரபிரும்மன் அவரது கனவின் உச்சம். அப்படிப்பட்ட சக்தியைக் கொண்டுவர ஸந்த்யா – சூரியன் சேர்க்கையால் தான் முடியும் என்ற நம்பிக்கை அவருக்குத் திடமாக இருந்தது. அவர் எண்ணப்படியே அவர்கள் இருவருக்கும் இடையே காதல் முளைத்தது. திருமண நிச்சயமும் செய்ய அவர் விழைந்தார். காதல் மெல்லக் கனிந்திருந்தால் பொறுமை இருந்திருக்கும். தன் திட்டப்படி ஆரவாரமாக மும்மூர்த்திகளின் ஆசியோடு அவர்கள் வாழ்வைத் தொடங்கியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?
ஆனால் இடையில் புகுந்த ராகு காரியத்தையே கெடுத்துவிட்டான். அவனின் பார்வை காதலுக்குப் பதிலாகக் காமத்தைத் தூண்டிவிட்டது. உள்ளங்கள் இணைவதைவிட உடல்கள் இணைவதே தங்கள் வாழ்வின் நோக்கம் என்று அவர்களைத் திசை திருப்பிவிட்டது.
தன் மனைவி ராகுவைக் கொல்ல முயற்சிக்க, அதன்பின் அவன் நாக கன்னியர் துணையுடன் தன்னை மிரட்ட முயற்சிக்க, அவனும் தன் சதுரங்கத்தின் ஒரு காயே என்பதை அவனுக்குப் புரியும்வண்ணம் உணர்த்த இத்தனை சிக்கல்களுக்குத் தாம் ஆளாகிவிட்டோமே என்று விஷ்வகர்மா வருந்தினார். ஆனால் அதற்கு முன்னரே ஸந்த்யா சூரியனைச் சென்று அடைந்துவிட்டாள் என்ற எண்ணம் அவருக்கு வேம்பாகக் கசந்தது. ஸந்த்யாவைத் தடுத்து நிறுத்த முடியாமலும் ராகு செய்துவிட்டான். இனி என்ன செய்வது? ‘சூரியதேவனுடன் சமாதானமாகப் போவதுதான் இப்போதைக்குச் சிறந்த வழி’ என்று உணர்ந்த விஷ்வகர்மா மனைவியையும் அழைத்துக்கொண்டு சூரியபுரிக்குப் புறப்பட்டார். தன் வாக்குச் சாதுர்யத்தால் சூரியனையும் தாய்ப்பாசம் என்ற கருவியால் ஸந்த்யாவையும் கட்டிப்போட்டு விடலாம் என்ற நம்பிக்கையுடன் சென்றார். எவ்வளவு நம்பிக்கை இருந்தாலும் அவரது மனதின் அடித்தளத்தில் விஷயம் தன் கையைவிட்டுப் போய்விடுமோ என்ற அச்சத்தின் த்வனி அவருக்கே கேட்கத்தொடங்கியது.
காதலும் காந்தமும் ஒன்று. இரு துருவங்கள் ஒன்றை ஒன்று ஆகர்ஷிப்பது இயற்கை. பெற்றோர்கள் அந்தக் காந்தப் பிரதேசத்தின் குறுக்கே வந்தால் அந்தக் காந்தங்கள் அவர்களைத் தள்ளிவிட்டு ஒட்டிக்கொள்ளவே விரும்பும். இது இயற்கையின் சக்தி.. இரு காந்தங்களையும் தோல் பாவைபோல் கட்டுக்குள் வைத்து மின்னல் சக்தியைப் பெற விழையும் விஞ்ஞானியென இருந்த விஷ்வகர்மா இப்போது தந்தையின் நிலைக்குத் தன்னை மாற்றிக்கொண்டு சூரியதேவனின் அரண்மனையை மனைவியுடன் அடைந்தார்.
கதவைத் தட்டப்போன விஷ்வகர்மாவின் கரம் அப்படியே நின்றது . சாரதி அருணன் அவர் கரத்தைப்பற்றிக்கொண்டு நின்றான். “மன்னிக்கவேண்டும், யாரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாது என்பது எனக்கு இட்ட கட்டளை ” என்று பவ்யமாகத்தான் கூறினான் அருணன். .
” நான் யார் என்பது உனக்குத் தெரியவில்லையா? ” விஷ்வகர்மாவில் குரலில் அதிகாரம் தெரிந்தது.
” தாங்கள் விஷ்வகர்மா! இவர் தங்கள் துணைவி ! எங்கள் தலைவி ஸந்த்யாதேவியின் பெற்றோர்கள்!”
” தெரிந்துமா தடுக்கிறாய்?”
” தெரிந்ததால்தான் தடுக்கிறேன். இன்று மட்டுமல்ல நீங்கள் இருவரும் என்றைக்குமே இந்த எல்லைக்குள் வர இயலாது”
” என்னைத் தடுத்து நிறுத்தும் சக்தி உலகத்தில் எதுவும் இல்லை என்பது உனக்குத் தெரியாதது உன் தூரதிர்ஷ்டம்!”
” மும்மூர்த்திகளுக்குக் கூடவா இந்த சக்தி இல்லை? “
விஷ்வகர்மா திடுக்கிட்டார்.
” மும்மூர்த்திகளா? அவர்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?”
” அவர்கள்தான் சூரியதேவர்-ஸந்த்யா திருமணத்தை உள்ளே நடத்தி வைத்துக்கொண்டிருக்கிறார்கள் ”
விஷ்வகர்மா மட்டுமல்ல . அவரது துணைவியும் துடித்துவிட்டாள்.
” பெண்ணைப் பெற்ற நாங்கள் தாரை வார்த்துக்கொடுத்து கன்னிகாதானம் செய்யாமல் அவளுக்கு எப்படித் திருமணம் நடக்கக்கூடும்?”
” எப்போது நீங்கள் மகாருத்ரபிரும்மனுக்காக அடாத செயல் செய்யத் துணிந்தீர்களோ அப்போதே நீங்கள் அந்தத் தகுதியை இழந்துவிட்டீர்கள்!”
விஷ்வகர்மாவிற்கு உடல் தளர்ந்தது. வாழ்வில் முதல் முறையாகத் தோல்வியின் பிடியில் சிக்கிவிட்டோம் என்பதை உணர்ந்தார்.
” நான் பெற்ற மகள் ஸந்த்யா ! நான் கண்டிப்பாக அவள் திருமணத்திற்குப் போகவேண்டும்! கதவைத் திறவுங்கள் ! ” என்று கண்ணீருக்கிடையே கதறியது பெற்ற மனம்.
” மன்னிக்க வேண்டும் தாயே! இதோ அவர்களே கதவைத் திறந்துகொண்டு வருகிறார்கள்! தாங்களும் இவர்களைப்போலப் புதுமணத் தம்பதியர்களுக்கு மலர் தூவி ஆசிகள் வழங்கலாம் , இங்கிருந்துகொண்டே” என்று அருணன் அவர்கள் இருவர் கரங்களிலும் மலர்களையும் அட்சதையையும் வழங்கிவிட்டு விரைவாக வெளியேசென்றான்.
சுற்றிப்பார்த்தால் கோடானுகோடி வானவர்களும் கந்தர்வர்களும் ரிஷிகளும் மலர்களைக் கைகளில் ஏந்திக்கொண்டு அங்கே நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் எப்போது வந்தார்கள் என்று விஷ்வகர்மா எண்ணிக்கொண்டிருக்கும்போது வாயில் கதவு திறந்தது.
மும்மூர்த்திகளுடன் முப்பெரும் தேவியரும் வந்தனர். அவர்கள் நடுவே சூரியதேவனும் ஸந்த்யாவும் மணக்கோலத்தில் வெட்கப் புன்முறுவலோடு வந்தனர்.
அருணன் ஏழு குதிரைகள் பூட்டிய சூரிய ரதத்தை அவர்கள் முன் நிறுத்தினான். சூரியதேவனும் ஸந்த்யாவும் மும்மூர்த்திகள் கால்களில் விழுந்து வணங்கிவிட்டு அவர்கள் உத்தரவுப்படி ரதத்தில் ஏறினார்கள்.! காத்துக்கொண்டிருந்த கோடானுகோடி பேரும் புஷ்பமாரி பொழிந்து ஆசிகளை வழங்கினர். ரதம் விஷ்வகர்மா, அவர் துணைவி இருக்கும் இடத்தை அடைந்தது. மலர் தூவி ஆசி வழங்கவேண்டும் என்ற உணர்வு தோன்றாமல் இருவரும் திக்பிரமையில் நின்றுகொண்டிருந்தனர்.
ஸந்த்யா சூரியதேவனின் விழிகள் விஷ்வகர்மா தேவி விழிகளுடன் கலந்தன . எந்தவித சலனமுமின்றி ஸந்த்யாவும் சூரியனும் ரதத்தை மேலே செல்லக் கரமசைக்க அருணன் விண்வெளியில் ரதத்தைச் செலுத்தினான். சிறு புள்ளிபோல ரதம் விண்வெளியில் சென்றுமறைந்தது. மும்மூர்த்திகளும் தேவியரும் மற்ற வானவர்களும் வந்ததுபோலவே சுவடு எதுவும் இல்லாமல் மறைந்து போயினர்.
விஷ்வகர்மாவும் அவரது துணைவியும் மட்டும் கையில் மலர்களுடன், கண்ணில் நீருடன் நின்றுகொண்டிருந்தனர்.
(தொடரும்)
இரண்டாம் பகுதி
சாலமன் பாப்பையா தொடர்ந்தார்:
நமது விவாத மேடைக்கு மும்மூர்த்திகளும் வந்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நாம் விவாதிக்கப்போகும் ஒவ்வொரு துறைக்கும் இவர்கள்தான் தலைவர்கள்! இவர்களை வைத்துக்கொண்டு பேச்சாளர்கள் தங்கள் கருத்துக்களைப் பேசிவிட்டுப் போய்விடலாம். அவர்களுக்குப் பிரச்சினை ஒன்றும் அதிகமாக இருக்காது என்று நம்பலாம். குறைந்தபட்சம் இந்த மேடையில் அவர்களுக்கு எதுவும் நடக்காது என்று நான் உத்தரவாதம் தரலாம். ஆனால் தீர்ப்பு சொல்லப்போகும் ‘என் கதி என்ன கதி’ என்று எனக்குப் புரியவில்லை. ‘ நமக்கெல்லாம் பயம் கொஞ்சம்கூட கிடையாதப்பா’ என்று வழக்கம்போல சவுடால் பண்ணலாம். சொல்லப்போனா என் நிலைமை ரொம்பவும் தரும சங்கடமாத்தான் இருக்கு.
ரொம்ப வருஷம் முன்னாடி இதேமாதிரி தமிழ்த் திரைப்படங்களில் சிறந்து விளங்குவது “சண்டையா? சோகமா? காதலா? ” என்று விவாதம் பண்ணவந்தோம். மதுரையில ஒரு காலேஜிலதான் அந்தக் கூட்டம் நடந்துது. இவிக மூணுபேரும் அப்ப வரலை. இவிகண்ணு நான் சொல்றது சாமிங்களை இல்ல. எங்க ஆசாமிங்களைத்தான் சொன்னேன். அன்னிக்குன்னு பாத்து எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி மூணுபேரும் கூட்டத்துக்கு வந்துட்டாங்க ! மக்கள் வெள்ளம் வந்திடக்கூடாதுன்னு வாசக் கதவை சாத்திட்டோம். ஆனா இந்தப் பெருந்தலைகளை வச்சுக்கிட்டு எப்படிடா தீர்ப்பு சொல்லப்போறேன்னு எனக்கு ஒரு நடுக்கம் வந்திடிச்சு. எல்லாருக்கும் நல்லாத் தெரியும் எம் ஜி ஆர் சண்டையில நாடோடி மன்னன். சிவாஜியோ சோகத்தில ஒரு பாசமலர் அண்ணன் , ஜெமினியோ எப்போதும் காதல் மன்னன். எங்களுக்குள்ளே சண்டையை மூட்டிவிட்டு அவிக மூணு பேரும் சிரிச்சுச் சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்தாங்க ! பேச வந்தவுங்க தங்க கட்சியைப்பத்தி மட்டும் பேசிப்புட்டு மத்தக்கட்சி மோசம்னு பேசாம போயிட்டாங்க.
நான் சோகத்தில நெளிஞ்சிக்கிட்டிருந்தேன். இங்கே இருக்கிற அத்தனை தெய்வங்ககிட்டே எல்லாம் வேண்டிக்கிட்டேன். அப்போ அங்கே ஒரு அதிசயம் நடந்தது. அதனால நான் தப்பிச்கிட்டேன். அது என்னங்கிறத இந்தக் கூட்டத்தில தீர்ப்பு சொன்னபெறகு சொல்றேன்.
இன்னிக்கு நாம விவாதிக்கப்போற தலைப்பு மிகவும் வித்தியாசமானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட. என்ன ஆபத்துன்னு நீங்க கேட்கலாம். ஆக்கல், காத்தல் அழித்தல் மூன்றுமே ஓன்றோடொன்று தொடர்பு கொண்டது. நம்ம வீட்டுக்காரம்மா சோத்தை ஆக்குறாங்களா? ஆக்கிக்கிட்டேயிருந்தா என்னாகும்.? அது கெட்டுப்போகாம சாப்பிட சரியா பாதுகாக்கணும். அப்படியேயிருந்தா எப்படி? நம்ம பசிதீர சாப்பிட்டு அதை அழிக்கணுமில்ல. இதில எது உசத்தி எது மட்டம்னு சொல்லமுடியும்? என் கஷ்டம் இப்போ உங்களுக்குப் புரியுதுண்ணு நினைக்கிறேன். ஒண்ணுகிடக்க ஒண்ணு சொன்னோம்னா சோறே ஆக்கமாட்டா ! இல்லாட்டி கெட்டுப்போன சோறு தட்டில விழும். இல்லே சோத்தை ஆக்கி அப்படியே குப்பைத்தொட்டியில கொட்டிடுவா! இதுதான் இதுல இருக்கிற ஆபத்து.
எங்களுக்கு ஆபத்து வர்ரப்போ சாமிங்க உங்களைக் கூப்பிவோம். இப்போ சாமிங்க உங்களால எங்களுக்கு ஆபத்து வந்தா நாங்க எந்த சாமிக்கிட்டே வேண்டிக்கிறது?
விசு ஒரு படத்தில சொல்வாரே
” பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியக்கார ஆஸ்பித்திரியில பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியக்கார டாக்டருக்கே பைத்தியம் பிடிச்சுதுனா அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியக்கார டாக்டர் எந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியக்கார டாக்டர்கிட்ட போய் தன் பைத்தியத்துக்கு வைத்தியம் பார்த்துக்குவார்? ”
அந்த மாதிரி நிலமை எங்களுக்கு!
சொல்ல வேண்டியதைச் சொல்லிப்புட்டேன். காப்பாத்தவேண்டியது உங்க கடமை.
அதைக்கேட்ட மூம்மூர்த்திகளும் எழுந்து மேடையில் இருப்பவர்களையும் கேட்கவந்தவர்களையும் ‘யாமிருக்க பயமேன்?’ என்ற பாணியில் அபயக்கரம் காட்டித் திரும்பும்போது மக்கள் கூட்டத்தில் தங்கள் தேவிமார்களும் நாரதரும் எமியும் வந்திருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போனார்கள். நமக்கு அபயக்கரம் கொடுக்க யார் இருக்கிறார்கள் என்ற தேடல் அவர்கள் கண்களில் தோன்றிமறைந்தது.
சாலமன் பாப்பையா தைரியம் அடைந்து ” வாங்க பாரதி பாஸ்கர் அம்மா ! சோறு ஆக்கிறதுதான் முக்கியமானது – அதாவது மூன்று தொழில்களில ஆக்கல்தான் சிறந்ததுன்னு பேசத் தைரியமா வாங்க !” என்று அழைத்தார்.
(தொடரும்)