அசோக் நகர் கோடைப் புத்தக விழாவும், நானும்!
வருடா வருடம் அஸ்லி நகரில் உள்ள அரசு நூல்நிலைய வளாகத்தில் ஒரு புத்தகக் கண்காட்சி நடைபெறும். இவ்வருடமும் நடந்துகொண்டிருக்கிறது – ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம், சுட்டெரிக்கும் வெயிலில் நண்பர் ஆர் கேயுடன் சென்றேன்.
காம்பவுண்ட் சுவருக்கும், மத்திய நூலகக் கட்டிடத்துக்கும் இடையே சுமாராக 15அடி அகலம், 50-60 அடி நீளத்திற்கு ஒரு பந்தல் – ஃப்ரில் வைத்த வெள்ளைத் துணியில் சீலிங், “ப” வடிவில் ஒற்றை அரங்கம், மூன்று பக்கங்களிலும் புத்தகங்கள், அரங்கின் நடுவில் நீளமான பெஞ்சில், அட்டைப் பெட்டிகளில் புத்தம்புதிய புத்தகங்கள் (50% தள்ளுபடி விலையில்)! சந்தியா பதிப்பகம் மற்றும் ஓரிரண்டு பதிப்பகங்கள் மட்டுமே பங்கு கொண்டிருந்த புத்தகக் திருவிழா – ஆனாலும், நல்ல புத்தகங்கள் இருந்தன.
சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், கட்டுரை நூல்கள், சிறுவர்களுக்கான அறிவியல் மற்றும் கதைகள், கார்ட்டூன்கள், மு.வ. நூல்கள், கல்கியின் பொ.செ.. வண்ணதாசன், கலாப்பிரியா, லா ச ரா, க நா சு என நூல்கள் – வாசலில் ஒருவர் பில் மெசினுடன்; அருகில் ஒரு ஃப்ள்க்ஸ் போர்டு, சில புத்தகப் படங்களுடன்…
ஜம்பரும் வேஷ்டியும் (சிறுகதைத் தொகுப்பு – ந.பிச்சமூர்த்தி), ஹாஸ்ய வியாசங்கள் (பம்மல் சம்பந்த முதலியார்), கல் சிரிக்கிறது (நாவல் – லா ச ரா), இலக்கியச் சாதனையாளர்கள் (க நா சு) – இவை நான்கும் (சந்தியா பதிப்பகம்) நான் வாங்கிய புத்தகங்கள். வெயில், டி.வியில் கிரிக்கெட் போன்ற காரணங்களால், இரண்டு, மூன்று பேர்கள் மட்டுமே புத்தகம் ‘பார்த்துக்’ கொண்டிருந்தனர்.
20% டிஸ்கவுண்டில் புத்தகங்கள் வாங்கிக்கொண்டு, வெளியே ஒரு செவ்விளநீர் (கிட்டத்தட்ட தள்ளுபடி செய்த ஒரு புத்தக விலை!) சீவி, காகித உறிஞ்சு குழல் உதவியுடன் நாக்கையும், தொண்டையையும் சிறிது நனைத்துக்கொண்டு, வீடு வந்துசேர்ந்தேன்!
போன வாரம் இதேபோல் டிஸ்கவரி புக் பேலஸில் ஒரு தள்ளுபடி விற்பனை – க்ளியரன்ஸ் சேல் என்றார்கள். போயிருந்தேன். அவ்வளவு புத்தகங்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் – வாங்குபவர்களும் இருந்தார்கள். மகிழ்ச்சி. ஆனாலும் புத்தகம் குறித்து, இன்னும் ஏதோ ஒன்று குறைகிறது……… ஒரு வேளை வாசிப்போ?
வாங்கிய புத்தகங்களை வாசித்த வரையில் …….
“1937 ல் முதற் பதிப்பு – சென்னை ‘பியர்லெஸ்’ அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது – ஹாஸ்ய வியாசங்கள் – தமிழில் ராவ் பஹதூர் ப.சம்பந்த முதலியார், பே.,பி.எ.ல்., அவர்களால் இயற்றப்பட்டது”. என்ற குறிப்புடன் தொடங்குகிறது இந்தப் புத்தகம். சென்னை விநோதங்களில், நீர் இல்லாத நீச்சல் குளம் உள்ள கட்டிட விவரணை, பழம் தவிர மற்ற எல்லாம் விற்கும் கார்ப்பொரெஷன் பழக்கடை, ‘பீஸ் – கூட்ஸ் – மார்கெட்’என்ற பெயருடைய ஜவுளிக் கடை கட்டிடத்தில் உள்ள சவுக்கு மரக் கடைகள் என நகைச்சுவயுடன் விவரிக்கிறார். “வயது” என்ற வியாசத்தில், 90 வயதுக்கும் மேலாக இருக்கும் ஒரு ஆரோக்கியமான கிழவர் ” சாஸ்திரங்களில் ஒருவனுடைய பொருள், ஒருவனுடைய வயது, ஒருவனுடைய ஆசாரியார் பெயர், இன்னும் இரண்டொரு விஷயங்களை வெளியில் கூறக்கூடாது ” என்று கூறி, வயதைச் சொல்ல மறுத்துவிட்டாராம்.
இப்படி சுவாரஸ்யமான 12 வியாசங்களைக் கொண்ட சின்ன ஆனால் சிறப்பான நூல்!
‘ஜம்பரும் வேஷ்டியும்’ – சிறு கதையில் இரண்டு நண்பர்கள், தன் மனைவிகளின் சந்தேகம், சண்டைகளால் எப்படி வீடு மாற்ற முடிவு செய்கிறார்கள் என்பதை தன் பாணியில் சொல்கிறார் ந.பிச்சமூர்த்தி. 8 சிறுகதைகள் கொண்ட சிறிய தொகுப்பு.
க நா சு அவர்களின் இலக்கியச் சாதனையாளர்கள், நான் வாசித்த மட்டில், மிகச் சிறந்த நூலாக, சுவாரஸ்யமான வாசிப்பானுபவமாக இருக்கிறது. நான்கைந்து பக்கங்களில், தமிழின் மிகச் சிறந்த இலக்கிய ஆளுமைகளின் குணாதிசயங்கள், படைப்புகள், விருப்பு வெறுப்புகள் எனப் பிழிந்துகொடுக்கிறார். ராஜாஜி தொடங்கி விசுவநாத சத்திய நாராயணா வரை 41 ஆளுமைகள் பற்றி எழுதியிருக்கிறார். (நான் 11 வரை வாசித்திருக்கிறேன்!). புதிதாக வாசிக்கவும், எழுதவும் முனைவோருக்கு, அனுகூலமான, பயன்மிகு படைப்பு, ‘இலக்கிய சாதனையாளர்கள்’ என்கிறார் சந்தியா நடராஜன் – உண்மைதான்!
(‘கல் சிரிக்கிறது’ – இன்னும் வாசிக்கவில்லை!)