குவிகம் கதைப் பொக்கிஷம் – பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்- அம்பை

Image result for சிறுகதை

(அம்பை அவர்கள் )

 

Image result for காக்கைக்கு சோறு

 

சன்னல் படிக்கல்லில் நெய் ஊற்றிய சோற்றைப் போட்டு, கரண்டியால் ஒரு தட்டுத் தட்டி, “கிருஷ்ணா ரா” என்று அம்மா காக்கைகளைத் தெலுங்கில் விளித்தாள். தெலுங்கில் என்ன விசேஷம் என்பது இதுவரை புலப்படாத மர்மம். தனத்தின் அப்பாவுக்கு அஸ்ஸாம், அகமதாபாத், ஒரிஸ்ஸா, பெங்களூர் என்று பல மாநிலங்களுக்கு மாற்றலில் போக வேண்டி வந்தபோதும் அம்மாவின் காக்கை மொழி மாறவில்லை. அஸ்ஸாமில்கூட அம்மா, “கிருஷ்ணா ரா” என்றதும் காக்கைகள் பறந்தோடி வந்தன. காக்கைகளுக்குள் மொழி ஒருமைப்பாடு உண்டு போலும். இந்த மொழிச் சமிக்ஞையை அம்மா அவளைச் சுற்றிய சகலருக்கும் போதித்திருந்தாள். தனத்தின் தம்பி தினகரனின் அமெரிக்க மனைவியின் முதல் கணவனின் குழந்தைகூட இந்தியா வந்தால் காக்கையை, “கிருஷ்ணா ரா” என்று கூப்பிட்டது. இப்படியாகச் சன்னல் படிக்கல்லை ஒரு ஆதாரமாக வைத்து, மாநில பேதம் இல்லாமல் காக்கைகள் உள்ள உலகில் எந்த விதமான எல்லைப் போராட்டமும் இல்லாமல் அம்மா தனக்கொரு இடம் தேடிக்கொண்டாள்.

சன்னல் படிக்கல், ஒரு சொட்டு நெய், ஒரு கரண்டிச் சோறு என்ற சின்னச் சமாச்சாரங்கள் அடங்கிய இடமானாலும் அதோடு நின்றுவிடும் இடம் மட்டும் இல்லை அது என்று தனத்துக்குப் படும் சில சமயம். சன்னல் வெளியே உள்ள அனைத்து விஷயங்களையும் அந்தப் படிக்கல் மேல் விழும் கரண்டியின் டொக்டொக் ஈர்த்துக் கொள்கிறது என்று நினைப்பாள். ஒரு குறிப்பிட்ட தூய உரு இல்லாத, பறந்து விரியும் இடம் அது என்று தோன்றும்.

தனத்தின் அக்கா பாரதியின் திருமண வாழ்க்கை அமெரிக்காவில் போய் விவாகரத்தில் முடிந்தது. அவள் நொறுங்கிப் போனாள். பீதியும், பயமும், அவமான உணர்ச்சியும் அவளைக் கவ்விக்கொண்டு, மிகவும் அலைபட்டாள். காலடி எடுத்து வைக்கும் போதெல்லாம் பாதத்தில் அடியே ஸ்திரமான தரை இல்லாதது போல் உணர்ந்தாள். அப்பாவின் வேண்டுகோளை ஏற்று அம்மா விமானமேறி பாரதியிடம் போனாள். பத்து நாட்களில் பாரதியிடமிருந்து ஒரு நீண்ட கடிதம் வந்தது.

“தனம், அம்மா வந்து சேர்ந்தாள். அம்மா வந்த இரண்டாம் நாளே அம்மா பயணித்த உள்ளூர் விமானக் கம்பெனிக்காரர்கள் அம்மாவுக்கு நார்த்தங்காய் ஊறுகாய் செய்ய காண்ட்ராக்ட் தருகிறேன் என்று தொலைபேசியில் பிடுங்கி எடுத்து விட்டார்கள். அம்மா பரிசோதனையின் போது காண்பித்திருக்கிறாள் போலும். அவர்கள் சோதனைக்ககாக ருசி பார்த்திருக்கிறார்கள். இது போதாது என்று நான்காவது நாளே நான் வேலையை விட்டு வீடு வரும்போது பார்த்தால் அம்மா இரண்டு கிலோ பாலில் பால்கோவா கிளறி இறக்கியிருக்கிறாள். என்னவென்று கேட்டால் பக்கத்தில் உள்ள வீடுகளில் இரண்டு மூன்று பிள்ளைத்தாய்ச்சிகளைப் பார்த்தாளாம். அவர்களுக்கு இது உடம்புக்கு நல்லதாம். என்னையும் இழுத்துக் கொண்டு போய் அவர்களுக்கு மில்க் ஸ்வீட் என்று விளக்கி, அதில் குங்குமப்பூ இருப்பதைக் கூறி (அம்மா ஒரு சின்ன டப்பியில் உயர் ரக குங்குமப்பூ எடுத்து வந்திருக்கிறாள். குங்குமப்பூ எடுத்து வர வேண்டும் என்று ஏன் தோன்றியது என்பதை இதுவரை அவள் விளக்கவில்லை. நார்த்தங்காய் ஊறுகாய் பற்றிய கேள்விகளுக்கு விடை வராதது போலவே இதுவும்) குங்குமப்பூ சேய்க்கும் தாய்க்கும் செய்யும் அற்புதங்களை என்னை விட்டு விளக்கவைத்து… அம்மாவை யாராவது பிரசவம் பார்க்கக் கூப்பிட்டு விடுவார்களோ என்று பயப்படுகிறேன்.

இங்கு நல்ல வெயில். அம்மவின் கைகள் வடகம் இடப் பரபரப்பதை என்னால் உணர முடிகிறது. உனக்கு நினைவிருக்கிறதா, பெங்களூரில் அம்மா வெயிலுக்கு ஒரு தொப்பியை மாட்டிக்கொண்டு வடகம் பிழிவாளே? காகங்களைப் பயமுறுத்த, விரித்த குடையைக் கல்லைக் கட்டி நம் இருவரையும் காவலுக்கு வைத்துவிடுவாளே? நாம் இருவரும், சுதந்திரப் போராட்ட நாட்களில் ‘வள்ளித் திருமணம்’ நாடகத்தில் நடித்த ஆயலோட்டும் வள்ளியும், அவள் தோழிகளுமாய் நம்மைக் கற்பனை செய்துகொண்டு, “வெள்ளை வெள்ளைக் கொக்குகளா” பாடுவோமே, நினைவுக்கு வருகிறதா? நாம் போராட்டத்தைக் கண்டோமா, ஆலோலம்தான் என்னவென்று தெரியுமா? அம்மா கற்றுக்கொடுத்த பாட்டுதானே? “இந்தியாவை கொள்ளையிட எங்கிருந்தோ இங்கு வந்து குத்தித் தின்னும் குருவிகளா…” என்று பாடும்போது நமக்கு என்னமாய்க் கோபம் வரும்? இப்போதும் அம்மா வடகம் இட்டால் உலக வங்கியையும், அனைத்துலக நிதி ஸ்தாபனத்தையும் நினைத்து இதைப் பாடலாம் என்று தோன்றுகிறது.

இங்குள்ள சன்னலில் படிக்கல் இல்லை. பூந்தொட்டிகள் வைக்க ஒரு மரத்தால் ஆன இணைப்பை நான் போட்டிருக்கிறேன். அதில் சோற்றைப் போட்டு அம்மா, “கிருஷ்ணா ரா” என்று கூப்பிடுகிறாள் தினம். காகங்கள் இங்கு ஏது? இரண்டாம் நாளே அணில்கள் வர ஆரம்பித்தன. இப்போது நிதம் கரண்டி சத்தம் கேட்டதும் வருகின்றன. பெருச்சாளி அளவுள்ள அணில்கள், அம்மாவின் தோழர்கள். அவற்றிலும் இரு பிள்ளைத்தாச்சிகளை அம்மா அடையாளம் கண்டு கொண்டிருக்கிறாள். அவற்றிற்குச் சோற்றில்  ஏதாவது லேகியம் கலந்து ஊட்டுவாளோ என்னவோ யாருக்குத் தெரியும்? நினைத்துப் பார்த்தால் அம்மாவின் இந்தக் காகங்களையும் அணில்களையும் அழைக்கும் சங்கேத மொழி வானத்தையும் பூமியையும் பிணைக்கும் மொழி என்று தோன்றுகிறது. ஏதோ ஒரு வகையில் நாம் உதிர்ந்து போய் விடாமல் இருக்க ஒரு வஜ்ரம் போல் இது இருக்கிறது. அம்மா என்னிடம் குமாரசாமிபற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை. விவாகரத்துபற்றியும் பேசவில்லை. அவள் பாட்டுக்கு நெய் மணக்கக் கடுகு தாளிக்கிறாள். நான் சன்னல் வெளியே பார்த்துக் கொண்டிருந்தால் மிக்ஸரில் துவையல் அரைக்க வா என்று நச்சிப் பிடுங்கிகிறாள். அல்லது வாழைப்பூவைப் பொடிப்பொடியாக நறுக்கி மோரில் போட்டு வெங்காயம், சீரகம், இஞ்சி, தேங்காய் அரைத்துப் போட்டு பொரியல் செய்தால் உடம்புக்கு நல்லது என்ற விவரத்தை எனக்கு விளக்குகிறாள். வாழைப்பூ கிடைக்காத இந்த ஊரில் எனக்கு எந்த வகையில் இந்த விவரம் உதவப் போகிறது? இருந்தாலும் கோயமுத்தூரில் பாட்டி வீட்டுக் கொல்லைப்புறம் மனதில் விரிகிறது தனு. எத்தனை வாழை மரங்கள், வாயில்புறம் விசிறி வாழை. அந்தத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு நாம் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஞாபகம் இருக்கிறதா? அதில் நோஞ்சானாக, தலையைப் படிய வாரி, நார் ரிப்பன் முடிந்த பின்னலை முன்னே விட்டு, பல்லெல்லாம் தெரிய இளித்த என் முகம் எனக்கு நினைவுக்கு வருகிறது. தாத்தா வீட்டை விற்கும் முன்பு நாம் இருவருமாய் ஒரு யூகலிப்டஸ் நாற்று வாங்கி நட்டோமே, அதை இப்போதுள்ளவர்கள் வெட்டாமல் வைத்திருக்கிறார்களா என்ற நினைப்பு அடிக்கடி வருகிறது.

என்னைப் பார்த்துக்கொள்ள வரச் சொன்னால், இப்படிப் புயல் வேகத்தில் வேலைகளை உருவாக்கிக் கொள்வாள் என்று நான் நினைக்கவில்லை. இங்கு இந்தியப் பொருள்கள் விற்கும் தெருவில் ஒரு தமிழர் கடை இருக்கிறது. அந்தக் கடைக்காரரிடம் அம்மா தமிழக அரசியல்பற்றி இருமுறை பேசியாகி விட்டது. என் தினப்படி வேலைக்கான ஒழுங்கு முறையையே தகர்க்கப் பார்க்கிறாள். என்னைச் சிடுசிடுக்க வைக்கிறாள். “அம்மா! ஆளை விடேன்” என்று அலற வைக்கிறாள். இருந்தாலும், சொன்னால் நம்ப மாட்டாய். இந்தப் பத்து நாட்களில் எனக்கு ஒரு கிலோ எடை கூடிவிட்டது.

நேற்று முன்தினம் வேலையை விட்டு வீடு வரும்போது அம்மா, “திக்குத் தெரியாத காட்டில்” பாடிக் கொண்டிருந்தாள். “நெஞ்சிற்கனல் மணக்கும் பூக்கள்…” என்றெல்லாம் விவரித்துவிட்டு, “கால் கை சோர்ந்து விழலானேன்” என்று அவள் பாடியபோது கதவில் சாய்ந்து கொண்டு அழுது விட்டேன் தனு. இரட்டைப் பின்னல்களுடன் தலையைத் தலையை ஆட்டி நீ பள்ளியில் நடந்த பாரதி பாட்டுப் போட்டியில் பாடினாய் இதை. இங்கே பல்கலைக் கழகத்தில் வேலை பார்க்கும் சிவநேசம் தம்பதியர் வீட்டுக்குப் போனோம். அங்கே திருமதி திலகம் சிவநேசத்தின் தாயார், தன் இளம் பருவத் தோழி விளாத்திகுளம் செண்பகம்தான் என்பதை அம்மா அவளுடன் பேசித் தெரிந்து கொண்டாள். செண்பகம் குடும்பத்தினர் சுயமரியாதை இயக்கத்தில் மிகவும் ஈடுபாடு உடையவர்களாய் இருந்தார்களாம். அவர்கள் வீட்டில் அம்மா, திலத்தின் அம்மாவுடன் அந்த நாட்களில் சேர்ந்து பாடிய, “ஒரு வானில் பன்னிலவாய் உயர் தமிழ்ப் பெண்களெல்லாம் எழுக! உங்கள் திருவான செந்தமிழின் சிறுமையினைத் தீர்ப்பதென எழுக!” என்று பாரதிதாசன் பாட்டுப் பாடியதும் திலகம் உருகிப் போய்விட்டாள். அவள் தாய் அவள் சிறு வயதிலேயே இறந்து போய்விட்டாளாம். அவளைப்பற்றிய இந்த விவரமெல்லாம் தெரியாது தனக்கு என்று சொல்லிச்சொல்லி நெகிழ்ந்து போனாள்.

“ஆனால் எங்க அம்மாவுக்கு சாமி பக்தி எல்லாம் உண்டு” என்றேன் அவளிடம்.

“அம்மா பெரிசா பூசையெல்லாம் செய்வீங்களா?’ என்று கேட்டாள் அவள்.

“ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் ஏதோ நாலு சாமி கொண்டு வந்திருக்கிறதுதான்” என்றாள் அம்மா.

அம்மாவின் பிளாஸ்டிக் டப்பாவைத் திறந்தால் ஒரு சின்ன அம்மன், சிவலிங்கம், கணபதி, முருகன், தவழும் கிருஷ்ணன் இத்யாதி கடவுள் உள்ளே. இவள் தனி மனுஷியாக வந்திருக்கிறாளா இல்லை, உலகத்தையே சுருட்டிப் பையில் போட்டுக்கொண்டு வந்திருக்கிறாளா என்று தெரியவில்லை தனு.”

பாரதியின் உலகில் அணில்கள், அவளைச் சுற்றியுள்ள வீட்டுக்காரர்களின் வாழ்க்கை விவரங்கள், உப்பும், புளியும் காரமும் கூடிய உணவு, அவள் மறந்தே போயிருந்த தமிழ்ப் பாடல்கள் இவை புகுந்து கொண்ட பின் அம்மா திரும்பி வந்தாள். அவள் குமாரசாமியைச் சந்தித்துப் பேசியிருந்தாள் என்ற விவரம் பின்புதான் தெரிந்தது. அவர் குடும்பத்தினர் ஒருநாள் வெள்ளிப் பாத்திரங்கள், நகைகள் இவற்றைக் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போயினர். அவர்களுக்கு வகையாகச் சாப்பாடு போட்டு அனுப்பினாள்.

“ஏம்மா, இதையெல்லாம் திருப்பிக் கேட்டியா?” என்று தனம் கேட்டபோது,

“இதெல்லாம் பாரதிதுதானே? அவ ஆள வேண்டி தந்ததுதானே?” என்று கேட்டாள்.

குமாரசாமிபற்றி பின்பு யாரும் பேசவில்லை. இரண்டொரு ஆண்டுகளுக்குப் பின் பாரதி ஒரு குஜராத்திக்காரனை மணந்துகொண்டு இங்கு வந்தபோது அம்மா நகைகளை அவளிடம் தந்தாள். வெள்ளிப் பாத்திரங்களை பணமாக்கி இந்தியாவில் செலவிடவென்று தந்தாள்.

தனம் காக்கைகளைக் கூப்பிடும் அம்மாவைப் பார்த்தவாறு இருந்தபோதே அம்மா வந்தாள்.

“சாப்பிட்டாச்சா தனம்?” என்றாள்.

“நான் ஓட்டல்லே தோசை சாப்பிட்டு விட்டு வந்தேம்மா. இங்க வருவேன்னு நினைக்கலை. அதனாலதான்.”

அம்மா சாப்பிட உட்கார்ந்தாள். அவள் சாப்பிடும்போது தனம் கேட்டாள்.

“நீ என்னம்மா தீர்மானம் பண்ணினே?”

அம்மா மௌனமாக இருந்தாள். அப்பா இறந்து ஒரு மாதமாகி விட்டது. வீட்டைக் காலி செய்யும்படி வீட்டுக்காரர் வேண்டுகோள் விடுத்தவண்ணம் இருந்தார்.

“சொல்லும்மா.”

“நான் என்னத்தைச் சொல்ல? உங்கப்பா இப்படி பண்ணிட்டுப் போயிட்டார். ஒரு வீடு கட்டலாம்னு எவ்வளவோ முட்டிகிட்டேன். எதுக்கு அந்தத் தலைவேதனை அப்படின்னு சொல்லிட்டார். என்னை இப்படி இருக்க இடமில்லாம அல்லாட விட்டுட்டு…”

“ஏம்மா அப்படிச் சொல்றே? என்கிட்டேயும் பாரதிகிட்டேயும்தான் நீ இருக்கணும். தினகரன்கிட்டே அப்பப்ப போகலாம்.”

“அது சரிதான். நீயே ஏதோ சிரமபட்டுட்டு…” என்று இழுத்தாள்.

தனத்தின் கணவன் சுதாகர் ஏதோ வியாபாரம் பண்ணப்போய் அகலக்கால் வைத்து விட்டான். அதில் பெருத்த நஷ்டமாகி, கையில் உள்ள சேமிப்பெல்லாம்கூடப் போய் விட்டது. இன்னும் தலை தூக்கிய பாடில்லை. தனத்தின் வங்கி வேலை வரும்படியில் வீடு ஓடியது. அதைத்தான் அம்மா அவ்வாறு குறிப்பிட்டாள்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா. உன்னை நான் காப்பாத்துவேன்” என்றாள் தனம்.

“நான் இல்லேன்னு இப்ப சொல்லலியே? மாட மாளிகை, கூட கோபுரமா வேணும்? ஏதோ ஒரு வேளைச் சோறு, ஒரு வேளைக் கஞ்சி. அன்புதாண்டி முக்கியம்” என்றாள் அம்மா.

“சாமானெல்லாம் கட்ட வேண்டாமா?”என்றாள் தனம்.

“எனக்கென்ன சாமான்? ஒரு பிளாஸ்டிக் டப்பாவுலே நாலு சாமியைப் போட்டுட்டு நான் கிளம்பிடுவேன்” என்றாள் அம்மா.

அம்மாவின் சாமான்களைக் கட்ட இரண்டு நாட்கள் லீவு போட்டுவிட்டு தனம், சுதாகருடன் வந்தபோதுதான் அவளுக்குச் சில விஷயங்கள் புரிந்தன. பாரதி பிறக்கும் முன்பு ஹரித்வார் போனபோது பொறுக்கிய வழவழப்பான, வரிகள் ஓடிய, கடும் சிவப்புக் கல்லிலிருந்து, பாரதிக்கு ஒரு வயதாகும்போது எட்டணா கொடுத்து வாங்கிய வாணலி, கல்யாணமாகி முதல் முறை பிறந்தகம் சென்றபோது, “குமுதா” என்று அவள் பெயர் பொறித்துத் தந்த சரவிளக்கு என்று ஒவ்வொன்றிற்கும் ஒரு கதை இருந்தது. வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தாளே ஒழிய, எதை வைத்துக் கொள்வது, எதைப் போடுவது என்று அவளால் தீர்மானிக்க முடியவில்லை. இழுப்பறைகள் உள்ள கண்ணாடி வைத்த பீரோ பாட்டி இறந்த பின் அம்மா எடுத்து வந்தது, பாரதியும், தனமும், தினகரனுமாகச் சேகரித்த பொம்மைகள், பச்சை ட்ரங்குப் பெட்டியில் அம்மாவுக்கு வந்த கடிதங்கள். அவள் சேகரித்த சித்த மருத்துவ மற்றும் சமையல் குறிப்புகள் என்று எதுவும் சுலபமாகக் கழித்துக் கட்டுவது போலில்லை. ஏழு கடல் தாண்டி உள்ள மரத்திலிருக்கும் பொந்திலுள்ள வண்டை நசுக்கினால் ஒரு ராட்சசன் உயிர் போய் விடும் என்பதுபோல், இவை எல்லாவற்றிலுமே அம்மாவின் உயிர் புதைந்து கிடந்தது. தனமும், சுதாகரும் மளமளவென்று சில முடிவுகளை எடுத்தனர்.

இரண்டு வீடு தள்ளி, உபயோகத்தில் இல்லாமல் இருந்த ஒரு கார் ஷெட்டை தற்காலிகமாக வாடகைக்கு எடுத்து, அம்மாவின் சாமான்களை பத்திரமாக அதில் வைத்தனர். ஏழெட்டு சாமான்களுடனும்… பிளாஸ்டிக் டப்பாவும் இதில் அடக்கம்… அவள் வீணையுடனும் அம்மா தனத்தின் வீட்டிற்கு வந்தாள். அப்பாவுக்கு ஒவ்வொரு முறை மாற்றலானபோதும் பத்திரமாக கட்டப்பட்ட வீணை அது. அம்மாவுக்கு ஆறுவயதில் தாத்தா ஆந்திர நாட்டில் வாங்கிய வீணை. அதற்குப் புடவையில் உறை தைத்து அழுக்குப் படாமல் வைத்திருந்தாள். அதை மல்லாக்க வைக்க தனத்தின் வீட்டில் இடம் இல்லை. அடியில் ஒரு மரத்தாங்கி வைத்து அதை சுவரில் சாய்த்து நிற்க வைத்தனர்.

தனத்தின் நாஸ்திக வீட்டில் அம்மா பிளாஸ்டிக் டப்பாவைத் திறக்க இடம் தேடினாள். கடைசியில் ஒரு கதவின் பின்னால் புத்தகங்கள் வைக்க என்று செய்திருந்த புது ஷெல்பின் ஒரு படியில் பிளாஸ்டிக் டப்பா, அம்மன் மற்றும் சாமிகளுடன் ஏறிக்கொண்டது.

ஒரு வாரம் கழித்து ஒரு மாலை சன்னலருகே உள்ள மேஜையை ஒட்டி அமர்ந்து, எதிரே உள்ள பழ மரத்தில் கிளிகள் கிளைகளில் உட்காருவதும், எழும்பி பறப்பதுமாய் இருப்பதைப் பார்த்தவாறு தனம், பாரதிக்கு ஒரு கடிதம் எழுதினாள்.

“பாரதி, அம்மா என் வீட்டிற்கு வந்திருக்கிறாள். ஆனால், அவள் நிம்மதியாக இல்லை. நிதம் இங்கு பரபரப்புச் சமையல் இல்லை. அடுத்து என்ன செய்வது என்று தீர்மானிக்கும்வரை சுதாகர் அனேகமாக வீட்டில்தான் இருக்கிறான். அவன் தன் சாப்பாட்டை ரொட்டி, முட்டை என்று முடித்துக் கொள்கிறான். அதிகம் போனால், அரிசியும், பருப்பும், காயகறிகளும் சேர்த்த கிச்சடி செய்து சாப்பிட்டு விடுவான். அம்மாவுக்கு மட்டும்தான் சமையல். அவள் இரண்டொரு முறை சுதாகரைச் சாப்பிட வற்புறுத்தியிருக்கிறாள். நான் அப்புறம் ஒரு நாள், “அம்மா, சுதாகர் தனக்கு வேண்டியதைத் தானே செய்துப்பான். அவனை அவன் போக்குலே விட்டுடு. ஒருதருக்கொருத்தர் நம்ப சுதந்திரம் தரணும்மா” என்றேன். “இதற்குப் பெயர்தானா சுதந்திரம்? எனக்குப் புரியலியே” என்று அங்கலாய்த்தாள்.

வந்த உடனேயே மழைக்காலத்துக்கு முன் ரசப்பொடி, சாம்பார் பொடி போன்றவற்றைச் செய்யத் துடித்தாள். இதோ இந்த ஒரு வாரத்தில் என் வீட்டில் எல்லாப் பொடிகளும் தயார். மழைக்காலம் வர இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. நேற்று முன்தினம் போய் எலுமிச்சை வாங்கி வந்து, அரிந்து உப்பு ஊறுகாய், கார ஊறுகாய் என்று தனித் தனியாகப் போட்டாகி விட்டது. இஞ்சி முரப்பாவும், இஞ்சி ஊறுகாயும் செய்தாகி விட்டது. நான் பேச்சுவாக்கில் ஏதோ கேட்டு விட்டேன் என்று வெயிலில் போய் கீரை வாங்கிவந்து ஆய்ந்து வைத்திருக்கிறாள். நாங்கள் இருவரும் வேலை அது இதென்று அதிகம் யோசிக்கிறோம் என்று செம்பருத்திப் பூ போட்ட எண்ணெய் காய்ச்சியாகி விட்டது. ரிஷிவேலியில் படிக்கும் சந்தியா லீவில் வருவாள் என்று எண்ணெய் பட்சணங்கள் செய்து டப்பாவில் போட்டாகி விட்டது. வீட்டில், நல்லதண்ணீர்… அம்மா பிடித்து வைத்தது. சாதாரண தண்ணீர்… நாங்கள் பிடித்தது… கறி, முட்டை செய்த பாத்திரம், செய்யாத பாத்திரம், அம்மாவின் தட்டு, எங்கள் தட்டு என்று பல பாகப் பிரிவினைகள்.

கடவுள்கள் உள்ள பிளாஸ்டிக் டப்பா சிறியதுதான். ஆனால், மூன்றே நாட்களில் கீழே ஒரு பலகை, அதில் ஒரு பித்தனைச் செம்பு, கற்பூர ஆரத்தித் தட்டு, கோலம், ஊதுபத்தி, சந்தனம், குங்குமம், பூ என்று விஸ்தரித்து விட்டது அம்மாவின் பூசை சமாச்சாரம். கடவுள்களுக்குப் புளி போட்டுத் தேய்த்து குளியல். அம்மனுக்குப் பலவித பாவாடை, தாவணி, சந்தன, குங்கும அலங்காரம், பால், திராட்சைப் பிரசாதம் என்று கடவுளைச் சேர்ந்த வேலைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. பால், திராட்சைப் பிரசாதம் தர பக்கத்து வீட்டுப் பெண் குழந்தை வேண்டியிருக்கிறது. அப்புறம் அவள் அம்மாவின் ஒரகத்திக்குக் குழந்தையே இல்லையென்று அம்மாவின் சித்த மருந்து தயாரிப்பு. எதிர் வீட்டில் லிங்கம்மாவின் கணவருக்கு தலைவலி என்று இரவு ஒன்பது மணிக்குச் சுக்கு மிளகு போட்ட பால் பற்று அரைப்பாள். அம்மாவின் கடவுள்கள் ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் இருப்பது வாஸ்தவம்தான். அதை எடுத்துக் கொண்டு அவள் எங்கு வேண்டுமானாலும் பறப்பாள். ஆனால் திரும்பி வர, குமுதா என்று பெயர் பொறித்த பித்தளைச் சாமான்களும், தேக்கு மரப் பீரோவும், வலை பீரோவும், சன்னல் படிக்கல்லும், மல்லிகைப் பந்தலும், புடலைக்கொடியும் உள்ள, வீணை மல்லாக்க இருக்க ஒரு இடம் அவளுக்குத் தேவை.  “மற்றுப் பற்றெனக்கின்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்” என்று தேவாரத்தை அம்மா பாடினாலும், அம்மா பூமியுடன் பிணைந்து கிடப்பவள். அவள் பஞ்சாகப் பறந்தாலும், மீண்டும் தரையைத் தொட நினைப்பவள். என் வீட்டிலும், உன் வீட்டிலுமாக அவள் இருக்கலாம். ஆனால் அவள் கஷ்டப்படுவாள். இதை மறைக்க அது, அதை மறைக்க இது என்று ஆயிரம் பொய்கள் சொல்வாள். அம்மாவுக்குத் தேவை இருக்க இடம் மட்டும்  இல்லை. அந்த இடம் அவள் ஆட்சியில் இருக்க வேண்டும். ஏனென்றால் அம்மா தனி மனுஷி இல்லை. அவள் ஒரு ஸ்தாபனம். அவளுக்குத் தேவை பிளாஸ்டிக் டப்பாவை வைக்க ஒரு சிறு இடம் மட்டும் இல்லை. அவளுக்கே ஆன ஒரு ராச்சியத்தைத் தேடி அவள் பாவம் அலைகிறாள். அதை நானும் நீயும் நினைத்தால் அவளுக்குத் தரலாம். உன்னிடம் உள்ள நகைகளும், என்னிடம் உள்ள நகைகளும் அம்மா தந்தவைதான். அவற்றை விற்றுப் பணமாக்கினால் அவள் வீட்டை அவளுக்குத் தரலாம். வீட்டுக்காரர் அதை விற்க முயன்று கொண்டிருக்கிறார். தினகரன் மாதம் இத்தனை என்று அனுப்பட்டும். பள்ளிப்படிப்பு முடித்துவிட்டு இரண்டொரு மாதங்களில் சந்தியா வருகிறாள்.  அவள் பாட்டியுடன் இருக்க ஆவலாக இருக்கிறாள். உன் குழந்தைகளுடன் பேச இங்கிலீஷ் படிப்பு, சந்தியா கல்லூரி நாட்களில் போட்டுக்கொள்ள பூவேலை செய்த சல்வார் கமீஸ், பாட்டு வகுப்புகள், மருத்துவ முயற்சிகள், தன் வாழ்க்கைச் சரிதம் எழுதுவதற்கென யோசனைகளை, ரோசாப் பதியன்கள், கீரைப் பாத்திகள் என்று பல்லாண்டுத் திட்டங்களுடன் அந்த வீட்டில் அம்மா வாழ்வாள்.”

கடிதத்தை முடித்துவிட்டு நிமிர்ந்தபோது, அம்மா சாய்வு நாற்காலியில் அமர்ந்து தெருவைப் பார்த்தவாறிருந்தாள். எழும்பி எழும்பிப் பறந்து முடித்த பச்சைக் கிளிகள் இலைகளினூடே மறைந்து அமைதியாக அமர்ந்திருந்தன.

*****

One response to “குவிகம் கதைப் பொக்கிஷம் – பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்- அம்பை

  1. அம்பையின் எழுத்திற்கு கேட்கவா வேண்டும்? நேடி விடி குறையாமல் படைக்கப்பட்டிருக்கும் அம்மா பாத்திரம் உள்ளத்தை உருக்குகிறது. ‘அவள் தனி மனுஷி அல்ல, ஸ்தாபனம்’ என்ற வாக்கியம் அவளை முழுவதுமாக பிரதிநிதி படுத்திவிடுகிரது.
    – இராய செல்லப்பா. நியூஜெர்சி

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.