திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசரைத் தொடர்ந்து யாரைப்பற்றிச் சரித்திரம் பேசப்போகிறது என்று பல ரசிகர்கள் மண்டையைப்போட்டு உடைத்துக்கொள்கிறார்களாம்!
அட … இதுக்குப்போயி அலட்டிக்கலாமா?
ஒரு குழந்தைக்குக்கூடத் தெரியுமே!
வேறு யார்?
நமது திருஞானசம்பந்தர்தான்.
தென்னிந்திய சரித்திரத்தில் ஒரு சமய மாற்றம் அமைய இந்த இருவருமே முக்கிய காரணமாயினர்.
திருநாவுக்கரசர் பல்லவ மன்னனை சமணத்திலிருந்து சைவத்துக்கு மாற்றினார்..
திருஞானசம்பந்தர் செய்தது என்ன?
மேலே படியுங்கள்..
சிவபாதவிருதயர் – பகவதியார் என்ற தம்பதிகள் ‘சீர்காழி’யில் வாழ்ந்துவந்தனர்.
அவர்களுக்கு அந்த ‘தெய்வமகன்’ பிறந்தான்.
மூன்று வயதாகியது.
பொற்றாமரைக்குளத்தில் குளித்திட எண்ணி மகனைக் கரையில் உட்கார வைத்துவிட்டு நீரில் மூழ்கினார்.
குழந்தை தந்தையைக் காணாமல் திரும்பிக் கோவில் கோபுரத்தைப் பார்த்து ‘அம்மா.. அப்பா..’ –என்று அழுதது.
உலகில் பிறக்கும் சிலருக்குத்தான் தெய்வ அம்சங்கள் அமையும். அதுவும் காலம் அமையும்போதுதான்.
எத்தனையோ யானைகள் முதலை வாய்ப்பட்டாலும் – கஜேந்திரன் என்ற யானைக்கு மட்டும் ‘ஆதிமூலமே’ என்றவுடன் நாராயணன் உதவிக்கு வந்தான்..
அதுபோல் – அந்தக் குழந்தை அழுகைகேட்டு- அன்று ‘சிவன் – பார்வதி’ அங்கு வந்தனர்.
பார்வதி தன் முலைப் பாலெடுத்து பொற்கிண்ணத்தில் ஞானப்பாலாக குழந்தைக்கு ஊட்டினாள்..
நீராடிய தந்தை – மகனது கையிலும் வாயிலும் பொங்கிய பால்கண்டு – பொங்கினார்.
‘யாரோ இந்த எச்சில் பாலைக் கொடுத்தது’ – என்று வெகுண்டார்..
குழந்தை பேசியது..
” ‘யாரோ’ என்று குறைவாகப் பேசவேண்டாம்.
அது சிவனாரும் பார்வதியாரும் தான்”
‘தோடுடைய செவியன்’ – என்று தொடங்கும் பாடல் ஒன்றைப் பாடியது அந்தக் குழந்தை.
தந்தையார் அசந்து போய்விட்டார்.
தெய்வ அருளாலேதானே இது நிகழ இயலும்..
நகரம் முழுதும் இச்செய்தி பரவியது..
சம்பந்தர்… ஆளுடைப்பிள்ளை … என்று பல பெயர்கள் …
திருநீலகண்ட யாழ்ப்பாணர் – பெரிய சிவபக்தர்.அவரது மனைவி மதங்கசூளாமணி. இருவரும் யாழிசை வல்லுனர்கள். இருவரும் சம்பந்தரின் பதிகங்களுக்குச் சேர்ந்து யாழிசைத்தனர்.
தந்தையார் மகனைத் தோளில் சுமந்து ஆலயம் பல சென்றார்..
திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் சந்திப்புகளை ஏற்கனவே பார்த்திருந்தோம்…
சில அற்புதங்கள்:
- மழைவ மன்னன் மகள்- வலிப்பு நோயால் – வருந்தினாள்… திருஞானசம்பந்தர் பதிகம் பாடி அவள் நோய் குணமாயிற்று.
- ஒரு கன்னிப்பெண் … காதலனுடன் ஓடிப்போய்.. கல்யாணம் செய்துகொள்ளத் துணிந்தாள்.. இருவரும் கோவில் மடத்தில் தங்கியிருக்கையில்… காதலன் பாம்பால் கடிபட்டு …காலமானான். ‘மணமாகுமுன்னே பிணமானான்’. காதலி .. திருஞானசம்பந்தர் காலடியில் வீழ்ந்து புலம்பினாள். திருஞானசம்பந்தர் – ‘சடையாய் எனுமால்’ –என்ற பதிகம் பாடியதும்.. காதலன் உயிர் பெற்றுவந்தான்..
- திருவீழிமிழலையில் திருநாவுக்கரசருடன் இருக்கையில்.. நாட்டில் பஞ்சம்… இருவரும் இறைவனைத் துதிக்க- இறைவன் இருவருக்கும் தங்கக்காசுகள் தந்தருளினார்.
ஒரு நாடகம் துவங்குகிறது…
இடம்: மதுரை.
மன்னன் பாண்டியன் .. நெடுமாறன்.. இளவயதிலேயே அவனுக்கு முதுகில் விழுந்த கூன் அவனைக்
கூன் பாண்டியன் ஆக்கியது. சமண மதத்தில் ஈடுபாடுகொண்டான்..
மனைவி. சோழநாட்டு இளவரசி மங்கையர்க்கரசி..
மந்திரி: குலச்சிறையார்.
மகாராணியும், மந்திரியாரும் பெரும் சிவ பக்தர்கள்.
‘சைவத்தை எப்படிப் பரப்பலாம்’ என்று ஆலோசித்தனர்.
மாபெருஞ்சோதியாய் திகழ்ந்த திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைப்பது என்று முடிவுசெய்து தூதுவனை சீர்காழிக்கு அனுப்பினர்.
திருமறைக்காட்டில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் இருக்கையில்.. தூதுவர் வந்தனர்..
தூதுவன்: “பாண்டிய நாடு சமணர்களது ஆதிக்கத்தில் சிதைந்துவருகிறது. மன்னரும் அவர்களது வலையில் விழுந்துவிட்டார். தென்னாட்டில் சைவம் தழைக்கவும் – சமணர்களை வெல்லவும் – தாங்கள் மதுரை வந்தருளவேண்டும். மகாராணி, மந்திரி – இவற்றைக்கூறி எங்களை அனுப்பினார்கள்”
திருஞானசம்பந்தர் வதனத்தில் புன்முறுவல் விரிந்தது..
திருநாவுக்கரசர் திடுக்கிட்டார்.
“திருஞானசம்பந்தரரே.. “- என்று தொடங்கி சமணர்களது கொடிய செயல்களைப்பற்றி விளக்கினார் .. “மேலும்.. நாள்-கோள் – சரியில்லாததால் ..இப்பொழுது தாங்கள் போவது உசிதமல்ல” –என்றார்.
திருஞானசம்பந்தர்: “நாம் போற்றுவது பரமனது பாதங்களை.. ‘நாளும்,கோளும்’ நம்மை என்ன செய்யும்?”
‘வேயுறு தோளிபங்கன்’ எனத்தொடங்கும் ‘கோளறு திருப்பதிகம்’ பாடினார்.
விரைவில்..திருஞானசம்பந்தர் – மதுரை புறப்பட்டார்.
அழகிய மதுரை மேலும் அழகுபடுத்தப்பட்டது.
சமணர்கள் ஒன்றுகூடி நிலைமையை விவாதித்தனர்.
மங்கையர்க்கரசியும், குலச்சிறையாரும் அவரை வரவேற்று வணங்கிப் போற்றி, மடத்தில் தங்கவைத்தனர்.
சமணர்கள் புகைந்தனர்.
மன்னரிடம் சென்று அவரை மேலும் குழப்பினர்.
“ஞானசம்பந்தர் தங்கும் மடத்துக்குத் தீ வைக்கவேண்டும்”
குழம்பிய மன்னன் :“ செய்யவேண்டியதை செய்க”
இரவு – மன்னனின் குற்றமுள்ள நெஞ்சு உறங்கத் தவித்தது.. மன்னன் அருகில் வந்த மங்கையர்க்கரசியிடம் நடந்ததைக் கூறினான்.
திடுக்கிட்ட அரசி: “மன்னரே! இது என்ன விபரீதம்? சமணர்களுக்கும் சைவர்களுக்கும் வாதம் வைத்து.. யார் வெல்கிறார்களோ – அவர்களை நாம் ஆதரிக்கலாம்.”
மன்னன் சிந்திக்கத்தொடங்கினான்.
சமணர்கள் இரவில் மடத்திற்குத் தீ வைத்தனர்..
மடத்தில்- தொண்டர்கள் விரைவில் தீயை அணைத்துவிட்டு – திருஞானசம்பந்தரிடம் முறையிட்டனர்.
திருஞானசம்பந்தர் : ‘இது சமணர்களின் குற்றமாயினும் – இதை ஆதரித்த நாட்டு மன்னனது குற்றம் கொடியது’ – என்றார்.
‘செய்யனே திரு ஆலவாய் மேவிய ..’ எனத்துவங்கும் பதிகம் பாடினார். ஒவ்வொரு பாடலின் ஈற்றடியில்:
‘சமணர் இட்ட தீ பாண்டியனைச் சாரட்டும்’ – என்று கருத்தை வைத்தார்.
உடனே… தீப்பிணி என்னும் வெப்பு நோய் – மன்னனைப் பீடித்தது.
வேந்தன் உடல் துடித்தது.. உயிர் ஊசலாடியது..
மகாராணியும், மந்திரியாரும் திகைத்தனர்..
செய்தி கேட்ட சமணர்கள் – விரைவில் வந்து – மந்திரம் கூறி –பீலி கொண்டு மன்னனைத் தடவினர்.
பீலிகள் எரிந்தன.. பிரம்புகொண்டு மன்னனைத் தடவினர். பிரம்புகள் எரிந்தன..
‘சமணர்களே ! ஓடிப்போங்கள்”- என்று மன்னன் துரத்தினான்.
அரசி : “திருஞானசம்பந்தரை அழைத்து வந்தால் அவரே நமக்கு உதவக்கூடும்”
மன்னன்:” யார் எனது நோயைத் தீர்க்கிறார்களோ அவர்கள் பக்கம் சாய்வேன். திருஞானசம்பந்தர் வரட்டும்” என்றான்.
அரசியும் மந்திரியும் மடத்திற்குச்சென்று.. திருஞானசம்பந்தரது பாதம் பணிந்து…
‘தேவரீர் எங்கள் அரண்மனை வந்து மன்னனைக் காக்கவேண்டும்’- என்று விண்ணப்பித்தனர்.
திருஞானசம்பந்தர்: ‘இன்றே வருவோம்..நன்றே செய்வோம்’
திருஞானசம்பந்தர் வரப்போவதைக்கண்டு சமணர்கள் வெகுண்டு… மன்னனைக் கண்டனர்.
“மன்னா! ஒரு வேளை சம்பந்தன் தந்திரத்தால் உங்கள் நோயைப் போக்கினாலும்.. எங்களால்தான் இந்த நோய் தீர்ந்தது என்று தாங்கள் சொல்லவேண்டும்..அதுவே சைவத்தை வெல்லும் வழி” – இப்படி ஒரு மன்னனிடம் கூறவேண்டுமென்றால் ..சமணர்களுக்கு எவ்வளவு தெனாவெட்டு! மன்னன் மீது எத்தனை ஆளுமை!
மன்னன் செவி சாய்க்கவில்லை.
“இருவரும் எனது நோயைக் குணமாக்க முயற்சிக்கலாம். நான் பொய் சொல்லமாட்டேன்”.
திருஞானசம்பந்தர் – வந்தார். அரசர் அருகில் அமர்ந்தார்.
சமணர்கள் பொருமினர்.
தங்கள் மந்திரத்தைக் கூவினர்..
திருஞானசம்பந்தர்: “உங்கள் சமயக் கருத்துகளைக் கூறுக”
சமணர்கள் துள்ளி எழுந்து.. ஆர்ப்பரித்தனர்..
அரசியார் குறுக்கிட்டு : “மன்னரே.. முதலில் திருஞானசம்பந்தர் தங்களது நோயைக் குணமாக்கட்டும்.. பிறகு சமண-சைவ வாது நடக்கலாம்”
சமணர்கள்: “மன்னா! நங்கள் எங்கள் மந்திர மகிமையால் உங்களது இடப்பகுதியைக் குணப்படுத்துகிறோம்.. புதிதாக வந்த சம்பந்தர் – வலது பக்கத்தைக் குணமாக்க முயலட்டும்”.
போட்டி துவங்கியது…
‘இந்த நாடகம் இந்த மேடையில் எத்தனை நாளம்மா’?
சரித்திரம் தொடரும்…