சிறுகதை எழுத்தாளர்களில் சிறந்த ஐம்பது எழுத்தாளர்களின் குறிப்புகளை திரட்டி இதில் தொகுத்திருக்கிறேன். அந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளையும் குறிப்பிட்டு இருக்கிறேன். இந்த தொகுப்புக்காகத் தகவல்களை திரட்டும்போதுதான் இன்னும் நிறைய எழுத்தாளர்களின் தகவல்கள் திரட்ட வேண்டியிருக்கிறது என்பது புரிகிறது. இணையத்தில் எல்லாம் இருக்கிறது என்பர். அப்படியெல்லாம் இல்லை என்பது நன்றாக புரிகிறது. பல எழுத்தாளர்களைப்பற்றிய தகவல் இணையத்தில் இல்லாமல் இருப்பதை பெரும் குறையாகவே நினைக்கிறேன். இந்த கட்டுரை அந்த குறையை சிறிதளவாவது குறைக்கும் என்பது என் எண்ணம். இன்னும் இதில் இல்லாத சிறந்த சிறுகதை எழுத்தாளர்களை வேறொரு கட்டுரையில் காணலாம். –
-என். செல்வராஜ்
பி எஸ் ராமையா
வத்தலகுண்டு கிராமத்தில் பிறந்த ராமையா எழுதிய ” மலரும் மணமும் “என்ற சிறுகதைக்கு ஆனந்த விகடன் பரிசு பெற்றார். அவர் மணிக்கொடி இதழ் பற்றி எழுதிய மணிக்கொடி காலம் என்ற கட்டுரை நூலுக்காக 1982 ல் சாகிதய அக்காடமி விருது பெற்றார். அவர் மணிக்கொடி இதழை சிறுகதைகளுக்கென்றே மாதமிருமுறை இதழாக சில காலம் நடத்தினார். இவரது சிறுகதை தொகுதிகள் மலரும் மணமும், பாக்யத்தின் பாக்யம், ஞானோதயம், புதுமைக்கோயில், பூவும் பொன்னும் ஆகியவற்றை அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.இவரது தேரோட்டியின் மகன் என்ற நாடகம் புகழ் பெற்றது. இவரின் சிறந்த சிறுகதைகள் நட்சத்திரக் குழந்தைகள், கார்னிவல், மலரும் மணமும்.
கு அழகிரிசாமி
இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர். எழுத்தாளர் கி ராஜநாரயணனின் இளமைக்கால நண்பர். இலக்கிய உலகில் இவரது சிறுகதைகள்
புகழ் பெற்றவை. 1970 ல் அன்பளிப்பு என்னும் சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அக்காடமி விருது பெற்றவர். மலேசிய தமிழ் நேசன் பத்திரிக்கையில் பணியாற்றியவர். நவசக்தி நாளிதழில் பணியாற்றியபோது அவர் கவிச்சக்கரவர்த்தி என்ற நாடகத்தை எழுதினார். அது அவருக்குப் பெயரும் புகழும் பெற்றுத் தந்தது. இவரது முழு சிறுகதைத் தொகுப்பை கு அழகிரிசாமியின் சிறுகதைகள் என்ற பெயரில் காலச்சுவடு வெளியிட்டுள்ளது. இவரது ” ராஜா வந்திருக்கிறார்” என்ற கதை இந்திய மொழிகளிலும் ரஷ்ய மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்ட சிறந்த கதை. இவரின் சிறந்த கதைகள் அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார், காற்று, சுயரூபம், திரிவேணி, இருவர் கண்ட ஒரே கனவு.
ஜெயகாந்தன்
மக்கள் கவனத்தை பெரிதாகக் கவராத அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை, அவர்களுடைய உணர்ச்சிகளை, வாழ்வின் மேன்மை, அவலம்
அனைத்தையும் தன் கதைகளின் பேசு பொருளாக்கியவர். சிறந்த நாவலாசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர். சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலுக்காக சாகித்ய அக்காடமி விருது பெற்றவர். 2005 ஆம் ஆண்டில் ஞானபீட பரிசு பெற்றவர். ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் இவரது புகழ் பெற்ற நாவலாகும்.இவரது சிறுகதைகளின் முழுத் தொகுப்பை கவிதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஆனந்த விகடனில் தொடர்ந்து பல முத்திரைக் கதைகளை எழுதினார். அவை முத்திரைக் கதைகள் என்ற பெயரில் கவிதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின்சிறந்த சிறுகதைகள் அக்னிப்பிரவேசம், யுகசந்தி,நான் இருக்கிறேன், குருபீடம், மௌனம் ஒரு பாஷை, நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ, ட்ரெடில், பிணக்கு.
ஆ மாதவன்
திருவனந்தபுரத்தில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் இவர். திராவிட எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராக ஆனார். திருவனந்தபுரத்தில் உள்ள சாலைத்தெருவை பிண்ணனியாகக் கொண்டு பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இலக்கியச்சுவடுகள் என்ற நூலுக்காக 2015 ஆம் ஆண்டு சாகித்ய அக்காடமி விருது பெற்றார். இவருடைய கிருஷ்ணப் பருந்து நாவல் சிறந்த நாவல் ஆகும். இவரது கடைத்தெருக் கதைகள் என்ற சிறுகதைத் தொகுதி தமிழிலக்கிய உலகில் பெரும் கவனத்தை ஈர்த்தது. ஆ மாதவன் கதைகள் என்ற முழு தொகுப்பை நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின்சிறந்த சிறுகதைகள் நாயனம், பறிமுதல், தண்ணீர்.
ச தமிழ்ச்செல்வன்
அறிவொளி இயக்கத்தில் பங்கேற்று பல கிராமங்களுக்குச் சென்று கல்விப் பணியாற்றியவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க நிர்வாகி.
குறைவாகவே சிறுகதைகளை எழுதி உள்ளார். இவரின் சிறுகதைகளின் முழு தொகுப்பு “ச தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் ” என்ற பெயரில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. சிறுகதைக் களத்தை தேர்ந்துகொண்டு யதார்த்த தளத்தில் இயல்பான மொழி, பிரச்சாரமற்ற தன்மை சிறுகதைக்குரிய சாதுர்யம்கொண்டு இயங்கியவர். இப்போது கதைகள் எழுதுவது இல்லை. எழுத்தாளர் கோணங்கி இவரின் சகோதரர்.வெயிலோடு போய், வாளின் தனிமை ஆகிய கதைகள் சிறப்பானவை. தீப்பெட்டி தொழிற்சாலயில் கருகும் பிஞ்சுகளும் , அத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் கரிசல் மக்களும் இவரது கதைகளில் ஆழமாக வெளிப்படுகின்றனர். இவரின் சிறந்த சிறுகதைகள் வெயிலோடு போய், வாளின் தனிமை,பாவணைகள்.
பிரபஞ்சன்
புதுச்சேரி தந்த புகழ் பெற்ற படைப்பாளர். இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். பிரபஞ்சன் என்ற புனை பெயரில் எழுதி வருகிறார். சிறந்த சிறுகதை எழுத்தாளர். வானம் வசப்படும் நாவலுக்காக 1995ல் சாகித்ய அக்காடமி விருது பெற்றவர். மானுடம் வெல்லும் நாவலும் சிறந்த நாவலாகும். குமுதம், ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் ஆகிய வாரப் பத்திரிக்கைகளில் பணிபுரிந்தார். இவரது முதல் சிறுகதை “என்ன உலகமடா?” பரணி என்ற பத்திரிக்கையில் 1961ல் வெளியானது. இவர் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.இவரது சிறுகதைத் தொகுப்பான “நேற்று மனிதர்கள்” பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக்கப்பட்டுள்ளது. இவரது மகாநதி புதினம் கோவை கஸ்தூரி ரங்கம்மாள் நினைவுப் பரிசு பெற்றுள்ளது. இவரது சந்தியா புதினம் 1997- ஆம் ஆண்டு ஆதித்தனார் நினைவுப் பரிசு பெற்றுள்ளது. இவரது பிருமம் சிறுகதை இலக்கியச் சிந்தனையால் ஆண்டின் சிறந்த கதையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவரது சிறுகதைகளின் முழுத் தொகுப்பை கவிதா பதிப்பகம் பிரபஞ்சன் சிறுகதைகள் என்ற பெயரில் இரண்டு தொகுதியாக வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் அப்பாவின் வேஷ்டி, மீன், மரி என்கிற ஆட்டுக்குட்டி, மனசு.
கி ராஜநாராயணன்
கோவில்பட்டிக்கு அருகில் உள்ள இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர். தமிழ் எழுத்துக்கு வட்டார இலக்கியம் என்ற புது வகைமையை உருவாக்கிக் கொடுத்ததில் முன்னோடியாக இருந்தவர் கி ரா. கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவலுக்காக 1991ல் சாகிய அக்காடமி விருது பெற்றவர்,. இவரது கோபல்ல கிராமம் சிறந்த நாவல். கரிசல் வட்டார எழுத்தாளர்களின் கதைகளை கரிசல் கதைகள் என்ற தொகுப்பாக தொகுத்திருக்கிறார். கரிசல் வட்டார வழக்கு அகராதியை தொகுத்துள்ளார். இவரது சிறுகதைகளை கி ராஜநாராயணன் கதைகள் என்ற தொகுப்பாக அன்னம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. வானம் பார்த்த பூமியான கரிசல் மக்களின் வாழ்க்கை, ஆசாபாசங்களை நயமான கிண்டலுடன் எடுத்துரைப்பவை இவரது கதைகள். இவரின் சிறந்த சிறுகதைகள் கன்னிமை, கதவு, நாற்காலி, கோமதி
கிக்
கந்தர்வன்
தமிழ்ச்சூழலில் முற்போக்கு இடதுசாரி எழுத்தாளராக நன்கு அறிமுகமானவர் நாகலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட கந்தர்வன். தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் கந்தர்வனுக்கும் முக்கிய இடம் உண்டு. முற்போக்கு கருத்து நிலை சார்ந்து வெளிப்படும் எழுத்து நடைக்கு, கதை சொல்லும் மரபுக்கு செழுமையான வளம் சேர்த்தவர் கந்தர்வன்.வறண்ட பிரதேசமான பிற படைப்பாளிகளால் ஒதுக்கப்படும் தொழிற்சங்க வாழ்வின் வாஞ்சை மிகு மனிதர்களை தமிழ்க்கதைப் பரப்புக்குக் கைபிடித்து அழைத்துவந்த படைப்பு முன்னோடி அவர். கந்தர்வன் கதைகள் முழுத் தொகுப்பை வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இவரின் சிறந்த சிறுகதைகள் சாசனம், தராசு, மங்கலநாதர், காளிப்புள்ள.
சா கந்தசாமி
மயிலாடுதுறையில் பிறந்த இவர் சாயாவனம் என்ற நாவல் மூலம் புகழ் பெற்றவர். இந்நாவலை தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய
இலக்கியங்களுள் ஒன்றாக அறிவித்தது. 1998 ஆம் ஆண்டு விசாரணைக் கமிஷன் என்ற நாவலுக்காக சாகித்ய அக்காடமி விருது பெற்றார். இவரின் சிறுகதைகளின் முழு தொகுப்பை கவிதா பதிப்பகம் சா கந்தசாமி கதைகள் என்ற பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. கந்தசாமியின் படைப்புலகம் அனுபங்களின், வாழ்க்கையின் அடிநாதமாக தொழிற்படும் மனித உணர்வுகளின் சிக்கல்களின் முரண்பாடுகளின் களமாக உள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் தக்கையின் மீது நான்கு கண்கள், உயிர்கள், ஹிரண்ய வதம்
இராஜேந்திர சோழன்
மயிலத்தில் வசித்து வரும் இவர் அஷ்வகோஷ் என்ற பெயரில் செம்மலரில் பல கதைகளை எழுதி இருக்கிறார். படைப்பு வாசகனைச் சிந்திக்க
தூண்டுவதாய் இருப்பதுடன், அவனுடைய சமுதாயப் பார்வையில் மேலும் வெளிச்சம் பாய்ச்சுவதாகவும் இருக்கவேண்டும் என்ற சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருபவர். இவரது சிறுகதைகளின் முழு தொகுப்பை இராஜேந்திர சோழன் கதைகள் என்ற பெயரில் தமிழினி வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் புற்றில் உறையும் பாம்புகள், எதிர்பார்ப்புகள்,கோணல் வடிவங்கள்
இன்னும் வரும்