பஜ நந்தகுமாரம் சர்வஸுக சாரம் நத்வவிசாரம் ப்ரம்மபரம்” என்ற
சுந்தர வடிவாகும் சின்மயரூபம் சபரிகிரீசம் சாந்திமயம்
சங்கரனரிகூடும் சங்கமநேரம் பம்பைக் கரையினில் அவதாரம்
சந்தனமணம் சூழும்கானகமாளும் தெய்வம் அருளும் கவிதைவரம்!
பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!
தண்மதிவதனம் செந்தாமரைநயனம் தவரூபம் சிவவைராக்யம்!
தண்மதிசூடும் சிவம் மோஹினி இணையும் தருணம் பாலன் அவதாரம்!
மண்டலவ்ரதம்கேட்கும் மன்னவன்காட்டில் அவனருளால் முள்மலராகும்!
பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!
சின்முத்ரைக்கரம் சிவனம்சம்என்றால் மோஹினி போலவன் நளினகரம்!
சிந்தனைகள் இணையும் அரனும்அரியும்அருளும் அற்புத தெய்வாம்சம்!
கன்மத்திரைவிலகும் மாயைமறையும் கடைவிழிநோக்கில் ஞானம்வரும்!
பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!
அம்புவிஈதும் ஏழ்தலம்யாவும் ஒளிர்மீன்களும் கோள்களும் அரசாங்கம்!
அம்புலிசூடும் அம்பலவாணன் திருமாலுடன்அருளும் அவதாரம்!
வன்புலியேறும் அவன்வில்லேந்தும் கரம்வல்வினை மாய்க்கும் வரமருளும்!
பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!
அச்சன்கோவில் அவன்அரசாங்கம் எழில்ஆரியன்காவினில் அருளம்சம்!
அச்சன்சிவன்மோஹினி அம்மைஇருவரும் ஒன்றாய்அருளும் அவதாரம்!
மெச்சும்குளத்தூரின்பாலகன்வடிவம் அன்பர்க்கருளும்மழலைவரம்!
பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!
விண்ணவர்குலம்வாட்டும் வ்யாகுலம்போக்கிடும் வ்யாக்ராரூடம் சபரியுறும்!
வெண்பிறைபுனையும் யோகியும்மோஹினியும் ஒன்றாய்அருளும் அவதாரம்!
பண்ணொடுபனுவல்கள் வேட்கும்பந்தள ராஜகுமாரம் சுகமருளும்!
பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!
செஞ்சரணம்புகலெனும் அடியார்மனதில் கோவில்கொள்ளும் மணிகண்டம்!
செஞ்சடைமீதோர் அரவம்சூடும் இறைஅரியோடருளும் சிவபாலம்!
அஞ்சிடும்அமரர்தம் அச்சம்போக்கும் மஹிஷிஸ்ம்ஹாரம் அமைதிதரும்!
பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!
அந்தமும்ஆதியும் அதுவாகும் அதுவேநீயெனும் மறையந்தம்மந்த்ரம்!
அரனெனும் மின்னல்அரியெனும்மேகம் இவைதொடும்நேரம் அவதாரம்
செந்தழலெழும்நேரம் சரணம்சூழும் ஐயன்அருளும் பரமபதம்!
பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!
உய்யும்வழிகாட்டும் உன்னதமார்கம் உம்பரின்உலகினில் சேர்த்துவிடும்
உத்திரநக்ஷத்ரம் பரமபவித்ரம் ஹரிஹர்புத்ரன் அவதாரம்
நெய்யபிஷேகம் நம்நெஞ்சைநிறைக்கும் இதமருளும்நற்பதமருளும்
பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!
சத்தியமாகும்படி பத்துமோரெட்டும் பரவசமூட்டும் முக்திதரும்!
சங்கரசாரங்கரின் சங்கமம் அருளால் சாந்தஸ்வரூபம் அவதாரம்
நித்தியமுத்தர்சிரம் இருமுடிதாங்கும் நிர்மலரூபம் சுமைஏற்கும்!
பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!
திண்டிமம், பறைவாத்யம்அழுதாதீரம் அழகன்நடனம் அரங்கேறும்!
திண்ணியமேனியில் திருவாபரணம் தரிசனம்நல்கும் நிஸ்சலனம்!
வண்டினம்முரலும் பூங்காவனம்வாழும் வனதேவதைமார் வந்துதொழும்!
பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!
தென்பொதிகைக்குறுமுனி தவமும் கலையும்வண்ணம் ஆங்கோர்ஜோதியெழும்!
தென்முகத்தெய்வம்மாலுடன்அருளும்தேசிதுவென்றேதன்மனம்தெளியும்!
பொன்சொரிமுத்தையனும்பரிவாரங்களும்அருளும்தலம்மூலாதாரம்!
பஜபாண்ட்யகுமாரம்தத்வமஸிசாரம்ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!
நச்சரவின்விடமும் அச்சங்கோவிலின் எல்லையில் ஏறாதிறங்கிவிடும்
நஞ்சுண்டோனும் கருடத்வஜனும் அருள்மன்னன் நிழலே அமுதவரம்!
அச்சம்விலகும் மலைஅவனருள்பொழியும் ஸ்வாதிஷ்டானத் தலமாகும்!
பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!
அம்புலிவதனம் வெம்புலிஇவரும் சித்பரம்ஆரியங்கா உறையும்
அச்சுதனும்அரனும் இணையும்நேரம் ஹரிஹரபுத்ரம் அவதாரம்
நம்பிடுமடியார் நலம்கூட்டும்க்ஷேத்ரம் மணிபூரகமாய் மலர்ந்திருக்கும்!
பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!
சின்னஞ்சிறுரூபம் செவ்விதழ்மலரும் குளத்துப்புழையில் கோவிலுறும்
சிற்றம்பலமாடும் சிவமரியோடருள் சிறுபாலன் இங்கவதாரம்!
மின்னற்கொடியாய்ச் சுடர் மேவு மநாஹதசக்ரக்ஷேத்ரம் இதுவாகும்!
பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!
அல்லிருள்மேனியும் வில்ஏந்தியகரமும் கிராதரூபம் காட்சிதரும்
வண்ணம்பலபூசும் பேட்டைதுள்ளல் முழவொடு பக்தர்தம் நடனம்வரும்
நல்எருமேலியிலே வாபரன்காவல் விசுத்திக்ஷேத்ரம் பொலிவுதரும்!
பஜபாண்ட்யகுமாரம்தத்வமஸிசாரம்ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!
தற்பரயோகினி சபரிபீடமும், சரங்குத்திஆலும் சன்னிதியும்
தம்நிலைமறந்தே இருமுடிசுமந்தேறும் பக்தர்வாழ்வை மாற்றிவிடும்
பொற்றளிஒளிரும் தலம்ஆக்ஞாசக்ரம் ப்ரூமத்யவாசம் நிறைவருளும்!
பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!
தங்கத்தாமரைகள் ஆயிரம்மலரும் பொன்னம்பலமே ஸஹஸ்ராகாரம்!
தைம்முதல்நாளில் வான்மீதெழும் மகரஜோதியில் ஐயன்காட்சிதரும்
கங்காதரனும் கனகாம்பரனும் மகிழ்பாலகனே பாதம்சரணம்!
பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!