
இற்றுப் போன அறநெறிகள்,
இடிந்து போன மனக்கோட்டை,
அற்றுப் போன நம்பிக்கை,
அழிந்து போன ஆர்வங்கள்,
கற்று மறந்த அருங்கலைகள்,
கலைந்து மறைந்த கற்பனைகள்-
முற்றப் பெறாத காவியமாய்
முடிந்தே வாழ்க்கை போய்விடுமோ?
வெற்றுக் கூச்சல் போடுகின்றோம்
வீணே பிறரைச் சாடுகின்றோம்
ஒற்றுப் பிழைபோல் அடுத்தவரோடு
ஒன்று படாது இருக்கின்றோம்.
குற்றம் பார்க்கின் சுற்றமில்லை
குணத்தைப் பார்க்கின் அற்றமில்லை.
உற்றுப் பார்ப்போம் நம்முள்ளே
உலகைத் திருத்தும் முன்னாலே.
விடிந்து விளையும் புதுநாளை
விரும்பி, மகிழ்ந்து வரவேற்போம்.
இடிந்து வானம் வீழ்ந்தாலும்
என்ன ஆகும் பார்த்திடுவோம்.
ஒடிந்த போன உள்ளத்தை
ஒட்ட வைக்கப் பசையில்லை.
மடிந்த பின்னும் வாழ்ந்திடுவோர்
வரிசை யில்நாம் சேர்ந்திடுவோம்!

கவிதை வரிகள் முடிந்தபின்னும் நினைவில் நிற்கின்றன கவிதையின் சுவடுகள் !
LikeLike