மடிந்த பின்னும் வாழ்வோம்!- தில்லைவேந்தன்

Image result for வாழ்வோம்!
 
 
 
இற்றுப்  போன அறநெறிகள்,
      இடிந்து போன மனக்கோட்டை,
அற்றுப் போன நம்பிக்கை,
       அழிந்து போன ஆர்வங்கள்,
கற்று மறந்த அருங்கலைகள்,
      கலைந்து  மறைந்த கற்பனைகள்-
முற்றப்  பெறாத  காவியமாய்
       முடிந்தே வாழ்க்கை போய்விடுமோ?
 
 
 
வெற்றுக் கூச்சல் போடுகின்றோம்
      வீணே பிறரைச் சாடுகின்றோம்
ஒற்றுப் பிழைபோல் அடுத்தவரோடு
      ஒன்று படாது இருக்கின்றோம்.
குற்றம் பார்க்கின் சுற்றமில்லை
      குணத்தைப் பார்க்கின் அற்றமில்லை.
உற்றுப்  பார்ப்போம் நம்முள்ளே
      உலகைத் திருத்தும் முன்னாலே.
 
 
 
விடிந்து  விளையும்  புதுநாளை
       விரும்பி, மகிழ்ந்து வரவேற்போம்.
இடிந்து வானம் வீழ்ந்தாலும்
       என்ன ஆகும் பார்த்திடுவோம்.
ஒடிந்த போன உள்ளத்தை
      ஒட்ட வைக்கப் பசையில்லை.
மடிந்த பின்னும் வாழ்ந்திடுவோர்
      வரிசை யில்நாம் சேர்ந்திடுவோம்!
Image result for வாழ்வோம்!
 
 

“கவனிக்க வில்லையா? கண்டு கொள்ள வில்லையா?” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

Related image

தலைவலி என்று  முரளி, அம்மா அப்பாவுடன் டாக்டரிடம்  வந்தான். அதிகமான உபாதை, பரீட்சை இருப்பதாகக் கூறியதில் தற்போதைய நிவாரணத்துக்கு மருந்து கொடுத்து, ஒரு வாரத்திற்குப்பிறகு வரச்சொன்னார். அவர்கள் சென்றபிறகு, நான் டாக்டர் அனுப்பி இருந்த க்ளையன்ட்பற்றி அவருடன் ஆலோசிக்க நுழைந்தவுடன், மூவரையும் பார்த்தாயா எனக்கேட்டு, அவர்கள் என்னைப் பார்க்க நேரிடும் என்று முன்னுரைத்தார்.

 

ஒரு வாரத்துக்குள் முரளி, அவன் அம்மா வித்யா, அப்பா சுந்தர் மூவரும் திரும்பிவந்தார்கள். முரளிக்குத் தலைவலி அதிகரித்ததாகத் தெரிவித்தனர். தலை முழுவதும் வலி என்றான், வகுப்பில் கவனிக்க இயலவில்லை, பரீட்சையில் குறைவான மதிப்பெண்கள்தான். எப்பொழுதும் செய்வதுபோல் டாக்டர் பல கோணங்களிலிருந்து அவர்களைக் கேள்விகள் கேட்டதில் முரளியின் தலைவலிக்குக் காரணம் உடம்பு உபாதை இல்லை, வேறு ஏதோ என்று கணித்தார்.  ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கரான என்னை ஆலோசிக்கப் பரிந்துரைத்தார். சூழ்நிலை சிக்கல்கள், மனச் சஞ்சலத்தினாலும் தலைவலி வரலாம் என எடுத்து விவரித்தார். சுந்தர், வித்யா ஒப்புக்கொள்ள மறுத்ததும் இதில் வெட்கப்படவோ, அதிர்ச்சி அடையவோ ஏதும் இல்லை என்று புரியவைத்தார், பிரச்சினைகளுக்கு விடைதேட இதுவும் ஒரு வழி என்றார். தயங்கியதால், யோசித்து, முடிவெடுக்கச் சொன்னார்.

 

அடுத்த நாளே சங்கோசம் இருந்தும் மூவரும் டாக்டரிடம்  வந்தார்கள். அவர்களை ஊக்குவிக்கக் கைப்பேசியில் என்னை அழைத்து முரளிக்கு நேரம் குறித்து, “ஜஸ்ட் ஒன் லுக்” எனச் சொன்னார். அவர்களின் சங்கோசத்தைக் கையாளுகிறார் எனப் புரிந்துகொண்டேன்.

 

மூவரும் வந்தார்கள். முரளிக்கு 13 வயது, உயரமான தோற்றம், பருமன், வாராத தலை. கையைப் பிசைந்துகொண்டிருந்ததை அப்பா சுந்தர் தட்டிவிட்டு நிறுத்த முயன்றார். சுந்தர் டிப்-டாப்-ட்ரிம், நெற்றியில் சந்தனப் பொட்டு. அம்மா வித்யா, இடுப்பு வரை ஜடை, அதைப் பின்னி, பூ வைத்திருந்தாள், கஞ்சி போட்ட கச்சிதமான சேலை. இதுவரையில் பார்த்த டாக்டர்களின் சீட்டுகளை என் முன் வைத்தாள்.

 

முரளி தனக்குத் தலைவலி ஆறாம் வகுப்பிலிருந்து இருப்பதாகச்சொன்னான். இந்த வருடம் வகுப்பறைக்குள் போனதுமே வலி தொடங்குவதால், கவனம் சிதறியது, கணக்கு, ஆங்கிலம், சமஸ்கிருதம் வகுப்புகளில் வலி அதிகரித்தது. எந்த ஆசிரியரும் ஏனென்று கேட்கவில்லை.  மதிப்பெண்கள் குறைந்ததில் கடுகளவும் வேதனை இல்லை என்றான். சலிப்பை, அளவில்லா கோபத்தைப் பல்லைக் கடித்துக்கொண்டு சமாளிப்பதாகக் கூறினான்.

 

சுந்தர், முரளி இரண்டே நிமிடத்தில் சந்தியாவந்தனம் செய்வதையும் எவ்வளவு சொல்லியும்  நெற்றிப்பொட்டு வைத்துக் கொள்ளாததையும் தனக்குச் சகித்துக்கொள்ள முடியவில்லை என்றார். இந்த வயதிலேயே இவ்வளவு “சோம்பேறி” என்றார். வித்யா இதை ஆமோதித்து, முரளி உடை, சாப்பிடும் விதம் எரிச்சல் மூட்டுவதாகச்சொன்னாள்.

 

மொத்தத்தில் அம்மா அப்பா இருவரும் தலைவலியைத்தவிர மற்றவற்றைப்பற்றிப் பேசினார்கள்.

 

கடந்த இரண்டு வருடமாகப் பெரிய வகுப்பு என்பதால் விளையாடுவதற்குப் பதிலாக முரளியை வீட்டுப் பாடம், டியூஷன் போக வைத்தாள் வித்யா.  மதிப்பெண்கள் அதிகரிக்கவில்லை.  முரளியால், நடத்தப்படும் பாடங்களில் கவனத்தைச் செலுத்தமுடியவில்லை. மனதில் ஒரே போராட்டம். இதுவும் மார்க் குறையக் காரணியானது. என்ன ஏது என்று பெற்றோர் இருவரும் விசாரிக்கவில்லை.

 

தலைவலி வந்ததிலிருந்து டியூஷன் கட், டிவி பார்த்தான். இதைச் சொல்லும்போதே துள்ளல், சந்தோஷம் ததும்பியது.

 

சுந்தர் கறாரான பேர்வழி. முரளி எல்லாவற்றையும் முறையாகச் செய்யவேண்டும். ஏமாற்றக் கூடாது என விரும்பினார். இல்லத்தரசியான வித்யா பிள்ளை நன்றாக மதிப்பெண் எடுத்தால் மட்டுமேதான் தன் பொறுப்பைச் சரிவரச் செய்வதாக எண்ணினாள்.

 

முரளியின் எடை ஏறியது; “குண்டு”, “தொந்தி” எனக் கேலியாக அழைப்பதைப்பற்றி சர்வசாதாரணமாகக் கூறினான். வெட்கமாக இருந்தது ஆனாலும் சகித்துக் கொள்வதாகக்கூறினான். விசித்திரமான பதில்! மேலும் ஆராய்ந்தேன்.

 

முரளி ரகசியமாக இதுவரை யாரிடமும் சொல்லாத ஒன்றை அருவருப்புடன் பகிர்ந்தான். இரண்டு வருடமாக அவன் மாமா வேலைக்காக அவர்களுடன் தங்க நேர்ந்தது. மாமாவின் அருகில்போக, பயம் கலந்த கூச்சம் இருப்பதாகச்சொன்னான். முரளியை ஆசுவாசப்படுத்தி நடந்ததைச் சொல்லச்சொன்னேன். மாமா அவனை வருடித் தருவது, தொடும் இடம், விதங்கள், கொஞ்சுவது அனைத்தும் யாரும் இல்லா நேரங்களில்தான் செய்வாராம். முரளிக்கு மாமாவிடமும், தன்மேனியின் மேலும் அருவருப்பு வந்தது. முரளியின் எடை அதிகரிப்பு மாமாவிற்குப் பிடிக்கவில்லை. முரளி தன் எடையைக் கூட விட்டதற்கு இதுவே காரணியாயிற்று. வித்யா அவன் சொன்னதை மறுத்துவிட்டாள். என்ன செய்வது என முரளிக்குப் புரியவில்லை. விழித்தான்.

 

இதை அவனே கையாளலாம் என முரளியை ஊக்குவித்தேன். மாமா, போன்றவர்களை எதிர்கொள்ள, கண்களைப் பார்த்து “நோ”,“இப்படிச் செய்வதால் என்னைக் காயப்படுத்துகிறீர்கள்”, என்பதுபோல் பல செயல்முறை வழிகளைப் பட்டியலிட்டோம். முரளி பயில்வதற்கு ரோல் ப்ளே உபயோகித்துச் செய்யச்செய்ய, அவனுக்கு மனதிடம் கூடியது. சிறிது சிறிதாகப் பயின்ற கருவிகளைப் பயன்படுத்தி தன்னைப் பாதுகாக்கக் கற்றுக்கொண்டான். மாமா கோபப்பட்டு, என்னை வந்துபார்த்துக் கேள்வி கேட்டுப் பயமுறுத்த முயன்றதும், அவருக்கு மனநல சிகிச்சை மிகத் தேவை என்பதைத் தெளிவுபடுத்தினேன். அப்படிச் செய்யவில்லை என்றால் புகார் தரவேண்டி வரும் என எச்சரிக்கை செய்தேன். பிறகு மாமா அதை முறையாகச் செய்துவருவதைக் கேள்விப்பட்டேன். முரளி தன்னுடைய இக்கட்டான, அவதி சூழ்நிலையில் இருப்பதை வீட்டினர் பொருட்படுத்தவில்லை என வேதனைப்பட்டான்.

 

முரளி என்னிடம் உரையாடும்போது திக்கிப் பேசுவதைக் கவனித்தேன். முதலில் இல்லாதது இது என்ன என்றேன். மாமா அவனிடம் தவறான முறையில் பழகியபின் இப்படி என்றான். அவன் வகுப்புத் தோழன் திக்கிப் பேசுவதால் பரிதாபப்பட்டு உதவுவார்களாம்.  திக்கினால், தன்னையும் கேட்டு உதவுவார்கள் என எண்ணி (ஏங்கி?) அதற்காகவே பழகிக்கொண்டதாகக் கூறினான். பரிதாப நிலை!

 

அடுத்தது உடற்பயிற்சிபோல் மனத்திட வளர்ப்பை ஆரம்பித்தேன். அவனுடைய பல வர்ணனைகளை எடுத்துக்கொண்டோம். ஒவ்வொன்றிலும் ஏற்பட்ட பிரச்சினைகளைக் குறித்துக்கொண்டோம். அப்பொழுதெல்லாம் விடிவு தெரியாததால் அவன் கையாண்ட விதங்களை வரிசைப்படுத்தினோம். இப்படி ஏன் நடந்துகொண்டான் என்றும், மாற்று வழிமுறைகளையும் பல வாரங்களுக்கு ஆராய்ந்தோம்.

 

இதன் எதிரொலியாக முரளியின் எடை அதிகரிப்பை அவன் துணிச்சலாகப் பார்க்க ஆரம்பித்தான். எடையினால்மட்டும் தான் மாமாவைப் போன்றவர்களைத் துரத்துவதா என்ற கேள்வியை எழுப்பினேன். மற்றவர்கள் தன்னை தாழ்வாகப் பார்ப்பதை அறிந்தான். பெற்றோர், ஆசிரியர், தோழன் எல்லோரும் மதிப்பெண்  அதிகரிக்கச்சொன்னார்கள். அப்பா இதைச்செய், அப்படிஇரு என்றார், அம்மா மார்க்கில்மட்டும் குறியாக இருந்ததால் விடியற்காலையில் படிக்க வைப்பாள். பெற்றோர் ஆதரவு காட்டவில்லை, அவன் உணர்வை மாமா புண்படுத்துவதை அறியவும் இல்லை.

 

வீட்டிற்கு வருவோர் போவோரிடம்,  “முரளி மாதிரியான சோம்பேறி பார்க்கமுடியாது” என்று எப்போதும் சொல்வதால் அவனுக்கு அப்படியே இருக்கத்தோன்றியது.

 

இந்த தருணத்தில், டாக்டரும் நானும் அவர்கள் மூன்றுபேரிடமும் இதைப்பற்றிப் பேசினோம். டாக்டர், அவர்களுக்கு தலைவலி ஏற்படும் முறைகள், அவைகளின் மூல காரணம், எப்படி உடல்-மனம் கலவையாக இருக்கிறது என்பதை விவரித்தார். அதாவது மனதின் அவஸ்தை உடல் மொழி பேசும்.  வலிகள் என்ற உடல் மொழி நம்முள் இருக்கும் சஞ்சலத்தைக் காட்டும்.

 

கூடவே விடலைப் பருவத்தில், குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ந்து வருவோருக்கு ஏற்படும் பல்வேறு மாற்றங்களைப்பற்றி விவரித்தோம். அதில் ஒன்றானதே “நான் யார்” என்ற தேடுதல். இதிலிருந்தே ஒவ்வொருவரின் தனித்துவம் உதயமாகும்.  இந்தப் பதிமூன்றாவது வயதில், எரிச்சல், சோம்பல், வியர்வை, பருவு, ரசாயன என்று எல்லாவற்றிலும் மாற்றங்கள் ஏற்படும். இந்தக் காலகட்டத்தில் பெரியவர்கள் இதைப்புரிந்து, அனுசரித்துப்போனால் இதைக் கடந்துசெல்ல உதவும்.

 

இப்படி இல்லாமல் சுந்தரைப்போல் வற்புறுத்திச் செய்யவைப்பதில், பயனில்லை. அதற்குப் பதிலாக ஏன், எதற்காக என எடுத்துக்கூறினால் முரளி செய்வான். மாறாக இவர்களைச் சிறு குழந்தைபோல் எல்லாவற்றிற்கும் கண்காணித்து, சொல்லிக்கொண்டே இருப்பது பயனற்றது. விளக்கியதும் வீட்டில் பயிலவைத்தேன். பல வாரங்களுக்குப்பின்னர் பெற்றோரிடம் மாற்றம் தெரிந்தது.

 

முரளி அவன் வயதைப்பற்றி அவன் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தோம். டாக்டர் எழுதிய “தலைவலி” புத்தகத்தின் பக்கங்களை, அவனுடன் படித்து தலைவலியின் உடல்-மனம்-மூளை கலவையைப் புரியவைத்தார்.

 

அடுத்தபடியாக தலைவலி, வரும் சூழலைக் குறித்துவரச்சொன்னேன். அதிலிருந்து எவ்வாறு இது அவன் சுயமதிப்பீட்டை பாதிக்கிறது என்பதை எடுத்துக்காட்டினேன். சூழலைச் சமாளிக்கத் தெரியாததால் வரும் தலைவலியைச் சட்டென்று அடையாளம் கண்டான்.

 

சுயமதிப்பைச் சரிசெய்வதற்குப் பலபேருடன் படிக்க, பேச, பழக, குழுவாகச்செய்ய நேச்சர் வாக், பர்டிங் (Birding), மலையேற்றம் (ட்ரெக்கிங் Trekking) தேர்வுசெய்தோம். இவற்றில் கூட்டாகப்போவது, பகிர்வது நேரும். உடலுக்கும் பயிற்சி நேர்ந்ததால் ஒரே மாதத்தில் வித்தியாசம் தெரிந்தது.

 

குழுவாகச் செயல்படுவதால் மற்றவர்களின் பரிந்துரைப்புகளும், அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டதாலும் முரளியிடம் வெவ்வேறு மாற்றங்கள் தெரிந்தது. சுந்தர்-வித்யா வியந்தார்கள், தாங்கள் சொல்லிக் கேட்கவில்லை என. இந்த வயதினருக்கு இதுதானே விசேஷம்- அவர்கள் நண்பர்கள் கூறுவதே வேதவாக்கு!

 

தன் வீட்டின் அக்கம்பக்கத்துப் பிள்ளைகளுடன் சனி-ஞாயிறு சைக்கிளில் போவதும் தொடங்கியது. வீட்டில் உள்ளவர்களுடன் இதையெல்லாம் செய்யாததால் சுந்தருக்கு முரளி சரியாகச் செய்வான் என்ற நம்பிக்கை பிடிபடவே இல்லை.

 

முரளி பல விதங்களில் உடல்-மனம் நலம் தரும் வழிகளைப் பின்பற்றியதால் ரசாயன மாற்றங்களில் அலுப்பைச் சலிப்பை வெகுவாக சமாளித்தான். வித்யாவே மூக்குக்குமேல் விரல்வைக்கும் அளவிற்கு மதிப்பெண்கள் அதிகரிக்க ஆரம்பித்தது.

 

இந்த மாற்றங்களைப்பார்த்து முரளி தங்களைவிட்டு விலகிவிட்டானோ எனச் சுந்தர்-வித்யா அஞ்சினார்கள். தன் தனித்துவத்தை முரளி உருவாக்குவதில் ஈடுபடுவதை இவ்வாறு கணித்தார்கள்.

 

வித்யா தான் நல்ல அம்மா இல்லை என்றே முடிவு செய்தாள். இவள் தன்  அப்பாவின் முதல் மனைவியின் மகள். அம்மாவின் மறைவிற்குப் பிறகு அப்பா மறுமணம் புரிந்தார். வந்தவள் பாசக்காரி. சின்னம்மாவை வித்யாவிற்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. அவளுடைய தாத்தா பாட்டி  இதை அவள் அம்மாவிற்குச் செய்யும் துரோகம் என அவளைக் கண்டிப்பார்கள். புது அம்மா அவளுக்கு எதைச் செய்தாலும் “ம்? சரியா இருக்கா? சந்தோஷமா?” எனத் தெளிவுபடுத்திக்கொள்வாள். இவர்களைப் பிடித்ததாலும் அவர்களின் செயலைப் பிரியமாகப் பார்த்ததாலும் நாளடைவில் வித்யாவிற்கும் அதேபோல் இருக்கத்தோன்றியது. அவளுக்கு மற்றவர்கள் உறுதி கூறினால்தான் சரி என எடுத்துக்கொள்வாள். இந்த மனப்பான்மையினால், தான் அம்மாவாகச் சரியாகச் செயல்படுகிறோமா என்ற கேள்வி அவளுக்கு மனதில் எழுந்தது. இதைத் தெளிவுபடுத்திச் சரிசெய்ய அவர்களுடன் பல ஸெஷன்கள் தேவைப்பட்டது. பிள்ளைக்காக வந்தார்கள். தங்களுடைய பல  பிரச்சினைகளைக் கண்டுகொண்டு சுதாரிக்க வாய்ப்பானது. 

ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (23)- புலியூர் அனந்து

 

வெள்ளத்தே போகாது! வெந்தணலில் வேகாது!

கொள்ளத்தான் போகாது! கொடுத்தாலும் குறையாது!

கள்ளருக்கும் எட்டாது! காவலுக்கும் அமையாது!

உள்ளத்தே பொருளிருக்க ஊரில் உழைத்து  உழல்வானேன்?

 

மதனியின்  வீட்டில், அரசு உயர்நிலைப்பள்ளியின் ‘ட்ரில் மாஸ்டர்’ விநாயகம் சில வருடங்கள் குடியிருந்தார். பள்ளியில் இருந்த மாணவர்களில் ஒரு சிலரையாவது குறைந்தபட்சம் மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்கத் தயார் செய்யவேண்டும் என்கிற நோக்கம் அவருக்கு இருந்தது.

ஓட்டப் பந்தயத்தில் மூன்று நான்கு  மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்துவந்தார். மைதானம் வீட்டிற்குப் பின்னால்தான் இருந்தது. அந்தப் பையன்களுக்கு மதனி க்ளூகோஸ், எலுமிச்சை  ஜூஸ் என்று கொடுப்பார். 

என்ன காரணத்தினாலோ விநாயகத்திற்கு வேறு ஊருக்கு மாற்றலாகியது. குடும்பத்தோடு புது ஊருக்குப் போனாலும் அவ்வப்போது  பயிற்சி கொடுக்க வந்துவிடுவார். மற்ற நாள்களில் ‘ஸ்டாப் வாட்ச்’ வைத்து நேரம் குறித்துவைப்பதும் மதனியின் பங்களிப்பாயிற்று.

செய்யும் வேலைகளில் தனக்கென்று இல்லாவிட்டாலும் யாருக்காவது உபயோகம் இருந்தால் நல்லதுதானே என்பார் மதனி. யார் வீட்டில் விசேஷத்திற்காகப் பட்சணம் செய்தாலோ, வருடாந்திர ஊறுகாய், அப்பளம் தயாரித்தாலோ, மதனியின் பங்கேற்பு கட்டாயம் உண்டு.

நான் மாற்றல் காரணமாக  பல ஊர்களில் வேலை பார்த்துவந்தாலும் அவ்வப்போது  ஊருக்குப் போவேன். சற்று தொலைவில் வேலைபார்த்து வந்தபோது ஆறு மாதங்கள் ஊர்பக்கம் வரவில்லை. வந்தபோது மதனி காலமாகிவிட்டார் என்று கேள்விப்பட்டேன். கிட்டத்தட்ட அனாயாச மரணம் என்றார்கள்.

கேள்விப்படாத சில சொந்தங்கள்  அவர் இறந்தபோது வந்தன என்று சொன்னார்கள். மதனி இருந்த பழைய  வீடு எதற்கும் உதவாது என்றாலும் தரைக்கு மதிப்பு  உண்டல்லவா?

அஞ்சலகத்தில் போட்டிருந்த பணத்திற்கும் தனது வீட்டிற்கும் எழுத்து மூலம் பத்திரத்தை எழுதிப் பதிவும் செய்து எங்கள் ஊரில் பிரபலமாக இருந்த ஒரு வக்கீலிடம் கொடுத்து வைத்திருந்தார். அவர் முன்யோசனை எல்லோரையும் ஆச்சரியப்படவைத்தது. கோவிலுக்கு அல்லது தர்மத்திற்கு என்று அவர் எழுதி வைக்கவில்லை. ஒரு வாரிசு நியமித்திருந்தார். மதனி நியமித்த வாரிசு எந்தவிதத்திலும் அவருக்குச் சொந்தமில்லை.  

அந்தப் பத்திரத்தின் மூலம்தான் மதனி என்று அறியப்பட்ட அவர் பெயர் சொர்ணம்மாள் என்பதும் காணமல்போன அவர் கணவர் பெயர் சிவசாமி என்பதும் பலருக்குத் தெரியவந்தது. ஆதாயம் தேடிவந்த திடீர் சொந்தபந்தங்கள் ஏமாற்றத்தோடு திரும்பிப்போனார்களாம். நல்லவேளையாக அவர்களில் யாரும் வழக்கு வியாஜ்யம் என்று அடாவடி செய்யவில்லை.

மதனி நியமித்த  அந்த வாரிசு…. சங்கரலிங்கத்தின் மகன் பொன்னுலிங்கம். வேம்பு என்று அறியப்பட்ட பொன்னுலிங்கம்…!

மதனி தன் வீட்டை வேம்புவிற்கு,  இவனுக்கு எழுதி வைத்தபிறகு சிலகாலம் வேம்புவும் அவர் மாமனும் அங்கே குடிபோனார்கள். பணமும் சொத்தும் வந்தபிறகும் வேம்பு தனது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளவில்லை.  பிறருக்கு உதவியாக இருப்பதில் தனக்குக் கிடைக்கும் நிறைவே தனது பேரானந்தம் என்பான். மாமனுக்காக உள்ளூரில் வேலை தேடிக்கொண்ட வேம்பு, அவர் மறைந்தபிறகும் இந்த ஊரிலேயே தங்கினான்.

சில ஆண்டுகளில் மதனியின் வீட்டை இடித்துப் புதியதாக, பெரிய கட்டிடமாகக் கட்டினான். புளியமரத்தை வெட்டவில்லை. மதனியின் காலத்திலிருந்த அதே நடைமுறையில் புளியை ஊராருக்குக் கொடுத்துவந்தான். நான்கு குடும்பங்கள் தங்கும் வகையில் வீட்டை மாற்றி அமைத்தான். சொர்ணம்மாள் இல்லம் என்று பெயரிட்டான். தனது தேவைபோக,  மூன்று குடும்பங்களுக்கு வாடகைக்கு விட்டான். திருமணமாகி குழந்தைகள், குடும்பம், இலவச ட்யூஷன், பரோபகாரம் என்று அர்த்தமுள்ள வாழ்க்கையினை அமைத்துக்கொண்டான்.

பாடம், படிப்பு, பள்ளி, மதிப்பெண் குறித்து சற்று வித்தியாசமான கருத்துகள்கொண்டவன் வேம்பு. அவனிடம் குழந்தைகளைச் சேர்க்கவரும் பெற்றோர்களிடம் சில விஷயங்களைத் தெளிவாகச் சொல்லிவிடுவான். ‘உங்கள் பிள்ளை கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்க வைப்பேன் என்றோ  மேற்படிப்பிற்கான போட்டித் தேர்வுகளில் தேர்ச்சியடையச் செய்வேன் என்றோ எதிர்பார்க்காதீர்கள்.’

பின் எதற்காக என் குழந்தை நேரத்தை வீண் செலவு செய்யவேண்டும் என்றோ  உங்களிடம் நாங்கள் வேறு எதை எதிர்பார்க்கலாம் என்றோ பெற்றோர்கள் கேட்கத்தான் செய்வார்கள்.

புத்தகத்தில் என்ன இருக்கிறது, எப்படி கேள்விகளுக்குச் சரியான விடை எழுதுவது என்பதை  பள்ளியில் சொல்லித்தருகிறார்கள். பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்துவது மட்டும்தான் என் வேலை என்பான் வேம்பு. புரிந்துகொள்ளும் வேட்கையையும் நல்ல மனிதனாக வளரவேண்டும்  என்ற விருப்பத்தையும் ஏற்படுத்துவதுதான் என் நோக்கம் என்பான்.  அவன் வீட்டில் குழந்தைகளுடன் உரையாடலும் வேடிக்கை விளையாட்டும்தான் அதிகம். இடையிடையே விஞ்ஞானம், கணிதம், சரித்திரம் ஆங்கிலம் எல்லாம் வரும். 

மேலே கல்வி அழியாதது என்று சொல்லும் பாடல்பற்றி வேம்பு அடிக்கடி சொல்வான்.  கற்ற கல்வி இறந்தவனோடு எரிந்துதானே போகும். அதற்குள் ஒரு சிலருக்காவது கற்றதைக் கடத்துவது மிகவும் அவசியம் என்பான். 

வகுப்பு நேரங்களில் பலசமயம் நான் கூடஇருந்திருக்கிறேன். நான் படிக்கும்போது  இப்படியெல்லாம் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது என்று தோன்றும்.

தங்கப்பன், வேம்பு என்கிற பொன்னுலிங்கம், மதனி என்கிற சொர்ணம்மாள் மூவருமே எனக்கு மனநிறைவைக் கொடுத்த  தங்கமான மனிதர்கள். அதிலும் அவர்கள் பெயரிலும் எதேச்சையாக  தங்கப்பன், சொர்ணம் பொன்னு என்று தங்கம் இருந்தது   என்பதை இப்போதுதான் கவனிக்கிறேன்.

ஒரே சமயத்தில் பல புதியவர்களுடன் நாட்களைக் கழித்த அந்த அனுபவங்கள்  பிறகு பயிற்சி மையத்தில்கூடக்  கிடைக்கவில்லை. எப்போதாவது நான் ட்ரைனிங் என்று அனுப்பப்பட்டாலும்,  அவை ஐந்து நாட்களுக்குமேல் இருந்ததில்லை.  சரியாகச் சொல்லப்போனால் இருமுறை போயிருக்கிறேன். ஒரு  ஒருநாள் பட்டறை (வொர்க் ஷாப் என்றால் பட்டறைதானே?) ஒரு முறை அலுவலகத்தில் செயல்படுத்தவிருந்த  புதிய நடைமுறைகள்பற்றி ஐந்துநாட்கள். அவ்வளவுதான்.

முக்கியமாக என் பெயரைக் குறிப்பிட்டு வந்தால்தான் என்னைப் போகச் சொல்வார்கள். யாரேனும்  ஒருவர் என்று கடிதம் வந்தால் என்னை அனுப்பமாட்டார்கள். அதற்குக் காரணம் இரண்டு.

1)      எனக்குச் சொல்லிக்கொடுப்பது எனக்கே உபயோகமாக இருப்பதே பெரிய விஷயம். மற்றவர்களுக்கு நான் என்ன சொல்லித்தரப் போகிறேன்  என்ற அவநம்பிக்கை.

2)      சென்னையில்  நெருங்கிய சொந்தம் உள்ளவர்   யாரேனும் ஓரிருவர் எந்த அலுவலகத்திலும் இருப்பார்கள். அவர்களுக்குத்தான் இந்த வாய்ப்பு பயன்படும்.

 பயிற்சி மையத்தில் பழகியவர்கள்பற்றி சொல்லிக்கொண்டு வரும்போதே, விட்டுப்போன இருவர்பற்றியும் சொல்லிவிட்ட  புத்திசாலித்தனத்திற்கு எனக்கு நானே பாராட்டிக்கொள்கிறேன்.

பிறரைச் சார்ந்தே இருந்த வாழ்க்கையில் வேலைக்குச் சேர்ந்ததும்,  தனியாக அறையில் குடியிருந்ததும், பணியில் பல்வேறு மனிதர்களைச் சந்தித்ததும், சென்னையில் பயிற்சி மையத்தில் இரு வாரங்கள் கழித்ததும் …. கொஞ்சம் கொஞ்சமாக உலகம் புரிந்திருக்க வேண்டுமல்லவா?

இல்லை என்றுதான் இப்போது தோன்றுகிறது. குதிரைப் பந்தயத்தில் வெற்றிபெற்ற மற்றும் முதல் மூன்று குதிரைகளாக வந்த குதிரைகளுக்குத்தான் செய்தித்தாள்களில் நேரம் முதலான விவரங்களைத் தருவார்கள். மற்றவை ‘also ran’ என்று பெயர்மட்டும் குறிப்பிடுவார்கள். வாழ்வில் இதுவரையில் ஓடிய மற்ற குதிரைகள் பட்டியலிலேயே  இருந்தாகிவிட்டது. இல்லையோ … ஓடாத குதிரையாக அந்தப் பட்டியலிலும் இடம்பெறாத வகையோ?

எதற்கும் உபயோகப்படாத பொருள் என்று ஒன்றும் இல்லை என்பார்கள். அப்படி ஒன்று கண்டுபிடித்தாலும் எதற்கும் உதவாத பொருளுக்கு உதாரணம் காட்டுவதற்காவது  பயன்படுமே! ‘இவரைப்போல அல்லது இவரைவிட சமர்த்துக் குறைவு’ என்கிற ‘பென்ச் மார்க்’ ஆகப் பயன்பட்டிருப்பேன் எனலாம்.  இந்தச் சுயபச்சாதாபம் கிடக்கட்டும்.

மேலே தொடர்வதற்குமுன் குடும்பத்தில் பல மாற்றங்கள். அண்ணனும் ஒரு நல்ல வேலையில் சேர்ந்தான். தங்கையின் திருமணமும் நடந்தது. எங்கள் சமூக வழக்கப்படி திருமணம் மாப்பிள்ளை வீட்டில்.   எங்கள் பங்குச் செலவுகள் செய்ய அப்பா, அண்ணன் மற்றும் என் சம்பாத்தியம் மிகவும் உபயோகப்பட்டது.  மாப்பிள்ளை தொலைவில் வெளி மாநிலத்தில் வேலையில் இருந்தார். எப்படித்தான் என் தங்கை புதிய மொழியும் கற்று, புதிய மனிதர்களையும்  புதிய உறவினர்களையும் சமாளிக்கப் போகிறாளோ அன்று அம்மாவும் அப்பாவும் கவலைப்பட்டார்கள்.

ஆச்சரியப்படும்வகையில் அவள் தன்னை புகுந்த வீட்டோடு ஐக்கியப்படுத்திக்கொண்டாள்.  அவளிடமிருந்து “உங்கள் வீட்டில் எல்லோரும் நலமா?”  என்று கடிதம் வராத குறை. வெளிமாநிலம் என்பதால் திருமணமான ஐந்து வருடங்களில் ஒரு முறைதான்  பிறந்த  வீட்டிற்கு வந்துபோனாள். அவள் இல்லாமல் வீட்டில் ஒன்றும் நகராது என்பார் மாப்பிள்ளை. வீட்டில் செல்லக் குழந்தையாகவே வளர்ந்துவிட்ட அவள், தன் குடும்பத்தின் ஆணிவேராக மாறியது வேடிக்கைதான். 

மாப்பிள்ளையின்  அலுவலக ஊழியர் நலத் திட்டம் காரணமாக, அங்குள்ள மருத்துவமனையில் எல்லா வசதிகளுடன் செலவின்றி பிள்ளைப்பேறு நடந்தது. அம்மாவும் அப்பாவும் போய் மூன்று மாதங்கள் தங்கிவந்தார்கள்.

தங்கையின் கதை இப்படியாயிற்று. 

அண்ணன் படிப்பு முடித்து ஒரு தொழிற்சாலையில் கணக்காளர் வேலைக்குச் சேர்ந்தான்.   தனிப்பட்ட முறையில் பல தேர்வுகள் எழுதி தன்னைத்  தயார்ப்படுத்திக்கொண்டான். படிப்படியாக முன்னேறினான். பிறகு வேலை மாறினான். மூன்றாண்டுகளில் மற்றொரு பிரபலத் தொழிற்சாலையில் முதன்மைக் கணக்காளர் நிலைக்கு உயர்ந்தான்.

அண்ணன்  திருமணம் விமரிசையாக எங்கள் வீட்டில் நடந்தது. அலுவலகத்தில் நல்ல வீடொன்று கொடுத்திருந்தார்கள். ஊருக்குக் குடும்பத்தோடு அவ்வப்போது வந்துபோவான். நானும் அச்சமயம் விடுப்பெடுத்துக்கொண்டு ஊருக்குப் போவேன். அப்பா ஓய்வு பெறும்வரை இது நடந்தது.  

பிறகு அம்மா அப்பா அண்ணனோடு சென்னைக்குப் போய்விட்டார்கள். தம்பி கல்லூரி  ஹாஸ்டலில் கடைசி ஆண்டு தங்கினான். அடுத்த ஆண்டே அவன் சென்னைக்குப்போனான். அண்ணனின் வழிகாட்டலில் அவனும் வளர்ந்துவந்தான். (தற்சமயம் அவன் நல்ல நிலையில் மும்பையில் இருக்கிறான்.)

எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போகிறார் என்று நான் வேலைக்குச் செல்லத்தொடங்கிய கதை இதுவரையில் ஆயிற்று.  தொடர்வது எனக்குத் திருமணம்  ஆன கதை.

(மேலும்…….)

 *—தண்ணீர் நான் –* – ஹேமாத்ரி

Related image
கடலில் அலையாய்,
கைலாய பனியாய், 
ஆகாய மேகமாய்,
*கருவின் பனிக்குடமாய்,*
உயிர்களின் ரத்தமாய்,
தென்னையில் இளநீராய்,
*மலரில் தேனாய்*
பல பரிணாமத்தில் நான் *உங்களை தொடுகிறேன்,,*
உடலை பொலிவாக்கி,
உடையை சுத்தமாக்கி,
தரையின் கறைநீக்கி,
*ஊரையே  புதிதாக்குகிறேன்….*
விதையை செடியாக்கி,
நெல்லை அரிசியாக்கி,
மரத்தை பெரிதாக்கி
*பசுமையை போர்த்துகிறேன்…*
உங்களை தேடி நான் வந்தது, *இயற்கையின் மழையானது….*
என்னை தேடி நீங்கள் வருவது, *செயற்கையின் பிழைதானது…..*
பூமியில் என்னை தொலைத்துவிட்டு, *செவ்வாயில் சென்று தேடுவதேன்…..*
ஓசோனில் ஓட்டை போட்டுவிட்டு,
*சூரியனை குறை சொல்வதேன்…*
கொதிக்கவைத்தாலும் நான்,
நானாகவே இருக்கிறேன்,
*குளிரவைத்தாலும் நீங்கள், எதிர்மறையாய் நிற்பதேன்….*
மோரில் வெள்ளையாய்,
சேரில் கருப்பாய்,
தாரில் கானலாய்,
*வானவில்லில் விதவிதமாய்,*
*தெரிவதெல்லாம் நானேதான்….*
ஏத்தனை விதமாய் தெரிந்தாலும், *எனக்கென்று தனியாய் நிறமில்லை,,,*
பிறர்க்காக சுரக்கும் *கண்ணீரும் நானும் உலகில் நிஜம்,*
எதற்காகவும் எப்போதும் *கறைபடாது எங்கள் நிறம்….*
கண்ணீரையும் என்னையும் *சிந்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள்,* ஆனந்தகண்ணீராய் நாங்கள்வந்து *உங்களை நனையவைப்போம்….*
மழையாய் பொழிந்து,
*மனிதரோடு விளையாடவே ஆசைப்படும்*
  *—தண்ணீர் நான் –*

ஹைக்கூ கவிதைகள் – காரை இரா மேகலா

 

Image result for ஹைக்கூ

தேய்ந்த நகம்
தெரிந்தது வீடெங்கும்
மாக்கோலம்.

அழகையும் நறுமணத்தையும்
தொலைத்தே நின்றாள்
மழையில் நனைந்த மல்லிகை.

தலைநிமிர வேண்டிய சமுதாயம்
தலைக் குனிந்தே
அலைபேசியுடன்.

சூரியனும் உதித்தது
ஆனாலும் விடியவில்லை
பெண்களின் வாழ்வு.

புதிய தீபம்
இருண்டே போனது
தீக்குச்சியின் முகம்.

கடைசியாக அவன் சென்ற
வழித்தடம் சொல்லும்
இறைந்த பூக்கள்.

உழைப்பின் வியர்வையும்
மணக்கவே செய்கிறது
பூக்கடைக்காரி.

வறண்ட கோடை
நீர்க்குழாயில் நிரம்பி வழிகிறது
காற்று.

கூடவே வந்தாலும்
என்னை தொடாமலேயே
நிழல்.

Related image