வாழ்வில் வளமும் அவாளால் வருமே
தனிமை மறைந்திடுமே
பெற்றோர் வருந்தும் சீதனம் வேண்டாம்
பெண்ணே சீதனமாம்
கற்றோர் வாழும் உலகமிது
காலத்தை உணர்ந்திடுவோம்
இந்தப் பின்னணியில் நான், என் அலுவலகம், கொஞ்சம் நூலகம் என்று நாட்கள் நகர்ந்துகொண்டு இருந்தன, ஒருமுறை தீபாவளி பண்டிகைக்கு சென்னை வரச் சொன்னார்கள். பெரும் அளவில் விடுப்பு எடுத்ததில்லை என்பதால் விடுப்பு சேர்ந்துகொண்டே வந்தது. எடுக்காத விடுப்பு நாளடைவில் காலாவதி ஆகிவிடும் என்று அலுவலகத்தில் சொன்னார்கள்.
இருபது நாள் விடுப்பில் சென்னை சென்றேன். ஒருமாத விடுப்பை காசாக்கிக் கொண்டேன். விடுப்பு மற்றும் பயணத் திட்டத்தில் அப்பா அம்மா இருவரையும் கர்நாடக மாநிலத்தில் இருந்த இரண்டு மூன்று கோயில்களுக்கு அழைத்துப் போனேன். எங்கு போவது போன்ற முடிவெல்லாம் அப்பாதான். அந்த ஸ்தலங்களுக்குப் போகவேண்டும் என்பது அவரது நெடுநாளைய ஆசை என்று பிறகுதான் தெரிந்துகொண்டேன்.
பயணத்தின்போது எனக்குப் பெண் பார்க்கலாமா என்று அம்மா கேட்டாள். எனக்கு அந்தச் சமயத்தில் யோசனை ஒன்றும் இல்லை. பெரும்பாலும் அந்தச் சமயத்தில் இப்போது என்ன அவசரம் என்று மகன் பதிலைக்க வேண்டுமாம். நான் எனது வழக்கமான வெற்றுப் பார்வையைத் தான் பதிலாக அளித்தேன் என்று நினைவு.
தங்கைக்கு மணமாகி வேற்றூர் போனாள். அண்ணனுக்கு மணமாகி அண்ணி வந்தாள். மிக இயல்பாக இரு பெண்களும் புதிய குடும்பத்தில் ஒன்றிப் போனார்கள். திருமண காலத்தில் அண்ணனும் மாப்பிள்ளையும் முன்னேறத் தயாராக இருந்த இளைஞர்கள். எளிதாக குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். என் மீது எனக்கே நம்பிக்கை இல்லை. ஓரிரு முறை அம்மா என் திருமண விஷயத்தை பேச்சில் கொண்டு வந்தாலும் ஒரு முன்னேற்றமும் இன்றி இருபதுநாள் விடுப்பு முடிந்து வேலைக்குத் திரும்பிவிட்டேன்.
ஓருநாள் வழக்கம்போல அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, சக ஊழியர் ஒருவர் என்னைத் தேநீர் அருந்த உடன் வரமுடியுமா என்று கேட்டார். பொதுவாக அப்படி யாரும் என்னைச் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். நானும் போனேன். போகும்போது இன்னொருவரும் சேர்ந்து கொண்டார். தன் ஊரைச் சேர்ந்தவர் என்று தேநீருக்கு அழைத்த நண்பர் சொன்னார்.
உணவகத்தில் ஒரு மேஜையில் சென்று அமர்ந்தோம். சமூசாவும் தேநீரும் ஆர்டர் கொடுத்தார், அந்த மூன்றாமவர். நான் இந்த ஊரில் தனியாகத்தான் தங்கிவருகிறேன் என்று அலுவலக நண்பர் அந்த மூன்றாமவரிடம் சொன்னார். அப்படியே எனக்கு எந்த ஊர், குடும்பத்தில் யார் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் பேச்சு வந்தது. நான் பேசவே இல்லை. அலுவலக நண்பர் ஒரு தகவலைச் சொல்லிவிட்டு சரிதானே என்பதுபோல் என்னைப் பார்ப்பார். எனக்குத் தலையை அசைப்பதைத் தவிர வேறு வேலை இல்லை. என் தம்பி வேலைபார்க்கும் நிறுவனத்தின் பெயரை தவறாகச் சொல்லிவிட்டார். நான் திருத்தினேன்.
“பரவாயில்லையே .. உங்கள் நண்பர் பேசிவிட்டாரே!” என்று அந்த மூன்றாமவர் நண்பரிடம் முணுமுணுத்தது எனக்கும் கேட்டது. இந்த நிகழ்வை நான் மறந்தே போயிருந்தேன்.
ஒருநாள் பேச்சுவாக்கில் தன் மகளுக்காக மாப்பிள்ளை தேடி வந்தவர் அந்த மூன்றாமவர் என்ற விஷயம் தெரியவந்தது. ஐந்து நிமிடங்களிலேயே புரிந்துகொண்டு நல்லவேளையாக என்னை விட்டுவிட்டார் அந்த புத்திசாலி.
எங்கள் சமூகத்தில் அந்தச் சமயத்தில் மாப்பிள்ளை கிடைப்பது எளிதல்ல என்று சொல்வார்கள். காதில் விழுந்த இளைஞனைப் பற்றி விசாரிப்பது, சரியென்று பட்டால் மேற்கொண்டு குடும்பத்தாரைத் தொடர்புகொள்வது என்பது வழக்கமே. என்னைப் பற்றிய செய்தியை நான் வேலைபார்த்த அந்த ஊரில் ஒரு திருமணத் தரகர் மற்றவர்களுக்குச் சொல்லி வந்தார் என்று தெரிந்தது.
அதனால் யாரேனும் என்னைப்பற்றி விசாரிக்க வருவது அடிக்கடி நேர்ந்தது. நான் உஷாராகிவிட்டேன். நான் அவற்றைத் தவிர்க்க முயல்வது வெளிப்படையாகத் தெரியும்படி நடந்துகொள்வேன். பிறந்து, வளர்ந்து, படித்து, வேலைக்குப் போய், திருமணம் செய்துகொண்டு, பிள்ளைகள் பெற்று… பிறகு பிள்ளைகள் வளர்ந்து படித்து … என்கிற தொடர்தானே வாழ்க்கை. ஆனால் திருமணத்தைத் தள்ளிப்போட நான் விரும்பியது ஏன் என்று இப்போது விளங்கவில்லை.
என் வயதையொத்த அலுவலக நண்பர்கள் ஒருவர் ஒருவராக தீர்மானம் புரிந்துகொண்டார்கள். நாட்கள் செல்லச் செல்ல ‘எப்போது நீங்க சாப்பாடு போடப்போகிறீர்கள்’ என்று கேட்கத் தொடங்கிவிட்டார்கள். திருமணத்தைப் பற்றி தீர்மானமான எண்ணம் எதுவும் எனக்கில்லை.
பொதுவாக அப்போதெல்லாம் வெளியூரிலிருந்து தொலைபேசியில், அவசரச் செய்தி இருந்தால் தவிர, அழைக்க மாட்டார்கள். செலவு அதிகம். ஒலியின் தரமும் அவ்வளவு உயர்வாக இருக்காது. சத்தமாகப் பேசவேண்டும். பேசுவது யார் எது சம்பந்தமாக பேசுகிறார்கள் என்று புரிவதற்குள் பெண்மணி குறுக்கிட்டு மூன்று நிமிடம் முடியப் போகிறது என்று சொல்வார்.
ஒரு வெள்ளிக்கிழமை அப்பா தொலைபேசியில் அழைத்தார். நான் வேலைபார்க்கும் ஊரிலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஊருக்கு அப்பாவும் அம்மாவும் ஞாயிறன்று வரவிருப்பதாகத் தகவல். அங்கே எனது உறவினர் ஒருவர் வீட்டில் தங்கவிருப்பதாகச் சொன்னார். என்னைக் கட்டாயம் ஞாயிறு காலை பத்துமணிக்குள் அங்கு வந்து சந்திக்கவேண்டும் என்றும் சொன்னார். அந்தத் திடீர் விஜயம் எதற்காக என்று சொல்ல மறந்துவிட்டார் போலிருக்கிறது. ஆனால் தவறாமல் முகச் சவரம் செய்துகொண்டு வா என்று சொல்லியிருந்தார்.
நல்ல பிள்ளையாக நானும் சென்றேன். என் தம்பியும் கூட வந்திருந்தான். எனக்குச் சம்பந்தம் பேச ஒருவர் அங்கு வருவதாகத் தெரிந்தது. இரு தரப்பினரையும் நன்கு தெரிந்தவர் அந்த உறவினர். பெண் வீட்டார்கள் அந்த ஊரில் தான் இருக்கிறார்கள்.
பெண்வீட்டார் வந்தார்கள். ஏதேதோ பொதுவாகப் பேச்சு நடந்துகொண்டிருந்தது. நான் எனக்குச் சம்பந்தமில்லாத விஷயம் போல் மௌனமாக இருந்தேன். பெண்ணின் புகைப்படம் ஒன்று கொண்டு வந்திருந்தார்கள். அப்பா, அம்மா இருவரும் பார்த்துவிட்டு என்னிடம் கொடுத்தார்கள். நான் ஒரு நொடி பார்த்துவிட்டுத் திரும்பக் கொடுத்துவிட்டேன்.
அப்போது தம்பி என்னைத் தனியாக அழைத்தான். திருமணம் செய்து கொள்ளத் தயங்குவது ஏன் என்று கேட்டான். அவன் ஒரு பெண்ணை விரும்புவதாகவும் என் திருமணத்திற்குப் பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் மணம் புரிந்துகொள்ள இருவரும் காத்திருப்பதாகவும் சொன்னான்.
நந்தி விலகக் காத்திருக்கிறார்கள். நந்தியும் விலகிவிடத் தீர்மானித்தது. எனது திருமணப் பேச்சு அடிபடத் தொடங்கிய சமயத்தில் ஒரு தினசரியின் வார இதழில் வந்த ஒரு கதையில் இருந்த கருத்து எனக்கு அற்புதமகப் பட்டது. அந்தப் பக்கத்தைக் கிழித்து வைத்துகொண்டேன். ஒரு வாலிபன் தனது திருமணத்திற்குச் சில நிபந்தனைகளைச் சொல்வான்.
தற்செயலாக அந்த காகிதம் என் கைப்பையில் இருந்தது. அதைத் தம்பியிடம் கொடுத்துவிட்டேன்.
1) அந்தப் பெண்ணுக்கு ஆட்சேபம் இல்லையென்றால் எனக்கும் சம்மதம்.
2) எக்காரணம் கொண்டும் ஒரு குடும்பம் தொடங்க அத்தியாவசிய பொருட்கள் தவிர எந்தச் சீதனமும் வாங்கக் கூடாது. மாப்பிள்ளை வீட்டாருக்கு உடைகள் வாங்குவது போன்று எந்த அதிகப்படி செலவும் கூடாது.
3) குடும்ப பழக்க வழக்கம் எப்படியானாலும் திருமணச் செலவு முழுவதும் என்னுடையதுதான்.
வேலைக்குச் சேர்ந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன. தங்கையின் திருமணச் செலவு தவிர பெரிய செலவு ஏதும் செய்யவில்லை. சொந்தச் செலவுகளும் குறைவுதான். வங்கிக் கணக்கில் கணிசமான தொகை இருந்தது. திருமணத்தின் முழுச் செலவையும் ஏற்றுக்கொள்ளப் பெரிய சிரமம் ஏதும் இல்லை.
தம்பி அப்பாவிடம் விவரம் தெரிவித்தான். பெண்வீட்டார் தன் பெண்ணைக் கலந்துகொண்டு குடும்பத்தில் பெரியவர்கள் இருவரிடம் அனுமதியும் வாங்கிக் கொண்டு மேற்கொண்டு தொடரலாம் என்று சொன்னார்கள். அப்பா, அம்மா, தம்பி மூவரும் சென்னை திரும்ப, நான் ஊருக்கு வந்துவிட்டேன்.
இரண்டு மூன்று மாதங்கள் எந்தத் தகவலும் இல்லை. சரி, இதுவும் கழண்டு கொண்டுவிட்டது என்ற முடிவிற்கு நானும் வந்திருந்தேன். திடீரென்று ஒருநாள் காலை பெண்ணைப் பெற்றவர் நான் குடியிருந்த வீட்டிற்கே வந்துவிட்டார். அதைவிட பெரிய ஆச்சரியம் அந்தப் பெண்ணும் வந்திருந்தாள்.
அந்த காலகட்டத்தில் இது நடப்பதற்கு சாத்தியமே இல்லை. அந்தப் பெண் என்னிடம் ஒரே ஒரு கேள்விதான் கேட்டாள். “உங்கள் நிபந்தனைகளில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா?”
மிகச் சுலபமாக பதிலளிக்கக்கூடிய கேள்விதானே! வாயைத் திறக்க வேண்டாமே! ஆமென்று தலையை அசைத்தேன். அவள் தன் தந்தையைப் பார்த்தாள். அவர் என் இருகரங்ககளையும் சேர்த்துப் பிடித்துக்கொண்டு “ரொம்ப சந்தோஷம். வருகிறேன் மாப்பிள்ளை.” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். என் வருங்கால மனைவியை ஓரிரு நிமிடங்கள் பார்த்தது அன்றுதான்.
ஒரு கேள்வி, ஒரு பதில், ஒரு கைகுலுக்கல் – இதற்காக இரண்டு மணிநேரம் பயணம் செய்து வந்திருந்தார்கள். ஆனால் மூவருக்கும் தெளிவும் தைரியமும் ஏற்பட்டது என்னவோ உண்மை.
ஒரு மாதத்திற்குள் திருமணம் எங்கள் ஊரில் நடந்தது. குலதெய்வம் கோவிலுக்குச் சென்றுவிட்டு வேலைபார்க்கும் ஊருக்கு வந்துவிட்டேன். – மன்னிக்கவும் வந்துவிட்டோம் என்று சொல்லவேண்டுமல்லவா?
அதற்குள் மனைவியின் அண்ணன், அவர் மனைவி இருவரும் என் வீட்டிற்கு வந்து பொருட்களை எல்லாம் வைத்து குடும்பம் நடத்தத் தயாராக வைத்திருந்தார்கள். எனது நிபந்தனையின்படி தவிர்க்கமுடியாத பொருட்களையே வாங்கியிருந்தார்கள். அன்று மதியத்திற்கு இரு பெண்களுமாகச் சேர்ந்து விருந்து சாப்பாடு தயாரித்தார்கள். அன்று மாலையே அண்ணனும் அண்ணியும் விடை பெற்றுக்கொண்டார்கள்.
அப்போதெல்லாம் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் என்றால் சிங்கப்பூர் அல்லது மலேசியா தான் செல்வார்கள். வளைகுடா நாடுகளுக்கு வேலை பார்க்கப் போவது கேரளத்தில் மட்டுமே அதிகம். அப்படி சிங்கப்பூரில் இருந்து வருபவர்கள் டூ இன் ஒன் என்று சொல்லப்படும் வானொலி மற்றும் காஸெட் இயக்கும் கருவி கொண்டுவந்து விற்பார்கள். இலங்கை வானொலி மிகப் பிரபலம்.
அவர்கள் வைத்திருந்த பொருட்களில் அந்த டூ இன் ஒன் ஒன்றும் இருந்தது. ஒரு கேள்விக்குறியுடன் மனைவியைப் பார்த்தேன். அவள் புன்சிரிப்போடு காஸெட்டை சுழல விட்டாள்.
இலங்கைப் பாடகர் அமுதன் அண்ணாமலையின் குரலில் மேலே சொன்ன அந்த வார்த்தைகள் ஒலித்தன.
சொல்ல மறந்து போனேனே சீதாராமனின் புதல்வியான தனம், அதாவது சீ தனம் எனக்கு மனைவியாக வாய்த்தது தற்செயல்தானே?
(திருமணத்தில் வந்து சுப முடிவாக முடித்துவிட்டேன். சுபம் என்று போட்டுவிடலாம். இனி மற்றவை அடுத்த பாகத்தில்தான் அதுவும் ஒரு இடைவெளிக்குப் பிறகுதான்)