காதல்புரி விண்மீன்கள் கதைகள் பேசிக்
கண்ணடித்துக் கண்ணடித்துக் களிக்கும் வேளை,
பாதிநிலா, மீதிநிலா தன்னைத் தேடிப்
பால்போன்ற ஒளிவீசித் தவிக்கும் வேளை,
மோதுகுளிர் வாடையிலே துளிர்க்கும் வேளை,
முல்லைமணம் தொல்லைமிக வளர்க்கும் வேளை,
காதளவு நீண்டவிழிப் பெண்ணே, உன்னைக்
காணாமல் துடிக்கின்றேன், உடனே வாராய்!
நீரோடும் ஆற்றுவெள்ளம் நித்தி லம்போல்
நிலவொளியில் பளபளத்துச் சிரிக்கும் வேளை,
தேரோடும் நெடுவீதி அமைதி காக்கத்
தென்னையெலாம் குளிர்நடுங்கிச் சிலிர்க்கும் வேளை,
ஊராரும், களைத்திருக்கும் உறவும், நட்பும்
உறக்கத்தில் திளைத்திருக்கும் இரவு வேளை,
காரோடும் முகில்கூந்தல் பெண்ணே, உன்னைக்
காணாமல் துடிக்கின்றேன், உடனே வாராய்!
மிக அழகான விருத்தம். பாராட்டுகள் கவிஞரே! கச்சிதமான வார்த்தைகளின் பிர யோகத்தைப் பார்த்தால் நீங்களும் வங்கி அதிகாரியாக இருப்பீர்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது .
LikeLike