திருஞானசம்பந்தர்-தொடர்ச்சி
(முன் கதை: பாண்டியமன்னன் நெடுமாறன் வெப்புநோயால் துடிக்கிறான்..அவனைக் குணப்படுத்த சமணர்களும் திருஞானசம்பந்தரும் முனைகிறார்கள்)
சமணர்கள்- மந்திரங்களை ஓதினர்.. மன்னனது இடப்பகுதியின் வெப்பு பன்மடங்காக அதிகமாயிற்று..
துடி துடித்த மன்னன் திருஞானசம்பந்தரைப பார்வையாலே வேண்டினான்.
திருஞானசம்பந்தர் ‘மந்திரமாவது நீறு..’ என்ற பதிகம் பாடி..திருநீறை எடுத்து மன்னனது வலது பக்கம் தடவினார்..
தொட்ட இடம் குளிர்ந்தது!
அதே சமயம் இடப்பக்கம் மேலும் கொதித்தது.
‘கடவுள் பாதி..மிருகம் பாதி’ – போல மன்னன் உணர்ந்தான்.
அருகிலிருந்த சமணர்கள் – அந்த வெப்பத்தின் வீரியம் தாங்காது – சற்றே விலகி நின்றனர்.
மன்னனுக்கு திருஞானசம்பந்தர் மீது அன்பும் –சமணர்கள் மீது கடுங்கோபமும் வந்தது.
மன்னன் திருஞானசம்பந்தரைப் பார்த்து : “ஞான வள்ளலே! இந்த இடப்புறத்திலும் நோயை அகற்றி அருளவேண்டும்”
திருஞானசம்பந்தர் ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் தியானித்து – திருநீரை மன்னனது இடப்புறத்தில் தடவினார்.
மன்னன் முழுக் குணம் அடைந்தான்.
திருஞானசம்பந்தரின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினான்.
சமணர்கள் வெட்கித்தலை குனிந்தனர்.
ஆயினும் விடுவதாயில்லை!
“மன்னரே! அவரவரது சமயக் கொள்கைகளை ஏட்டில் எழுதி நெருப்பில் இடவேண்டும். யாருடைய ஏடு எரியாமல் இருக்கிறதோ அவர்களே வெற்றி பெற்றவர் ஆவர். சம்பந்தரே! நெருப்புப் போட்டிக்குத் தயாரா?“
மன்னன் அதை நிறுத்து முன், திருஞானசம்பந்தர் : “மகிழ்ச்சி! உங்கள் எண்ணம் அதுவானால் மன்னர் முன்பே அது நடக்கட்டும்”
சூப்பர் சிங்கர் பைனல்ஸ் போல… ஒரு அரங்கம் அமைக்கப்பட்டது.
தீ மூட்டப்பட்டது.
திருஞானசம்பந்தர் தனது பதிகப் புத்தகத்திலிருந்து ..’போகம் ஆர்த்த பூண் முலையாள்’ என்ற திருநள்ளாற்றுப் பதிகத்தை எடுத்து ‘தளிர் இள வளர் ஒளி’ என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி ஏட்டை அனலில் இட்டார்.
அனலில் விழுந்த ஏடு .. எரியாமல் பளபளப்பாக மின்னியது..
சமணர்கள் முகம் கருத்தது..
அவர்கள் தீயிலிட்ட ஏடு எரிந்து சாம்பலானது.
அதை எடுத்து தண்ணீரில் குழைத்துப் பார்த்தனர்..
“அரித்துப் பார்க்கிறீர்களோ?” – நெடுமாறன் நகைத்தான்.
“வெப்புநோய் தீர்க்க இயலாமல் முன்பே தோற்றீர்கள்.. அனல் வாதத்திலும் தோற்றீர்கள். சென்று விடுங்கள்”.
திருஞானசம்பந்தர்: ”இனி என்ன வாதம் செய்ய வேண்டும்’ – என்றார் அமைதியாக.
சமணர்கள் பிடிவாதத்தில் :”புனல் வாதம்..அவரவர் ஏடுகளை நதி நீரில் விடவேண்டும். யாருடைய ஏடு நீரை எதிர்த்து செல்கிறதோ அவரே வென்றவராவர்”.
மன்னன் பொறுமை எல்லை கடந்தது.
மந்திரி: “இந்தப் போட்டியிலும் சமணர்கள் தோற்றால் அவர்களை என்ன செய்யலாம்?”-என்றார்.
சமணர்கள் அவமானத்தில் குறுகினாலும்..
“இம்முறை தோற்றால் எங்களைக் கழுவிலேற்றுங்கள்”
அவர்களது நாக்கில் சனியன் போலும்!
கார்காலம்.. வைகை நதி.. கரைபுரண்ட வெள்ளம்..
கரைதனில் மக்கள் வெள்ளம்..
மன்னன் சமணர்களிடம்:”முதலில் உங்கள் ஏடுகளை நீரில் எறியுங்கள்”
சமணர்கள் எறிந்த ஏடு நீரின் வழியே சென்று மறைந்தது..சமணர்கள் நட்டாற்றில் நின்றனர்.
திருஞானசம்பந்தர் ‘அந்தணர் வானவன் ஆனினம்’ என்று தொடங்கும் பதிகத்தை ஏட்டில் பதித்து…வைகையில் இட்டார்.. ஏடு நீரை எதிர்த்து சென்றது..
ஆனந்தம் பொங்க கூன்பாண்டியன் நெடுமாறன் எழுந்தான்…
அக்கணமே..அவனது ‘கூன்’ நிமிர்ந்த்தது..
திருஞானசம்பந்தர் – அந்த (நீரில் இட்ட) பதிகத்தில் ‘வேந்தனும் ஓங்குக’ -என்று எழுதியிருந்தார்..
இப்பொழுது ஒரு சின்னப் பிரச்சினை..
திருஞானசம்பந்தர் போட்ட ஏடு நதியை எதிர்த்து ஓடிக்கொண்டே இருந்தது.
மந்திரி குலச்சிறையார் குதிரையில் ஏறி அதன் பின்னர் கரையோரமாக ஓடிக்கொண்டிருந்தார்.
திருஞானசம்பந்தர் மந்திரியாரின் நிலைமை அறிந்து – வேறு பதிகம் பாடி அந்த ஏட்டை நிறுத்தினார்.
மந்திரி அந்த ஏட்டை – திருஞானசம்பந்தரிடம் கொணர்ந்தார்.
கூன் பாண்டியன் – ‘நின்றசீர் நெடுமாற நாயனார்’ என்று பெயர் பெற்று உலகு போற்ற வாழ்ந்தான்.
சமணம் மெல்ல அழிந்தது. சைவம் தழைத்தது..
திருஞானசம்பந்தர்.. மதுரையை விடுத்து… தமிழ்நாட்டின் பல சிவத்தலங்களைத் தரிசித்து பல அற்புதங்கள் செய்து- சீர்காழி வந்தார்.
பூம்பாவை என்ற சிவ பக்தை அரவம் தீண்டி இறந்து போனாள்.
திருஞானசம்பந்தர் பூம்பாவை கதையை கேள்வியுற்றியிருந்தார்.
அவளது எலும்புகள் வைக்கப்பட்ட குடம் முன் நின்று.. பதிகம் பாட… பூம்பாவை உயிருடன் வந்தாள்.
பூம்பாவையின் தந்தை திருஞானசம்பந்தரிடம் “தாங்கள் என் மகளை மணந்து கொள்ள வேண்டும்” என்று விண்ணப்பித்தார்..
திருஞானசம்பந்தர் ‘மறுவாழ்வு பெற்ற இந்த பூம்பாவை என் மகள் போல’- என்று மறுதளித்தார்.
இன்னொரு நாடகம் அரங்கேற உள்ளது..
இடம்:சீர்காழி
திருஞானசம்பந்தரின் பெற்றோரும் – சுற்றத்தினரும்:” சம்பந்தா! உனக்கு பதினாறு வயதாகிறது..மண வாழ்வு கொண்டு முறைப்படி வேள்விகள் செய்வாயாக”
திருஞானசம்பந்தர் மறுத்தார்.
அடி மேல் அடி வைத்தால்..அம்மியும் நகரும் என்பார்கள்..
திருஞானசம்பந்தர் ஒருவழியாக திருமணத்துக்கு ஒத்துக்கொண்டார்.
திருப்பெருணா நல்லூர் நம்பியாண்டார் நம்பியின் மகளை திருஞானசம்பந்தருக்கு மணமுடிக்க முடிவு செய்தனர். திருமண நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடந்தது..நம்பியாண்டார் நம்பி திருஞானசம்பந்தரின் கரத்தில் மங்கள நீரை மும்முறை வார்த்து தன் மகளை தாரை வார்த்துக் கொடுத்தார். திருஞானசம்பந்தர் மங்கையின் கரம் பற்றி ஓமத்தை சுற்றி வலம் வந்தார்..
அப்பொழுது.. அவர் எண்ணங்கள் அலை மோதியது.
‘எனக்கு ஏன் இந்த இல்வாழ்க்கை வந்தடைந்தது?சிற்றின்பத்தில் உழலுவதை விட இறைவனது திருவடி நிழலில் பேரின்பம் காண்பதல்லவா உத்தமம்’ –என்று எண்ணமிட்டார்..
அனைவரும் கோவிலை அடைந்தனர்.
சிவனை மனதில் நிறுத்தி..அவர் திருவடியில் தன்னை சேர்த்துக்கொள்ளும்படி விண்ணப்பம் வைத்து ‘நல்லுர்ப்பெருமணம்’ என்று திருப்பதிகம் பாடினார்.
வானில் அசரீரி : “நீயும், நின் மனைவியும்,திருமணத்துக்கு வந்தவர் அனைவரும் எம்மிடம் சோதியாகக் கலந்துகொள்ளவும்”
அங்கு உடனே பெரிய ஒளிவடிவில் ஜோதிலிங்கம் காட்சியளித்தது. அதில் ஒரு வாயிலும் தென்பட்டது.
திருஞானசம்பந்தர் :
‘காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் மல்கி,
ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது;
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே’
என்று பதிகம் பாடினார்.
திருமணத்துக்கு வந்த அனைவரையும் பார்த்து :”சிவஜோதியில் கலந்து கொள்ளுங்கள்.இந்த வாயில் வழி செல்லுங்கள்” – என்றார்.
அனைவரும் சென்ற பின், திருஞானசம்பந்தர் தனது மனைவியுடன் அந்த ஒளிவாசலில் சென்று சிவஜோதியுடன் கலந்தார். அந்த வாயில் மூடியது..சிவஜோதியும் மறைந்தது..
இத்தனை அற்புதங்கள் செய்து சைவத்தை நிலை நாட்டிய திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலம் ‘பதினாறு வருடங்கள்’ மட்டுமே!
இப்படிப்பட்ட மகான்களைப் பற்றி எழுதி சரித்திரம் தன்னை புனிதமாக்கிக் கொள்கிறது..
விரைவில் வேறு கதைகள்..