அம்மம்மா என்னென்பேன் திவ்யாவி னழகுதனை
அந்நங்கை யுடலுருவை யெங்கனமே எடுத்துரைப்பேன்!
கன்னங்கரு பாம்புகளோ சிரத்திலுள்ள கருங்கூந்தல்
கன்னமென்ன தித்திக்கும் மாம்பழக் கதுப்புகளோ?
கண்ணென்ன கருமீனோ இதழென்ன செம்மலரோ
திலகமிட்ட நெற்றிதனைத் தொட்டிடவே தோன்றாதோ?
செம்பவளம் திறந்திட்டால் குயிலினொலி வாராதோ
செவ்வடி யெடுத்திட்டால் அன்னத்தைப் பழிக்காதோ?
முன்னழகு காளையரின் நெஞ்சத்தை வாராதோ
பின்னழகு பார்க்கையிலே பாடிடவும் தோன்றாதோ?
பல்வரிசை கடலோடிக் கண்டெடுத்த முத்துகளோ?
பளிங்கொத்த மேனியது மயிலழகைத் தாராதோ?
இடையென்ன கொடியோ உளமென்ன கடலோ
இயற்கையெழில் கூடிடவா அணிகலன்கள் பூட்டியது?
எழுபதாண்டு நிறைவான முதியவராம் குருசாமி
எத்தகைய குறையுமின்றி காத்துவந்த நங்கையவள்
தந்தைதாய் சுற்றமின்றி தவித்துநின்ற வேளையிலே
தந்தையாய் நிறைந்திருந்து போற்றிய நங்கையவள்
குழந்தைப் பருவம்முதல் சோறூட்டித் தாலாட்டி
இருபது வருடங்களாய் வளர்த்துவந்த பொக்கிஷமே
பங்கயமும் பருதியும் மலரும் மணமும்போல்
பிரியாது அவளோடு இருந்தவர் கண்ணன்றோ?
எழுபதாண்டுக் கிழவரவர் வாலிபருள முணராரோ
எவ்விடத்து சென்றாலும் திவ்யாவொடு செல்கின்றார்
வைத்தவிழி வாங்காது நோக்குமந்த வாலிபர்கள்
வஞ்சக விழிகளுமே யவள்மீது பாயாதோ
பொருட்டில்லை பலவயது கடந்திட்ட கிழவருக்கு
பயமின்றி யவளுடனே தன்வழியே செல்கின்றார்!
தண்ணிய மலரவளைக் கண்ணுற்ற சுந்தரமும்
தன்னுள்ளம் பறிகொடுத்துப் பார்த்ததிலே வியப்பேன்ன!
இன்பக் கனவுகளில் கண்டுவந்த கன்னியவளை
தன்னுடமை யாக்கிடவே விழைந்ததிலே வியப்பென்ன!
எத்துணையும் கேட்டாலும் கொடுத்திடவே மனங்கொண்டு
எழுபதாண்டுக் கிழவரையும் துணிவுடனே அணுகுகிறான்
‘ஐயன்மீர்.. ஐயன்மீர் அப்பெண்ணி னழகேயழகு
ஐயன்மீர்.. அவள்கரத்தை யென்கரத்தில் சேர்த்துவிடும்
எத்துணைச் செல்வங்கள் கேட்டாலும் கொடுத்திடுவேன்’
எழுபதாண்டுக் கிழவருமே சிரிப்புடனே கூறுகிறார்:
‘தம்பீநீ சொல்வதைச் சிந்தித்துப் பார்த்தாயா
தங்கம்நிகர் மங்கையவள் இக்கிழவனின் பொக்கிஷம்
இருபதாண்டு போற்றிக்காத்த எனதன்பு சாகரம்
இகமதனில் இருக்கின்ற செல்வங்கள் அளித்தாலும்
நிகராமோ திவ்யாதன் செவ்வடி தூசிற்கே’
நயமுடனே சொன்னவக் கிழவருடைச் சொற்களையே
செவியுற்ற சுந்தரத்திற்கு கோபமே வரவில்லை
செவ்வியதாய் வளர்த்திட்ட பிரிக்கவொணா பெரும்பாசம்
கிழவரையு மிவ்வாறு பேசிடவே செய்ததுவே!
நயமுடனே தன்கட்சி யவரிடமே வாதிட்டு
அடைந்திடுவோம் தங்கம்நிகர் மங்கையவள் திவ்யாவை
அசையாத நம்பிக்கை மனதிலே யெழுந்திடவே
கிழவருடன் பேசுகிறான் காளையவன் சுந்தரமும்
‘கற்றறிந்த முதியோரே யனுபவத்தில் பெரியவரே
புரிந்தது தங்களுடை மேல்நின்ற பாசங்கள்
பரிவுடனே என்வார்த்தை சிலகணங்கள் கேட்பீரே
இன்றிலையேல் மற்றோர்நாள் வேறொருவன் கரங்களிலே
இந்நங்கை கரங்களையே சேர்த்தெடுத் தளிப்பீரே
எப்போது மித்தைய லும்மோடு இருந்திடவும்
எஞ்ஞான்றும் பிரியாது இருந்திடவே யியன்றிடுமோ?
உம்மிறுதிக் காலத்தில் கண்டொருவன் கரங்களிலே
உயிரான மங்கைதனை யொப்படைத்தல் முறையாமோ?
ஒப்புவித்த மனிதனுமே திவ்யாவைக் காப்பானோ?
அவ்வைய மும்முயிரை நிம்மதியாய் விட்டிடுமோ
ஆசையுற்ற மனிதனுமே நானாக இருக்கின்றேன்
அஞ்சாது என்கையில் தந்திடுமே திவ்யாவை
இடரின்றி யாளமர்த்தி திவ்யாவைக் காத்திடுவேன்
இக்கண்ணி னிமையேபோல் நானவளைக் காத்திடுவேன்
வேண்டியன செய்வித்து இதமுடனே பார்த்திடுவேன்
தயங்காது என்கையில் ஒப்படைக்கும்’ என்றானே
காளையவன் வார்த்தைகளும் கிழவரது சிந்தனையை
கனிவோடு எழுப்பியது சிந்தித்தார் கிழவருமே
‘எழிலுக்கே யெழிலினது மேன்மைகள் புரிந்துவிடும்
எழிற்கன்னி திவ்யாவை யவனுக்கே தந்துவிட்டால்
கலங்காது காத்திடுவான் வேண்டியன செய்திடுவான்
காளையவன் பார்வைக்கு அழகாக இருக்கின்றான்
தளுக்கான வுடையுடனே ஆண்மையு மொருசேர
தன்னிகர் நானேயென யரும்புமீசை தலைகாட்ட
அழகிய முகத்துடனே யெழில்சோர நிற்கின்றான்
அழகிய திவ்யாவை வைத்திடத் தகுந்தவனே
பரந்தவுளம் கொண்டவனாய் காட்சிவேறு தருகின்றான்
இக்கட்டை வீழுங்கால் கண்டவனுக் களிப்பதினும்
ஆண்மைமிகு இவனுக்கே திவ்யாவைத் தந்திடுவோம்
ஆணழக னிவனைப்போல் மற்றொருவன் காண்பதரிது’
என்றெல்லா மெண்ணிய கிழவரும் பேசுகிறார்
‘என்னுயிரை யுன்கையில் தந்திடவே முடிவெடுத்தேன்
கலங்காது காப்பதுவே காளையுன் பொறுப்பேயென’
கூறிநின்ற கிழவரது கண்களும் குளமாக
‘கலங்கேல் ஐயன்மீர் கலக்கம் கொள்ளற்க
கருணையொடு யானளிக்கும் பத்தாயிரம் ரூபாயை
அன்புப் பரிசேபோல் ஏற்றுக் கொளவேண்டும்
அந்திமச் சின்னாளை யமைதியாய்க் கழித்திடவே
உம்முயிர் திவ்யாவை மாதத்திற் கொருதடவை
உடனழைத்து வந்திடுவேன் உம்மையே கண்டிடுவேன்
கலக்கம் கொளாதீ’ ரென்றானே சுந்தரமும்
கலங்கிய கண்களொடு திவ்யாவை யருகழைத்து
‘கண்ணேயென் திவ்யாவே யுன்னைநா னித்தம்பியிடம்
கலங்காது தந்திடவே யோசித்து முடிவெடுத்தேன்
அஞ்சாது வுன்னெண்ணம் கூறிடுநீ’ யென்றாரே
அந்நங்கை யாதொன்றும் பேசாது நின்றாளே
கடைக்கண் பார்வையினால் சுந்தரத்தைத் துளைத்தாளே
கட்டழகு சுந்தரத்தை முறுவலினால் வதைத்தாளே
கன்னியின் மனந்தனையே தப்பாது நோக்கியபின்
கட்டழகி யவள்கரத்தை யவனிடமே தந்துவிட்டு
நீர்வார்த்த கண்களையே மறுபுறமே திருப்பிட்டார்
நயமான வார்த்தைகள் துன்பங்கள் தனைச்சேர்க்கும்
என்றெண்ணி சுந்தரமும் பத்தாயிரம் ரூபாயை
அக்கிழவர் முன்வைத்து ‘வருகிறே’ னெனக்கூறி
ஆசையுடன் நங்கையினை யள்ளியே யணைத்திட்டு
திவ்யாவெனும் பதுமையொடு வழிநோக்கி நடந்தானே!
குறைவில்லா மகிழ்ச்சியும் அடங்கிடா பெருமையும்
கொண்டவன் திவ்யாவை யணைத்தபடி சென்றானே!
–