நீலப் பின்ணணியில் உலா வந்த மேகங்கள் உரசிக்கொண்டும், விலகிக்கொண்டும்,இலேசாக ஓரங்களில் சாயும் கதிரவனின் நிறங்களைப் பெற்றுக் கொண்டும்,சிறுத்தும் பெருத்தும், வண்ணங்களை நொடிக்குள் மாற்றியும் நிலையற்று சென்று கொண்டிருந்தன.பார்க்கப் பார்க்க அலுக்காத கோலங்கள். நேற்றைப் போல் இன்றில்லை;இன்றைப் போல் நாளையும் இருக்கப் போவதில்லை. ஆனால்,பார்க்கையில் சட்டென்று மாறும் நிறத் துளிகள்,தொடு வானில் அவை எழுதும் கிறுக்கோவியங்கள்,காலத்தின் கணக்குகள் யாரிடம் என்று வானமும், பூமியும் நடத்தும் இரகசியப் போர்கள்,இவைகள் தனக்கென எதைக் கொண்டிருக்கும்? மேகங்கள் தம்மை மிதக்க வைத்த இயற்கைக்கு நன்றி சொல்லுமா, கோபம் கொள்ளுமா?பஞ்சு போல் வெளுத்த மேகங்களை மானுடர் விரும்பாத போது அதே நிறத்திலுள்ள மக்களை மேம்பட்டவர்களாக அவர்கள் நினைக்கும் விந்தை என்ன?கருமை கொண்டு சரமழை என இறங்குகையில் அதே நிறத்தவரை இந்த உலக மனிதர்கள் வெறுப்பதும் தான் என்ன?
உஷா தன் எண்ணங்கள் போகும் போக்கை நினைத்து சிரித்துக் கொண்டாள்.மனம் என்ற ஒன்று இல்லாமல் எந்த ஒரு காட்சியையும், பொருளையும் தன்னால் பார்க்கவே இயலவில்லை என்பது அவளுக்குக் கசப்பாக இருந்தது.மற்றவற்றில் புகுந்து அதன் சிந்தனை ஓட்டத்தை தான் அனுமானிக்க முயல்வது தவறல்லவா?இதில் என்ன தவறிருக்கிறது என்றது அக மனம்.தன்னை விட்டுவிட்டு பிறவற்றில் எண்ணங்களை ஏற்றித் தானே பார்த்து சிரிக்கும் வரம் அல்லது சாபம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை என்றது அது.
சங்கர் மூச்சிரைக்க மேல் மொட்டைமாடிக்கு ஓடி வந்தான்.’அம்மா,உன்னத் தேடிண்டு யாரோ சேதுவாம் வந்திருக்கார், வாசல்ல நிக்கறார்’ என்றான்
“சேதுவா, யார்டா அது? எனக்கு அப்படி யாரையும் தெரியல்லயே?”
‘அம்மா,உனக்கு உங்க ஊர்ல ‘ஊசி’ன்னு பேராமே?அதைச் சொல்லிக் கேட்டார்.பாக்க ரொம்ப சுமாரா இருக்கார்.நான் ஏதோ யாசகக் கேஸ்ன்னு நெனைச்சேன்’
“ஊசின்னா சொன்னார்,தம் பேரு சேதுன்னா சொன்னார்,அவனாடா வந்த்ருக்கான்?” சொல்லிக்கொண்டே வயதையும் மீறி படிகளில் விரைவாக இறங்கினாள்.
வாசல் படிகளைத்தாண்டி ஒரு வளைந்த நிழலென அவர் உருவம் தெரிந்தது.”சேதூ’ என்றாள் கரகரத்த குரலில்.அவனை உள்ளே வா என்று கூடத் தான் சொல்லவில்லை என்று உறுத்தியது. ஆனால், என்று அவன் எவர் வீட்டிற்கும் அழைப்பின் பேரில் சென்றிருக்கிறான்?ஏழைகளை யார் விருந்திற்கு அழைத்திருக்கிறார்கள்? சுதாரித்துக்கொண்டு”வாடா சேது, ஏன் அங்கயே நிக்கற? உள்ள வா” என்றாள்.கிழியாத ஆனால் பழசான எட்டு முழ வேட்டி,சந்தனக் கலரில் மேல்சட்டை, கைகளில் சிறிய மற்றும் பெரிய பைகள்.கண்கள் மிரள மிரள விழித்தன.ஆனாலும்,ஆதுரத்துடன் அவளைப் பார்த்தன.
‘உம் பொண்ணா ஊசி,அப்டியே உன்னப் பாக்கற மாரி இருக்கு;என்ன பேரு வச்சிருக்க?’
“சேது மாதவி; இவன் புள்ள ஹரிசங்கர்”
‘வாங்கோடா, கண்ணுகளா, மாமாடா நா’ என்று இருவரையும் அணைத்துக் கொண்டான்.கண்களில் கண்ணீர் அவனறியாமல் சுரந்து பெருகியது.வாங்கி வந்திருந்த மாம்பழங்களைக் கொடுத்தான்.
‘ஆத்துக்கார் இன்னமும் ஆஃபிஸிலேந்து வல்லயா?’ என்றான்.
“அவர் டூர் போயிருக்கார் சேது, உக்காரு,காஃபி போட்றேன்”என்றவாறே அவள் உள்ளே போனாள்.எண்ணங்கள் அலைபாய்ந்தன.
இப்போ எதுக்கு வந்திருக்கான்?ஆள் பார்வையாவே இல்லையே? கடன் கேப்பானோ?திருட்ற பழக்கம் இன்னும் இருக்கோ?இந்தக் கொழந்தேளுக்கு சமத்துப் போறாது.கண்ணெதிர்க்கவே அவன் எதையாவது எடுத்து வச்சுண்டாலும் தெரியாது.கைல மூட்ட இருக்கு, டேரா போட்றுவானோ, அவர் வேற ஊர்ல இல்ல.என்ன சொல்லி அவனக் கெளப்பறது.நீண்ட மூச்சு எடுத்து தன்னை அமைதியாக்கிக்கொண்டு அவள் அவனுக்கு மாம்பழத் துண்டுகளும் காஃபியும் கொடுத்தாள். அவன் கவனிக்காத போது ஹாலில் பொருட்கள் ஏதேனும் காணவில்லையா என அவசர அவசரமாகப் பார்த்தாள்.
‘உங்க அம்மா காஃபி ஞாபகம் வரதுடீ.நீ வேலய விட்டுட்டியா என்ன?’ என்றான்.
“ஆமாண்டா, எப்படி இந்த இடத்த கண்டு பிடிச்சே?”
‘உன் ஆஃபீஸ்ல போய்க்கேட்டேன். அவா தான் அட்ரஸ் கொடுத்தா.’
“சேது,நீ என்ன பண்ற?எங்க இருக்க?குடும்பம் இருக்கா? அம்மா எப்டி இருக்கா?”
‘அம்மா போய்ச் சேந்து கனகாலம் ஆய்டுத்து.கெடக்கற வேலயப் பாக்கறேன்.கல்யாணம் ஒண்ணுதான் கொறச்சல் எனக்கு.
“சுமதி, ருக்கு, கணேஷ் சௌக்யமா இருக்காளா?”
‘நன்னாருக்கா.கொழந்த குட்டின்னு செட்டில் ஆயிட்டா.அப்பப்பப் பாப்பேன்.உங்காத்துக்கு வந்து போன ஒட்டோ வொறவோ எனக்கு யார்ட்டயும் இல்லடி.உங்கம்மா இருக்காளே,என்ன ஒன்னுவிட்ட ஓர்ப்படி புள்ளன்னா பாத்தா,வரச்ச எல்லாம் அப்டி கவனிப்போ.எனக்குன்னு மோர்க்கூழ் பண்ணுவோ.எஞ்சுழி,அவளப் படுத்திட்டேன்.’
“அதெல்லாம் இப்ப என்னத்துக்கு? ராத்ரி இங்க சாப்ட்றியா? என்ன பண்ணட்டும்?”
‘உங்கம்மா மாரியே கேக்கற.சாம்பார், ரசம், கூட்டு, கறி எல்லாம் பண்ணு. மாகாளியும், மாவடுவும் இருக்கா.முடிஞ்சா அப்ளம் பொரிச்சுடு.’
“நீ இப்டி கேக்கறதே சந்தோஷமா இருக்குடா.வெண்டக்கா சாம்பார், கத்ரி ஸ்டஃப்ட் கறி, மிளகு ரசம், அப்ளம் இல்ல, வடாம் வறுத்துட்றேன் ஊறுகாயெல்லாமிருக்கு.மாது, சங்கு மாமாவோட பேசிண்டு, வெளயாடிண்டிருங்கோ;அம்மா நிமிஷத்ல வந்துட்றேன்”
கைகள் பரபரவெனெ இயங்கினாலும், காதும், கவனமும் ஹாலில் தான் இருந்தன.அவன் சாப்பாடு மெனு சொன்ன போது நெகிழ்ச்சியாக இருந்தாலும் என்ன ஒரு துணிச்சல், வெக்கமே இல்லாம என்றும் எண்ணம் ஓடியது. மேல் மாடியின் வெட்ட வெளியில் அவள் பார்த்த விளிம்புகள் மடிந்த அந்த வெள்ளை மேகம் இவன் திருடிச் சென்ற அப்பாவின் வெள்ளித்தட்டு போல் தோன்றியதை அவள் வியப்புடன் இப்போது நினைவு கூர்ந்தாள்.அவன் குழைந்தைகளுக்கு ஏதோ விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தான்.
அவளுடைய பிறந்த வீட்டிற்கு அவன் கடைசியாக வந்த நாளை அவள் எப்படி மறப்பாள்?அவளுக்கு அன்று மறுதினம் இரண்டாம் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கப் போகின்றன.கொட்டிலில் கட்டியிருந்த ‘கனகா’விற்கு பிரசவ நேரம்.இடையன் வந்து பார்த்துக்கொண்டிருக்கிறான். அம்மா கனகாவைத் தடவித்தடவி ஏதேதோ சொல்கிறாள்.கால் மாற்றி மாற்றி நின்று பசு தவிக்கிறது.நந்தினி இனம் புரியாத தாபத்தில் முளையிலேயே சுற்றிச் சுற்றி வருகிறது.புண்ணாக்கை ஒரு கை பார்க்கும் கனகா அந்தத் தொட்டியைத் தொடக்கூட இல்லை. மட்டைத் தேங்காயும், உரித்த காயும், சீப்புப் பழமும், வெள்ளிக் குத்து விளக்கில் மின்னும் தீபமும், சரம் சரமாகத் தொடுக்கப்பட்ட மல்லிகை மாலையும் அம்மா ஒரு தாம்பாளத்தில் தயாராக வைத்திருக்கிறாள்.அம்மாவை அப்படி ஒரு தீவிரத்துடன், ஒரு தபசியைப் போல் பார்ப்பதே நெகிழ்த்துகிறது.அவளது கன்னத்திரளில் உருளும் வியர்வை முத்துக்களில் அவளின் மூக்குத்தி ஒளிச் சிதறல்களை அள்ளி வீசுகிறது.அவளை அப்படியே கட்டிக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது.பருத்திக்கொட்டையுடன் வேறு ஏதோ ஸ்பெஷலாகக் கலந்து ஒரு மரத் தொட்டி நிறைய மாட்டிற்கான தீவனம் சற்றுத் தொலைவில் வைக்கப்பட்டிருக்கிறது.இப்போது கூட அம்மாவின் அந்தக் குரல் கேட்கிறது அவளுக்கு.
‘ஹாலுக்குப் போய் படிச்சுண்டே பாத்துக்கோ, கன்னு போட்றச்சே கூப்ட்றேன்.கவனமா இரு.ஜில்லோன்னு எல்லாம் தொரந்திருக்கு’
அவள் போக்குக் காட்டிவிட்டு அங்கேயே சற்று மறைந்து நின்றாள்.முன்னங்கால்களில் முகத்தைப் பதித்துக்கொண்டு கன்று வெளி வருகையில் அம்மா கூப்பிட்டாள். கற்பூரம் ஏற்றிக் காட்டினாள்;அவள் கன்னங்களில் கண்ணீர் முத்துக்கள் வழிந்தோடின.யாருக்குக் குழந்தை பிறந்தது என அதிசயித்தது நினைவு வருகிறது.’லஷ்மி பொறந்திருக்கா’என்ற குரல் அம்மாவின் வழக்கமான குரலில்லை. அதில் ஏதோ விவரிக்க முடியாத ஒன்று இருந்தது.பிறந்ததும் துள்ளிக் குதித்தது கன்று.மாந்தளிரின் பழுப்பு நிறத்தில் மான்களைப் போன்ற விழிகளோடு நெற்றியில் வெள்ளையாக சுட்டி போல அமைப்புடன் இருந்த அதை பசு நக்கித் தீர்த்தது.
சிறிது நேரம் கழித்துதான் சேது வீட்டில் இல்லாதது தெரிந்தது.எப்படியும் ராச்சாப்பாட்டிற்கு வந்துவிடுவான் என நினைத்தார்கள்.தட்டுக்களைச் சாப்பிடுவதற்காகக் கழுவி வைக்கையில் அப்பா சாப்பிடும் வெள்ளித்தட்டு இல்லை.சேது இல்லை, தட்டுமில்லை.கோபமே வராத அப்பாவிற்க்கு அன்று வந்த சினம் அவள் அதுவரை அறியாத ஒன்று.ஓவல் வடிவில் சீரான மழுங்கடிக்கப்பட்ட வளைவுகளோடு ஒரு விரற்கடை ஆழத்தோடு(அம்மாவின் சொற்பிரயோகம்) கீழ்ப்புறத்தில் நான்கு குமிழ்களோடு அது கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ எடை.அவருக்கு மாமனார் கொடுத்த சீதனம்.அவர் போலீஸில் புகார் கொடுத்த அரை மணி நேரத்தில் அவனைத் தட்டோடு பிடித்துவிட்டார்கள்.சொந்தக்காரன் என்பதால் வீட்டிற்கே அழைத்தும் வந்துவிட்டார்கள்.அம்மா அப்போது செய்த காரியம் யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.
‘என்னத்துக்கு இப்ப அவனத் திருடன்னு சொல்றேள்?நான்னா அவனுக்குக் கொடுத்தேன்;ஏன்டா, வாய்ல என்ன கொழக்கட்டையா, சொல்றதுதானே,சித்தி தான் வச்சுக்கோன்னு கொடுத்தான்னு.அடிச்சேளா என்ன,தப்பில்லையா,சரி சரி, உங்க வழிமுற வேற.என்னது,இவர் கம்ப்ளைன்ட் பண்ணாரா?தப்புத்தான்,அவருக்குத் தெரியாம அவர் தட்ட தூக்கிக் கொடுத்தது தப்புதான்.உங்க நேரமெல்லாம் வேஸ்டாப் போச்சு, மன்னிச்சுடுங்கோ’
“அம்மா….. உங்கள மாரியும் இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிட்டோம்.அதுக்கு இந்த தம்பிக்கும் ஐயாவுக்கும் நன்னி சொல்லணும்” காவலர் போய் விட்டார்.
“போடா, தட்ட எடுத்துண்டு போய்டு” என்ற அப்பா,அம்மாவைக் கட்டிக்கொண்டார்.
நினைவுகளிலிருந்து மீண்ட உஷா அனைவரையும் சாப்பிடக் கூப்பிட்டாள்.
‘என் தட்லயே சாப்ட்றேன்’ என்ற சேது அந்த வெள்ளித்தட்டை வெளியில் எடுத்து வைத்த போது உஷாவின் கண்கள் பிதுங்கின.
‘இது என்னோட கடசி சாப்பாடுடி.தேசாந்த்ரியா போப் போறேன்.எத்தனையோ பணக்கஷ்டம் வந்த போதெல்லாம் இத மட்டும் விக்காம வச்சிருந்தேன்.உன்னப் பாத்து உங்க அம்மாவை நெனைச்சுண்டு உங்கையால ஒரு வாய் சாப்டுட்டு இதை உங்கிட்ட சேத்துட்டுப் போலாம்னுதான் வந்தேன்.நான் திருடினேன்டி,சித்தி திருத்தினாடி’
உணவறையின் சட்டகத்தின் வழியே நிலவின் வெண் ஒளிக் கண்ணிகளைத் தாங்கி வெள்ளித்தட்டென அதே வெண் மேகம் இப்போது காண்பதாக உஷாவிற்குத் தோன்றியது.