மூன்றாம் பத்து – என் செல்வராஜ்

Image may contain: 1 person

சிறுகதை எழுத்தாளர்களில் சிறந்த ஐம்பது எழுத்தாளர்களின் குறிப்புகளை திரட்டி இதில் தொகுத்திருக்கிறேன். அந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளையும் குறிப்பிட்டு இருக்கிறேன். இந்த தொகுப்புக்காகத் தகவல்களை திரட்டும்போதுதான் இன்னும் நிறைய எழுத்தாளர்களின் தகவல்கள் திரட்ட வேண்டியிருக்கிறது என்பது புரிகிறது. இணையத்தில் எல்லாம் இருக்கிறது என்பர். அப்படியெல்லாம் இல்லை என்பது நன்றாக புரிகிறது. பல எழுத்தாளர்களைப்பற்றிய தகவல் இணையத்தில் இல்லாமல் இருப்பதை பெரும் குறையாகவே நினைக்கிறேன். இந்த கட்டுரை அந்த குறையை சிறிதளவாவது குறைக்கும் என்பது என் எண்ணம். இன்னும் இதில் இல்லாத சிறந்த சிறுகதை எழுத்தாளர்களை வேறொரு கட்டுரையில் காணலாம். –

-என். செல்வராஜ்

 

 

திலீப்குமார்

குஜராத்தி மொழியை தாய்மொழியாகக் கொண்ட இவர் தமிழ் இலக்கியத்தின் மீது பற்று கொண்டவர். இவருடைய கதைகள் யதார்த்தத்தின்

களத்தினை வெளிப்படுத்துபவை. தெளிந்த பாத்திரப்படைப்பு, மெல்லிய நகைச்சுவை, அனுபவபூர்வமான வாழ்க்கையின் தேடல்கள் கொண்டவை இவருடைய கதைகள். மூங்கில் குருத்து, கடவு ஆகிய சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. கடவு சிறுகதை தொகுப்பை க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழிலிருந்து சிறப்பாக ஆங்கிலத்துக்கு மொழி பெயர்ப்பு செய்யக்கூடியவர். சிறந்த தமிழ் சிறுகதைகளை ஆங்கிலத்தில் இரண்டு நூல்களாக தொகுத்துள்ளார். இவரின் சிறந்த சிறுகதைகள் மூங்கில் குருத்து, கடிதம், அக்ரஹாரத்தில் ஒரு பூனை, மனம் எனும் தோணி பற்றி

கோணங்கி

சுதந்திர போராட்ட வீரர் மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்களின் பேரன் கோணங்கி. இவரது இயற்பெயர் இளங்கோ. இவரது அண்ணன் ச தமிழ்ச்செல்வன். தம்பி முருகபூபதி தமிழின் முக்கியமான நாடகக் கலைஞர். கோணங்கி “கல்குதிரை” என்ற சிற்றிதழை நடத்தி வருகிறார். இவரது மொழி நடை தனித் தன்மையானது.இவரின் சிறுகதைகளில் மதினிமார்களின் கதை, கொல்லனின் ஆறு பெண் மக்கள் சிறப்பானவை. சலூன் நாற்காலியில் சுழன்றபடி என்ற முழு தொகுப்பை அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் மதினிமார்களின் கதை, கருப்பு ரயில், கோப்பம்மாள்

ஜெயமோகன்

1987 ல் கணையாழியில் நதி சிறுகதை அசோகமித்திரனின் சிறு குறிப்புடன் வெளியாயிற்று. அது இவருடைய எழுத்துக்கு ஒரு தொடக்கம். தொடர்ந்து நிகழ் இதழில் படுகை, போதி முதலிய கதைகள் வந்து கவனிக்கப்பட்டன. 1988ல் எழுதிய ரப்பர் என்னும் புதினத்தை 1990ல் அகிலன் நினைவுப்போட்டிக்காக சுருக்கி அனுப்பி, அதற்கான விருதைப் பெற்றார். தமிழ்ப் புத்தகாலயம் இந் நாவலை வெளியிட்டுள்ளது. 1998 முதல் 2004 வரை “சொல்புதிது” என்ற சிற்றிதழை நண்பர்களுடன் இணைந்து நடத்தினார். இவர் எழுதிய விஷ்ணுபுரம் என்ற நாவல் புகழ் பெற்றது. ஜெயமோகன் சிறுகதைகள் என்ற முழு தொகுப்பை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அந்த தொகுப்புக்குப் பின் ஊமைச்செந்நாய், அறம், வெண்கடல் ஆகிய சிறுகதை தொகுப்புகள் வெளிவந்துள்ளன. நவீனத் தமிழிலக்கிய அறிமுகம், சங்க சித்திரங்கள் ஆகிய கட்டுரை நூல்கள் சிறப்பானவை. இவரின் சிறந்த சிறுகதைகள் திசைகளின் நடுவே பத்ம வியூகம், நதி, மாடன் மோட்சம், யானை டாக்டர், ஊமைச்செந்நாய்

லா ச ராமாமிர்தம்

திருச்சி மாவட்டம் லால்குடியில் பிறந்தவர் லா ச ரா. தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டும் எழுதிவந்த லா ச ரா தனது ஐம்பதாவது வயதில்

புத்ர நாவலை எழுதினார். தினமணிக்கதிரில் சிந்தாநதி என்ற வாழ்க்கைத்தொடரை எழுதினார். சிந்தாநதி நூலுக்காக 1989 ல் சாகித்ய அக்காடமி விருது பெற்றார். அவருடைய பாற்கடல் முக்கியமான படைப்பு. ராமாமிர்தத்தின் எழுத்துக்களில் புராணங்களும் தொன்மங்களும் நிறைந்திருக்கும். லா ச ரா தனக்கென ஒரு மொழியையும் நடையையும் சிருஷ்டித்துக் கொண்டுள்ளார். அது அவரை மற்ற எல்லா எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுத்தும்.தமிழின் முன்னோடி எழுத்தாளரான அவர் மணிக்கொடி எழுத்தாளுமைகளுளின் இறுதிச் சுடராகவும் ஒளி வீசியவர். கதை சொல்லலில் புதிய நுட்பங்களைப் புகுத்தியவர். மனத்தின் அசாதாரணங்களைக் கவிதை மொழியில் புனைவாக ஆக்கியவர். ‘அபிதா, ‘புத்ர’. ‘செளந்தர்ய’ ஆகிய அவரது நாவல்கள் தமிழின் செவ்வியல் நாவல்களாகப் போற்றப்படுகின்றன. ஒரு விதத்தில் லா.ச. ரா அவர்கள் ஆயுள் முழுக்க ஓர் அம்பாள் உபாசகராக இருந்திருக்கிறார். தன் அன்னை மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி அவருடைய பல படைப்புகளில் வெளிப்பட்டிருக்கிறது. அன்பு, சாந்தம், பரிவு, தியாகம் ஆகியவற்றுடன் கோபம், சாபம், ரௌத்திரம் எனப் பல அம்சங்கள் உள்ளடக்கியது அவருடைய தாய் உபாசனை. இவரின் சிறந்த சிறுகதைகள் பாற்கடல், ஜனனி, பச்சை கனவு

சுப்ரபாரதி மணியன்

இவர் சிறுகதைகள் , நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் என பல தளங்களிலும் முப்பது வருடங்களாக எழுதி வருபவர். பல்வேறு சமூகப் பிரச்சினைகளிலும் அக்கறை கொண்டவர். கனவு என்ற இலக்கிய சிற்றிதழை முப்பது வருடங்களாக நடத்தி வருபவர். இவரது சாயத்திரை, மற்றும் சிலர், ஆகிய நாவல்கள் சிறந்த நாவல்களாகும். இவரது சிறுகதைகளின் முழு தொகுப்பை சுப்ரபாரதி மணியன் கதைகள் என்ற பெயரில் காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.சுப்ரபாரதி மணியனின் படைப்புக்கள் ஒவ்வொன்றுமே சமகால வாழ்வியல் தரிசனத்தின் பன்முகக்கூறுகளை நமக்கு அடையாளம் காட்டுகின்றன. நகரமயமாதலின் விளைவான சூழல் பாதிப்பு, பொருள் மயமாதலின் காரணமாக மனித உறவுகளில் ஏற்படும் முரண்கள் இவை இரண்டும் இவரது கதைகளில் துலக்கம் பெறுகின்றன. இவரின் சிறந்த சிறுகதைகள் ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும், வாக்கு

இந்திரா பார்த்தசாரதி

கும்பகோணத்தைச்சேர்ந்த இந்திரா பார்த்தசாரதி சிறந்த நாவலாசிரியர். சிறந்த நாடகாசிரியர். இவர் படைப்பாளியாகவும் ,பேராசியராகவும் ஒருங்கே

செயல்படும் வாய்ப்பு பெற்றவர். குருதிப்புனல் என்ற நாவலுக்காக 1977ல் சாகித்ய அக்காடமி விருது பெற்றவர். குருதிப்புனல் , தந்திர பூமி, சுதந்திர பூமி போன்ற இவரது நாவல்கள் அரசியல் சார்ந்தவை. இராமானுஜர் நாடகத்திற்காக சரஸ்வதி சம்மான் விருது பெற்றவர். இவரது நாடகங்கள் ஔரங்கசீப், நந்தன் கதை, இராமானுஜர் ஆகியவை சிறந்த படைப்புக்களாகும். கணையாழி இதழின் கௌரவ ஆசிரியராகவும் பணியாற்றினார். 39 ஈழத்து புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளை எஸ் பொவுடன் இணைந்து ” பனியும் பனையும் “என்ற தொகுப்பை தொகுத்துள்ளார். இவரின் சிறந்த சிறுகதைகள் ஒரு கப் காப்பி, தொலைவு,

இளமாறன் கொடுத்த பேட்டி, நாசகார கும்பல், பயணம்

எம் வி வெங்கட்ராம்

கும்பகோனத்தில் சௌராஷ்டிரா குடும்பத்தில் பிறந்த இவர் பல சிறுகதைகளை எழுதி உள்ளார். தேனீ என்ற சிற்றிதழை சில காலம் நடத்தினார்.

இவரது சிறுகதைகள் முழு தொகுப்பாக வெங்கட்ராம் கதைகள் என்ற தொகுப்பாக கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ் வெளியிட்டுள்ளது. நாட்டுக்கு உழைத்த நல்லவர் என்ற வரிசையில் 50 க்கு மேற்பட்ட நூல்களை சிறுவர்களுக்காக இவர் எழுதி பழனியப்பா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 1993 ஆம் ஆண்டு காதுகள் என்ற நாவலுக்காக சாகித்ய அக்காடமி விருது பெற்றார். இவரது நித்ய கன்னி அழியாப்புகழ் படைத்த நாவலாகும். இவரின் சிறந்த சிறுகதைகள் பைத்தியக்கார பிள்ளை, தத்துப்பிள்ளை,

சார்வாகன்

சார்வாகன் என்று இலக்கிய வட்டத்தில் அறியப்பட்ட மருத்துவர் ஹரி ஸ்ரீனிவாசன் ஒரு தொழுநோய் மருத்துவர் மற்றும் தமிழ் சிறுகதை எழுத்தாளர் ஆவார்.இவர் தொழுநோயால் பாதிக்கப்பட்ட கைகளை மீண்டும் சரியாக்குவதில் சார்வாகன் கண்டுபிடித்த முறைகள்தான் இன்றும் அவர் பெயரிலேயே வழங்கப்படுகின்றன. இதற்காக இவருக்கு 1984 இல் இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.எழுத்தில் ஆர்வம் கொண்ட இவர் கவிதைகளையும் சிறுகதைகளையும் சிற்றிதழ்களில் எழுதியுள்ளார். இவரின் கனவுக்கதை’ என்னும் சிறுகதை 1971-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக ‘இலக்கியச் சிந்தனை’ பரிசு பெற்றது. இவருடைய சிறுகதைகள் சில, ஆங்கில மொழிபெயர்ப்பாகி வெளியாகியிருக்கின்றன.இவர் எழுத்துக்கள் முழு தொகுப்பாக சார்வாகன் கதைகள் என்ற பெயரில் நற்றிணை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இவரின் சிறந்த கதைகள் கனவுக்கதை, சின்னூரில் கொடியேற்றம்

எஸ். சம்பத்

சம்பத்தின் இளமைப்பருவம் முழுவதும் டில்லியிலேயே கழிந்தது. 1984-ல் இடைவெளி நாவல் வெளிவருவதற்கு முன்பு எஸ். சம்பத் என்று

அறியப்பட்ட சம்பத் இடைவெளி வந்த பின் ‘இடைவெளி சம்பத்’ என்றே அறியப்பட்டார். சிறுகதைப் பரப்பில் சம்பத் எழுதிய கதைகள் அதிகம் இல்லை. ஆனால் எழுதிய கதைகள் எதிர் மரபு சார்ந்தவை.அங்கீகரிக்கப்பட்ட கதைகூறல் மரபுக்கு, கருத்துக்கு எதிராகப் புனைவு செய்யப்பட்டவை. இவரது கதைகளை இரண்டு தொகுதிகளாக நவீன விருட்சம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் சாமியார் ஜூவுக்கு போகிறார், இடைவெளி

நகுலன்

டி. கே. துரைசாமி என்ற இயற்பெயர் கொண்ட நகுலன் பிறந்தது தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் ஆனாலும் இறுதிவரை வாழ்ந்தது

கேரளத்தின் திருவனந்தபுரத்தில். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தில் முதுகலையும் ஆராய்ச்சிப் பட்டமும் பெற்றவர். தமிழ்ச் சிறுகதைகளில் பல புதிய பரிசோதனைகள் செய்தவர். பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன ஆங்கில இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். ‘எழுத்து’ இதழில் எழுதத் துவங்கியவர். இவர் தொகுத்த ‘குருஷேத்திரம்’ இலக்கியத் தொகுப்பு, தமிழில் மிக முக்கியமானதாகும். விளக்கு விருது, ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் நகுலன். நகுலனின் கவிதைகள் பெரும்பாலும் மனம் சார்ந்தவைகள். அவர் மனிதனின் இருப்பு சார்ந்தே கவிதைகளை வெளிப்படுத்தியுள்ளார். இவரின்சிறந்த சிறுகதைகள் ஒரு ராத்தல் இறைச்சி, அயோத்தி, ஒரு எட்டு வயது பெண் குழந்தையும் நவீன மலையாளக் கவிதையும்

 

வெள்ளித்தட்டு – ந பானுமதி

Image result for சிறுகதைImage result for வெள்ளித்தட்டு

நீலப் பின்ணணியில் உலா வந்த மேகங்கள் உரசிக்கொண்டும், விலகிக்கொண்டும்,இலேசாக ஓரங்களில் சாயும் கதிரவனின் நிறங்களைப் பெற்றுக் கொண்டும்,சிறுத்தும் பெருத்தும், வண்ணங்களை நொடிக்குள் மாற்றியும் நிலையற்று சென்று கொண்டிருந்தன.பார்க்கப் பார்க்க அலுக்காத கோலங்கள். நேற்றைப் போல் இன்றில்லை;இன்றைப் போல் நாளையும் இருக்கப் போவதில்லை. ஆனால்,பார்க்கையில் சட்டென்று மாறும் நிறத் துளிகள்,தொடு வானில் அவை எழுதும் கிறுக்கோவியங்கள்,காலத்தின் கணக்குகள் யாரிடம் என்று வானமும், பூமியும் நடத்தும் இரகசியப் போர்கள்,இவைகள் தனக்கென எதைக் கொண்டிருக்கும்? மேகங்கள் தம்மை மிதக்க வைத்த இயற்கைக்கு நன்றி சொல்லுமா, கோபம் கொள்ளுமா?பஞ்சு போல் வெளுத்த மேகங்களை மானுடர் விரும்பாத போது அதே நிறத்திலுள்ள மக்களை மேம்பட்டவர்களாக அவர்கள் நினைக்கும் விந்தை என்ன?கருமை கொண்டு சரமழை என இறங்குகையில் அதே நிறத்தவரை இந்த உலக மனிதர்கள் வெறுப்பதும் தான் என்ன?

உஷா தன் எண்ணங்கள் போகும் போக்கை நினைத்து சிரித்துக் கொண்டாள்.மனம் என்ற ஒன்று இல்லாமல் எந்த ஒரு காட்சியையும், பொருளையும் தன்னால் பார்க்கவே இயலவில்லை என்பது அவளுக்குக் கசப்பாக இருந்தது.மற்றவற்றில் புகுந்து அதன் சிந்தனை ஓட்டத்தை தான் அனுமானிக்க முயல்வது தவறல்லவா?இதில் என்ன தவறிருக்கிறது என்றது அக மனம்.தன்னை விட்டுவிட்டு பிறவற்றில் எண்ணங்களை ஏற்றித் தானே பார்த்து சிரிக்கும் வரம் அல்லது சாபம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை என்றது அது.

சங்கர் மூச்சிரைக்க மேல் மொட்டைமாடிக்கு ஓடி வந்தான்.’அம்மா,உன்னத் தேடிண்டு யாரோ சேதுவாம் வந்திருக்கார், வாசல்ல நிக்கறார்’ என்றான்

“சேதுவா, யார்டா அது? எனக்கு அப்படி யாரையும் தெரியல்லயே?”

‘அம்மா,உனக்கு உங்க ஊர்ல ‘ஊசி’ன்னு பேராமே?அதைச் சொல்லிக் கேட்டார்.பாக்க ரொம்ப சுமாரா இருக்கார்.நான் ஏதோ யாசகக் கேஸ்ன்னு நெனைச்சேன்’

“ஊசின்னா சொன்னார்,தம் பேரு சேதுன்னா சொன்னார்,அவனாடா வந்த்ருக்கான்?” சொல்லிக்கொண்டே வயதையும் மீறி படிகளில் விரைவாக இறங்கினாள்.

வாசல் படிகளைத்தாண்டி ஒரு வளைந்த நிழலென அவர் உருவம் தெரிந்தது.”சேதூ’ என்றாள் கரகரத்த குரலில்.அவனை உள்ளே வா என்று கூடத் தான் சொல்லவில்லை என்று  உறுத்தியது. ஆனால், என்று அவன் எவர் வீட்டிற்கும் அழைப்பின் பேரில் சென்றிருக்கிறான்?ஏழைகளை யார் விருந்திற்கு அழைத்திருக்கிறார்கள்? சுதாரித்துக்கொண்டு”வாடா சேது, ஏன் அங்கயே நிக்கற? உள்ள வா” என்றாள்.கிழியாத ஆனால் பழசான எட்டு முழ வேட்டி,சந்தனக் கலரில்  மேல்சட்டை, கைகளில் சிறிய மற்றும் பெரிய பைகள்.கண்கள் மிரள மிரள விழித்தன.ஆனாலும்,ஆதுரத்துடன் அவளைப் பார்த்தன.

‘உம் பொண்ணா ஊசி,அப்டியே உன்னப் பாக்கற மாரி இருக்கு;என்ன பேரு வச்சிருக்க?’

“சேது மாதவி; இவன் புள்ள ஹரிசங்கர்”

‘வாங்கோடா, கண்ணுகளா, மாமாடா நா’ என்று இருவரையும் அணைத்துக் கொண்டான்.கண்களில் கண்ணீர் அவனறியாமல் சுரந்து பெருகியது.வாங்கி வந்திருந்த மாம்பழங்களைக் கொடுத்தான்.

‘ஆத்துக்கார் இன்னமும் ஆஃபிஸிலேந்து வல்லயா?’ என்றான்.

“அவர் டூர் போயிருக்கார் சேது, உக்காரு,காஃபி போட்றேன்”என்றவாறே அவள் உள்ளே போனாள்.எண்ணங்கள் அலைபாய்ந்தன.

இப்போ எதுக்கு வந்திருக்கான்?ஆள் பார்வையாவே இல்லையே? கடன் கேப்பானோ?திருட்ற பழக்கம் இன்னும் இருக்கோ?இந்தக் கொழந்தேளுக்கு சமத்துப் போறாது.கண்ணெதிர்க்கவே அவன் எதையாவது எடுத்து வச்சுண்டாலும் தெரியாது.கைல மூட்ட இருக்கு, டேரா போட்றுவானோ, அவர் வேற ஊர்ல இல்ல.என்ன சொல்லி அவனக் கெளப்பறது.நீண்ட மூச்சு எடுத்து தன்னை அமைதியாக்கிக்கொண்டு அவள் அவனுக்கு மாம்பழத் துண்டுகளும் காஃபியும் கொடுத்தாள். அவன் கவனிக்காத போது ஹாலில் பொருட்கள் ஏதேனும் காணவில்லையா என அவசர அவசரமாகப் பார்த்தாள்.

‘உங்க அம்மா காஃபி ஞாபகம் வரதுடீ.நீ வேலய விட்டுட்டியா என்ன?’ என்றான்.

“ஆமாண்டா, எப்படி இந்த இடத்த கண்டு பிடிச்சே?”

‘உன் ஆஃபீஸ்ல போய்க்கேட்டேன். அவா தான் அட்ரஸ் கொடுத்தா.’

“சேது,நீ என்ன பண்ற?எங்க இருக்க?குடும்பம் இருக்கா? அம்மா எப்டி இருக்கா?”

‘அம்மா போய்ச் சேந்து கனகாலம் ஆய்டுத்து.கெடக்கற வேலயப் பாக்கறேன்.கல்யாணம் ஒண்ணுதான் கொறச்சல் எனக்கு.

“சுமதி, ருக்கு, கணேஷ் சௌக்யமா இருக்காளா?”

‘நன்னாருக்கா.கொழந்த குட்டின்னு செட்டில் ஆயிட்டா.அப்பப்பப் பாப்பேன்.உங்காத்துக்கு வந்து போன ஒட்டோ வொறவோ எனக்கு யார்ட்டயும் இல்லடி.உங்கம்மா இருக்காளே,என்ன ஒன்னுவிட்ட ஓர்ப்படி புள்ளன்னா பாத்தா,வரச்ச எல்லாம் அப்டி கவனிப்போ.எனக்குன்னு மோர்க்கூழ் பண்ணுவோ.எஞ்சுழி,அவளப் படுத்திட்டேன்.’

“அதெல்லாம் இப்ப என்னத்துக்கு? ராத்ரி இங்க சாப்ட்றியா? என்ன பண்ணட்டும்?”

‘உங்கம்மா மாரியே கேக்கற.சாம்பார், ரசம், கூட்டு, கறி எல்லாம் பண்ணு. மாகாளியும், மாவடுவும் இருக்கா.முடிஞ்சா அப்ளம் பொரிச்சுடு.’

“நீ இப்டி கேக்கறதே சந்தோஷமா இருக்குடா.வெண்டக்கா சாம்பார், கத்ரி ஸ்டஃப்ட் கறி, மிளகு ரசம், அப்ளம் இல்ல, வடாம் வறுத்துட்றேன் ஊறுகாயெல்லாமிருக்கு.மாது, சங்கு மாமாவோட பேசிண்டு, வெளயாடிண்டிருங்கோ;அம்மா நிமிஷத்ல வந்துட்றேன்”

கைகள் பரபரவெனெ இயங்கினாலும், காதும், கவனமும் ஹாலில் தான் இருந்தன.அவன் சாப்பாடு மெனு சொன்ன போது நெகிழ்ச்சியாக இருந்தாலும் என்ன ஒரு துணிச்சல், வெக்கமே இல்லாம என்றும் எண்ணம் ஓடியது. மேல் மாடியின் வெட்ட வெளியில் அவள் பார்த்த விளிம்புகள் மடிந்த அந்த வெள்ளை மேகம் இவன் திருடிச் சென்ற அப்பாவின் வெள்ளித்தட்டு போல் தோன்றியதை அவள் வியப்புடன் இப்போது நினைவு கூர்ந்தாள்.அவன் குழைந்தைகளுக்கு ஏதோ விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தான்.

அவளுடைய பிறந்த வீட்டிற்கு அவன் கடைசியாக வந்த நாளை அவள் எப்படி மறப்பாள்?அவளுக்கு அன்று மறுதினம் இரண்டாம் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கப் போகின்றன.கொட்டிலில் கட்டியிருந்த ‘கனகா’விற்கு பிரசவ நேரம்.இடையன் வந்து பார்த்துக்கொண்டிருக்கிறான். அம்மா கனகாவைத் தடவித்தடவி ஏதேதோ சொல்கிறாள்.கால் மாற்றி மாற்றி நின்று பசு தவிக்கிறது.நந்தினி இனம் புரியாத தாபத்தில் முளையிலேயே சுற்றிச் சுற்றி வருகிறது.புண்ணாக்கை ஒரு கை பார்க்கும் கனகா அந்தத் தொட்டியைத் தொடக்கூட இல்லை. மட்டைத் தேங்காயும், உரித்த காயும், சீப்புப் பழமும், வெள்ளிக் குத்து விளக்கில் மின்னும் தீபமும், சரம் சரமாகத் தொடுக்கப்பட்ட மல்லிகை மாலையும் அம்மா ஒரு தாம்பாளத்தில் தயாராக வைத்திருக்கிறாள்.அம்மாவை அப்படி ஒரு தீவிரத்துடன், ஒரு தபசியைப் போல் பார்ப்பதே நெகிழ்த்துகிறது.அவளது கன்னத்திரளில் உருளும் வியர்வை முத்துக்களில் அவளின் மூக்குத்தி ஒளிச் சிதறல்களை அள்ளி வீசுகிறது.அவளை அப்படியே கட்டிக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது.பருத்திக்கொட்டையுடன் வேறு ஏதோ ஸ்பெஷலாகக் கலந்து ஒரு மரத் தொட்டி நிறைய மாட்டிற்கான தீவனம் சற்றுத் தொலைவில் வைக்கப்பட்டிருக்கிறது.இப்போது கூட அம்மாவின் அந்தக் குரல் கேட்கிறது அவளுக்கு.

‘ஹாலுக்குப் போய் படிச்சுண்டே பாத்துக்கோ, கன்னு போட்றச்சே கூப்ட்றேன்.கவனமா இரு.ஜில்லோன்னு எல்லாம் தொரந்திருக்கு’

அவள் போக்குக் காட்டிவிட்டு அங்கேயே சற்று மறைந்து நின்றாள்.முன்னங்கால்களில் முகத்தைப் பதித்துக்கொண்டு கன்று வெளி வருகையில் அம்மா கூப்பிட்டாள். கற்பூரம் ஏற்றிக் காட்டினாள்;அவள் கன்னங்களில் கண்ணீர் முத்துக்கள் வழிந்தோடின.யாருக்குக் குழந்தை பிறந்தது என அதிசயித்தது நினைவு வருகிறது.’லஷ்மி பொறந்திருக்கா’என்ற குரல் அம்மாவின் வழக்கமான குரலில்லை. அதில் ஏதோ விவரிக்க முடியாத ஒன்று இருந்தது.பிறந்ததும் துள்ளிக் குதித்தது கன்று.மாந்தளிரின் பழுப்பு நிறத்தில் மான்களைப் போன்ற விழிகளோடு நெற்றியில் வெள்ளையாக சுட்டி போல அமைப்புடன் இருந்த அதை பசு நக்கித் தீர்த்தது.

சிறிது நேரம் கழித்துதான் சேது வீட்டில் இல்லாதது தெரிந்தது.எப்படியும் ராச்சாப்பாட்டிற்கு வந்துவிடுவான் என நினைத்தார்கள்.தட்டுக்களைச் சாப்பிடுவதற்காகக் கழுவி வைக்கையில் அப்பா சாப்பிடும் வெள்ளித்தட்டு இல்லை.சேது இல்லை, தட்டுமில்லை.கோபமே வராத அப்பாவிற்க்கு அன்று வந்த சினம் அவள் அதுவரை அறியாத ஒன்று.ஓவல் வடிவில் சீரான மழுங்கடிக்கப்பட்ட வளைவுகளோடு ஒரு விரற்கடை ஆழத்தோடு(அம்மாவின் சொற்பிரயோகம்) கீழ்ப்புறத்தில் நான்கு குமிழ்களோடு அது கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ எடை.அவருக்கு மாமனார் கொடுத்த சீதனம்.அவர் போலீஸில் புகார் கொடுத்த அரை மணி நேரத்தில் அவனைத் தட்டோடு பிடித்துவிட்டார்கள்.சொந்தக்காரன் என்பதால் வீட்டிற்கே அழைத்தும் வந்துவிட்டார்கள்.அம்மா அப்போது செய்த காரியம் யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.

‘என்னத்துக்கு இப்ப அவனத் திருடன்னு சொல்றேள்?நான்னா அவனுக்குக் கொடுத்தேன்;ஏன்டா, வாய்ல என்ன கொழக்கட்டையா, சொல்றதுதானே,சித்தி தான் வச்சுக்கோன்னு கொடுத்தான்னு.அடிச்சேளா என்ன,தப்பில்லையா,சரி சரி, உங்க வழிமுற வேற.என்னது,இவர் கம்ப்ளைன்ட் பண்ணாரா?தப்புத்தான்,அவருக்குத் தெரியாம அவர் தட்ட தூக்கிக் கொடுத்தது தப்புதான்.உங்க நேரமெல்லாம் வேஸ்டாப் போச்சு, மன்னிச்சுடுங்கோ’

“அம்மா….. உங்கள மாரியும் இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிட்டோம்.அதுக்கு இந்த தம்பிக்கும் ஐயாவுக்கும் நன்னி சொல்லணும்” காவலர் போய் விட்டார்.

“போடா, தட்ட எடுத்துண்டு போய்டு” என்ற அப்பா,அம்மாவைக் கட்டிக்கொண்டார்.

நினைவுகளிலிருந்து மீண்ட உஷா அனைவரையும் சாப்பிடக் கூப்பிட்டாள்.

‘என் தட்லயே சாப்ட்றேன்’ என்ற சேது அந்த வெள்ளித்தட்டை வெளியில் எடுத்து வைத்த போது உஷாவின் கண்கள் பிதுங்கின.

‘இது என்னோட கடசி சாப்பாடுடி.தேசாந்த்ரியா போப் போறேன்.எத்தனையோ பணக்கஷ்டம் வந்த போதெல்லாம் இத மட்டும் விக்காம வச்சிருந்தேன்.உன்னப் பாத்து உங்க அம்மாவை நெனைச்சுண்டு உங்கையால ஒரு வாய் சாப்டுட்டு இதை உங்கிட்ட சேத்துட்டுப் போலாம்னுதான் வந்தேன்.நான் திருடினேன்டி,சித்தி திருத்தினாடி’

உணவறையின் சட்டகத்தின் வழியே நிலவின் வெண் ஒளிக் கண்ணிகளைத் தாங்கி வெள்ளித்தட்டென அதே வெண் மேகம் இப்போது காண்பதாக உஷாவிற்குத் தோன்றியது.

கடைசிப்பக்கம் – டாக்டர் பாஸ்கரன்

எதிர் மரியாதையும் சுதாமன் குபேர செல்வமும்!

திருமணங்களில் எதிர் மரியாதை செய்வது என்பது ஒரு சாங்கியம்! சம்பந்திக்கு, புடவை, வேட்டி, வெற்றிலைப் பாக்கு, பழம் எல்லாம் வைத்துக் கொடுப்பது ஒரு வழக்கம்! அதுபோலவே, திருமணத்திற்கு வந்திருப்பவர்கள், திரும்பிச் செல்லும் போது, கையில் ஒரு தாம்பூலப் பை கொடுப்பது – அவர் மொய் எழுதியிருந்தாலும் இல்லாவிட்டாலும்! – ஒரு வகையான எதிர் மரியாதை, வந்து வாழ்த்தியதற்கு ‘நன்றி’ கூறுதல்!!  

தாம்பூலப் பைகள், பல வகை – துணிப் பை, காகிதப் பை, அலங்காரக் கைப் பை என. மணமக்கள் பெயர், மண நாள், ஏதாவது சுவாமி படம் அல்லது கூப்பிய கரங்கள், தேங்க் யூ  என பையின் மேல் ப்ரிண்ட் செய்யப்பட்டிருக்கும். சிலர் தங்கள் ‘கெத்’தைக் காண்பிக்கும் வகையில் மிக ஆடம்பரமான தாம்பூலப் பைகளைக் கொடுப்பதுவும் உண்டு! சுவாரஸ்யம் பையின் உள்ளே இருக்கிறது – தேங்காய், வெற்றிலைப் பாக்கு, மஞ்சள் குங்குமம் போன்றவைதான் வழக்கமாக இருக்கும். செலவைக் குறைக்க, தேங்காய் இடத்தில் சின்ன சாத்துக்குடி அல்லது ஒரு ஆரஞ்சு (சீசனுக்குத் தக்கபடி) வைப்பதுவும் உண்டு. வீட்டில் வந்து, அது நார்த்தங்காயா அல்லது வாடிய சாத்துக்குடியா என பட்டி மன்றம் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்! 

சில பைகளில் சாக்லேட்டுகள், திருமண பட்சணம், வளையல் என வித்தியாசமான வஸ்துக்களும் இடம் பெறும்.  மிகத் தெரிந்தவர்கள், உறவினர்களுக்கு ஸ்பெஷலாய் சில பரிசுப் பொருட்களை, தனியான பையில் போட்டுக் கொடுப்பவர்களும் உண்டு – ‘ரிடர்ன் கிஃப்ட்’ – பெண்களுக்குத் தனியாகவும், ஆண்களுக்குத் தனியாகவும் (என்ன உபயோகிப்பார்கள் என யோசித்து) கிஃப்ட் பொருட்கள் கொடுப்பது வழக்கம். இதற்காக எல்லோரையும் தெரிந்த உறவுக்காரப் பெண்மணி ஒருவர் வாசலில் டியூடியில் இருப்பார்!

சஷ்டி அப்தப் பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற விசேஷங்களில், புத்தகங்கள் கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன் – இதை, காரைக்குடி செட்டியார்கள் வீட்டு திருமணங்களில், நிச்சயமாக நடைபெறும் ஒரு வழக்கமாகவே பார்த்திருக்கிறேன்! வாழ்த்துரைகள், பக்திப் பாடல்கள், ஸ்தோத்திரங்கள் அடங்கிய புத்தகங்கள், சுய முன்னேற்றம் பற்றிய புத்தகங்கள், முதுமையில் மகிழ்ச்சி, பகவத் கீதை, மகான்களின் பொன்மொழிகள் இப்படிப் பல தலைப்புகள், நமக்குக் கிடைக்கும்! 

சமீபத்தில் நண்பர் ஒருவருடைய மகள் திருமணத்தில், அருமையான புத்தகம் ஒன்றை, தாம்பூலப் பையுடன் கொடுத்தார்கள் – டாக்டர் டி எஸ்.நாராயணஸ்வாமி தொகுத்திருந்த, ”தெரிந்த புராணம் தெரியாத கதை”என்ற புத்தகம். சுவாரஸ்யமாக இருந்தது!  வாசிக்கும் பழக்கம் தொலைந்து வரும் இந்த நாட்களில், இப்படிப்பட்ட புத்தகங்களைக் கொடுப்பது, வாசிப்பை மீட்டெடுக்கும் முயற்சியாகக் கொள்ளலாம். இரண்டு வயது குழந்தைக்குக் கூட ‘யூ ட்யூபி’ல் கார்டூன் காண்பித்து சாதம் ஊட்டும் பெண்கள் / ஆண்கள் கதை சொல்லி குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கலாம் – இந்தப் புத்தகம் அதற்கு ஒரு நல்ல முன்னோடி என்பேன் நான். இராமாயண, மகாபாரதக் கதைகள் நல்ல வாசிப்பானுபவத்தையும், வாழ்க்கை குறித்த ஒரு நல்ல பார்வையையும் அளிக்க வல்லவை என்பது என் எண்ணம். அதை வளரும் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பது பெரியவர்களின் கடமை!

குசேலசர் கதை நாமெல்லாம் அறிந்ததுதான். இந்தப் புத்தகதில் அந்தக் கதையிலிருந்து:

துவாரகையில் ஶ்ரீகிருஷ்ணனுக்குப் பாத பூஜை செய்யும் ருக்மணி, கண்ணனின் பாதங்களில் வழியும் இரத்தம் கண்டு திடுக்கிட்டு, காரணம் கேட்கிறாள். ”வறுமையில் வாடும் என் நண்பன் சுதாமன் என்னும் குசேலன், என்னைக் காண பசியிலும், உடல் தளர்ச்சியிலும் வாடி வந்துகொண்டிருக்கிறான். அவன் கால்களில் குத்தும் முட்களையும், இரத்தத்தையும்தான் இங்கு நீ காண்கிறாய். அதனால் அவன் கால்களில் முட்கள் தைத்ததை அறியாமல் நடந்து வந்து கொண்டிருக்கிறான்” என்கிறார் ஶ்ரீகிருஷ்ணர்.

குசேலனை நன்கு உபசரித்து, பாத பூஜை எல்லாம் செய்து மகிழ்கிறான் கண்ணன். அவன் கொடுக்கும் அவலில் இரண்டு பிடிகளைத் தின்பதின் மூலம் சகல ஐஸ்வர்யங்களையும் குசேலனுக்கு அளிக்கிறார். மூன்றாவது பிடி அவலை தின்னுமுன், ருக்மணி அதனைத் தடுத்து விடுகிறாள்! எங்கே இருக்கும் மற்ற செல்வங்களையும், தன்னையும், தன் பரிவாரங்களையும் தானமாக்க் கொடுத்து விடுவானோ கண்ணன் என்று தடுத்து விடுவதாகச் சொல்லிவருகிறார்கள் கதை சொல்பவர்கள் – தர்மத்தை, கணவன் செய்யும் தர்மத்தை, அதுவும் மஹாலக்‌ஷ்மியின் அவதாரமான ருக்மணி தடுப்பாளா? என்ற கேள்வி எழுகிறது. ஶ்ரீகிருஷ்ணன் கேட்கும்போது, ருக்மணி, “ ஸ்வாமி, தங்களுக்குச் சமர்ப்பிக்கப்படும் எந்தப் பொருளும் பிரசாதமாகிறது. சுதாமன் அன்புடன் தந்த அவல் அனைத்தையும் தாங்களே சாப்பிட்டு விட்டால், அந்தப் பிரசாதத்திற்காகக் காத்திருக்கும் எனக்கும், தங்களின் பரிவாரத்திற்கும் பிரசாதம் இல்லாமல் போய்விடுமே என்றுதான், மூன்றாம் பிடி அவலை தங்கள் கைகளைப் பிடித்துத் தடுத்தேன்” என்கிறாள்! ருக்மணி தர்மத்தைத் தடுக்கவில்லை – தர்ம பலன் எல்லோருக்கும் கிடைக்கவே அவ்வாறு செய்தாள்!

தன் வறுமை நீங்கியது அறியாமல் சுதாமன், கண்ணனின் கருணையால் பேரானந்தத்தில் இருந்தான். அவன் மனம் சலனமேதுமின்றி இருந்தது. வந்த வழியே நடந்து ஊர் திரும்புகிறான். இதைக் கண்ட ருக்மணி, “அவருக்குத் தெரியாமலே சகல செல்வங்களையும் கொடுத்துவிட்டு, திரும்பவும் வந்த வழியே நடந்து செல்ல வைத்துவிட்டீர்களே?” என்று கேட்கிறாள். அதற்கு ஶ்ரீகிருஷ்ணர் கூறும் விளக்கம் நாம் அனைவரும் உணர்ந்து விளங்கிக் கொள்ள வேண்டிய ஒன்று!  பகவான் சொல்கிறார்: “சுதாமன் வாழ்க்கையில் அமைதியும் ஆனந்தமும் திருப்தியும் நிறைந்திருக்கும் நேரம் இன்னும் சில நாழிகைகளே உள்ளன. வீட்டிற்குச் சென்று குபேர செல்வத்தால் ஏற்படும் ஆசை, பாசம், பேராசை, கர்வம் மற்றும் செல்வத்தை மேலும் சேர்க்க வேண்டும் என்ற பேரவா போன்ற புதிய பிரச்சினைகளால் சுதாமன் வாழ்க்கை முற்றிலும் சுழல ஆரம்பித்துவிடும். அதனால்தான், அவன் அனுபவித்துக் கொண்டிருக்கும் பரமானந்தத்தை சிறிது நேரம் அவனிடம் இருக்க, திரும்பவும் நடந்து செல்ல அனுமதித்தேன்” என்கிறார்.

பக்தியின் பேரானந்ததையும், குபேர செல்வத்தால் ஏற்படும் தீமைகளையும் எளிமையாகச் சொல்கிறார் ஶ்ரீகிருஷ்ணர். 

இப்படி 31 புராண, இதிகாசக் கதைகள் உள்ளன – வாசிக்க வேண்டிய புத்தகம். இதில் வரையப்பட்டுள்ள கோட்டோவியங்கள் மிகச் சிறப்பு (ஓவியர் ஜே.பாலாஜி)!  தாம்பூலப் பைகளில் இப்படிப்பட்ட புத்தகங்கள் கொடுப்பதை வரவேற்கிறேன் – வாசிப்பது அவரவர் விருப்பம்!

(தெரிந்த புராணம் தெரியாத கதை – டாக்டர் டி எஸ் நாராயணஸ்வாமி. LKM Publication, Chennai 600 017.  Phone : 24361141).