1939 மற்றும் 1979-ம் ஆண்டுகளில் வெளியான அத்தி வரதர் 01/07/2019 மீண்டும் நமக்கு அருள்பாலிக்க ஜூலி 1, 2019 அன்று வந்திருக்கிறார்.
அத்திவரதர், ஜூலை 1 லிருந்து 48 நாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்..
காஞ்சிபுரம் ஶ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தில் அனந்தசரஸ் என்ற திருக்குளம் இருக்கிறது.
இந்த திருக்குளத்திற்குள் அத்திவரதர் பெருமாள் நிரந்தரமாக வாசம் செய்கிறார்.
இவர் அத்தி மரத்தால் ஆனவர். இந்த சிலையை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து, பூஜைகள் செய்து, ஒரு மண்டல காலம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைப்பது வழக்கம்.
இறுதியாக கடந்த 1979-ம் ஆண்டு அத்திவரதர் சிலை பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளின் ஆதி மூர்த்தம்தான் அத்தி வரதர். தற்போது நாம் கருவறையில் தரிசிப்பது வரதராஜப் பெருமாள் என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் அவர் பழைய சீவரம் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட தேவராஜப் பெருமாள்தான்.
இந்தக் கோயிலின் ஆதி மூர்த்தியான அத்தி வரதர் பிரம்ம தேவரால் உருவாக்கப்பட்டவர்.
அவர்தான் திருக்குளத்தில் வாசம் செய்வதுடன், 40 வருடங்களுக்கு ஒருமுறை வெளியில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.
அத்தி வரதரின் புராண வரலாற்றை இங்கே தெரிந்துகொள்ளலாமே.
ஆதியில் சிருஷ்டியை மேற்கொண்ட பிரம்மதேவர், தனது காரியம் செவ்வனே நடைபெற காஞ்சியில் ஒரு யாகம் செய்தார்.
தன்னை அழைக்காமல் யாகம் செய்த பிரம்மதேவரிடம் கோபம் கொண்ட சரஸ்வதி தேவி, யாகத்துக்கு வரவில்லை.
சரஸ்வதி தேவி இல்லாமல் பிரம்மதேவரால் யாகத்தைப் பூர்த்தி செய்ய முடியாது. எனவே, பிரம்ம தேவர் சரஸ்வதி தேவிக்குப் பதிலாக காயத்ரி, சாவித்திரி ஆகியோரின் துணையுடன் யாகத்தைத் தொடங்கினார்.
சினம் கொண்ட சரஸ்வதி தேவி, பிரம்மதேவரின் யாகசாலையை அழிக்க வேகவதி ஆறாக மாறி வெள்ளப்பெருக்கெடுத்து வந்தாள்.
பிரம்மதேவரின் யாகத்தைக் காக்கத் திருவுள்ளம் கொண்ட திருமால், நதிக்கு நடுவில் சயனக் கோலம் கொண்டார்.
வெட்கிய சரஸ்வதி தேவி தன் பாதையை மாற்றிக்கொண்டாள்.
பிரம்மதேவரின் யாகமும் நிறைவு பெற்றது.
தனக்காக வந்து யாகத்தைக் காத்த பெருமாளின் கருணையை எண்ணி நெகிழ்ந்த பிரம்மதேவர், பெருமாளைப் பணிந்து தொழுதார்.
தேவர்களும் பெருமாளை வணங்கி வரங்களைக் கேட்டனர். அவர்கள் விரும்பிய எல்லா வரங்களையும் கொடுத்ததால், பெருமாள், `வரதர்’ என்ற திருப்பெயர் கொண்டார்.
ஒரு சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் பெருமாள் தேவர்கள் அனைவருக்கும் புண்ணியகோடி விமானத்தில் சங்கு, சக்கரம், கதை தாங்கிய திருக்கோலத்தில் காட்சி தந்தார்.
எனவே, அதே நாளில் பிரம்ம தேவர், தனக்கு தரிசனம் தந்த பெருமாளின் திருவடிவத்தை அத்தி மரத்தில் வடித்து வழிபட்டார்.
இப்படித்தான் அத்தி வரதர் மண்ணுலகில் எழுந்தருளினார்.
பிரம்மதேவரால் உருவான அத்திமர வரதராஜரை தேவலோக யானையான ஐராவதம் தனது முதுகில் சுமந்தது. பின்னர் ஐராவதம் சிறு குன்றாக உருமாறி அத்தி (யானை)கிரி, வேழமலை என்று பெயர் பெற்றது.
அத்திகிரியில் எழுந்தருளிய பெருமாள் ஞானியர்களுக்கும் தேவர்களுக்கும் வேண்டும் வரங்களை வேண்டியபடியே அருள்புரிந்து வந்தார்.
பின்னர் ஒருமுறை பிரம்மதேவர் அத்தி வரதரை முன்னிருத்தி ஒரு யாகம் செய்தார்.
யாகத் தீயின் காரணமாக அத்தி வரதர் பின்னப்பட்டுவிட்டார். பிரம்மதேவர் பதறிப் போனார்.
வேறு எந்த வடிவத்திலும் பெருமாளை உருவாக்க முடியாத சூழலில், பிரம்மா திருமாலை வேண்டினார்.
அவருடைய ஆலோசனையின்படி, அத்தி வரதரை, கோயிலிலுள்ள நூற்றுக் கால் மண்டபத்துக்கு வடக்கிலுள்ள இரண்டு திருக்குளங்களில் தென் திசையிலுள்ள நீராழி மண்டபத்துக்குக் கீழே உள்ள மற்றொரு மண்டபத்தில் வெள்ளிப் பேழையில் சயனக் கோலத்தில் வைத்தார்.
யாகத்தீயில் உஷ்ணமான பெருமான், கலியுகம் முழுக்க இந்த அமிர்தசரஸ் எனும் ஆனந்த புஷ்கரணி திருக்குளத்தில் குளிர்ந்த நிலையில் இருப்பார் என்றும், இதனால் எந்தக் காலத்திலும் இந்தத் திருக்குளம் வற்றாது என்றும் பிரம்மதேவருக்குச் சொல்லப்பட்டது.
அத்தி வரதர் திருக்குளத்துக்கு அடியே சென்றதும், பழைய சீவரம் என்ற ஊரில் இருந்த தேவராஜப் பெருமாள் அத்திகிரிக்கு அருள வந்தார்.
பிரம்மதேவருக்குப் பெருமாள் கட்டளையிட்டபடி, 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்து நீரை எல்லாம் இறைத்து விட்டு பெருமாள் மேலே எழுந்தருளுவார்.
சயன மற்றும் நின்ற கோலமாக 48 நாள்கள் பக்தர்களுக்கு வரதர் சேவை சாதிப்பார்.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறையே இவரைத் தரிசிக்க முடியும் என்பதால் அப்போது பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
வாழ்வில் ஒருமுறையேனும் இவரை தரிசிப்பது மோட்சத்தை அளிக்கும் என்பார்கள்.
இரண்டாவது முறை யாரேனும் தரிசித்தால் வைகுந்த பதவி பெறுவார்கள் என்பதும் ஐதீகம்.
மூன்று முறை தரிசித்த மகா பாக்கியவான்களும் சிலருண்டு