நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.
- கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018 .
- இட்லி மகிமை – ஏப்ரல் 2018
- தோசை ஒரு தொடர்கதை – மே 2018
- அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
- ரசமாயம் – ஜூலை 2018
- போளி புராணம் – ஆகஸ்ட் 2018
- அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
- கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018
- கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
- சேவை செய்வோம் – டிசம்பர் 2018
- பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
- பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
- வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019
- பாயசப் பாமாலை – ஏப்ரல் 2019
- ஊறுகாய் உற்சாகம் – மே 2019
- பூரி ப்ரேயர் – ஜூன் 2019
- இனிக்கும் வரிகள் !
இனிப்பில் ஆயிரம் வகையுண்டு – எங்கள்
இல்லத்தில் இனிமை என்றுமுண்டு.
ஒன்றா இரண்டா எடுத்தியம்ப – அணி
அணியாய் வந்திடும் – ஒரு கணக்குமில்லை.
மைசூர் பெயரை தாங்கினாலும் – மைசூர் பாக்
எங்கள் இனிப்பு வகை.
ஜாங்கிரி என்று சொன்னாலும் – அது
கரைந்து போவது எம் வாயினிலே.
பல மொழி பேசும் மனிதருண்டு – ஆயின்
பாரதம் முழுதும் லட்டு உண்டு.
பல வகை மனிதர்கள் சேர்ந்ததுபோல் – இங்கே
லட்டிலும் பல்சுவை உண்டு உண்டு.
வாயில் கரையும் பயத்தம் லட்டு – சற்றே
பொற பொற எனும் ரவா லட்டு உண்டு.
முத்துமுத்தாய் உதிரும் பூந்தி லட்டு – வட
நாட்டினர் வழங்கிய லட்டு உண்டு.
அதிரசம் என்ற இனிப்பு வகை – அதை
மெல்ல ஆயிரம் கதை சொல்லும்.
அட சின்ன சின்ன எள்ளுருண்டை – அது
இனிப்பில் ஹைக்கூ பாடிடுமே.
பாதுஷா என்றால் பாதுஷாதான் – அது
இனிப்புக் குவியலின் அரசன்தான்.
பர்பி என்றொரு இனிப்பு வகை – அதில்
எண்ணிக்கையில்லா விதமுண்டே.
அல்வாவுக்கென்றே தனிக்கவிதை – இனி
பாடி வருவேன் ஒரு நாள்தான்.
பால்கோவாவும் திரட்டிப்பாலும் – புகழ்
பாட்டிலும் ஏட்டிலும் அடங்கிடுமோ ?
இன்னும் இன்னும் என்று எத்தனையோ.
இனிப்புகள் இங்கே உண்டன்றோ !
எத்தனை இனிப்புகள் இருந்தாலும் – என்
அன்னையின் நினைவே பெரிதன்றோ !