( சில தவிர்க்க முடியாத காரணத்தால் சென்ற மாதம் எமபுரிப்பட்டணம் வெளிவரவில்லை. அதற்காக மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறோம்.)
(முதல் பகுதியின் இரண்டாம் பாகம்)
காலத்தை நிர்ணயிக்கும் சூரிய மண்டலத்திலும் காலம் கடந்து சென்றுகொண்டே இருக்கும் என்பது நியதி.
சூரியனை ஒரு நியதிக்குள் கட்டிப்போட முடியுமா ? அகில உலகத்திற்கும் காலத்தை நிர்ணயிக்கிற சூரியதேவனை நியதிகள் கட்டுப்படுத்துமா? சூரியதேவனின் பெருமைகள் என்ன?
வசிஷ்டர் வாயாலே சொன்ன வார்த்தைகளைப் பார்ப்போமா?
“உதிக்கும் போதே உலகைத் தம் கிரணங்களால் இருள் இல்லாததாகச் செய்கிறாரோ அவரை விட உயர்ந்தவர் வேறு ஒன்று இருக்க முடியுமோ?
எவரை எல்லாரும் பிரத்யக்ஷமாக நேரில் பார்க்கிறார்களோ அவரே தேவர்களுக்கும் மேலானவர்.
ஆதியும் அந்தமும் மட்டுமல்ல அழிவும் இல்லாதவர் அவர்.
மூவுலங்களையும் தன் கிரணங்களால் பிரகாசப்படுத்தி சஞ்சாரம் செய்து வருகிறவர்.
சர்வ ஜகத்திற்கும் அவரே அதிபதி.
சகல தர்மங்களுக்கும் சாட்சியாக அவரே விளங்குகின்றார்.
அவரே சகல ஜீவங்களுக்கும் ஆத்மாவாக இருக்கிறார்.
அக்னியில் ஹோமம் செய்யப்படும் பொருள்கள் அனைத்தும் ஆதித்தன் என்ற அவரையே வந்தடைகின்றன.
அவரிடமிருந்து மழை உண்டாகிறது. மழையிலிருந்து அன்னம் விருத்தியாகிறது. அன்னத்தால் பிரஜைகள் ஜீவிக்கிறார்கள். சூரியனிடமிருந்து உண்டான இந்த உலகம் அவரிடமே அடங்குகிறது.
க்ஷணம் , முகூர்த்தம், பகல், இரவு, பக்ஷம், மாதம், ருது, வருஷம் என்ற காலப்பிரமாணங்கள் எல்லாம் அவரிடமிருந்தே உண்டாகின்றன. காலத்திற்கு சூரியனே காரணமாக இருக்கின்றார்.
சூரியனுக்குச் சாமான்யமாகப் பன்னிரண்டு பெயர்கள் உண்டு.ஆதித்யன், சவிதா, சூரியன், மிஹிரன், ஆர்க்கன், பிரபாகரன், மார்த்தாண்டன், பாஸ்கரன், பானு, சித்திரபானு, திவாகரன், ரவி என்பவையே அவை. விஷேஷமானப் பெயர்களும் உண்டு. விஷ்ணு, தாதா, பாகான், பூசா, மித்திரன் , இந்திரன், வருணன், எமன், விவஸ்வான், அம்ஸுமான், த்வஷ்டா , பர்ஜன்யன் என்பவையே அவை. இந்த விஷேஷப் பெயர்களிலேயே அவர் ஒவ்வொரு மாதஇத்திலும் ஒருவராக இருந்து உதயத்தையும் அஸ்தமனத்தையும் செய்கிறார்.
சிருஷ்டி, ஸ்திதி, லயம் என்ற மூன்று காலங்களிலும் இருந்து அக்காரியங்களைத் தாமே செய்வதால் அவருக்கு த்ரைகாலர் என்ற பெயரும் உண்டு.” ( * விஷ்ணு புராணம்)
இப்படிக் காலத்திற்கே காரணமாக இருந்தாலும் காலத்திற்கு அவரும் கட்டுப்படவேண்டும் என்பதே அவரே வகுத்த நியதி.
அந்தக் காலம் தந்த மாற்றத்தை சூரியன் மகிழ்ச்சியாக உணர ஆரம்பித்ததே ஸந்த்யாவின் வருகைக்குப் பிறகே. அவளுடன் இருக்கும் ஒவ்வொரு க்ஷணமும் தான் வேகமாகப் ஃப்;ஓவது போன்ற உணர்வினால் காலம் விரைவாகப் போகிறதோ என்ற எண்ணம் அவனுக்கு எப்பொழுதும் உண்டாகும். அவளுடன் இருக்கும் காலப் பொழுதை என் அப்படியே நிறுத்தி வைத்துவிடக் கூடாது? என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றுவதுண்டு. ‘தாம் தானே காலத்துக்கு அதிபதி. தம்மால் அப்படிச் செய்ய முடியாதா?’ என்றும் அவன் பலமுறை யோசிப்பதுண்டு. அதைவிடக் கொடுமை என்னவென்றால், ஸந்த்யாவிடமிருந்து தாற்காலிகமாகப் பிரியும் ஒவ்வொரு பொழுதும் அவனுக்கு அவன் அமைத்த காலத்தின் கொடுமையை அவனையே உணர வைத்தது.
இப்பொழுதும் ஸந்த்யாவின் நினைவில் தன்னைத் திளைத்து அருணன் இயக்கும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியதேவன் அகில உலகங்களையும் சஞ்சாரம் செய்துகொண்டிருந்தான். அருணனும் தன் தலைவன் எண்ணப்படி அழகாகத் தேரைச் செலுத்தி உலகில் உள்ள எல்லா இடங்களிலும் சூரியனின் கிரணங்கள் படும்படி செய்து கொண்டிருந்தான்.
அப்போது திடீரென்று தனக்கு மிக அருகில் ஒரு பறவை பறந்து வருவதைப் பார்த்துத் திடுக்கிட்டான். சூரியன் பாதையில் யாரும் குறுக்கிடக்கூடாது. குறுக்கிடவும் முடியாது. யாராக இருந்தாலும் சூரியனின் பிரபாவத்தில் எரிந்து சாம்பலாகிவிடும். தன் பயணத்திற்கு எந்தவித இடையூறும் இருக்காது என்பது அருணனுக்கு நான்கு தெரியும். ஆனால் அந்தப் பறவை சூரியனின் சுடு கிரணங்களைகிக் கொஞ்சமும் லட்சியம் செய்யாது இன்னும் அருகில் மிக வேகமாகஃப் பறந்து வர ஆரம்பித்ததைப் பார்த்த அருணன் அந்தப் பறவையைப் பற்றிய கவலையை விட்டுவிட்டுத் தங்கள் பயணத்தில் தடை ஏற்படுமோ என்று கவலைப்பட ஆரம்பித்தான்.
செம்மண் நிற இறக்கைகளைக் கொண்டு நடுப்பகுதியில் வெண்மையாக இருக்கும் அப்பறவை தன் பெரிய திருவடிகளால் தன்னயோ ரதத்தையோ தாக்க முற்பட்டால் என்னாவது என்ற கவலை அவனுக்கு முதன்முறையாக உதிக்க ஆரம்பித்தது.
சூரியதேவனோ எதையும் யோசிக்கும் எண்ணமில்லாதவனாக மயக்க நிலையில் இருந்தான். காலையில் ஸந்த்யா கூறிய வார்த்தைகள் அவன் காதிலேயே ஒலித்துக் கொண்டிருந்தன. ” நேரம் மிக அருகில் வந்துவிட்டது ” . இதோ இன்னும் சற்று நேரத்தில் அவளைச் சந்திப்போம் என்ற உல்லாச உணர்வு அவன் கிரணங்களில் பிரதிபலித்தது. அவன் கண்கள் அரைவாசி மூடி அதனால் உலகில் சில பகுதிகளுக்கு குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு முன்னதாகவே இருள் வர ஆரம்பித்தது.
இதனால் அருணனின் பணி இன்னும் கடினமாகியது. தேரைச் செலுத்தவேண்டும். சூரியதேவனின் மயக்க நிலையைக் கலைக்காமல் தேரைச் செலுத்தவேண்டும். வருகின்ற ஆபத்தையும் சமாளிக்கவேண்டும். இரு கால்களும் இல்லாத அருணன் ஒரே தேர்ச் சக்கரத்தைக் கொண்ட சூரியனின் ஏழு குதிரையில் பூட்டிய ரதத்தைச் செலுத்துவதில் மிகவும் திறமைசாலி. ஆனால் இதுவரை அவனுடைய பாதையில் யாரும் குறுக்கிட்டதாகச் சரித்திரம் கிடையாது. இப்போது வரும் அந்தப் பறவை ஏதாவது அசுரனாக இருக்கவேண்டும். இல்லையென்றால் சூரியனின் பகைவனான ராகுவால் ஏவப்பட்ட ஒன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்தான்.
அதைத் தாக்க எந்த ஆயுதத்தைப் பயன்படுத்தலாம் என்று அருணன் ஒரு கணம் யோசித்தான். அது தூரத்தில் இருக்கும் போதே எரி அம்பு விட்டு அதை அழித்து விடலாமா என்று நினைத்தான். யார் என்று தெரியாமல் அதனைக் கொல்ல அவனது மனம் இடம் கொடுக்கவில்லை. ‘சரி, அருகில் வரட்டும்.யார் அது என்று தெரிந்துகொண்டு எதிரியாக இருந்தால் நெருப்பாற்றை அதன் மீது ஏவி உருத் தெரியாமல் எரித்துவிடலாம்’ என்று நம்பிக்கையுடன் காத்திருந்தான்.
அந்தப் பறவை அருகில் வரும் சத்தம் சூரியனால் ஏற்படுத்தப்பட்ட இடியைவிடப் பயங்கரமாக ஒலித்தது. ஆனால் அது சூரியதேவனின் காதுகளில் விழவில்லை. காலையில் ஸந்த்யா சொன்ன வார்த்தைகளை அவன் முணுமுணுத்துக் கொண்டிருந்தான். கிட்டத்தட்ட மயங்கிய நிலையில் இருந்தான்.
ஆனால் அருணன் சற்றும் எதிர்பார்க்காத நிகழ்வு நடந்தது. சிறியதாக வந்த அந்தப் பறவை திடீரென்று ரதத்தைவிடப் பெரிய வடிவம் எடுக்க முடியும் என்று அவன் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. அவன் பிரயோகித்த நெருப்பு ஆற்றையும் அது பன்னீர் தெளித்து போல உதறிவிட்டதைக் கண்ட அருணன் ஆச்சரியத்தில் மூழ்கினான். எப்போதும் பின்வாங்காத சூர்யாஸ்திரத்தை பிரயோகிக்க வேண்டியதுதான் என்று புறப்பட்டவன் அந்தப் பறவையின் கால்களைக் கண்டதும் கோபத்திற்குப் பதில் சந்தோஷத்தில் திளைத்தான்.
“அடேடே ! பெரிய திருவடியா? நீயா என்னை பயமுறுத்தினாய்? உன் குறும்பு இன்னும் உன்னைவிட்டுப் போகவில்லையா? ” என்று வினவினான்.
“ஆம் அண்ணா! தங்கள் தம்பி திருவடி தான் வந்துள்ளேன். நீங்கள் என்னை பெரிய திருவடி என்று சொல்லலாமா? “
” சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நீ பெரிய திருவடிதான். மகாவிஷ்ணுவிற்கே வாகனமாகும் பாக்கியம் உனக்குக் கிடைத்திருக்கிறதே! அது சரி! ஏன் இப்படி தலை தெரிக்க பறந்து வருகிறாய்? ஏதெனும் முக்கியச் சேதி யாருக்காவது கொண்டு செல்கிறாயா, என்ன?”
“ஆம் அண்ணா! உன் தலைவருக்குத் தான் நல்ல சேதி கொண்டு வந்துள்ளேன். அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்திருக்கின்றன. சந்த்யாதேவி அவரிடம் தெரிவிக்கும்படி கூறினார்கள்” என்றான்.
“ஆஹா! காலையிலிருந்து சூரியதேவர் ‘ நேரம் வந்துவிட்டது’ என்று முணுமுணுத்துக் கொண்டே இருக்கிறார். உண்மையில் அனைவரும் நல்ல நேரம் வந்துவிட்டது. இந்த நல்ல செய்தியை நீயே அவரிடம் சொல்வாயாக!” என்றான் அருணன்.

தலைவர் அவர்களே! இங்கு குழுமியிருக்கும் நான் வணங்கும் தெய்வங்களே! உங்கள் அனைவரையும் தொழுது வணங்கி என் தலைப்பிற்கான வாதத்தை உங்கள்முன் பணிவன்போடு சமர்ப்பிக்கிறேன்.
முதலில் இந்த எமபுரிப்பட்டணத்திற்கு வந்து பேசவேண்டும் என்று கேட்டபோது நமது ஆயுட்காலம் முடிந்துவிட்டது என்ற எண்ணத்திற்கு வந்தேன். தலைவர் அவர்களும் , ராஜா அவர்களும் லியோனி அவர்களும் வருகிறார்கள் என்று சொன்ன பிறகு கூட நான் ஒப்புக்கொள்ளவில்லை. கடைசியாக அவர்கள் ஓர் ஆயுதத்தைப் பயன்படுத்தியபோது என்னால் மறுக்க முடியவில்லை. நீ அங்கு வந்தால் உன் முன்னோர்களை மட்டுமல்ல நம்மை விட்டு மறைந்து சென்ற மேதைகள் – காந்தியடிகள், காமராஜர் ஐயா, அண்ணா அவர்கள், எம் ஜி ஆர் அவர்கள், கருணாநிதி அவர்கள், ஜெயலலிதா அவர்கள் அனைவரையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறினார்கள்.
எனக்கு ஜெயலலிதா அவர்களிடம் பேசி அவர்கள் இறப்பிற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆசை ! அந்த ஒரு காரணத்திற்காக நான் இங்கு வர ஒப்புக்கொண்டேன்.
அதைவிட ஒரு முக்கியமான காரியம் இருக்கிறது. நான் ஒரு படைப்பாற்றல் பெண்மணி. படைப்பும் பெண்மையும் எப்போதும் இணைந்தே இருக்கும். ஐயா கூறியதுபோல சோற்றை ஆக்குபவளும் பெண்தான். பிள்ளகளை ஆக்கித் தருபவளும் பெண்ணே! நல்ல சமுதாயத்தை உருவாக்கித்தருபவளும் பெண்ணே! இப்படி ஆக்கலுக்கு உருவகமாக இருக்கும் பெண்ணின் பிரதிநிதியான நானே இங்கு பேச மறுத்தல் நியாயமன்று என்று உணர்ந்ததால் இங்கு வர ஒப்புக்கொண்டேன்.
ஆக்கல், காத்தல், அழித்தல் இவை மூன்றில் எது சிறந்தது என்பது இந்த விவாதமேடையின் முன் வைக்கப்பட்டிருக்கும் கேள்வி. அந்தக் கேள்வியை ஒட்டி நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். ஆக்கல் என்ற ஒன்று இல்லாவிட்டால் இவர்கள் எதைக் காப்பார்கள்? எதை அழிப்பார்கள்?
ஒரு ஆணியும் பிடுங்க முடியாதல்லவா?
அதனால் தான் உறுதியிட்டுக் கூறுகிறேன். ஆக்கலிற் சிறந்தது வேறொன்றும் இல்லை.
இன்னொன்று சொல்கிறேன் கேளுங்கள்! நம் எல்லோருக்கும் தெரிந்தவர் தெய்வப் புலவர் கம்பர் அவர்கள். படைப்பாற்றல் மிக்கவர். அவரது கம்பராமாயணம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நின்று எல்லோராலும் போற்றப்படுகிறது. இருந்தும் சிலர் கம்பராமாயணத்தைப் பிடிக்காமல் அதை எரித்து அழிக்கவும் முற்பட்டிருக்கிறார்கள். இப்பொழுது சொல்லுங்கள்! இவர்களில் யார் சிறந்தவர்? இராமாயணத்தை எழுதிய கம்பரா? அல்லது அதை இவ்வளவு காலம் காட்டிக் காத்த மக்களா? அல்லது அதை எரிக்க முற்பட்ட முற்போக்குச் சிங்கங்களா? கம்பர் தான் சிறந்தவர் என்பதை நிரூபணம் செய்யவேண்டுமா? அதற்கு ஒரு பட்டி மன்றமோ விவாத மேடையோ தேவையா என்ன ?
எதையும் ஆக்குபவன்தான் உயர்ந்தவன்.
மண்ணை எடுத்து சட்டி செய்கிறானே குயவன் அவன்தான் உயர்ந்தவன். வாங்கி அடுக்குபவன் அல்ல. உடைத்து நொறுக்குபவனும் அல்ல.
கல்லை எடுத்து சிலைகள் வடிக்கும் சிற்பி
தூரிகை கொண்டு ஓவியம் வரையும் ஓவியன்
மரத்தை அறுத்து மாளிகை கட்டும் தச்சன்
பொன்னை உருக்கி நகைகள் செய்யும் கம்மான்
இரும்பை வளைத்து ஆயுதம் செய்யும் கொல்லன்
ஏரை ஓட்டி நெல்லை ஆக்கும் உழவன்
அந்த நெல்லை சமைத்து சோற்றை ஆக்கும் தாய்
மகனைப் பள்ளியில் சேர்க்கும் தந்தை
பாடம் சொல்லித் தரும் ஆசான்
தொழிலைத் துவங்க முதலைப் போடும் முதலாளி
உழைப்பைத் தந்து உற்பத்தி பெருக்கும் தொழிலாளி
இப்படி அத்தனை பேரும் ஆக்கல் கதையின் நாயகர்கள். மற்றவர்கள் எல்லோரும் துணைக் கதாநாயகர்கள் காமெடியன்கள் அல்லது வில்லன்கள்.
ஆக்கள் நாயகன் தான் ஆக்சன் நாயகன் . ரஜினி மாதிரி சூப்பர் ஸ்டார். மற்றவர்கள் எல்லோரும் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, ராதாரவி ,நம்பியார் போன்றவர்கள்.
இன்னொரு உதாரணத்திற்கு வருவோம்.
ஒரு மாநிலத்திற்கு முதல்வர் முக்கியமா? கவர்னர் முக்கியமா ? எதிர்கட்சித் தலைவர் முக்கியமா?
குறுக்கிட்ட நடுவர் சாலமன் பாப்பையா ,” பாரதி அம்மா இங்கு வர்ரதுக்குமுன் புதுச்சேரி பக்கம் போய்விட்டு வந்தீகளா?” என்று வினவினார்.
நடுவர் அவர்களே! புதுச்சேரி சென்று வந்தது உண்மைதான். அங்கே அரவிந்தர் என்ற ஆக்கல் புருஷரைத் தரிசிக்கச் சென்றிருந்தேன்.
தொடங்கிய பிரச்சினைக்கு வருவோம். முதல்வர் தான் ஒரு மாநிலத்துக்கு முக்கியம் என்பதை ரூம்ஸ் போட்டு மீம்ஸ் போட்டுத் திரியும் இளைஞர்களூம், வாட்ஸ் அப்பில் மூழ்கிக் கிடக்கும் மூத்தகுடிகளும், பேஸ்புக், ட்விட்டர் இவற்றில் மூழ்கியிருக்கும் நெட்டிஜன்களும் சீரியல்களில் தத்தளிக்கும் பெண்மணிகளும் ஒப்புக்கொள்வர்.
அதைப்போலத்தான் ஆக்கலே சிறந்தது என்று கூறி வாய்ப்பளித்த எமபுரிப்பட்டணவாசிகளுக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்
(தொடரும்)