இது தொற்று வியாதியா? பரம்பரை வியாதியா?
மாலை ஏழு மணியிருக்கும் – மூன்று தலைமுறையைச் சேர்ந்த மூன்று பெண்கள் – மாமியார், மருமகள், பெயர்த்தி – என் கிளினிக் வந்தார்கள்.
நான்கு வயதுப் பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டிருந்தார் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க மருமகள்! சுமார் ஐம்பது வயதுக்கருகில் இருந்த மாமியார் முகம் கொஞ்சம் சோர்ந்திருந்தது!
மகளின் மூக்கில் சளியுடன், புண்ணாகிப் போயிருந்த மூக்கு நுனியைக் கையில் வைத்திருந்த ‘வெட்’ டிஷ்யூ பேப்பரால் பட்டும் படாமலும் ஒற்றித் துடைத்துக் கொண்டிருந்தார் மருமகள்.
எனக்கு வலது பக்கம் ஸ்டூலில், மாமியாரும், எதிரில் நாற்காலியில் மருமகள் தன் மகளுடனும் அமர்ந்தனர்.
என்ன என்பதைப்போல் நான் பார்க்க, “அம்மாவுக்குதான்” என்றார் மருமகள்.
கைகளிலும், கால்களிலும் வெடிப்பும், ஆங்காங்கே ‘சொர’ ‘ சொர’ என்ற தோலும், கை மருந்தாகத் தடவிய பச்சைக் களிம்பின் மிச்சம் மீதியும் என்னைப் பார்த்து முறைத்தன.
“ம், எவ்வளவு நாளா இருக்கு?”
“கொஞ்ச நாளாவே இருக்கு”
“ஒரு இரண்டரை நாளா இருக்குமா?” – தோராயமாகக் கூட எப்போதிருந்து என்று சொல்லாதவர்களுக்கு என் பொதுவான கேள்வி இது!
சிரிப்பும், கடுப்புமாய் ஒரு முக பாவத்துடன், “ரெண்டு, மூணு வருஷமாய் இருக்கு!”
“எப்படி ஆரம்பித்தது?”
“தெரியலை. தண்ணீல நிற்கறதாலயும், பத்து பாத்திரம் தேய்க்க ………. யூஸ் பண்ணறதாலயும் வரதுன்னு நெனச்சேன். அப்பொப்ப புண்ணாயிடும். எரிச்சலும், வலியும் படுத்தும்”
“சுகர் உண்டா?”
“கிடையாது. போன வாரம்தான் செக் பண்ணினேன்”
“மேல என்ன பூசினீங்க?”
“வெறும் தேங்காய் எண்ணைதான் – நேத்திக்குதான், வீட்டு செர்வண்ட் மெய்ட் மஞ்சளும், வேப்பிலையும் அரைத்துப் போட்டாள்”
“சந்தோஷம். வீசிங், டஸ்ட் அலர்ஜி ஏதேனும் உண்டா?”
“அதெல்லாம் ஒண்ணும் கிடையாது சார் – இந்தக் கை,கால் அலர்ஜிதான் ,அரிச்சு திரும்பத் திரும்ப கிளைச்சிக்கறது”
நீண்ட நேரம் தண்ணீரில் வேலை செய்பவர்களுக்கு வரக்கூடிய ‘இரிடண்ட்’ டெர்மடைடிஸ் – உடன் பாத்திரம் தேய்க்க உபயோகிக்கும் சில பொடிகளால் வரும் ‘கான்டாக்ட் டெர்மடைடிஸ்’, அதன் மேல் வரக்கூடிய பாக்டீரியல் / பூஞ்சை தொற்று – எல்லாமாகச் சேர்ந்து வரக்கூடிய கரப்பான் வகைத் தோல் வியாதி இது. கூடியவரை கை கால்களை ஈரமில்லாமல் வைத்துக்கொள்வது (’எப்படியாம்?’ என்று என்னை முறைக்கும் மகளிர், காய்ந்த கைப் பிடித் துணியையோ, அணிந்திருக்கும் நைட்டியையோ உபயோகித்து அவ்வப்போது துடைத்துக் கொள்ளலாம், துணி கிளவ் உபயோகிக்கலாம் – அல்லது அலர்ஜியே இல்லாமல், நியூஸ் பேப்பர், முகநூல் போன்றவற்றில் குனிந்தபடி மூழ்கியிருக்கும் கணவரை பாத்திரம் கழுவுதல், புளி கரைத்தல் போன்ற சின்ன சின்ன வேலைகளைச் செய்யச் சொல்லி, உங்கள் கையை ‘டிரை’யாக வைத்துக் கொள்ளலாம்!), ‘மாய்சரைசிங் லோஷன்களை உபயோகிப்பது, அலர்ஜிக்கும் பொடி, திரவங்களை தவிர்ப்பது போன்ற வழிகளை ஆராயலாம்!
போதிய அறிவுரைகளைச் சொல்லி, மருந்து மாத்திரைகளுடன் மாமியாரை அனுப்பிவைத்தேன். வெளியே சென்ற மருமகள், குழந்தையுடன் தான் மட்டும் தனியே திரும்ப உள்ளே வந்தார். குழந்தையின் மூக்கைத் துடைத்தவாறே, என்னைப் பார்த்து, ‘ சார், அம்மாவுக்கு வந்திருப்பது ‘ஒட்டுவார் ஒட்டி’ இல்லையே? ‘ என்றார் கவலையுடன்.
“இல்லையம்மா” என்றேன்.
“அதுக்கு இல்லே, குழந்தைக்கும் நாலு நாளா இப்படிப் புண்ணாகிறது – மூக்கு, மேல் உதடு, கை, தொடை ன்னு எல்லா இடத்துலேயும் வருகிறது. அம்மாகிட்டேந்து வந்திருக்குமோன்னு ஒரு கவலை”
“அதற்கான வாய்ப்புகள் குறைவு. இது குழந்தைகளுக்கு வரக்கூடிய சாதாரண புண் – இம்பெடைகோ – சரியாகக் குளிப்பாட்டாததனாலயும், மூக்கு சளியை ஈஷிக்கொள்வதாலயும், புன்ணிலிருந்து வரும் நீர் மற்ற இடங்களில் படுவதாலும் வரும் பாக்டீரியல் தொற்று” என்று கூறி, அதற்கான ஆண்டிப்யாடிக் மற்றும் பூசிவதற்கு கிரீம் எழுதிக்கொடுத்து அனுப்பினேன். வெளியே போகுமுன் “ அம்மா குழந்தைய ஹாண்டில் பண்ணலாமா? குழந்தைக்கும் வந்திடுமா? எங்க வீட்டில் இதுமாதிரி யாருக்கும் கிடையாது” என்றார். குரலில் கொஞ்சம் அருவெறுப்பு கலந்த பயம் இருந்தது.
“அம்மாவின் ப்ராப்ளம் வேறு – குழந்தைக்கு வராது. குழந்தையை நன்கு குளிப்பாட்டி, மண்ணில் விளையாடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மூக்கில் வரும் சளியை ஈஷிக்கொள்ளாமல், துடைத்து விடுங்கள் – அது போதும் . ஆனாலும் அம்மாவை இரண்டு மூன்று நாட்கள் குழந்தையைத் தூக்கச் சொல்லாதீர்கள் – குழந்தையின் புண் அம்மவுக்கு வர வாய்ப்புகள் உண்டு” என்றேன். என்னை முறைத்தாற்போல் இருந்தது – தலையை சிறிது ஆட்டியவாறு அம்மணி வெளியே சென்றார்.
ஒருவர்க்கொருவர் வரும் வியாதிகள் – CONTAGEOUS AND COMMUNICABLE – தொடுதலால் வருபவை, வெளியில் இருக்கும் மாசு மற்றும் நோய்த் தொற்றுகளால் வருபவை எனப் பிரிக்கலாம்.
எல்லாத் தோல் வியாதிகளும் பரம்பரை வியாதிகளோ, தொற்று வியாதிகளோ அல்ல.
வீண் கவலைகள், வீட்டில் குழப்பத்தையே உண்டாக்கும்!