கிரேஸி மோகனின் நெருங்கிய நண்பர் தனது ஆற்றாமையைக் கவிதையாய்ப் படைத்து வெளியிட்டுள்ளார்.
இதோ அந்தக் கவிதை வரிகள் :
அழவு மியலா(து) அவன்நினைவாய் ஏதும்
எழுத முடியாது நெஞ்சம்- முழுதும்
துயர்மரத்துப் போச்சே விழி வெறிக்கலாச்சே!
அயர்ந்ததே அந்த ராத்மா!
கலகலக்க வைத்தே கவலை துரத்தி
உலகனைத்தும் உன்திறனால் வென்றோய்! – பலகலைகள்
தேர்ந்தவனே தேகான்ம பாவம் தொலைத்தவனே!
சோர்ந்து குலைந்ததென் நெஞ்சு!
மயிலைக் கபாலியைக் கற்பகத்தை என்றும்
துயிலும் பொழுதும் மறவோய்-வியப்பால்
உனையுலகம் போற்ற உனையென்றும் கர்வம்
தினையேனும் தீண்டிய தில்லை!
எனக்கிரங்கல் வெண்பா எழுதுவாய் என்றே
நினைத்திருந்தேன் ஏமாற்றி விட்டாய்- நினக்கிரங்கல்
நானெழுத நேர்ந்ததே நண்பனே, நீருக்குள்
மீனழுதாற் போலழுதேன் நான்!
எங்கோபிறந்தோம் எவர்மடியிலோ வளர்ந்தோம்
இங்கேன் மனத்தால் இணைந்தோம்நாம்- கங்குகரை
இல்லாக் கடல்போல் இருள்கவிந் தென்நெஞ்சில்
பொல்லாப் பிரிவுத் துயர்தரவோ-நல்லோய்
சிரிப்புக் கிறையாய் வலம்வந்த தேகம்
நெருப்புக் கிரையா வதோ!
நேற்றோ நினைவில்லை உன்னுள் கவிதையெனும்
ஊற்றுக்கண் கண்டு திறந்துவிட்டேன்- ஆற்றலுடன்
காட்டாறு போலக் கவிபொழிந்தாய்! மீண்டுவர
மாட்டாயோ ஏங்கும் மனம்!
என்னை‘ குரு’வென்(று) அழைப்பதுவோ? நண்பனே,
என்னைநீ விஞ்சிப்போய் எத்தனையோநாளாச்சு!
இன்னமும் என்னை உயர்த்தி உரைக்குமுன்
அன்புக்(கு) அடிமையடா நான்!
இன்னுமோர் நூறாண்டிரு நண்பா எம்நெஞ்சில்
என்றும்பதினாறாய்ஏற்றமுற!- குன்றாக்
கவிதை, நகைச்சுவை, ஓவியத்தால் வாழும்
புவியினில் உன்றன் புகழ்!
“எழுதிச்செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும்!
தொழுது போற்றி நின்றாலும் சூழ்ச்சி பலவும் செய்தாவும்
வழுவிப் பின்னால் ஏகியொரு வார்த்தை மாற்றம் செய்யாது
அழுத கண்ணீர் ஆறெல்லாம் அதிலோர் எழுத்தை அழிக்காது”
ஆம்; சற்றும் இரக்கம் காட்டாமல் விதியின் கரம் ஒரு முடிவுரையை எழுதிச் சென்றுவிட்டது.
என் ஆருயிர் நண்பன் இப்போது நினைவுகளிலும், புகைப்படங்களில் மட்டுமே!
அவகாசம் அளிக்காமல் உடனே பிரிந்துசெல்ல அப்படியென்ன அவசரமடா உனக்கு?
யாருன்னை அப்படி அழைத்துக் கொண்டது?
போதுமெனத் தீர்மானித்துப் புறப்பட்டுச் சென்றாயா?
நோயிற் படுத்திருந்தால் நோன்பிருந்து மீட்டிருப்போம்!
நாற்றிசையும் சுற்றி அமுதம் கொணர்ந்திருப்போம்!
வாய்ப்பே அளிக்காமல் வாய்க்கரிசி போடவைத்தாய்!
வெண்பா எழுதாமல் விண்ணுலகம் போகலாமா?
ஓவியங்கள் தீட்டாமல் விரல்கள் ஓயலாமா?
பெருமாள் மேல் நீபடைத்த வண்ணவிருத்தங்கள்
அருமையிலும் அருமையடா! அவையெல்லம் இசைவடிவில்
உலகெலாம் ஒலிக்க நீகேட்க வேண்டாமா?
கே.பி.டி. சிரிப்புராஜ சோழனை மேடையிலே
நாடகம் ஆக்கித் தருகின்றேன் என்றனக்கு
நீஅளித்த வாக்கை நிறைவேற்ற வேண்டாமா?
மலைமகளும் ,கலைமகளும், அலைமகளும், நீபடைத்த
வெண்பாவைப் புத்தகமாய் விஜய தசமியன்று
பார்க்கப் பொறுமையின்றி உனையங் கழைத்தாரோ!
மாலையிலும், இரவினிலும் தொலைபேசி ஒலித்தாலே
நீயழைக்கிறாயென்று ஓடோடி நான்வருவேன்.
இனியந்த அழைப்பு வாராதே, என்செய்வேன்!
காலை எழுந்தவுடன் கேசவ் ஓவியமும்
கண்ணன் வெண்பாவும் மின்னஞ்சல் கொண்டுவரும்!
இனியந்த வெண்பாக்கள் வாரா! வெறுமையடா!
எல்லாம் மறக்க நினைத்தால், ஓய்வெடுக்கப்
புனா நகருக்குப் புறப்பட்டு வந்துவிடு.
ஷீரடியின் நாயகனைப் பண்டரியின் விட்டலனைச்
சேர்ந்துசென்று தரிசிப்போமென்றழைத்தேன், சரியென்றாய்!
சனிக்கிழமை சரியென்றாய், திங்கள் சரிந்துவிட்டாய்!
வார்த்தை தவறுவது சரியோ, சம்மதமோ!
சொல்ல முடியவில்லை; சொல்லில் அடங்கவில்லை;
சோகச் சுவடுகளைச் சுமக்க முடியவில்லை!
உன் ஓவியங்களையும், உன் கவிதை , உன்வசனம்
உன்னுயர்வு, உன் வளர்ச்சி, உன் பெருமை,சாதனைகள்
எல்லாமே என்னுடைய தென்றே இறுமாந்து
நெஞ்சு நிமிர்ந்திருந்தேன்- இன்று நிலைகுலைந்தேன்!
இதுதான் வாழ்க்கை நியதியென்று விரக்தியுடன்
வேதாந்தம் பேசி வீடு திரும்பிவிட்டோம்!
ஆடிக் களைத்தாலும், அழுது களைத்தாலும்
அடுத்தநாள் வேலைகளைப் பார்க்கத் தொடங்குகிறோம்!
ஆம்;
“இருந்து சென்ற முன்னோரின் இடத்திலெல்லாம் நாம் இன்று
விருந்து செய்து வாழ்கின்றோம் விகடம் சொல்லி மகிழ்கின்றோம்!
இருந்த இடம் விட்டு யாமும் இனி எழுந்து சென்றால் இங்கிருந்து
விருந்து செய்வார் யார்,யாரோ!விகடம் சொல்வார் யார் யாரோ!!”
அமைதி கொள் நண்பா!
அஞ்சலியுடன்,
சு.ரவி