
நான்கு மாடிகள் கொண்ட கட்டிடங்கள் – பதினைந்து இருபது அடி இடைவெளியில் – மரங்கள், செடிகள் சூழ தூங்கி வழிந்து கொண்டிருந்தன. ஏற்கனவே, ஏ 4 ஃப்ளாட் ஏமாற்றி விடவே, அருகில் இருந்த மராமத்து ஆபீஸில் விசாரித்தோம். ‘ஓ, அவரா, முன்னாடி க்யூ ப்ளாக்குல இருக்கிறார் – சுத்தி நெறைய செடி, கொடிங்க இருக்கும் பாருங்க’ என்று சொல்லிவிட்டு, திரும்பி நின்று தனது அரசியல் சர்ச்சையைத் தொடர்ந்தார்!
வந்த வழியே திரும்பி வந்து, கியூ ப்ளாக் ஏ 4 ல் விசாரித்தோம். கையில் ஈரப் புடவையைக் காயப் போட கொசுவியபடி கதவைத் திறந்த பெண்மணி, புன்னகைத்து,” அதோ, அந்த ஃப்ளாட்தான்” என்று எதிர் பில்டிங்கைக் காட்டினார். தேடுகின்ற அவசரத்தில் பழங்கள் கூட வாங்கவில்லை – இரண்டு மேரீ பிஸ்கட் பாக்கெட்டுகளும், ஆஸ்ரம ஊதுபத்தியும் கையில் எடுத்துக் கொண்டு, கிரில் கேட்டைத் தட்டினோம் – Q 13, கி.ராஜநாராயணன், எழுத்தாளர் என்று சுவற்றில் பதித்திருந்தது.
அவருடைய மகன் (பிறகு தெரிந்தது) கதவைத் திறந்தார். ‘போன் செய்திருக்கலாமே’ என்றார். ‘தெரியவில்லை. அய்யாவுக்குச் சிரமம் என்றால் இன்னொரு நாள் வருகிறோம்’ என்றேன். ‘சிறிது உட்காருங்கள், வந்துவிடுவார்’ என்று உள்ளே சென்றார்.
அறை சைசில் இருந்தது ஹால்! கப்போர்டில் ஏராளமான விருதுகளும், பட்டயங்களும் நெருக்கமாக வைக்கப்பட்டிருந்தன. பொன்னாடை போர்த்திய கி.ரா. சிரித்தபடி அமர்ந்திருக்க, வலது பக்கம் குடும்பத்தினரும், இடது பக்கம், கையைப் பிடித்தவாறு, தேவர் மகன் மீசையுடன் கமல் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார். எவ்வளவு பெரிய எழுத்தாளர், கரிசல் இலக்கியத் தந்தை, ஒரு சிறிய அரசுக் குடியிருப்பில், எளிமையாக மிகக் குறைந்த வசதிகளுடன் வாழ்கிறார் என்பது மனதை வருத்தியது. உண்மையாகத் தமிழை வளர்த்தவர்களின் நிலைமை தமிழ்நாட்டில் இப்படித்தான் போலும். ‘தமிழ் வாழ்க’ என வெற்றுக் கோஷம் போடுபவர்களுக்கே செல்வாக்கு என்பது வேதனைக்குரியது.
வயது தொண்ணூறுக்கும் மேல், மெதுவான நடை, மெலிந்த தேகம், இடுப்பில் ஒரு நாலு முழ வேட்டி, மேல் துண்டு, அடிக்கடி அமைதியாய் நினைவுகளில் மூழ்கிவிடும் முகம், மூன்று , நான்கு நாட்களின் சின்ன தாடி, அரைச் சிரிப்பில் பளிச் சென்ற பற்கள், முதுமையின் மறதி, தெளிவான பேச்சு – ஈசீ சேரில் அமர்ந்தபடி, எதிரே மாட்டியிருந்த தி.க.சி யின் படத்தைப் பார்த்தபடி பேசிய, கி. ரா. வுடன் சுமார் அரை மணி நேரம் உரையாடினோம் – எண்ணங்களைக் குவிப்பதும், சிதறுவதைச் சேர்ப்பதும் முகத்தில் தெரிந்தது. இடையிடையே சொற்களில்லாத அமைதி பேசியது! சிறிய டிவி, சுற்றிலும் புத்தகங்கள், பேப்பர்கள், பேனா, காலச்சுவடின் கி ரா எழுதிய ‘மாயமான்’ எல்லாம் எங்கள் பேச்சைக் கேட்டபடி இருந்தன!
என்னை அறிமுகம் செய்துகொண்டேன் – இப்போது என்ன எழுதுகிறீர்கள் என்றேன். இரண்டு நாட்களுக்கு முன்பு தன் கைப்பட எழுதியவைகளைக் காண்பித்தார். தனித் தனியான அழகான எழுத்துக்கள் – தி க சி ஐ யைப் பற்றிய நினைவுக் குறிப்புகள், இலைகளைப் பற்றி கட்டுரை !
“வாழையில் ‘இலை’ வாழை என்ற ஒரு வகை இருக்கிறது – தஞ்சாவூர்ப் பகுதிகளில். அதில் பூவோ, காயோ இருக்காது; வெறும் இலை மட்டும்தான். அதன் ஒரு இலையில் பத்து நுனி இலைகள் எடுக்கலாம், அவ்வளவு பெரியதாக இருக்கும் ” என்றார். தையல் இலை, மந்தார இலை என அன்றைய நாட்களைப் பற்றிச் சொன்னார். தஞ்சாவூர்க் காரனான எனக்கு இலை வாழை பற்றித் தெரியவில்லை என்றேன் – ‘எல்லாம் தெரியவேண்டிய அவசியம் இல்லை’ என்றார் சிரித்தபடி!
இசை பற்றி கேட்டபோது, ‘ எனக்கு வெறும் கேள்வி ஞானம்தான்; காருக்குறிச்சி அருணாசலம் எங்க வீட்டுக்கு வருவார், அருமையாக வாய்ப்பாட்டு பாடுவார். கணீர் என்ற குரல் (இது எனக்கு புதிய செய்தியாய் இருந்தது). ராஜரத்தினம் கூட வந்திருக்கிறார். நாதஸ்வரம், நாகஸ்வரம் எல்லாம் தப்பு, “நாயனம்” என்பதே சரி! விளாத்திகுளம் சுவாமிகள் ராகங்களை மட்டும் ஆலாபனை செய்வார் – ‘கரஹரப் பிரியா ராகச் சக்கரவர்த்தி’ என்றே பெயர் பெற்றவர் – காருக்குறிச்சியார், எம் கே தியாகராஜ பாகவதர் போன்றவர்கள் இவரைக் குருவாக ஏற்றுக்கொண்டு கோலோச்சியவர்கள்”. என்று கூறி சுவாமிகள் பற்றிய புத்தகம் (என் ஏ எஸ் சிவகுமார் எழுதியது) ஒன்றினைக் கையொப்பமிட்டுக் கொடுத்தார்.
‘கரிசல் மண்ணில் மறக்க முடியாத மனிதர்கள்’ – அவரது மகன் கி.ரா.பிரபாகர் எழுதிய நாவலும், ரசிகமணி தி.கே.சி பற்றி கி.ரா. எழுதிய ‘அன்னப்பறவை’ புத்தகமும் பெற்றுக்கொண்டேன்.
இப்போது அதிகம் படிப்பதில்லை என்றார். போனில் மகன்தான் பேசுவார் என்றார். சென்னைக்கு வரவே மாட்டேன் என்றார் (நான் காரணம் கேட்கவில்லை).
சமையல் பற்றி பேச்சு வந்தது. ‘என் நாக்குக்கு உங்கள் சமையல் ஒத்துவராது. அப்படியே ஒத்து வந்தாலும், மீண்டும் வேண்டுமானால் உங்களைத் தேடி நான் வரவேண்டீருக்கும் அது முடியாது’ என்று சிரித்தார்! வசதி படைத்த பெண்மணி ஒருவர், பொழுது போவதற்காக தினமும் எழுத்தாளர் சார்வாகன் வீட்டில் வந்து சமைத்துப் போனதை ஆச்சரியமுடன் சொன்னார். தூக்கத்திலேயே மறைந்து விட்ட சார்வாகன் மனைவி பற்றியும், அவர்கள் நேர நிர்வாகம் பற்றியும் வியந்தார்.
முதலியார், நாடார் போன்று ‘பிள்ளை’ என்ற ஒரு ஜாதி இல்லை என்றார். அதற்குக் காரணமும் சொன்னார்!
‘ராயல்டி’ ஏதோ இப்போது கொஞ்சம் கொடுக்கிறார்கள் – பணத்தை எதிர்பார்த்து இங்கு எழுதமுடியாது என்றார். “சத்தியமூர்த்தி அவர்கள் மகள் – அழகா இருப்பாங்களாம், நான் பார்த்ததில்லே – லட்சுமி கிருஷ்ணமூர்த்திதான் சொன்னபடி, பைசா வாரியா ராயல்டிய அனுப்பிடுவாங்க” என்றார்.
தி க சி, குற்றாலம், தென்காசி எனப் பேசும்போது, எண்ணங்களின் ஓட்டம், நினைவு அலைகளாக முகத்தில் தெரிந்தது.
வீடு கண்டுபிடிக்க சிரமப் பட்டோம் என்ற போது அவர் சொன்னது: “என் பெரிய மகன் மொத முறையா இங்க வந்து வீட்டத் தேடியிருக்கான். என் வீட்டுக்கு கீழயே நின்னுகிட்டு, நடந்து போன ரெண்டு பேருகிட்ட என் பேரச் சொல்லி கேக்கறான். நான் மாடீல இருந்து பாத்துகிட்டே இருக்கேன். ஒருத்தன் ‘அப்படி ஒருத்தர் இருக்கிறதே தெரியாது’ ன்னான்! இன்னொருத்தன், காலைலே இரண்டுபேரும் (கிரா வும், அவர் மனைவியும்) வாக்கிங் போவாங்க… அவங்க வீடு….ன்னு கொஞ்சம் யோசிச்சான், அப்புறமா, ‘ஆங்… நாஸர் வந்தாரே அவரைப் பார்க்க, கை உயர்த்தி என் வீட்டைக் காட்டினான். என்னைத் தெரிய ஒரு நாஸர் வேண்டியிருக்கிறது” ! சிரித்தார்!
மறுநாள் என் பிறந்தநாள் என்று சொல்லி, பாதம் தொட்டு வணங்கினோம். வீட்டுப் புழக்கடையில், வேப்ப மரம் ஒன்று மதிய வெயிலில், அசையாமல் தூங்கிக்கொண்டிருந்தது.
விடை பெற்றுக் கொண்டோம். சென்னை வரும் வரை வெகுநேரம் ‘கரிசல் காட்டுக் கடுதாசி’ மனதில் சுற்றி வந்தது.
திரு கி.ரா அவர்களுடன் உரையாடியது ரத்னா சுருக்கமாக இருந்தது.
எத்தனையோ எழுதிய எளிய மனிதர், பார்வைக்கும் சரி வாழ்வதும் சரி எளிமை தான் முன் நிறுத்தப் பட்டது.
அத்தகைய அரிய பொக்கிஷத்தை தேடித்தான், உண்மையில் தேடித்தான் போகவேண்டும் போல.
அரண்மனையில் அரசர் இருப்பது அருகில் இருப்பவருக்கு தெரியாத போது வருத்தம் தான் எஞ்சி நிற்கிறது .
நல்ல தமிழ் நடை நம்ம மருத்துவர் ஐயாவுக்கு கைவந்த கலை
LikeLike