குவிகம் இலக்கிய வாசலின் ஐம்பதாவது நிகழ்வு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இயல் இசை நாடகம் என்ற தமிழின் முப்பெரும் பிரிவினைக் காப்பதுபோல
இயலுக்கு சந்தியா பதிப்பகம் நடராஜன் அவர்கள் சிறப்புரை ஆற்ற
இசைக்கு ரவி சுப்பிரமணியன் அவர்கள் சந்தக் கவிதைகள், பாரதி கவிதைகள் , புதுக்கவிதைகளுடன் தன் கவிதையில் இசை வடிவில் பாடி மக்களை வசீகரிக்க
நாடகத்திற்கு காத்தாடி ராமமூர்த்தி அவர்கள் தன் பாணியில் நகைச்சுவையுடன் நாடகம் நடத்துவதில் உள்ள பிரச்சினைகளைப்பற்றிப் பேசி வந்திருந்த அனைவரையும் மகிழ்ச்சியில் திளைக்க வைக்க
விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவின் இன்னொரு முக்கியமான நிகழ்வு என்னவென்றால் நண்பர் ஆர் கே ராமநாதன் அவர்களின் ” ஒரு கோப்பை சூரியன்’ என்ற கவிதை நூலை திரு காத்தாடி ராமமூர்த்தி வெளியிட திருவாளர்கள் ரவி சுப்பிரமணியனும் சந்தியா நடராஜன் அவர்களும் முதல் பிரதி பெற்றுக்கொள்ள விழா களைகட்டியது.
டாக்டர் பாஸ்கரன் அவர்கள் ஆர் கேயின் கவிதை நூலுக்கு முன்னுரை வழங்கியது மட்டுமல்லாமல் அந்த நூலைப்பற்றியும் சிறப்பாகப் பேசி அனைவரிடமும் அந்த நூலைப்பற்றிய ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தினார்.
பானுமதி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
சதுர்புஜன் அவர்கள் குவிகம்பற்றி ஒரு கவிதை படைத்து அதை மேடையில் படித்து நம்மை எல்லாம் பாராட்டு மழையில் நனையவைத்தார்.
குவிகம் 50க்குச் சிகரம் வைத்ததுபோல ராஜ் வெப் வீடியோ நண்பர்கள் வந்து விழா முழுவதையும் படம்பிடித்து அதனை அரைமணி அளவில் தொகுத்து ராஜ் வெப் வீடியோவில் வெளியிட்டார்கள்.
அரங்கு நிறைந்த நிகழ்வாக கே கே நகர் டிஸ்கவரி பேலஸ் புத்தக நிலையம் அன்று காட்சி அளித்தது.
குவிகத்தின் சார்பில் அனைவருக்கும் நன்றி பாராட்டிப் பேசினார் விழா நாயகனான ஆர் கே !