ஹர்ஷவர்த்தனன்
சரித்திரத்தின் ஏடுகளில் பலர் நாயகனாக இருப்பர்- சிலர் சூப்பர் ஸ்டார்கள் .
அலெக்சாண்டர், சந்திரகுப்த மௌரியர், அசோகர் – இப்படி சூப்பர் ஸ்டார்கள்.
அந்த வரிசையில் இதோ ஒரு சூப்பர் ஸ்டார் -‘ஹர்ஷன்’!
பின்னாளில் முகம்மதியப் பேரரசர் பெரும்பாலான இந்தியாவை ஆண்டனர்.
ஆனால்..கடைசியான இந்தியாவை ஆண்ட (முகம்மதியர் அல்லாத) பேரரசன் ‘ஹர்ஷன்’!
கி பி 600:
இந்தியா அன்று சிதறிக்கிடந்தது..
மாபெரும் மன்னர்கள் : வர்த்தனர்கள்- சாளுக்கியர்-பல்லவர்-பாண்டியர் – என்று பலர் இருந்தனர்.
தவிர மாளவம், வங்காள கவுடா, காமரூபா அரசர்களும் சக்தி கொண்டு விளங்கினர்.
இவர்களுக்குள் அடி-தடி-ரத்தம்-வெற்றி-தோல்வி.
இந்தியா இரத்த வெள்ளத்தில் மிதந்தது..
அந்த காலத்தில்..
குப்தர்களின் படைத் தலைவர்களாக புஷ்யபூதிகள் பணியாற்றி வந்தனர்.
அவர்கள் தங்களை வர்த்தனர்கள் என்றும் அழைத்துக் கொண்டனர்.
புஷ்யபூதி வம்சத்தின் முதல் முக்கிய அரசர் பிரபாகர வர்த்தனர்.
டெல்லிக்கு வடக்கேயிருந்த தானேஸ்வரம் அவரது தலைநகரம்.
ஒரு சினிமாவுக்குத் தேவையான மூலப்பொருள் இங்கு கொட்டிக் கிடக்கிறது.
இந்த சினிமாவின் முன்கதை சொல்வோம்:
முதலில் க்ரெடிட்ஸ்:
கதை: சரித்திரம்
திரைக்கதை : யுவான் சுவாங்
வசனம்: கவிஞர் பாணன்
இயக்கம்: ஹர்ஷன்
தயாரிப்பு: யாரோ
அக்காலத்தில்…
மௌகாரி நாட்டில் –கன்னோசியைத் தலைநகராகக்கொண்டு -அவந்தி வர்மன் அரசாண்டிருந்தான்.
மாளவ நாட்டில் – மஹாசேனகுப்தன் என்ற ஓர் அரசன்.
இந்த இரு நாடுகளுக்கும் பெரும் பகை.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் போல..
மகதத்தை விழுங்க இரு நாடுகளும் துடித்திருந்தது!
‘அரசியல் திருமணங்கள்’ பொதுவாகவே அரசியல் கூட்டணி அமைய முக்கிய காரணங்களாக அமைந்தன …
இந்தப் பகைக்கு நடுவில் பிரபாக வர்த்தனன் பிறந்தான்…சக்தி கொண்டு வளர்ந்தான்.
தானேஸ்வரத்தைத் தலைநகராகக் கொண்டு குறுநில மன்னன் ஆனான்.
மாளவம், மௌகாரி – இரு மன்னர்களும் – பிரபாக வர்த்தனனைச் சேர்த்துக்கொண்டால் பலம் கிடைக்கும் என்று உணர்ந்தனர்.
இந்த சதுரங்க ஆட்டத்தில் – மாளவத்தில் மஹாசேனகுப்தன் – முதல் காயை நகர்த்தினான்.
தனது மகளை பிரபாகவர்த்தனனுக்கு மணமுடித்தான்.
அவந்தி வர்மன் – இந்த ஆட்டத்தில் தோற்றுப்போனான்.
திருப்பங்கள் நிகழ்ந்தது.
மாளவத்தின் மஹாசேனகுப்தனுடைய உறவினன் ஒருவன் மஹாசேனகுப்தனது மகன்கள் (குமார், மாதவா) இருவரையும் துரத்திவிட்டு அவனது அரியணையைப் பறித்துக்கொண்டான்.
அவன் நமது கதையில் முதல் வில்லன்..
தேவகுப்தன்..
மஹாசேனகுப்தனது மகன்கள் தானேஷ்வரம் சென்று – பிரபாக வர்த்தனனிடம் அடைக்கலம் புகுந்தனர்.
மைத்துனர்களை தன்னுடன் வைத்துக்கொண்டாலும்… மாளவத்தின் அரியணையில் அவர்களை ஏற்ற முடியவில்லை.
தேவகுப்தன் பலத்தைப் பெருக்கியிருந்தான்.
மௌகாரியைக் கைப்பற்றுவது அவனது முதல் குறிக்கோளாக இருந்தது.
மௌகாரி மன்னன் அவந்தி வர்மன்- சதுரங்கத்தின் அடுத்த காயை நகர்த்தினான்.
மெல்ல மெல்ல .. பிரபாகவர்த்தனனை சிநேகம் செய்து கொண்டான்.
தனது மகன் கிரகவர்மனை தானேஸ்வரத்திற்கு அனுப்பி… பிரபாகவர்த்தனன் குடும்பத்துடன் ‘பழக’ விட்டான்.
அவனும் ‘வாங்க பழகலாம்’ – என்றான்.
பழக்கம் திருமணத்தில் முடிந்தது.
பிரபாகவர்த்தனனின் மூத்த மகள் இளவரசி ‘ராஜ்யஸ்ரீ’ – கிரகவர்மன் திருமணம் வெகு விமரிசையாக நடந்தது.
கிரகவர்மன் மௌகாரி மன்னனாக முடி சூடினான்.
ராஜ்யஸ்ரீ மணமகளாக கன்னோசி (மௌகாரியின் தலைநகரம்) சென்றாள்.
சிவ-விஷ்ணு பக்தையாக வளர்ந்திருந்த ராஜ்யஸ்ரீ – கன்னோசியில் புத்த மதத்தினால் ஈர்க்கப்பட்டு புத்த மதத்தைத் தழுவினாள்.
மாளவ – மௌகாரி பகை.. இப்ப வேற லெவலுக்குப் போனது!
அரசியல் தராசில்..மௌகாரியின் சற்றே எடை கூடியது.
தேவகுப்தன் சரியான நேரத்திற்குக் காத்திருந்தான்.
வங்காளத்தின் ‘கவுடா’ ராஜ்யத்தின் அரசன் ‘சசாங்கன்’ நமது கதையின் முக்கிய வில்லன்.
தேவகுப்தன்-சசாங்கன் – ரகசியக் கூட்டணி அமைந்தது.
அரசியல் கூட்டணிகள்.. அன்றும் –இன்றும்- என்றும் தேவைப்படுகிறது.
அதுவும் ரகசியமாக இருக்கும்போது – சக்தி வாய்ந்து- சதிகளுக்கும் வாய்ப்பளிக்கிறது.
தேவகுப்தனின் நேரம் வந்தது.
தானேஸ்வரம்:
பிரபாகவர்த்தனன் வயோதிகனான்.
வயோதிகத்துக்கு நண்பன் வியாதி தானே!
வியாதி அவனை வரித்தது..
மரணம் அவனது துரத்தியது..
அவனைத் தின்னத் துடித்தது..
மூத்த மகன் ராஜ்யவர்த்தனன் – மாவீரன்..வல்லவன்.. நல்லவன்..
ஹூணர்களது எச்சம் …மீண்டும் துளிர் விடத்தொடங்கியிருந்தது கண்டு – அதை முழுதாக அழிக்க ராஜ்யவர்த்தனன் படையெடுத்துச் சென்றிருந்தான்..
இளைய மகன் ஹர்ஷன் …
பதினாறு வயது நிரம்பிய இளைஞன்…
போர்க்கலைகளை நன்கறிந்தவன்.
கவிஞன் …
திடமான மனமுள்ளவன்..
அருகிருந்த காட்டில் ‘வேட்டைக்கு’ சென்றிருந்தான்!
பிரபாகவர்த்தனன் உடல்நிலை கவலைக்கிடம் ஆனது.
கவிஞர் பாணன் – கவிதை மட்டிலுமல்லாது அரசியலிலும் சக்தி வாய்ந்தவன்.
அதிவேக குதிரை வீரன் ஒருவனை அனுப்பி…ஹர்ஷனை வரவழைக்க ஏற்பாடு செய்தான்.
பிரபாகவர்த்தனனுக்கு ஹர்ஷன் மேல் அலாதிப் பிரியம்.
“மகனே ஹர்ஷா! உன் அண்ணன் ராஜ்ய வர்த்தனன் … ராஜ்ஜியம் ஆளப்பிறந்தவன்.
அவன் ரொம்ப நல்லவன்..அரசன் அவ்வளவு நல்லவனாக இருந்தால் ஆள்வது கஷ்டம்..”
மூச்சு வாங்கியது.
மேலும் பேசினான்.
“நீ அரசனானால் நமது வர்த்தன ராஜ்ஜியம் சாம்ராஜ்யமாகும் என நம்புகிறேன்”.
ஹர்ஷன் உடன் மறுத்தான்.
“தந்தையே … அண்ணன் ஆளப் பிறந்தவன்.. அவனது வீரத்திற்கு இணை யாருமில்லை.. அவன் தான் அரசனாவான்.. நான் என்றும் அவனுக்கு உதவுவேன்”.
மன்னன் கண்ணீர் விட்டான்.
‘மகனே! நீ வாழ்க’- அது அவனது கடைசி வார்த்தைகள்..
வாசலில் நின்ற காலன் உள்ளே நுழைந்து -பிரபாகவர்த்தனன் உயிரைக் கவர்ந்து சென்றான்..
தானேஸ்வரம் கண்ணீரில் மிதந்தது.
அதே நாள்..
பிரபாகவர்த்தனன் காலமான செய்தி காற்று வேகத்தில் மாளவ மன்னன் தேவகுப்தனை எட்டியது.
அவனது காதில் அது தேனாக இனித்தது.
உடனே.. அதே நாள்..தேவகுப்தன் படைகள் புறப்பட்டு மௌகாரியைத் தாக்கியது.
மௌகாரி மன்னன் கிரகவர்மன் – ராணி ராஜ்யஸ்ரீ – இருவரும் கன்னோசி அரண்மனையில் பூங்காவில் உலவிக்கொண்டிருந்தனர்.
‘ராஜ ராஜஸ்ரீ ராஜன் வந்தான்.. ராஜபோகம் தர வந்தான்’ – இருவரும் காதலின் ஆதிக்கத்தில் இருந்தனர்.
ஆபத்து நாற்புறமும் வந்தது.
தேவகுப்தன் படைகள் மௌகாரியை ஒரு மாலைக்குள் தன் வசமாக்கியது.
தேவகுப்தன் கிரகவர்மனைத் தாக்கினான்.
எதிர்பாராத அந்த தாக்குதலில் கிரகவர்மன் இறந்தான்.
ராஜ்யஸ்ரீ – திக்பிரமையால் வீழ்ந்தாள்.
ராவணன் சீதையைச் சிறையெடுத்தது போல் ராஜ்யஸ்ரீ சிறையெடுக்கப்பட்டாள்.
“தேவகுப்தா! என் தந்தை உன்னைச் சும்மா விட மாட்டார்” – என்று அவள் சூளுரைத்தாள்.
தேவகுப்தன் – வெறித்தனத்துடன் சிரித்தான்..
“ராஜ்யஸ்ரீ! இன்று காலை எனது புறா தானேஸ்வரத்திலிருந்து ஒரு நல்ல செய்தி கொண்டு வந்தது! என்ன தெரியுமா?”
ராஜ்யஸ்ரீ: “…”
தேவகுப்தன்:”இன்றைய தலைப்பு செய்திகள்: பி ர பா க வ ர் த் த ன ன் … மரணம்..தானேஸ்வரம் தத்தளிக்கிறது..அங்கு மன்னன் யாரும் இல்லை”.
ராஜ்யஸ்ரீ ஒடிந்து போனாள்.. துவண்டு விழுந்தாள்..
தேவகுப்தன்: “ஒரு ரகசியம் சொல்லவா?”
ராஜ்யஸ்ரீ:”…”
தேவகுப்தன்: “நீ இந்த கன்னோசி சிறையில் இரு. நான் தானேஸ்வரம் மீது படையெடுத்து அரசனில்லாத அந்த நாட்டை என்னாட்சிக்குக்குள் கொண்டு வருகிறேன்”.
ராஜ்யஸ்ரீ :“என் அண்ணன் ராஜ்யவர்த்தனன் உன்னைக் கொல்லாமல் விடமாட்டான்”
தேவகுப்தன் :”அவன் ஊரில் இல்லை. அவனும் ஹூணர்களுடன் சண்டைபோட்டு சிதைந்து உள்ளான்”
ராஜ்யஸ்ரீ – மௌனமானாள்.
உள்ளம் அழுதது..கண்கள் கண்ணீர் வற்றி உலர்ந்தது..
இந்த இடத்தில் ‘இடைவேளை’ – என்று போடச்சொல்லி ‘யாரோ’ ஒரு தயாரிப்பாளர் சொன்னார் போலும்.
சரித்திரம் மேலும் கூறும்.