திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர், அண்ணாமலைப் பல்கலைக்கழக வித்துவான் க. வெள்ளைவாரணம் அவர்கள் திருமூலரைப் பற்றி விரிவான ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியிருக்கிறார்.
அந்தக் கட்டுரையின் சாரமே இந்தக் கட்டுரை :
சைவ சமய அருளாசிரியர்கள் அருளிய நூல்கள் பன்னிரு திருமுறைகளாகும். அதில் பத்தாம் திருமுறையாகத் திகழ்வது, திருமந்திரமாகும்.
இந்தத் திருமுறையை எழுதிய சித்தர் திருமூலரைப் பற்றி சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் புராணத்தில் விரிவாக விளக்கியுள்ளார்.
திருக்கயிலாயத்திலே சிவபிரானது திருக்கோயிலில் நந்திதேவர். அவரது திருவருள் பெற்ற மாணாக்கராகிய சிவயோகியார் ஒருவர். அவர் சகல சித்திகளும் வாய்க்கப் பெற்றவர்; அகத்திய முனிவர்க்கு நண்பர். அம் முனிவருடன் சில நாள் தங்குதற்கு எண்ணிய சிவ யோகியார், பொதியமலையை அடைதற்கு எண்ணித் திருக்கயிலாயத் தினின்றும் புறப்பட்டுத் தென்திசை நோக்கி வந்தார். வரும் வழியில் திருக்கேதாரம், பசுபதிநாதம் (நேபாளம்), அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சி, தில்லை ஆகிய திருத் தலங்களைப் பணிந்து சாத்தனூர் வந்தார்.
அங்கே பூசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த மூலன் என்ற ஆயன் காவிரி சோலை அருகில் மாண்டு கிடந்தான். பசுக்களெல்லாம் அவனைச் சுற்றி நின்று கதறி அழுதுகொண்டிருந்தன.
அதைக் கண்டு வருந்திய சிவயோகியார் பசுக்களின் துயரைத் தீர்ப்பதற்காக தம்முடைய உடம்பினைப் பாதுகாப்புடைய ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டுத் தாம் பயின்றுணர்ந்த பரகாயப் பிரவேசம் (கூடுவிட்டுக் கூடுபாய்தல்) என்னும் வழியினாலே தமது உயிரை ஆயனாகிய மூலனது உடம்பிற் புகும்படி செலுத்தித் திருமூலர் என்னும் பெயருடையராய் எழுந்தார்.
சுற்றி நின்ற பசுக்கள் யாவும் துயரம் நீங்கி அன்பின் மிகுதியால் அவரது உடம்பினை நாத்தழும்ப நக்கிமோந்து கனைத்து மிகுந்த களிப்புடன் திரிந்து தத்தம் இல்லம் அடைந்தன.
அது சமயம் அங்கு வந்த ஆயனின் மனைவி, அவரை ஆயன் என்று எண்ணித் தம் இல்லத்திற்கு அழைக்க திருமூலர் அவளைப்பார்த்து, “நீ எண்ணியபடி உனக்கு என்னுடன் எத்தகைய உறவும் இல்லை` என்று சொல்லிவிட்டு சிவ யோகத்தில் அமர்ந்திருந்தார். பிறகு அவர் தமது உடம்பினை மறைத்து வைத்த இடத்தை அடைந்து தம் உடம்பைத் தேடிப்பார்த்தார். வைத்த இடத்தில் அவ்வுடம்பு காணப்படவில்லை.
இதுவும் சிவபெருமானின் ஆணையே என்பதை உணர்ந்தார். அதன்பின் அவ்வடிவிலேயே திருவாடுதுறை கோவில் அடைந்து அங்கே திருமந்திர மாலையாகிய செந்தமிழ் நூலை இறைவன் திருவடிக்கு அணிந்து போற்றும் நிலையில்,
ஒன்றவன் தானே, இரண்டவன் இன்னருள்,
நின்றனன் மூன்றினுள், நான்குணர்ந்தான், ஐந்து
வென்றனன், ஆறு விரிந்தனன், ஏழும்பர்ச்
சென்றனன், தானிருந் தானுணர்ந் தெட்டே.
என்னும் திருப்பாடலைத் தொடங்கி, மூவாயிரம் திருப் பாடல்களைத் திருவாய் மலர்ந்தருளினார்.
பின்னர் அவர் திருக்கயிலையை யடைந்து இறைவன் திருவடி பெற்றார் எனச் சேக்கிழார் பெருமான் திருமூலநாயனார் வரலாற்றினைப் பெரிய புராணத்தில் விரித்துக் கூறியுள்ளார்.
திருமந்திரம் படிப்பதற்கு மிகவும் எளிமையாக இருக்கும். ஆனால் ஒவ்வொன்றிலும் ஆழ்ந்த பொருள் இருக்கும்.
திருமந்திரத்தைப் படிக்காதவர்கள் கூட திருமூலர் எழுதிய பல வரிகளைத் தெரிந்திருப்பார்கள்.
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்”
“அன்பே சிவம்”
“யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்”
“உள்ளம் பெருங்கோயில் ; ஊன் உடம்பு ஆலயம்”
“உடம்பார் அழியின் உயிரார் அழிவர் “
“உடம்பை வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே “
தான் ஆயன் வடிவில் மாறியது சிவனருளால் திருமந்திர நூலை எழுதவே என்று கருத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளார்.
பின்னை நின்றென்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவஞ் செய்திலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே.
திருமூலரால் ஆதரிக்கப்பெற்று அவர் அருளிய திருமந்திரப் பனுவற்பொருளை கேட்டுணர்ந்த மாணவர்கள் மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமலையன் என்னும் பெயரினராகிய எழுவர் எனத் தெரிகிறது.
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் `நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்` எனப் போற்றியிருத்தலாலும், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய தேவார ஆசிரியர் பாடியருளிய திருப்பதிகங்களில், திருமூலர் அருளிய திருமந்திரப் பாடல்களின் சொற்றொடர்களும் பொருள்களும் எடுத்தாளப்பட்டிருத்தலாலும், திருமூல நாயனார் காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதென்பது தெளிவு.
இவர் காலத்தில் தமிழும், தமிழ் நாட்டைச் சூழவுள்ள புறநாடுகளின் பதினேழு மொழிகளும் ஆகப் பதினெட்டு மொழிகள் சிறந்து விளங்கின என்பதை இவரது பாடல் மூலம் அறிந்து கொள்கிறோம். அது மட்டுமல்லாமல் இவர் காலத்தில் தமிழ் மண்டலம் ஐந்து பிரிவாக இருந்தது என்பதையும் இவரது பாடல் உரைக்கிறது. சங்க காலத்தில் பதினெட்டு மொழிகளைப் பற்றிய குறிப்புகள் இல்லை. தமிழ் நாடும் மூன்று மண்டலங்களாகத் தான் பிரிந்திருந்தது.
மேலும் இவர் தில்லையைப் பொன்னம்பலம் என்று குறிப்பிடுகிறார். பல்லவ மன்னனாகிய சிம்மவர்மன் என்பவன் தில்லைக்குப் பொன் கூரை வேய்ந்தான். அதனால் திருமூலர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியிலோ அன்றி ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலோ திருமந்திர மாலையை நிறைவு செய்திருத்தல் வேண்டும் எனக் கருதுதல் வரலாற்றாராய்ச்சிக்கு ஏற்புடையதாகும்.
திருமூலர் தமிழ் வடமொழி இரண்டிலும் சொல்லாட்சி பெற்றவர் என்பது அவரது பாடல் மூலம் நன்கு புலனாகிறது.
அவரது பாடல்களில் சமய சாத்திரக் குறியீடுகளாகிய பதி, பசு, பாசம்; ஆணவம், கன்மம், மாயை; சித்து, அசித்து; சரியை, கிரியை, யோகம், ஞானம்; சத்து, அசத்து, சதசத்து; வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம்; நாதம், விந்து, சத்தி, சாத்துமான், வயிந்தவம்; சத்தாதி வாக்கு மனாதிகள், சாக்கிராதீதம், சுத்தம், துரியம் விஞ்ஞானர், பிரளயாகலத்து அஞ்ஞானர்; இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி; கவச நியாசங்கள் முத்திரை; பத்மாசனம், பத்திராசனம், சிங்காதனம்; பூரகம், கும்பகம், ரேசகம் என்பன முதலாகவுள்ள வடசொற்களும் சொற்றொடர்களும் அக்காலத்துப் பொது மக்களிடையே வழங்கிய வழக்குச் சொற்கள் சிலவும் இடம் பெற்றுள்ளன.
திருமந்திரம் மற்ற திருமுறைகளிலிருந்து மாறுபட்டு நிற்பது படிக்கும் போதே புலனாகும்.
இன்றைய பகுத்தறிவுவாதிகளின் பல கருத்துக்கள் திருமந்திரத்தில் ஆங்காங்கே தெரிவது மிகவும் ஆச்சரியமானது.
“இன்றைய பகுத்தறிவுவாதிகளின் பல கருத்துக்கள் திருமந்திரத்தில் ஆங்காங்கே தெரிவது மிகவும் ஆச்சரியமானது” – என்று கட்டுரை முடிகின்றது. இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அரைகுறை ஆன்மீகமே நாத்திகவாதமாக வளர்ந்திருக்கிறது. நாத்திகம் என்று சொன்னால் ஒரு குறிப்பிட்ட அடையாளத்திற்குள் வந்துவிடும் என்பதால் பகுத்தறிவு என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
LikeLike