நான்காம் பத்து – என் செல்வராஜ்
சிறுகதை எழுத்தாளர்களில் சிறந்த ஐம்பது எழுத்தாளர்களின் குறிப்புகளை திரட்டி இதில் தொகுத்திருக்கிறேன். அந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளையும் குறிப்பிட்டு இருக்கிறேன். இந்த தொகுப்புக்காகத் தகவல்களை திரட்டும்போதுதான் இன்னும் நிறைய எழுத்தாளர்களின் தகவல்கள் திரட்ட வேண்டியிருக்கிறது என்பது புரிகிறது. இணையத்தில் எல்லாம் இருக்கிறது என்பர். அப்படியெல்லாம் இல்லை என்பது நன்றாக புரிகிறது. பல எழுத்தாளர்களைப்பற்றிய தகவல் இணையத்தில் இல்லாமல் இருப்பதை பெரும் குறையாகவே நினைக்கிறேன். இந்த கட்டுரை அந்த குறையை சிறிதளவாவது குறைக்கும் என்பது என் எண்ணம். இன்னும் இதில் இல்லாத சிறந்த சிறுகதை எழுத்தாளர்களை வேறொரு கட்டுரையில் காணலாம். –
-என். செல்வராஜ்
ஆர் சூடாமணி
உளவியல் எழுத்தாளர் எனப் புகழப்பட்டவர். மனதுக்கு இனியவள் என்ற நாவலுக்கு கலைமகள் வெள்ளிவிழா பரிசு பெற்றவர். ஆரவாரம் இல்லாமல் மிக எளிமையாக மத்திய தர வாழ்க்கையையும் அதன் மனிதர்களையும் குறிப்பாகப் பெண்களையும் பற்றி நிறைய எழுதி உள்ளார். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தனது சொத்து முழுவதையும் சேவை நிறுவனங்களுக்குச் சேர உயில் எழுதி வைத்த ஒரே எழுத்தாளர். தனிமைத் தளிர் என்ற தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் அந்நியர்கள், புவனாவும் வியாழக்கிரகமும்
ஆதவன்
கல்லிடைக்குறிச்சியில் பிறந்த ஆதவனின் இயற் பெயர் கே எஸ் சுந்தரம். முதலில் இரவு வரும் என்ற சிறுகதை தொகுப்புக்காக 1987 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அக்காடமி விருது இவரது மறைவுக்குப்பின் வழங்கப்பட்டது.என் பெயர் ராமசேஷன் , காகித மலர்கள் ஆகிய நாவல்கள் சிறப்பானவை. தில்லியிலேயே தமது இளமைக்காலம் முதல் இருந்த ஆதவன் அதன் மதிப்பீடுகள்,சிக்கலான வாழ்க்கை முறை , போக்குவரத்து ஜனநெரிசல் என்று நகரின் மனநிலையை ஆழமாக படம் பிடித்தவர்.இவரின் சிறந்த சிறுகதைகள் ஒரு பழைய கிழவர் ஒரு புதிய உலகம், லேடி, ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்
வேல ராமமூர்த்தி
ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியில் பிறந்த இவர் தான் பிறந்த ஊர் மற்றும் அதன் அண்டை கிராமங்களைக் கதைக்களமாகக் கொண்டு பல
சிறுகதைகள் எழுதி உள்ளார். இவரின் குற்றப்பரம்பரை என்ற நாவல் சிறந்த நாவல். இவரின் சிறுகதைகள் பெரும்பாலும் சுயசாதியைப் பற்றியவை.எனினும் விமர்சனப் பார்வையோடு படைத்துள்ளார். தென் தமிழகத்திலுள்ள சாதிய சிக்கல்களை இவரின் கதைகள் கவனப்படுத்துகின்றன.சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களான அம்பட்டர், அருந்ததியர், வண்ணார் முதலான பலரின் வாழ்வியல் சிக்கல்ளை மையமிட்டு அவர்களின் வலியினை சரியாக பதிவு செய்துள்ளார். இவரது சிறுகதைகளின்முழு தொகுப்பை வேலராமமூர்த்தி கதைகள் என்ற பெயரில் வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதை இருளப்ப சாமியும் 21 கிடாய்களும்.
சுந்தர ராமசாமி
சிறந்த நாவலாசிரியர். பசுவய்யா என்ற புனை பெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். சிறந்த சிறுகதையாசிரியராகவும் இருந்தார். ஒரு புளிய மரத்தின் கதை, ஜே ஜே சில குறிப்புகள் இவரின் சிறந்த நாவல்கள் ஆகும். தமிழ் இலக்கிய தோட்டத்தின் இயல் விருது பெற்றவர். காலச்சுவடு என்ற இலக்கிய இதழின் நிறுவனர். இவரின் சிறுகதைகளின் முழு தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் கோயில் காளையும் உழவு மாடும்,பல்லக்கு தூக்கிகள், ரத்னாபாயின் ஆங்கிலம், விகாசம், பிரசாதம், சன்னல்,பள்ளம், வாழ்வும் வசந்தமும், எங்கள் டீச்சர், காகங்கள், சீதை மார்க் சீயக்காய் தூள்,
நாஞ்சில் நாடன்
நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவரான நாஞ்சில் நாடனின் இயற்பெயர் க சுப்ரமணியம். சங்க இலக்கியத்தில் அதிக
ஈடுபாடு கொண்டவர். சூடிய பூ சூடற்க என்ற சிறுகதைத் தொகுப்புக்காக 2010ல் சாகித்ய அக்காடமி விருது பெற்றவர்.இவரது நாவல்கள் புகழ் பெற்றவை.
தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல். இவரது சிறுகதைகளின் முழு தொகுப்பை நாஞ்சில் நாடன் கதைகள் என்ற பெயரில் தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விவசாயக் கலாச்சாரத்தில் ஊறிப்போயிருக்கும் மனிதர் நாஞ்சில் நாடன். நாஞ்சில் நாடனின் பார்வையானது விவசாய கலாச்சாரத்தின் உள்ளீடுகளின் அடிநாதமாகவே இழையோடுகிறது. இவரின் சிறந்த சிறுகதைகள் ஒரு இந்நாட்டு மன்னர், கிழிசல், விரதம், பாலம்.
பாவண்ணன்
பாவண்ணனின் இயற்பெயர் பாஸ்கரன் . 1980களில் எழுதவந்த சிறுகதை எழுத்தாளத் தலைமுறையைச் சேர்ந்தவர். இவருடைய முதல் சிறுகதை
நா. பார்த்தசாரதியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தீபம் சிற்றிதழில் 1982 ஆம் ஆண்டில் வெளிவந்தது. சிற்றிதழ்களிலும் பெரிய இதழ்களிலும் தொடர்ந்து தரமான படைப்புகளை எழுதிவருகிறார். தமிழ்ச்சிறுகதைகளையும் தமிழில் வெளிவந்த பிறமொழிச் சிறுகதைகளையும் முன்வைத்து ’எனக்குப் பிடித்த கதைகள்’ என்னும் தலைப்பில் ’திண்ணை’ இணைய இதழில் சிறுகதைகளில் பொதிந்திருக்கும் அழகியலையும் வாழ்வியலையும் இணைத்துப் பொருத்திப் புரிந்துகொள்ளும் விதமாக இவர் எழுதிய நூறு கட்டுரைகள் பரவலான வாசக கவனம் பெற்றவை. ஐம்பது தமிழ்க்கவிஞர்களின் படைப்புகளை முன்வைத்து ’உயிரோசை’ இணைய தளத்தில் ’மனம் வரைந்த ஓவியம்’ என்னும் தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைகளும் முக்கியமானவை. 17 சிறுகதை தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு “பிரயாணம்” காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரது பாய்மரக் கப்பல் என்ற நாவல் இலக்கிய சிந்தனை விருது பெற்றது. பருவம் என்ற நாவலை கன்னடத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்ததற்காக சாகித்ய அக்காடமி விருது பெற்றவர். இவரின் சிறந்த சிறுகதைகள் முள், பேசுதல்.
தஞ்சை ப்ரகாஷ்
பிரகாஷ் பொதுவாக அறியப்பட்டிருப்பது சிறுகதையாளர், பதிப்பாளர், ஒரு கட்டுரையாளர், ஒரு பத்திரிக்கை ஆசிரியர் என்பதாகத்தான். அவ்வளவாக அறியப்படாதவை அவரது நாவல்கள். தமிழ் நாவல் இலக்கியத்தில் அவரது ‘கரமுண்டார் வீடு, ‘மீனின் சிறகுகள்’ ஆகியவை முக்கியப் பங்களிப்புகள். மற்றவர்கள் பேசத் தயங்கும் பாலியலின் பல்வெறு முகங்களை வெளிக்காட்டியிருப்பதும் இவற்றின் சிறப்பம்சம். இலக்கியவாதியாக மட்டுமல்லாமல் ஒரு இலக்கிய இயக்கமாகவும் செயல்பட்டவர் தஞ்சை ப்ரகாஷ் என்று அழைக்கப்படும் ஜி எம் எல் ப்ரகாஷ். பாலம் என்ற சிற்றிதழை நடத்தினார். வெங்கட் சாமினாதனுக்காகவே வெ சா எ என்ற இலக்கிய இதழை நடத்தினார். வாழ்வின் தீரா ஆச்சரியங்களும், முடிவற்றுத் தொடரும் காமத்தின் தீண்டல்களும் கொண்டவர்களாக தஞ்சை ப்ரகாஷின் கதை மாந்தர்கள் வலம் வருகிறார்கள். அசட்டுத்தனமான, மிகையுணர்ச்சியற்ற நிதானத்துடன் கதைசொல்லும் ப்ரகாஷ், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்தனி சித்திரமாகப் பதியும்படி தீட்டியிருக்கிறார். இவரின் சிறந்த சிறுகதைகள் பற்றி எரிந்த தென்னை மரம், மேபல்.
ந பிச்சமூர்த்தி
தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராய் கருதப்படுபவர். தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். கலைமகள் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற முள்ளும் ரோஜாவும் என்ற சிறுகதை மூலம் தமிழிலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்டவர். தமிழ்ப் புதுக்கவிதைக்கு அடித்தளமிட்டு வளப்படுத்தியவர். ந பிச்சமூர்த்தி கதைகளை மூன்று தொகுதிகளாக மதி நிலையம் வெளியிட்டது. இவரின் சிறந்த சிறுகதைகள் ஞானப்பால், விஜயதசமி, பதினெட்டாம் பெருக்கு, விதை நெல், தாய், ஜம்பரும் வேஷ்டியும், மாயமான்.
எஸ் ராமகிருஷ்ணன்
மல்லாங்கிணற்றைச் சொந்த ஊராகக் கொண்ட இவரது முதல் கதையான “பழைய தண்டவாளம்” கணையாழியில் வெளியாகியிருக்கிறது.
ஆனந்த விகடன் இதழில் இவர் எழுதிய துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி, கேள்விக்குறி ஆகிய தொடர்கள் தீவிர இலக்கிய வட்டாரம் தாண்டி பரவலான வாசகப் பரப்பை இவருக்கு ஈட்டித் தந்திருக்கின்றன. எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங் குருதி, யாமம், உப பாண்டவம் ஆகிய நாவல்கள் சிறந்தவை. இவரது சிறுகதைகளை மூன்று தொகுதிகளாக உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைக்கதை, திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்ட படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு, தனது உரைகள், பத்திகள் மூலமாகச் சிறந்த இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் வருகிறார். இவரின் சிறந்த சிறுகதைகள் வேனல் தெரு, இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன, புலிக்கட்டம், தாவரங்களின் உரையாடல்
சி என் அண்ணாதுரை (அறிஞர் அண்ணா)
அறிஞர் அண்ணா அவர்கள் தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தியவர். திரையுலகில் திருப்பு முனையை உண்டாக்கியவர். தமிழ்நாட்டு மக்களின் மனமாசுகளை அகற்ற வேண்டும், மறுமலர்ச்சியினைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணங்களோடு தன் இலக்கியப் பணியைச் செய்தவர். சொக்க வைக்கும் எழுத்து நடையால் கதை, கட்டுரை, புதினம், நாடகம் எனப் பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். பேனா முனையின் வலிமையை நிரூபித்த எழுத்துத் தளபதி. அண்ணாவின் முதல் சிறுகதை ‘கொக்கரகோ’ என்பது. 1934ஆம் ஆண்டு ஆனந்த விகடன் இதழில் வெளியாகி இருக்கிறது. அடுத்து நான்கு கதைகளைக் குடியரசு இதழில் எழுதியுள்ளார். மற்ற கதைகள் அனைத்தும் திராவிட நாடு மற்றும் காஞ்சி இதழில் வந்தவை.அண்ணா தமிழ் சிறுகதையை உன்னத நிலையில் வைக்க வேண்டும் என்பதற்காகக் கதை எழுதியவர் அல்ல. அவருடைய நோக்கம் கருத்துப் பிரச்சாரம் என்பது தெளிவு. சமகாலத்தில் நடக்கும் பிரச்சினைகளைப் பேசுவதன் வழியாக இவை பெருந்திரளைச் சென்றடையும் வாய்ப்புப் பெற்றவையாக உள்ளன. செவ்வாழை பொதுத் தளத்தில் மிகவும் பிரபலமான கதை. புலி நகம், பிடிசாம்பல், திருமலை கண்ட திவ்யஜோதி, தஞ்சை வீழ்ச்சி, ஒளியூரில், இரும்பாரம், முதலிய வரலாற்றுச் சிறுகதைகளையும் அண்ணா படைத்துள்ளார். இவரின் சிறந்த சிறுகதைகள் செவ்வாழை, தனபால செட்டியார் கம்பெனி