விநீத், தன் மனைவி, இரு பிள்ளைகளுடன் சேர்ந்து என்னை ஆலோசிக்க டாக்டர் சொன்னதாகத் தெரிவித்தார். பொதுவாக டாக்டர் ஒருவரை குறித்துப் பார்க்கச் சொல்வார், இந்தமுறை மனநல ஆலோசகரான என்னை நால்வரும் சேர்ந்தே பார்த்தால் நல்லது என்று டாக்டருக்குத் தோன்றியது.
விநீத்தின் மனைவி தேவகி, மூத்த மகன் சுநீத், இளையவன் புநீத். சுநீத்தைக் காண்பிக்க வந்ததாகத் தெரிவித்தார்கள். சுநீத்தின் முன்னே அவனைப்பற்றிய விவரங்களை மற்றவரிடமிருந்து கேட்டுக்கொள்வதைத் தவிர்த்தேன், குழந்தை என்றபோதிலும். பெற்றோரிடமும், குழந்தையிடமும் தனித்தனியே விவரங்களைச் சேகரிப்பது என் வழக்கம். இந்த முறை சுநீத்திடம் ஆரம்பித்தேன்.
ஏழு வயதான சுநீத், மூன்று மாதங்களாக அடிக்கடி தலைவலி என்று சொன்னதால் நரம்பியல் மருத்துவரான எங்கள் டாக்டரிடம் அவனை அழைத்து வந்திருந்தார்கள். இந்த இரண்டு மாதமாக வலி வெவ்வேறு வடிவம் எடுத்ததால் டாக்டருக்கு இதற்கு மன அளவில் காரணி இருக்கக்கூடும் என்று ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கரான என்னிடம் அனுப்பி வைத்தார்.
சுநீத், இஸ்திரி போட்ட உடை, இரு கைகளையும் விவேகானந்தர்போல் கட்டிக்கொண்டிருந்தான். அவன் வயதிற்கு ஏற்ற உற்சாகம் இல்லை. வண்டுக் கண்களில் ஏதோ சோகமோ, ஏக்கமோ(?), பரிதாபம் ததும்பி இருந்தது. தலையைக் குனிந்து உட்கார்ந்துகொண்டான். தம்பி புநீத்தையும் பெற்றோரையும், வெளியே உட்காரச்சொன்னேன்.
சுநீத் தன் நிலைமையை, அவனுக்கு வரும் வலியினைப்பற்றி விவரித்தான். அவனுடைய வீடு, பள்ளிக்கூடம், நண்பர்கள், சூழல், எனப் பலவற்றைப்பற்றிக் கேட்கக் கேட்கப் பல விவரங்கள் புரியவந்தது.
இந்த வருடம் பள்ளி ஆரம்பமாகி இரண்டு மாதங்களாக சுநீத் எதையும் வேண்டாவெறுப்பாகச் செய்வது அதிகரித்தது. அவனை வற்புறுத்தினால் மட்டும் குளியல், சாப்பிடுவது. இதுவரையில் பிடித்த கிரிக்கெட்டிலும் ஈடுபாடு குறைந்து சலிப்பு அதிகரித்தது. யாரிடமும் பழகப் பிடிக்கவில்லை, பரீட்சையில் குறைந்த மதிப்பெண்கள். அவன் செய்வதைப் பார்ப்பவர்களுக்குச் சோர்வு இருப்பதுபோல் தோன்றும். இந்த வர்ணனை குழந்தைகளுக்குத் தோன்றும் மன அழுத்தம். இது பெரியவர்களிடம் காண்பதிலிருந்து சற்று வேறுபட்டதாக இருக்கும்; இதை அடையாளம் கண்டுகொள்ள எங்கள் படிப்பில் பயிற்சிகள் உண்டு.
அவனுடைய வகுப்பு ஆசிரியர் இதை அடம்பிடிப்பு எனக் கருதிக் கண்டித்து, பலவிதமான தண்டனை கொடுத்துப்பார்த்தாள், ஆனால் அப்படியே இருந்தான். பெற்றோரிடம் புகார் செய்தாள். அவர்கள் சுநீத்திற்காகப் பல டாக்டரை அணுகிய பின்பு இங்கு வந்தார்கள்.
சுநீத் என்னிடம் பேசும்பொழுது, தான் ஓரிரு தடவை புனீத்தை அடித்தது தவறு என வருந்தினான். அதனாலேயே பெற்றோர்கள் தன்னை விடுதியில் விட்டார்கள் என நம்பினான். இது, அவர்கள் தனக்குக் கொடுத்த தண்டனை என எண்ணினான். அப்படி இல்லை என்றால், எதற்காக அங்கு அனுப்பி வைத்தார் என்பது புரியவில்லை என்றான். விடுதியில் குற்ற உணர்வாகவும், வீட்டு நினைவாகவே இருப்பதாகவும், அங்கு இருக்கப் பிடிக்கவில்லை என்றும் சொன்னான்.
அவனுடைய பெற்றோரிடம் விசாரித்துப் பார்த்தேன். இருவரும் சுநீத் விடுதியில் இருக்கத் தாங்கள் எடுத்த முடிவு சரியென்று மிக உறுதியாக இருந்தார்கள்.
அப்பா வினீத்தைப் பொறுத்தவரைச் சிறுவயதில் விடுதியில் தனியாக இருப்பது தைரியத்தை வளர்க்கும் என நம்பினார். எந்த அளவிற்கு சுநீத்தை இதற்குத் தயார்செய்தார் என்பதற்குப் பதில் சொல்லஇயலவில்லை.
தேவகி கண்டிப்பிற்கு முதலிடம் வகித்தாள். சுநீத் சொல்லும் வலிகளைக் கேட்டு, இடம் கொடுத்தால் அது அவனைப் பலவீனமானவனாக ஆக்கும் என நம்பினாள். பாசத்திற்கு இடம் இல்லை என்றாள். ஒரு தாய் இவ்வளவு கடுமையாக இருப்பது என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவர்களிடம் மேலும் பேசினேன்.
தேவகி தன்னுடைய நிறுவனத்தை மிகச் சிறந்தமுறையில் நடத்திவந்தாள். விளம்பரத் துறையில், பலர் அறியும் அளவிற்குப் பிரபலமானவள். தன்னைப்பற்றிப் பெருமைப்பட்டாள். தன் நிர்வாகம் உலக அளவில் புகழ்பெற வேண்டும் என்று கனவு கண்டாள். முழுநேரச் சிந்தனை இதில்தான்.
இருபத்தியோரு வயதிலேயே கல்யாணம் நடந்துவிட்டது. தன் கனவுகளுக்கு வினீத்தின் ஒத்துழைப்பு இருந்தது மிகவும் தெம்பூட்டியது.
கல்யாணமாகிய அதே வருடம் கர்ப்பம் ஆனாள். திடுக்கிட்டாள். தனக்கு வயது இருபத்தி இரண்டுதானே, தன் பளிங்கு உடல் வயதான தோற்றம் கொண்டுவிடும் என அஞ்சினாள். அதற்குள் குழந்தையா என வேதனைப்பட்டாள். தன் நிர்வாகக் கனவுகள், என்னவாகும்? இப்படிப் பலபல கேள்விகள்.
கருவைக் கலைக்க யோசித்து, வினீத்திடம் பகிர்ந்தாள். இருவரும் அதுவே சரியென்று முடிவெடுத்து, வினீத்தின் அம்மாவிடம் பகிர்ந்தார்கள். அவள் மறுத்துவிட்டாள். அரைமனதோடு வினீத்-தேவகி இந்த எண்ணத்தை விட்டார்கள். எதையானும் சாதிக்க முடியாமல் போனால் அது பிரசவத்தினால்தான் என உறுதியாக நினைத்து, வளரும் சிசுவை வெறுத்தார்கள்.
தேவகிக்குச் சிசுவின்மேல் கோபம், வருத்தம். சூழ்நிலையின் வற்புறுத்தல் என்பதால் கடுகளவும் பாசம்-பற்று இல்லை. கல்யாணமாகி ஐந்து வருடங்களுக்காவது கணவருடன் குடும்பம் நடத்தி, இஷ்டம்போல் எங்கெங்கோ பயணம் செய்யவேண்டும் எனப் ப்ளான் இருந்தது. இதுவெல்லாம் சுக்குநூறாகப் போன வருத்தம், வேதனை. பிறந்த பின்பும், சுநீத்தின்மேல் பெற்றோர் இருவருக்கும் பாசம் இல்லாமலேயே போய்விட்டது.
இரண்டாம் குழந்தை புநீத், உருவானதிலிருந்து இன்றுவரை அவன்மேல் பாசம் பொழிந்தார்கள். அவனைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்து வந்தார்கள். அவனை எந்த ஒரு கவனச் சிதறலும் இல்லாமல் வளர்க்கவேண்டும் என உறுதியாக இருந்தார்கள்.
ஆனால் சுநீத்தைப் பார்த்துக் கொள்வதையோ சுமையாகக் கருதினார்கள். பெரும்பாலும் அவனை வினீத்தின் பெற்றோரிடம் விட்டுவிடுவார்கள். சுநீத் மேல் பரிவு இல்லாததின் விளைவாகவே அவனை விடுதியில் விட முடிவானது.
ஐந்து வயதான புநீத்திற்கு தன் அண்ணன் மேல் அலாதிப் பிரியம். இருவரும் தனக்குத் தரப்படும் எல்லாவற்றையும் ஒருவருக்கு ஒருவர் பகிர்வார்கள். பெற்றோர்கள் பார்க்காமல் இருக்கும்போது அவசர அவசரமாக சுநீத்தைக் கட்டிக்கொள்வது என்பதுபோல் தன் சார்பில் புநீத் பல வகையில் அன்பைக் காட்டினான். இதுதான் சுநீத்தின் பலமானது.
அதையே என்னுடைய ஸெஷன்களுக்கு உபயோகித்துக்கொண்டேன். இந்த இரு குழந்தைகளையும் சேர்ந்து பார்க்க ஆரம்பித்தேன். ஏற்கனவே இவர்கள் ஒருவருக்கு ஒருவர் பாசமாக இருப்பதால் இதை வலுப்படுத்த அவர்களின் பலவகையான அனுபவங்களை வைத்துப் பேசினோம். சுநீத்திற்கு இது சமாதானமாக இருந்தது.
சுநீத்தை அவன் பெற்றோர் நிராகரித்ததால், அவனுக்குள் எந்த அளவிற்குச் சோகம், வேதனை குவிந்துகிடக்கின்றது என்பது ப்ளே தெரப்பியில் (Play Therapy) தென்பட்டது.
சிறு குழந்தைகள் தன்னைப்பற்றி முழுதாகச் சொல்லக்கூடியவர்கள் அல்ல. தன் பெற்றோர், கூட இருப்பவர்களினால்பட்ட கசப்பான அனுபவங்களை இந்த ப்ளே தெரப்பீ வெளிப்படுத்த உதவும். இந்தமுறையில் கதை சொல்வது-கதை சொல்லவைப்பது, வண்ணங்கள் தீட்டுவது, வரைவது, க்ளே அல்லது சோப்பினால் பொருள், பொம்மைகள் செய்வது, எனப் பலவகைகள் உண்டு. இதை ஸெஷன்களில் செய்தோம்.
க்ளையன்ட்டின் நிலைமைக்குப் பொருத்தமாக, சூழ்நிலையை மனதில் வைத்துக்கொண்டு இவற்றை உபயோகிப்பது அவசியம். இதைப் பிரயோகம் செய்யச்செய்ய குழந்தையின் அடிமனதில் சிக்கிக் கிடக்கும் விஷயங்களை மறைமுகமாக வெளியில் கொண்டுவந்து அவற்றைச் சுதாரிக்க முடியும். அதுதான் இங்கேயும் நடந்தது. சுநீத்தின் ஒவ்வொரு காயம் வெளிவர, அவற்றை அவனுக்குப் புரியும்வகையில் எடுத்துச் சொல்லிப் புரியவைக்க நெடுநாள் ஆனது.
சுதாரிக்க மேற்கொண்ட வழிமுறைகளில், சுநீத்திற்குப் பிடித்துத் தானாகத் தேர்ந்தெடுத்துச் செய்தது, தன் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் இரு வயதான மூதாட்டிகளுக்கு ஆக்ஷனுடன் கதைகளைச் சொல்வது, வீட்டுப் படிப்பைப் பக்கத்து வீட்டில் உள்ள நண்பனுடன் எழுதிப் படிப்பது. தான் வரைவதை அதே தெருவில் உள்ள யாராவது ஒருவருக்குப் பரிசாகத் தருவேன் என்றும் முடிவு எடுத்தான்.
வினீத்-தேவகி இருவரையும் ஒன்றாகச் சேர்ந்து ஸெஷனுக்கு வரச்சொன்னேன். அவர்களின் நிராகரிப்பின் பிரதிபலிப்பை, அதன் காரணிகளை, விளைவுகளைப் பல ஸெஷன்களுக்கு அலசினோம். அதைப் புரிந்துகொள்ளும்வரையில் சுநீத்துடன் சேர்ந்து அவர்கள் எதையும் செய்ய நான் பரிந்துரைக்கவில்லை.
சற்றுப் புரிந்துகொண்டு, மாற முயன்றார்கள். ஏற்பட்ட அந்த துளி மாற்றத்தின் விளைவாக சுநீத்திடம் அவன் மதிப்பெண்ணில் மாறுதல் தென்பட்டது. இதையே எடுத்து அவனுக்குப் புரியும்படி விளக்கினேன். அதாவது நம் முயற்சிகளுக்குப் பல பாதிப்புகள் ஏற்படலாம். அவை எப்படியெல்லாம் நேர்கிறது என்பதை உதாரணங்களுடன் எடுத்துச்சொல்லி, வேறு என்ன செய்திருக்கலாம் என்றும் பேசினோம்.
இப்படி நம்மால் செய்யக்கூடியவற்றைத் தடை செய்துகொள்வது நாம் தனக்கே தரும் தண்டனை என்றேன். இப்படிச் செய்வதற்குப் பதிலாக, எவ்வாறு நம் மனதைத் துளைத்துவிடும் கவலைகளைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று பல ரோல் ப்ளே மூலமாகச்செய்ய, தான் ஒரு புது மொழியே கற்றுக்கொண்டதாக சுநீத் சொன்னான்.
சுநீத் அந்த விடுதிக்குத் திரும்பவில்லை. ஆனால் சுநீத்தின் நிலையில் வேறொருவர் இருக்கலாம், வரலாம். ஆதலால்,அந்த விடுதி ஆசிரியருக்கு அவர்களின் மனநிலை, அதன் விளைவுகள் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றன என்பதைப்பற்றி விளக்கினேன். வரும் அரையாண்டுப் பரீட்சை விடுமுறையின்போது
இதைப் பற்றிய வர்க்ஷாப் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
விநீத்-தேவகி விடுதி முடிவைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இருந்தார்கள். தங்களால்தான் இந்தக் குழந்தைக்கு வேதனை, வலி என்பதை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு இன்னும் வரவில்லை. சுநீத்தை இவர்களின் பிடிவாதத்திற்கு விட்டுவைக்க வினீத்தின் பெற்றோருக்கு விருப்பம் இல்லை. பெற்றோரின் பாசம் பூஜ்யத்திலியே சஞ்சரித்துக்கொண்டு இருந்ததால் வினீத்தின் பெற்றோர் தாங்களே சுநீத்தின் பொறுப்பை எடுத்துப் பார்த்துக்கொண்டார்கள்.
சிறப்பான அணுகுமுறை வாழ்த்துக்கள்
LikeLike