குவிகம்

தமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்

கோவை சங்கர்

 

Image result for தர்மராஜா யோகிபாபு

கேளுங்கள் கொடுக்கப்படும்….!

பரம பக்தனவன்
பட்டென்று போய்விட்டான்
கடவுள்மேல் குற்றமில்லை
‘ஐயனே தாங்கவில்லை
பேரிடரில் உழல்கின்றேன்
உடனேநீ காப்பாற்றெ’ன
அகமுருகி கேட்டதுவும்
தர்மராஜா எமனிடத்தில்.

Image result for அரசியல்வாதி கவுண்டமணி

பார்வை எங்கே…?

தோளிலே துண்டு போட்ட அரசியல்வாதி
இலவச வேட்டி கொடுப்பார் என்று பார்த்தால்
என்துண்டையும் அல்லவா உருவிச் சென்று விட்டார்..!

 

திருமந்திரம் பாடிய திருமூலர் வரலாறு

 

திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர்,   அண்ணாமலைப் பல்கலைக்கழக வித்துவான் க. வெள்ளைவாரணம் அவர்கள் திருமூலரைப் பற்றி விரிவான ஆராய்ச்சிக் கட்டுரை  எழுதியிருக்கிறார். 

அந்தக் கட்டுரையின் சாரமே இந்தக் கட்டுரை :

Image result for tirumular

சைவ சமய அருளாசிரியர்கள் அருளிய நூல்கள்  பன்னிரு திருமுறைகளாகும். அதில் பத்தாம் திருமுறையாகத் திகழ்வது, திருமந்திரமாகும்.

இந்தத் திருமுறையை எழுதிய சித்தர் திருமூலரைப் பற்றி சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் புராணத்தில் விரிவாக விளக்கியுள்ளார்.

திருக்கயிலாயத்திலே சிவபிரானது திருக்கோயிலில் நந்திதேவர். அவரது திருவருள் பெற்ற மாணாக்கராகிய சிவயோகியார் ஒருவர். அவர் சகல சித்திகளும் வாய்க்கப் பெற்றவர்; அகத்திய முனிவர்க்கு நண்பர். அம் முனிவருடன் சில நாள் தங்குதற்கு எண்ணிய சிவ யோகியார், பொதியமலையை அடைதற்கு எண்ணித் திருக்கயிலாயத் தினின்றும் புறப்பட்டுத் தென்திசை நோக்கி வந்தார். வரும் வழியில் திருக்கேதாரம், பசுபதிநாதம் (நேபாளம்), அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சி, தில்லை  ஆகிய திருத் தலங்களைப் பணிந்து சாத்தனூர் வந்தார்.

அங்கே பூசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த மூலன் என்ற ஆயன் காவிரி சோலை அருகில் மாண்டு கிடந்தான். பசுக்களெல்லாம் அவனைச் சுற்றி நின்று கதறி அழுதுகொண்டிருந்தன.

அதைக் கண்டு வருந்திய சிவயோகியார் பசுக்களின் துயரைத் தீர்ப்பதற்காக  தம்முடைய உடம்பினைப் பாதுகாப்புடைய ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டுத் தாம் பயின்றுணர்ந்த பரகாயப் பிரவேசம் (கூடுவிட்டுக் கூடுபாய்தல்) என்னும் வழியினாலே தமது உயிரை ஆயனாகிய மூலனது உடம்பிற் புகும்படி செலுத்தித் திருமூலர் என்னும் பெயருடையராய் எழுந்தார்.

சுற்றி நின்ற பசுக்கள் யாவும் துயரம் நீங்கி அன்பின் மிகுதியால் அவரது உடம்பினை நாத்தழும்ப நக்கிமோந்து கனைத்து மிகுந்த களிப்புடன் திரிந்து தத்தம் இல்லம் அடைந்தன.

அது சமயம் அங்கு வந்த ஆயனின் மனைவி, அவரை ஆயன் என்று எண்ணித்  தம் இல்லத்திற்கு அழைக்க திருமூலர் அவளைப்பார்த்து, “நீ எண்ணியபடி உனக்கு என்னுடன் எத்தகைய உறவும் இல்லை` என்று சொல்லிவிட்டு சிவ யோகத்தில் அமர்ந்திருந்தார். பிறகு அவர் தமது உடம்பினை மறைத்து வைத்த இடத்தை அடைந்து தம் உடம்பைத் தேடிப்பார்த்தார். வைத்த இடத்தில் அவ்வுடம்பு காணப்படவில்லை.

இதுவும் சிவபெருமானின் ஆணையே என்பதை உணர்ந்தார். அதன்பின் அவ்வடிவிலேயே திருவாடுதுறை கோவில் அடைந்து அங்கே திருமந்திர மாலையாகிய செந்தமிழ் நூலை இறைவன் திருவடிக்கு அணிந்து போற்றும் நிலையில்,

 

ஒன்றவன் தானே, இரண்டவன் இன்னருள்,

நின்றனன் மூன்றினுள், நான்குணர்ந்தான், ஐந்து

வென்றனன், ஆறு விரிந்தனன், ஏழும்பர்ச்

சென்றனன், தானிருந் தானுணர்ந் தெட்டே.

 

என்னும் திருப்பாடலைத் தொடங்கி, மூவாயிரம் திருப் பாடல்களைத் திருவாய் மலர்ந்தருளினார்.

பின்னர் அவர் திருக்கயிலையை யடைந்து இறைவன் திருவடி பெற்றார்  எனச் சேக்கிழார் பெருமான் திருமூலநாயனார் வரலாற்றினைப் பெரிய புராணத்தில் விரித்துக் கூறியுள்ளார்.

திருமந்திரம் படிப்பதற்கு மிகவும் எளிமையாக இருக்கும். ஆனால் ஒவ்வொன்றிலும் ஆழ்ந்த பொருள் இருக்கும்.

திருமந்திரத்தைப் படிக்காதவர்கள் கூட திருமூலர் எழுதிய பல வரிகளைத் தெரிந்திருப்பார்கள்.

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்”

“அன்பே சிவம்”

“யாம்  பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்”  

“உள்ளம் பெருங்கோயில் ; ஊன் உடம்பு ஆலயம்”

“உடம்பார் அழியின் உயிரார் அழிவர் “

“உடம்பை வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே “

தான் ஆயன் வடிவில் மாறியது சிவனருளால் திருமந்திர நூலை எழுதவே என்று கருத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளார்.

 

பின்னை நின்றென்னே பிறவி பெறுவது

முன்னை நன்றாக முயல்தவஞ் செய்திலர்

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே.

 

திருமூலரால் ஆதரிக்கப்பெற்று அவர் அருளிய திருமந்திரப் பனுவற்பொருளை கேட்டுணர்ந்த மாணவர்கள்  மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமலையன் என்னும் பெயரினராகிய எழுவர் எனத் தெரிகிறது.

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் `நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்` எனப் போற்றியிருத்தலாலும், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய தேவார ஆசிரியர் பாடியருளிய திருப்பதிகங்களில், திருமூலர் அருளிய திருமந்திரப் பாடல்களின் சொற்றொடர்களும் பொருள்களும் எடுத்தாளப்பட்டிருத்தலாலும், திருமூல நாயனார் காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதென்பது தெளிவு.

இவர் காலத்தில்  தமிழும், தமிழ் நாட்டைச் சூழவுள்ள புறநாடுகளின் பதினேழு மொழிகளும் ஆகப் பதினெட்டு மொழிகள் சிறந்து விளங்கின என்பதை இவரது பாடல் மூலம் அறிந்து கொள்கிறோம். அது மட்டுமல்லாமல் இவர் காலத்தில் தமிழ் மண்டலம் ஐந்து பிரிவாக இருந்தது என்பதையும் இவரது பாடல் உரைக்கிறது. சங்க காலத்தில் பதினெட்டு மொழிகளைப் பற்றிய குறிப்புகள் இல்லை. தமிழ் நாடும் மூன்று மண்டலங்களாகத் தான் பிரிந்திருந்தது.

மேலும் இவர் தில்லையைப் பொன்னம்பலம் என்று குறிப்பிடுகிறார். பல்லவ மன்னனாகிய சிம்மவர்மன் என்பவன் தில்லைக்குப் பொன் கூரை  வேய்ந்தான். அதனால் திருமூலர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியிலோ அன்றி ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலோ திருமந்திர மாலையை நிறைவு செய்திருத்தல் வேண்டும் எனக் கருதுதல் வரலாற்றாராய்ச்சிக்கு ஏற்புடையதாகும்.

Image result for tirumularதிருமூலர் தமிழ்  வடமொழி இரண்டிலும் சொல்லாட்சி பெற்றவர் என்பது அவரது பாடல் மூலம் நன்கு புலனாகிறது.

அவரது பாடல்களில் சமய சாத்திரக் குறியீடுகளாகிய பதி, பசு, பாசம்; ஆணவம், கன்மம், மாயை; சித்து, அசித்து; சரியை, கிரியை, யோகம், ஞானம்; சத்து, அசத்து, சதசத்து; வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம்; நாதம், விந்து, சத்தி, சாத்துமான், வயிந்தவம்; சத்தாதி வாக்கு மனாதிகள், சாக்கிராதீதம், சுத்தம், துரியம் விஞ்ஞானர், பிரளயாகலத்து அஞ்ஞானர்; இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி; கவச நியாசங்கள் முத்திரை; பத்மாசனம், பத்திராசனம், சிங்காதனம்; பூரகம், கும்பகம், ரேசகம் என்பன முதலாகவுள்ள வடசொற்களும் சொற்றொடர்களும் அக்காலத்துப் பொது மக்களிடையே வழங்கிய வழக்குச் சொற்கள் சிலவும் இடம் பெற்றுள்ளன.

திருமந்திரம் மற்ற திருமுறைகளிலிருந்து மாறுபட்டு நிற்பது படிக்கும் போதே புலனாகும்.  

இன்றைய பகுத்தறிவுவாதிகளின் பல கருத்துக்கள் திருமந்திரத்தில் ஆங்காங்கே தெரிவது மிகவும் ஆச்சரியமானது.

மனதைக் கவர்ந்த பதிவு

Image result for post in social media

 

கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் அவர்கள் பதிந்த பதிவு.

 

👉சாதத்துடன் *பக்தி* இணையும்போது அது *பிரசாதமாகிவிடும்.!*

👉பட்டினியுடன் *பக்தி* சேரும்போது அது *விரதமாகிவிடும்.!*

👉தண்ணீருடன் *பக்தி* சேரும்போது அது *தீர்த்தமாகிவிடும்.!*

👉பயணத்துடன் *பக்தி* சேரும்போது அது *யாத்திரையாகிவிடும்.!*

👉இசையுடன் *பக்தி* சேரும்போது அது *கீர்த்தனையாகிவிடும்.!

👉செயல்களுடன் *பக்தி* சேரும்போது, அது *சேவையாகிவிடும்.!*

👉பிரம்மச்சரியத்தோடு *பக்தி* சேரும் போது அது *துறவறம்* ஆகின்றது.!

*👉இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*

*🙇ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்.!*

*🙏மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்..!

 

 

 

அம்மா கை உணவு (17) – இனிப்பு வரிகள் – சதுர்புஜன்

இனிப்பு பலகாரங்கள் விற்பனை செய்வோர் உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பதிய வேண்டும்

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.

 

 1. கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018 .
 2. இட்லி மகிமை – ஏப்ரல் 2018
 3. தோசை ஒரு தொடர்கதை – மே 2018
 4. அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
 5. ரசமாயம் – ஜூலை 2018
 6. போளி புராணம் – ஆகஸ்ட் 2018
 7. அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
 8. கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018
 9. கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
 10. சேவை செய்வோம் – டிசம்பர் 2018
 11. பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
 12. பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
 13. வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019
 14. பாயசப் பாமாலை – ஏப்ரல் 2019
 15. ஊறுகாய் உற்சாகம் – மே 2019
 16. பூரி ப்ரேயர் – ஜூன் 2019

 

 

 1. இனிக்கும் வரிகள் !

 

இனிப்பில் ஆயிரம் வகையுண்டு – எங்கள்

இல்லத்தில் இனிமை என்றுமுண்டு.

ஒன்றா இரண்டா எடுத்தியம்ப – அணி

அணியாய் வந்திடும் – ஒரு கணக்குமில்லை.

 

மைசூர் பெயரை தாங்கினாலும் – மைசூர் பாக்

எங்கள் இனிப்பு வகை.

ஜாங்கிரி என்று சொன்னாலும் – அது

கரைந்து போவது எம் வாயினிலே.

 

பல மொழி பேசும் மனிதருண்டு – ஆயின்

பாரதம் முழுதும் லட்டு உண்டு.

பல வகை மனிதர்கள் சேர்ந்ததுபோல் – இங்கே

லட்டிலும் பல்சுவை உண்டு உண்டு.

 

வாயில் கரையும் பயத்தம் லட்டு – சற்றே

பொற பொற எனும் ரவா லட்டு உண்டு.

முத்துமுத்தாய் உதிரும் பூந்தி லட்டு – வட

நாட்டினர் வழங்கிய லட்டு உண்டு.

 

அதிரசம் என்ற இனிப்பு வகை – அதை

மெல்ல ஆயிரம் கதை சொல்லும்.

அட சின்ன சின்ன எள்ளுருண்டை – அது

இனிப்பில் ஹைக்கூ பாடிடுமே.

 

பாதுஷா என்றால் பாதுஷாதான் – அது

இனிப்புக் குவியலின் அரசன்தான்.

பர்பி என்றொரு இனிப்பு வகை – அதில்

எண்ணிக்கையில்லா விதமுண்டே.

 

அல்வாவுக்கென்றே தனிக்கவிதை – இனி

பாடி வருவேன் ஒரு நாள்தான்.

பால்கோவாவும் திரட்டிப்பாலும் – புகழ்

பாட்டிலும் ஏட்டிலும் அடங்கிடுமோ ?

 

இன்னும் இன்னும் என்று எத்தனையோ.

இனிப்புகள் இங்கே உண்டன்றோ !

எத்தனை இனிப்புகள் இருந்தாலும் – என்

அன்னையின் நினைவே பெரிதன்றோ !

  

 

கிரேஸி மோகனுக்கு கவிதாஞ்சலி – சு ரவி

கிரேஸி மோகனின் நெருங்கிய நண்பர் தனது ஆற்றாமையைக் கவிதையாய்ப் படைத்து வெளியிட்டுள்ளார். 

இதோ அந்தக் கவிதை  வரிகள் :

Image result for கிரேஸி மோகன்

 

அழவு மியலா(து) அவன்நினைவாய் ஏதும்
எழுத முடியாது நெஞ்சம்- முழுதும்
துயர்மரத்துப் போச்சே விழி வெறிக்கலாச்சே!
அயர்ந்ததே அந்த ராத்மா!

கலகலக்க வைத்தே கவலை துரத்தி
உலகனைத்தும் உன்திறனால் வென்றோய்! – பலகலைகள்
தேர்ந்தவனே தேகான்ம பாவம் தொலைத்தவனே!
சோர்ந்து குலைந்ததென் நெஞ்சு!

மயிலைக் கபாலியைக் கற்பகத்தை என்றும்
துயிலும் பொழுதும் மறவோய்-வியப்பால்
உனையுலகம் போற்ற உனையென்றும் கர்வம்
தினையேனும் தீண்டிய தில்லை!

எனக்கிரங்கல் வெண்பா எழுதுவாய் என்றே
நினைத்திருந்தேன் ஏமாற்றி விட்டாய்- நினக்கிரங்கல்
நானெழுத நேர்ந்ததே நண்பனே, நீருக்குள்
மீனழுதாற் போலழுதேன் நான்!

எங்கோபிறந்தோம் எவர்மடியிலோ வளர்ந்தோம்
இங்கேன் மனத்தால் இணைந்தோம்நாம்- கங்குகரை
இல்லாக் கடல்போல் இருள்கவிந் தென்நெஞ்சில்
பொல்லாப் பிரிவுத் துயர்தரவோ-நல்லோய்
சிரிப்புக் கிறையாய் வலம்வந்த தேகம்
நெருப்புக் கிரையா வதோ!

நேற்றோ நினைவில்லை உன்னுள் கவிதையெனும்
ஊற்றுக்கண் கண்டு திறந்துவிட்டேன்- ஆற்றலுடன்
காட்டாறு போலக் கவிபொழிந்தாய்! மீண்டுவர
மாட்டாயோ ஏங்கும் மனம்!

என்னை‘ குரு’வென்(று) அழைப்பதுவோ? நண்பனே,
என்னைநீ விஞ்சிப்போய் எத்தனையோநாளாச்சு!
இன்னமும் என்னை உயர்த்தி உரைக்குமுன்
அன்புக்(கு) அடிமையடா நான்!

இன்னுமோர் நூறாண்டிரு நண்பா எம்நெஞ்சில்
என்றும்பதினாறாய்ஏற்றமுற!- குன்றாக்
கவிதை, நகைச்சுவை, ஓவியத்தால் வாழும்
புவியினில் உன்றன் புகழ்!

“எழுதிச்செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும்!
தொழுது போற்றி நின்றாலும் சூழ்ச்சி பலவும் செய்தாவும்
வழுவிப் பின்னால் ஏகியொரு வார்த்தை மாற்றம் செய்யாது
அழுத கண்ணீர் ஆறெல்லாம் அதிலோர் எழுத்தை அழிக்காது”

ஆம்; சற்றும் இரக்கம் காட்டாமல் விதியின் கரம் ஒரு முடிவுரையை எழுதிச் சென்றுவிட்டது.
என் ஆருயிர் நண்பன் இப்போது நினைவுகளிலும், புகைப்படங்களில் மட்டுமே!

அவகாசம் அளிக்காமல் உடனே பிரிந்துசெல்ல அப்படியென்ன அவசரமடா உனக்கு?
யாருன்னை அப்படி அழைத்துக்  கொண்டது?

போதுமெனத் தீர்மானித்துப் புறப்பட்டுச் சென்றாயா?
நோயிற் படுத்திருந்தால் நோன்பிருந்து மீட்டிருப்போம்!
நாற்றிசையும் சுற்றி அமுதம் கொணர்ந்திருப்போம்!
வாய்ப்பே அளிக்காமல் வாய்க்கரிசி போடவைத்தாய்!

வெண்பா எழுதாமல் விண்ணுலகம் போகலாமா?
ஓவியங்கள் தீட்டாமல் விரல்கள் ஓயலாமா?
பெருமாள் மேல் நீபடைத்த வண்ணவிருத்தங்கள்
அருமையிலும் அருமையடா! அவையெல்லம் இசைவடிவில்
உலகெலாம் ஒலிக்க நீகேட்க வேண்டாமா?

கே.பி.டி. சிரிப்புராஜ சோழனை மேடையிலே
நாடகம் ஆக்கித் தருகின்றேன் என்றனக்கு
நீஅளித்த வாக்கை நிறைவேற்ற வேண்டாமா?

மலைமகளும் ,கலைமகளும், அலைமகளும், நீபடைத்த
வெண்பாவைப் புத்தகமாய் விஜய தசமியன்று
பார்க்கப் பொறுமையின்றி உனையங் கழைத்தாரோ!

மாலையிலும், இரவினிலும் தொலைபேசி ஒலித்தாலே
நீயழைக்கிறாயென்று ஓடோடி நான்வருவேன்.
இனியந்த அழைப்பு வாராதே, என்செய்வேன்!
காலை எழுந்தவுடன் கேசவ் ஓவியமும்
கண்ணன் வெண்பாவும் மின்னஞ்சல் கொண்டுவரும்!
இனியந்த வெண்பாக்கள் வாரா! வெறுமையடா!

எல்லாம் மறக்க நினைத்தால், ஓய்வெடுக்கப்
புனா நகருக்குப் புறப்பட்டு வந்துவிடு.
ஷீரடியின் நாயகனைப் பண்டரியின் விட்டலனைச்
சேர்ந்துசென்று தரிசிப்போமென்றழைத்தேன், சரியென்றாய்!
சனிக்கிழமை சரியென்றாய், திங்கள் சரிந்துவிட்டாய்!

வார்த்தை தவறுவது சரியோ, சம்மதமோ!
சொல்ல முடியவில்லை; சொல்லில் அடங்கவில்லை;
சோகச் சுவடுகளைச் சுமக்க முடியவில்லை!

உன் ஓவியங்களையும், உன் கவிதை , உன்வசனம்
உன்னுயர்வு, உன் வளர்ச்சி, உன் பெருமை,சாதனைகள்
எல்லாமே என்னுடைய தென்றே இறுமாந்து
நெஞ்சு நிமிர்ந்திருந்தேன்- இன்று நிலைகுலைந்தேன்!

இதுதான் வாழ்க்கை நியதியென்று விரக்தியுடன்
வேதாந்தம் பேசி வீடு திரும்பிவிட்டோம்!

ஆடிக் களைத்தாலும், அழுது களைத்தாலும்
அடுத்தநாள் வேலைகளைப் பார்க்கத் தொடங்குகிறோம்!

ஆம்;

“இருந்து சென்ற முன்னோரின் இடத்திலெல்லாம் நாம் இன்று
விருந்து செய்து வாழ்கின்றோம் விகடம் சொல்லி மகிழ்கின்றோம்!
இருந்த இடம் விட்டு யாமும் இனி எழுந்து சென்றால் இங்கிருந்து
விருந்து செய்வார் யார்,யாரோ!விகடம் சொல்வார் யார் யாரோ!!”

அமைதி கொள் நண்பா!
அஞ்சலியுடன்,

சு.ரவி

ஆத்மாநாம் நினைவுகள் – வைதீஸ்வரன்

 

(முகநூலிலிருந்து)

Image result for கவிஞர் வைதீஸ்வரன்Image result for ஆத்மாநாம்

 

1984ம் ஆண்டு கவிஞர் ஆத்மாநாம் நம்மை விட்டு அதிர்ச்சி தரும் விதமாக பிரிந்தார். அப்போது அவருக்கு பாரதியாரை விட இன்னும் குறைந்த 33 வயது. அந்தக் குறுகிய ஆயுளுக்குள் அவர் விட்டுச் சென்ற கவிதைத் தொகுப்புகளின் மூலமும் நெருங்கிய நட்பு வட்டத்துக்குள் அவர் பரிமாறிக் கொண்ட சம்பாஷணைகளின் மூலமும் கொஞ்சம் பூடகமாகத் தெரிந்த அவருடைய குடும்ப நிலைமைகள் மூலமும் அவருடைய மானஸீக உலகம் ஒன்று நமக்குத் தட்டுப் படுகிறது.

ஏதோ விதி வசம் போல் ஆத்மாநாமிடம் நான் சில மாதங்களுக்கு மேல் பழகியதில்லை. அந்த சில மாதங்களும் அவர் தனக்குள் ஒரு கவிஞரை கண்டடைந்து கொண்டிருக்கும் பட்டுப்புழுக் காலமாக இருந்தது.

நான் திருவல்லிக்கேணியில் ஞானக்கூத்தன் அறைக்கு சென்று வந்த சில நாட்களில் அவர் மூலையில் அமைதியாக பணிவுடன் அங்கே நிகழும் உரையாடல்களைக் கேட்டுக் கொண்டு தீவிர சிந்தனை வயப்பட்டவராக அமர்ந்திருப்பார்.

74க்குப் பிறகு நான் குடும்ப பிரச்னைகள்..மற்றும் உடல் உபாதைகள் காரணமாக தனியனாகி விட்டேன்.
“ ழ ” பத்திரிகை தொடங்கிய காலத்தில் கவிதை கேட்டு எனக்கு இரண்டொரு முறை கடிதங்கள் எழுதினார். நான் அப்போது எதுவும் எழுதாமல் இருந்தேன்.

ஆத்மாநாம் மன உபாதைகளால் தள்ளப்பட்ட வேதனைகளின் வலிகளுக்கு ஈடான துன்பங்களை நான் உடல் உபாதை காரணமாக அப்போது அனுபவித்துக் கொண்டிருந்தேன். அது இங்கே அவசியமில்லாத விவரம்.

ஆத்மாநாம் படைப்புகளை மீண்டும் வாசிக்கும் நல்வாய்ப்புக் கிட்டிய போது ஒரு நல்ல இலக்கிய நண்பனை நுண்மையான தனித்தன்மையான பார்வையுள்ள படைப்பாளியின் அன்னியோன்யத்தை இழந்து விட்டதான சோகம் எனக்குள் ஏற்படுகிறது.

பொதுவாக ஒரு கவிஞன் எப்படி உருவாகிறான்? அவன் பரிணாமத்துக்கு ஆதாரமான தூண்டுதல் அல்லது சூட்சமமான வீர்யம் எதுவாக இருக்க முடியும்?

யோசிக்கும்போது அநேக சமயங்களில் அது புறவாழ்க்கைக்கும் வாழ்க்கை பற்றிய லட்சிய தரிசனங்களால் ததும்பிக் கொண்டிருக்கும் அவன் சித்தத்துக்கும் இடையே ஏற்படுகின்ற தீராத ஒவ்வாமை தான் என்று தோன்றுகிறது. விடுதலைக்கு ஏங்கும் ஆத்மாவின் வெளிப்பாடுகளாக இந்த வாழ்வின் மீதும் மக்கள் மீதும் ஏற்படுகின்ற அக்கறை காரணமாக வெடிக்கும் தார்மீகக் கோபமாக விரக்தியாக அவன் கவி வார்த்தைகள் வெளிப்படுகின்றன

ஆத்மாநாம் கவிதைகளில் அவன் வாழ்வில் எதிர் கொண்ட நிராகரிப்புகளும் சகஜமான சமரசங்களுக்கு பணிந்து போகத் தெரியாத எளிமையான நேர்மையான மனப்பாங்கும் ஒரு ஆக்க பூர்வமான ரசாயன மாற்றமடைந்து சிறந்த நவீனக் கவிதைகளாக பரிணமிக்கிறதை நான் பார்க்கிறேன்.

“” மறுபரிசீலனை “” என்று ஒரு கவிதையில் சில வரிகள்

நான் மனிதன் தானா என்று யோசித்துக் கொள்ளும் நிர்ப்பந்தங்கள்
தொண்டையில் சிக்கிக் கொண்ட மீன் முள்ளென 
பச்சைப் புல் வெளியில் சிக்கிக் கொண்ட கரும்பாம்பு
வெறுமனே சும்மா இருக்க முடியாத பேனா
சிதறிப் பறக்கும் பிணந்தின்னிக் கழுகுகள்
எங்கோ கேட்கும் கூக்குரல்
துணிக் கயிற்றில் தொங்கும் குரல்வளைகள்

******************

“ காரணம் ” என்று இன்னொரு கவிதை

எதிர்த்து வரும் அலைகளுடன்
நான் பேசுவதில்லை……..
எனக்குத் தெரியும் அதன் குணம்
பேசாமல் வழி விட்டு ஒதுங்கி விடுவேன்.
நமக்கு ஏன் ஆபத்து என்று!..

மற்றொரு நாள்
அமைதியாய் இருக்கையில் 
பலங்கொண்ட மட்டும் 
வீசி எறிவேன் கற்பாறைகளை!
அவை மிதந்து செல்லும்
எனக்குப் படகாக,
**************

ஆத்மாநாமின் கவிதைகள் அனைத்துமே ஒரு அரூப நிலைக்கு உலக வாடைகளற்ற சரீரமற்ற சூழலுக்கு தள்ளி விட வேண்டுமென்ற தீராத தாகத்தை உட்கொண்ட படைப்பாக எனக்கு உணர முடிகிறது. நான் வாசித்த 100 கவிதைகளீல் அதிக பட்சமானவை உயிர் விடுதலையையே ஸ்மரிக்கின்றன.

ஆனால் எந்தக் கவிதையும் வெறும் பிரலாபக் குரலாக ஒப்பாரிகளின் நகலாக துக்கத்தை உற்சவமாக்கும் சாதுரிய ” ஆலாபனைகளாக ” முடங்கி விடாமல் கவிதைகளாக நிலைத்து நிற்கின்றன.

இன்றைய படைப்பு சூழலில் அடிக்கடி நம் கவனத்தை சீண்டுவது ஒரு கவிதை எவ்விதம் தன் கருப் பொருளான பிரச்னையை சரிவரக் கையாளாமல் தோல்வி யடைகிறது என்பது தான்!

ஒரு கலைப் படைப்புக்கும் அது கையாளும் பிரச்னைக்கும் உள்ளுணர்வால் தீர்மானிக்கப் பட்ட ஒரு பொருத்தமான தூரம் அவசியம்
அந்த பிரக்ஞை சார்ந்த இடை வெளி தான் கவிதையின் தரத்தை தெரிவிக்கிறது

ஆத்மாநாமின் அநேக கவிதைகள் இந்தப் பான்மையில் வெற்றி பெற்றிருக்கின்றன

ஒரு கவிஞன் ஆளுமையின் பின்னணியில் புதிய பார்வைகளை பிரதிபலிக்கும் கவிதைப் பத்திரிகையாக ” ழ ” என்ற பிரசுரத்தைத் தொடங்கி அவர் ஆற்றிய மறைமுகமான சேவை மிக முக்கியமானது. இந்த சோதனை முயற்சியில் சேர்ந்து பங்காற்றிய ஞானக்கூத்தன் ராஜகோபாலன் அழகியசிங்கர் யாவருக்குமே இப்பத்திரிகை பயன் தரக் கூடிய அனுபவமாக அமைந்ததுள்ளது..

இப்படிப்பட்ட சீரிய படைப்பாளி இத்தனை இளம் வயதில் மாய்ந்திருக்க வேண்டாம் என்று மனம் வேதனைப்படுகிறது. ஆனால் வயதுக்கும் சாதனைக்கும் சம்பந்தமில்லை என்பதே நாம் அனுபவத்தில் காணும் உண்மை. { Rimbaurd } என்கிற ப்ரஞ்ச் கவிஞன் 19 வயதுக்குள் அருமையான கவிதைகளைப் படைத்து விட்டு இலக்கியத்தையே துறந்து விட்டு பாக்கி ஆயுளை வேறு தேசத்தில் எடுபிடி வேலைகள் செய்து கழித்து விட்டு மாய்ந்து போனான்.

ஆத்மாநாம் ஜூலை மாதத்தில் ஒரு நாள் இறந்து போனார். அப்படி ஒரு ஜூலை மாதத்தில் என் மனம் இயல்பாக அவரைப் பற்றி நினைத்துக் கொண்டு தன்வயமாக ஒரு கவிதையும் எனக்கு எழுத வாய்த்தது 
அந்தக் கவிதையை கீழே தந்திருக்கிறேன் அவருக்கு என் அஞ்சலியுடன்

ஆத்மாவின் குரல்
————————-
கிணற்றில்
என்றோ விழுந்த என் நிலவைத்
தேடிப் போனேன்.; ஒரு நள்ளிரவில்.
நிலவு இன்னும் 
தொலைந்து விடவில்லையெனத் தெரிந்தது.
நடுங்கிய நீர் பிம்பமாய்….
குரல் கேட்டவுடன் நிலவு போல் இல்லை.
“ நீ யார் முகம் என்றேன்? “ 
“உன் முகத்திற்குள் பிறந்த முகம்! “
என வட்டமாய் ஒலித்தது
நீர் மட்டத்தின் மேல்.
சுற்றி வளைக்காதே!. சொல்லு. 
எனது ஆத்மாவா நீ? “ என்றேன்.
“ஆத்மா- நாமே ” என்றது. வளைந்து.

“அடாய்! அன்று
அலையில் தெறித்த மீன்களைப் போல்
அழகான சில கவிதைகளை 
தமிழுக்குத் தந்து விட்டு
நழுவி விட்டாயே……
இருட்டின் ஈரமான ஆழத்திற்கு.. ஏன்? என்றேன்

அது இன்னும் 
எனக்கே வெளிச்சமாகவில்லை
கவிதையின் விந்துகள் போல…”
எனக் குறும்பொலி செய்தது…
……….ழழ் ழழ ழழ்ழா………………….

**************

வைதீஸ்வரன்

என்னை மீண்டும் கேட்காதே!- தில்லைவேந்தன்   

image
எங்கே அந்த மின்னலென
     என்னை மீண்டும் கேட்காதே!
இங்கே உன்றன் இடையாக
     இருக்கும் தன்மை அறியாயோ?
எங்கே அந்த  மேகமென
     என்னை மீண்டும் கேட்காதே!
இங்கே கரிய அருவியென
     இறங்கும் கூந்தல் வேறெதுவோ?எங்கே அந்தத்  தென்றலென
     என்னை மீண்டும் கேட்காதே!
இங்கே  உன்றன் நடையழகில்
     இயையும் மென்மை அதுவன்றோ?
எங்கே அந்த  நிலவெனவே
     என்னை மீண்டும் கேட்காதே!
இங்கே முகமாய் வடிவெடுத்த
       எழிலை எதுவென்று எண்ணிவிட்டாய்?எங்கே அந்தத் தேனெனவே
     என்னை மீண்டும் கேட்காதே!
இங்கே உன்றன் சொல்லினிலே
     இருக்கும் இனிமை வேறென்ன?
எங்கே அந்த வண்டெனவே
     என்னை மீண்டும் கேட்காதே!
இங்கே உன்னைச் சுற்றிவரும்
     என்றன்  உள்ளம்  அதுவன்றோ?
    
   
    

அத்திவரதர்

Related image

 

1939 மற்றும் 1979-ம் ஆண்டுகளில் வெளியான அத்தி வரதர் 01/07/2019 மீண்டும் நமக்கு  அருள்பாலிக்க ஜூலி 1, 2019 அன்று வந்திருக்கிறார். 

அத்திவரதர், ஜூலை 1 லிருந்து 48 நாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்..

காஞ்சிபுரம் ஶ்ரீ வரதராஜ பெருமாள்  ஆலயத்தில் அனந்தசரஸ் என்ற திருக்குளம் இருக்கிறது.

இந்த திருக்குளத்திற்குள் அத்திவரதர் பெருமாள் நிரந்தரமாக வாசம் செய்கிறார்.

 

 

இவர் அத்தி மரத்தால் ஆனவர். இந்த சிலையை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து, பூஜைகள் செய்து, ஒரு மண்டல காலம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைப்பது வழக்கம்.

இறுதியாக கடந்த 1979-ம் ஆண்டு அத்திவரதர் சிலை பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளின் ஆதி மூர்த்தம்தான் அத்தி வரதர். தற்போது நாம் கருவறையில் தரிசிப்பது வரதராஜப் பெருமாள் என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் அவர் பழைய சீவரம் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட தேவராஜப் பெருமாள்தான்.

இந்தக் கோயிலின் ஆதி மூர்த்தியான அத்தி வரதர் பிரம்ம தேவரால் உருவாக்கப்பட்டவர்.

அவர்தான் திருக்குளத்தில் வாசம் செய்வதுடன், 40 வருடங்களுக்கு ஒருமுறை வெளியில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.

அத்தி வரதரின் புராண வரலாற்றை இங்கே தெரிந்துகொள்ளலாமே.

ஆதியில் சிருஷ்டியை மேற்கொண்ட பிரம்மதேவர், தனது காரியம் செவ்வனே நடைபெற காஞ்சியில் ஒரு யாகம் செய்தார்.

தன்னை அழைக்காமல் யாகம் செய்த பிரம்மதேவரிடம் கோபம் கொண்ட சரஸ்வதி தேவி, யாகத்துக்கு வரவில்லை.

சரஸ்வதி தேவி இல்லாமல் பிரம்மதேவரால் யாகத்தைப் பூர்த்தி செய்ய முடியாது. எனவே, பிரம்ம தேவர் சரஸ்வதி தேவிக்குப் பதிலாக காயத்ரி, சாவித்திரி ஆகியோரின் துணையுடன் யாகத்தைத் தொடங்கினார்.

சினம் கொண்ட சரஸ்வதி தேவி, பிரம்மதேவரின் யாகசாலையை அழிக்க வேகவதி ஆறாக மாறி வெள்ளப்பெருக்கெடுத்து வந்தாள்.

பிரம்மதேவரின் யாகத்தைக் காக்கத் திருவுள்ளம் கொண்ட திருமால், நதிக்கு நடுவில் சயனக் கோலம் கொண்டார்.

வெட்கிய சரஸ்வதி தேவி தன் பாதையை மாற்றிக்கொண்டாள்.

பிரம்மதேவரின் யாகமும் நிறைவு பெற்றது.

தனக்காக வந்து யாகத்தைக் காத்த பெருமாளின் கருணையை எண்ணி நெகிழ்ந்த பிரம்மதேவர், பெருமாளைப் பணிந்து தொழுதார்.

தேவர்களும் பெருமாளை வணங்கி வரங்களைக் கேட்டனர். அவர்கள் விரும்பிய எல்லா வரங்களையும் கொடுத்ததால், பெருமாள், `வரதர்’ என்ற திருப்பெயர் கொண்டார்.

ஒரு சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் பெருமாள் தேவர்கள் அனைவருக்கும் புண்ணியகோடி விமானத்தில் சங்கு, சக்கரம், கதை தாங்கிய திருக்கோலத்தில் காட்சி தந்தார்.

எனவே, அதே நாளில் பிரம்ம தேவர், தனக்கு தரிசனம் தந்த பெருமாளின் திருவடிவத்தை அத்தி மரத்தில் வடித்து வழிபட்டார்.

இப்படித்தான் அத்தி வரதர் மண்ணுலகில் எழுந்தருளினார்.

பிரம்மதேவரால் உருவான அத்திமர வரதராஜரை தேவலோக யானையான ஐராவதம் தனது முதுகில் சுமந்தது. பின்னர் ஐராவதம் சிறு குன்றாக உருமாறி அத்தி (யானை)கிரி, வேழமலை என்று பெயர் பெற்றது.

அத்திகிரியில் எழுந்தருளிய பெருமாள் ஞானியர்களுக்கும் தேவர்களுக்கும் வேண்டும் வரங்களை வேண்டியபடியே அருள்புரிந்து வந்தார்.

பின்னர் ஒருமுறை பிரம்மதேவர் அத்தி வரதரை முன்னிருத்தி ஒரு யாகம் செய்தார்.

யாகத் தீயின் காரணமாக அத்தி வரதர் பின்னப்பட்டுவிட்டார். பிரம்மதேவர் பதறிப் போனார்.

வேறு எந்த வடிவத்திலும் பெருமாளை உருவாக்க முடியாத சூழலில், பிரம்மா திருமாலை வேண்டினார்.

அவருடைய ஆலோசனையின்படி, அத்தி வரதரை, கோயிலிலுள்ள நூற்றுக் கால் மண்டபத்துக்கு வடக்கிலுள்ள இரண்டு திருக்குளங்களில் தென் திசையிலுள்ள நீராழி மண்டபத்துக்குக் கீழே உள்ள மற்றொரு மண்டபத்தில் வெள்ளிப் பேழையில் சயனக் கோலத்தில் வைத்தார்.

யாகத்தீயில் உஷ்ணமான பெருமான், கலியுகம் முழுக்க இந்த அமிர்தசரஸ் எனும் ஆனந்த புஷ்கரணி திருக்குளத்தில் குளிர்ந்த நிலையில் இருப்பார் என்றும், இதனால் எந்தக் காலத்திலும் இந்தத் திருக்குளம் வற்றாது என்றும் பிரம்மதேவருக்குச் சொல்லப்பட்டது.

அத்தி வரதர் திருக்குளத்துக்கு அடியே சென்றதும், பழைய சீவரம் என்ற ஊரில் இருந்த தேவராஜப் பெருமாள் அத்திகிரிக்கு அருள வந்தார்.

பிரம்மதேவருக்குப் பெருமாள் கட்டளையிட்டபடி, 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்து நீரை எல்லாம் இறைத்து விட்டு பெருமாள் மேலே எழுந்தருளுவார்.

சயன மற்றும் நின்ற கோலமாக 48 நாள்கள் பக்தர்களுக்கு வரதர் சேவை சாதிப்பார்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறையே இவரைத் தரிசிக்க முடியும் என்பதால் அப்போது பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

வாழ்வில் ஒருமுறையேனும் இவரை தரிசிப்பது மோட்சத்தை அளிக்கும் என்பார்கள்.

இரண்டாவது முறை யாரேனும் தரிசித்தால் வைகுந்த பதவி பெறுவார்கள் என்பதும் ஐதீகம்.

மூன்று முறை தரிசித்த மகா பாக்கியவான்களும் சிலருண்டு

 

தவறின்றி தட்டச்சுவோம் வாருங்கள் -கிருபானந்தன்

 

தமிழ் எழுதி வருபவர்களில் பலர் இப்போது கணினியைத்தான் பயன்படுத்து கிறார்கள். எல்லா எழுத்தாளர்களும் இப்போது தட்டச்சாளர்  ஆகிவிட்டார்கள். முறையாக தமிழ் தட்டச்சு பயின்று தமிழில் தட்டச்சு செய்பவர்கள்  மிகக் குறைவு.  தொழில் முறையில் தட்டச்சு செய்யும்  நபர்களும் மிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ளார்கள்.

வலைப்பூக்களில் தொடர்ந்து எழுதுவோர் பல்வேறு விசைப் பலகைகளையும்  TAM TAB TSCu TSCii போன்ற பல எழுத்துரு வகைகளையும் பயன் படுத்தி வந்தார்கள்.  இப்போது ஒற்றை குறியீடு அல்லது ஒழுங்குக்குறி எனப்படும் யூனிகோட் முறைதான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அதுவும்  தங்க்லீஷ் எனப்படும் ஒலியை வைத்து தட்டச்சு செய்வதற்கு பலரும்  பழகிவிட்டார்கள். முகநூல்  போன்ற செயலிகளிலும் இது பயன்பட்டு வருகின்றது. கூகிள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் இதற்கான மென்பொருளை இலவசமாக அளித்து வருகின்றன.

தட்டச்சு ஓரளவிற்கு சீரமைப்பிற்கு உள்ளாகி இருக்கிறது. அடுத்த மிகப் பெரிய தேவை பிழைதிருத்தம். தமிழக அரசால் மென் தமிழ் சொல்லாளர் என்ற மென்பொருள் வெளியிடப்பட்டிருந்தாலும் இது குறுந்தகடு மூலமாகவே நமது கணினியில் நிறுவிக்கொள்ளமுடியும். இது பரவலாகப் பயன்படுத்தபடுகிறதா என்று தெரியவில்லை. Learnfun System என்றொரு அமைப்பும் ஒரு பிழைத்திருத்தியை உருவாக்கி இருக்கிறது. இதன் பயன்பாடு மற்றும் நிறைகுறைகளும்   அவ்வளவாக அறியப்படவில்லை.

பெரும்பாலான பயன்பாட்டாளர்கள் விரும்பி உபயோகித்துப் பயனடைவது இணையத்தில் உபயோக்கிக்கூடிய http://vaani.neechalkaran.com/ என்னும் இணைய தளம்தான். குவிகம் மின்னிதழ் இதனால் மிகவும் பயனடைந்து வருகிறது

இந்த மென்பொருளை உருவாக்கிய திரு ராஜாராமன் அவர்கள் தொடர்பு தற்செயலாகக் கிடைத்தது. குவிகம் இலக்கிய வாசலின் ஜூன் மாத   நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார். இணையத்தில் இயங்கும் பிழை திருத்தியைத் தவிர தமிழுக்காக பல மென்பொருட்களையும் உருவாக்கியிருக்கிறார். தமிழில் ஒற்றைக்குறியீடு முறையில் தட்டச்சு  செய்வோருக்கு பயன்படும் மென்பொருட்களும்  அவற்றின்   இணைய முகவரிகளும் பின் வருமாறு.

 

தமிழ் எழுத்துப்பிழை திருத்தம் செய்ய இதனைப் பயன்படுத்தலாம்.

http://vaani.neechalkaran.com

 

பலர் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் தாமதமாக வாய்ப்பு உண்டு என்பதால் ஒரு சமயத்தில் சில பக்கங்களே இதில் பிழைதிருத்த இயலும்.  இணையம் இன்றி பயன்படுத்த மென்பொருளும் உள்ளது. இது தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் வெளியிடப்பட்ட     http://www.tamilvu.org/en/content/tamil-computing-tools

பல நாட்களாக பழக்கத்தில் இருந்துவரும் எழுத்துருக்களை தேவைப்பட்ட எழுத்துருவாக மாற்றிக்கொள்ள ஒரு தளம் உள்ளது.

http://dev.neechalkaran.com/oovan

இது NHM அழகிபோன்ற மென்பொருட்களையும்  http://www.suratha.com/reader.htm  , https://kandupidi.com/converter/ இணைய தளங்களையும் போன்றது

 

200க்கும் மேற்பட்ட தமிழ் யுனிக்கோட் எழுத்துருக்கள் கிடைக்கும் இணைப்புகளை கீழ்கண்ட தளத்தில் தருகிறார் ராஜாராமன்.

http://oss.neechalkaran.com/tamilfonts/

 

தட்டச்சு செய்பவற்றை ஒலிவடிவத்தில் மற்ற மொழி எழுத்தாக மாற்றும் ஒரு தளம்

http://macrolayer.blogspot.com/p/indic-transliteration.html

 

சந்தி இலக்கணத்தையும் எளிதில் ஒருவர் புரிந்து கொள்ள வழிகாட்டி மரம் ஒன்றும் உருவாக்கியுள்ளார். இது மிகுந்த பயனை அளிக்கக்கூடியது

http://tree.neechalkaran.com/p/sandhi.html

 

மேலும் இரு வித்தியாசமான செயலிகளை இவர் தயாரித்திருக்கிறார்.

a

கோலம் வரையும் செயலி

http://dev.neechalkaran.com/p/kolam.html

ஆடுபுலி ஆட்டம் விளையாடும் செயலி

http://dev.neechalkaran.com/p/aadu-puli.html

 

இளைஞர் ராஜாராமன் உடன் குவிகம் இல்லத்தில் மேற்கண்ட பயன்பாடுகளை தெரிந்துகொள்ள ஒரு “HANDS ON” வைக்கலாமா? உங்கள் கருத்து தேவை.

 

நண்பரைத் தொடர்புகொள்ள

திரு ராஜாராமன்
neechalkaran@gmail.com

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

இது தொற்று வியாதியா? பரம்பரை வியாதியா?
மாலை ஏழு மணியிருக்கும் – மூன்று தலைமுறையைச் சேர்ந்த மூன்று பெண்கள் – மாமியார், மருமகள், பெயர்த்தி – என் கிளினிக் வந்தார்கள்.
நான்கு வயதுப் பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டிருந்தார் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க மருமகள்! சுமார் ஐம்பது வயதுக்கருகில் இருந்த மாமியார் முகம் கொஞ்சம் சோர்ந்திருந்தது!
மகளின் மூக்கில் சளியுடன், புண்ணாகிப் போயிருந்த மூக்கு நுனியைக் கையில் வைத்திருந்த ‘வெட்’ டிஷ்யூ பேப்பரால் பட்டும் படாமலும் ஒற்றித் துடைத்துக் கொண்டிருந்தார் மருமகள்.
எனக்கு வலது பக்கம் ஸ்டூலில், மாமியாரும், எதிரில் நாற்காலியில் மருமகள் தன் மகளுடனும் அமர்ந்தனர்.
என்ன என்பதைப்போல் நான் பார்க்க, “அம்மாவுக்குதான்” என்றார் மருமகள்.
கைகளிலும், கால்களிலும் வெடிப்பும், ஆங்காங்கே ‘சொர’ ‘ சொர’ என்ற தோலும், கை மருந்தாகத் தடவிய பச்சைக் களிம்பின் மிச்சம் மீதியும் என்னைப் பார்த்து முறைத்தன.
“ம், எவ்வளவு நாளா இருக்கு?”
“கொஞ்ச நாளாவே இருக்கு”
“ஒரு இரண்டரை நாளா இருக்குமா?” – தோராயமாகக் கூட எப்போதிருந்து என்று சொல்லாதவர்களுக்கு என் பொதுவான கேள்வி இது!
சிரிப்பும், கடுப்புமாய் ஒரு முக பாவத்துடன், “ரெண்டு, மூணு வருஷமாய் இருக்கு!”
“எப்படி ஆரம்பித்தது?”
“தெரியலை. தண்ணீல நிற்கறதாலயும், பத்து பாத்திரம் தேய்க்க ………. யூஸ் பண்ணறதாலயும் வரதுன்னு நெனச்சேன். அப்பொப்ப புண்ணாயிடும். எரிச்சலும், வலியும் படுத்தும்”
“சுகர் உண்டா?”
“கிடையாது. போன வாரம்தான் செக் பண்ணினேன்”
“மேல என்ன பூசினீங்க?”
“வெறும் தேங்காய் எண்ணைதான் – நேத்திக்குதான், வீட்டு செர்வண்ட் மெய்ட் மஞ்சளும், வேப்பிலையும் அரைத்துப் போட்டாள்”
“சந்தோஷம். வீசிங், டஸ்ட் அலர்ஜி ஏதேனும் உண்டா?”
“அதெல்லாம் ஒண்ணும் கிடையாது சார் – இந்தக் கை,கால் அலர்ஜிதான் ,அரிச்சு திரும்பத் திரும்ப கிளைச்சிக்கறது”
நீண்ட நேரம் தண்ணீரில் வேலை செய்பவர்களுக்கு வரக்கூடிய ‘இரிடண்ட்’ டெர்மடைடிஸ் – உடன் பாத்திரம் தேய்க்க உபயோகிக்கும் சில பொடிகளால் வரும் ‘கான்டாக்ட் டெர்மடைடிஸ்’, அதன் மேல் வரக்கூடிய பாக்டீரியல் / பூஞ்சை தொற்று – எல்லாமாகச் சேர்ந்து வரக்கூடிய கரப்பான் வகைத் தோல் வியாதி இது. கூடியவரை கை கால்களை ஈரமில்லாமல் வைத்துக்கொள்வது (’எப்படியாம்?’ என்று என்னை முறைக்கும் மகளிர், காய்ந்த கைப் பிடித் துணியையோ, அணிந்திருக்கும் நைட்டியையோ உபயோகித்து அவ்வப்போது துடைத்துக் கொள்ளலாம், துணி கிளவ் உபயோகிக்கலாம் – அல்லது அலர்ஜியே இல்லாமல், நியூஸ் பேப்பர், முகநூல் போன்றவற்றில் குனிந்தபடி மூழ்கியிருக்கும் கணவரை பாத்திரம் கழுவுதல், புளி கரைத்தல் போன்ற சின்ன சின்ன வேலைகளைச் செய்யச் சொல்லி, உங்கள் கையை ‘டிரை’யாக வைத்துக் கொள்ளலாம்!), ‘மாய்சரைசிங் லோஷன்களை உபயோகிப்பது, அலர்ஜிக்கும் பொடி, திரவங்களை தவிர்ப்பது போன்ற வழிகளை ஆராயலாம்!
போதிய அறிவுரைகளைச் சொல்லி, மருந்து மாத்திரைகளுடன் மாமியாரை அனுப்பிவைத்தேன். வெளியே சென்ற மருமகள், குழந்தையுடன் தான் மட்டும் தனியே திரும்ப உள்ளே வந்தார். குழந்தையின் மூக்கைத் துடைத்தவாறே, என்னைப் பார்த்து, ‘ சார், அம்மாவுக்கு வந்திருப்பது ‘ஒட்டுவார் ஒட்டி’ இல்லையே? ‘ என்றார் கவலையுடன்.
“இல்லையம்மா” என்றேன்.
“அதுக்கு இல்லே, குழந்தைக்கும் நாலு நாளா இப்படிப் புண்ணாகிறது – மூக்கு, மேல் உதடு, கை, தொடை ன்னு எல்லா இடத்துலேயும் வருகிறது. அம்மாகிட்டேந்து வந்திருக்குமோன்னு ஒரு கவலை”
“அதற்கான வாய்ப்புகள் குறைவு. இது குழந்தைகளுக்கு வரக்கூடிய சாதாரண புண் – இம்பெடைகோ – சரியாகக் குளிப்பாட்டாததனாலயும், மூக்கு சளியை ஈஷிக்கொள்வதாலயும், புன்ணிலிருந்து வரும் நீர் மற்ற இடங்களில் படுவதாலும் வரும் பாக்டீரியல் தொற்று” என்று கூறி, அதற்கான ஆண்டிப்யாடிக் மற்றும் பூசிவதற்கு கிரீம் எழுதிக்கொடுத்து அனுப்பினேன். வெளியே போகுமுன் “ அம்மா குழந்தைய ஹாண்டில் பண்ணலாமா? குழந்தைக்கும் வந்திடுமா? எங்க வீட்டில் இதுமாதிரி யாருக்கும் கிடையாது” என்றார். குரலில் கொஞ்சம் அருவெறுப்பு கலந்த பயம் இருந்தது.
“அம்மாவின் ப்ராப்ளம் வேறு – குழந்தைக்கு வராது. குழந்தையை நன்கு குளிப்பாட்டி, மண்ணில் விளையாடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மூக்கில் வரும் சளியை ஈஷிக்கொள்ளாமல், துடைத்து விடுங்கள் – அது போதும் . ஆனாலும் அம்மாவை இரண்டு மூன்று நாட்கள் குழந்தையைத் தூக்கச் சொல்லாதீர்கள் – குழந்தையின் புண் அம்மவுக்கு வர வாய்ப்புகள் உண்டு” என்றேன். என்னை முறைத்தாற்போல் இருந்தது – தலையை சிறிது ஆட்டியவாறு அம்மணி வெளியே சென்றார்.
ஒருவர்க்கொருவர் வரும் வியாதிகள் – CONTAGEOUS AND COMMUNICABLE – தொடுதலால் வருபவை, வெளியில் இருக்கும் மாசு மற்றும் நோய்த் தொற்றுகளால் வருபவை எனப் பிரிக்கலாம்.
எல்லாத் தோல் வியாதிகளும் பரம்பரை வியாதிகளோ, தொற்று வியாதிகளோ அல்ல.
வீண் கவலைகள், வீட்டில் குழப்பத்தையே உண்டாக்கும்!