சம்யுக்தா பரபரப்புடன் தொலைப்பேசியில் என்னைக் கூப்பிட்டு அவசரமாக தன் மகள் புனிதாவை அழைத்து வர அனுமதி கேட்டாள். அவள் வீட்டிற்குப் பக்கத்தில் என்னைப் பார்த்த ஒருவர் பரிந்துரை செய்ததாகத் தெரிவித்தாள். முக்கியமாக மருந்து இல்லாத சிகிச்சை என்பதைக் கேள்விப் பட்டதாகக் கூறினாள். எங்கள் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர் துறையில் இவ்வாறே செயல் படுவோம் என விளக்கம் அளித்து, என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன்.
சம்யுக்தாவின் குடும்பம், ஓய்வு பெற்றிருந்த மாமியார், மாமனார் ரத்தினம், வங்கியில் வேலை செய்யும் கணவன் மகாலிங்கம், ஆர்க்கிடெக்சர் பனியில் ஒரே மகள் புனிதா. இவள் இல்லத்தரசி. வீட்டின் சகலமும் பார்த்துக் கொள்பவள். அதனால்தான் மகள் உங்களைப் பார்க்க நானே நேரம் குறிக்கிறேன் என்று விளக்கினாள். இன்றைய காலகட்டத்தில் இது அதிசயம் அல்ல, தாயாரோ தந்தையோ தன் வேலைக்குப் போகும் பிள்ளைகளுக்கு ஆயிரம் பொறுப்புக்கு மத்தியில் இதற்கெல்லாம் நேரம் இருக்காது என்று அப்பாயின்ட்மென்ட் கேட்பது. பிள்ளைகளுக்கு எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்து கொடுப்பதில் இந்தத் தூது வேலை செய்வதும் அடங்கும்.
எதற்காகப் புனிதா என்னைப் பார்க்க வர வேண்டும் என்பதற்கும் சம்யுக்தா விவரமாக எடுத்துச் சொன்னாள். புனிதா பிறந்ததும் அவள் மாமனார் ரத்தினம், தெளிவாக சம்யுக்தாவிடம் சொன்னது, “எக்காரணத்திற்கும் பிறந்த மகாலட்சுமியைக் கண்களில் துளிகூட கண்ணீர் வரக்கூடாது. அதுக்கு நீ மட்டுமே பொறுப்பு” என்றார். இதைச் சாத்தியம் ஆக்க சம்யுக்தா தான் என்னென்னவோ செய்தேன், செய்கிறேன் என்றாள்.
எனக்குப் புரிய வைக்க சில நிகழ்வுகளை விவரித்தாள். புனிதா நர்ஸரி படித்தவரை ரத்தினமும், மாமியாரும் குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு தான் போக வேண்டும் என்றே வற்புறுத்தினார்கள். சம்யுக்தா அலட்டிக்கொள்ளாமல் அந்த பதினைந்து நிமிடத்திற்குப் புனிதா இடுப்பில், கையில் அவள் பை என்று கூட்டிக் கொண்டு போவாள். புனிதா மேல் வகுப்புகள் போன பிறகு, பள்ளியிலிருந்து பல முறை வீட்டிற்கு புனிதாவை அழைத்து வரச் சொல்வார்கள், அவளுக்குத் தன் நண்பர்களுடன் வரப் பிடிக்கவில்லை என்பதால்! வீட்டில் என்ன செய்து கொண்டு இருந்தாலும் அதை அப்படியே விட்டு விட்டுப் போக வீட்டின் பெரியவர்கள் வலியுறுத்திச் சொல்லி, இருபது நிமிடத்தில் திரும்பி வரச் சொல்வார்கள். பள்ளிக்கூடம் போகவே பதினைந்து நிமிடமாகும்.
புனிதாவுடன் அவள் வகுப்பு தோழி சண்டை போட்டு விட்டால் ரத்தினம் உடனே போய்விடுவார். அவர், எக்காரணத்தினால் ஆயிற்று என்பதைக் கேட்க மாட்டார், கடினமாக மற்றவர்களைக் கண்டித்து வருவார். வகுப்பு தோழிகள் அவளிடம் தயங்கி, ஜாக்கிரதையாகப் பழகினார்கள்.
புதிதாகச் சேர்ந்த ரமாவுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தாள். ஒரு நாள் புனிதா அவளைக் கிள்ளி, பிறாண்டி விட்டு, அவள் அலற, பிறகு அழுது மன்னிப்பு கேட்டாள். மிக வெட்கம் ஆகியது. இதற்குப் பிறகு தோழி இருந்தாலும் அதில் தோழமை இல்லை.
ரத்தினம் சொன்னதைக் கடைப்பிடிக்க, புனிதாவின் எல்லா தேவைகளையும் அம்மாவே செய்து கொடுத்து வந்ததால் காலேஜ் சேர்ந்ததும் புனிதா தடுமாறினாள். ரெக்கார்ட் புத்தகத்தை அம்மாவையே எழுத வைத்தாள். எழுதியதை நக்கல் செய்வாள். தாத்தா பாட்டி கணவரும் புனிதாவுடன் சேர்ந்து நகைப்பார்கள்.
வேலைக்குச் சேர்ந்ததும் டீமுடன் ஒத்துப்போக முடியாமல் தவித்தாள். புனிதாவின் வற்புறுத்தலால் சம்யுக்தா அதைச் சரிசெய்ய அவளுடன் வேலை செய்பவர்களுடன் பேசிப் பார்த்தாள். அவர்கள் இதை விசித்திரமாகப் பார்த்தார்கள். நண்பர்கள் வளர்த்துக் கொள்ளக் கஷ்டப் பட்டாள்.
இப்போது புனிதாவிற்கு வயது இருபத்தி ஆறு, அம்மாதான் நேரம் குறிக்க அழைத்தாள். அடுத்த நாள் வரச் சொன்னேன். வந்தாள்.
சம்யுக்தா வந்தாள். புனிதா வர நேரமாகும் என்றாள். அரை மணிநேரம் காத்திருந்தும் வரவில்லை என்பதால் சம்யுக்தாவிடம் விவரங்களைச் சேகரித்தேன். சம்யுக்தா பொறியியல் படித்த பட்டதாரி. புனிதா பிறப்பதற்கு முன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தாள். வேலைக்குப் போவதற்கு முன் சமையல் செய்து, மேஜையில் வைப்பாள். மாமியார் தனக்கும், ரத்தினத்திற்கும் பரிமாறி விடுவாள், மற்ற வேலைக்குச் சுமதி என்றவள் வருவாள். குழந்தை பிறந்த பின் வீட்டினர் சொன்னதால் சம்யுக்தா வேலையை ராஜினாமா செய்தாள்.
சொன்னதைச் செய்வது சம்யுக்தாவுடைய பழக்கம். எல்லோரையும் அனுசரித்துச் செல்பவள். பல வருடங்களாக அவள் புனிதாவை கண்டிக்க முயன்றதுண்டு, ஆனால் “இல்லை” என்று சொன்னால் வீட்டில் எல்லோரும் அவளைத் திட்டுவதால் புனிதாவை ஒன்றும் சொல்லவோ சரி செய்யவோ முடியவில்லை. வருத்தப் பட்டாள், வேதனை தந்தது என்றாள்.
ஸெஷன் முடியும் வரை புனிதா வரவில்லை. அடுத்த முறை புனிதா வருவதற்கு நாள் குறித்து விட்டு சம்யுக்தா சென்றாள். இரண்டாவது முறையும் சம்யுக்தா வந்துவிட்டாள், புனிதா கொஞ்சம் தாமதமாக வருவாள் என்றாள். வரவில்லை.
இதைப் பற்றி சம்யுக்தாவை விளக்கச் சொன்னேன். இதிலிருந்து அவர்களைப் புரிந்து கொள்ளவும் முயன்றேன். புனிதா ஏன் வரவில்லை என்பதை எடுத்துக் கொண்டோம். என்னை ஆலோசிக்க வேண்டும் எனக் கேட்டது புனிதா தான். வரவேண்டிய அன்று காலை சம்யுக்தா அவளை அலுவலகத்திலிருந்து நேராக வரப் பரிந்துரை செய்தாள். புனிதா திரும்பத் திரும்ப அம்மாவை அலுவலகம் வந்து தன்னை அழைத்துச் செல்லச் சொன்னாள். சம்யுக்தா நேராக வந்து விட்டாள் என்று தெரிந்ததும் புனிதாவிற்கு கோபம், வர மறுத்து விட்டாள். வீடு திரும்பிய பின்னர் சம்யுக்தா இதை அறிந்தாள்.
இரண்டாம் முறையும் புனிதா வராதபடி நேர்ந்தது. புனிதா தன் அம்மாவைப் பழி வாங்குவதாக எண்ணி வராமல் இருந்தாள். சம்யுக்தா தன் அணுகுமுறையை மாற்றி செயல் படும் நேரம் வந்துவிட்டது என்று எனக்குத் தோன்றியதால், அவளுடன் ஆரம்பித்தேன். சம்யுக்தாவின் ஒழுக்கமும் அடக்கமும் மாற்றல் கொண்டு வருவதற்கு உதவின.
சம்யுக்தா, மூன்றே ஸெஷனில் இதைப் புரிந்து கொண்டாள். பார்த்துப் பார்த்துச் செய்வதால் புனிதாவிற்கு உணர்வுகளை வெளிப்படுத்துவது, சமூகத் திறன், கட்டுப்பாடு என்று பல திறன்கள் ஊனமாக இருந்தன. இவற்றை வளர்க்கச் சந்தர்ப்பம் தராததால் எப்படி அணுக வேண்டும் என்பது தெரியாத தவிப்பின் விளைவுகள், கிள்ளுவது, ஆக்ரோஷப் படுவது, இஷ்டப் படி நடப்பது.
சம்யுக்தாவை புனிதா தன் வாழ்க்கையில் எந்தெந்த சந்தர்ப்பங்களைச் சந்தித்தாள், அதை யார் அவளுக்காகக் கையாண்டார்கள், அதைப் புனிதா தானே செய்திருக்க முடிந்து இருக்குமா என்பதைக் குறித்து வரப் பரிந்துரைத்தேன். நீண்ட பட்டியலும் விளக்கமும் வந்தன. சிலவற்றை எடுத்துக் கொண்டு, அதை எவ்வாறு சம்யுக்தா தன் மகளிடம் அதைச் செய்ய வைத்திருக்கலாம் என்பதையும், எப்படி வீட்டில் உள்ள பெரியவர்களின் ஒத்துழைப்பு சேர்த்துக் கொண்டு இருக்க முடியும் என்பதையும் பல கோணங்களில் ஆலோசித்தோம்.
தான் இதை மேலும் புரிந்து கொள்ள இன்னொரு செஷன் வேண்டும் என்று நேரம் குறித்துக் கொண்டு மறுபடி வந்தாள். இந்த இடைவேளையில் சம்யுக்தாவை ஓரிரு முறை புனிதாவிடம் மாறி செயல்பட முயலச் சொன்னேன். மற்றவர்களின் எதிர்வினைகள் என்னவென்று குறித்து வரச்சொன்னேன். சம்யுக்தாவிடம் சொன்னால் செய்வாள், செய்தாள்.
இந்த நான்கு வாரக் காலகட்டத்தில் சம்யுக்தா திரும்ப புது மனோதிடம் பெற்றது போல் இருந்தது என்றாள். இந்நாள் வரை தன்னால் முடியும், பெரியவர்களிடம் விளக்கிச் சொல்ல முடியும் என்று பார்க்காமல், எதைச் சொன்னாலும் தலையை ஆட்டிக் கொண்டு இருந்தேன் என்று தன் நிலைமையை வர்ணித்தாள். மேற்கொண்டு எப்படி நன்றாக அணுக முடியும் என்பதைப் பற்றி உரையாடினோம்.
சொல் பேச்சைக் கேட்பது அவசியம். அவரவர் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு, தன் மகளிடம் இது இல்லை என்பதை உணர்ந்தாள்.
இத்துடன் இன்னொன்றையும் புரிந்து கொண்டாள், அவள் மாமனார் சொன்னது “அழ வைக்கக் கூடாது” என்று. இதைக் கொஞ்சம் மாற்றிப் போட்டுப் பார்க்கத் துணிந்தால். அவர் சொன்னது குழந்தை வாழும் சூழலை இதமாக வைக்க வேண்டுமென்று. அதைச் செய்தேனா? இன்னும் இரண்டு ஸெஷன்களுக்கு உரையாடினோம். சம்யுக்தா தன்னை சுதாரித்து வந்தாள். இவளுடைய மாற்றத்தைப் பார்த்து, ரத்தினம் வந்து என்னைச் சந்தித்து, விவரங்களைப் பகிர, அவரும் புரிந்து கொண்டார்.
அவர்தான் புனிதாவை என்னை ஆலோசிக்கச் சொன்னாராம். அவருக்கு அப்பொழுது தான் அவள் நேரம் குறித்து விட்டு பின்பு வராதது தெரிந்தது. புனிதாவை கண்டித்தார். புனிதாவிற்கு தூக்கி வாரிப் போட்டது.
அம்மாவுடன் அடுத்த நாள் வந்துவிட்டாள். தான் வராதது சம்யுக்தாவினால் தான் என்றாள். தன்னை கூட்டிக் கொண்டு வராததால் இப்படி ஆனது என்று விளக்கினாள். இதைச் சொல்கையில், பக்கத்தில் உட்கார்ந்திருந்த அம்மாவைப் பல்லைக் கருகருக கடித்துப் பார்த்து, முழங்கையால் இடித்துச் சொன்னாள். சம்யுக்தா வலி என்றோ, செய்யாதே என்றோ சொல்லவில்லை.
புனிதா தனக்கு ஆபீஸில் எதுவும் பிடிக்கவில்லை என்றாள். டீம் ஹெட் அவள் மற்றவர்களுடன் கலந்து பேசாமல் வேலை செய்வதைக் கண்டித்ததாகச் சொன்னாள். இந்த வேலையை விட்டு விட்டு, பாட்டுக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றாள். இதற்கு காரணமே திறன்களின் குறைபாடு. தைரியம் ஊசலாடியது.
எதை முயன்றாலும் கடினமாகத் தோன்றியது. தான் அழகாக இல்லை என்று கருதினாள். இந்த இரண்டையும் எடுத்துக் கொண்டோம். அவள் முயற்சிக்கும் விதங்களைப் பட்டியலிட்டோம். கூடவே ஒன்றைச் செய்யத் தெரியவில்லை என்றால் அதன் அணுகுமுறைகளை எண்ண ஆரம்பித்தோம். இதிலிருந்து அவள் எவ்வளவு, ஏன் தட்டுத் தடுமாறுகிறாள் என்பதைப் பார்க்க, புனிதாவிற்கு தன் அம்மாவை எல்லாம் செய்ய வைத்தது, உதவி கேட்காதது தெளிவாகத் தெரிந்தது.
இதுவரை புனிதாவைப் பொறுத்தவரை உதவி கேட்பதைத் கேவலமாகக் கருதினாள். சிறுவயதிலிருந்தே தாத்தா அல்லது சம்யுக்தா தேவைகளை முன்கூட்டியே தெரிந்து பூர்த்தி செய்ததால் உதவி கேட்கும் சூழ்நிலை எழவில்லை.
படிப்பில் சுட்டி. அம்மா ஏதாவது செய்யாவிட்டால் பரீட்சையில் மார்க் வராமல் செய்து கொள்வாள்- தன்னைத் தானே புண்படுத்திக் கொள்ளும் விதம். கர்வம் இருந்தது, “எனக்குப் புரியவில்லை” என்று ஏற்றுக்கொள்ள மறுத்தாள். இப்போதுதான், இப்படித்தான் கேட்க வேண்டும் என்பது தெரியாமல் போனது. வேலையிலும் இதே நடந்தது. பலருடன் கலந்து செய்ய முடியாமல் தவித்தாள்.
கலந்து ஆலோசனை செய்ததில் புனிதா புரிந்து கொண்டாள், கேட்பதற்கு, முயல்வதற்கு முன்னாலேயே கைமேல் கிடைத்த பலனால் லோ ஃரஸ்ட்ரேஷன் டாலரன்ஸ் (low frustration tolerance) தனக்கு வந்துள்ளது என்று. பொறுக்க, காக்க, இரண்டையும் கற்றுக் கொள்ளவில்லை. கோபம், ஆத்திரமடைந்த நேரங்களை ஏன்-என்ன என்று குறித்து வரச்சொன்னேன்.
இதைப் புரிந்ததும் அவளுடைய பொறாமை உணர்வைப் பற்றிப் பேசத் தொடங்கினாள். பள்ளி வயதில் தன் சினேகிதியைத் துன்புறுத்தியதும் பொறாமையில். அவள் வகுப்பில் சேர்ந்த புது மாணவியுடன் சிரித்துப் பேசிய போது, புனிதா அவள் தன்னை விட்டு விலகிவிடுவாள் என்று அஞ்சி, அடித்து விட்டாள். பொறாமையினால் பத்தாவது வகுப்பு தோழியுடனும், இப்போது அம்மாவுடனும் மனஸ்தாபம் ஏற்பட்டதை விவரித்தாள்.
பல உதாரணங்களை அலசி ஆராய்ந்து பார்க்க, ஒப்பிடுவதாலும் அத்துடன் ஒட்டிய எதிர்பார்ப்பினாலும் இப்படி நேர்ந்தது. சம்பவங்கள், விளைவுகளைப் பற்றிப் பேசினோம்.
புனிதா அவள் வீட்டின் ஒரே குழந்தை. தாத்தா பாட்டி, என்று எல்லோருடைய வாழ்க்கையும் இவளைச் சுற்றி இருந்தது. வீட்டின் மையமாக இருந்தாள். வீட்டில் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தரவேண்டும் எனத் தெரியாத அளவிற்கு அவளுக்குச் சலுகை கொடுத்திருந்தார்கள்.
இங்கு இருமுறை வராமல் தட்டச் செய்ததை ஒப்பிடுகையில் புரிந்து கொண்டாள். வராமல், அம்மாவை வஞ்சகம் தீர்த்துக் கொண்டது, என்னைக் காக்க வைத்தது, சமூக திறன் குறைபாடும் நாகரிகம் இல்லாததையும் காட்டுகிறது என்று புரியப் பல ஸெஷன்கள் ஆயின.
புனிதாவின் சமூக-உணர்வு திறன்கள் குறைபாட்டை ஆழ்ந்து ஆராய, தான் ஒற்றைக் குழந்தை என்பதால் பல சலுகைகள் கிடைத்தது. அம்மாவை இன்றும் ஏன் இந்த அளவிற்குக் காயப்படுத்தினாள் என்பதையும் ஆராய்ந்தோம்.
சமீப காலமாக சம்யுக்தா பேச்சு, நடந்தது கொள்ளும் விதத்தினால் அவர்களுக்கு மரியாதை தரத் தோன்றுகிறது என்றாள். அதுமட்டுமின்றி சம்யுக்தாவைக் கிள்ள மனம் விடவில்லை என்றாள். தன் உணர்வை அடையாளம் கண்டு கொள்ள, அவற்றை வெளிப்படுத்தும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டன. இப்படி மேலும் பல விதமாக மாற்றி அமைத்துக் கொள்ள மேலும் உறுதியானாள்.