இரண்டு வருடங்கள் இடைவெளிக்குப் பின்னர் இன்னும் சில படைப்பாளிகள் பற்றி எழுதத் தொடங்குகிறேன். இதுவரை எழுதப்பட்ட படைப்பாளிகள் புத்தகமாக வெளிவந்தபிறகு நண்பர்கள் சில கேள்விகள் கேட்டார்கள். புதுமைப்பித்தன் போன்ற சில முக்கியமான எழுத்தாளர்கள் அதில் இல்லையே… பெண் எழுத்தாளர்கள் குறைவாக இருக்கிறதே … தவிர, அந்த அந்த எழுத்தாளர்களின் ஆகச் சிறந்த கதையாக தேர்ந்தெடுக்கப்பட்டனவா என்றெல்லாம் கேட்டார்கள்.
யார் யார் கதைளைப்பற்றி எழுதவேண்டும் என்றோ, யாருக்குப் பிறகு யார் என்கிற வரிசை குறித்தோ முன்கூட்டிய தீர்மானம் எதுவும் இன்றி எழுதப்பட்டவை. அவ்வப்போது படித்து வந்த கதைகள் அல்லது எப்போதோ படித்து நினைவில் இருந்த கதைகள் என ஒரு கதம்பமாய் எழுதப்பட்டவை. ரசனை சார்ந்த கட்டுரைகள் என்பதைத் தவிர எந்தத் தர, தள அளவுகோலும் பயன்படுத்தவில்லை. அவ்வாறு ஒரு அளவுகோல் தயாரிக்கும் நோக்கமோ, அதிகாரமோ, திறமையோ, எண்ணமோ எதுவும் இல்லை. இந்தப் புரிதலில் இன்னும் சில படைப்பாளிகள் என இந்த ‘கலந்து கட்டி’ தொடர் ஆரம்பிக்கிறேன்.
க நா சு
க.நா.சு என்று அறியப்படும் க.நா.சுப்ரமணியன் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். பலர் இவரை விமரிசகராகவே அறிவார்கள். இவர் எழுதிக் குவித்த படைப்புகள் ஏராளம். எழுதியவற்றைப் போல பலமடங்கு படித்தவர். விமர்சனக் கலை, உலக இலக்கியம், இந்திய இலக்கியம் ஆகியவற்றைப்பற்றிய புத்தகங்கள் குறிப்படத்தக்கன. புதினம், குறுநாவல், சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, விமரிசனம் என்ற பறந்து பட்ட எழுத்தாற்றல் கொண்டவர். ஒரு புத்தகத்தை முழுவதும் படித்து மூடி வைத்துவிட்டு மொழிபெயர்ப்பை செய்துவிடக்கூடிய ஆற்றல் உள்ளவர் என்று சொல்வர்கள்.
நீண்ட நாவல்கள் எழுதுவது தேவையில்லை என்ற கருத்து கொண்டவர். இருநூறு பக்கங்களில் சொல்ல முடியாத கதையினை ஆயிரம் பக்கங்களிலும் சொல்லமுடியாது என்கிறார். சிறுகதை என்பது அளவைப் பொறுத்ததல்ல. சொல்ல விரும்பிய ஒரே ஒரு விஷயத்தை நயம்பட சொல்வதே சிறுகதையாகும் என்கிற கருத்து கொண்டவர். மொழிபெயர்ப்பிலும் பல சாதனைகள் படைத்தவர்.
இவரது ‘தர்மம்’ என்கிற சின்னஞ்சிறு சிறுகதை.
“இது என்னையா இது? தர்மம் ஆறணா என்று ஒரு கணக்கு எழுதி வைத்திருக்கிறீரே? எத்தனை நாளாய்ப் புண்ணியம் சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறீர்?” என்று கேட்டேன் நான்-
என்று தொடங்குகிறது.
இவரது பல சிறுகதைகள் குறுநாவல்கள் போல கதைசொல்லியாக எழுத்தாளர் கதாபாத்திரமாகவே வருகிறார்.
இவரது நண்பரான புத்தக விற்பனையாளர் காசு விஷயத்தில் மிகவும் கெட்டி. விற்பனையிலும் கொடுக்கவேண்டிய கமிஷனிலும் கரார். கோவில் குளம் என்றோ ஏழைகளிடம் பரிதாபத்தாலோ தர்மம் செய்ய விரும்பாதவர். அவர் கணக்கில் தர்மம் என்று எழுதிவைத்திருந்தது அவர் நண்பர் கதைசொல்லிக்கு வேடிக்கையாகவும் நம்ப முடியாததாகவும் இருக்கிறது.
புத்தக விற்பனையாளர் பதிலளிக்குமுன் சில பள்ளி ஆசிரியர்கள் வருகிறார்கள். அவர்கள் விற்ற புத்தகங்களுக்கு கொடுக்கவேண்டிய ‘கமிஷன்’ பைசா பைசாவாக பேரம் செய்யப்படுகிறது. இதில் வேறு கமிஷனா என்று நண்பர் ஆச்சரியப்பட, அப்படித்தான் என்று சலித்துக்கொள்கிறார் விற்பனையாளர்.
பேச்சு மீண்டும் ‘ஆறணா தர்மம்’ குறித்து திரும்புகிறது. விற்கவேண்டிய புத்தகங்களைப் பள்ளியில் ஆசிரியர்களிடம் ஒப்படைத்துவிட்டுத் திரும்பும்போது வெளியில் ஒரு மாணவி தூணில் சாய்ந்துகொண்டு பரிதாபகரமாக அழுதுகொண்டு இருந்திருக்கிறாள். விற்பனையாளர் விசாரிக்கிறார்.
அவள் விசித்துக்கொன்டே ‘அப்பாரு வூட்லே இல்லே! பொஸ்தகம் வாங்க ஆயா காசு தராது. பொஸ்தகம் எல்லாம் வித்தப் போயிடும் அப்பாரு வரதுக்குள்ளே.. ம்.. ம்!’ என்று சொல்லிற்று.
புத்தகம் அப்படி விற்றுப் போகாது. அப்படியே விற்றுப் போய்விட்டாலும் தான் வைத்திருந்து தருவதாக கூறுகிறார் விற்பனையாளர். குழந்தை அழுவதை நிறுத்தவில்லை. புஸ்தகத்தை வாங்கிப் படிக்குமோ படிக்காதோ இப்போதே புதுப் புஸ்தகம் வாங்க ஆசைப்படுகிறாள் என்று தெரிகிறது.
“..இந்தப் பச்சைக் குழந்தைகளின் ஆர்வத்தைக் கொண்டுதானே நான் காசு பண்ண வேண்டியிருந்ததென்று எனக்கே வெட்கமாயிருந்தது..” என்கிறார் அவர்.
உபாத்தியாயரிடமிருந்து அவளுக்கு வேண்டிய புத்தகங்களை வாங்கித் தருவதில் ஒரு சங்கடம். அந்த ஆசிரியரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். எவ்வளவு காசு வேண்டும் என்று கேட்டு ஆறணா கொடுத்துவிட்டு வந்துவிடுகிறார் அந்த விற்பனையாளர்.
இதை அவர் தமக்கு இயற்கையான குரலில் சொல்லவில்லை. அப்படி செய்துவிட்டு வந்தது பற்றி அவருக்கே வெட்கமாயிருந்தது போல கதைசொல்லிக்குத் தோன்றுகிறது.
அப்போது ஒரு சிறுமி உள்ளே வருகிறாள். விற்பனையாளரிடம் ஆறணா கொடுத்துவிட்டு, “அப்பாரு வந்த வொடனே வாங்கிட்டு வந்துட்டேன். பாக்கி பொஸ்தகம் நாளைக்கு வாங்கிக்கலாம்னுது அப்பா” என்கிறாள்.
ஆறணா பெரிதல்ல அந்தப் பெண்ணின் குதூகலம் உண்மையிலேயே பெரிசுதான் என்று எனக்குத் தோன்றியதால் நான் என் நண்பரை அப்போது மேலும் கேலி செய்ய ஆரம்பிக்கவில்லை.
என்று முடிக்கறார் கநாசு.
ஒரு சிறு சம்பவம் பணத்தில் கெட்டியானாலும் மனிதாபிமானம் மிக்க அந்த விற்பனையாளர், ஒரு குழந்தை உள்ளம் என்று ஒரு அழகிய கதையினை படைக்கிறார் கநாசு.
இவரது படைப்புகள் அரசுடமை ஆக்கப்பட்டு விட்டதால் பெரும்பாலான பதிப்பகங்கள் இவரது நாவல்கள், குறுநாவல்கள், கட்டுரை தொகுப்புகள் என வெளியிட்டுள்ளன.
மேலே சொன்ன தர்மம் கதையும் இன்னும் சில சிறுகதைகளும் கீழ்கண்ட இணைப்பில்