ஜென் கதைகள் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஜென் பழக்கங்கள்? அதில் ஒன்று இப்போது நாம் பார்க்கப்போகிறோம்.
அதுதான் நாம் அதிகம் மறந்துவிட்ட ‘ உன்னை விரும்பு ‘ என்ற பழக்கம் !
நம்மை நாமே பாதுகாக்கச் சத்தான உணவை உண்ணுதல், தியானம் செய்தல், சந்தடியிலிருந்து சற்று விலகியிருத்தல் போன்ற பல முயற்சியில் ஈடுபடுகிறோம்.
இவை உண்மையில் தற்காப்புக்கு முக்கியமான அம்சங்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், அதைவிட முக்கியமானது ஒன்று உள்ளது.
அதுதான் நம் மீது நாமே செலுத்தும் அக்கறை.
நம்மை நாமே விரும்பும் வழக்கம் !
அப்படியானால் என்ன என்பதே நமக்குத் தெரியாமல் போய்விட்டது.
ஆனால் ஜென் சொல்கிறார் ! ( லியோ பாபாதா) இதை நாம் தினந்தோறும் செய்யவேண்டுமாம்!
தினமும் எட்டு முறை தண்ணீர் குடிப்பது போல இந்த ‘உன்னை விரும்பு ‘ என்கிற பயிற்சியையும் எட்டு முறை செய்யவேண்டுமாம்!
அது சரி! ‘உன்னை விரும்பு ‘ என்றால் என்ன? ‘சுய விருப்பம் ‘ என்ற சொல்கிற பாலுணர்வு அல்ல .
அப்புறம்?
நாம் யாரையாவது காதலிக்கும்போது மனதில் பொங்கி எழுமே காதல் உணர்வுகள்! அந்த உணர்வுகளை உங்கள் மீதே படரவிடுங்கள்! அதுதான் நம்மை நாமே விரும்புவது !
அது எப்படி முடியும் என்று கேட்கலாம்.
நாம் நம்மீது அடிக்கடி கோபப்படுகிறோம். நம்மை நாமே திட்டிக்கொள்கிறோம். நாம் எதற்குமே லாயக்கில்லை என்று அலுத்துக்கொள்கிறோம். இவை அனைத்தும் நமக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய சமாச்சாரங்கள்!
இவ்வளவு உணர்ச்சிகளை நம் மீது காட்டும் நம்மால் ஏன் நம்மையே விரும்ப முடியாது?
இது ஏன் நமக்குத் தேவை?
நம்மில் பலருக்கு மனதளவில் காயங்களும் மன அழுத்தங்களும் இருக்கின்றன.
பலருக்கு என்ன , எல்லோருக்கும் இருக்கின்றன.
நம்மீது நாம் கோபம் கொள்கிறோம், ஏமாற்றம் அடைகிறோம், போதாது என்று எண்ணுகிறோம்.
இது நம் வாழ்வில் அன்றாடம் நடக்கும் நிகழ்வாக இருக்கிறது.
நம்மை நாமே மதிப்பதில்லை.; மாறாகத் தூற்றுகிறோம்.
நாம் எதற்கும் ஏற்றவர் இல்லை என்று என்ற நமது ஆழமான எண்ணத்தைத் தினமும் உறுதிப்படுத்துகிறோம்.
‘என்ன மனிதன் நான்? அளவில்லாமல் சாப்பிடுகிறேன், குடிக்கிறேன், குளறுபடி செய்கிறேன், காணொளி பார்க்கிறேன், கேம்ஸ் விளையாடுகிறேன், உருப்படியாக எதையும் செய்யாமல் குட்டிச்சுவராய்ப் போகிறேன் ‘ என்றெல்லாம் நம் மீது நாம் ஆத்திரப்படுகிறோம்.
மொத்தத்தில் நமக்கு நம்மைச் சுத்தமாகப் பிடிப்பதில்லை.
இது நம் வாழ்வை மிகவும் பாதிக்கிறது. இந்த எண்ணம் நம்மை மகிழ்ச்சி அற்றவர்களாக , உறவுகளை மதிக்காதவராக, கவனமில்லாதவராக, தள்ளிப்போடுபவர்களாக மாற்றுகிறது. அதை மாற்ற நாம் கன்னாபின்னாவென்று சாப்பிடுவது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுகிறோம்.
அதற்குப் பதில் நமக்கு நாமே அன்பு செலுத்த ஆரம்பித்தால் இந்தப் பிரச்சினைகள் எல்லாம் ஆறி அவலாகப் போய்விடும். நமது கஷ்டங்களைச் சமாளிக்கும் திறன் நமக்குத் தன்னால் வந்துவிடும்.
ஆகவே ‘உன்னை விரும்பு ‘ என்பது எல்லோரும் மறந்துவிட்ட முக்கியமான தேவை என்பதை நாம் உணரவேண்டும்.
எப்படி நமக்கு நாமே அன்பு செலுத்துவது ?
‘உன்னை விரும்பு’ என்ற ஸ்டிக்கரை நம் கண்ணில் படுகிற இடங்களில் எல்லாம் ஒட்டி வைக்கவேண்டும். – தொலைக்காட்சி, பிரிட்ஜ், மடிக்கணினி, கண்ணாடி, கார், மேஜை, போன்ற இடங்களில் கட்டாயம் வைக்கவேண்டும்.
முதலில் இது கொஞ்சம் செயற்கையாக இருந்தாலும் நாளடைவில் பழகிப் போய்விடும்.
அந்த ஸ்டிக்கரைப் பார்க்கும்போதெல்லாம் நீங்கள் இந்த மூன்றையும் மறக்காமல் செய்யவேண்டும் :
உங்கள் வாழ்வில் ஏற்பட்ட மன அழுத்தம், சோகம், கோபம், ஆத்திரம், எரிச்சல் சில வினாடிகள் மனதளவில் எண்ணிப் பாருங்கள். அதை உங்கள் உடலில் உண்மையாகவே உணருங்கள். சில வினாடிகள் தான்.
இப்போது உங்கள் மீது உங்கள் அன்பைப் பொழியுங்கள். முட்டாள்தனமாகத் தோன்றினாலும் கவலைப்படாமல் செய்யுங்கள். வேறொருவர் மீது உங்கள் அன்பைக் காட்டுவது போலவே உங்கள் மீது அன்பைக் காட்டுங்கள். உங்களுக்குப் பிடித்த , பிள்ளைகள், அப்பா, அம்மா, மனைவி, காதலி, நண்பர் ஆகியோர் துன்பப்படும்போது அவர்கள் மீது எப்படி அன்பு செலுத்தி அவர்கள் கஷ்டத்தைப் போக்க எப்படி முயலுவீர்களோ அதைப் போல உங்கள் மீதே அனுதாபத்துடன் கூடிய அன்பைச் செலுத்துங்கள்.
உங்கள் மீது நீங்கள் செலுத்தும் அன்பு , துன்பத்தைப் போக்க வந்த ஒரு மருந்து என்று எண்ணிக்கொள்ளுங்கள். அந்த அன்பு என்ற வழவழப்பான களிம்பு உங்கள் உடலை மனதை இதமாக நீவி விடுவதை உணருங்கள். இந்த அன்பிற்குத் தான் நீங்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது அப்போது உங்களுக்குப் புரியவரும்.
இது மிகவும் சுலபமானது. ஒரு சில நிமிடங்கள் போதும்.
ஒன்று, உங்கள் துன்பத்தையும் வலியையும் உணருங்கள்; இரண்டு, உங்கள் மீது அன்பைச் செலுத்துங்கள்; மூன்று, அந்த அன்பே வலி நிவாரணி என்று உணருங்கள்.
இதைத் தினமும் குறைந்தது 8 முறை , முடிந்தால் 12 முறை செய்யுங்கள்.
இந்த அன்புதான் உங்களுக்குத் தேவை. அதை உங்களுக்குத் தர என்றைக்கும் தயங்காதீர்கள்!
இதுதான் ‘உன்னை விரும்பு ‘ என்று சொல்வதன் அர்த்தம்.