சூரியதேவனின் மகிழ்ச்சிக்கோர் எல்லையே இல்லை.
” ஆஹா !மூன்று குழந்தைகள் ! ! நான் பெற்ற பேறு தான் என்ன? நல்ல செய்தி சொன்ன கருடனுக்கு என்ன பரிசு தருவது ? ” என்று ஒருகணம் யோசித்தான். பிறகு கருடரைப் பார்த்து ,
“கருடரே! இனிய செய்தி சொன்ன உங்களுக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும். ஆனால் சர்வ வல்லமை படைத்த விஷ்ணு பகவானையே தன் முதுகில் தூக்கிவரும் வலிமையையும் திறமையும் படைத்த உங்களுக்கு நான் என்ன செய்ய முடியும்? உயரத்தில் பறக்கும்போது சிறகுகளை அசைக்காமல் பறக்கும் திறமை பறவைகளில் உங்கள் ஒருவருக்குத்தான் உண்டு. அப்படி உயரத்தில் நீங்களோ உங்கள் சந்ததியினரோ பறக்கும்போது இனி என் கிரணங்களால் உங்களுக்கு எந்தவித துன்பங்களும் நேராது. உங்கள் கண்களால் என்னை எப்போது பார்த்தாலும் என் வெளிச்சம் உங்கள் கண்களுக்குக் குளிர்ச்சியே தரும்” என்று கூற கருடனும் அவரை வணங்கி விரைவில் சென்றான்.
” அருணா ! நான் இப்போதே ஸந்த்யாவைப் பார்க்கவேண்டும்! தேரை அவ்வண்ணம் செலுத்து ” என்று உத்தரவிட்டான்.
அங்கே ஸந்த்யா சூரியதேவனின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். மூன்று இரத்தினங்களைப் பெற்ற மகிழ்ச்சி அவள் முகத்தில் தெரிந்தது. அந்த சமயத்தில் அவளுக்குத் தன தந்தை விஸ்வகர்மாவின் நினைவு வந்தது. இந்த மூன்று குழந்தைகளை அழிக்க முயன்றாரே என்று அவர்மீது வந்த கோபம் இந்தக் குழந்தைகளின் பிஞ்சு முகங்களைப் பார்க்கும்போது மாறியது. தந்தைக்கும் தாய்க்கும் இந்த நல்ல சேதியைச் சொல்லி அவர்களது ஆசிகளையும் பெறவேண்டும் என்று தோன்றியது. திருமணத்தின் போதும் அதற்குப் பிறகும் அவர்களைச் சூரிய மண்டலத்திற்கே வரவிடாமல் செய்தது குறித்து அவள் இப்போது மனம் வருந்தினாள். குழந்தைகளைப் பெற்றபிறகுதான் பெற்றோர்கள் மீது பக்தியும் பாசமும் பெண்களுக்கு உண்டாகிறது என்பதை உணர்ந்து கொண்டாள். ஆனால் சூரியதேவனுக்கு விஸ்வகர்மா மீது இன்னும் கோபம் இருப்பதை அவள் உணர்ந்தாள். ஸந்த்யாவை விரும்பிய ஒரே காரணத்திற்காகத் தன்னை மயக்க நிலையில் வைத்து ஓர் அடிமையைப்போல் மாற்ற நினைத்த விஸ்வகர்மாவை அவன் எப்போதும் மன்னிக்கத் தயாராயில்லை. அதிலும் குழந்தைகளை அழிக்கும் அளவிற்குப் போன அவரை சூரியதேவன் ஏறெடுத்தும் பார்க்க விரும்பியதில்லை.
ஆனால் இந்த நல்ல நாளில் சூரியதேவனிடம் இதமாகப்பேசி தந்தையையும் தாயையும் அழைப்பதற்கு அனுமதி வாங்கிவிடவேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். அந்த சமயத்தில் மகாருத்ரபிரும்மன் நினைவு வந்தது. மும்மூர்த்திகளின் அம்சங்கள் ஒன்று சேர்ந்து வரவேண்டும் என்றுதானே தந்தை விரும்பினார். அவை தனித்தனியாக மூன்று குழந்தைகளாக வந்ததாகவே அவள் எண்ணினாள். இருப்பினும் அந்தக் குழந்தைகள் பிறந்த உடனே தன்னுடைய சக்திகள் எல்லாம் மறைந்துவிட்டது போல உணர்ந்தாள். இது இயற்கையாக எல்லாப் பெண்களுக்கும் தோன்றுகின்ற ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். சூரியதேவனுக்கு இனி நம்மீது அன்பு இருக்குமா இல்லை குழந்தைகளைப் பராமரிக்கும் மகிழ்ச்சியில் தன்னை மறந்துவிடுவானோ என்றெல்லாம் எண்ணி ஒருவித மயக்க நிலையிலிருந்தாள் ஸந்த்யா.
சூரியன் அருகில் வந்துவிட்டான் என்பதை அவள் உணரும்போதே சூரியதேவன் அவள் அருகில் வந்து நின்றான். முத்துக்கள் போலப் பிரகாசிக்கும் அந்தக் குழந்தைகளைக் கையில் எடுத்துக் கொஞ்சுவதற்கு முன் அந்த முத்துக்களைப் பெற்றுக் கொடுத்த ஸந்த்யாவிற்கு நன்றி சொல்லும் வண்ணம் அவன் உள்ளத்தில் பொங்கும் உவகையெல்லாம் சேர்த்து அவள் இதழில் தன் இதழ்களைப் பொருத்தி ஆசையுடன் அவள் பொன்னுடலை வருடிக் கொடுத்தான். ஸந்த்யாவிற்கு அந்த சுகம் வேண்டியிருந்தது. அவன் கையில் மூன்று குழந்தைகளையும் ஆசையுடன் எடுத்துக் கொடுத்தாள். தன் குழந்தைகள் மூவரையும் பார்க்கப் பார்க்க அவனுக்கு உள்ளத்தில் மகிழ்ச்சி அலை பரவிக்கொண்டேயிருந்தது. அதிலும் ஒரு அழகான பெண்குழந்தையும் இருப்பதைப்பார்த்து அவன் துள்ளிக்குதித்தான். அந்த மூன்று பிஞ்சு உடல்களையும் மெல்ல வருடிக்கொடுத்தான். இளஞ்சூரியனின் பொன்னிற கிரணங்கள் அந்தக் குழந்தைகளின் மேனியில் படும்போது அதுவும் அந்தக் கிரணங்கள் தந்தையிடமிருந்து வருவது குறித்து அந்த சிசுக்கள் மூன்றும் சிலிர்த்துக்கொண்டன.
” ஸந்த்யா ! இவர்கள் மூன்று பெரும் சாமானிய குழந்தைகள் அல்ல. உலகையே ஆளும் சூரியதேவனின் குழந்தைகள். யாரும் அடையாத அடையமுடியாத புகழை இந்த மூன்று பேரும் அடையவேண்டும். இவர்களில் முதல் குழந்தை எது?” என்று கேட்டான்.
” இதோ ! மகாவிஷ்ணு போலக் காட்சியளிக்கிறானே இவன்தான் தங்களின் முத்த மகன். அதோ காலை உதைத்து உதைத்துச் சிரிக்கிறானே அவனும் இப்போதே தவழ்ந்து தவழ்ந்து ஓடுபவள் போல் இருக்கும் அழகுப் பெண்ணும் இரட்டையர்களாக ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டே பிறந்திருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள்? ” என்று கேட்டாள் ஸந்த்யா .
” பொறு ! ஸந்த்யா! நம்மைப் படைத்துக் காத்துக்கொண்டிருக்கும் பிரும்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் இங்கே குழந்தைகளை ஆசிர்வதிக்க வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெயர் வைப்பதற்கென்றே இன்னும் ஒருவர் வர இருக்கிறார் .”
“நம்மைவிட- மும்மூர்த்திகளைவிட அதிக அதிகாரம் படைத்தவர் யார் அவர் ?’ என்ற சந்தியாவின் குரலில் சற்று கோபமும் துளிர்த்தது.
“இதோ அனைவரும் வந்துவிட்டார்கள்” என்று சூரியதேவன் கூறவும் தம்பதி சமேதராய் மும்மூர்த்திகளும் அங்கே எழுந்தருளினார்கள். அவர்களுக்குப் பின்னே மற்ற தேவர்களும் ரிஷிகளும் வந்தனர். கடைசியாகத் தயங்கிக்கொண்டே விஸ்வகர்மா தன் மனைவியுடன் வந்தபோதுதான் ஸந்த்யாவிற்குச் சூரியதேவன் கூறியதன் அர்த்தமே விளங்கிற்று. தன் விருப்பத்தை அறிந்து பழைய கோபத்தையெல்லாம் மறந்து தன்னுடைய பெற்றோர்களையும் அழைத்த சூரியனின் பெருந்தன்மையை நினைத்து கண்களாலே அவனுக்கு நன்றி கூறினாள்.
“சூரியதேவா! அழகும் ஆற்றலும் நிறைந்த குழந்தைகள் இந்த தேவ உலகத்தில் அவதரித்தது நாங்கள் மூவரும் மிக மகிழ்ச்சி அடைகிறோம். அவர்களுக்கு எங்களின் பூரண நல்லாசிகளைத் தருவதற்காகவே நாங்கள் மூவரும் வந்துள்ளோம்” என்று மும்மூர்த்திகள் சார்பில் படைப்பின் அதிபதி பிரும்மா கூற மற்றவர்களும் அதை அப்படியே வழி மொழிந்தார்கள்.
மகாவிஷ்ணு விஸ்வகர்மாவைப்ப்பார்த்து, ” ஏன் தயங்கி நிற்கிறீர்கள்? உங்கள் பேரக் குழந்தைகளைக் காணும் பெருமையும் பேர் வைக்கும் உரிமையும் தங்களுக்குத் தான் உண்டு” என்று சொல்லவும் அனைவரையும் கைகூப்பிக்கொண்டே கண்களில் நீர்வழிய விஸ்வகர்மாவும் அவரது துணைவியும் முன்னே வந்தனர்.
ஸந்த்யாவின் தாய் கண்ணில் நீர் வழிய ஸந்த்யாவை அணைத்துக் கொள்ளும்போதே விஸ்வகர்மா மூத்த குழந்தையை எடுத்து உச்சிமுகர்ந்து பிரம்மாவிடம் கொடுத்து ” படைப்புக்கு அதிபதியே! சூரிய-ஸந்த்யாவின் மூத்த குமாரனுக்கு மனு என்று நாமகரணம் சூட்டி, தங்கள் ஆசியினை வழங்கும்படி வேண்டிக்கொள்கிறேன்” என்று கேட்டுக்கொண்டார்.
” விஸ்வகர்மா! நீர் புத்திசாலி என்பதில் சந்தேகமேயில்லை! சரியாகத்தான் பேர் வைத்திருக்கிறீர்கள்.! சூரிய குலத்தின் மூத்த புத்திரன் வைவஸ்வத மனு என்கிற சிரார்த்ததேவன் இவன் . மனிதக்குலத்திற்கே முதலாவது ஆதி மனிதனாக இருக்கப்போகிறான். இவனது பிள்ளை இக்ஷ்வாகு ஒரு புதிய பரம்பரையையே உருவாக்குவான். மகாவிஷ்ணு அவர்களே! நீங்கள் இப்போதே இவன் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.” என்று சிரித்துக் கொண்டே ஆசிகள் வழங்கினார்.
விஷ்ணுவும் மனதுக்குள் ராம அவதாரத்தின் போது இந்த மனுவின் வம்சத்தில் உதிக்கப்போவதை எண்ணி மனுவின் கால்களைத் தொட்டு வணங்கினார்.
அதற்குள் சிவன் இரண்டாவது மகனைக் கையில் எடுத்துக்கொண்டு ” ஆஹா! இவன் கரங்களையும் சலனமற்ற பார்வையையும் பார்க்கும்போது இவன் தர்மத்திற்கு அதிபதியாக இருந்து பூவுலகின் பாரம் தீர்க்க உதவுவான் என்ற நம்பிக்கை உண்டாகிறது. இவன் எனது சீடன். இவன் யாருக்கும் பயப்படமாட்டான். இவனைக்கண்டு பூலோகத்தில் அனைவரும் நடுங்குவர். அப்படிப்பட்டவனுக்குப் பொருத்தமான பேரைச் சொல்லுங்கள் விஸ்வகர்மா அவர்களே!” என்று சிவபெருமான் கூறினார். ” இந்தப் பாலகனுக்கு எமன் என்ற பெயரைச் சூட்டலாம் என்றிருக்கிறேன்” என்று விஸ்வகர்மா கூறிக்கொண்டே அனைவரையும் பார்க்க ” ஆஹா! பொருத்தமான பெயர். அத்துடன் தர்ம ராஜா என்றப்பட்டத்தையும் சேர்த்து எமதர்மராஜன் என்று கூறுங்கள்” என்கிறார் பரமேஸ்வரன்.
கடைக்குட்டியான பெண்குழந்தையை ஒரு பூவை எடுப்பதுபோல கையில் எடுத்த விஸ்வகர்மா ,” இவளை எமி என்கிற யமுனா என்ற பெயரில் அழைக்க விழைகிறேன்” என்று கூறி மகாவிஷ்ணுவிடம் குழந்தையைக் கொடுத்தார். அவளைக் கையில் வாங்கிக்கொண்ட மகாவிஷ்ணு, ” யமுனா! அவளைப்போலவே பெயரும் அழகாக இருக்கிறது” இவள்! நதியைப் போன்ற பொறுமையின் சிகரமாக விளங்கப்போகிறாள். பாருங்கள் இவளது கால்கள் ஓரிடத்திலும் நிற்காமல் அலைபாய்கிறது எனது பூரண ஆசிகள் இவளுக்கு உண்டு! ” என்று கூறி பின்னர் கிருஷ்ணாவதாரத்தில் யமுனா நதி தீரத்தில் விளையாடப்போவதை எண்ணிப் புன்சிரிப்பு கொண்டார்.
மும்மூர்த்திகளும் விடைபெற்றுச்சென்றபின் விஸ்வகர்மா கண்ணீருடன் தன்னை வணங்கிய ஸந்த்யாவின் முகத்தை நிமிர்த்தி கண்ணீரைத் துடைத்தார். அப்போது அவள் இதழோரம் இருந்த சிவப்புத் திட்டைக் கவனித்துத் திடுக்கிட்டார். சூரியனின் வெப்பத்தைத்தாங்கும் சக்தி அவளிடமிருந்து போய்விட்டது என்பதை உணர்ந்து கொண்டார். அவளுக்கு எப்படி உதவுவது என்று புரியாமல் தடுமாறினார் விஸ்வகர்மா.
(தொடரும்)
நடுவர் சாலமன் பாப்பையா பேசினார்:
“கேட்டுக்கிடீங்களா ! என்னமா பேசிட்டாங்க பாரதி பாஸ்கர்! ஆவங்களுக்குச் சோறு ஆக்கத் தெரியுதோ இல்லையோ ,அதைப்பத்திக் கவலை இல்லே! ஆக்கலில் சிறந்ததுவேறொன்றும் இல்லேன்னு அக்குவேறு ஆணிவேறா அடிச்சுப் பேசிட்டு உக்காந்திருக்காங்க ! அரசியலைக் கொஞ்சம் கொறைச்சுக்கங்க அம்மா! இல்லேன்னா மீம்ஸ் போட்டே நம்மை வறுத்து எடுத்திடுவாங்க! ஆக்கலுக்கு அடுத்தது காத்தல் பற்றித் தான் பேசணும் அதுதான் விவாதமேடை வழக்கம். ஆனா இது கீழ் சபை இல்லை மேல் சபை இங்கே கொஞ்சம் வித்தியாசமா நடந்துக்கலாம். அதுக்கு சட்டம் இடங்கொடுக்குது. அது மட்டுமில்ல எல்லா பட்டிமன்றத்தில் ராஜா கடைசியில பேசறதை ஒரு வழக்கமா வைச்சுக்கிட்டிருக்கோம். அதனால ஆக்கலுக்குப் பிறகு அழித்தல் தான் எல்லாவற்றிலும் சிறந்தது என்று பேச திண்டுக்கல் லியோனி அவர்களை அழைக்கிறேன்.
“அனைவருக்கும் வணக்கம். முதல்ல நம்மை என் இந்த மேடைக்கு கூப்பிட்டாங்கன்னு யோசிச்சேன். நாலைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கருடபுராணத்தைப்பத்தியும் நெருப்பு ஆற்றைப் பத்தியும் எமபுரிப்பட்டணத்தைப்பத்தியும் பேஸ்புக்கில ஒரு ஸ்டேட்டஸ் போட்டேன். அதில வந்த வினை நம்மளை நேரா இந்தக் கூட்டத்துக்கு வரச்சொல்லி ஆப்பு அடிச்சுட்டாங்க! முதல்ல வரவேண்டாமின்னுதான் நினைச்சேன். அப்புறம் ஒரு யோசனை ! எப்படியிருந்தாலும் என்னிக்கிருந்தாலும் எல்லோரும் இங்கே வந்துதான் ஆகணும். என்ன, கொஞ்சம் முன்னப்பின்ன வருவோம். அப்படி வந்தா திரும்பப் போகமுடியாது. இப்ப போகமுடியும்னு நினைக்கிறேன்!
எதுக்கும் இருக்கட்டுமேன்னு வீட்டில சொல்லிகிட்டே வந்துட்டேன்.
அத்தைக்கேட்டுட்டு எங்க அத்தைப் பாட்டி ” என்னப்பெத்த ராசா! நீ திரும்பிவருவியோ இல்லையோ தெரியலை ! எதுக்கும் நீ போறதுக்கு முன்னாடி நாங்க ஒப்பாரி வைச்சிடறோம். அதைக் கேட்டுட்டு சந்தோஷமா போய்வா ராசா” அப்படின்னு ஆரம்பிச்சுட்டாங்க! ” அதை ஒட்டுக்கேட்ட எந்தப் படுபாவியோ பேஸ்புக்கில ஸ்டேட்டஸ் போட்டுட்டான். என்னன்னு விவரம் புரியாமே ஆயிரம்பேர் லைக் போட்டுட்டானுக.
“நான் இன்னும் சாகலைன்னு” நானே ஒரு ஸ்டேட்டஸ் போட்டா யாரும் நம்பமாட்டேங்கிறாங்க ! அந்தச் செய்தியை மாத்த நான் ரொம்ப கஷ்டப்படவேண்டியதாச்சு. ஒருத்தரு தப்பான சேதியை ஆக்கிப்போட்டுங்கான்ன அதை அழிக்கறது எவ்வளவு முக்கியம் அப்படின்னு புரியுதா?
இப்போ சொல்லுங்க ஆக்கறது முக்கியமா ? அழிக்கறது முக்கியமா?
நம்ம கோயமுத்தூரில் ஒரு படிக்காத விஞ்ஞானி இருந்தார், ஜி டி நாயுடு ஐயா ! அவர் ஒரு பெரிய மண்டபத்திலே தான் கண்டுபிடிச்ச பொருள்களையெல்லாம் கொஞ்சநாள் வைச்சுட்டு அப்பறம் எல்லாத்தையும் உடைச்சு போட்டுட்டாராம். கேட்டா , ‘கன்ஸ்ட்ரக்ஷன் பார் டிஸ்ட்ரக்க்ஷன் – டிஸ்ட்ரக்க்ஷன் பார் கன்ஸ்ட்ரக்ஷன்’ என்று சொல்லுவார்.
பாரதி அம்மா வேற ‘ஆணியே புடுங்கவேண்டாம்’ அப்படியெல்லாம் பேசிட்டு போயிட்டாங்க! நீங்க ஆணிய அடிங்க ! நாங்க அதை புடுங்குறோம். நீங்க ஆக்கல் ; நாங்க அழித்தல்; நீங்க அடிச்சதெல்லாம் தேவையில்லாத ஆணி !
அப்புறம் ஜனத்தொகைக்கு வருவோம்.
‘நாட்டில் உற்பத்தியாய் பெருக்கு என்றால் வீட்டில் உற்பத்தியைப் பெருக்குகின்றார்கள்” என்று கலைஞர் ஐயா சொன்னார் அல்லவா? அப்படி மக்கள் எல்லாரும் ராத்திரி பகலா உழைச்சு ஆக்கல் பணியில் கண்ணும் கருத்துமா இருந்து ஜனத்தொகையைப் பெருக்குறாங்கன்னு வைச்சுப்போம். என்ன ஆகும் இந்த உலகம்? வெடிச்சுறாது? அதுக்குத்தான் தேவை அழித்தல்
இதைத்தான் நம்ம கவிஞர் கண்ணதாசன் ஐயா அழகா சொல்லிப்புட்டார்.
” வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது? “
இதைவிட அழித்தலுக்கு எவன்யா சர்டிபிகேட் கொடுக்கமுடியும்?
” கூக்குரலாலே கிடைக்காது, கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது அந்த கோட்டைக்குப் போனால் திரும்பாது “
எந்த கோட்டை?
இந்த எமபுரிப்பட்டணத்தைத்தான் சொல்றார்.
பார்வையாளர்களின் கைதட்டல் காதைப் பிளந்தது
இன்னொரு சமாச்சாரம். பாரதி அம்மா பேசும்போது ரஜினி சாரை தேவையில்லாம இழுத்தாங்க! அவரு இப்பத்தான் ஆக்ஷன் எல்லாம் நிறுத்திப்போட்டு அரசியலுக்கு வரலாமா அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சிருக்காரு. இந்த நேரம்பார்த்து அவர் ஆக்ஷன் ஹீரோ அப்படின்னு சொன்னிங்கன்னா திரும்பவும் பேட்டை பராக்குன்னு பேட்டை, 3.0, கண்ணம்மாபேட்ட அப்படின்னு நடிக்கப் போயிடுவாரு . உண்மையில சொல்லப்போனா அவர் படத்தை எடுத்த புரட்யூசர்கள் கோடி கோடியா போட்டு பணத்தை அழிக்கலேன்னா படம் இவ்வளவு சூப்பரா வருமா?
முட்டை ஓடு அழிந்தால்தான் குஞ்சு பிறக்கும்.
சிலேட்டை அழிச்சாதான் புதுசா எழுதமுடியும் .
பழையன கழிந்தால்தான் புதியன பிறக்கும் .
படத்தை அழிச்சாத்தான் சரியா வரையமுடியும் .
கோழியை அழிச்சாதான் குருமா பண்ணமுடியும்
நேற்று என்ற ஒன்று இன்று அழிந்தால் தான் நாளை என்ற ஒன்று பிறக்கும்
தின்ற சோறு கழிவாய் அழிந்தால்தான் புதுச்சோறு திண்ணமுடியும்
விறகு எரிந்து அழிந்தால்தான் சோறு பொங்கும்
நான் முடித்தால் தான் அடுத்து ராஜா பேசமுடியும்
ஆகவே அழிவே முக்கியம் என்று கூறி அழிந்து போகிறேன். நன்றி
(தொடரும்)