தமிழ்வாணன் – பன்முக வித்தகர்!
தமிழ் வளர்த்த சான்றோர் 59 வது நிகழ்வில், வ.வே.சு அவர்கள் உரையாடியது லேனா தமிழ்வாணனுடன் – பேசப் பட்ட சான்றோர் திரு தமிழ்வாணன் அவர்கள்! ‘துணிவே துணை’, ‘Master of all subjects’ போன்ற வரிகளுக்குச் சொந்தக்காரர், சுதந்திர இந்தியாவில், எளிய தமிழ் மக்களிடையே, பொது அறிவு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர். 52 வயதில், 500 புத்தகங்களை எழுதியவர். தனக்காகத் தனி பிரசுரம் ஆரம்பித்தவர்.
இன்றைய அறுபது வயது இளைஞர்கள் எல்லோரும் முகமலர்ச்சியுடன் சொல்வது “ நான் தமிழ்வாணனின் தீவிர வாசகன் / கி” . அறுபதுகளிலேயே ஆறு லட்சம் பிரதிகள் கண்டது கல்கண்டு! சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்த துணுக்குச் செய்திகள், அரசியல், சினிமா, மருத்துவம் (இயற்கை வைத்தியம்), ஆன்மீகம், ஜோதிடம், உலகப் பார்வை, கட்டுரைகள், துப்பறியும் நாவல்கள், பாலியல் விழிப்புணர்வு என ஒரு பரந்துபட்ட வாசிப்பு அனுபவத்தையும், பொது அறிவையும், 32 பக்கங்களில் தாங்கிவரும் ‘கல்கண்டு’, முற்றிலும் தமிழ்வாணன் என்ற தனிமனிதனின் சிந்தனையிலும், உழைப்பிலும் உருவான வார மலர்!
ஜிப்பா, வேட்டி, ஜோல்னாப்பை என்ற எழுத்தாளர்களின் பழமையான உடைகளை மாற்றி, தன் எழுத்துக்களைப் போலவே புதுமையாக, பேண்ட், சர்ட், கருப்புக் கண்ணாடி, ஆங்கிலேயரைப் போன்ற தொப்பி என அணிந்து வலம் வந்தவர். எங்கிருந்தும் போஸ்ட் கார்டில் வெறும் தொப்பியும், கருப்புக் கண்ணாடியும் வரைந்து அனுப்பினால், அந்தக் கார்டு சென்னை தியாகராய நகர் மணிமேகலைப் பிரசுரம் வந்தடைந்து விடும் என்பது, தமிழ்வாணனின் உடை நாகரீகத்தின் அங்கீகாரம்!
கலைக்காக வாழ்பவன் ‘கலைவாணன்’, இசைக்காக வாழ்பவன் ‘இசைவாணன்’, தமிழுக்காக வாழ்பவன் ‘தமிழ்வாணன்’ எனப் பொருள் சொல்லி, இராமநாதனாக இருந்தவருக்குத் ‘தமிழ்வாணன்’ எனப் பெயர் சூட்டியவர், தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள்!
‘கற்கண்டு’ என்பதுதானே சரியான தமிழ் – ‘கல்கண்டு’ எனப் பிழையாகப் பெயர் சூட்டியிருக்கிறாறே என்று கேள்வி எழுப்பிய தமிழ் ஆர்வலர்களிடம், மு.வ. அவர்கள், ‘தமிழில் பிழை செய்ய மாட்டார் தமிழ்வாணன்; அவரையே கேட்டு வாருங்கள்’ என்று சொல்லி அனுப்புகிறார். தமிழ்வாணன் கொடுத்த விளக்கம் முற்றிலும் வித்தியாசனமானது! ‘கல்’ என்றால் ‘படி’, ‘கண்டு’ என்றால் ‘பார்த்து’ – கல்கண்டு என்றால் ’பார்த்துப் படி’ என்றுதான் சொன்னேனே தவிர, இது கற்கண்டு என நான் சொல்லவில்லையே என்றராம்!
‘எழுத்து என்பது பொழுதுபோக்கிற்கு அல்ல, வாழ்க்கைக்குப் பயன்பட’ என்பதில் உறுதியாய் இருந்தவர் தமிழ்வாணன். 46 ல் ‘அணில்’ அண்ணாவாகக் குழந்தைகளுக்கு எழுதியவர் (ஜில் ஜில் பதிப்பகம்)! கருத்துச் சிந்தனைகளையும், வாழ்வு முன்னேற்ற சிந்தனைகளையும் கொடுத்தவர், குழந்தைகள் வளர வளர அவர்களுக்கான எழுத்துக்களிலும் வயதிற்கேற்ற முன்னேற்றக் கருத்துக்களைக் கொடுத்து, அவர்கள் சிந்தனா சக்தியையும் வளர்த்தவர்!
‘நூறு ஆண்டுகள் வாழ்வதெப்படி’ என்ற நூலை எழுதியவர், 51 ஆண்டுகளே வாழ்ந்தாலும், 100 ஆண்டுகள் வாழ்பவர்கள் செய்யும் சாதனைகளைப் படைத்தவர் தமிழ்வாணன். ஜோதிடம், நாடகம், திரைப்படம், மருந்து, பல்பொடி தயாரிப்பு என பல்துறைகளிலும் இறங்கி, உழைத்து உயர்ந்தவர். சக எழுத்தாளர்கள் சைக்கிளுக்குக்கூட வழியற்ற காலத்தில், காரில் பவனி வந்தவர் தமிழ்வாணன்!
அரசியலில் புகழின் உச்சத்தில், அசைக்கமுடியாத இடத்தில் இருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ம.பொ.சி போன்றவர்களுடன் நட்புடன் இருந்தாலும், கொள்கைகளில் தவறு கண்டபோது, துணிந்து அவர்களை எதிர்க்கவும் செய்தார். அவருடைய கேள்வி பதில்களைப் படித்தாலே புரியும் அவருக்குத் துணை, ‘துணிவு’ மட்டுமே என்று! உதாரணத்துக்கு ஒன்று:
‘ஜனநாயக ஆட்சி என்பது என்ன?’
‘ஓர் ஊரில் மொத்தம் 100 பேர்கள். இந்த 100 பேர்களுள் 49 பேர்கள் அறிவாளிகள்; 51 பேர்கள் மூடர்கள், என்றாலும் அந்த 49 பேர்களையும் இந்த 51 பேர்கள்தாம் ஆள வேண்டும். இதுதான் ஜனநாயக ஆட்சி! அறிவு உள்ளவர்களைக்கூட, அறிவில்லாதவர்கள் ஆள ஜனநாயகத்தில் இடம் உண்டு!
முதன் முதலில் எம் ஜி ஆருக்கு ‘மக்கள் திலகம்’ என்ற பட்டம் கொடுத்தவர் தமிழ்வாணன் – பின்னர் தமிழக அரசியல், திரை உலகங்களில் ஏராளமான திலகங்கள்!
நன்றி மறவாதவர் தமிழ்வாணன் – முதலில் ஒரு பிரசுரம் துவக்கத் தன் நகைகளைக் கொடுத்த தன் மனைவியின் பெயரிலேயே ‘மணிமேகலைப் பிரசுரம்’!
தேன்மொழி, மணிமொழி, நல்ல நாயகம், பூவேந்தன், அமுதா,வெற்றிவேலன், நெடியோன், சொல்லழகன், மலர்விழி எனத் தமிழ்ப் பெயர்களையே தன் கதாபாத்திரங்களுக்குச் சூட்டிய தமிழ்வாணன், துப்பறியும் கதாநாயகனுக்கு ‘சங்கர்லால்’ எனப் பெயரிட்டதேன்? என்ற கேள்விக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான செய்தி இருக்கிறது. ‘சர் ஆர்தர் கானண்டாயலின் படைப்பான ஷெர்லாக்ஹோம்ஸ் போல ஒரு துப்பறியும் கதாபாத்திரத்தை நீங்களும் ஏன் உருவாக்கக் கூடாது?’ என்ற யோசனையை, கேரள வாசகர் ஒருவர் கூற, ‘இது ஒரு மில்லியன் டாலர் யோசனை’ என மகிழ்ந்து, ‘சங்கர்லால்’ துப்பறிகிறார் எனத் தொடர்கள் எழுதினார் – யோசனை சொன்ன வாசகரின் பெயர் ‘சங்கர்லால்’! தமிழ்வாணனின் நன்றியுணர்வின் வெளிப்பாடு இது.
தேநீர் (தேன் போல் இனிக்கின்ற நீர், தேயிலையிலிருந்து வந்த நீர்), காரோட்டி, மயிரிழை என்பதற்கு பதில் நாகரீகமான நூலிழை, என தமிழ் வார்த்தைகளை பழக்கத்திற்குக் கொண்டுவந்தார்! மொழி வெறியைத் தூண்டுவதாகவோ, கெட்ட செய்திகளையோ எழுதுவதைத் தவிர்த்தவர். ‘ரிக்ஷா’ – மனித சக்தியால் ஓடும் வாகனம் (ஜப்பானிய மொழி), ‘தோசை’ – புளித்த தோய்ந்த மாவில் செய்தது – ‘தோயை’ என்பது ‘தோசை’ என மருவியது- இது போன்ற பல விளக்கங்கள் தமிழ்வாணன் அறிமுகம் செய்திருக்கிறார்.
ஒரு தேனியைப்போல், கன்னிமாரா நூலகம், நியூஸ் வீக், டைம்ஸ், டிட்பிட்ஸ், அமெரிகன் நூலகம் என பல இடங்களிலிருந்தும் செய்திகளைச் சேகரித்து, எளிமையாய் மொழிபெயர்த்து, எல்லோரும் ரசித்து, வாசித்துப் பயன்பெறும் படி, தன் கல்கண்டில் வெளியிட்டவர் தமிழ்வாணன்!
முதன் முதலாகத் தன்னையே கதாநாயகனாக வைத்து எழுதியவர்! ‘ராகி’ ஓவியருடன் படக்கதைகளுக்கு உயிரூட்டியவர்!
தன்னுடைய மூன்று விரோதிகளாக அவர் குறிப்பிடுபவர்கள்: 1. என் நேரத்தை வீணாக்குபவன். 2.கைமாற்று கேட்பவன். 3.என்னை நேரில் புகழ்பவன்! தேவையில்லாமல் ‘சும்மா’ பார்க்க வருபவர்களைத் தவிர்க்க அவர் தரும் அறிவுரை -“கையில் ஒரு ரசீது புத்தகம் வைத்துக்கொண்டு, நன்கொடை கேளுங்கள்!”.
தமிழ்வாணனின் கேள்வி பதில்கள் சுவாரஸ்யமானவை மட்டுமல்ல – துணிவானவை, தூரப் பார்வை கொண்டவை, சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பவை! உங்களை ஒரு பத்திரிகை தாக்கி எழுதுகிறதே, நீங்கள் ஏன் திருப்பித் தாக்குவதில்லை? என்ற கேள்விக்கு, ‘நாய் நம்மைக் கடிக்கலாம். ஆனால், நாம் நாயைத் திருப்பிக் கடிக்கலாமா? நான் கட்சி சார்பற்றவன். எது உண்மையோ அதை மட்டுமே நாட்டிற்குச் சொல்லுகிறேன்.’ என்று பதில் சொல்கிறார். கேள்வி: “திருக்குறளில் பிடித்த குறள்கள் எத்தனை?” அவர் பதில் “1330”. மன அமைதி எப்போது கிடைக்கும் ? “ஒரு வேலையைச் சிறப்பாக செய்து முடிப்பதில் கிடைக்கும்!”
1948 முதல் 1977 வரை, 29 ஆண்டுகள், தன் எழுதுக்களையே தன் சொத்தாக எண்ணி, மறையும் வரை கல்கண்டு ஆசிரியராகத் துணிவையே துணையாகக் கொண்டு வாழ்ந்தவர் தமிழ்வாணன்.
அசோகமித்திரன் தன் இரங்கலில், “ அவரது மறைவில் தமிழ் பத்திரிகை உலகம் ஒரு ஒருநிமிடம் ஸ்தம்பித்துப் போனது. இன்னொரு எம்ஜிஆர் சாத்தியமாகாதது போல், இன்னொரு தமிழ்வாணனும் சாத்தியமில்லை “ என்று எழுதுகிறார். உண்மைதான்!
(தமிழ் வளர்த்த சான்றோர் நிகழ்வில் தமிழ்வாணன் பற்றி வ வே சு வும், லேனா தமிழ்வாணனும் உரையாடியதிலிருந்து)